சுற்றுலாப் பயணிகளின் வருகை மட்டும் போதாது; நிலையான பயன்களை உருவாக்க வேண்டும் – ஆசிய அபிவிருத்தி வங்கி

சுற்றுலாப் பயணிகளின் வருகை மட்டும் போதாது; நிலையான பயன்களை உருவாக்க வேண்டும் – ஆசிய அபிவிருத்தி வங்கி

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் மாத்திரம் சிறந்த வேலைவாய்ப்புகளோ, வலுவான உள்ளூர் வர்த்தக நிறுவனங்களோ உருவாகிவிடுவதில்லை. சுற்றுலாத்துறையின் வளர்ச்சியை நீடித்த பயன்களாக மாற்றுவதற்கு ஒருங்கிணைந்த முதலீடுகள், அரசாங்கத்திற்கும் வர்த்தக நிறுவனங்களுக்கும் இடையிலான நெருக்கமான கூட்டுறவு மற்றும் நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு என்பன அவசியமாகும்.

சுற்றுலாத் தலங்களின் உள்ளூர் பொருளாதாரங்களை வலுப்படுத்துவதற்குச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பது மட்டும் போதாது. வர்த்தக நிறுவனங்களின் தேவைகளை அரசாங்கங்கள் புரிந்துகொள்வதுடன், சுற்றுலாத்துறை வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் உள்ளூர் சமூகங்களுக்குப் பயனளிக்கவும் முதலீடுகளையும் சீர்திருத்தங்களையும் ஒருங்கிணைக்க வேண்டும்.

சுற்றுலாத்துறையின் வளர்ச்சி மந்தமடைந்து வரும் நிலையில், இந்தப் பணியின் அவசியம் மேலும் அதிகரித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுலா அமைப்பின் தரவுகளின்படி, 2025ஆம் ஆண்டு முழுவதும் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்தில் சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் வருகை 6 சதவீதத்தால் அதிகரித்திருந்தது. ஆனால், 2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இந்த வளர்ச்சி வெறும் ஒரு சதவீதமாகக் குறைந்துள்ளது.

மத்திய கிழக்கு மோதல்கள், தொடரும் உக்ரைன் போர் மற்றும் தீவிரமடைந்துவரும் எல் நினோ காலநிலை நிகழ்வு ஆகியன இந்த வளர்ச்சியைப் பாதித்துள்ளன.

இந்த மந்தநிலை, முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத்துறையின் பலவீனங்களை வெளிப்படுத்தியுள்ளது. உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுற்றுலாத்துறை சுமார் 10 சதவீதப் பங்களிப்பை வழங்குகின்றது. அத்துடன், பெண்கள் மற்றும் இளைஞர்கள் உள்ளிட்ட பலருக்கு வேலைவாய்ப்புகளையும் வர்த்தக வாய்ப்புகளையும் உருவாக்குகின்றது.

முறையாக நிர்வகிக்கப்படும் சுற்றுலாத்துறை, கலாசார மரபுகளையும் இயற்கை வளங்களையும் பாதுகாப்பதற்கும் உதவும்.

சுற்றுலாத்துறை சார்ந்த திட்டங்களுக்கு, சந்தை நிலவரம் குறித்த தெளிவான புரிதல் அவசியம். எத்தகைய சுற்றுலாப் பயணிகள் வருகை தரக்கூடும், அவர்கள் எவ்வளவு செலவிடுவார்கள், எந்தக் கொள்கைகளும் விதிமுறைகளும் வர்த்தக நிறுவனங்களுக்கு உதவுகின்றன அல்லது தடையாக அமைகின்றன என்பன குறித்து அறிந்திருக்க வேண்டும்.

நம்பகமான தரவுகளும் தனியார் துறையுடனான தொடர்ச்சியான கலந்துரையாடல்களும் முதலீட்டு வாய்ப்புகளையும் தடைகளையும் அடையாளம் காண அரசாங்கங்களுக்கு உதவும்.

2026ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலப்பகுதியில், தென்கிழக்காசிய நாடுகளின் சுற்றுலாத்துறை அமைச்சுகள், முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் முதலீடுகளுக்குத் தடையாக உள்ள காரணிகள் குறித்து ஆராய வர்த்தக நிறுவனங்களுடன் கலந்துரையாடல்களை நடத்தின.

இந்தச் சந்திப்புகளில் அரசாங்கங்களின் எதிர்பார்ப்புகளுக்கும் வர்த்தக நிறுவனங்களின் தீர்மானங்களுக்கும் இடையிலான வேறுபாடுகள் வெளிப்பட்டன.

சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க புதிய விமானப் பாதைகளை உருவாக்க சில அமைச்சுகள் விரும்பின. ஆனால், மேலதிக விமான சேவைகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் பயணிகளின் தேவை குறித்த நம்பகமான தரவுகள் அவசியம் என விமான நிறுவனங்கள் தெரிவித்தன.

சிறந்த சந்தைத் தகவல்களும் தொடர்ச்சியான கலந்துரையாடல்களும் சுற்றுலாத் தலங்களின் வளர்ச்சிக்குத் தடையாக உள்ள காரணிகளைக் கண்டறிய உதவும்.

இதன் மூலம் அரசாங்கங்கள் தேவையான கொள்கைச் சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும், நிறுவனங்களை வலுப்படுத்தவும், பொருத்தமான உட்கட்டமைப்பு வசதிகளில் முதலீடு செய்யவும், முதலீட்டு அபாயங்களைப் பகிர்ந்துகொள்ளும் ஏற்பாடுகள் மூலம் தனியார் முதலீடுகளை ஊக்குவிக்கவும் முடியும்.

மறுபுறம், அரசாங்கத்தின் முன்னுரிமைகள் மற்றும் திட்டங்கள் குறித்த தெளிவான புரிதலை வர்த்தக நிறுவனங்களும் பெற்றுக்கொள்ள முடியும்.

சுற்றுலாத் தலங்களின் தேவைகளுக்கு ஏற்ப முதலீடு செய்ய வேண்டும்:

சந்தையைப் புரிந்துகொள்வது ஆரம்பக்கட்ட நடவடிக்கை மட்டுமே.

ஒரு சுற்றுலாத் தலத்திற்குச் சிறந்த போக்குவரத்து வசதிகள், நம்பகமான குடிநீர் மற்றும் மின்சார விநியோகம், திறமையான அரச நிறுவனங்கள், சுற்றுலாப் பயணிகளின் தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யக்கூடிய வர்த்தக நிறுவனங்கள் என்பன அவசியமாகும்.

சுற்றுலாத்துறை உள்ளூர் மக்களுக்குப் பயனளிக்க வேண்டுமாயின், இவை அனைத்தும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும்.

காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் சீரழிவு, அளவுக்கதிகமான சுற்றுலாப் பயணிகளின் வருகை மற்றும் முறையற்ற அபிவிருத்தி நடவடிக்கைகள் ஆகியன சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இயற்கை மற்றும் கலாசார வளங்களைச் சேதப்படுத்தக்கூடும்.

இந்த வளங்களைப் பாதுகாப்பதென்பது, சுற்றுலாத் தலங்களின் போட்டித்திறனையும் திடீர் மாற்றங்கள் மற்றும் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் ஆற்றலையும் மேம்படுத்துவதற்கான முதலீடாகும்.

சிறந்த திட்டங்கள் இத்தகைய தேவைகள் அனைத்தையும் ஒருங்கிணைப்பதுடன், அவற்றை நிறைவேற்றுவதற்கான பொறுப்பு யாருக்கு உள்ளது என்பதையும் தெளிவுபடுத்துகின்றன.

போக்குவரத்து இணைப்புகள், அடிப்படை வசதிகள், விசா மற்றும் வர்த்தக விதிமுறைகளில் மாற்றங்கள், முதலீடுகளை ஈர்க்கும் நடவடிக்கைகள் ஆகிய அனைத்தும் உரிய காலத்தில் ஒருங்கிணைந்து முன்னெடுக்கப்பட வேண்டும்.

அதிக சுற்றுலாப் பயணிகளை அழைத்து வருவது மட்டும் இதன் நோக்கமல்ல. மாறாக, மரபுரிமைகளையும் இயற்கையையும் பாதுகாத்தல், உள்ளூர் வர்த்தக நிறுவனங்களை வலுப்படுத்துதல், வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் மற்றும் சுற்றுலாத்துறையின் பொருளாதாரப் பயன்களில் பெரும்பகுதி உள்ளூர் சமூகங்களுக்கே கிடைப்பதை உறுதிப்படுத்துதல் என்பனவே இதன் நோக்கங்களாகும்.

இலங்கையின் சுற்றுலாத்துறை மீட்சி:

கொரோனா பெருந்தொற்று மற்றும் 2022ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பின்னடைவுகளுக்குப் பின்னர், இலங்கை தனது சுற்றுலாத்துறையை மீளக் கட்டியெழுப்பி வருகின்றது.

இலங்கையின் பத்தாண்டு தேசிய சுற்றுலாக் கொள்கைக்கு அமைவாக மேற்கொள்ளப்படும் உட்கட்டமைப்பு முதலீடுகளும் இலக்கு சார்ந்த கொள்கைச் சீர்திருத்தங்களும், மீண்டுவரும் சுற்றுலாத் தேவையைத் தனியார் முதலீடுகளாகவும், போட்டித்திறன் மிக்க வர்த்தக நிறுவனங்களாகவும், புதிய வேலைவாய்ப்புகளாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

சுற்றுலாத்துறையை வலுப்படுத்த நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு

சுற்றுலாத்துறை அபிவிருத்தித் திட்டங்கள் தேசிய எல்லைகளுக்கு அப்பாலும் கவனம் செலுத்த வேண்டும்.

விமானப் போக்குவரத்து இணைப்புகள், புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மை மற்றும் மாற்றமடைந்துவரும் பயணப் போக்குகள் தொடர்பில் பல சுற்றுலாத் தலங்கள் பொதுவான சவால்களை எதிர்கொள்கின்றன.

நாடுகள் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம் கொள்கைகளை ஒத்திசைக்கவும், முதலீடுகளை ஒருங்கிணைக்கவும், எல்லைகளைக் கடந்த பயணங்களை எளிதாக்கவும் முடியும்.

பிராந்திய ஒத்துழைப்பு எவ்வாறு சுற்றுலாத்துறைக்கு உதவுகின்றது என்பதற்கு அல்மாட்டி–பிஷ்கெக் பொருளாதார வழித்தடம் சிறந்த உதாரணமாகும்.

கஸகஸ்தானின் அல்மாட்டி நகரத்தையும் கிர்கிஸ்தானின் பிஷ்கெக் நகரத்தையும் இணைக்கும் இந்தப் பொருளாதார வழித்தடத்திற்கு ஆண்டுதோறும் சுமார் 84 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.

இதன் புதுப்பிக்கப்பட்ட பிரதான அபிவிருத்தித் திட்டத்தில், இரு நாடுகளிலும் 900 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான முன்னுரிமை முதலீடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அல்மாட்டியில் விமானப் போக்குவரத்து மையத்தை உருவாக்குவதும், உலகின் இரண்டாவது மிகப்பெரிய உயர்மலை ஏரியான கிர்கிஸ்தானின் இசிக்-குல் ஏரிக்கான விரைவான தரைவழிப் போக்குவரத்து இணைப்புகளை ஏற்படுத்துவதும் இவற்றில் அடங்குகின்றன.

பயணங்களை எளிதாக்குவதற்காக எல்லைக் கடவை வசதிகளை மீளக் கட்டமைக்கும் பணிகளையும் இரு நாடுகளும் ஒருங்கிணைத்து வருகின்றன.

இந்தக் கூட்டு அணுகுமுறையின் மூலம் எல்லையின் இருபுறங்களிலும் உள்ள இயற்கை மற்றும் கலாசாரச் சுற்றுலா வளங்களை அபிவிருத்தி செய்வதற்கும் பாதுகாப்பதற்கும் வாய்ப்பு ஏற்படுகின்றது.

சுற்றுலாத்துறையின் வெற்றியை எவ்வாறு அளவிடுவது?

எத்தனை சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர் என்பதன் அடிப்படையில் மாத்திரம் அரசாங்கங்கள் சுற்றுலாத்துறையின் வளர்ச்சியை மதிப்பிடக்கூடாது.

மாறாக, உள்ளூர் வர்த்தக நிறுவனங்களுக்கும் சமூகங்களுக்கும் சுற்றுலாத்துறை எத்தகைய பயன்களை வழங்கியுள்ளது என்பதன் அடிப்படையிலேயே அதன் வெற்றி மதிப்பிடப்பட வேண்டும்.

இதற்குச் சந்தைத் தரவுகளைப் பயன்படுத்துதல், வர்த்தக நிறுவனங்களுடன் இணைந்து தடைகளை அடையாளம் காணுதல், தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் சீர்திருத்தங்களையும் முதலீடுகளையும் ஒருங்கிணைத்தல் என்பன அவசியமாகும்.

உலகளாவிய சுற்றுலாப் பயணத் தேவையை நாடுகளால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால், எதிர்பாராத நெருக்கடிகளைச் சமாளிக்கும் சுற்றுலாத் தலங்களின் ஆற்றலை வலுப்படுத்தவும், சுற்றுலாத்துறையின் பயன்களில் பெரும்பகுதி உள்ளூர் சமூகங்களுக்கே கிடைப்பதை உறுதிப்படுத்தவும் முடியும் என ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) சுட்டிக்காட்டியுள்ளது.

(நன்றி: எக்கொனமி நெக்ஸ்ட்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *