ஆறுகள், குளங்களை மையமாக வைத்து சட்டவிரோத செயற்பாடு: பொறுப்புவாய்ந்தவர்கள் கூட்டாக இணைய வேண்டும்
— படுவான் பாலகன் —
உலகத்தினை கொவிட் 19 கொரோனா தொற்றின் மூலமாக இயற்கை அடக்கி வைத்திருந்தாலும், பல்வேறான குற்றச்செயல்களும், சட்டவிரோத செயற்பாடுகளும் நடந்தேறிய வண்ணமே உள்ளன. இயற்கை அழகும், மனதிற்கு இதமும் கொடுக்கின்ற இலங்கைத்தீவில் அழுக்கான செயற்பாடுகளும் நடந்தேறி வருகின்றமை கவலையானதொன்றே. நாட்டினை தலைமையேற்று நடத்துகின்ற அரசாங்கமும் பல்வேறான சட்டங்களை நிறைவேற்றினாலும் இன்னமும் குற்றச்செயல்களும், சட்டவிரோத செயற்பாடுகளும் முடிந்தபாடில்லை.
ஆரோக்கியமானதும், நல்லொழுக்கம் கொண்டதுமான சமூகத்தினை கட்டியெழுப்ப வேண்டுமென கோசங்கள் இட்டாலும் கிராமங்களில் இடம்பெறுகின்ற அசம்பாவிதங்களை முறியடிக்க அல்லது முற்றுப்புள்ளி வைக்க முடியாமல் இருப்பதும் கவலையானதொன்றே.
நாட்டில் சட்டபூர்வமான முறையில் மதுபானசாலைகள் இயங்கிக்கொண்டிருக்கையில், அவற்றிற்கும் மேலாக சட்டவிரோத கசிப்பு உற்பத்திகள் இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன.
சட்டவிரோத செயல்களுக்கு எதிரான சட்டங்கள், சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்காக காவல்துறையினர் உள்ளிட்ட அரச ஊழியர்கள் நியமிக்கப்பட்டிருந்தாலும், அவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகள் இன்னமும் முடிவுறுத்தப்படவில்லை.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சட்டவிரோத கசிப்பு உற்பத்திகள் இடம்பெறுவதை அறிகின்றோம். அதிலும் மட்டக்களப்பின் படுவான்கரைப்பகுதியில், ஆறுகள், குளங்களை அண்டிய பகுதிகளில் இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகள் நடைபெறுகின்றன. அண்மையில் கண்டியநாறு, அடைச்சல் போன்ற குளங்களில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நடைபெறுவதாகவும், அதனால் அக்குளங்களில் உள்ள மீனினங்கள் இறப்பதாகவும் செய்திகள் வெளியாகிருந்தன. அப்பகுதியில் இருந்து பெருமளவிலான கசிப்பும் கைப்பற்றப்பட்டிருந்தது. அதேபோன்று சாமந்தியாறு, புளுகுணாவை குளம், விளிம்பாகுளம், சிறையாத்தீவு போன்ற பகுதிகளிலும் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகையிடப்பட்டிருந்தன. இவ்வாறு அமையும் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையங்களின் உற்பத்திகளை, அதிகளவில் சாதாரண மக்களே அருந்துகின்றனர். இவ்வுற்பத்திகளினால் சமூகம் சீர்குலைக்கப்படுவதுடன், உடல் ஆரோக்கியத்திலும் பாதிப்பு ஏற்படுகின்றது.
இளம் சமூகத்தினரும் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றமையும், அதற்கு அடிமையாகின்றமையினையும் அவதானிக்க முடிகின்றது. எனவே மாவட்டத்தில் இருக்கின்ற ஒட்டுமொத்த பொறுப்புவாய்ந்த அதிகாரிகளும் இச்சட்டவிரோத செயற்பாடுகளை இல்லாமல் ஆக்குவதற்கு ஒன்றாக இணைய வேண்டும். சமூக நலனில் அதீத அக்கறை கொண்டு, ஆரோக்கியமானதும், ஒழுக்கமானதுமான சமூகத்தினை கட்டியெழுப்புவதற்கு முயற்சிக்க வேண்டும். இதற்கான பூரண ஒத்துழைப்பினையும், தடைகளையும் நீக்குவதற்கு மக்கள் பிரதிநிதிகளும் முன்வர வேண்டும். இவற்றிற்கு ஆதரவாக, துணையாக செயற்படுபவர்களையும் சமூகத்திற்கு தெரியப்படுத்தி அவ்வாறானவர்களையும் சட்டத்தின்முன் நிறுத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மட்டக்களப்பு மாவட்டம் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி அற்ற மாவட்டம் என்ற நற்பெயரினைப் பெற வேண்டும். வீதி, வீடு, பாலம், கட்டிடம் இவைகள் மட்டும் அபிவிருத்திகள் அல்ல. மக்களிடத்திலும் அபிவிருத்தி இடம்பெற வேண்டும். குறிப்பாக இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகள் நீங்கிய அபிவிருத்தி இடம்பெற வேண்டும். இவ் அபிவிருத்தியை அனைவரும் இணைந்தால் இலகுவாக மேற்கொள்ள முடியும். இல்லையாயின் இருண்ட உலகிற்கு மக்கள் செல்வதை தடுக்கமுடியாமல் போய்விடும்.