புதுடில்லியில் தலாய் லாமாவின் அறக்கட்டளைக்கு அலுவலகம் – இதன் பின்னணி என்ன?

புதுடில்லியில் தலாய் லாமாவின் அறக்கட்டளைக்கு அலுவலகம் – இதன் பின்னணி என்ன?

சூர்யா கங்காதரன் / ஸ்ரட்நியூஸ்குளோபல் 

புதுடில்லியின் முக்கிய அரச நிர்வாகப் பகுதியான லுட்யென்ஸ் டில்லியில், தலாய் லாமாவின் ‘காடென் போட்ராங்’ (Gaden Phodrang) அறக்கட்டளைக்கு பங்களா ஒன்று ஒதுக்கப்பட்டுள்ளமை, தலாய் லாமாவின் வாரிசு விவகாரத்தில் சீனாவுக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டில் நுட்பமான மாற்றம் ஏற்படுவதைக் காட்டுகின்றதா? மேலோட்டமாகப் பார்க்கும்போது அவ்வாறு தோன்றவில்லை.

சீன விவகாரங்கள் தொடர்பான ஆய்வாளரும் அரசியல் விமர்சகருமான பேராசிரியர் ஸ்ரீகாந்த் கொண்டபள்ளி இதுகுறித்து தெரிவிக்கையில்,

“1959ஆம் ஆண்டு தலாய் லாமா இந்தியாவுக்கு வந்தபோது, திபெத்திய அடையாளத்தைப் பாதுகாப்பதாக ஜவஹர்லால் நேரு உறுதியளித்திருந்தார். திபெத்தியர்களின் கலாசாரம், மொழி, வாழ்க்கை முறை உள்ளிட்ட அவர்களின் தனித்துவமான அடையாளம் பாதுகாக்கப்படும் என அவர் உறுதியளித்தார். லுட்யென்ஸ் பகுதியில் பங்களா ஒதுக்கப்பட்டிருப்பது அந்த உறுதிமொழியின் தொடர்ச்சியாகும்” என்றார்.

ஆன்மிகத் தலைவர் – முக்கியத்துவம் வாய்ந்த அலுவலகம்

தலாய் லாமா தற்போது ஓர் அரசியல் தலைவர் அல்ல என்பது இங்கு கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும். 2011ஆம் ஆண்டு தனது அரசியல் அதிகாரங்களை ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றத்திடமும் மத்திய திபெத்திய நிர்வாகத்திடமும் அவர் ஒப்படைத்தார்.

“தலாய் லாமாவை ஓர் ஆன்மிகத் தலைவராகவே புதுடில்லி கருதுகின்றது என்பதை இந்த நடவடிக்கை உறுதிப்படுத்துகின்றது. அவரது அறக்கட்டளைக்கு நகரின் மையப்பகுதியிலும் பாதுகாப்பு வழங்குவதற்கு வசதியான இடத்திலும் அலுவலகம் ஒன்றை வழங்குவதில் எந்தப் பிரச்சினையும் இருக்கக்கூடாது” என்கிறார் பேராசிரியர் கொண்டபள்ளி.

எனினும், இந்த பங்களா இந்திய வெளிவிவகார அமைச்சு, உள்துறை அமைச்சு உள்ளிட்ட முக்கிய அமைச்சுகளுக்கு அருகாமையில் அமைந்துள்ளது என்பதும் கவனிக்கத்தக்கது.

இதனால், மிகவும் உணர்வுபூர்வமான தலாய் லாமாவின் வாரிசு விவகாரம் தொடர்பில் எதிர்காலத்தில் தொடர்பாடல்களும் கலந்துரையாடல்களும் மேலும் இலகுவடையக்கூடும்.

மேலும், ‘Voice for the Voiceless’ (குரலற்றவர்களின் குரல்) என்ற தனது நூலில், தனது வாரிசு ‘சுதந்திர உலகில்’ பிறப்பார் என்றும், அதாவது சீனாவில் பிறக்கமாட்டார் என்றும் தலாய் லாமா குறிப்பிட்டிருந்தார்.

சீனாவின் சந்தேகங்கள்:

இந்த நடவடிக்கையைச் சீனா அமைதியாக ஏற்றுக்கொள்ளும் என்று எதிர்பார்க்க முடியாது. ஏனெனில், இதற்கு முன்னர் ஐந்து தலாய் லாமாக்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கான கல்வி மற்றும் பயிற்சிகளை வழங்குவதில் இந்த அறக்கட்டளை பங்காற்றியுள்ளது.

தற்போதைய 14ஆவது தலாய் லாமாவின் வாரிசைத் தேர்ந்தெடுக்கும் உரிமை தனக்கு மட்டுமே இருப்பதாக சீனா கடந்த காலங்களில் கடுமையாக வலியுறுத்தி வந்துள்ளமையும் நினைவுகூரத்தக்கது.

  • இந்த ஆண்டு ஜூலை மாதத்திலும் மதத் தலைவர்களின் வாரிசுத் தேர்வு தொடர்பில் அரசின் இறையாண்மையை வலியுறுத்தும் இன ஒற்றுமைச் சட்டத்தைச் சீனா நிறைவேற்றியது.
  • இதற்கு முன்னர், 17ஆம் நூற்றாண்டில் தொடங்கிய சிங் வம்ச ஆட்சிக் காலத்தைச் சேர்ந்த ‘தங்கக் கலசம்’ மூலம் சீட்டெடுத்து வாரிசைத் தேர்ந்தெடுக்கும் நடைமுறையைக் கட்டாயப்படுத்தியிருந்தது.
  • 2007ஆம் ஆண்டு, மறுபிறவி எடுத்ததாக அடையாளம் காணப்படும் லாமாக்களுக்கு, அவர்களது மதச் செல்வாக்கின் அடிப்படையில் அரசாங்கத்தின் அங்கீகாரம் அவசியம் என வலியுறுத்தும் சர்ச்சைக்குரிய ‘கட்டளை இலக்கம் 5’ என்ற விதிமுறையையும் அறிமுகப்படுத்தியது.

தலாய் லாமாவின் அறக்கட்டளைக்கு இந்தியா பங்களா ஒதுக்கியுள்ளமைக்கும், அமெரிக்க – சீன பொருளாதார மற்றும் பாதுகாப்பு மீளாய்வு ஆணைக்குழு அமெரிக்க நாடாளுமன்றத்துக்குச் சமர்ப்பித்துள்ள அறிக்கைக்கும் இடையில் மறைமுகமான தொடர்பு இருப்பதாக சீனா சந்தேகிக்கக்கூடும்.

ஆனால், உண்மையில் அவ்வாறான தொடர்பு எதுவும் இல்லை. ஏனெனில், பங்களாவை ஒதுக்கும் நடவடிக்கைகள் கடந்த ஆண்டே ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

அமெரிக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள்:

எவ்வாறாயினும், தலாய் லாமாவின் வாரிசு தொடர்பான அமெரிக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் சீனாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தும் என்பது உறுதி.

இந்தப் பரிந்துரைகள் 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட ‘திபெத்திய கொள்கை மற்றும் ஆதரவுச் சட்டத்துடன்’ ஒத்துப்போகின்றன.

திபெத்தின் நிர்வாகம், மதத் தலைவர்களின் வாரிசுத் தேர்வு, மனித உரிமைகள் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பான அமெரிக்காவின் கொள்கையை அந்தச் சட்டம் மேலும் வலுப்படுத்தியது.

திபெத் மற்றும் தலாய் லாமாவின் வாரிசு விவகாரங்களில் இந்தியாவுடன் இணைந்து செயற்பட வேண்டும் என்ற அமெரிக்க ஆணைக்குழுவின் அழைப்பு, பெய்ஜிங்கில் மேலும் சலசலப்பை ஏற்படுத்தக்கூடும்.

ஆணைக்குழுவின் பரிந்துரைகளும் ட்ரம்பின் நிலைப்பாடும்:

அமெரிக்க ஆணைக்குழு தனது அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது:

“14ஆவது தலாய் லாமாவின் வாரிசை அடையாளம் கண்டு அங்கீகரிப்பதற்கான ஒரேயொரு சட்டபூர்வமான அதிகார அமைப்பாக காடென் போட்ராங் அறக்கட்டளையை அமெரிக்கா ஏற்றுக்கொள்ள வேண்டும். சீன மக்கள் குடியரசின் அரசாங்கத்தால் தேர்ந்தெடுக்கப்படும் அல்லது நியமிக்கப்படும் எந்தவொரு வாரிசையும் அமெரிக்கா அங்கீகரிக்காது என்பதை அதன் உத்தியோகபூர்வ கொள்கையாக நாடாளுமன்றம் அறிவிக்க வேண்டும்.”

மேலும், தலாய் லாமாவின் வாரிசுத் தேர்வின்போது உருவாகக்கூடிய பல்வேறு சூழ்நிலைகளை ஆராய்வதற்கான துறைசார் ஒருங்கிணைந்த ஒத்திகை நடவடிக்கையை அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் முன்னெடுக்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், தேசிய புலனாய்வுப் பணிப்பாளர், பாதுகாப்புச் செயலாளர் ஆகியோர் பங்கேற்க வேண்டும். அதன் முடிவுகள் 180 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட நாடாளுமன்றக் குழுக்களுக்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலாய் லாமாவின் வாரிசுத் தேர்வின்போது ஏற்படக்கூடிய சூழ்நிலைகளை எதிர்கொள்வதற்காக இந்திய அரசாங்கத்துடன் உயர்மட்டத் தொடர்பாடல் பொறிமுறை ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

சீனாவின் செல்வாக்குச் செலுத்தும் நடவடிக்கைகள் தொடர்பான புலனாய்வுத் தகவல்களைப் பகிர்ந்துகொள்வதும் இதில் உள்ளடங்கும்.

அத்துடன், வாரிசுத் தேர்வினால் ஏற்படக்கூடிய அரசியல் மற்றும் பாதுகாப்பு விளைவுகள் குறித்து இந்தியத் தரப்பினருடன் அரச அதிகாரிகளும் அரச சார்பற்ற நிபுணர்களும் பங்கேற்கும் ‘Track 1.5’ மற்றும் ‘Track 2’ கலந்துரையாடல்களை நடத்த வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சீனாவின் இணையவழித் தாக்குதல்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் தவறான தகவல் பரப்புரைகளுக்கு எதிராக மத்திய திபெத்திய நிர்வாகத்தின் இணையப் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட வேண்டும்.

இந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குத் தேவையான சட்டபூர்வ அனுமதிகளையும் நிதி ஒதுக்கீடுகளையும் அமெரிக்க நாடாளுமன்றம் வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்து சமுத்திரத்தில் சீனாவுக்கு எதிரான இந்திய – அமெரிக்க ஒத்துழைப்பு:

திபெத் விவகாரத்தில் இந்தியாவுடன் இணைந்து செயற்படுவதற்கு அப்பாலும் அமெரிக்க ஆணைக்குழுவின் அறிக்கை பல பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.

“பிராந்தியத்தில் இந்தியாவின் செல்வாக்கைக் கட்டுப்படுத்துவதற்கும் இந்து சமுத்திரத்தில் தனது இராணுவப் பிரசன்னத்தை விரிவுபடுத்துவதற்கும் சீனா மேற்கொள்ளும் முயற்சிகள், அமெரிக்க – இந்திய மூலோபாயக் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்காட்டுகின்றன” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்கா தனது பாதுகாப்புத்துறைச் செயற்பாட்டு ஒத்துழைப்பை இந்தியாவுடன் மேலும் ஆழப்படுத்துவதுடன், இரு நாடுகளினதும் அடுத்த தலைமுறைத் தலைவர்களுக்கு இடையில் நீடித்த உறவுகளையும் உருவாக்க வேண்டும்.

இந்து சமுத்திரத்தின் நீருக்கடியிலான நடவடிக்கைகள் மற்றும் கடல்சார் நிலைமைகள் தொடர்பான கண்காணிப்பில் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதற்காக, அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளரும் கூட்டுப் படைத்தலைமைகளின் தலைவரும் இந்தியாவின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து செயற்படுமாறு அமெரிக்க நாடாளுமன்றம் அறிவுறுத்த வேண்டும்.

இந்த ஒத்துழைப்பானது வெறுமனே கூட்டு இராணுவப் பயிற்சிகளுடன் நின்றுவிடாமல், தொடர்ச்சியான செயற்பாட்டு ஒத்துழைப்பை நோக்கி நகர வேண்டும்.

முறையான புலனாய்வு மற்றும் கண்காணிப்புத் தகவல் பரிமாற்றம், சீனக் கடற்படை மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களின் நடவடிக்கைகளை ஒருங்கிணைந்து கண்காணித்தல், கடல்சார் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கான நடைமுறைகளை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

அத்துடன், பாதுகாப்பு, அரச நிர்வாகம், வர்த்தகம் மற்றும் கல்வித்துறைகளில் வளர்ந்துவரும் தலைவர்களுக்கு இடையில் தலைமுறைகள் கடந்த உறவுகளை உருவாக்கும் நோக்கில், ‘இந்திய – அமெரிக்க மூலோபாயத் தலைமைத்துவப் பரிமாற்றத் திட்டம்’ ஒன்றை உருவாக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ட்ரம்ப் என்ன செய்வார்?

அமெரிக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஆனால், தற்போதைக்கு அவை வெறும் பரிந்துரைகளாகவே உள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இவற்றை நடைமுறைப்படுத்துவாரா?

2020ஆம் ஆண்டு திபெத்திய கொள்கை மற்றும் ஆதரவுச் சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு அவர் ஆதரவளித்திருந்தார். எனினும், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்குடன் அவர் வெளிப்படுத்திவரும் நெருக்கமான நட்புறவைப் பார்க்கும்போது, அவரது மனதில் வேறு கணக்குகள் இருக்கக்கூடும் என்றே தோன்றுகின்றது.

மூலம்: ஸ்ரட்நியூஸ்குளோபல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *