அனுபவம் என்பது அறிவு!: என்.செல்வராஜாவின் நூலகவியல் அனுபவம் ஒரு அறிவுக்களஞ்சியம்!!

அனுபவம் என்பது அறிவு!: என்.செல்வராஜாவின் நூலகவியல் அனுபவம் ஒரு அறிவுக்களஞ்சியம்!!

 — த.ஜெயபாலன் — 

பிரித்தானியாவில் அண்மைய ஒரு சில ஆண்டுகளில் பிரபலமாக மாறிய முக்கியஸ்தர், மன்சஸ்டர் யுனைட்டட் உதைபந்தாட்ட வீரர் மார்கஸ் ரஸ்போர்ட். இவர் பிரபல்யமானதற்கு அவருடைய உதைபந்தாட்ட திறமைகள் காரணம் இல்லை. அதற்குப் பிரதான காரணம் அவருடைய சமூக அக்கறை.  

தற்போதைய பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன் பாடசாலைகளில் பிள்ளைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்துக்கு வெறும் 4.2 பில்லியனை வழங்க மறுத்த போது மார்க்கஸ் ரஸ்போர்ட் அதற்கு எதிரான பிரச்சாரத்தின் மையப்புள்ளியானார். அரசின் நிலைப்பாட்டுக்கு எதிராக கையெழுத்துப் போராட்டத்தை நடத்தினார். தானே முன்வந்து மக்களின் ஒத்துழைப்போடும் “பெயர்செயர்” என்ற பொது அமைப்போடும் இணைந்து உணவு விநியோகிக்க ஆரம்பித்தார். பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் அரசாங்கம் மற்றுமொரு U-TURN (யு திருப்பம்) ஒன்றை எடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டது.  

இதற்கும் உதைபந்தை கையால் கூடத் தொட்டிராத நூலகவியலாளர் என்.செல்வராஜாவுக்கும் என்ன சம்பந்தம் என்பது நியாயமான கேள்விதான். இவர்கள் இருவரையும் இணைப்பது சமூக அக்கறையும் அதற்காக அவர்கள் தொடர்ச்சியாக மேற்கொண்டுவருகின்ற அர்ப்பணிப்பும். நூலகவியலாளர் என்.செல்வராஜா மேற்கொண்டு வரும் பணிகள் ஒரு அரசு செய்யக்கூடிய பணிகள். துரதிஸ்டவசமாக இவற்றை புரிந்துகொள்ளக் கூடிய அரசியல் வாதிகளே எம் சமூகத்தின் மத்தியில் இல்லாத நிலையில் அரச கட்டமைப்புகள் இதனை மேற்கொள்வதற்கான சாத்தியம் அண்மைய எதிர்காலத்தில் இல்லை.  

அவரை ஒரு நடமாடும் நூலகம் என்றோ நடமாடும் ஆவணக்காப்பகம் என்றோ அழைப்பது எவ்வகையிலும் மிகையாகாது.  

கல்வி விதி அல்லது கொள்கையை உருவாக்கிய முன்னிலைக் கல்விக்கொள்கையாளர்களில் ஒருவரான விகொட்ஸ்கி (1896 – 1934), ஒருவரின் கல்வி வளர்ச்சிக்கும் சமூகத்துக்கும் இடையேயான பிரிக்க முடியாத பிணைப்பை ஆழ்ந்து ஆய்வு செய்துள்ளார். அதன்படி ஒருவருடைய அறிவு விருத்திக்கு சமூகத்தின் பங்களிப்பு அளப்பெரியது என விகொட்ஸ்கி மிகச் சரியாக நம்பினார். ஒருவர் அறிவைக் கற்றுக்கொள்ள ஆரம்பிக்கும் முன்னமே சமூகக்கற்றல் ஆரம்பித்துவிடுகின்றது. ஒரு சமூகத்தினுடைய கலாச்சாரம் அச்சமூகத்தின் உறுப்பினர்களிடையே உள்ள தொடர்பாடல் என்பன ஒருவருடைய அறிவு விருத்தியில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. 

விகொட்ஸ்கி பிறந்த அதே காலகட்டத்தில் பிறந்த ஜீன் பிஜெற், விகொட்ஸ்கியைக் காட்டிலும் இரட்டிப்பு வயதுக்கு மேல் வாழ்ந்தவர். ஒருவருடைய அறிவு விருத்தியில் சமூகக் காரணிகளை குறைத்து மதிப்பிட முடியாது என்பதை வலியுறுத்தி இருந்தார். ஒருவர் தன்னுடைய அறிவை ஒரு குறிப்பிட்ட மட்டத்திற்கு விருத்தி செய்துகொள்ள முடியும் என்றும் அதற்கு மேல் அவர் தன்னுடைய அறிவை விருத்தி செய்வதற்கு அவரிலும் அறிவு விருத்தியுடைய ஒருவரின் ஒத்துழைப்பு தேவைப்படும் என்கின்றார். 

ஆனால் இன்று நாம் அறிவு என்பதை வெறும் பாடப் புத்தகங்களுக்குள்ளும் துரித மீட்டல்களுக்குள்ளும் குறுக்கி, பொருளாதார வளர்ச்சியை குறிக்கும் சுட்டெண்களை அடைவதுதான் அறிவு விருத்தி என்றும் பரீட்சைப் பெறுபேறுகளும் சேர்ட்டிபிக்கற்களும் தான் அறிவுவிருத்தியை அளக்கும் அளவுகோல்கள் என்றும் மேற்குலக பாணியில் கற்பிதம் செய்து வைத்துள்ளோம். அதனையே நாங்களும் அறிவு என்றும் நல்ல பெறுபேறுபெற்றவன் என்றும் கெட்டிக்காரன் கெட்டிக்காரி என்றெல்லாம் வரையறுத்துக்கொண்டோம். இதனை இன்னும் குறுக்கி வங்கிக் கணக்கின் தொகையை வைத்து தங்களை தாங்களே அதீத கெட்டிக்காரர் என்று கூறிக்கொள்ளும் ஒரு பிரிவும் இப்போது எமது சமூகத்தில் உருவாகி உள்ளது. இந்தக் கெட்டிக்காரர்கள் கெட்டிக்காரிகள் எல்லாம் வாழத் தெரியாமல் தற்கொலை செய்வதையும் மன உளைச்சல்களோடு குடித்து குடித்தனத்தை இழந்தும் நிற்கின்றனர். இந்த அறிவுக் குறைவிருத்தியின் வெளிப்பாடுகளை தனிமனித வாழ்க்கை முதல் சுற்றுச்சூழல் பிரச்சினைவரை எல்லாவற்றிலும் காணலாம்.  

இந்தப் பின்னணியில் இலங்கைத் தமிழ் சமூகத்தின் மத்தியில் உண்மையான அறிவுத்தேடலின் அவசியத்தை தூண்டியதில் நூலகவியலாளர் என். செல்வராஜாவின் பங்கையே இங்கு மதிப்பீடு செய்ய முனைந்தேன். அறிவு என்பது ஒரு அனுபவம். ஒரு அனுபவத்தில் இருந்து அல்லது அனுபவத்தினூடாகக் கற்றுக்கொண்டு எங்களில் சமூகத்தில் ஒரு பயன்தரு மாற்றத்தை ஏற்படுத்துவதே அறிவின் நோக்கமாக இருக்க முடியும். விகொட்ஸ்கி குறிப்பிட்டது போல் சமூகத்தில் இருந்து சமூகத்தில் உள்ளவர்களின் அனுபவங்களில் இருந்து கற்றுக்கொண்டு அந்த அனுபவத்தை அந்த அறிவை மேலும் வளப்படுத்தி செழுமைப்படுத்தி மீளச் சமூகத்திற்கு கையளிப்பதே ஒரு பூரணத்துவமான வாழ்க்கையாக அமையும்.  

அந்த வகையில் நூலகவியலாளர் என் செல்வராஜா விகொட்ஸ்கியின் கல்விக்கோட்பாடுகளின் ஒரு பிரதிபலிப்பே. அவர் நூலகவியலையும் சமூக சேவைகளையும் தன்னார்வத்துடன் சமூகத்திடம் இருந்தே வளர்த்துக்கொண்டவர். இன்றைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு நான்கு தசாப்தங்களுக்கு முன்னரே, நீர்கொழும்பில் அவர் இளமைப் பிராயத்திலேயே வாசிப்பை நேசிக்கும் கலாச்சாரத்தை தன் வீட்டிலேயே ஆரம்பித்துக்கொண்டவர். நடைமுறையில் உள்ள கல்விக் கட்டமைபுகளுடாக அல்லாமல் தன்னார்வமாக கற்று தன்னை வளர்த்துக்கொண்டவர். இது சமூக அசைவியக்கத்தில் இருந்து கற்று அதனை செழுமைப்படுத்தி அந்த சமூகத்திற்கே மீளக்கையளிக்கின்றார்.  

‘நூலகவியல்’ மற்றும் ‘நூலகவியலாளர்’ என்ற இந்தப் பதமே தேசம் சஞ்சிகையில் நான் என் செல்வராஜாவை குறிப்பிட பயன்படுத்திய பின்னரேயே ஊடகங்களில் பயன்பாட்டுக்கு வந்தது. ஒருவகையில் இன்று தமிழ் சமூகத்தில் நூலகவியலாளர்களுக்கு வழங்கப்படும் கௌரவத்திற்கு என்.செல்வராஜா ஒரு காரணம் என்றால் அது மிகையல்ல.  

ஐரோப்பிய தமிழர் ஆவண மற்றும் ஆய்வு மையம்European Tamil Documentation & Research Centre – ETDRC என்ற எண்ணக்கருவொன்றை அடையாளம் கண்ட என்.செல்வராஜா, என் போன்ற இன்னும் சிலரையும் இணைத்து அதற்கு செயல்வடிவமும் வழங்கி உள்ளார். அதன் காப்பாளர்களில் ஒருவராக அது உருவாக்கப்பட்டது முதல் இருப்பதில் பெருமைகொள்கிறேன். எமது செயற்பாடுகள் மிக மட்டுப்படுத்தப்பட்டதாக இருந்தாலும் காத்திரமான பணிகளை என்.செல்வராஜா அதனூடாக மேற்கொண்டு வருகின்றார்.  

ஒரு தனிமனிதனின் முயற்சி ஒரு சமூகத்தில் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதற்கு இலங்கைத் தமிழ் சமூகத்தில் என்.செல்வராஜா நிச்சயமானதொரு முன்னுதாரணம். இக்கட்டுரையின் நோக்கம் அவருடைய சேவைகளைப் பட்டியலிடுவதல்ல. அதற்கு அவசியமும் இல்லை. ஏனெனில் அவருடைய சேவைகள் பரவலாக அறியப்பட்ட ஒன்று. என்.செல்வராஜா என தமிழிலோ ஆங்கிலத்திலோ தேடினால் ஒரு தொகையான ஆவணங்களைப் பார்க்க முடியும். இக்கட்டுரையின் நோக்கம் அவருடைய இந்த நூலகவியல் அனுபவத்தை அறிவை அடுத்த தலைமுறையினருக்கு கைமாற்றுவது. அதற்கு தமிழ் கல்விச்சமூகம் அதனை உத்தியோகபூர்வமாக அங்கிகரிக்க வேண்டும். 

நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல் அனுபவம் என்பது அறிவு. நியூட்டனுக்கும் இவ்வுலகிற்குமான அனுபவமே நியூட்டனின் விதிகள். அதனை கல்விச் சமூகம் அங்கிகரித்ததன் மூலம் இன்றும் அந்த அனுபவங்களைக் கற்று அதனை மேலும் செழுமைப்படுத்தி அடுத்த தலைமுறைக்கு அதனை விட்டுச் செல்கின்றோம். நியூட்டனின் விதிகள் இன்று குவான்டம் கோட்பாடுவரை வளர்ந்தது இவ்வாறே. அதேபோல் என்.செல்வராஜாவின் நூலகவியல் அனுபவங்களும் அத்துறைசார்ந்த அறிவு. அதனை தமிழ் சமூகத்தின் கல்வி மையமாக இருக்கின்ற வடக்கு கிழக்கின் பல்கலைக்கழகங்கள் அங்கீகரிப்பது அப்பல்கலைக்கழகங்களுக்கே பெருமையளிக்கும்.   

தற்போது ஐரோப்பாவின் முதன்மையான 10 பல்கலைக்கழகங்களில் ஒன்றும் பிரித்தானியாவின் நன்மதிப்பு பெற்ற ரஸல்ஸ் குறூப் பல்கலைக்கழகமுமான யூனிவர்சிற்றி ஒப் மன்செஸ்ரெர் மார்க்கஸ் ரஸ்போர்ட்க்கு கௌரவ கலாநிதிப்பட்டத்தை இம்மாத முற்பகுதியில் வழங்கிக் கௌரவித்தது. மார்க்கஸ் ரஸ்போர்ட்க்கு கலாநிதிப்பட்டம் அளிப்பதன் மூலம் யூனிவர்சிற்றி ஒப் மன்செஸ்ரருக்கும் பெருமை ஏனெனில் மன்செஸ்ரர் யுனைடட்டில் விளையாடும் மார்க்கஸ் ரஸ்போர்ட் மன்செஸ்ரரிலேயே பிறந்து வளர்ந்தவர். அச்சமூகத்தினதும் ஏனையவர்களினதும் மேம்பாட்டிற்காக போராடுகின்றார். அதனால் அப்பல்கலைக்கழகம் இந்த கௌரவ கலாநிதிப் பட்டத்தை அவருக்கு வழங்கியுள்ளது.  

அந்த வகையில் நூலகவியலாளர் என் செல்வராஜாவுக்கு கௌரவ கலாநிதிப் பட்டத்தை வழங்குவதனூடாக அவருடைய நூலகவியல் அனுபவங்களை அடுத்த தலைமுறையினருக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்க அதுவொரு வாய்ப்பாக அமையும். இது தொடர்பாக யாழ் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரான எஸ் சற்குணராஜா சாதகமான ஒரு முடிவை எடுப்பார் என எதிர்பார்க்கின்றேன். என்.செல்வராஜா சான்றிதழுக்காக எதனையும் கற்றுக்கொள்ளவில்லை. அதனால் அவர் எந்த கல்விச் சான்றிதழையும் உடையவரும் அல்ல. ஆனால் கல்விச் சான்றிதழ் கொண்டவர்களுக்கு ஒரு முன்மாதிரியானவர். இவ்வாறு சமூகம்சார்ந்து செயற்பட்ட அறிவியலாளர்களை அச்சமூகத்தின் கல்விச் சமூகம் அங்கிகரித்து எதிர்கால சந்தியினருக்கு அவர்களை முன்ணுதாரணமாக முன்நிறுத்துவது முன்னுதாரணங்களே அரிதாகி வருகின்ற இந்தக் காலத்தின் அவசியமாக உள்ளது.  

இன்றைய நாளில் நூலகவியலாளர் என் செல்வராஜாவுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். அவருடைய நூலகவியல் செயற்பாடுகள் இன்னும் வளர்ந்து தமிழ் சமூகம் அறிவியல் தேடலுடைய சமூகமாக மாற வாழ்த்துக்கள்!!!