கச்சத்தீவைப் புரிந்துகொள்ளுதல்: இறையாண்மை, அதிகாரம் மற்றும் இராஜதந்திரம்

கச்சத்தீவைப் புரிந்துகொள்ளுதல்: இறையாண்மை, அதிகாரம் மற்றும் இராஜதந்திரம்

~ சசங்க பெரேரா / தி ஐலண்ட் 

2026 அக்டோபர் மாத ஆரம்பத்தில் கச்சத்தீவு தொடர்பாக இந்திய உச்ச நீதிமன்றம் தெரிவித்த வாய்மொழிக் கருத்துகள் குறித்து இலங்கையின் சமூக ஊடகங்களிலும் பிரதான ஊடகங்களிலும் பெரும் கொண்டாட்ட மனநிலை வெளிப்பட்டது.

கச்சத்தீவை மீட்க வேண்டுமென இந்தியாவில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் அரசியல் நடவடிக்கைகள், தமிழக அரசியல்வாதிகளின் அழுத்தங்கள் மற்றும் சட்டரீதியான சவால்களை இலங்கை எதிர்கொண்டு வந்துள்ள நிலையில், தீவின் உரிமை தொடர்பில் ஏற்பட்ட நிம்மதியும் அங்கீகாரம் கிடைத்துவிட்டதாகக் கருதும் மனநிலையுமே இதற்கு பிரதான காரணமாகும்.

ஆனால், இந்த விவகாரத்தில் இந்திய உச்ச நீதிமன்றத்திடமிருந்து புதிதாகவோ, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகவோ எதுவும் வெளிவரவில்லை. இந்திய நீதிமன்றங்களிலும் தமிழக அரசியல் அரங்கிலும் இந்த விவகாரம் தொடர்ச்சியாக எழுப்பப்பட்டாலும், கச்சத்தீவின் உரிமை என்பது ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட ஒரு விடயம் என்பதே தெளிவானதாகும்.

கச்சத்தீவு விவகாரத்தை அதன் வரலாற்றுப் பின்னணி, சட்டத் தெளிவு, மூலோபாயப் புரிதல் மற்றும் பொது அறிவு ஆகியவற்றின் அடிப்படையில் அணுக வேண்டும். இத்தகைய அணுகுமுறை பொதுவாக இலங்கையர்களிடம் குறைவாகவே காணப்படுகிறது.

இந்திய உச்ச நீதிமன்றத்தின் வாய்மொழிக் கருத்தோ அல்லது ஏற்கெனவே நடைமுறையிலுள்ள கடல் எல்லை ஒப்பந்தங்களை இந்திய அரசாங்கம் தொடர்ந்து மதித்து நடப்பதோ, இறையாண்மை தொடர்பான புதியதும் இறுதியானதுமான நீதித்துறைத் தீர்மானமாகாது.

அதைவிட முக்கியமாக, இலங்கையின் பிராந்திய உரிமைகளை இந்தியா சந்தேகத்திற்கிடமின்றி அங்கீகரித்தாலும், இரு நாடுகளுக்கும் இடையிலான அதிகார ஏற்றத்தாழ்வுகள் மறைந்துவிடப் போவதில்லை. இந்தியாவுடன் உறவுகளைப் பேணும்போது எமது அரசியல் தலைவர்கள் இது குறித்து மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.

இந்திய உச்ச நீதிமன்றம் என்ன தீர்மானித்தது?

2026 அக்டோபர் 6ஆம் திகதி நடைபெற்றதாக அண்மையில் செய்தி வெளியான நீதிமன்ற விசாரணைகள், 1974ஆம் ஆண்டின் இந்திய–இலங்கை கடல் எல்லை ஒப்பந்தத்தையும், இரு நாடுகளின் கடற்பரப்புகளிலும் மீன்பிடித்தலை ஒழுங்குபடுத்தும் 1976ஆம் ஆண்டு ஒப்பந்தத்தையும் எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட பல மனுக்கள் தொடர்பானவையாகும்.

இந்த விவகாரத்தின் பிரதான வழக்கான ‘ஏ.கே. செல்வராஜ் எதிர் இந்திய ஒன்றியம்’ என்ற வழக்கு 2008ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது.

2013ஆம் ஆண்டின் 430ஆம் இலக்க சிவில் எழுத்தாணை மனு, சிறப்பு அனுமதி மனுக்கள் மற்றும் 2021ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மனு ஆகியவையும் இந்த வழக்கு விசாரணைகளில் உள்ளடங்குகின்றன. தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவும் மனுதாரர்களில் ஒருவராக இருந்தார்.

கச்சத்தீவு இலங்கையின் கடல் எல்லைக்குள் அமைந்துள்ளதாக அங்கீகரிக்கப்பட்டதன் சட்டபூர்வத்தன்மையை மனுதாரர்கள் கேள்விக்குட்படுத்துகின்றனர். இந்தியப் பிரதேசமொன்றை மற்றொரு நாட்டிற்கு வழங்குவதற்கு அரசியலமைப்பு மற்றும் நாடாளுமன்ற நடைமுறைகள் பின்பற்றப்பட்டிருக்க வேண்டும் என்பது அவர்களின் வாதங்களில் ஒன்றாகும்.

2026 அக்டோபர் 6ஆம் திகதி நீதிபதிகளான சஞ்சய் குமார் மற்றும் சஞ்சீவ் சச்தேவா ஆகியோர் இந்த விவகாரத்தை விசாரணைக்கு எடுத்துக்கொண்டனர்.

இலங்கையின் கடற்பரப்புக்குள் நுழையக்கூடாது என்பது குறித்து இந்திய மீனவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என நீதிமன்றம் வாய்மொழியாகக் கருத்துத் தெரிவித்தது. குறித்த ஒப்பந்தங்கள் தொடர்பில் இந்திய அரசாங்கம் இலங்கையுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதா என்றும் கேள்வி எழுப்பியது.

இந்திய சட்டமா அதிபரின் கோரிக்கைக்கு அமைவாக, வழக்கு 2027 பெப்ரவரி 2ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இறையாண்மை தொடர்பில் எந்தவொரு இறுதித் தீர்ப்பும் வழங்கப்படவில்லை.

இந்த விடயம் மிகவும் முக்கியமானதாகும். நீதிமன்ற விசாரணையின்போது தெரிவிக்கப்படும் வாய்மொழிக் கருத்து, பிராந்திய இறையாண்மை தொடர்பான சட்டரீதியாகக் கட்டுப்படுத்தும் தீர்மானமாகாது.

அதேபோன்று, வழக்கு ஒத்திவைக்கப்பட்டமையானது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாகவோ அல்லது ஏதேனும் ஒரு தரப்பின் அனைத்து வாதங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவோ அர்த்தப்படாது.

எனினும், இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாடு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

பொதுவெளியில் கிடைக்கப்பெறும் தகவல்களின்படி, 1974 மற்றும் 1976ஆம் ஆண்டு ஒப்பந்தங்களை மீண்டும் பரிசீலிக்கும் எண்ணம் இந்திய அரசாங்கத்திற்கு இல்லை என்றும், இந்திய மீனவர்கள் தொடர்பான பிரச்சினைகள் இராஜதந்திர வழிமுறைகளின் ஊடாகத் தொடர்ந்து கையாளப்படும் என்றும் இந்திய சட்டமா அதிபர் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே எட்டப்பட்ட உடன்பாட்டில் இந்திய அரசாங்கம் தொடர்ந்து உறுதியாக இருப்பதையே இது வெளிப்படுத்துகிறது.

உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பைத் தொடர்ந்து, இறையாண்மை தொடர்பில் இந்தியா புதிதாக வழங்கிய அங்கீகாரம் இதுவல்ல.

எதிர்கால அரசியல் முன்னேற்றங்களால் இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாடு பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இருப்பினும், தற்போதைக்கு இந்த ஒப்பந்தங்களே நடைமுறையிலுள்ள இருதரப்புச் சட்டக் கட்டமைப்பாகத் தொடர்கின்றன.

வரலாற்றுப் பதிவுகள் கூறுவது என்ன?

1974ஆம் ஆண்டு இலங்கைக்கு வழங்கப்படும் வரை கச்சத்தீவு இந்தியாவுக்குச் சொந்தமானதாக இருந்தது என்ற இந்தியாவில் பரவலாகக் காணப்படும் கருத்தைவிட, கச்சத்தீவின் வரலாறு மிகவும் சிக்கலானதாகும்.

பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின்போது இந்தியாவிலும் இலங்கையிலும் இருந்த நிர்வாகங்களுக்கு இடையே தீவின் அந்தஸ்து தொடர்பான கருத்து வேறுபாடுகள் நிலவின. இரு தரப்பினரும் தங்களது உரிமைக் கோரிக்கைகளுக்கு ஆதாரமாக முன்வைக்கும் வரலாற்றுப் பதிவுகள் காணப்படுகின்றன.

இராமநாதபுரம் மன்னரின் சொத்துரிமைக் கோரிக்கைகள், வரலாற்றுக் குத்தகை ஒப்பந்தங்கள் மற்றும் பிரித்தானிய நிர்வாகப் பதிவுகள் ஆகியவை இந்தியத் தரப்பின் வாதங்களில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன.

1904ஆம் ஆண்டின் சென்னை உயர் நீதிமன்ற வழக்கான ‘அன்னக்குமாரு பிள்ளை எதிர் முத்துப்பயல்’ மற்றும் 1922ஆம் ஆண்டின் இம்பீரியல் ஆவணங்கள் திணைக்கள அறிக்கை ஆகியவை இந்தியாவின் வரலாற்று உரிமைக் கோரிக்கைக்கான ஆதாரங்களாக இந்திய ஆய்வாளர்களால் முன்வைக்கப்பட்டுள்ளன.

ஆனால், சொத்துரிமை, மீன்பிடி நடைமுறைகள் மற்றும் நிர்வாக அதிகாரம் என்பன ஒரு பிரதேசத்தின் மீதான அரச இறையாண்மைக்குத் தானாகவே சமமானவையாகிவிடாது.

1921ஆம் ஆண்டு பிரித்தானிய இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் குறிப்பாக முக்கியத்துவம் வாய்ந்தவை.

பாக்கு நீரிணையில் மீன்பிடி எல்லையொன்றை நிர்ணயிப்பது குறித்து இரு காலனித்துவ நிர்வாகங்களும் கலந்துரையாடின.

கச்சத்தீவு தொடர்பாக இந்தியா எதிர்காலத்தில் முன்வைக்கக்கூடிய எந்தவொரு பிராந்திய உரிமைக் கோரிக்கையையும் பாதிக்காத வகையில், முன்மொழியப்பட்ட எல்லைக்கோட்டை இந்தியத் தூதுக்குழு ஏற்றுக்கொண்டது.

இந்த நிபந்தனையானது, அப்போதைய பேச்சுவார்த்தைகளின் மூலம் தீவின் அந்தஸ்து உறுதியாகத் தீர்மானிக்கப்படவில்லை என்பதையும், அது சர்ச்சைக்குரியதாகவே இருந்ததையும் வெளிப்படுத்துகிறது.

1923ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட கடிதப் பரிமாற்றங்களும் இந்த வரலாற்று விவாதத்தில் முக்கியமானவை. இரு தரப்பினரின் போட்டியான உரிமைக் கோரிக்கைகள் தொடர்பான இந்திய அரசாங்கத்தின் மதிப்பீடுகளை விளக்கும் சந்தர்ப்பங்களில் அவை மேற்கோள் காட்டப்பட்டுள்ளன.

இருப்பினும், 1921ஆம் ஆண்டு பேச்சுவார்த்தைகளையோ அதனுடன் தொடர்புடைய கடிதப் பரிமாற்றங்களையோ இலங்கைக்குச் சாதகமாக வழங்கப்பட்ட இறுதியான சர்வதேச நீதித்துறைத் தீர்ப்பாகச் சித்தரிக்கக்கூடாது.

சுதந்திரத்திற்குப் பின்னர், 1974 மற்றும் 1976ஆம் ஆண்டுகளிலேயே மிகவும் தீர்க்கமான முன்னேற்றங்கள் ஏற்பட்டன.

1974 ஜூன் மாதத்தில் இந்தியாவும் இலங்கையும் ‘இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க கடற்பரப்புகளின் எல்லை மற்றும் அது தொடர்பான விடயங்கள் குறித்த ஒப்பந்தத்தை’ மேற்கொண்டன.

அதன் முதலாம் பிரிவு கடல் எல்லையை நிர்ணயித்து, கச்சத்தீவை இலங்கையின் எல்லைக்குள் அமைத்தது.

நான்காம் பிரிவின்படி, எல்லைக்கோட்டின் தத்தமது பக்கங்களிலுள்ள கடற்பரப்புகள், தீவுகள், கண்டத்திட்டு மற்றும் கடலடிப் பகுதிகள் மீது இரு நாடுகளும் இறையாண்மையையும் பிரத்தியேக அதிகாரத்தையும் கொண்டிருக்கும்.

ஐந்தாம் பிரிவின்படி, இந்திய மீனவர்களும் யாத்திரிகர்களும் முன்னர் கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறைகளுக்கு அமைவாக இலங்கையின் பயண ஆவணங்களோ விசாக்களோ இன்றி கச்சத்தீவுக்குச் செல்வதற்கான உரிமை பாதுகாக்கப்பட்டது.

எனினும், அந்தப் பிரிவு இலங்கையின் கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் மீன்பிடிப்பதற்கான உரிமையை வெளிப்படையாக வழங்கவில்லை.

1976ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள், அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள விசேட விதிகளுக்கு உட்பட்டு, ஒரு நாட்டின் மீன்பிடிப் படகுகளும் மீனவர்களும் மற்றைய நாட்டின் கடல் வலயங்களில் மீன்பிடிக்க முடியாது என்பதை மேலும் தெளிவுபடுத்தின.

1974 மற்றும் 1976ஆம் ஆண்டு ஒப்பந்தங்கள் இரண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டதுடன், பின்னர் ஐக்கிய நாடுகள் சபையிலும் பதிவு செய்யப்பட்டன.

தற்போதைய கடல் எல்லையை நிர்வகிக்கும் பிரதான சட்ட ஆவணங்களாக இவையே விளங்குகின்றன.

அதிகம் பேசப்படாத ‘வாட்ஜ் பாங்க்’ கடற்பகுதி:

சுவாரஸ்யமாக, இலங்கையிலும் இந்தியாவிலும் கச்சத்தீவு தொடர்பாக நடைபெறும் விவாதங்களில் ‘வாட்ஜ் பாங்க்’ (Wadge Bank) விவகாரம் பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை.

கன்னியாகுமரியிலிருந்து சுமார் 80 கிலோமீற்றர் தெற்கே அமைந்துள்ள இது, பரந்ததும் இயற்கை வளங்கள் நிறைந்ததுமான கடலடிப் பீடபூமியாகும்.

இது இந்தியாவின் பிராந்தியக் கடற்பரப்புக்கு வெளியே அமைந்திருந்தாலும், இந்தியாவின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) அமைந்துள்ளது.

குறைந்தபட்சம் 1920களில் இருந்தாவது இரு நாடுகளையும் சேர்ந்த மீனவர்கள் இந்தப் பகுதியில் வர்த்தக ரீதியாக மீன்பிடித்து வந்துள்ளனர்.

ஆனால், 1976ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட கடல் எல்லை ஒப்பந்தத்தின் கீழ், இந்தப் பகுதி இந்தியாவின் பிரத்தியேக பொருளாதார வலயத்தின் ஒரு பகுதியாக உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.

1979ஆம் ஆண்டளவில் இலங்கை மீன்பிடிப் படகுகள் அப்பகுதியில் மீன்பிடிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது.

சாராம்சத்தில், இது ஒரு முக்கியமான பரஸ்பர விட்டுக்கொடுப்பாக அமைந்தது.

கச்சத்தீவு மீதான முழுமையான இறையாண்மையையும் அதைச் சுற்றியுள்ள கடற்பரப்பில் மீன்பிடிக்கும் உரிமையையும் இலங்கை பெற்றுக்கொண்ட அதேவேளை, அதைவிட அதிக இயற்கை வளங்கள் நிறைந்த வாட்ஜ் பாங்க் பகுதியில் மீன்பிடிப்பதற்கான வாய்ப்பை இலங்கை மீனவர்கள் முற்றாக இழந்தனர்.

முந்தைய நீதிமன்ற வழக்குகள் எதை நிறுவுகின்றன?

1974ஆம் ஆண்டு எட்டப்பட்ட உடன்பாடு, கச்சத்தீவின் அந்தஸ்து தொடர்பாக இந்தியாவுக்குள் எழுந்த சட்டரீதியான சவால்களை முடிவுக்குக் கொண்டுவரவில்லை.

1974ஆம் ஆண்டின் ‘பிரிஜ் கண்டேல்வால் எதிர் இந்திய ஒன்றியம்’ என்ற வழக்கில், கச்சத்தீவு தொடர்பான இந்திய அரசாங்கத்தின் ஒப்பந்தத்தை எதிர்த்து பிரிஜ் கண்டேல்வால் மற்றும் ஷியாமா சரண் குப்தா ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை டெல்லி உயர் நீதிமன்றம் பரிசீலித்தது.

தேவையான அரசியலமைப்பு நடைமுறைகளைப் பின்பற்றாமல் இந்தியப் பிரதேசமொன்றை மற்றொரு நாட்டிற்கு வழங்க முடியாது என மனுதாரர்கள் வாதிட்டனர்.

எனினும், அவர்கள் கோரிய சட்ட நிவாரணத்தைப் பெறுவதற்குத் தேவையான தனிப்பட்ட சட்ட நலனை அவர்கள் நிறுவவில்லை எனக் கண்டறிந்த நீதிமன்றம், அந்த மனுக்களைத் தள்ளுபடி செய்தது.

ஆனால், உரிமை தொடர்பான அனைத்து வரலாற்றுக் கேள்விகளையும் இறுதியாகத் தீர்த்து வைத்த சர்வதேச நீதித்துறைத் தீர்மானமாக இதனைச் சித்தரிக்கக்கூடாது.

1974ஆம் ஆண்டு உடன்பாட்டின் சட்டபூர்வத்தன்மை ஆரம்பத்திலிருந்தே இந்தியாவில் சவாலுக்குட்படுத்தப்பட்டிருந்தது என்பதை வெளிப்படுத்துவதால் இந்த வழக்கு முக்கியமானதாகத் தொடர்கிறது.

ஆனால், சட்ட நிலைப்பாடுகளில் தெளிவின்மை இருந்ததால் இந்த எதிர்ப்புகள் உருவாகவில்லை. மாறாக, இந்திய தேசியவாதமும் மக்கள் மத்தியில் நிலவிய பிராந்திய உரிமை உணர்வுகளுமே இதற்குக் காரணமாக அமைந்தன.

இவை தனிப்பட்ட உணர்வுகளைச் சார்ந்தவை. உணர்ச்சிபூர்வமாகவும் அரசியல் ரீதியாகவும் எப்போதும் கையாளப்படக்கூடிய இத்தகைய உணர்வுகளை எந்தச் சட்டத்தினாலும் கட்டுப்படுத்த முடியாது.

இதன் விளைவாக, பின்னர் எழுப்பப்பட்ட சட்டரீதியான சவால்களிலும் அரசியலமைப்பு தொடர்பான வாதங்கள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டுள்ளன.

பரந்த அரசியலமைப்புக் கேள்வியை அலட்சியப்படுத்திவிட முடியாது.

1960ஆம் ஆண்டு ‘பெருபாரி ஒன்றியம் மற்றும் நிலப்பகுதிகளின் பரிமாற்றம்’ தொடர்பான வழக்கில், இந்தியப் பிரதேசமொன்றை வெளிநாட்டிற்கு வழங்குவதற்கு அரசியலமைப்புத் திருத்தம் தேவைப்படலாம் என இந்திய உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

கச்சத்தீவு ஒப்பந்தங்களை எதிர்த்து வழக்குத் தாக்கல் செய்தவர்கள் இந்தச் சட்டக் கோட்பாட்டை மேற்கோள் காட்டியுள்ளனர்.

ஆனால், பெருபாரி வழக்கின் முன்னுதாரணம் இந்தக் குறிப்பிட்ட கடல் எல்லை உடன்பாட்டிற்குப் பொருந்துமா என்பது நீதித்துறையால் தீர்மானிக்கப்பட வேண்டிய விடயமாகும்.

மனுதாரர்கள் முன்வைத்த அனைத்து வாதங்களும் ஏற்கெனவே ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டதாகக் கருத முடியாது.

இலங்கைக்கு முக்கியமான விடயம் என்னவென்றால், இந்தியாவின் இந்த உள்நாட்டு நீதிமன்ற நடவடிக்கைகள் இதுவரை இருதரப்பு ஒப்பந்தங்களைச் செயலிழக்கச் செய்யவில்லை என்பதாகும்.

அதேபோன்று, அண்மைய உச்ச நீதிமன்ற விசாரணையும் இலங்கையின் இறையாண்மையை உறுதிப்படுத்தும் அல்லது நிராகரிக்கும் புதிய தீர்மானமொன்றை உருவாக்கவில்லை.

இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் வரை இந்த மனுக்கள் நிலுவையிலேயே இருக்கும்.

இந்தியாவின் அங்கீகாரம் ஏன் முக்கியமானது?

இலங்கையைப் பொறுத்தவரையில், சர்ச்சைக்குரிய பிரதேசமொன்றின் மீதான இலங்கையின் முன்னிருந்த இறையாண்மையை இந்தியா திடீரென ஏற்றுக்கொண்டுவிட்டது என்பதல்ல பிரதான இராஜதந்திர வெற்றி. அவ்வாறு புரிந்துகொள்வது தவறானதாகும்.

மாறாக, ஏற்கெனவே நடைமுறையிலுள்ள கடல் எல்லை உடன்பாட்டை மீளப் பரிசீலிக்குமாறு இந்தியாவுக்குள் தொடர்ச்சியாக அரசியல் அழுத்தங்கள் எழுப்பப்பட்டாலும், இந்திய அரசாங்கம் அந்த உடன்பாட்டைத் தொடர்ந்து நடைமுறையிலுள்ள ஒன்றாகக் கருதுவதே இங்கு முக்கியமானதாகும்.

இந்த நிலைப்பாடு இலங்கையின் கடல் அதிகார எல்லையின் ஸ்திரத்தன்மையை வலுப்படுத்துகிறது.

இந்தியத் தேர்தல் மேடைகளில் பேசப்படும் அரசியல் கருத்துகளும் இந்திய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இராஜதந்திர நிலைப்பாடுகளும் எப்போதும் ஒன்றாக இருப்பதில்லை என்பதையும் இது வெளிப்படுத்துகிறது. எனினும், சில சந்தர்ப்பங்களில் அவை ஒன்றிணைந்தும் இருந்துள்ளன.

உதாரணமாக, 2024ஆம் ஆண்டு இந்தியத் தேர்தல்களுக்கு முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் குறித்த ஒப்பந்தங்களைப் பகிரங்கமாக விமர்சித்தனர்.

அப்போதைய காங்கிரஸ் அரசாங்கத்தால் கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டதாக அவர்கள் வாதிட்டனர். இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கரும் அக்காலப்பகுதியில் இந்தக் கருத்துகளுக்குப் பகிரங்கமாக ஆதரவளித்தார்.

எனினும், கச்சத்தீவு தொடர்பாக இலங்கையில் அண்மையில் வெளிப்பட்ட பெரும் கொண்டாட்ட மனநிலையானது, பிராந்திய இறையாண்மைக்கும் மூலோபாயச் சுயாதீனத்திற்கும் இடையிலான வேறுபாட்டை மறைத்துவிடும் அபாயத்தைக் கொண்டுள்ளது.

குறிப்பாக தற்போதைய அரசாங்கத்திற்கு ஆதரவான சமூக ஊடகங்களில் காணப்படும் இந்த அளவுகடந்த உற்சாகமானது, சர்வதேச உறவுகளையும் குறிப்பாக இலங்கை–இந்திய உறவுகளையும் பெரும்பாலான இலங்கையர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் அணுகும் முதிர்ச்சியற்ற பார்வையிலிருந்து உருவாகிறது.

ஒரு நாடு மற்றொரு நாட்டின் எல்லைகளை அங்கீகரிக்கும் அதேவேளை, அந்நாட்டின் பொருளாதாரத் தீர்மானங்கள், உட்கட்டமைப்பு, எரிசக்தித் துறைகள் மற்றும் வெளிநாட்டு உறவுகள் மீது தனது செல்வாக்கை கணிசமாக அதிகரிக்கும் கொள்கைகளையும் முன்னெடுக்க முடியும்.

இந்திய உச்ச நீதிமன்றத்தின் கருத்துகள் தொடர்பான உடனடியான கொண்டாட்ட மனநிலைக்கு அப்பால், இலங்கை அரசாங்கமும் மக்களும் கவனம் செலுத்த வேண்டிய விடயம் இதுவேயாகும்.

விழிப்புணர்வுடன் கூடிய வெளிவிவகாரக் கொள்கை

இந்தியாவின் வெகுஜன ஆதரவை நாடும் அரசியல்வாதிகள் சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு பேசுகின்ற போதிலும், கடல் எல்லை ஒப்பந்தங்களை இந்தியா உத்தியோகபூர்வமாகத் தொடர்ந்து மதித்து நடப்பதை இலங்கை நிச்சயமாக வரவேற்க வேண்டும்.

ஆனால், எதிர்காலத்தில் இந்தியா தனது மூலோபாயச் செல்வாக்கை விரிவுபடுத்தாமல் கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ளும் என்பதற்கான உத்தரவாதமாக இதனைக் கருதிவிடக்கூடாது.

கச்சத்தீவு தொடர்பான சட்டரீதியான உடன்பாடும், இரு நாடுகளுக்கும் இடையிலான பரந்த அதிகாரச் சமநிலையும் தனித்தனியான விடயங்களாகும்.

ஒன்று பிராந்திய அதிகார எல்லையைப் பற்றியது.

மற்றையது, இறையாண்மை கொண்ட ஒரு நாடு தனது பொருளாதார மற்றும் மூலோபாய எதிர்காலத்தைத் தானே தீர்மானிப்பதற்கான நடைமுறை ஆற்றலைப் பற்றியது.

1974 மற்றும் 1976ஆம் ஆண்டு ஒப்பந்தங்கள் மதிக்கப்பட வேண்டும் என்பதை இலங்கை தொடர்ந்து வலியுறுத்த வேண்டும்.

அதேவேளை, மீன்பிடிப் பிரச்சினைகளை இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகள், சட்டத்தை நடைமுறைப்படுத்துதல் மற்றும் பெரும் துயரங்களை எதிர்கொண்டுள்ள எமது கரையோர சமூகங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் ஏற்பாடுகள் ஆகியவற்றின் மூலம் கையாள வேண்டும்.

முடிவின்றித் தொடரும் மீன்பிடிப் பிரச்சினைகள், ஏற்கெனவே தீர்க்கப்பட்ட பிராந்திய உரிமை விவகாரங்களை மீண்டும் திறப்பதற்கான சாக்குப்போக்காக மாறுவதற்கு இடமளிக்கக்கூடாது.

கச்சத்தீவு கற்றுத்தரும் பாடம்

இறுதியில், கச்சத்தீவு கற்றுத்தரும் பாடம் அந்தத் தீவைவிட மிகவும் பெரியதாகும்.

அதிகாரமிக்க அண்டை நாடொன்று தனது பிராந்திய உரிமைகளை அங்கீகரிப்பதால் மாத்திரம் ஒரு நாட்டின் இறையாண்மை பாதுகாக்கப்பட்டுவிடுவதில்லை.

அந்த உரிமைகளை நடைமுறையில் பயன்படுத்துவதற்கான வலுவான நிறுவனங்கள், பொருளாதாரத் தாக்கங்களைத் தாங்கும் ஆற்றல், அரசியல் தலைமைத்துவம் மற்றும் இராஜதந்திரத் திறன் ஆகியவற்றிலும் இறையாண்மை தங்கியுள்ளது.

ஏற்கெனவே நடைமுறையிலுள்ள கடல் எல்லை உடன்பாட்டையும் அதற்கான இந்தியாவின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டையும் மதிப்பதற்கு இலங்கைக்கு நியாயமான காரணங்கள் உள்ளன.

ஆனால், அண்மைய உச்ச நீதிமன்ற நடவடிக்கைகள் கச்சத்தீவின் உரிமை தொடர்பான இறுதி நீதித்துறைத் தீர்ப்பை வழங்கவில்லை. அவ்வாறான தீர்ப்பொன்றின் விளைவாக இந்திய அரசாங்கம் புதிதாகத் தீவின் உரிமையை விட்டுக்கொடுக்கவுமில்லை.

இருப்பினும், ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களே இந்த உடன்பாட்டின் சட்டரீதியான அடித்தளமாகத் தொடர்கின்றன. அதேவேளை, நிலுவையிலுள்ள வழக்குகளால் இந்தியாவுக்குள் எழுப்பப்பட்ட அரசியலமைப்பு வாதங்கள் இன்னமும் தீர்க்கப்படாமல் இருக்கின்றன.

இலங்கையைப் பொறுத்தவரையில், வெற்றிக் கொண்டாட்ட மனநிலையோ அல்லது காரணமற்ற சந்தேகமோ புத்திசாலித்தனமான அணுகுமுறையாகாது.

ஒத்துழைப்பை வரவேற்கின்ற, தேவையற்ற மோதல்களைத் தவிர்க்கின்ற, பொருளாதார ஒத்துழைப்பை மூலோபாயத் தீர்மானங்களை மேற்கொள்ளும் சுதந்திரத்தை விட்டுக்கொடுப்பதுடன் குழப்பிக்கொள்ளாத, தெளிவான பார்வையுடைய சுயாதீன வெளிவிவகாரக் கொள்கையே இலங்கைக்கு இப்போது மிகவும் அவசியமானதாகும்.

கச்சத்தீவு ஒரு சிறிய தீவாகவும், ஒப்பீட்டளவில் முக்கியத்துவம் குறைந்த தீவாகவும்கூட இருக்கலாம். ஆனால், இறையாண்மை, அதிகாரம் மற்றும் இலங்கையின் சுதந்திரமான எதிர்காலம் தொடர்பாக அது எழுப்பும் கேள்விகள் எந்த வகையிலும் அற்பமானவை அல்ல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *