— செங்கதிரோன் —
இரவு எட்டு மணியிருக்கும்.
“டுமீல்… டுமீல்… டுமீல்…”
துப்பாக்கி வேட்டுச் சத்தத்தைத் தொடர்ந்து ஆட்கள் அழுது ஓலமிடும் ஓசை உரக்க எழுந்தது.
மட்டக்களப்பில் வசிக்கும் நான் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் திருக்கோவில் கிராமத்தில் வசிக்கும் எனது நண்பன் ஜெயம் வீட்டிற்கு விஜயம் செய்திருந்தேன்.
நானும் நண்பன் ஜெயமும் திருக்கோவில் கிராமத்தின் பிரதான வீதியிலிருந்து கடற்கரை நோக்கிச் செல்லும் உள் வீதியில் அமைந்துள்ள ஜெயத்தின் வீட்டின் வெளி ‘விறாந்தை’யில் அமர்ந்து, நீண்ட காலத்திற்குப் பின் சந்தித்த அந்த மாலை நேரத்தை மகிழ்ச்சியாகக் கழிப்பதற்காக மதுக் ‘கிளாஸ்’களைக் கைகளில் ஏந்திச் சுவைத்தபடி கதைத்துக் கொண்டிருந்தோம்.
கடற்கரை வீதியின் அந்தத்திலே நண்பன் ஜெயத்தின் வீட்டிலிருந்து கூப்பிடு தூரத்தில் அமைந்திருக்கும் திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமிகள் கோயில் பக்கமிருந்துதான் துப்பாக்கி வேட்டுச் சத்தமும் தொடர்ந்து அழுகுரல்களும் கேட்டன.
துப்பாக்கி வேட்டுச் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த நாம் இருவரும் தொடர்ந்து அழுகுரலைக் கேட்ட மாத்திரத்தில் கைகளிலேந்தியிருந்த மதுக் ‘கிளாஸ்’களை அவசரமாக வெறுமையாக்கிவிட்டுக் கோயிலடி நோக்கிப் புறப்பட எழுந்தோம்.
இதனைக் கண்டுகொண்ட எனது மனைவியும் நண்பன் ஜெயத்தின் மனைவியும் ஏககாலத்தில் “எங்க போகப் போறீங்க?” என்று வினாத் தொடுத்தனர்.
“கோயிலடிப் பக்கந்தான். என்ன நடந்ததெண்டு பாத்தித்து வாறம்” என்றேன் நான்.
“பைத்தியமா உங்களுக்கு. இந்த நேரத்தில… இரவயில..” என்று இழுத்தாள் என் மனைவி.
“அதுதானே! இப்ப போகாதீங்க” என்று தடுத்தாள் நண்பன் ஜெயத்தின் மனைவியும்.
‘இப்ப சண்டக் காலம் இல்லத்தானே. பிரச்சனை ஒண்டும் வராது” என்று நான் கூறியதை நண்பன் ஜெயமும் வழிமொழிய உள்ளுக்குள் போயிருந்த மதுத் துளிகள் ஊட்டிய உற்சாகத்தில் கோயிலடியை நோக்கிய வீதியில் இருவரும் தாமதியாது இறங்கினோம்.
1987 ஜூலை 29 இல் இந்திய- இலங்கை சமாதான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு தமிழ்ப் போராளி இயக்கங்களெல்லாம் சுதந்திரமாக நடமாடிய காலமது. இலங்கை அரசாங்கத்தின் ஆயுதப்படையினர் முகாம்களுக்குள் முடக்கப்பட்டு இருந்தனர். வடக்குக்கிழக்கு மாகாணங்களில் இந்திய அமைதிகாக்கும் படையினர் நிலைகொண்டிருந்த நேரம் அது. அந்தத் தைரியத்திலும்தான் “பிரச்சனை ஒண்டும் வராது” என்று எமது மனைவிமாரைச் சமாதானப்படுத்திச் சமாளித்து விட்டு அந்த இரவு நேரத்தில் நானும் நண்பன் ஜெயமும் வீட்டிலிருந்து வீதியிலிறங்கி வெளிச் செல்லக்கூடியதாயிருந்தது.
கோவிலடியை இருவரும் அடைந்த போது அருகிலிருந்த சிறிய வீடொன்றின் முற்றத்திலும் வீட்டு வளவின் கடப்புக்கு வெளியேயும் சனக் கூட்டமாயிருந்தது. வீட்டினுள் மண்டபத்திலிருந்து அழுகுரல்கள் கேட்டுக் கொண்டிருந்தன.
நானும் நண்பன் ஜெயமும் கூட்டத்தினரை விலத்தி ஊடறுத்து வீட்டினுள் நுழைந்தோம்.
அங்கே நாம் கண்ட காட்சி எமது இரத்தத்தை உறைய வைத்தது.
இரத்த வெள்ளத்தில் ஒரு இளைஞன் இறந்து கிடந்தான். சாரன் மட்டுமே அணிந்திருந்த அவனது வெற்று மார்பில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து குருதி கொப்பளிக்க மல்லாக்கக் கிடந்தான். விழிகள் இரண்டும் விரிந்தபடியே இருந்தன. அப்போதுதான் தூண்டிலில் அகப்பட்ட மீனை நீரிலிருந்து வெளியே தரையில் தூக்கிப் போட்ட மாதிரித் துடிப்பு அடங்கிப் ‘பச்சை’யாகக் கிடந்தான். உடற்சூடு கூட அடங்கியிருக்காது.
அருகில் அவனது இளம் மனைவி அவனது மார்பிலும் தனது தலையிலும் மாறி மாறி அடித்து அழுது புலம்பிக்கொண்டிருந்தாள். அவளது கைகளிலும் தலையிலும் இரத்தம் அப்பியிருந்தது. அவளது மடியிலிருந்த பச்சைக்குழந்தை அவளது மார்பிலிருந்து பாலை உறிஞ்சிக்கொண்டிருந்தது. அவளது மேற்சட்டையின் முடிச்சுகள் அவிழ்ந்து விலகிய மார்புகள் வெளித்தெரிய அதனைக்கூட உணர்ந்து கொள்ள முடியாத உள நிலையில் அவள் அழுது புலம்பிக் கொண்டிருந்த அந்த அவலமான காட்சியிலிருந்து எமது விழிகளை விலக்கிக்கொண்டு இருவரும் பேயறைந்த முகத்தோடு வீட்டிற்கு வெளியே வந்தோம்.
வெளியே வீட்டு முற்றத்தில் நின்றிருந்த எங்களுக்குத் தெரிந்த முதியவர் ஒருவரை அணுகி “என்ன பெரியவர் நடந்தது” என்று வினவினோம்.
“அந்தக் கொடுமயக் கேட்டீங்களெண்டா…… மக்காள்!……. ஏழர மணி போல பொழுது பட்டுப்போய் இருட்டின நேரத்தில ரெண்டு பொடியனுகள் வந்து கடப்படியில நிண்டு ‘பாலன்! பாலன்!!’ எண்டு கூப்பிட்டானுகள். அவள்.. அவன் பாலண்ட பொஞ்சாதி புள்ளயத் தூக்கித்து வந்து கடப்படியில நிண்டு ‘என்ன? என்று கேட்டிருக்காள்.
‘பாலன் இல்லயா? என்று வந்தவனுகள் கேட்டிருக்கானுகள். வந்தவனுகள்ற கையில ஆயுதமிருந்ததைக் கண்டுத்து ‘அவர் இல்ல. வயலுக்க போய்த்தாரு’ என்றிருக்காள்.
வந்தவனுகள் ‘சரி! புறகுவாறம்’ எண்டுத்துத் திரும்பித்தானுகள்.
இவள் பொஞ்சாதி பயத்தில வந்து புருசனிட்டச் சொல்லிப்போட்டு அவன உள்ளறைக்குள்ள போகச்சொல்லிக் கதவப் பூட்டிப்போட்டாள். புறகு கடப்பையும் சாத்திப் போட்டாள்.
போனவனுகள் ஒரு அர மணித்தியாலத்தில திரும்பிவந்து திடும் திடுமென கடப்பால ஏறி வளவுக்குள்ள வந்து வீட்டுக்குள்ள பூந்து உள்ளறக்கதவக் காலால உதச்சித் துறந்து உள்ளுக்குள்ள இருந்த பாலன வெளியால மண்டபத்துக்குள்ள இழுத்துவந்து- அவள் பொஞ்சாதிப் பெட்ட ‘அவர ஒண்டும் செய்திராதீங்க. நான் பச்சப்புள்ளக் காரி. உங்கட காலில விழுந்து கெஞ்சிறன்’ எண்டு கையெடுத்துக் கும்பிட்டிருக்காள் – நாசமறுவானுகள் அவளத் தள்ளிப்போட்டு பாலனச் சுட்டுப் போட்டு ஓடித்தானுகள் மக்காள்!” என்று பதைபதைப்புடன் நடந்ததைச் சொல்லி முடித்தார் அந்த முதியவர்.
“அவனுகள் ஆரு” என்று முதியவரைக் கேட்டோம்.
சுற்று முற்றும் கண்களைத் திருப்பி அவதானித்து விட்டுக் கிட்ட நெருங்கி ஜெயத்திடம் “புலிகள்” என்று சொல்லி ஜெயத்தின் காதைக் கடித்தார். அந்த இரகசியத் தொனி எனது காதிலும் விழுந்தது.
நண்பன் ஜெயமும் நானும் ஆளையாள் அர்த்த புஷ்டியுடன் பார்த்துவிட்டு உடன் வீடு திரும்பினோம்.
வீடு திரும்பிய ஜெயமும் நானும் ஏதோ ஒப்புக்குப் போத்தலில் மீதமிருந்த மதுவைக் காலி பண்ணிவிட்டுச் சாப்பிட்டுவிட்டுப் படுக்கைக்குச் சென்று விட்டோம்.
இரவு எனக்கு நித்திரையே வரவில்லை. அன்றிருந்த மனநிலையில உள்ளுக்குள்போன மது கூடச் செயலிழந்து இருந்தது. இச்சம்பவத்தையே நினைத்து மனம் வெதும்பிக் கொண்டிருந்த நான் விடிந்ததும், -எனக்கு நன்கு தெரிந்திருந்த நான் முன்பு திருக்கோவிலில் அரசாங்கத் திணைக்களமொன்றில் பணி புரியும்போது எனக்குக் கீழ் கடமையாற்றிய இளங்கோ என்பவன்தான் ‘ரமணன்’ என்ற இயக்கப் பெயரில் திருக்கோவில் பிரதேசத்தில் புலிகள் இயக்கத்தின் பொறுப்பாளராக இருந்தான்- என்னை வந்து நண்பன் ஜெயத்தின் வீட்டில் அவசரமாகச் சந்திக்கும்படி அவனுக்கு வியளமனுப்பினேன்.
பகல் 11.00 மணி போல் என்னைத்தேடி இளங்கோ வந்தான். பல வருடங்களுக்குப் பின்னர் என்னைக் கண்டவன் பழைய உறவுடனேயே முகம்மலர்ந்து ஓடிவந்து கட்டிப்பிடித்து “எப்படி இருக்கீங்க சேர்! வரச் சொன்னயளாம் என்ன விசயம் சேர்” என்றான்.
“உன்னப் பாத்துக் கனநாள். இப்ப சண்டயில்லாத சமாதான காலம்தானே. அதுதான் வரச்சொன்ன நான்” என்று பதில் கூறி விட்டு அவனை இரகசியமாகக் கண்ணைக் காட்டி அறை ஒன்றினுள் அழைத்துச் சென்றேன்.
நேருக்கு நேர் இருவரும் கதிரைகளில் அமர்ந்த வண்ணம் பேச்சைத் தொடங்கினோம்.
முதல் நாள் இரவு திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி கோவிலடியில் நடந்த கொலைச் சம்பவம் குறித்து முதியவர் கூறிய கதையை அப்படியே ஒப்புவித்து விட்டுத் தொடர்ந்தேன்.
“இஞ்ச பார்! இளங்கோ. முன்பு நான் பழகிய இளங்கோ என்ற ரீதியிலதான் உன்னோட கதைக்கப்போறன். புலி இயக்க உறுப்பினன் ‘ரமணன்’ என்ற ரீதியில் அல்ல” என்ற பீடிகையுடன் அவனது முகக் குறிப்பை அளவு எடுத்துக்கொண்டு என்னையும் சுதாகரித்துக்கொண்டு நிதானமாகச் சொல்லத் தொடங்கினேன்.
“சுடுபட்ட பாலன எனக்கு நல்லாத் தெரியும். அவன் முன்பு திருக்கோவிலில நான் வேல செய்யக்குள்ள ‘புளொட்’ இயக்கத்தில இருந்தவன். ‘புளொட்’ இயக்கத்துக்கும் புலிகள் இயக்கத்துக்கும் பகையிருந்தது. அது வேற விஷயம். அதப்பத்தி நான் ஆராய வரல்ல. ஆனா அவன் இடக்காலத்தில ‘புளொட்’ டில இருந்து விலகி ஊரில இரிக்கப் பயத்தில பாணமைக்குப் போய் அந்த ஊரில கூலி வேல செஞ்சி பிழச்சி அந்த ஊரிலயே ஒரு ஏழப் புள்ளைய கலியாணம் கட்டி, இப்பத்தான் முதல் புள்ள புறந்து மாதக்கணக்கிலதான் இரிக்கும். இந்திய-இலங்க சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டதால உண்டான சமாதானச் சூழல நம்பி ஊரில இருப்பமெண்டு திருக்கோயிலுக்குத் திரும்பி அவண்ட தாயிர ஊட்டுல பொஞ்சாதி புள்ளையோட போய்ச்சீவிப்பமெண்டு வந்த ஒரு ‘நிராயுதபாணி’யப் புலிகள் சுட்டுச் சாக வச்சது நியாயமா?” என்று எனது மனப்பாரத்தைக் கொட்டித் தீர்த்தேன்.
நான் கூறிய எல்லாவற்றையும் குறுக்கீடுகள் எதுவுமின்றி அமைதியாக் கேட்டுக் கொண்டிருந்த இளங்கோ,
“அது நாங்க செய்யல்ல சேர்!” என்றான்.
“புலிகள் செய்யல்லயா? அப்ப ஆர்ராம்பி செஞ்ச” என்று ஆச்சரியத்துடன் கேட்டேன்.
“புலிகள்தான் செஞ்சவங்க சேர்! ஆனா இங்கத்தய ஆக்களில்ல. அங்கரிந்து வந்தாக்கள்” என்று நெற்றியையும் கண்களையும் மேலே உயர்த்தி நிமிர்த்திப் பதில் சொன்னான்.
அவனது உடல் மொழி எனக்குப் புரிந்தது. நெற்றியையும் கண்களையும் மேலே உயர்த்தி நிமிர்த்தி ‘அங்கரிந்து வந்தாக்கள்’ என்று அவன் அழுத்திக் கூறியது இலங்கையின் வடதுருவத்தையே சுட்டியது.
“தீர்மானம் எடுப்பதும் நிறைவேற்றுவதும் அவங்கதானெண்டா நீங்கெல்லாம் பிரதேசப் பொறுப்பாளரெண்டும் அது இதண்டும் இருக்கிறது என்ன மண்ணாங்கட்டிக்கு? ஒரு இளம் தாயயும் பச்சக் குழந்தயயும் பரிதவிக்க விட்டுருக்கீங்க. இந்தப் பாவத்தை எங்ககொண்டுபோய்த் தொலைக்கப்போறீங்க? இதுவா வடகிழக்கு இணைப்பு? இதுவா தமிழ்த் தேசியம்?”
எனது கட்டுப்பாட்டையும் மீறி என் வாயிலிருந்து வார்த்தைகள் வெளிவந்தன. என் உடம்பு படபடத்தது. கண்களில் நீர் கசிந்தது. அதன்பின் மௌனமானேன். அவனும் மௌனமாகிப் பதில் ஏதும் சொல்லாமல் விக்கித்து நின்றான். சில நிமிடங்களை இருவரினதும் மௌனம் விழுங்கிற்று. சிறிய இடைவெளிக்குப் பின் மௌனத்தை அவனே கலைத்தான்.
“சேர்! என்னக் கூப்பிட்டு கதைச்ச விஷயத்த வேற எவரிட்டயும் சொல்லாதீங்க. அதப்போல எனக்கிட்டக் கேட்ட மாதிரி புலி உறுப்பினர்கள் வேற எவரிட்டயும் கேட்டிறாதீங்க. இத நான் உங்களிட்டச் சொல்லுறது புலி இயக்க உறுப்பினன் ரமணனாக இல்ல. உங்களுக்குக் கீழ முதல் வேல செஞ்ச இளங்கோ என்ற ரீதியிலதான்” என்றவன் சட்டென எழுந்து,
“வாறன் சேர்! உங்கள கன காலத்துக்குப் புறகு கண்டதும் கதச்சதும் சந்தோஷம் சேர்” என்று மரியாதையாகச் சொல்லிவிட்டு வேகமாக வெளியேறினான்.
“சரி” என்று தலை அசைத்து அவனைவழி அனுப்பிய நான், எனது கைகள் இரண்டையும் சேர்த்து விரல்களைப் பின்னிக்கொண்டு தலையைத் தாழ்த்திச் சேர்த்த கைகளை நெற்றியிலே வைத்து கண்களை மூடிச் சிந்திக்கத் தொடங்கினேன்.
(யாவும் கற்பனையல்ல)