சொந்த  மண்ணின் சுகந்த நினைவுகள்! ( 29)

சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! ( 29)

— பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா —  

இது என் கதையல்ல, 

என்னைத் தாங்கிய என் மண்ணின் கதை 

1974ஆம் ஆண்டுத் தொடக்கத்திலிருந்து 1976ஆம் ஆண்டு இறுதி வரை (18.02.1974 முதல் 31.01.1977 வரை) அண்ணளவாக மூன்று வருடங்கள் அம்பாறை கச்சேரி (மாவட்டச் செயலக) வளாகத்தில், உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தில் கடமையாற்றினேன். 

அரச சேவையில் இரண்டு வருடங்களைப் பூர்த்திசெய்த, இருபது வயது இளைஞனாக அம்பாறைக்கு மாற்றலாகிச் சென்ற எனக்கு அடுத்த மூன்று வருடங்களும் பல்வேறு விடயங்களை அறிந்துகொள்ளவும், அனுபவங்களைத் தெரிந்துகொள்ளவும் வாய்ப்பான காலமாக அது அமைந்தது. 

அங்கே, உள்ளூராட்சி உதவி ஆணையாளராக, ஆர்.உருத்திரநாதன் அவர்கள் இருந்தார்கள். நேர்மையான அதிகாரி. அதிகம் பேசமாட்டார். கருமமே கண்ணானவர். ஆரையம்பதியைச் சேர்ந்த பொன்னம்பலம் அவர்கள், காரைதீவைச் சேர்ந்த அருளானந்தம், இன்னும் பலரும் பணியாற்றிக்கொண்டிருந்தார்கள். பொன்னம்பலம் அவர்கள் மிகவும் அன்பும், அமைதியும் கொண்ட நேர்மையான அலுவலர். அவர்தான் அங்கு தலைமை எழுதுனராக இருந்தார். நான் அங்கு சென்று சில மாதங்களில், மட்டக்களப்பில் கடமையாற்றிக்கொண்டிருந்த, காரைதீவைச் சேர்ந்த க.அருட்சிவம் அவர்கள், பொன்னம்பலம் அவர்களுடன் பரஸ்பர இணக்கத்துடன் ஒத்துமாறி, அம்பாறை அலுவலகத்தில் கடமையேற்றார். அருட்சிவம் அவர்கள் பெரும்பாலும் காக்கி நிறத்திலான அரைக் காற்சட்டையை அணிவார். அரைக்காற்சட்டை, மேற் சட்டை, நீளமான காலுறை, சப்பாத்து, மற்றும் தொப்பி, நெற்றியிலே திருநீற்றுப் பூச்சு, இடக்கையில் ஏதாவது ஒரு புத்தகம், வலக்கையில் குடை… இப்படித்தான் அவர் அலுவலகத்திற்கு வருவது வழக்கம். படங்களில் நாங்கள் பார்த்த, வெள்ளைக்காரரின் ஆட்சிக்காலத்து அரச அலுவலர்களைப்போலவே அவர் இருப்பார். என்னுடன் மிகவும் விருப்பத்துடன் பழகிய நல்ல மனிதர். பன்னிரு திருமுறைகள், கந்த புராணம் என்பவற்றிலே மிகுந்த அறிவும், ஈடுபாடும் கொண்டவர்.  

அம்பாறைக் கச்சேரியில் மட்டுமன்றிப் பெரும்பாலான அரச அலுவலகங்களிலும், வைத்தியசாலை, நீர் வழங்கல் சபை, ஒட்டுப்பலகைக் கூட்டுத்தாபனம், மின்சார சபை, வங்கிகள் முதலியவற்றிலும் பெருவாரியான தமிழர்கள் கடமையாற்றிக்கொண்டிருந்தார்கள். பெரும்பாலானவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள். அங்கிருந்த தமிழ் மகா வித்தியாலயத்தில் அதிபர், ஆசிரியர்கள் முதலியோரில் பெரும்பாலும் மட்டக்களப்பு, கல்முனை, காரைதீவு முதலிய இடங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். 

அங்கிருக்கும் அம்பாறைப் பிள்ளையார் ஆலயம் மிகவும் பிரபல்யமானது. அதனை நிர்வகிப்பதிலும் அபிவிருத்தி செய்வதிலும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் பெரும் பங்கு வகித்தார்கள்.  

அம்பாறை மாணிக்கம்பிள்ளையார் ஆலயம் 
அம்பாறை மாணிக்கம்பிள்ளையார் ஆலயம் 
தீர்த்தோற்சவம்

மட்டக்களப்பிலிருந்து வேலை நாட்களில் தினமும் காலையில் வெளிக்கிடும், நுவரெலியா கடுகதி பஸ்வண்டி, களுவாஞ்சிகுடியில் 7.30 அளவில் நிற்கும். அதில் ஏறினால், 8.30 இற்கும் 8.45 இற்குமிடையில் அம்பாறையைச் சென்று சேரலாம். அதில்தான் மட்டக்களப்பு, கல்லடி, ஆரையம்பதி ஆகிய இடங்களில் இருந்தும் அம்பாறைக்குச் செல்லும் அலுவலர்கள் வருவார்கள். களுவாஞ்சிகுடியில் ஏறுபவர்களுக்குப் பெரும்பாலும் இருக்கை கிடைக்காது. ஆனால், கல்முனையில் யாரும் இறங்கினால் கிடைக்கும். அம்பாறையில் கடமையாற்றிய காலத்தில் இரண்டு வருடங்கள் அளவில் தினமும் பயணம் செய்தேன். அங்கே தங்கியிருந்து வார இறுதிக்கு வீட்டுக்கு வரும் வழக்கத்தை ஒரு வருடகாலம் மேற்கொண்டேன். 

அம்பாறை நகரில் ஒரு பகுதி 

அம்பாறை நகரில் அரச அலுவலர்களுக்கான விடுதிகள் எனப்படும் குடியிருப்பு மனைகள் நிறைய இருந்தன. அந்த விடுதிகளில் இருந்தவர்களில் சிலர் அரச பதவியிலிருந்து  இளைப்பாறிய அல்லது வேறிடங்களுக்கு மாற்றம் பெற்ற பின்னரும் அவற்றைவிட்டு நீங்காமல் குடும்பத்துடன் இருந்தார்கள். அங்கே திஸ்ஸபுர என்ற ஓர் இடம் கச்சேரியில் இருந்து 20 நிமிட நடைதூரத்தில் இருக்கிறது. அங்கேயிருந்த அரச அலுவலர்களுக்கான விடுதிகளில் ஒன்று எனது உறவினரான (தொக்கை) இராசா அண்ணனுக்குக் கிடைத்திருந்தது. மிருக வைத்தியத் திணைக்களத்தில் சாரதியாக இருந்த அவரும் அவரின் தாயாரும் அங்கே தங்கியிருந்தார்கள். என்னையும் அங்கே தங்கலாம் என்று அவரே விரும்பி அழைத்ததால், நானும், ஆரையம்பதியைச் சேர்ந்த நண்பர் தருமகுணசேகரமும் அங்கே தங்கியிருந்தோம். குணசேகரமும் நானும் அரச பணியில் ஒரேநாளில் நியமனம் பெற்றவர்கள்.  

நாங்கள் தங்கியிருந்த அந்தக் குடியிருப்பு வளாகத்தில் ஏறத்தாழ ஐம்பது அரச விடுதிகள் இருந்தன. அவற்றில் மூன்றில் இரண்டுக்கும் மேற்பட்ட விடுதிகளில் தமிழர்களே இருந்தார்கள். அந்த விடுதிக்குச் சற்றுத் தொலைவில் சுற்றவரப் பொதுமக்களின் சொந்தவீடுகள் அமைந்திருந்தன. அவற்றிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில தமிழ்க் குடும்பங்கள் வாழ்ந்துகொண்டிருந்தன. 

நான் அம்பாறையில் வேலை செய்த காலத்தில் அரசகரும (சிங்கள) மொழி தரம் ஒன்றிலும், தரம் இரண்டிலும் சித்தியெய்தினேன். தரம் மூன்று பரீட்சைக்கு முன்னர், க.பொ.த சா/தரப் பரீட்சையில் சித்தியெய்தியதால், அரசகரும மொழித் தேர்ச்சித் தகைமை பெற்றவனானேன். அதே காலத்திற்குள், இன்னுமொரு தேவைப்பாடாக இருந்த தட்டச்சுப் பரீட்சையிலும் சித்தியெய்தினேன். அதனால், மூன்று வருடங்களுக்குள் எனது உத்தியோகத்திற்கான தடைகளைத் தாண்டி, சேவையில் உறுதிப்படுத்தப்பட்டேன். 

1956ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட அரசகரும மொழிச் சட்டம் அதாவது “சிங்களம் மட்டும்” சட்டத்தின் அடிப்படையில், 1961இல் வெளியிடப்பட்ட திறைசேரி சுற்றுநிருபத்தின்படி அரசாங்க உத்தியோகத்தர்கள், அரச கரும மொழியில் சித்தி பெற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டிருந்தது. 

சேவையில் இணைந்து முதலாம் வருடத்திற்குள் தரம் ஒன்றிலும், இரண்டாம் வருடத்திற்குள் தரம் இரண்டிலும், மூன்றாம் வருடம் முடிவதற்குள் தரம் மூன்றிலும் சித்திபெற்றால்தான், அவ்வந்த வருடங்களுக்கான சம்பள உயர்வு கிடைக்கும். மூன்று வருடங்களுக்குள் அரச கரும மொழி தரம் மூன்று பரீட்சையிலோ அல்லது க.பொ.த சா/தரப் பரீட்சையில் சிங்களத்தை ஒரு பாடமாகவோ சித்தியெய்தியவர்கள்தான், பதவியில் உறுதிப்படுத்தப்படுவார்கள். 

அவ்வாறு சேவையில் உறுதிப்படுத்தப்படாதவர்கள் தமது மூன்று வருட சேவைக்காலத்தின் பின்னர் எந்நேரமும் வேலையிலிருந்து விலக்கப்படலாம். குறித்த காலத்திற்குள் சிங்கள மொழித் தேர்ச்சியைப் பெறாத எத்தனையோ அரச உத்தியோகத்தர்கள் தமது உத்தியோகங்களை இழந்த சம்பவங்கள் தொடர்ந்து கொண்டேயிருந்தன.  

இப்பொழுது தமிழும் அரச கரும மொழியாக்கப்பட்டுவிட்டதால் அப்படிப்பட்ட தடைகளைத் தாண்டுவதோ, தாங்குவதோ அவசியமில்லை என்பதால் இது பற்றி இப்போதைய தலைமுறையினருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.  

இது சம்பந்தமாகப் பிரசித்திபெற்ற கோடீஸ்வரன் வழக்கு, இங்கிலாந்து Privy Council எனப்படும் கோமறைக் கழகம் வரை மேன்முறையீடு செய்யப்பட்ட வரலாறும் உண்டு. 

அதுபற்றியதொரு சிறிய விபரத்தை இக்கால சமுதாயத்தினருக்காக இங்கு குறிப்பிடுவது பொருத்தமாகும். 

…………   ………….   …………. 

பிருத்தானிய சாம்ராட்சியத்தின் ஆட்சிக்குட்பட்டிருந்து, சுதந்திரம் பெற்ற, இலங்கை போன்ற நாடுகளில், சுதந்திரத்திற்குப் பின்னரும் மாட்சிமை தங்கிய மகாராணியாரின் பிரதிநிதி ஒருவர் பெயரளவிலான ஆட்சித்தலைவராக இருந்தார். பொதுநலவாய நாடுகள் (Commonwealth Countries) என அழைக்கப்படும் அத்தகைய நாடுகளின் அதி உச்ச நீதிமன்றங்களில் வழங்கப்பட்ட தீர்ப்புக்களுக்கு எதிராக, இங்கிலாந்தில் உள்ள “பிரிவி கவுன்சில்” (Privy Council) எனப்படும் கோமறைக்கழகத்திற்கு மேன்முறையீடு செய்யக்கூடிய வழிவகையும் இருந்தது. அத்தகையதோர் மேன் முறையீடு, இலங்கையிலிருந்து, அரசாங்க எழுதுவினைஞர் சங்கத்தின் தலைவராக இருந்த செல்லையா கோடீஸ்வரன் அவர்கள் அரசகரும மொழியில் சித்தியடையாதிருந்தமையால் அவரது வருடாந்த சம்பள உயர்வுகள் வழங்கப்படாமை பற்றிய பிரச்சினை, நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டபோது, இலங்கை உயர்நீதி மன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக பிரிவி கவுன்சிலில் மேன்முறையீடு செய்யப்பட்டது. அதுவே இன்றுவரை பிரபல்யமாகப் பேசப்படும் கோடீஸ்வரன் வழக்கு ஆகும். 

1961இல் வெளியிடப்பட்ட திறைசேரி சுற்றுநிருபத்தின்படி தனது சம்பள உயர்வுகள் தடைசெய்யப்பட்டமைக்கு எதிராக கோடீஸ்வரன் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். 

1956ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட அரசகரும மொழிச் சட்டம் அதாவது “சிங்களம் மட்டும்” சட்டம் அன்று நடைமுறையில் இருந்த அரசியல் அமைப்பின் 29(2) சரத்துக்கு முரணானது என்பதால், அந்தச் “சிங்களம் மட்டும்” சட்டத்தின் அடிப்படையில் வெளியிடப்பட்ட மேற்குறித்த திறைசேரிச் சுற்றுநிருபமும் சட்ட விரோதமானது. அதனால், திறைசேரிச் சுற்று நிருபம் செல்லுபடியற்றதாகின்றது. எனவே, செல்லுபடியற்ற அந்தச் சுற்றுநிருபத்தின் அடிப்படையில் ஓர் அரசாங்க ஊழியரின் சம்பள உயர்வைத் தடைசெய்ய முடியாது என்ற வாதம் கோடீஸ்வரன் தரப்பினால் சமர்ப்பிக்கப்பட்டது. 

ஆனால், அரச உத்தியோகத்தர் ஒருவர், தமது சம்பளத்துக்காக அரசை எதிர்த்துச் சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது என்றும், மேலும், ‘சிங்களம் மட்டும்” சட்டம் அரசியலமைப்பின் 29(2) ஆவது சரத்துக்கு முரணானதல்லவென்றும், அரசாங்க தரப்பில் எதிர்வாதம் முன்வைக்கப்பட்டது. 

வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம், வழக்காளியான கோடீஸ்வரன் தரப்பு வாதங்களை ஏற்று, சாதகமாகத் தீர்ப்பளித்தது.   

மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கெதிராக, உயர் நீதிமன்றத்தில் அரசாங்க தரப்பினால் மேன்முறையீடு செய்யப்பட்டது.  

அரச உத்தியோகத்தர் ஒருவர், தமது சம்பளத்துக்காக முடிக்கெதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யமுடியாது என்ற அரச தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பை இரத்துச் செய்தது. அத்துடன் அந்த அடிப்படையில் வழக்கு இரத்துச் செய்யப்படுவதால், அரசியலமைப்புச் சம்பந்தமாக ஆராயவேண்டிய தேவை இல்லை என்றும் தீர்ப்பளித்தது.  

உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராக, கோடீஸ்வரன் தரப்பினர், பிரித்தானியாவில், கோமறைக்கழகத்திற்கு மேன்முறையீடு செய்தனர். கோமறைக் கழகம் இந்த வழக்கை 1968ஆம் ஆண்டு விசாரணைக்கு எடுத்து, 1969இல் தீர்ப்பை வழங்கியது.  

அந்தத் தீர்ப்பில் அரசாங்க ஊழியர் ஒருவர், தனது சம்பளத்தொகைக்காக அரசுக்கெதிராக  வழக்குத்தாக்கல் செய்ய முடியாது என்று இலங்கை உயர்நீதி மன்றம் கொடுத்திருந்த தீர்ப்பிற்கு எதிராகச் செய்யப்பட்ட கோடீஸ்வரனின் மேன்முறையீடு ஏற்றுக்கொள்ளப்பட்டது. அத்துடன், அரசியலமைப்புப் பற்றி எழுப்பப்பட்டிருக்கும் விடயங்களைப்பற்றி, இலங்கை நீதிமன்றம் ஆராயவேண்டும் என்றும் கூறப்பட்டது.   

அடுத்த வருடம், அதாவது 1970ஆம் ஆண்டு மூன்றில் இரண்டுக்கும் அதிகமான பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த, ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்கத்தினால் 1971 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 44ஆம் இலக்கச் சட்டத்தினால் கோமறைக் கழகத்திற்கு மேன்முறையீடு செய்யும் வழக்குரிமை இலங்கை மக்களுக்கு இல்லாதொழிக்கப்பட்டது. 

மேலும் 1972ஆம் ஆண்டு இலங்கை புதிய அரசியல் அமைப்பின் கீழ் குடியரசாகப் பிரகடனம் செய்யப்பட்டதிலிருந்து, மகாராணியாரின் பிரதிநிதியாக தேசாதிபதி இருக்கும் முறையும் ஒழிக்கப்பட்டது.  

…………   ………….   …………. 

அம்பாறை கச்சேரியில், உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தில் கடமையாற்றிக்கொண்டிருக்கும்போது நான்  வித்தியாலயங்கார பல்கலைக் கழகத்திற்குத் தெரிவுசெய்யப்பட்டேன். 

ஆனால் வேலையை விட்டுவிட்டுப் பல்கலைக்கழகத்திற்குச் செல்லும் நிலையில் நான் இல்லை. அத்துடன் அங்கு படித்து ஒரு கலைப் பட்டதாரியாக வருவதைவிட, வெளிவாரியாகப் படித்து ஒரு சட்டப் பட்டதாரியாக வருவதையே விரும்பினேன்.  அத்துடன், வேலையில் இருந்துகொண்டே பல்கலைக் கழகத்திலும் முழுநேர மாணவராகப் படிக்க முடியாது. சிலர் அவ்வாறு படித்துக்கொண்டிருந்தார்கள். அது சட்டத்திற்கு முரணானது என்பதால் அந்தச் சவாலை எடுத்துக்கொள்ள நான் விரும்பவில்லை. சட்டம் படிப்பதென்றால் கொழும்பிற்குச் செல்ல வேண்டும் என்பதே அப்போதிருந்த ஒரேயொரு வழி. இலங்கையில் இருந்த பல்கலைக் கழகங்களில் கொழும்பு பல்கலைக்கழகத்தில் மட்டுமே சட்ட பீடம் இருந்தது. அதில் பல்கலைக் கழகத்திற்குச் செல்லாமல், வெளிவாரி மாணவனாகப் படித்துப் பரீட்சை எடுப்பதற்கும் பட்டம் பெறுவதற்கும் ஏற்பாடு இருந்தது. 

இப்போது நாட்டின் எந்த மூலையில் இருந்துகொண்டும் சட்டம் படிப்பதற்கு வசதிகள் உள்ளன. பல்கலைக்கழகங்களில் மட்டுமன்றித் திறந்த பல்கலைக்கழகங்களிலும் சட்டபீடங்கள் உள்ளன. இந்த வசதிகள் அக்காலத்தில் இருந்ததில்லை. 

பிற்காலத்தில், மட்டக்களப்பில் வெளிவாரியாகச் சட்டம் படிப்பிக்கும் ஒரு நிறுவனத்தை, யாழ்ப்பாணத்தச் சேர்ந்தவரும், முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட காணி உதவி ஆணையாளருமான மார்க்கண்டன் அவர்கள் நடத்தினார்கள். அவர் அதனை நடத்தத் தொடங்கிய காலகட்டத்தில், நான் சட்டப் பட்டதாரியாகிவிட்டமையால், அவரின் கோரிக்கையை ஏற்று, அவரது “மார்க்கண்டன் கல்வி நிலையத்தில்” இரண்டு பாடங்களைப் படிப்பிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. என்னிடம் படித்தவர்கள் பலர் இப்போது சட்டத்தரணிகளாகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். 

நான் கொழும்பிற்கு இடமாற்றம் எடுக்கவிருக்கும் விடயத்தை, உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அவர்களிடம் கூறியபோது முதலில் அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது. என்னை விடுவிக்க அவருக்கு அறவே விருப்பமில்லை. ஆனால், நான் கொழும்பிற்கு செல்லும் நோக்கம் அவருக்குத் தெரிந்ததாலும் அவரும் ஒரு சட்டப் பட்டதாரியாக இருந்ததாலும் எனது உயர்படிப்பைக் கருத்தில் கொண்டு பொருத்தமான பதிலீட்டு ஒழுங்குடன் என்னை விடுவிக்கத் தனக்கு ஆட்சேபனை இல்லை என்று கடிதம் வழங்கினார்.  

அந்தக் கடிததை எடுத்துக்கொண்டு, இணைந்த சேவைகள் பணிப்பாளரைச் சந்திப்பதற்காக அடுத்தவாரமே கொழும்பிற்கு விரைந்தேன்.   

(நினைவுகள் தொடரும்)