உலகளாவிய ஜிஹாதிய இயக்கம் தோல்வியடைந்துவிட்டதா? அல்லது அதன் வடிவத்தை மாற்றிக்கொள்கிறதா?

உலகளாவிய ஜிஹாதிய இயக்கம் தோல்வியடைந்துவிட்டதா? அல்லது அதன் வடிவத்தை மாற்றிக்கொள்கிறதா?

 (~ மினா அல்-லாமி, ஜிஹாதிய ஊடகங்களுக்கான தலைமை நிபுணர், பிபிசி மொனிட்டரிங்)

அரிசி, பாஸ்தா, சீனி, சமையல் எண்ணெய், பயறு வகைகள் போன்றவற்றை ஜிஹாதிய அமைப்புகளின் பிரசாரங்களில் காண்போம் என்று பொதுவாக யாரும் எதிர்பார்ப்பதில்லை.

ஆனால், கடந்த ஆகஸ்ட் மாதம் சோமாலியாவில் அல்-கொய்தாவின் கிளை அமைப்பான அல்-ஷபாப், தனது ‘தொண்டு நிறுவனம்’ மூலம் பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கு இத்தகைய பொருட்களை வழங்கியதாக அறிவித்தது. தனது சமூக ஊடகக் கணக்குகள் மற்றும் வானொலி நிலையத்தின் ஊடாகவும் இந்த உதவிகளைப் பிரசாரப்படுத்தியது.

தெற்கு மற்றும் மத்திய சோமாலியாவின் பெருமளவிலான கிராமப்புறப் பகுதிகளைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இந்த அமைப்பு, 2026ஆம் ஆண்டு முழுவதும் தனது மனிதாபிமானப் பணிகள் எனக் கூறப்படுபவற்றை வெளிப்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டி வந்துள்ளது.

‘கடவுள் அவர்களுக்கு நற்கூலி வழங்கட்டும்’ என்று அல்-ஷபாப் வெளியிட்ட காணொளியொன்றில் உள்ளூர்ப் பெண் ஒருவர் தெரிவித்தார்.

உள்ளூர் மக்களின் ஆதரவைப் பெறுவதற்கும், தன்னை வெறுமனே ஒரு ஜிஹாதிய அமைப்பாக மட்டுமல்லாமல் அதற்கும் அப்பாற்பட்ட ஓர் அமைப்பாகக் காட்டிக்கொள்வதற்குமான முயற்சியின் ஒரு பகுதியாகவே இது அமைந்துள்ளது.

அமெரிக்காவில் அல்-கொய்தா நடத்திய செப்டெம்பர் 11 தாக்குதல்கள் இடம்பெற்று கால் நூற்றாண்டு கடந்துள்ள நிலையில், ஈராக் மற்றும் சிரியாவில் இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்.) அமைப்பு தனது ‘கலிபா ஆட்சியை’ அறிவித்து 12 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இன்றைய ஜிஹாதிய இயக்கம் முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தைக் கொண்டுள்ளது.

மேற்குலக நாடுகளைத் தாக்குவதிலோ அல்லது உலகளாவிய இஸ்லாமிய அரசை உருவாக்குவதற்காகப் போராடுவதிலோ கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, சில அமைப்புகள், குறிப்பாக அல்-கொய்தாவுடன் தொடர்புடைய அமைப்புகள், தமது சொந்த நாடுகளிலேயே அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் அதிக கவனம் செலுத்துகின்றன. அதற்காகச் சில விட்டுக்கொடுப்புகளைச் செய்வதற்கும் அவை தயாராக இருப்பதாகத் தெரிகிறது.

இதன் காரணமாக ஜிஹாதிய இயக்கத்திற்குள் ஒரு விவாதம் வலுப்பெற்று வருகிறது.

கடும்போக்காளர்கள் சமரசங்களை நிராகரிக்கின்றனர். ஆனால் நடைமுறைவாதிகள், உள்ளூர் அமைப்புகளுடனும் முன்னாள் எதிரிகளுடனும் இணைந்து செயற்படுவதை அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான ஒரு வழியாகக் கருதுகின்றனர்.

ஆனால், இந்த நடைமுறைவாதிகள் உண்மையான மாற்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றார்களா? அல்லது உள்நாட்டிலும் வெளிநாடுகளுடனான உறவுகளிலும் இஸ்லாமிய ஷரியா சட்டம் தொடர்பான தமது கடுமையான விளக்கத்தைப் பின்பற்றும் அரசொன்றை நிறுவுவதற்கான உத்தியைத்தான் மாற்றிக்கொண்டிருக்கின்றார்களா?

குறிப்பிடத்தக்க தோல்விகள்:

அல்-கொய்தாவோ அல்லது ஐ.எஸ். அமைப்போ தங்களது இறுதிக் கனவை இதுவரை அடையவில்லை. ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளைக் கைப்பற்றி, இஸ்லாம் தொடர்பான தங்களது கடுமையான விளக்கத்தின் அடிப்படையில் ஆட்சி செய்வதே அந்தக் கனவாகும்.

இரு அமைப்புகளும் பெரும் தோல்விகளைச் சந்தித்துள்ளன. தமது தலைவர்களை இழந்துள்ளதுடன், பல ஆண்டுகளாகச் சர்வதேச அழுத்தங்களுக்கும் முகங்கொடுத்துள்ளன.

ஒருகாலத்தில் ஈராக் மற்றும் சிரியாவின் பரந்த பகுதிகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஐ.எஸ். அமைப்பு, 2019ஆம் ஆண்டு தனது இறுதிப் பிராந்தியக் கோட்டையையும் இழந்தது.

ஆனால் ஜிஹாதியம் மறைந்துவிடவில்லை.

ஆபிரிக்காவே தற்போது ஜிஹாதிய இயக்கங்களின் பிரதான மோதல் களமாக மாறியுள்ளது.

சஹேல் பிராந்தியத்தில் மாலி, புர்கினா பாசோ, நைஜர் ஆகிய நாடுகளில் செயற்படும் அல்-கொய்தாவின் சக்திவாய்ந்த கிளையான ஜே.என்.ஐ.எம். (JNIM) மற்றும் சோமாலியாவின் அல்-ஷபாப் ஆகிய அமைப்புகள் நீண்டகால ஆயுதக் கிளர்ச்சிகளில் ஈடுபட்டுள்ளன.

அவற்றின் கடுமையான எதிரியான ஐ.எஸ். அமைப்பும் நைஜீரியா, கொங்கோ ஜனநாயகக் குடியரசு, சஹேல் பிராந்தியம், மொசாம்பிக் மற்றும் சோமாலியா ஆகிய பகுதிகளில் செயற்படும் கிளைகளைக் கொண்டுள்ளது.

ஜிஹாதிய அமைப்புகளுக்கு உத்வேகம் அளிக்கும் சிரியா:

ஜிஹாதியவாதிகள் ஒப்புக்கொண்டாலும் இல்லாவிட்டாலும், அவர்களுக்கு உத்வேகத்தையும் பொறாமையையும் ஏற்படுத்தும் முக்கியமான நபராக சிரியாவின் புதிய ஜனாதிபதி அகமது அல்-ஷரா விளங்குகிறார்.

முன்னர் ஐ.எஸ். அமைப்பிலும் பின்னர் அல்-கொய்தாவிலும் தளபதியாகச் செயற்பட்ட அவர், ஒருகாலத்தில் அமெரிக்காவால் தேடப்பட்ட நபராக இருந்தார்.

ஆனால் 2024 டிசம்பரில் சிரியாவில் அதிகாரத்தைக் கைப்பற்றிய அவர், மேற்குலகத் தலைவர்களாலும் வரவேற்கப்பட்டார்.

அபு மொஹம்மத் அல்-ஜொலானி என்ற போராட்டப் பெயரால் முன்னர் அறியப்பட்ட அவர், ஆரம்பத்தில் ஐ.எஸ். அமைப்புடனும் பின்னர் அல்-கொய்தாவுடனும் தொடர்புடைய நுஸ்ரா முன்னணிக்குத் தலைமை தாங்கினார். பின்னர் ஹயாத் தஹ்ரீர் அல்-ஷாம் (HTS) அமைப்பின் தலைவரானார்.

படிப்படியாக ஐ.எஸ். மற்றும் அல்-கொய்தா ஆகிய இரு அமைப்புகளுடனான தொடர்புகளையும் துண்டித்துக்கொண்ட அவர், உலகளாவிய ஜிஹாத்திற்கான அவற்றின் அழைப்புகளிலிருந்தும் தன்னை விலக்கிக்கொண்டார்.

அதற்குப் பதிலாக சிரியாவில் கவனம் செலுத்திய அவர், நாட்டின் வடமேற்குப் பகுதியான இட்லிப் மாகாணத்தில் தனது அதிகாரத் தளத்தை உருவாக்கினார்.

இஸ்லாமிய அரசியல் சார்பற்ற அமைப்புகளுடன் இணைந்து செயற்படுவதற்கும் வெளிநாட்டு சக்திகளுடன் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கும் அவர் காட்டிய ஆர்வம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

HTS அமைப்பு டமாஸ்கஸை நோக்கி முன்னேறியபோது, அதன் தலைமை சர்வதேச சமூகத்தின் அச்சங்களைத் தணிக்க முயன்றது. அப்போதைய ஜனாதிபதி பஷார் அல்-அசாத்தின் முக்கிய கூட்டாளியான ரஷ்யாவுடனும் தொடர்புகளை ஏற்படுத்தியது.

இந்த நடைமுறை அணுகுமுறையுடன், ரஷ்யா மற்றும் ஈரானின் பலவீனம் உள்ளிட்ட சாதகமான புவிசார் அரசியல் சூழ்நிலைகளும் இணைந்ததால், சிரியாவில் அவரால் அதிகாரத்தைக் கைப்பற்ற முடிந்தது.

ஆனால் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் அவரை வரவேற்றமை அதைவிட ஆச்சரியமான நிகழ்வாக அமைந்தது.

2025 நவம்பரில் அல்-ஷரா வெள்ளை மாளிகைக்குச் சென்றபோது, ட்ரம்ப் தனது பெயரிலான வாசனைத் திரவியத்தை அவர் மீது தெளித்ததுடன், அவருக்கு எத்தனை மனைவிகள் இருக்கின்றனர் என்றும் நகைச்சுவையாகக் கேட்டார். மேலும் அவரை ‘மிகவும் வலிமையான தலைவர்’ என்றும் பாராட்டினார்.

சில ஜிஹாதியவாதிகளுக்கு அல்-ஷராவின் வெற்றி உத்வேகத்தை அளித்துள்ளது. ஆனால் மற்றவர்கள் அவரது நடவடிக்கைகளைத் தமது அடிப்படை நம்பிக்கைகளுக்குச் செய்யப்பட்ட துரோகமாகக் கருதுகின்றனர்.

ஐ.எஸ். அமைப்பு சிரியாவின் புதிய இஸ்லாமியவாத அரசாங்கத்திற்கு எதிராக ஜிஹாத்தை அறிவித்துள்ளது. அல்-ஷராவையும் அவரது அதிகாரிகளையும் மதத்தைக் கைவிட்டவர்கள் எனக் குற்றஞ்சாட்டி, அரசாங்கப் படைகளுக்கு எதிரான தாக்குதல்களிலும் ஈடுபட்டுள்ளது.

வேறு சில கடும்போக்கு மதகுருமாரும் இதேபோன்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். எனினும், அல்-ஷராவுக்கு எதிராக வெளிப்படையாக ஜிஹாத்திற்கு அழைப்பு விடுப்பதை அவர்கள் தவிர்த்துள்ளனர்.

2025ஆம் ஆண்டு முதல் கடும்போக்கு ஜிஹாதியவாதிகளுக்கும் நடைமுறைவாதிகளுக்கும் இடையிலான இந்தப் பிளவு இணையத்தளங்களில் கடுமையான விவாதங்களை உருவாக்கியுள்ளது.

இரு தரப்பினரும் பரஸ்பரம் துரோகக் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதுடன், தமது நிலைப்பாடுகளை நியாயப்படுத்தும் வகையில் நூல்களையும் வெளியிட்டுள்ளனர்.

கடும்போக்காளர்களைப் பொறுத்தவரை, அளவுக்கு அதிகமான சமரசங்கள் என்பது தமது அடிப்படை நம்பிக்கைகளைக் கைவிடுவதற்கு ஒப்பானதாகும்.

தமது கடுமையான இஸ்லாமிய சட்டத்தை அமுல்படுத்துவதைத் தவிர்த்தல், மனிதர்களால் உருவாக்கப்பட்ட சட்டங்களையோ அரசியலமைப்பையோ ஏற்றுக்கொள்ளுதல், தேர்தல்களில் பங்கேற்றல், இஸ்லாமியவாதம் சாராத அமைப்புகளுடன் இணைந்து செயற்படுதல், நம்பிக்கையற்றவர்கள் எனத் தாங்கள் கருதும் அரசாங்கங்களுடன் உறவுகளை ஏற்படுத்துதல் போன்றவை இதில் அடங்குகின்றன.

2021ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றியமையும் ஜிஹாதியவாதிகளுக்கு உத்வேகம் அளித்த மற்றொரு நிகழ்வாகும்.

மேற்குலக ஆதரவுபெற்ற படைகளுக்கு எதிரான பல ஆண்டுகாலப் போராட்டத்தின் பின்னர், ஓர் இஸ்லாமியவாத இயக்கத்தால் ஒரு நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்ற முடியும் என்பதை அது எடுத்துக்காட்டியது. தலிபான்களின் அரசியல், இராணுவ மற்றும் இராஜதந்திர நடவடிக்கைகள் இறுதியில் காபூலில் அவர்கள் மீண்டும் ஆட்சியமைப்பதற்கு வழிவகுத்தன.

இறுதி இலக்கை அடைவதற்கான ஒரு வழிமுறையா?

மாலி மற்றும் சோமாலியாவில் செயற்படும் அல்-கொய்தாவின் இரண்டு கிளை அமைப்புகளும் குறிப்பாகக் கவனிக்கப்பட வேண்டியவை.

கடந்த ஏப்ரல் மாத இறுதியில், அல்-கொய்தாவின் சஹேல் பிராந்தியக் கிளையான JNIM, முன்னர் தன்னுடன் மோதியிருந்த தேசியவாத துவாரெக் பிரிவினைவாதிகளுடன் இணைந்து மாலியின் இராணுவ ஆட்சியாளர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.

துவாரெக் மக்களைத் தனது ‘சகோதரர்கள்’ என அழைக்கும் அளவிற்கும் அந்த அமைப்பு சென்றது.

ஆனால் JNIM அமைப்பின் வளர்ந்துவரும் இராணுவ வலிமை மட்டுமல்ல, அது தன்னை எவ்வாறு வெளிப்படுத்திக்கொள்கிறது என்பதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

முன்னர் அதன் பிரசாரங்களில் அல்-கொய்தா தலைவர்கள், கோஷங்கள் மற்றும் உலகளாவிய ஜிஹாத்திற்கான அழைப்புகள் முக்கிய இடத்தைப் பெற்றிருந்தன.

ஆனால் 2024ஆம் ஆண்டின் பிற்பகுதியிலிருந்து அதன் காணொளிகளில் அல்-கொய்தாவின் அடையாளங்கள் நீக்கப்பட்டுள்ளன.

உலகளாவிய முஸ்லிம் பிரச்சினைகளைப் பற்றிப் பேசுவதற்குப் பதிலாக, JNIM தற்போது உள்ளூர்ப் பிரச்சினைகளில் அதிக கவனம் செலுத்துகிறது. ஊழல் நிறைந்த, அடக்குமுறைகளில் ஈடுபடும் ஆட்சியாளர்களிடமிருந்து சாதாரண மக்களைப் பாதுகாக்கும் அமைப்பாகத் தன்னைக் காட்டிக்கொள்கிறது.

மாலியின் இராணுவ அரசாங்கமும் அதன் ரஷ்யக் கூட்டாளிகளும் பொதுமக்களைக் கொல்வதாகவும் மக்களின் வாழ்க்கையை மேலும் மோசமாக்குவதாகவும் அது தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வருகிறது.

கடந்த ஏப்ரலில், இஸ்லாமிய சட்டத்துடன் பாதுகாப்பு, நீதி மற்றும் செழிப்பையும் உறுதிப்படுத்துவதாகக் கூறி, ‘புதிய மாலியை’ உருவாக்குவதற்கு அனைத்து உண்மையான தேசபக்தர்களும் ஒத்துழைக்க வேண்டும் என அழைப்பு விடுத்தது.

மாலி அரசாங்கத்திற்கு ஆதரவாகச் செயற்படும் ரஷ்யப் படைகளுடன் மோதலில் ஈடுபட்டுள்ளபோதிலும், ரஷ்யாவுடன் ‘சமநிலையான உறவுகளை’ ஏற்படுத்திக்கொள்ள முடியும் என்றும் அது தெரிவித்துள்ளது.

இது சிரியாவில் HTS அமைப்பு கடைப்பிடித்த அரசியல் அணுகுமுறையுடன் ஒற்றுமைகளைக் கொண்டுள்ளது.

ஆபிரிக்கப் பாதுகாப்பு விவகார நிபுணர் அமான் பெஸ்ரே, இரு அமைப்புகளுக்கும் இடையில் ஒற்றுமைகள் இருப்பதாகக் கூறுகின்றார். ஆனால் JNIM அமைப்பின் மாற்றம் காலம் எடுக்கக்கூடும் என்றும் அவர் தெரிவிக்கின்றார்.

‘JNIM அமைப்பு HTS அமைப்பைப் போன்ற நடைமுறைவாத அணுகுமுறைக்கான அறிகுறிகளை வெளிப்படுத்தியுள்ளது. எனினும், புதிய பிரதேசங்களுக்கு விரிவடைவதிலும் பல்வேறு தரப்பினரிலிருந்து உறுப்பினர்களைச் சேர்ப்பதிலும் அது கவனம் செலுத்துவதால், தனது பொது அடையாளத்தை மாற்றிக்கொள்ளும் நடவடிக்கை மெதுவாகவே முன்னேறியுள்ளது’ என அவர் கூறுகின்றார்.

தலிபான்களின் வழியா? அல்-ஷராவின் வழியா?

எந்தப் பாதையைப் பின்பற்றுவது என்பது தொடர்பான விவாதம் JNIM அமைப்பின் தலைமைக்குள்ளும் இடம்பெற்று வருவதாக பிரான்ஸ் 24 ஊடகவியலாளரும் ஜிஹாதியம் தொடர்பான நிபுணருமான வாசிம் நஸ்ர் தெரிவிக்கின்றார்.

ஒரு தரப்பினர் மிகக் குறைந்த விட்டுக்கொடுப்புகளுடன் பலத்தைப் பயன்படுத்தி அதிகாரத்தைக் கைப்பற்றும் தலிபான்களின் அணுகுமுறையை ஆதரிக்கின்றனர்.

தற்போது அதிக செல்வாக்கைக் கொண்டுள்ள மற்றொரு தரப்பினர், சிரியாவின் HTS அமைப்பைப் போன்ற அரசியல் அணுகுமுறையை ஆதரிப்பதாக அவர் கூறுகின்றார்.

JNIM அமைப்பு இரு மாதிரிகளிலிருந்தும் சில அம்சங்களை எடுத்துக்கொள்ளக்கூடும். ஆனால் அதன் அரசியல் பரிணாம வளர்ச்சியின் விளைவாக அல்-கொய்தாவுடனான தொடர்புகள் துண்டிக்கப்படுவது தவிர்க்க முடியாததாக இருக்கும் என நஸ்ர் நம்புகின்றார்.

JNIM அமைப்பைப் போலவே சோமாலியாவின் அல்-ஷபாப் அமைப்பும் முன்னாள் எதிரிகளுடன் உடன்பாடுகளை ஏற்படுத்திக்கொள்ளத் தயாராக இருப்பதாகத் தெரிகிறது.

பிபிசி மொனிட்டரிங்கின் சோமாலியா விவகார நிபுணர் அப்துல்லாஹி குஜியின் கூற்றுப்படி, அல்-ஷபாப் அமைப்பு கடந்த ஒக்டோபரில் சக்திவாய்ந்த சோமாலிய பழங்குடிக் குழுவான மாஅவிஸ்லேயுடன் போர்நிறுத்த உடன்படிக்கையொன்றை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் குழுவின் போராளிகள் முன்னர் அல்-ஷபாப்புக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்காற்றியிருந்தனர்.

தற்போது அவர்கள் முன்னரங்கிலிருந்து தமது போராளிகளை விலக்கிக்கொண்டுள்ளமை, ஜிஹாதிய அமைப்புகளுக்கு எதிரான அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக குஜி தெரிவிக்கின்றார்.

சோமாலியாவின் மேலும் பரந்த பகுதிகளில் அதிகாரத்தைக் கைப்பற்றி, மாற்று அரசாங்கமாகத் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முடியுமா என்பதைச் சோதிக்கும் வாய்ப்பு விரைவில் அல்-ஷபாப்புக்குக் கிடைக்கலாம் என அவர் நம்புகின்றார்.

நிதிக் குறைப்புகளாலும் டிசம்பரில் தமது பணிக்காலம் நிறைவடையவுள்ளதாலும் ஆபிரிக்க ஒன்றியப் படைகள் சோமாலியாவிலிருந்து வெளியேறி வருகின்றன.

அதேவேளை, சோமாலிய அரசாங்கம் அரசியல் நெருக்கடிகளுக்கும் கிளர்ச்சிகளுக்கும் முகங்கொடுத்து வருகின்றது. இது அல்-ஷபாப் தொடர்பான பாதுகாப்பு அபாயங்களை மேலும் அதிகரிக்கக்கூடும் என அவர் தெரிவிக்கின்றார்.

மேற்குலகின் முன்னுரிமைகள் மாறுகின்றனவா?

சில ஜிஹாதிய அமைப்புகள் தமது செல்வாக்கை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகக் கருதுவதற்கு மற்றொரு காரணமும் உள்ளது.

மேற்குலக அரசாங்கங்களுக்கு தற்போது வேறு முக்கியமான பிரச்சினைகள் இருப்பதாக அவை நம்புகின்றன.

உக்ரைன் போர், மத்திய கிழக்கில் அமெரிக்கா–ஈரான் மோதல், சீனா மற்றும் ரஷ்யாவுடனான அதிகரித்துவரும் போட்டி ஆகியவற்றின் மத்தியில், செப்டெம்பர் 11 தாக்குதல்களுக்குப் பின்னர் இருந்ததைப் போன்று ஜிஹாதிய அமைப்புகளுக்கு எதிரான போராட்டம் மேற்குலகின் பிரதான முன்னுரிமையாக இல்லை.

2021ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியமை, தலிபான்கள் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றியமை, அதனைத் தொடர்ந்து சிரியாவில் அல்-ஷராவின் எழுச்சி ஆகியவை இந்த நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியுள்ளன.

பாதுகாப்பு விவகாரங்களில் கவனம் செலுத்தும் இலாப நோக்கற்ற ஆய்வு நிறுவனமான சூஃபான் மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கொலின் கிளார்க், அமெரிக்காவுடனான நேரடி மோதல்களைத் தவிர்ப்பதன் மூலம் மேற்குலகின் இராணுவ நடவடிக்கைகளிலிருந்து தப்பிப் பிழைக்க முடியும் என்று சில ஜிஹாதிய அமைப்புகள் கருதுவதாகத் தெரிவிக்கின்றார்.

இதன் அர்த்தம் மேற்குலகம் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தைக் கைவிட்டுவிட்டது என்பதல்ல.

ஆனால் மேற்குலகின் கவனம் வேறு திசைகளில் திரும்பியுள்ளதாகவோ, தலையீடு செய்வதற்கான அதன் விருப்பம் குறைந்துள்ளதாகவோ ஜிஹாதிய அமைப்புகள் கருதினால், அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான அவற்றின் முயற்சிகள் தீவிரமடையக்கூடும்.

வரலாறு கற்றுத்தரும் பாடங்கள்:

எந்தவிதமான சமரசத்திற்கும் இடமளிக்காத தனது எதிரியான ஐ.எஸ். அமைப்பைப் போலல்லாமல், அல்-கொய்தா தனது இலக்குகளை அடையும் விடயத்தில் நீண்டகாலமாகவே ஓரளவு நெகிழ்வுத்தன்மையை வெளிப்படுத்தி வந்துள்ளது.

ஆனால் வரலாறு ஒரு எச்சரிக்கையையும் வழங்குகின்றது.

2011ஆம் ஆண்டு அரபு எழுச்சிகளுக்குப் பின்னர் அல்-கொய்தாவின் செல்வாக்கு பெருமளவில் குறைந்தது.

இதனைத் தொடர்ந்து யேமன், லிபியா மற்றும் துனீசியாவில் அதனுடன் தொடர்புடைய ஜிஹாதிய அமைப்புகள் ‘அன்சார் அல்-ஷரியா’ (ஷரியாவின் ஆதரவாளர்கள்) என்ற பெயரில் செயற்படத் தொடங்கின. அல்-கொய்தாவின் அடையாளத்திலிருந்து தம்மை விலக்கிக் காட்டும் முயற்சியாக இது அமைந்தது.

2012ஆம் ஆண்டு மாலியிலும் அல்-கொய்தாவுடன் தொடர்புடைய ஜிஹாதிய அமைப்புகளின் நடவடிக்கைகளில் இதேபோன்ற நெகிழ்வுத்தன்மை காணப்பட்டது. அப்போதைய அரசியல் அணுகுமுறைகள் அவற்றின் அடிப்படை இலட்சியங்களைக் கைவிடுவதைக் குறிக்கவில்லை.

இன்றும் அதே சிந்தனை செயற்பாட்டில் இருக்கக்கூடும். வெளிப்படையான அணுகுமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றம், அடிப்படை நோக்கங்களிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதற்கு அவசியமாகச் சான்றாகாது.

(மூலம்: பிபிசி மொனிட்டரிங்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *