2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் திகதி, மனிதாபிமான அமைப்புகளின் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் மூதூரிலுள்ள ‘Action Contre la Faim’ (ACF) அமைப்பின் அலுவலகத்தைச் சென்றடைந்தபோது, பிரான்ஸைத் தளமாகக் கொண்ட அந்தத் தொண்டு நிறுவனத்தின் 17 இலங்கைப் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்ததைக் கண்டனர்.
இருபது ஆண்டுகளுக்குப் பின்னர், அரசாங்கப் படையினர் மூதூர் நகரத்தை மீண்டும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பின்னர், இலங்கைப் பாதுகாப்புப் படையினரே இந்தப் படுகொலைகளை மேற்கொண்டனர் என்பதற்கான மேலதிக ஆதாரங்களைத் திரட்டியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்தப் படுகொலைகளுக்கு உத்தரவிட்டிருக்கக்கூடியவர்கள், அவற்றைத் தடுக்கத் தவறியவர்கள் அல்லது குற்றவாளிகளைத் தண்டிக்கத் தவறியவர்கள் தொடர்பிலும் இந்த ஆதாரங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை என அந்த அலுவலகம் தெரிவித்துள்ளது.
இலங்கையிலோ அல்லது ஏனைய நாடுகளின் நீதிமன்றங்களிலோ எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படக்கூடிய சட்ட நடவடிக்கைகளுக்காக இந்த ஆதாரங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் வியாழக்கிழமை ஜெனிவாவில் வெளியிடப்பட்ட 40 பக்க அறிக்கையின் மிக முக்கியமான கண்டறிதல்களில் இதுவும் ஒன்றாகும்.
போரின் இறுதி மாதங்களில் பணியாற்றிய தனது அனுபவத்தைத் தாதியொருவர் விபரித்தபோது தெரிவித்த ‘நான் பலமுறை இறந்துவிட்டேன்’ (I died many times) என்ற வார்த்தைகளே இந்த அறிக்கையின் தலைப்பாக அமைந்துள்ளன.
2006ஆம் ஆண்டு முதல் 2009 மே மாதம் வரையிலான காலப்பகுதியில் மனிதாபிமானப் பணியாளர்கள், மருத்துவமனைகள் மற்றும் நிவாரண நடவடிக்கைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை இந்த அறிக்கை ஆராய்கின்றது.
இத்தாக்குதல்கள் தனித்தனியான சம்பவங்களோ அல்லது தற்செயலான நிகழ்வுகளோ அல்ல என அறிக்கை முடிவுசெய்துள்ளது. வன்னியில் சிக்கியிருந்த தமிழ் பொதுமக்களே இதனால் பெருமளவில் பாதிக்கப்பட்டதாகவும் அது தெரிவிக்கின்றது.
அறிக்கையில் விரிவாக ஆராயப்பட்டுள்ள நான்கு சம்பவங்கள் தொடர்பிலும் இதுவரை எவரும் குற்றவியல் ரீதியாகப் பொறுப்புக்கூற வைக்கப்படவில்லை.
அரச பாதுகாப்புப் படையினரின் தொடர்பு உள்ளிட்ட இந்தத் தாக்குதல்கள் பற்றிய உண்மைகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், அரசின் சார்பில் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும் என்றும், கொல்லப்பட்ட மற்றும் காணாமலாக்கப்பட்ட மனிதாபிமான மற்றும் மருத்துவப் பணியாளர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம் கோரியுள்ளது.
எனினும், அரசாங்கம் இதுவரை பதிலளிக்கவில்லை.
கடந்த செப்டெம்பர் 24ஆம் திகதி, இந்தச் சம்பவங்கள் தொடர்பில் ஜெனிவாவிலுள்ள இலங்கையின் நிரந்தர வதிவிடத் தூதரகத்துக்கு 27 கேள்விகளை அனுப்பிய ஐ.நா. அலுவலகம், ஒக்டோபர் 5ஆம் திகதிக்கு முன்னர் பதிலளிக்குமாறு கோரியிருந்தது.
நவம்பர் 3ஆம் திகதி அறிக்கையின் முன்கூட்டிய பிரதியொன்றையும் அனுப்பி, நவம்பர் 13ஆம் திகதிக்கு முன்னர் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு கேட்டிருந்தது.
இரண்டுக்கும் எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.
மனிதாபிமான அமைப்புகள் மீதான அழுத்தங்கள்:
ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளரின் நிபுணர் குழுவின் 2011ஆம் ஆண்டு கண்டறிதல்கள், இலங்கை தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் 2015ஆம் ஆண்டு விசாரணை மற்றும் 2021ஆம் ஆண்டிலிருந்து இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் திட்டத்தின் கீழ் திரட்டப்பட்ட ஆதாரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
2005 முதல் 2009 வரையான காலப்பகுதியில் போர்ப் பிரதேசத்தில் மனிதாபிமான மற்றும் மருத்துவப் பணிகளில் ஈடுபட்டிருந்த 11 ஆண்கள், ஐந்து பெண்கள் உள்ளிட்ட 16 பேரிடம் இந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட நேர்காணல்களும் அறிக்கையில் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவர்களது அடையாளங்கள் வெளிப்படுத்தப்படவில்லை.
இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போர், விடுதலைப் புலிகளின் தோல்வியுடன் 2009 மே மாதத்தில் முடிவுக்கு வந்தது.
போரின் இறுதி மாதங்களில் பெருமளவிலான பொதுமக்கள் உயிரிழந்ததாக நம்பகமான தகவல் மூலங்கள் தெரிவித்திருந்தன என ஐ.நா. நிபுணர் குழு குறிப்பிட்டுள்ளது.
போரின் இறுதிக்கட்ட இராணுவ நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னரே மனிதாபிமானப் பணியாளர்கள் மீதான தாக்குதல்கள் ஆரம்பித்திருந்தன.
2006 ஜனவரி முதல் 2007 டிசம்பர் வரையான காலப்பகுதியில் மனிதாபிமானப் பணியாளர்கள் கொல்லப்படுவதும் வலிந்து காணாமலாக்கப்படுவதும் தொடர்ச்சியாக இடம்பெற்றதாக, அறிக்கையில் மேற்கோள்காட்டப்பட்டுள்ள இலங்கை மனித உரிமைகள் அமைப்பொன்று தெரிவித்துள்ளது.
2007 ஆகஸ்டில், மனிதாபிமானப் பணியாளர்களின் பாதுகாப்பைப் பொறுத்தவரையில் உலகின் மிக மோசமான நிலைமையைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக இலங்கை விளங்குவதாக அப்போதைய ஐ.நா. மனிதாபிமான விவகாரங்களுக்கான தலைவர் ஜோன் ஹோம்ஸ் தெரிவித்திருந்தார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சரவை அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே, அவரைப் பயங்கரவாதி எனக் குறிப்பிட்டார். எனினும், அந்தக் கருத்து அரசாங்கத்தின் நிலைப்பாட்டைப் பிரதிபலிக்கவில்லை என வெளிவிவகார அமைச்சர் பின்னர் தெரிவித்தார்.
2008 செப்டெம்பரில், வன்னியிலிருந்து தமது பணியாளர்களை வெளியேற்றுமாறு ஐ.நா. முகவர் அமைப்புகளுக்கும் சர்வதேச மனிதாபிமான அமைப்புகளுக்கும் அரசாங்கம் உத்தரவிட்டது.
2012ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஐ.நா.வின் உள்ளக மீளாய்வில், இந்த வெளியேற்றமானது பொதுமக்களுக்கிருந்த மிக முக்கியமான பாதுகாப்பு ஏற்பாடுகளை அகற்றியதாகக் கண்டறியப்பட்டது.
வன்னியைச் சேர்ந்த தமிழர்களாகவே பெரும்பாலும் இருந்த உள்ளூர்ப் பணியாளர்கள் அங்கேயே தங்கியிருந்தனர். அவர்களது குடும்பங்கள் வெளியேறுவதற்கான அனுமதியை விடுதலைப் புலிகள் வழங்காததும் இதற்கு ஒரு காரணமாகும்.
“எங்களைப் பொறுத்தவரையில், அங்கு இடம்பெற்ற கொடுமைகளை நேரில் பார்த்துச் சாட்சியமளிக்கக்கூடிய அனைவரும் வெளியேறிக் கொண்டிருந்தனர்” என மருத்துவப் பணியாளர் ஒருவர் ஐ.நா. அலுவலகத்திடம் தெரிவித்துள்ளார்.
விரிவாக ஆராயப்பட்ட நான்கு சம்பவங்கள்
1. தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்கள் காணாமலாக்கப்பட்டமை:
2006 ஜனவரியில், பொலன்னறுவை மாவட்டத்தின் வெலிகந்தைப் பகுதியில் இராணுவச் சோதனைச் சாவடியைக் கடந்து சென்ற தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் (TRO) பணியாளர்கள் ஆயுததாரிகளால் கடத்தப்பட்டனர். அவர்களில் சிலர் பின்னர் விடுவிக்கப்பட்டபோதிலும், ஏனையோரின் நிலைமை தொடர்பில் இதுவரை தகவல்கள் கிடைக்கவில்லை.
இந்தக் கடத்தல்களுக்கு, விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களைக் கொண்ட அரசாங்க ஆதரவு துணை இராணுவக் குழுவான கருணா குழுவே பொறுப்பு என தமிழர் புனர்வாழ்வுக் கழகம் குற்றஞ்சாட்டியிருந்தது.
அரசாங்கம் தனது தொடர்பை மறுத்ததுடன், விசாரணை நடத்துவதாகவும் உறுதியளித்திருந்தது.
எனினும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இதுவரை விசாரணை அறிக்கையோ அல்லது உருப்படியான பதிலோ வழங்கப்படவில்லை. எவரும் கைது செய்யப்படவுமில்லை.
தமிழர் புனர்வாழ்வுக் கழகம் விடுதலைப் புலிகளின் முன்னணி அமைப்பாகச் செயற்பட்டதாகக் கூறி, 2007ஆம் ஆண்டு அரசாங்கம் அதனைத் தடைசெய்தது.
எனினும், கடத்தல்கள் இடம்பெற்ற காலத்தில் அந்த அமைப்பு சட்டபூர்வமாகப் பதிவு செய்யப்பட்டிருந்ததாக ஐ.நா. அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.
2. மூதூர் மனிதாபிமானப் பணியாளர்கள் படுகொலை:
மூதூரில் இடம்பெற்ற படுகொலையானது, அக்காலத்தில் உலகளவில் மனிதாபிமானப் பணியாளர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதல்களில் ஒன்றாக அமைந்ததாக அறிக்கை தெரிவிக்கின்றது.
படுகொலை செய்யப்பட்ட 17 பணியாளர்களில் 16 பேர் தமிழர்கள்; ஒருவர் முஸ்லிம்.
விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கப் படையினருக்கும் இடையில் மூதூரில் இடம்பெற்ற மோதல்களின்போது இந்தப் பணியாளர்கள் நகருக்குள் சிக்கியிருந்தனர்.
படுகொலை தொடர்பில் பாதுகாப்புப் படையினர் விடுதலைப் புலிகள் மீது பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியிருந்தனர்.
இந்த அறிவிப்பானது பாரபட்சமற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதற்கு முன்னரே அவற்றின் முடிவுகளைத் தீர்மானிக்கும் வகையில் அமைந்திருந்ததாக 2015ஆம் ஆண்டு ஐ.நா. விசாரணை தெரிவித்தது.
மூன்று வாரங்களுக்குப் பின்னர், வட ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகளைக் கொண்ட இலங்கை போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு, இந்தப் படுகொலையானது பாதுகாப்புப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட பாரதூரமான போர்நிறுத்த ஒப்பந்த மீறல் எனத் தீர்மானித்தது.
இரண்டாவது பிரேத பரிசோதனையில் பாதுகாப்புப் படையினரின் சாத்தியமான தொடர்பைச் சுட்டிக்காட்டும் தடயவியல் ஆதாரம் கண்டறியப்பட்டது.
எனினும், அந்த ஆதாரம் பின்னர் உத்தியோகபூர்வ சான்றுப் பொருட்களிலிருந்து அகற்றப்பட்டது. அது தொடர்பில் அறிக்கையிட்ட அவுஸ்திரேலிய தடயவியல் மருத்துவ நிபுணர், துன்புறுத்தல்கள் மற்றும் அழுத்தங்களுக்கு உள்ளானதைத் தொடர்ந்து தனது கண்டறிதலை மீளப்பெற்றதாக அறிக்கை தெரிவிக்கின்றது.
மரண விசாரணையும் அநுராதபுரத்துக்கு மாற்றப்பட்டது. சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழும் அப்பகுதிக்கு தமிழ் சாட்சிகளால் இலகுவாகச் செல்ல முடியாத நிலை காணப்பட்டது.
2009ஆம் ஆண்டு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்று, சம்பவத்தன்று மூதூர் நகர மத்திய பகுதியில் இராணுவத்தினர் காணப்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லை எனத் தெரிவித்திருந்தது.
கடற்படையினரின் தொடர்பைச் சுட்டிக்காட்டிய ஆதாரங்களையும் அது நிராகரித்தது. இதனால் ஆணைக்குழு குறிப்பிட்ட சாத்தியமான தரப்புகளில் விடுதலைப் புலிகள் மட்டுமே ஒழுங்கமைக்கப்பட்ட ஆயுத அமைப்பாக எஞ்சியிருந்தனர்.
அந்த அறிக்கை இந்த ஆண்டு மே மாதத்தில்தான் பகிரங்கப்படுத்தப்பட்டது.
2014ஆம் ஆண்டு பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட தனியான அறிக்கையில், பாதுகாப்புப் படையினரின் தொடர்பு மறுக்கப்பட்டதுடன், ACF அமைப்பின் மீதே குற்றம் சுமத்தப்பட்டது.
2015ஆம் ஆண்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இந்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர், முக்கியமான வழக்குகளில் இராணுவத்தைச் சேர்ந்த சந்தேகநபர்களைக் கைது செய்திருந்த சிரேஷ்ட புலனாய்வு அதிகாரியொருவர் நாட்டை விட்டு வெளியேறினார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தலைவராக இருந்த அதிகாரி பதவியிறக்கப்பட்டு, இடமாற்றம் செய்யப்பட்டு, பின்னர் கைது செய்யப்பட்டதாக அறிக்கை தெரிவிக்கின்றது.
அந்த அதிகாரியான ஷானி அபேசேகர, 2025ஆம் ஆண்டு மீண்டும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.
எனினும், மூதூர் படுகொலை வழக்கில் எந்தவொரு புதிய நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டதாக அறிக்கையில் பதிவாகவில்லை.
கடந்த ஜூலை 6ஆம் திகதி இடம்பெற்ற வழக்கு விசாரணை, சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக டிசம்பர் 7ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
3. வன்னிக்குச் சென்ற இறுதி ஐ.நா. நிவாரணத் தொடரணி மீதான தாக்குதல்:
‘Convoy 11’ என அழைக்கப்பட்ட வாகனத் தொடரணியே தரைவழியாக வன்னிக்குள் செல்ல அனுமதிக்கப்பட்ட இறுதி ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரணத் தொடரணியாகும்.
2009 ஜனவரியில் வன்னிக்குள் சென்ற இந்தத் தொடரணி, புதுக்குடியிருப்பில் நிவாரணப் பொருட்களை இறக்கியது.
தொடரணி வெளியேறுவதற்கு அரசாங்கத்தின் அனுமதியைப் பெறுவதிலும் சிரமங்கள் ஏற்பட்டன. உள்ளூர் ஐ.நா. பணியாளர்களும் அவர்களது குடும்பத்தினரும் வெளியேறுவதை விடுதலைப் புலிகள் தடுத்ததுடன், வெளியேற முயன்றவர்களைத் துரோகிகள் என்றும் அழைத்ததாக அறிக்கை தெரிவிக்கின்றது.
ஐ.நா. பணியாளர்களும் அவர்களது குடும்பத்தினரும் தங்கியிருந்த, தெளிவாக அடையாளப்படுத்தப்பட்டிருந்த பாதுகாப்பு வலயப் பகுதி மீது அரசாங்கப் படையினரின் தரப்பிலிருந்து தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அறிக்கை தெரிவிக்கின்றது.
இதனால் பணியாளர்களின் உறவினர்களும் அருகில் தஞ்சமடைந்திருந்த பொதுமக்களும் உயிரிழப்புகளையும் காயங்களையும் எதிர்கொண்டனர்.
2015ஆம் ஆண்டு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, பொதுமக்கள் உயிரிழந்ததை ஏற்றுக்கொண்டது. எனினும், பாதுகாக்கப்பட வேண்டிய மக்களை விடுதலைப் புலிகள் ஆபத்துக்குள்ளாக்கியதற்கான உதாரணமாகவே இந்தச் சம்பவத்தை அது முன்வைத்தது.
இந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரை எந்தவொரு குற்றவியல் விசாரணையும் ஆரம்பிக்கப்படவில்லை.
4. புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீதான தாக்குதல்கள்:
2009 ஜனவரி மாத இறுதியில், வன்னியில் அறுவைச் சிகிச்சைக் கூடத்தைக் கொண்டிருந்த ஒரேயொரு நிரந்தர மருத்துவமனையாக புதுக்குடியிருப்பு மருத்துவமனை விளங்கியது.
அங்கு 500க்கும் மேற்பட்ட நோயாளர்கள் சிகிச்சை பெற்று வந்தனர். மருத்துவமனை செஞ்சிலுவைச் சின்னங்களால் அடையாளப்படுத்தப்பட்டிருந்ததுடன், அதன் அமைவிடம் தொடர்பான தகவல்களும் அரசாங்கத்துக்கு வழங்கப்பட்டிருந்தன.
எனினும், மருத்துவமனை மீது தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. மருத்துவப் பணியாளர்கள், நோயாளர்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்டோர் இதனால் பாதிக்கப்பட்டனர்.
இராணுவத்தினரின் தரப்பிலிருந்தே தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக சாட்சிகள் தெரிவித்துள்ளனர்.
அப்போதைய பாதுகாப்புச் செயலாளரும் பின்னாளில் ஜனாதிபதியாகப் பதவி வகித்தவருமான கோட்டாபய ராஜபக்ஷ, அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட மோதல் தவிர்ப்பு வலயத்துக்கு வெளியே மருத்துவமனை அமைந்திருந்ததால் அது ஒரு ‘சட்டபூர்வமான இலக்கு’ எனக் குறிப்பிட்டிருந்தார்.
எனினும், ஒரு மருத்துவமனைக்கு வழங்கப்பட வேண்டிய பாதுகாப்பானது மோதலில் ஈடுபட்டுள்ள ஒரு தரப்பினால் அறிவிக்கப்படும் வலயத்தைச் சார்ந்ததல்ல என ஐ.நா. அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.
மருத்துவமனைக்கு முன்னெச்சரிக்கை வழங்கப்பட்டதற்கான பதிவுகள் எதுவும் கண்டறியப்படவில்லை. மருத்துவமனை வெளியேற்றப்படுவதற்கு முன்னர் அது இராணுவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டதாகவும் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
2015ஆம் ஆண்டு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, மருத்துவமனைகள் மீதான எறிகணைத் தாக்குதல்கள் தொடர்பில் நீதிபதி ஒருவரின் தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டுமெனப் பரிந்துரைத்திருந்தது.
எனினும், இதுவரை அத்தகைய விசாரணை எதுவும் நடத்தப்படவில்லை.
உணவு மற்றும் மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாடு:
வன்னியில் மூன்று இலட்சம் முதல் மூன்று இலட்சத்து 30 ஆயிரம் வரையான பொதுமக்கள் சிக்கியிருந்ததாக ஐக்கிய நாடுகள் சபையின் முகவர் அமைப்புகளும் அரசாங்கத்தின் மாவட்ட அதிகாரிகளும் மதிப்பிட்டிருந்தனர்.
எனினும், கொழும்பிலுள்ள அதிகாரிகள் அந்த எண்ணிக்கையை 70 ஆயிரம் முதல் ஒரு இலட்சம் வரை எனக் குறிப்பிட்டிருந்தனர்.
வன்னிக்கான விநியோகங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பொதுமக்களின் எண்ணிக்கை வேண்டுமென்றே குறைத்துக் காட்டப்பட்டதாக ஐ.நா. நிபுணர் குழு கண்டறிந்திருந்தது.
2009 பெப்ரவரி மாதத்தில் உலக உணவுத் திட்டத்தின் மதிப்பீட்டின்படி 4,950 மெற்றிக் தொன் உணவு தேவைப்பட்ட நிலையில், 100 மெற்றிக் தொன்னுக்கும் குறைவான உணவே அப்பகுதிக்குள் கொண்டுசெல்லப்பட்டதாக சிரேஷ்ட அரசாங்க அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
ஜனவரி மாதத்துக்குப் பின்னர் மருத்துவமனைகளின் மின்பிறப்பாக்கிகள் மற்றும் நோயாளர் காவு வண்டிகளுக்கான எரிபொருள் விநியோகம் முற்றாக நிறுத்தப்பட்டது.
மார்ச் மாதத்தில் அப்பகுதியில் பணியாற்றிய அரசாங்க மருத்துவர்கள், ‘அத்தியாவசிய மருந்துகள் கிடைக்காமையால் ஏற்பட்ட தவிர்க்கக்கூடிய உயிரிழப்புகள்’ என்ற தலைப்பிலான அறிக்கையொன்றை கொழும்புக்கு அனுப்பியிருந்தனர்.
நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள், மயக்க மருந்துகள் மற்றும் நரம்புவழியாகச் செலுத்தப்படும் திரவ மருந்துகள் ஒரு போத்தல்கூட தமக்குக் கிடைக்கவில்லை என அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
மே மாதத்தில் போர்ப் பிரதேசத்திலிருந்து வெளியேறிய பின்னர், அந்த மருத்துவர்கள் பல மாதங்களாகத் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
ஜூலை மாதத்தில் அரசாங்கம் ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் மாநாட்டில், அவர்கள் முன்னர் வெளியிட்டிருந்த உயிரிழப்பு எண்ணிக்கைகளை மீளப்பெற்றனர்.
அவர்கள் அரசாங்கத்தின் அழுத்தங்களுக்கு உள்ளாகியிருந்ததாக ஐ.நா. விசாரணையாளர்கள் முடிவுசெய்திருந்தனர்.
2009 ஏப்ரலில் அம்பலவன்பொக்கணையில் பால்மாவைப் பெற்றுக்கொள்வதற்காகக் காத்திருந்த பொதுமக்கள் மீது எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. பெண்களும் குழந்தைகளும் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
நிவாரண விநியோகம் தொடர்பான தகவல்கள் அரசாங்கத்துக்கு முன்கூட்டியே வழங்கப்பட்டிருந்தன.
வேண்டுமென்றே இலக்குவைக்கப்பட்டதாக நம்புவதற்கு நியாயமான அடிப்படைகளைக் கொண்ட மூன்று உணவு விநியோக நிலையங்களில் இதுவும் ஒன்று என 2015ஆம் ஆண்டு ஐ.நா. விசாரணை முடிவுசெய்திருந்தது.
அதேவேளை, இந்த அறிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளையும் குற்றஞ்சாட்டுகின்றது.
தமது கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து பொதுமக்கள் வெளியேறுவதை விடுதலைப் புலிகள் தடுத்ததாகவும், இதனால் பொதுமக்கள் எறிகணைத் தாக்குதல்களுக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டதாகவும் அறிக்கை தெரிவிக்கின்றது.
சில சந்தர்ப்பங்களில் மருத்துவமனைகள் மற்றும் ஐ.நா. வளாகங்களுக்கு அருகில் இராணுவ வளங்களை விடுதலைப் புலிகள் வைத்திருந்ததாகவும் அது குறிப்பிடுகின்றது.
ஐ.நா.வின் இறுதி நிவாரணத் தொடரணி தொடர்பான சம்பவத்தில் மனிதாபிமானப் பணியாளர்களைப் பாதுகாப்பதற்கான தமது கடப்பாடுகளை இரு தரப்பினரும் நிறைவேற்றத் தவறியதாக அறிக்கை கண்டறிந்துள்ளது.
எனினும், இந்தக் கண்டறிதல்கள் அரசாங்கப் படையினரின் கடப்பாடுகளை எந்த வகையிலும் குறைத்துவிடாது என அறிக்கை வலியுறுத்துகின்றது.
‘இந்த வரலாற்றை யார் சொல்வார்கள்?’
நேர்காணல் செய்யப்பட்ட பலர், மருத்துவக் குழுக்கள் ஒரு கட்டத்தில் தமது மருத்துவ நிலையங்களை அடையாளப்படுத்துவதையே நிறுத்தியிருந்ததாகத் தெரிவித்துள்ளனர்.
“ஒரு இடத்தை மருத்துவமனை என அடையாளப்படுத்திய உடனேயே அந்த இடம் தாக்குதலுக்கு உள்ளாவதை நாம் உணர்ந்துகொண்டோம்” என ஒருவர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களுக்குப் பாதுகாப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவர்களை மோதல் தவிர்ப்பு வலயத்துக்கு அழைத்துச் செல்ல உதவியிருந்த மற்றொரு பணியாளர்,
“நாங்கள் அவர்களை மரணத்தை நோக்கி அழைத்துச் சென்றோம்” என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கையின் தலைப்புக்குக் காரணமான வார்த்தைகளைத் தெரிவித்த தாதி, வயிற்றில் காயத்துடன் சிகிச்சைக்காகக் கொண்டுவரப்பட்ட சிறுவனொருவனைப் பற்றியும் நினைவுகூர்ந்துள்ளார்.
அந்தச் சிறுவன் தனக்குச் சற்று முன்னர் வழங்கப்பட்ட வைப்பான் துண்டொன்றைக் கையில் வைத்திருந்தான்.
கோதுமை மாவு மற்றும் சீனியைக் கொண்டு தயாரிக்கப்படும் இனிப்புப் பண்டமான வைப்பான், போரின் இறுதி மாதங்களில் இடம்பெயர்ந்த பொதுமக்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.
அந்தச் சிறுவனால் அதனைச் சாப்பிட முடியாது என்பதை அறிந்திருந்த தாதி, அவனது கையிலிருந்து வைப்பானைப் பெற்று வீசியெறிந்ததாகத் தெரிவித்துள்ளார்.
“அந்தச் சம்பவத்தைப் பற்றி இப்போதும் நினைத்துக்கொண்டிருக்கின்றேன்” என அவர் கூறியுள்ளார்.
மற்றொரு பணியாளர் இவ்வாறு தெரிவித்துள்ளார்:
“நான் உயிருடன் இருக்கும் வரையில், அந்த வேதனையைப் பற்றி மக்களுக்குச் சொல்ல வேண்டும். அந்த வரலாற்றை அவர்களுக்குச் சொல்ல வேண்டும். நான் அதனைச் செய்யாவிட்டால், இந்த வரலாற்றை வேறு யார் சொல்வார்கள்?”
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் புதிய நடவடிக்கைகள் இல்லை:
பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதாக வாக்குறுதியளித்த அநுரகுமார திசாநாயக்க, 2024 செப்டெம்பரில் ஜனாதிபதியாகப் பதவியேற்றார்.
வேறு சில வழக்குகளில் விசாரணையாளர்கள் புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளபோதிலும், இந்த அறிக்கையில் ஆராயப்பட்ட நான்கு சம்பவங்கள் தொடர்பிலும் எந்தப் புதிய நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என ஐ.நா. அறிக்கை தெரிவிக்கின்றது.
சுயாதீனமான வழக்குத் தொடுநர் அலுவலகமொன்றை நிறுவுவதாக அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
2025 ஒக்டோபரில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60/1 தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் நிராகரித்தது.
குறிப்பாக, இந்த அறிக்கை ஓரளவு அடிப்படையாகக் கொண்டுள்ள ஐ.நா.வின் ஆதாரங்களைத் திரட்டும் திட்டத்துக்கு அரசாங்கம் எதிர்ப்புத் தெரிவித்திருந்தது.
இலங்கைப் போருடன் தொடர்புடைய சர்வதேசக் குற்றங்களுக்காக பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட எவரைப் பற்றியும் தமக்குத் தெரியவில்லை என ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.
போர்க்காலத்தில் தமிழ் பொதுமக்களைக் கொலை செய்தமைக்காக ஒரேயொரு இராணுவ வீரரே குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார்.
2000ஆம் ஆண்டு மிருசுவில் படுகொலை தொடர்பில் சுனில் ரத்நாயக்கவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. எனினும், 2020 மார்ச் மாதம் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவருக்குப் பொதுமன்னிப்பு வழங்கினார்.
இலங்கைக்கு ஐ.நா. முன்வைத்துள்ள பரிந்துரைகள்:
சட்டமா அதிபரின் அலுவலகத்திலிருந்து சுயாதீனமாகச் செயற்படும் வழக்குத் தொடுநர் அலுவலகமொன்றை நிறுவுமாறு இலங்கையிடம் ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம் கோரியுள்ளது.
அத்துடன் பின்வரும் நடவடிக்கைகளையும் அது பரிந்துரைத்துள்ளது:
- போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களை இலங்கையின் உள்நாட்டுச் சட்டங்களின் கீழ் குற்றங்களாக வரையறுத்தல்.
- சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ICC) இலங்கை இணைந்துகொள்ளுதல்.
- பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைப் பாதுகாவலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான கண்காணிப்புகளையும் துன்புறுத்தல்களையும் முடிவுக்குக் கொண்டுவருதல்.
- உலகளாவிய நீதித்துறை அதிகாரத்தின் (Universal Jurisdiction) அடிப்படையில் சந்தேகநபர்களுக்கு எதிராக ஏனைய நாடுகள் வழக்குத் தொடருதல்.
- சந்தேகநபர்களின் சொத்துக்களை முடக்குதல் மற்றும் பயணத் தடைகளை விதித்தல் தொடர்பில் பரிசீலித்தல்.
- ஐ.நா. அமைதிகாக்கும் பணிகளுக்கு இலங்கை இராணுவம் மற்றும் பொலிஸ் உறுப்பினர்களை ஏற்றுக்கொள்வதற்கு முன்னர், அவர்களது மனித உரிமைகள் தொடர்பான பின்னணியை ஆராய்தல்.
உலகளாவிய ரீதியில் அதிகரிக்கும் மனிதாபிமானப் பணியாளர்கள் மீதான தாக்குதல்கள்
இலங்கையில் இடம்பெற்ற சம்பவங்களுக்கும் உலகளாவிய ரீதியில் மனிதாபிமானப் பணியாளர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றமைக்கும் இடையிலான தொடர்பையும் ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
2023 முதல் 2025 வரையான காலப்பகுதியில் உலகளாவிய ரீதியில் 1,010க்கும் மேற்பட்ட மனிதாபிமானப் பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
2011ஆம் ஆண்டு, ‘பயங்கரவாதத்தைத் தோற்கடித்தல்: இலங்கையின் அனுபவம்’ என்ற தலைப்பில் கொழும்பில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் பங்கேற்பதற்காக 54 நாடுகளின் பிரதிநிதிகளை இலங்கை அழைத்திருந்ததாகவும் அறிக்கை குறிப்பிடுகின்றது.
இந்த அறிக்கைக்காக நேர்காணல் செய்யப்பட்ட மனிதாபிமானப் பணியாளர் ஒருவர் அதனை இவ்வாறு விபரித்துள்ளார்:
“இலங்கை மாதிரியானது ஒரு வெற்றுக் காசோலையாக அமைந்திருந்தது.”
(மூலம்: ஜஃப்னா மொனிட்டர்)
