யாழ்ப்பாணத்தில் உணவகம் பகுதியளவில் இடிக்கப்பட்டதால் கதறி அழுத சிங்களக் குடும்பம்: ‘அவர்களுக்கு மட்டும் ஏன் இந்த நடவடிக்கை?’ எனக் கேள்வி எழுப்பும் தமிழர்கள்!

யாழ்ப்பாணத்தில் உணவகம் பகுதியளவில் இடிக்கப்பட்டதால் கதறி அழுத சிங்களக் குடும்பம்: ‘அவர்களுக்கு மட்டும் ஏன் இந்த நடவடிக்கை?’ எனக் கேள்வி எழுப்பும் தமிழர்கள்!

யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள ‘மாத்தறை அம்புல ஹோட்டல்’ உணவகத்தில் பல ஆண்டுகளாக நகரத்தின் பல்வேறு தரப்பினரும் மதிய உணவு அருந்தி வருகின்றனர். பொலிஸ் அதிகாரிகளும் தினக்கூலித் தொழிலாளர்களும் அருகருகே அமர்ந்து உணவருந்தினர். தமிழ் அலுவலகப் பணியாளர்களும் தமது சொந்த ஊர்களிலிருந்து தொலைவில் பணிபுரியும் சிங்களத் தொழிலாளர்களும் ஒரே மேசையில் அமர்ந்து உணவருந்தினர்.

மீன், கோழி இறைச்சி அல்லது மரக்கறிக் கறிகளுடன் கூடிய சோற்றை மிகவும் மலிவான விலையில் பெற்றுக்கொள்ளக்கூடிய உணவகங்களில் இதுவும் ஒன்றாகும். மீன் கறியுடன் கூடிய உணவு ஒன்றின் விலை சுமார் 350 ரூபாவாகும்.

புதன்கிழமை, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் யாழ்ப்பாணம் மாநகர சபையின் பணியாளர்கள் இந்த உணவகக் கட்டடத்தின் முன்பகுதியை இடித்தகற்றினர்.

யாழ்ப்பாணத்தில் சாதாரண சிங்கள மக்களுக்குச் சொந்தமான ஒரேயொரு உணவகம் இதுவென உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர். நகரிலுள்ள பெரிய ஹோட்டல்கள் தேசிய அளவிலான நிறுவனங்களுக்கும் கொழும்பைத் தளமாகக் கொண்ட முதலீட்டாளர்களுக்கும் சொந்தமானவை.

மாத்தறை அம்புல ஹோட்டல், நாட்டின் தென்பகுதியிலுள்ள மாத்தறை மாவட்டத்தைச் சேர்ந்த குடும்பமொன்றினால் நடத்தப்படும் சிறிய குடும்பத் தொழிலாகும். பல ஆண்டுகளாக யாழ்ப்பாணத்தின் உழைக்கும் மக்களுக்கு மலிவான விலையில் உணவு வழங்கிவரும் இந்த உணவகத்தில் தமிழ், சிங்களப் பணியாளர்கள் இரு தரப்பினரும் பணிபுரிகின்றனர்.

கதறி அழுத உரிமையாளரும் பணியாளர்களும்:

கட்டடத்தின் முன்பகுதி இடிக்கப்பட்டபோது, அதன் உரிமையாளரும் சிங்களப் பணியாளர்களும் கதறி அழுதனர். சிலர் தமது தலையில் கைகளால் அடித்துக்கொண்டு வேதனையை வெளிப்படுத்தினர்.

இந்தக் காட்சிகள் அடங்கிய காணொளி யாழ்ப்பாணத்தில் வேகமாகப் பரவியது. அதனைப் பார்த்த பல தமிழர்கள் மனவேதனையையும் கோபத்தையும் வெளிப்படுத்தினர். அவர்களின் கோபம் பெரும்பாலும் மாநகர சபையை நோக்கியே இருந்தது.

இந்த உணவகத்தில் நியாயமான விலையில் எளிமையான, வீட்டுச் சமையலைப் போன்ற உணவு கிடைப்பதாக வழக்கமான வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர். உணவுத் தயாரிப்பில் மோனோசோடியம் குளுட்டமேட் (MSG) அல்லது ஏனைய உணவுச் சேர்க்கைப் பொருட்கள் பயன்படுத்தப்படுவதில்லை என்றும், தாங்கள் தொடர்ச்சியாக இங்கு உணவருந்துவதற்கு அதுவும் ஒரு காரணம் என்றும் பலர் தெரிவித்தனர்.

இந்த உணவகத்திற்கு மட்டும் ஏன் நடவடிக்கை?

யாழ்ப்பாணத்தில் மாநகர சபையின் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள ஒரேயொரு கட்டடம் இந்த உணவகம் அல்ல என்று உள்ளூர்வாசிகளும் வர்த்தகர்களும் சுட்டிக்காட்டுகின்றனர்.

நகரில் ஆயிரக்கணக்கான கட்டடங்கள் உரிய அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் மதிப்பிடுகின்றனர். குறிப்பாக, மத்திய பேருந்து நிலையத்தைச் சுற்றியுள்ள பல கடைகள் இதுவரை மாநகர சபையின் அனுமதியைப் பெற்றிருக்கவில்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.

அத்துடன், பிரதான வீதியில் இந்த உணவகத்திற்கு அருகிலுள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் வர்த்தகர்களுக்குச் சொந்தமான சில கடைகளும் மாநகர சபையின் விதிமுறைகளுக்கு அமைவாக இல்லை என்றும், அவற்றுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த இடிப்பு நடவடிக்கையை விமர்சிப்பவர்கள், மாநகர சபை நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தியதை மறுக்கவில்லை.

ஆனால், இந்த நடவடிக்கைக்குத் தயாராவதற்கு அந்தக் குடும்பத்திற்குப் போதுமான முன்னறிவிப்பு வழங்கப்பட்டதா? உரிமையாளர்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், நகரிலுள்ள ஏனைய அனுமதியற்ற கட்டடங்கள் அனைத்திற்கும் இதே சட்ட விதிமுறைகளை மாநகர சபை நடைமுறைப்படுத்துமா? என்பதே அவர்களின் கேள்வியாகும்.

நல்லிணக்கத்திற்கான ஒரு பரிசோதனை!

சில உள்ளூர்வாசிகளுக்கு இந்தச் சம்பவம் இன நல்லிணக்கம் தொடர்பான ஒரு கேள்வியாகவும் மாறியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் பெரும்பான்மையினராக உள்ள நிலையில், தாங்கள் நியாயமாக நடத்தப்படுவோம் என்ற நம்பிக்கையுடன் மாத்தறையின் கிராமப்புறத்தைச் சேர்ந்த சிங்களக் குடும்பமொன்று இங்கு சிறிய தொழில் ஒன்றை ஆரம்பித்துள்ளது என்பதை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

உள்நாட்டுப் போர் முடிவடைந்து 17 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், தமிழர்கள் நீண்டகாலமாக அரசிடம் கோரிவரும் சமத்துவத்தையும் நியாயமான அணுகுமுறையையும், வடக்கில் பெரும்பான்மையாக வாழும் தமிழர்கள் தங்களுக்கு மத்தியில் சிறுபான்மையினராக வாழும் மக்களுக்கும் வழங்குவார்களா என்பதற்கான ஓர் அளவுகோலாக அந்தக் குடும்பம் நடத்தப்படும் விதம் அமைந்துள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது யாழ்ப்பாணம் மாநகர சபையிடமிருந்து ஒரேயொரு கேள்விக்கான பதிலையே உள்ளூர்வாசிகள் எதிர்பார்க்கின்றனர்.

இந்த உணவகத்தின் முன்பகுதியை இடித்தகற்றுவதற்குப் பயன்படுத்தப்பட்ட அதே சட்டம், யாழ்ப்பாணத்திலுள்ள ஏனைய அனைத்து அனுமதியற்ற கட்டடங்களுக்கும் நடைமுறைப்படுத்தப்படுமா?

(நன்றி: ஜஃப்னா மொனிட்டர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *