முகமூடிகள் (கவிதை)

முகமூடிகள் (கவிதை)

உலக மேடையில் நடிப்பதற்கு 

முகமூடிகள் வேண்டும். 

ஓன்றல்ல இரண்டல்ல  

எண்ணிலங்கா முகமூடிகள் வேண்டும். 

கடைகளில் வாங்கவோ 

ஒன்லைன்ல ஓடர்‘ பண்ணவும் முடியாது 

எல்லாம் நமது திறமைதான் 

குறளி வித்தைக்காரன் போல 

அப்ப அப்ப மாற்ற வேண்டும் 

கண்விழித்தால் 

நித்திரை வரைக்கும் 

முகமூடியுடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும். 

கண்ணாடி பார்ப்பது எதற்கு

முகமூடியை சரிபார்க்கத்தானே! 

கண்ணாடி சிரிப்பது  

எமக்குக் கேட்காது.  

ஆனால் 

உள்ளுக்கொரு கண்ணாடி சிரிப்பது கேட்கும் 

காதில் வாங்காமல்  

கடந்து போவது மிருகம்.  

முகமூடிக் கேற்ற வண்ணம் 

நடிப்பது ஒரு கலை 

சிவாஜி சினிமாவில்தான் நடிகன் 

யதார்த்தத்தில்  

நாம் நடிப்பதை 

எவரும் பேசுவதேயில்லை 

யாரும் பார்பதும் இல்லை 

ஏனென்றால்  

எல்லோரும் திறமையான நடிகர்கள்  

முகமூடி அணியத் தெரியாவிட்டால் 

அணிந்த மாதிரி  

நடிக்கத் தெரியாவிட்டால்  

இந்த மேடையில் இடமில்லை. 

முகமூடி அணியத் தெரியாமல் 

நடிக்கத் தெரியாமல் 

இந்த மேடையை விட்டு  

முகமூடிகளால் அகற்றப்பட்ட   

அத்தனை உண்மை முகங்களையும்  

நெஞ்சார நேசிக்கின்றேன். 

     — சு.சிவரெத்தினம்