போர்தின்றவாழ்வும் எச்சங்களும்…..! ஆறாம்நிலம் பேசும் வாழ்வியல் ஜதார்த்தமும் ……..!! (காலக்கண்ணாடி – 59)

போர்தின்றவாழ்வும் எச்சங்களும்…..! ஆறாம்நிலம் பேசும் வாழ்வியல் ஜதார்த்தமும் ……..!! (காலக்கண்ணாடி – 59)

— அழகு குணசீலன் — 

ஈழத்தமிழர்களை மட்டுமன்றி தமிழகத்தையும் சற்று தட்டி எழுப்பி இருக்கின்ற ஆவணப்படம்  “ஆறாம்நிலம்”! சங்க இலக்கியங்களில் நாம் கண்ட ஐந்துவகை மருதம், முல்லை, குறிஞ்சி, நெய்தல், பாலைகளுக்கு அப்பால் இது ஒரு புதுவகைப் புனைவு நிலம். போரும் போர் சார்ந்த இடமும் தோற்றுவித்த புது நிலம்.  

கவிஞர் வைரமுத்து ஆறாம்நிலத்தை பாழ் நிலம். பாழாகிப்போன நிலம் என்கிறார். அவரைப்  பொறுத்தமட்டில் பாழடைந்த, பராமரிப்பற்ற, பாவிக்கப்படாத நிலம். காலக்கண்ணாடியைப் பொறுத்தமட்டில் அதற்கும் மேலாக ஆறாம்நிலம் போர்தின்ற நிலம். போர் சப்பித்துப்பிய சக்கைகளையும், எச்சங்களையும், வலிகளையும், துயரங்களையும் வடுக்களையும் சுமந்து நிற்கின்ற  “போர்தின்றநிலம்”. அது பாழடையவில்லை, வாழ்வடைய வாழும்வரை மக்கள் போராடும் நிலம். 

ஆனந்த ரமணனின் எழுத்திலும், இயக்கத்திலும் கிடைத்த பிரசவம் இந்த ஆறாம்நிலம். வடக்கு மக்களின் சமகால சமூக, பொருளாதார, அரசியல் வாழ்வியலை அச்சொட்டாகக்காட்டுகின்ற அற்புதமான படைப்பு. எந்த ஒளிவு மறைவும் இன்றி, பக்கச்சார்புமின்றி, ஈவிரக்கமின்றி, சமரசமின்றி, நெற்றிக்கண்ணைக்காட்டி உள்ளதை உள்ளவாறு போருக்குப் பின்னரான வடக்கு வாழ்வை வடித்திருக்கிறது ஆவண ஆறாம்நிலம்.  

இங்கு பேசுபொருள் காணாமல்போனவர்கள். அவர்களின் குடும்பங்கள் சுமக்கும் துயரங்கள். தொடரும் காணாமல்போனவர்களைத் தேடும் படலங்கள். இருக்கிறாரா? இல்லையா? வருவாரா? வரமாட்டாரா? என்று ஏங்கும் தாய், சகோதரங்கள், மனைவி, பிள்ளைகள், நண்பர்கள், ஊரார், உறவினர்கள் இப்படி நீண்டபட்டியல். 

“அவன் எங்களோடு தானே இருந்தவன்”, “எப்படி இருந்த குடும்பம் இப்ப எப்படி இருக்குது”, “எப்படி இருந்த நாங்கள் இப்ப எப்படிப்பட்ட நிலைமைக்கு ஆளாகிப்போனோம்”, அந்த வீட்டில் இரண்டுதரம் “ஷெல்” விழுந்தது, இந்த வீட்டில் இரண்டு சீவன்கள் போய்ச்சி, யாரோ ஒருவன் அவளை ஏமாத்தி பிள்ளையைக் கொடுத்துத்தானாம், கைகால் சுகமாக உள்ளவர்களையே கட்டிக்க எவரும் இல்லை அதுக்குள்ள நம்மை யார் கட்டப்போறார்கள்? என்று எண்ணி எண்ணி ஏக்கப் பெருமூச்சு விடும் எச்ச நினைவுகளே மிஞ்சி இருக்கின்றன. 

இன்னும் ஊசலாடிக்கொண்டிருக்கிற உயிரைக் காப்பாற்ற ஒரு வேளைக்கஞ்சிக்கு உயிரைக் கொடுத்து செய்கின்ற வேலையோ கண்ணி வெடியகற்றல். காலையில் கண்ணிவெடியகற்றப்போறவர்கள் மாலையில் வீடுதிரும்புவார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அது ஒரு மரணத்துள் வாழ்வு. கண்ணி வெடியகற்றுகையில் கண்ணியில் சிக்குகிறாள் கவிதா. மலைமகள் கண்ணியை மட்டுமல்ல எலும்புக்கூட்டையும் கண்டெடுக்கிறாள். 

புருஷனைப் தேடிக்கொண்டு, சரணடைந்தவர் வருவார் என்ற நம்பிக்கையில் கண்ணிவெடி அகற்றும் தொழிலைச் செய்யும் அவள் எலும்புக்கூட்டை கண்டபோது அந்தக் கணம் எப்படி இருந்திருக்கும் என்பதை எப்படி விபரிப்பது? அவள் மனம் பட்டபாடு என்னவாகவிருக்கும்? இது யாருடையது? என் புருஷனுடையதாகவும் இருக்கலாமா?. அவனை உயிரோடு தேடும் அவளுக்கு இந்த எலும்புக்கூடு சொல்லும் செய்தி என்ன? அவளை அது செய்யும் உளச் சித்திரவதை என்ன? 

இதற்கிடையே பனையால் விழுந்தவனை மாடேறிமிதித்த கதையாக, வேலியே பயிரை மேய்கின்ற அதிகாரிகள், அமைப்புக்களின் பெரியவர்கள், ஊடகவியலாளர்கள், படையினர், ஊர்வம்பளப்போர் இப்படி……. இப்படி……. எத்தனையோ….. எத்தனையோ…… அவலங்கள். 

போரினால் பாதிக்கப்பட்டு காணாமல்போன கணவன்மாரைத் தேடிக்கொண்டிருக்கின்ற ஆயிரக்கணக்கான பெண்களுக்கான குறியீடாக   மலைமகள் மற்றும் கவிதா என்ற இரு பாத்திரங்கள். 

இருவருக்கும் இரு பெண் குழந்தைகள். கவிதாவின் மகள் கண்பார்வை இழந்தவள். மலைமகளின் மகள் பள்ளிக்குப் போகிறாள். மலைமகளும் கவிதாவும் கண்ணிவெடி அகற்றும் வேலைக்குப் போகிறார்கள். 

காணாமல் போன மலைமகளின் கணவனின் தாய் (மாமி) மருமகள் மலைமகளோடு வாழ்கிறாள். பேத்தியைப் பார்த்துக்கொள்கிறாள். 

சங்கரன் கண்ணி வெடியகற்றும் குழுத்தலைவர்களில் ஒருவன். அவனும் மலைமகளும் சும்மா இருந்த ஊர்வாய்க்கு கிடைத்த அவல். 

விதானையாருக்கு மலைமகள் மீது ஒரு கண். படையினரின் உதவியுடன் மலைகளின்  காணாமல்போன கணவன் மாறனை காட்டுவதாக  “ஆடு நனைகிறதென கவலைப்பட்ட ஓநாயாக”, காசு மட்டுமல்ல, பாலியல் இலஞ்சமும் கேட்கும் விதானை.. அதுவும் தனக்குமட்டுமல்ல கொழும்பிலும் கொடுக்கவேண்டும் என்கின்ற அயோக்கியத்தனம். பண்டாரவின் தொலைபேசி அழைப்பு. “அடுத்த  கெழம ஒங்க புருஷனப் பார்க்கிறது, எப்ப போறது? அம்மாக்கு சுகம் இல்ல அறிஞ்சங் ராத்திரில தனியா இருக்கிறது பயங் இல்லே” இப்படி பண்டாரவின் கொச்சைத்தமிழ் தூண்டில் வேறு. 

இதற்கிடையில் மலைமகளின் மாமி மரணமடைகிறாள், மகள் விபத்தை சந்திக்கிறாள். நாம் தமிழர் தமிழரையே ஏமாற்றுகிறோம். சில காட்சிகளில் நாம் தமிழர்களை விடவும் சிங்களப் படையினர் உயர்ந்து நிற்கிறார்கள். இப்படி நகர்கிறது காட்சிகள். மிகவும் சிக்கனமாகப்பேசி போர்தின்ற  வாழ்வை கச்சிதமாக கமராவைக் கொண்டு காட்டுகிறது ஆறாம் நிலம். 

கண்ணி வெடியகற்றப்போகும் “ட்ரக்வண்டி” பயணத்தில்……..! 

மலைமகள்: “கவிதா போராட்டம் ஒன்று செய்யப்போகிறோம் நீயும் வாவன்”.  

கவிதா: “நான் வாறதால போனவர் என்ன வரவா போறார்? நாங்கள் இப்ப வேலைக்குப் போறம்  அதுதான் உண்மை.” 

“பிரதமர் தைப்பொங்கலன்று சொன்னவராம் போனவர்கள் வரமாட்டார்கள் என்று. எங்கட அரசியல்வாதிகளோ எப்படி பொங்கலன்று சொல்லலாம்? என்று கேட்கினம். பொங்கலுக்குப் பிறகு சொல்லலாமோ? எல்லாம் அரசியல்.” 

மலைமகள்: “நிலத்தைப் பாதுகாக்கப் புதைத்தோம் இப்ப ‘அவங்க’ புதைத்ததையும் எடுக்கிற வேலையைச் செய்கிறோம். எப்படிப்பட்ட நிலைக்கு ஆளாகிப்போனோம் பார்த்தீங்களா?” 

சங்கரன்: “நடந்ததை நினைத்துக் கொண்டே இராமல் மறக்கப்பாருங்கோ”. என்று சொல்ல, எப்படி மறக்கிறது? என்று திருப்பிக் கேட்கிறாள் மலைமகள். 

இந்த காட்சியில் காணாமல்போனவர்களுக்கான போராட்டத்தில் நம்பிக்கை இழந்த ஒரு பெண்ணினதும், இன்னும் ஒரு துளி நம்பிக்கையுடனும், ஆதங்கத்துடனும், எதிர்பார்ப்புடனும் இருக்கின்ற ஒரு பெண்ணினதும் எண்ணங்கள் பிரதிபலிக்கின்றன. இந்த உரையாடல் பார்வையாளர்களுக்கு சொல்ல வருவது என்ன?  

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் “வருவாரா” என்ற அவ நம்பிக்கையில் இருந்து “வரார்” என்ற நம்பிக்கை நோக்கி பயணிக்கிறார்கள். அரசியலும், அமைப்புக்களும் இதற்கு ஒரு தீர்வை முன்வைப்பதைத் தவிர்த்து தமது அணுகுமுறைத் தோல்வியை மறைக்க திரும்பத் திரும்ப நம்பிக்கையை தமது நலன்சார்ந்து ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். இல்லாத ஒன்றை இருப்பதாகக் காட்டும் அரசியல் மாயை. இது கவிதாவின் வார்த்தைகளில் அரசியல் தக்கவைப்பு. 

வாழ்வின் இவ்வாறான எதிர்மறையான நிகழ்வுகளை  முற்றிலும் மறப்பது முடியாத காரியம். ஆனால் அதனோடு வாழப்பழகிக்கொள்ள வேண்டும் என்கிறார்கள் உளவியலாளர்கள். இதைப் பேசுகிறான் சங்கரன்.  அதையே கவிதாவும்  பேசுகிறாள். அவர்களது வார்த்தைகளில் உண்மை இருப்பினும், சொல்வது இலகு செய்வது………?  இது வாழ்நாள் முழுவதும் தொடரும் துயரம். நீதி ஒன்றே சற்று மன ஆறுதலைத் தரமுடியும். அதைத்தான் எமக்கு நீதி வேண்டும் என்று கேட்கிறாள் மலைமகள். 

“அம்மா! அப்பா எப்பவருவாரு?  

அந்த வெள்ளைக்கார மாமா அப்பாவைக் கண்டுபிடித்து தருவாரா………?” 

மலைமகளின் மகள் தமிழினி பள்ளிக்குப் போகும் முன் காணாமல்போன தன் அப்பாவின் படத்தை பார்த்துவிட்டுப் போகிறாள். 

அப்போது அவள் அவனோடு மனதால் பேசுவது என்ன? “அப்பா நான் போயிட்டு வாறன், நீங்க எப்ப வருவீங்க”? என்பதைத்தவிர வேறு எதுவாக இருக்க முடியும். நிட்சயமாக அவள் அஞ்சலி செலுத்தவில்லை என்பது மட்டும் உண்மையிலும் உண்மை. 

“அப்பம்மா வல்லூறு வட்டம் போடுது குஞ்சுகளைத் தூக்கப்  போகுது கவனம்!” தமிழினியின் “வல்லூறு” என்ற வார்த்தை “சுள்” என்று இதயத்தை தொடுகிறது. யார், யார் எல்லாம் இந்த வல்லாறுகள்? அந்தக் கிராமசேவகர் விதானையாரும் தான். இவர்  இராட்சத சிங்கள வல்லாறுகளுக்கு “குஞ்சுகளை” தூக்கிக் கொண்டு கொடுக்கும் தமிழ் வல்லூறு. கள்வனைப் பிடித்து விதானை வேலை கொடுத்திருப்பதன் சமூகச்சீரழிவை பேசுகின்றன இக்காட்சிகள். 

விதானை என்ற வல்லூறு மலைமகளை தூக்கப்போடும் தந்திரம் இது. “உங்களுக்கு நான் இருக்கிறேன். ஒன்றுக்கும் கவலைப்படவேண்டாம். இரண்டு இலட்சம் ஒழுங்கு பண்ணினால்” அவங்க” உங்கட புருஷனைப் காட்டுவாங்க”.  

மாமா! “அப்பா எப்பவருவாரு? அது உங்கட அம்மாவின் கையில்தான் இருக்கு”. என்று அப்பாவைத்தேடும் மகளை ஏமாற்றும் விதானை. என் கண்ணுக்கு முன்னால் சரணடைந்தவர் எனக்கு வேண்டும் என்று கோரும் மலைமகளுக்கு அவர் “அவங்கட” கையில் ஒப்படைக்கப்பட்டதை மறைத்து “உங்கட அம்மாடகையில்தான் இருக்கு” என்று முழுப்பூசணிக்காயை பிடிசோற்றில் மறைக்கும் விதானையாரின் வஞ்சனை. 

“கொழும்புக்கு வரட்டாம். இங்க இருப்பவங்களுக்குத்தான் காசுதேவை. அங்க  இருக்கிறவங்களுக்கு நீர்தான் தேவை. உம்மட புருஷனில உனக்கு விருப்பம் என்று எனக்குத் தெரியும், அதைப்போல என்னோடும் உனக்கு விருப்பம் என்று எனக்குத் தெரியும்.” இதைக் கேட்டதும் விதானையின் கன்னத்தைப் பதம் பார்க்கிறது மலைமகளின் கை.  

அப்பம்மா! என்று அழைத்து தனது பள்ளித்தோழியின் தகப்பன் வீடு வந்திருக்கும் செய்தியைச்சொல்லி, அப்பா எப்பவருவார்? என்று கேட்கிறாள் தமிழினி. “எடே பிள்ள! அவன் சண்டைக்க வெளிநாடுபோனவன் இப்ப காசோடு வந்திருக்கான்”. 

“உன்ர அப்பனைக் கொண்டு போனவங்கள் வைத்து அழகா பார்க்கிறாங்கள்? அவன் வாறதுக்கு? இதுவரை தொலைத்திருப்பானுகள். அரசாங்கமே சொல்லிப்போட்டுது காணாமல் போனவயள் எவருமே வரமாட்டினமாம்” என்று, தனது மகன் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை என்பதை வெளிப்படையாகப் பேசுகிற அப்பம்மா. அந்த வார்த்தைகள் தமிழினியின் இதயத்தைக் காயப்படுத்த கையில் இருந்த பொருளை அப்பம்மாவின் தலையில் வீசுகிறாள் அவள். 

ஒரு நாள் தமிழினியின் அம்மா அவளை பள்ளிக்கூடத்திற்கு பைசிக்கிளில் அழைத்துச் செல்கிறாள். மற்றப் பிள்ளைகளை அவர்களின் அப்பாக்கள் பள்ளிக்கு கொண்டுவந்து விடும்போது, எதையோ தொலைத்தவள் போல் ஏக்கத்துடன் பார்ப்பாள் தமிழினி. 

அன்று தமிழினி தனது தோழிக்கு சொல்கிறாள் : “இன்றைக்கு நான் அம்மாவோட வந்த நான், கெதியா பார் அப்பாவோடவும் வருவேன்”. 

இந்த வார்த்தைகள் பிள்ளைகளைப் பெற்ற எந்த பெற்றோரையும் ஒரு கணம் அசைத்து விடுகின்றன. 

தமிழினி தன்னந்தனியாக விளையாடுகிறாள். ஆனால் அவர் விளையாடும் விளையாட்டோ இருவர் விளையாடும் விளையாட்டு. அவளே தனக்காகவும், எதிராகவும் இரு பாத்திரங்களாக ஆடுகிறாள். அவள் விளையாடும் மற்றவர் யார் என்பது இறுதிவரை மட்டுமல்ல இன்னும் மர்மமாகவே உள்ளது. தன் முறை முடிந்தபின் “இனி  நீங்க”  என்று மற்றவர் முறைக்கு தானே விளையாடுகிறார். அந்த மற்றவர் யார்? காண்மல்போன தன் தந்தையோடு கற்பனையில் விளையாடுகிறாளா? தமிழினி. ஆறாம் நிலம் பேசும் ‘போர் எச்ச சூழலில்’  வளரும் ஒரு பிள்ளையின் உளவியல் அம்சம் இது. 

ஒரு சோக்கான  பெடியன் இருக்கான் கதைக்கட்டே” 

மாமி கேட்கிறாள் “சொன்னா கேட்கமாட்டியள், இப்படி இருந்து என்ன செய்யப்போறீங்கள்? இந்த நாட்டுல போனவங்க போனவங்க தான்” 

இப்போது எல்லாம் மலைமகள் எந்தப் பதிலும் அளித்ததில்லை. 

பஸ் பயணத்தின் போது அருகில் வந்தமர்ந்த முதியவர் அக்கம்பக்கம் பார்த்துவிட்டு மலைமகளைக்கேட்கிறார். “பிள்ள ஒரு சோக்கான பெடியன் இருக்கான் கதைக்கட்டே?” 

மலைமகளின் பதில் இது  “அவர் வருவார்தானே!” 

முதியவருக்கு மலைமகள் அளித்த பதிலை எவ்வாறு கொள்வது? இது தட்டிக்கழிப்பா? அல்லது உண்மையிலையே அவர் வருவார் என்ற அயராத நம்பிக்கையின் உளக்களிப்பா?  

இந்த  நிட்சயமற்ற சமூக வாழ்வியல் தருகின்ற உளவியல் தாக்கம் என்ன?தனக்காக வாழ்வதா? சமூகத்திற்காக அதன் எதிர்பார்ப்புக்குக்காக வாழ்வதா ? 

வடக்கில் தனித் தமிழ் பெயர் சூட்டல் காலம் ஒன்று இருந்தது. அந்தக்காலத்தை சமூகம் கேள்விக்கு உட்படுத்துகிறது. “அவங்கட காலத்தில என்ர மகனுக்கு இனியவன் என்று வைத்த நான். இப்ப அவன் தன்ர  பெயரை  ஹரிஷ் என்று மாற்றச் சொல்கிறான். அப்ப நல்ல விருப்பத்தோடுதான் வைச்ச நாங்கள். இப்ப…..“ இப்படி இழுக்கிறான் தந்தை. 

இந்த ஆதங்கம் வடக்கின்   அன்றைய தனித்தமிழ் பெயர் தலைமுறையையும்,இன்றைய தனித்தமிழ் பெயரற்ற தலைமுறையையும் காட்டுவதன் மூலம் சமூகத்தில் ஏற்படும் மனநிலை மாற்றத்திற்கு வெளிச்சம் போடுகிறது. 

தவித்த முயல் அடிக்கும் அரசியல்..! 

இத்திரைப்படம் நல்லாட்சி அரசாங்கக்காலத்தில் எடுக்கப்பட்டிருக்கவேண்டும். இதனால்தான் போராட்டங்களின் போது நல்லாட்சியை மக்கள் கேள்விக்குட்படுத்துகிறார்கள். தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளையும் அதை நம்பி தாம் அளித்த வாக்குகளையும், தமது பிரதிநிதிகளையும் குறித்து கவலைப்படுகிறார்கள். இது இன்றைய அரசாங்கத்திற்கும் பொருந்திப்போகிறது. 

நல்லாட்சியில் “மலையைப்பிளந்து மாமரத்தில் சாத்தினோம்” என்ற தமிழ்த்தேசிய பாராளுமன்ற -, முட்டுக்கொடுப்பு அரசியலை மக்கள் ஏற்கவில்லை என்பதை மட்டுமல்ல, அந்த மக்களுக்காக  இந்த அரசியல்வாதிகள் எதையும் செய்யவில்லை என்பதையும் இப்படம் பேசுகிறது. 

மக்கள் அரசியல்வாதிகளிலும், பொது அமைப்புக்களிலும் நம்பிக்கை இழந்து நிற்கிறார்கள். வருகின்ற, போகின்ற அமைப்புக்கள் அனைத்தும் ஐ.நா.வுக்கு அழுத்தம் கொடுக்கிறோம்  என்று கூறிக் கொண்டு மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணாமல் தங்கள் அரசியல், அமைப்பு நலன்களையே தக்கவைக்கப் பார்க்கிறார்கள். தங்கள் இலக்குக்கு இணங்கவைக்க மக்களுக்கே அழுத்தம் கொடுக்கிறார்கள். 

கண்ணி வெடியகற்றும் வேலையில் குடும்பப்பெண்கள் அதுவும் கணவர்கள் காணாமல்போன பெண்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.  

இதற்கு இரண்டு காரணங்களைப் பேசுகிறது ஆறாம்நிலம். 

ஒன்று தமது வாழ்வாதாரத்திற்காக தமது உயிரைப்பணயம் வைத்து வேறு வழியின்றி விரும்பியோ, விரும்பாமலோ இப்பெண்கள் இவ் வேலைக்கு போகிறார்கள். மற்றது பெண்களை ஊக்கப்படுத்தி இந்த வேலைக்குச் சேர்த்து விடுவதன்மூலம் “பெண்களுக்கான வேலைவாய்ப்பு” என்று உதவி அமைப்புக்கள் நிறைய வெளிநாட்டு உதவிகளைப் பெற்றுக் கொள்கின்றன. தவித்த முயல் அடித்த கதை. 

வெளிநாட்டுப் பத்திரிகையாளர் ஒருவருடன் வந்த உள்ளூர் உதவியாளரின் செயற்பாட்டை பார்த்த அந்த அப்பம்மா இப்படிப் பாடுகிறாள். 

வெங்கனுக்கு வெங்கன் வந்து வாய்ச்சதைப்பாரு  – அவன்  

 வீடுகட்டித்தாறன் என்று ஏய்ச்சதைப்பாரு……” 

அந்த ஊர் அண்ணாவியார் பேசும் அரசியல் இது. அவர் பாடுகிறார் …. 

“தன்னைத்தானே தலைவன் என்று சொல்லுவாங்க அம்மா! 

தனித்தனியாய்த் தத்துவங்கள் பேசுவாங்கள் அம்மா..!! 

திரைப்படம் மக்களை ஈர்கக்கூடிய மிகப்பெரும் சக்தியைக் கொண்ட கலைவடிவம். அதற்கு அது பேசும் பொருளும் வாய்த்துவிட்டால் அதன் சக்தி இரட்டிப்பாகிவிடும். ஆறாம் நிலம் ஒரு மாற்று ஆவணப்படம்.  

அந்த வகையில் தொண்ணூறு நிமிடங்களைக்கொண்ட ஆறாம்நிலம் ஒரு நிமிடத்தை கூட தவறவிடாமல் பார்வையாளர்களை தம்மோடு கட்டிப்போடுகிறது. இங்கு ரசிகர்கள் என்ற வார்த்தையைப் பயன்படுத்தினால் வெறும் ரசனைக்கானதாக ஆறாம்நிலத்தை கொச்சைப்படுத்துவதாக அது அமைந்துவிடும்.  

ஆறாம்நிலம் ரசிப்பதற்கானதல்ல. போர்தின்ற நிலத்தின், அதன் சொல்லொண்ணாத் துயர்கொண்ட வாழ்வியலின் வடுக்களையும், வலிகளையும் இதயத்தால் இரட்சிப்பதற்கானது. 

‘ஆறாம் நிலம் இயேசு சுமந்த சிலுவைப் பாதையின் மற்றோர் வடிவம்.’