சமன் இந்திரஜித் / தி ஐலண்ட்
இலங்கையில் மதுபானம் மற்றும் புகையிலைப் பாவனையால் ஏற்படும் சுகாதார மற்றும் பொருளாதார இழப்புகள் 549 பில்லியன் ரூபாவை எட்டியுள்ளன. இவற்றின் மூலம் கிடைக்கும் 346.9 பில்லியன் ரூபா வரி வருவாயைவிட இந்த இழப்பு 202 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகும் என புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபை (NATA) நாடாளுமன்ற உபகுழுவிடம் தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சினால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகளை அரசாங்க பொறுப்புமுயற்சிகள் பற்றிய குழுவின் (COPE) உபகுழுவிடம் சமர்ப்பித்தபோது, தேசிய அதிகாரசபையின் தலைவர் ஆனந்த ரத்நாயக்க இந்தத் தகவல்களை வெளியிட்டார்.
ஆய்வுத் தரவுகளின்படி, மதுபானப் பாவனையால் மட்டும் 335 பில்லியன் ரூபா சுகாதார மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. ஆனால், மதுபானத்தின் மூலமான வரி வருவாய் 254 பில்லியன் ரூபாவாகவே உள்ளது.
இதேவேளை, 2019ஆம் ஆண்டின் தரவுகளின்படி சிகரெட்டுகள் மூலம் 92.9 பில்லியன் ரூபா வரி வருவாய் கிடைக்கின்ற போதிலும், அவற்றால் ஏற்படும் சுகாதார மற்றும் பொருளாதார இழப்பு 214 பில்லியன் ரூபாவாக மதிப்பிடப்பட்டுள்ளது.
தினமும் 60 பேர் உயிரிழப்பு:
சிகரெட் புகைப்பிடிப்பதால் இலங்கையில் ஆண்டுதோறும் சுமார் 22,000 பேர் உயிரிழப்பதாகவும், இது நாளொன்றுக்கு சுமார் 60 உயிரிழப்புகளுக்குச் சமமானது என்றும் ரத்நாயக்க தெரிவித்தார்.
“மதுபானம் மற்றும் புகையிலை மூலம் அரசாங்கத்துக்குப் பெருமளவு வரி வருவாய் கிடைப்பதாக ஒரு பொதுவான தவறான நம்பிக்கை நிலவுகிறது. ஆனால், அவற்றால் ஏற்படும் பொருளாதார இழப்பு அதைவிட மிகவும் அதிகமாகும்” என அவர் குழுவிடம் தெரிவித்தார்.
தற்போது சிகரெட்டுகளின் சில்லறை விற்பனை விலையில் வரியின் பங்கு 66 சதவீதமாக உள்ளது. இது உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) பரிந்துரைத்துள்ள 75 சதவீத அளவைவிடக் குறைவானதாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
சிகரெட் உற்பத்தியில் வீழ்ச்சி:
இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் ஆண்டுதோறும் சுமார் 600 கோடி சிகரெட்டுகள் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை சுமார் 200 கோடியாகக் குறைந்துள்ளதாகவும் ரத்நாயக்க தெரிவித்தார்.
எனினும், சிகரெட்டுகளின் நீளத்தை அடிப்படையாகக் கொண்ட நாட்டின் நான்கு அடுக்கு வரி விதிப்பு முறையை அவர் விமர்சித்தார். இந்த நடைமுறையானது வரி அதிகரிப்பின் முழுமையான தாக்கத்திலிருந்து உற்பத்தி நிறுவனங்கள் தப்பித்துக்கொள்ள வழிவகுப்பதாக அவர் குறிப்பிட்டார்.
பொருளாதார நெருக்கடியின்போது ஏனைய பொருட்களின் விலைகள் அதிகரித்த அளவுக்கு சிகரெட் மீதான வரிகள் அதிகரிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
“வரி அதிகரிக்கப்பட்டவுடன், புகையிலை நிறுவனம் அதே சிகரெட்டின் நீளத்தை இரண்டு மில்லிமீற்றர் குறைத்து, முன்னரை விடக் குறைந்த விலையில் விற்பனை செய்கிறது” என ரத்நாயக்க தெரிவித்தார்.
நிதி அமைச்சின் பிரதிநிதித்துவம் இல்லை:
புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான வரி விதிப்புக்கும், அவற்றால் ஏற்படும் சுகாதார மற்றும் பொருளாதார இழப்புகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தபோதிலும், தேசிய அதிகாரசபையின் 14 உறுப்பினர்களைக் கொண்ட நிர்வாக சபையில் நிதி அமைச்சின் பிரதிநிதி எவரும் இடம்பெறவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
நிர்வாக சபையில் திறைசேரியின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்கான உத்தேச சட்டத் திருத்தங்கள் சுகாதார அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக ரத்நாயக்க தெரிவித்தார்.
வரி விதிப்புக்கும் பொதுச் சுகாதாரச் செலவுகளுக்கும் நேரடித் தொடர்பு இருப்பதால், புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபையின் நிர்வாக சபையில் திறைசேரியின் பிரதிநிதித்துவம் அவசியமானது என கோப் உபகுழு வலியுறுத்தியுள்ளது.
