~ நிஷெல் பெர்னாண்டோ/டெய்லி மிரர்
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது மிக முக்கியமான இரண்டு நீண்டதூர விமானச் சந்தைகளில் ஆதிக்கத்தை இழந்து வருகின்றது.
இதுவரை தேசிய விமான நிறுவனமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மட்டுமே இடைநிறுத்தமின்றி நேரடி விமான சேவைகளை மேற்கொண்டிருந்த வழித்தடங்களில் ஜெட்ஸ்டார் மற்றும் பிரிட்டிஷ் எயார்வேஸ் ஆகிய நிறுவனங்கள் புதிதாகப் பிரவேசித்துள்ள நிலையில், அவுஸ்திரேலியா மற்றும் பிரிட்டனிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பங்கு ஒக்டோபர் மாதத்தில் கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் (SLTDA) தரவுகள் தெரிவிக்கின்றன.
அவுஸ்திரேலிய சந்தையில் பெரும் பின்னடைவு
அவுஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் பங்கு கடந்த ஆண்டு ஒக்டோபரில் 51.25 சதவீதமாக இருந்த நிலையில், இவ்வாண்டு ஒக்டோபரில் 38.44 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
கடந்த ஆண்டு சுமார் 4,050 பயணிகளை ஏற்றிவந்த இந்நிறுவனம், இவ்வாண்டு சுமார் 3,270 பயணிகளையே ஏற்றிவந்துள்ளது. இது 19 சதவீத வீழ்ச்சியாகும்.
அதேவேளை, அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 7.7 சதவீதத்தால் அதிகரித்து 8,509 ஆக உயர்ந்துள்ளது.
ஆகஸ்ட் 25ஆம் திகதி முதல் போயிங் 787 விமானங்களைப் பயன்படுத்தி மெல்பேர்ன் – கொழும்பு இடையே வாரத்திற்கு மூன்று விமான சேவைகளை ஆரம்பித்த ஜெட்ஸ்டார் நிறுவனம், அவுஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளில் 19.03 சதவீதத்தினரை, அதாவது சுமார் 1,620 பேரை ஏற்றிவந்துள்ளது.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் விமான நிறுவனங்கள் தொடர்பான தரவுப் பட்டியலில் ஜெட்ஸ்டார் நிறுவனம் முதன்முறையாகத் தனியாகப் பெயரிடப்பட்டுள்ளது.
எனினும், அதற்கு முந்தைய மாதத்திலேயே ஜெட்ஸ்டாரின் தாக்கம் வெளிப்பட்டிருந்தது. அப்போது அவுஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளில் 18.78 சதவீதமானோர் ‘ஏனைய விமான நிறுவனங்கள்’ என்ற பிரிவின் கீழ் பதிவாகியிருந்தனர். 2025 ஒக்டோபரில் இந்த எண்ணிக்கை வெறும் 1.78 சதவீதமாகவே இருந்தது.
மெல்பேர்னுக்கான வாராந்த விமான சேவைகளை ஏழிலிருந்து பத்தாக அதிகரிக்கும் திட்டத்தை ஆகஸ்ட் 2ஆம் திகதியிலிருந்து நவம்பர் 15ஆம் திகதிக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஒத்திவைத்திருந்தது.
இதனால், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தனது சேவைக் கொள்ளளவை அதிகரிக்காத நிலையில், ஜெட்ஸ்டார் நிறுவனத்துக்கு அந்த வழித்தடத்தில் பிரவேசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.
தற்போது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அவுஸ்திரேலியாவுக்கான தனது விமான சேவைகளை வாரத்திற்கு 14 ஆக அதிகரித்துள்ளது.
பிரிட்டனிலும் அதிகரிக்கும் போட்டி:
இலங்கையின் இரண்டாவது மிகப்பெரிய சுற்றுலாச் சந்தையான பிரிட்டனில், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் பங்கு 42.55 சதவீதத்திலிருந்து 38.87 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
கடந்த ஆண்டு சுமார் 5,500 பயணிகளை ஏற்றிவந்த நிலையில், இவ்வாண்டு ஒக்டோபரில் சுமார் 4,820 பயணிகளையே ஏற்றிவந்துள்ளது.
இது 12.4 சதவீத வீழ்ச்சியாகும். பிரிட்டனிலிருந்து இலங்கைக்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 4.1 சதவீதத்தால் குறைந்து 12,402 ஆகப் பதிவாகியுள்ள நிலையில், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் வீழ்ச்சி அதைவிட மூன்று மடங்கு அதிகமாகும்.
பிரிட்டிஷ் எயார்வேஸ் ஒக்டோபர் மாதத்தில் வெறும் எட்டு நாட்கள் மட்டுமே சேவையில் ஈடுபட்டிருந்த நிலையிலேயே இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
அந்நிறுவனத்தின் முதலாவது விமானம் ஒக்டோபர் 23ஆம் திகதி லண்டன் கெட்விக் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு மறுநாள் கொழும்பை வந்தடைந்தது.
திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சேவைகளை மேற்கொள்ளும் பிரிட்டிஷ் எயார்வேஸ், ஒக்டோபர் மாதத்தில் நான்கு விமானங்களை மட்டுமே இலங்கைக்கு இயக்கியிருந்தது.
வாரத்திற்கு மூன்று தடவைகள் இடம்பெறும் இந்த விமான சேவை குளிர்காலத்தில் மட்டுமே இயக்கப்படுகின்றது. பிரிட்டிஷ் எயார்வேஸ் கெட்விக் விமான நிலையத்திலிருந்து சேவைகளை மேற்கொள்ளும் அதேவேளை, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து சேவைகளை மேற்கொள்கின்றது.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை இதுவரை பிரிட்டிஷ் எயார்வேஸைத் தனியாகப் பட்டியலிடவில்லை. எனினும், பட்டியலில் பெயரிடப்படாத விமான நிறுவனங்கள் மூலம் வருகை தந்த பிரிட்டிஷ் சுற்றுலாப் பயணிகளின் பங்கு கடந்த ஆண்டின் 1.93 சதவீதத்திலிருந்து 9.88 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது சுமார் 1,225 பயணிகளுக்குச் சமமாகும்.
பிரிட்டிஷ் எயார்வேஸின் முழுமையான ஒரு மாத சேவையின் தாக்கம் நவம்பர் மாதத் தரவுகளில் வெளிப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பிரான்ஸிலும் புதிய சவால்
பிரான்ஸ் சுற்றுலாப் பயணிகளில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் பங்கு 17.57 சதவீதத்திலிருந்து 14.82 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. அதேவேளை, கட்டார் எயார்வேஸ் மற்றும் துருக்கிஷ் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் தமது சந்தைப் பங்கை அதிகரித்துள்ளன.
எனினும், பங்களாதேஷில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தனது சந்தைப் பங்கை 32.84 சதவீதத்திலிருந்து 46.20 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஜேர்மனி, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளிலும் சிறிதளவு முன்னேற்றம் கண்டுள்ளது.
குறைந்த கட்டணத்தில் நீண்டதூர விமான சேவைகளை வழங்கும் ‘பிரெஞ்ச் பீ’ (French Bee) நிறுவனம் டிசம்பர் 19ஆம் திகதி பாரிஸ் ஓர்லி விமான நிலையத்திலிருந்து சேவைகளை ஆரம்பிக்கவுள்ளது.
இதனால் பிரான்ஸிலும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸுக்கான போட்டி மேலும் அதிகரிக்கவுள்ளது. தற்போது பாரிஸ் – கொழும்பு இடையே இடைநிறுத்தமற்ற நேரடி விமான சேவையை வழங்கும் ஒரே நிறுவனமாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விளங்குகின்றது.
பிரெஞ்ச் பீ ஆரம்பத்தில் பாரிஸ் – மாலே – கொழும்பு – பாரிஸ் என்ற முக்கோண வழித்தடத்தில் வாரத்திற்கு இரண்டு விமான சேவைகளை மேற்கொள்ளவுள்ளது. பின்னர் பருவகாலத்தின் பிற்பகுதியில் பாரிஸ் – கொழும்பு நேரடி விமான சேவைகளையும் இணைக்கவுள்ளது.
அந்நிறுவனத்துக்கு ஐந்தாவது விமானப் போக்குவரத்துச் சுதந்திர உரிமை (Fifth Freedom Rights) இல்லாததால், மாலே – கொழும்பு பயணத்துக்கான விமானச் சீட்டுகளை மட்டும் தனியாக விற்பனை செய்ய முடியாது. பயணிகள் பாரிஸ் தொடர்பான பயணப் பகுதியையும் இணைத்தே சீட்டுகளைப் பெற வேண்டும்.
தலா 411 இருக்கைகளைக் கொண்ட எயார்பஸ் A350-900 விமானங்களைப் பயன்படுத்தி, மே 2ஆம் திகதி வரை இந்தப் பருவகால சேவை இடம்பெறவுள்ளது.
கொழும்புக்கான அறிமுக இருவழிப் பயணக் கட்டணம் 599 யூரோக்களிலிருந்து ஆரம்பமாகின்றது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸைக் காப்பாற்றும் இந்தியச் சந்தை
இலங்கையின் மிகப்பெரிய சுற்றுலாச் சந்தையான இந்தியாவே ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் ஒட்டுமொத்த பயணிகள் எண்ணிக்கையைத் தக்கவைத்துள்ளது.
ஒக்டோபரில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் 48,356 சுற்றுலாப் பயணிகளை ஏற்றிவந்துள்ளது. இது மொத்த சுற்றுலாப் பயணிகளில் 28.68 சதவீதமாகும்.
கடந்த ஆண்டு இது சுமார் 27 சதவீதமாக இருந்தபோதிலும், செப்டெம்பர் மாதத்தில் பதிவான 31.15 சதவீதத்தைவிடக் குறைவாகும்.
இந்தியாவிலிருந்து வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 29.3 சதவீதத்தால் அதிகரித்து 62,211 ஆக உயர்ந்துள்ளது. இதனால் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஏற்றிவந்த இந்தியப் பயணிகளின் எண்ணிக்கையும் சுமார் 28 சதவீதத்தால் அதிகரித்து 23,020 ஆக உயர்ந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், இந்த வளர்ச்சியின் பெரும்பகுதியை இந்தியாவின் இண்டிகோ விமான நிறுவனமே கைப்பற்றியுள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இண்டிகோ சுமார் 6,560 மேலதிக இந்திய சுற்றுலாப் பயணிகளை ஏற்றிவந்துள்ளது.
இந்தியாவிலிருந்து மேலதிகமாக வருகை தந்த 14,098 சுற்றுலாப் பயணிகளில் 46.5 சதவீதத்தினரை இண்டிகோவும், 35.4 சதவீதத்தினரை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸும் ஏற்றிவந்துள்ளன.
அதேவேளை, எயார் இந்தியாவின் சந்தைப் பங்கு 13.76 சதவீதத்திலிருந்து 11.40 சதவீதமாகக் குறைந்துள்ளது.
ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் டில்லி மற்றும் பெங்களூருக்கான நாளாந்த விமான சேவைகளை மீண்டும் ஆரம்பித்த இண்டிகோ, இலங்கைக்கு வருகை தரும் மொத்த சுற்றுலாப் பயணிகளில் தனது பங்கை செப்டெம்பரில் பதிவான 15.05 சதவீதத்திலிருந்து 17.66 சதவீதமாக அதிகரித்துள்ளது.
விமானப் பற்றாக்குறையும் நிதி நெருக்கடியும்
தற்போது 23 விமானங்களைக் கொண்டுள்ள ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், மேலும் இரண்டு A330 அகல உடல் விமானங்களைக் கோரியுள்ளதாக நிறுவனத்தின் பதில் பிரதம நிறைவேற்று அதிகாரி விபுல் மிஸ்ரா கடந்த ஒக்டோபரில் தெரிவித்திருந்தார்.
தற்போது பயன்படுத்தப்படும் விமான வகைகள் இனி உற்பத்தி செய்யப்படுவதில்லை என்பதால், 2031–2032 காலப்பகுதியில் நிறுவனத்தின் விமானத் தொகுதியைப் புதுப்பிக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பேர்த், சீனா மற்றும் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள ஆபிரிக்க விமான வழித்தடங்கள் குறித்தும் மிஸ்ரா சுட்டிக்காட்டியுள்ளார். இச்சேவைகள் அனைத்துக்கும் வெளியில் இருந்து மேலதிக விமானங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டியிருக்கும்.
நிதியமைச்சின் தரவுகளின்படி, ஆகஸ்ட் வரையான ஐந்து மாதங்களில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் 8.9 பில்லியன் ரூபா நிகர நட்டத்தைப் பதிவு செய்துள்ளது.
நிறுவனத்தின் வருமானம் 35 சதவீதத்தால் அதிகரித்து 154.6 பில்லியன் ரூபாவாக உயர்ந்திருந்தபோதிலும், விமான எரிபொருள் செலவு 78.2 சதவீதத்தால் அதிகரித்தமை மற்றும் 11.9 பில்லியன் ரூபா அந்நியச் செலாவணி இழப்பு ஆகியன இந்த நட்டத்துக்குக் காரணமாக அமைந்துள்ளன.
2025 டிசெம்பரில் 25.2 பில்லியன் ரூபா மூலதனத்தை வழங்கிய அரசாங்கம், தற்போது குறுகியகால நிதி உதவியாக மேலும் 30 மில்லியன் அமெரிக்க டொலர்களை, அதாவது சுமார் 10 பில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது.
2026ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நட்டமில்லாத நிலையை அடையலாம் அல்லது சிறிய இலாபத்தை ஈட்டலாம் என விமானப் போக்குவரத்து பிரதியமைச்சர் ருவன் கொடித்துவக்கு கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
தீவு நாடொன்று விமானப் போக்குவரத்துத் தொடர்புகளில் பெரிதும் தங்கியிருப்பதையும் அவர் வலியுறுத்தினார்.
தேசிய விமான நிறுவனம் ஒரு புதிய சந்தையை உருவாக்கிய பின்னர், போட்டி நிறுவனங்கள் அந்தச் சந்தைக்குள் பிரவேசிப்பதாக விபுல் மிஸ்ரா கடந்த ஒக்டோபரில் ஒப்புக்கொண்டிருந்தார்.
“நாங்கள் ஒரு விமான வழித்தடத்தை அபிவிருத்தி செய்தவுடன், போட்டியாளர்கள் எப்போதும் எங்களைப் பின்தொடர்ந்து வருவார்கள்” என்று அவர் தெரிவித்தார்.
