— அ. வரதராஜா பெருமாள் —
இக்கட்டுரைத் தொடரின் கடந்த பகுதியில் சுதந்திர இலங்கையின் ஏற்றுமதி – இறக்குமதிப் பொருளாதாரம் தொடர்பான வரலாற்றோட்டத்தை சுருக்கமாக நோக்கினோம். இப்பகுதியில் அதன் உள்ளடக்கங்களையும் அவை இலங்கையின் உள்நாட்டுப் பொருளாதார கட்டமைப்போடு இணைந்துள்ள தன்மைகளையும் நோக்கலாம்.
1970களின் நடுப்பகுதி வரை இலங்கையின் ஏற்றுமதியில் தேயிலை, றப்பர் மற்றும் தெங்கு உற்பத்திப் பொருட்கள் ஐந்தில் நான்கு பங்கு இடத்தைப் பெற்றிருந்தன. பின்னர் அது படிப்படியாகக் குறைந்து தைத்த ஆடை ஏற்றுமதிகள் பிரதான இடத்தைப் பிடித்து விட்டன. 1950ம் ஆண்டு இலங்கையின் ஏற்றுமதியில் 90 சதவீதத்தை விவசாய உற்பத்திப் பொருட்கள் இடம்பிடித்தன. அது 1977ல் 80 சதவீதமாகி 1990ல் 40 சதவீதமாகி, 2000ம் ஆண்டோடு 20 சதவீதமாகியது. விவசாய உற்பத்திப் பொருட்கள் ஏற்றுமதியில் தொகைரீதியில் குறைந்தன அல்ல. மாறாக, ஏற்றுமதியில் ஏனைய வகை உற்பத்திகளின் அதிகரிப்பின் காரணமாகவே விவசாய உற்பத்திகளின் பங்கு ஏற்றுமதியில் குறைந்துள்ளது. குறிப்பாக ஆடை ஏற்றுமதி மற்றும் கிராமிய மரபுரீதியான கைவினைப் பொருட்களின் ஏற்றுமதி படிப்படியாக அதிகரித்தன. இலங்கையின் ஏற்றுமதியின் பெறுமானத்தில் தைத்த ஆடைகளின் ஏற்றுமதி 50 சதவீதத்தை அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையினுடைய ஏற்றுமதியின் பரிதாப நிலை
இந்த ஏற்றுமதிகளுக்காக பிரயோகிக்கப்படும் இலங்கையின் வளங்கள் எவ்வளவு தூரம் பொருளாதார ரீதியில் உத்தமமாக பயன்படுத்தப்படுகின்றன என்பதனையும், இதில் ஈடுபடுத்தப்படும் அனைத்து உழைப்பாளர்களும் எந்த அளவுக்கு நன்மை பெறுகிறார்கள் என்பதையும் மதிப்பீடு செய்தல் அவசியமாகும். இதனை ஒரு சிறிய கணக்கின் மூலம் அடையாளம் காணலாம். இந்த ஏற்றுமதிகளுக்கான உற்பத்திகளை ஆக்குவதற்கு இலங்கையின் மொத்த விவசாய நிலங்களில் சுமார் 20 சதவீத நிலங்கள் அதாவது கிட்டத்தட்ட 2 (இரண்டு) மில்லியன் ஏக்கர் வளமான நிலங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதைவிட முக்கியமாக நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 25 லட்சம் உழைப்பாளர்களும் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இவ்வளவையும் கொடுத்து பெறுகின்ற ஏற்றுமதி வருமானம் வெறுமனே 12 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மட்டுமே. இந்த 12000 மில்லியனும் முழுவதுமாக இலங்கையர்களுக்கே உரியதென்பதல்ல. இந்த ஏற்றுமதிக்கான பொருட்களை உற்பத்தி செய்வதற்காக இறக்குமதி செய்யப்படுகின்ற மூலப் பொருட்களுக்காகவும் மற்றும் இடைநிலை உற்பத்திப் பொருட்களுக்காகவும் சுமார் 3000 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமானமான அந்நியச் செலாவணி இலங்கையிடமிருந்து வெளியே செல்கிறது. அதோடு, இந்த உற்பத்திகள் மற்றும் அவற்றோடு தொடர்பான வர்த்தக மற்றும் சேவைத் துறை நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டு நிறுவனங்கள் தமக்குரிய லாபங்களையும், மேலும் அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டவர்கள் தமது சம்பள வருமானங்களையும் தமது நாடுகளுக்கு எடுத்துச் சென்று விடுகின்றனர். ஆக மொத்தத்தில் இந்த ஏற்றுமதியால் இலங்கையர்களுக்கு சொந்தமாவது 9000 மில்லியன் டொலர்களுக்கும் குறைவான பணமே.
2019ல் இந்த 9000 மில்லியன் டொலர்களை இலங்கை நிகர வருமானமாக பெறுவதற்கு சுமார் 25 லட்சம் தொழிலாளர்கள் தமது ஒரு வருட உழைப்பைச் செலுத்தியிருக்கிறார்கள். இதனை சராசரியாகப் பார்த்தால் அதாவது இவ்விடயத்தில் ஒரு இலங்கைத் தொழிலாளியின் ஒரு வருட உழைப்பின் பெறுமதி இலங்கை ரூபாயில் 2019ம் ஆண்டின் அந்நியச் செலாவணி பெறுமானத்தின் படி வெறுமனே சுமார் 6.5 (ஆறரை) இலட்சம் ரூபா மட்டுமே. இதிலிருந்து தொழில் நிறுவனங்களின் லாபம், அவை வட்டியாகச் செலுத்தியவை, அரசு பெற்றுக் கொண்ட வரிகள் மற்றும் மூலதன தேய்மானக் கழிப்புகள் என்பவற்றை நீக்கி விட்டுப்பார்த்தால் ஒரு தொழிலாளிக்கு சராசரியாக கொடுக்கப்பட்டது வருடத்துக்க 450000 (நான்கரை லட்சம்) ரூபாவுக்கு கிட்டிய தொகையே. அதாவது மாதாந்த கணக்கில் சராசரியாக வெறுமனே ஏறத்தாழ 37500 (முப்பத்து நான்காயிரம்) ரூபா என்பது கணக்கு. அதிலும் முகாமைத்துவம், நிர்வாகம் மற்றும் கண்காணிப்பு மட்டங்களிலுள்ள ஊழியர்களின் சம்பளங்களையும் சலுகைகளையம் மற்றும் நிர்வாக செலவுகள் உட்பட்ட மேலதிக செலவுகளையும் கழித்து விட்டுப்பார்த்தால் இவ்விடயத்தில பெரும்பான்மையினராக – உடல் உழைப்பை வழங்கும் தொழிலாளர்களின் சராசரி மாதாந்த வருமானம் 25000 ரூபாவைக் கூட எட்டுமென உறுதியாகக் கூற முடியாது. தேயிலை உற்பத்தி செய்யும் பெருந் தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் மாதாந்தம் 15000 ரூபாவுக்கு மேல் சம்பளம் பெறுவதற்காக படுகின்ற பாடு அனைவரும் அறிந்ததே. ஆடைத் தொழில் உற்பத்தியில் உள்ள மூன்று லட்சம் பெண் தொழிலாளர்களின் மாதாந்த சம்பளம் ரூபா 20000க்கும் 30000க்கும் இடைப்பட்டதாகவே ஊசலாடுகிறது. இவ்வகையில் இலங்கையின் ஏற்றுமதி பொருளாதாரத்தோடு இணைக்கப்பட்டிருக்கும் 25 லட்சம் தொழிலாளர்கள் எந்தளவு தூரம் பரிதாபமான நிலையில் உள்ளனர் என்பதனை சாதாரணமாக எண்கணிதம் தெரிந்த எவரும் இங்கு தரப்பட்டுள்ள கணக்கு சித்திரத்திலிருந்து புரிந்து கொள்ளலாம்.
இலங்கையினுடைய இறக்குமதிகளின் கோலங்கள்
இலங்கையின் சுமார் 18 (பதினெட்டு) லட்சம் ஏக்கர் நிலங்கள் நெல் உற்பத்தியில் ஈடுபடுத்தப்படுகின்றன. பணப்பயிர்களான உப உணவு உற்பத்திகள் மற்றம் ஏனைய தானிய வகைகளின் உற்பத்திகளுக்காக சுமார் 5 (ஐந்து) லட்சம் ஏக்கர்களும், பழ வகைகளுக்காக சுமார் 2.5 (இரண்டரை) லட்சம் ஏக்கர்களும், தென்னைத் தோட்டங்களுக்காக சுமார் 11 (பதினொரு) லட்சம் ஏக்கர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மேலும் கணிசமான அளவு நிலங்கள் கால் நடைகளின் மேய்ச்சலுக்காக பயன்படுகின்றன. இவ்வாறாக இலங்கை மக்களின் உணவுப் பொருட்களின் உற்பத்திகளுக்காக கிட்டத்தட்ட 40 லட்சத்துக்கு மேற்பட்ட ஏக்கர் நிலங்கள நேரடியாக ஈடுபடுத்தப்படுகின்றன. மேலும், விவசாயத்துக்கு பயன்படும் வகையாக உள்ள பெரியதும் சிறியதுமாக மொத்தத்தில் 400000 (நான்கு லட்சம்) ஏக்கர் நில அளவுக்கு பரந்த நீர்த் தேக்கங்களையும் இலங்கை கொண்டுள்ளது. மேலும் இலங்கையின் மத்தியிலுள்ள மலைகளிலிருந்து அனைத்து திசைகளிலும் நாள நரம்புகள் போல நதிகள் இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளை நோக்கி ஓடிக் கொண்டேயிருக்கின்றன.
இலங்கையின் மக்களுக்கான உணவு உற்பத்திகளுக்காக விவசாயத் துறையில் நேரடியாக ஈடுபடும் உழைப்பாளர்களின் எண்ணிக்கை 18 லட்சம் பேருக்கு குறையாததாகும். இதில் ஏற்றமதிக்கான விவசாய உற்பத்திகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் உள்ளடங்கவில்லை என்பது குறிப்பிடப்பட வேண்டிய ஒன்றாகும்.
இவ்வளவு வளங்கள் இருந்தும், இவ்வளவு பேர் உழைப்பைக் கொடுத்தும் இலங்கை தனது மொத்த உணவுப் பொருட்களின் தேவையில் சுமார் மூன்றில் ஒரு பகுதியை இறக்குமதி செய்தே சமாளிக்கிறது என்பதுதான் இங்கு விசனத்துக்கு உரிய விடயமாகும். கிட்டத்தட்ட 20 லட்சம் டன்கள் அரிசியை உற்பத்தி செய்யும் இலங்கை 13 லட்சம் டன்களுக்கு மேலாக கோதுமையை இறக்குமதி செய்கிறது. இதைவிட 350 மில்லியன் டொலர்கள் பெறுமதியான பால் உணவுப் பொருட்களையும், 275 மில்லியன் டொலர்கள் பெறுமதியான சீனி. இதைவிட பருப்பு மற்றம் கடலை வகைகள், கிழங்கு, வெங்காயம், பழ வகைகள் என பெருந் தொகையில் இறக்குமதி செய்கிறது. ஐந்து லட்சம் சதுர கிலோ மீற்றர் பொருளாதார வலயமாக சமுத்திரத்தைக் கொண்ட இலங்கையானது பெருந்தொகையில் கருவாட்டு வகைகளையும் டின் மீன்களையும் இறந்குமதி செய்வது ஆச்சரியத்துக்குரியது.
2019ம் ஆண்டு இலங்கை பொருட்களை இறக்குமதி செய்வதற்காக செலவு செய்த தொகை அமெரிக்க டொலர் பெறுமானத்தில் 20000 (இருபதாயிரம்) மில்லியன்கள். இதில் உணவுப் பண்டங்களின் இறக்குமதிக்காக 2500 (இரண்டாயிரத்து ஐந்நூறு) மில்லியன்களும், வாகனங்களுக்காக 1500 மில்லியன்களும். மருந்து வகைகளுக்காக 600 மில்லியன்களும், விவசாய உர இறக்குமதிக்காக 250 மில்லியன்களும், எரி பொருட்களுக்காக 4000 மில்லியன்களும், கட்டிடப் பொருட்களுக்காக 1000 மில்லியன்களும் செலவிடப்பட்டன. 6000 மில்லியன் டொலர்கள் பெறுமதியான ஆடைகளை ஏற்றமதி செய்வது தொடர்பாக பெருமை கொள்ளும் இலங்கை சுமார் 3000 மில்லியன் டொலர்களை ஆடைகள், துணி வகைகள், நூல் வகைகள் மற்றும் ஆடைகள் உற்பத்தித் தொழில்களோடு தொடர்புடைய பல்வேறு வகைப்பட்ட பொருட்களின் இறக்குமதிக்காகச் செலவு செய்கிறது என்பதனையும் கவனத்திற் கொள்வது அவசியமாகும்.
உற்பத்திகளுக்கான இடைநிலைப் பண்டங்களின் இறக்குமதியானது மொத்த இறக்குமதியில் 40 சதவீத இடத்தைப் பிடிக்கிறது. இவை பெரும்பாலும் ஆடை உற்பத்திகளோடு தொடர்பான ஆக்கத் தொழில் பண்டங்களாகவும்; மற்றும் உள்ளுர் நுகர்வுத் தேவைகளுக்கான பல்வேறு உற்பத்திகளோடு தொடர்பான பொருட்களாகவுமே அமைகின்றன. வெளிநாடுகளுக்கான ஏற்றுமதியில் வெறுமனே ஐந்து சதவீத இடத்தையே மூலதனப் பொருட்கள் பெறுகின்றன. மேலும் ஏற்றுமதி செய்யப்படும் நுகர்வுப் பொருட்கள் மொத்த ஏற்றுமதியில் 75 சதவீத பெறுமானத்தைக் கொண்டவையென கூறப்பட்டாலும் மொத்த ஏற்றமதியில் ஆடை ஏற்றுமதிகள் சுமார் 50 சதவீதத்தையும் விவசாயப் பண்டங்களின் ஏற்றுமதிகள் சுமார் 20 சதவீதத்தையும் கொண்டுள்ளன என்பதை ஏற்கனவே கண்டுள்ளோம். எனவே இலங்கையானது ஆடைகள் உற்பத்தி தவிர்ந்த வேறு வகையான ஆக்கத் தொழில் உற்பத்தி வகைகளை ஏற்றுமதி செய்வதென்பது மிகமிகக் குறைவாகவே உள்ளமை வெளிப்படை. அதற்கான ஆற்றலை இலங்கையின் பொருளாதாரக் கட்டமைப்பு கொண்டிருக்கவில்லை என்பதோடு அதனைக் கட்டியெழுப்புவதில் இலங்கையின் ஆட்சியாளர்கள் பெரிதும் அக்கறை காட்டவில்லை என்பதை இலங்கையின் இறக்குமதிகள் பற்றி இங்கு தரப்பட்டுள்ள சித்திரம் தெளிவாகவே காட்டுகிறது.
வெளிநாடுகளுடனான சேவைத் துறையிலும் இலங்கையின் அந்தரமே!
இலங்கையைப் பொறுத்த வரையில் சேவைத் துறையினூடாக அந்நியச் செலாவணி வருமானத்தைப் பெற்றுத் தருகின்ற பிரதான துறைகளாக இருப்பது உல்லாசத் துறையும் வெளிநாடுகளுக்கான போக்குவரத்துத் துறைகளுமே. சேவைத் துறைகளின் ஊடான அந்நியச் செலாவணி வருமானம் 2019ம் ஆண்டு கிட்டத்தட்ட 8000 மில்லியன்கள். இதில் 4500 மில்லியன் ரூபாய்கள் உல்லாசத் துறையின் மூலமாகவும் 2500 மில்லியன் ரூபாய்கள் சர்வதேச போக்குவரத்துக்களினூடாகவும் பெறப்பட்டது. எனவே இங்கும் வெளிநாட்டு செலாவணி வருமானத்தை உழைக்கும் சேவைத் துறைகளாக மேற்கூறப்பட்ட இரண்டு துறைகளுமே உள்ளன. இங்கும் பன்முகம் கொண்டதாக இலங்கையின் ஏற்றுமதிக்குரிய சேவைத்துறைகள் வளர்த்தெடுக்கப்படவில்லை என்பதே உண்மையாகும். இதேவேளை மேற்குறிப்பிட்ட இரண்டு சேவைத் துறைகளின் வழியாக வெளிநாடுகளுக்குச் செல்லும் அந்நியச் செலாவணி கிட்டத்தட்ட 3500 மில்லியன் டொலர்களாகும். அதாவது இலங்கையினுடைய சர்வதேச பொருளாதார உறவில் சேவைத் துறையின் மூலமாக 2019ல் கிடைத்த தேறிய அந்நியச் செலாவணி வருமானம் சுமார் 4000 மில்லியன் டொலர்களே.
வெளிநாட்டு வர்த்தகத்தில் பொருட்களின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி, மேலும் அதில் சேவைத் துறைகளின் மூலமாக கிடைக்கும் அந்நியச் செலாவணி வருமானம் மற்றும் அந்நியச் செலாவணி செலவு ஆகியவற்றை உள்ளடக்கி மேற்கொள்ளப்படும் கணக்கின் நிலுவையே சென்மதி நிலுவை என அழைக்கப்படுகிறது. இங்கு வரவை விட செலவு அதிகமாக இருக்கின்ற போது அந்த இடைவெளி அளவே சென்மதி நிலுவை பற்றாக்குறை எனப்படுகிறது. 2019ம் ஆண்டில் ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளால் கிடைத்த வருமானம் கிட்டத்தட்ட 19500 மில்லியன் டொலர்கள். அதேவேளை இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளின் வழியாக செலவு செய்யப்பட்ட தொகை 24500 மில்லியன் டொலர்கள். இங்கு சென்மதி நிலுவை பற்றாக்குறையாக உள்ள தொகை 5000 மில்லியன் டொலர்கள். இந்த பற்றாக்குறையை சமாளிப்பதற்க உதவியாக இருந்தது மத்திய கிழக்கு மற்றும் வெளிநாடுகளில் வேலை செய்யும் இலங்கையர்கள் இலங்கைக்கு அனுப்பும் அந்நியச் செலாவணியே. எனவே இலங்கையின் ஏற்றுமதி வருமானத்துக்கும் இறக்குமதி செலவுக்கும் இடையே ஏற்படும் பற்றாக்குறையை ஈடு கட்டுவது ஆண்டுக் கணக்கில் அல்லது பல மாதங்கள் கணக்கில் தமது குடும்பங்களை முற்றாகப் பிரிந்து 10 மணித்தியாலம் 12 மணித்தியாலங்கள் கொடும் வெப்பமான காலநிலை கொண்ட மத்திய கிழக்கு நாடுகளில் கடுமையாக உழைத்து, அதில் மிக எச்சரிக்கையுடன் சேமித்து இலங்கைக்கு அந்நியச் செலாவணியாக அனுப்பும் சுமார் 15 லட்சம் உழைப்பாளர்களே என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உழைப்பில் பெண்களின் பங்கு கணிசமானது. ஆனால் அவர்கள் பற்றிய பரிதாபமான கதைகள் இங்கு ஆயிரக் கணக்கில் உண்டு என்பதையும் இவ்விடத்தில் மனத்தில் இருத்திக் கொள்வது அவசியமாகும்.
சர்வதேச வர்த்தகத்தில் இலங்கையின் பலவீனங்கள்
1. ஏற்கனவே குறிப்பிட்டபடி ஒரு சில பண்டங்களின் ஏற்றமதியில் தங்கியிருப்பது. 1980களுக்கு முன்னர் பெருந்தோட்ட உற்பத்திகளான தேயிலை, றப்பர் மற்றும் தெங்குப் பொருட்களில் தங்கியிருந்தது. இப்போது தைத்த ஆடைகள் 50 சதவீதத்தையும், தேயிலை மற்றும் ஏனைய பெருந் தோட்டப் பயிர்களும் வாசனைத் திரவியங்களும் மொத்தத்தில் 15 சதவீதமும் கொண்டுள்ளன. ஒரு பண்டத்தின் ஏற்றுமதி தொடர்பில் சர்வதேச சந்தை வாய்ப்பில் பாதகமான ஒரு நிலைமை ஏற்பட்டால் ஏனைய பொருட்களின் ஏற்றுமதியினூடாக அதில் ஏற்படும் நட்டத்தை அல்லது வீழ்ச்சியை ஈடு கட்டலாம் என்ற வாய்ப்பை இலங்கையின் ஏற்றுமதிப் பொருளாதார கட்டமைப்ப கொண்டிருக்கவில்லை:
2. அதேபோலவே சேவைத் துறை ஏற்றுமதியிலும் உல்லாசத் துறையின் வருமானத்திலேயே பெரும்பாலும் தங்கியிருக்கின்றது. முன்னர் உள்நாட்டு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட உல்லாசத் துறை பின்னர் சற்று தலை தூக்கியதாயினும் 2019ம் அண்டு ஈஸ்டர் ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலோடு அது பெரிதும் பாதிப்புக்கு உள்ளானது. அதற்குப் பிறகு கொரோணாவின் தாக்கம். ஏற்றுமதியாகும் பொருட்களின் வருமானத்துக்கும் இறக்குமதியாகும் பொருட்களின் செலவுகளுக்குமிடையிலான வர்த்தக இடைவெளியை சமாளிப்பதில் உல்லாசத் துறையின் வருமானமே முக்கிய பங்காற்றியது. ஆனால் இப்போது உல்லாசத் துறை படுத்து விட்டதால் அதனூடான அந்நியச் செலாவணி வரவு நின்று விட்டது. மீண்டும் இலங்கையின் உல்லாசத் துறை முன்னைய அளவுக்கு தலையை நிமிர்த்துவதற்கு எவ்வளவ காலம் எடுக்கும் என சொல்ல முடியாத நிலைமையே இப்போது உள்ளது:
3. மொத்த ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்குமிடையிலான சென்மதி நிலுவை பற்றாக்குறையை நிரப்புவதில் மத்திய கிழக்கு மற்றும் தென்கொரியா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் போன்ற சில நாடுகளுக்கும் சென்று வேலை செய்து அனுப்புவோரின் அந்நியச் செலாவணியும் தற்போது வீழ்ச்சி அடைந்துள்ளது. மேலும். மத்திய கிழக்கு மற்றும் ஏனைய நாடுகளில் கிடைக்கும் வேலைவாய்ப்பு என்னும் வகையில் செல்வோருக்கான வாய்ப்புகளிலும் ஒரு தேக்க நிலை அல்லது வீழ்ச்சி நிலை ஏற்படுவதற்கான நிலைமைகளே அதிகமாக உள்ளது. கொரோணாவுக்கு பிந்திய உலக பொருளாதார உறவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும் சர்வதேச அரசியல் இராணுவ நிலைமைகளும் மத்திய கிழக்கில் இலங்கையர்களுக்கான வேலைவாய்ப்புகள் குறைவதற்கான போக்குகளையே காட்டுகின்றன. எனவே எதிர்காலத்தில் சென்மதி நிலுவை பற்றாக்குறை இதுவரை காணப்படும் போக்கிலேயே செல்லுமாக இருந்தால் அந்தப் பற்றாக்குறையை ஈடு கட்டுவதற்கு இலங்கை ஆண்டு தோறும் சர்வதேச நாணய நிதியம் போன்ற உலக அமைப்புகளிடமும் பொருளாதார வல்லமை கொண்ட சில நாடுகளிடமும் கடனுக்காக தொடர்ந்து கையேந்தி நிற்க வேண்டிய நிலைமைகளையே அதிகரிக்கும். இதனால் இலங்கையின் இறக்குமதிகள் மட்டுமல்ல உள்நாட்டுத் தேவைகளுக்கான உற்பத்திகளும்; பெரிய அளவில் பாதிப்புக்கு உள்ளாகும்:
4. இலங்கை தற்போது ஏற்றுமதி செய்யும் பண்டங்கள் தொகை ரீதியில் அதிகரிப்பதற்கான வாய்ப்பு எதுவும் கிடையாது. அதேபோல அவற்றிற்கான சர்வதேச சந்தை விலைகள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகளும் இல்லை. மாறாக அவை குறைவதற்கான வாய்ப்புகளையே கொண்டிருக்கின்றன. அதேபோல இலங்கை தற்போது இறக்குமதி செய்யும் பொருட்களும் தவிர்க்கப்பட முடியாதவையாகவே உள்ளன. அந்த இறக்குமதிகளுக்கான பிரதியீடுகளை இலங்கைக்கு உள்ளேயே மேற்கொள்வதைப் பொறுத்தே இலங்கையின் இறக்குமதிச் சுமை குறைவது அல்லது கூடுவதென்பது நிர்ணயிக்கப்படும். ஆனால் இன்றைய உலக முதலாளித்துவ சந்தைப் பொருளாதாரக் கட்டமைப்பும் அத்துடன் இலங்கையின் ஆட்சியாளர்களால் வளர்த்து விடப்பட்டுள்ள பொருளாதாரக் கலாச்சாரமும் இலங்கையில் இறக்குமதிப் பிரதியீட்டுக் கொள்கையை அனுமதிக்குமா என்பது பெரும் கேள்வியாகும். இலங்கை இவ்விடயத்தில் ஆப்பிழுத்த குரங்கின் நிலையிலேயே உள்ளது. இன்னொரு வகையில் கூறுவதானால் புலி வாலைப் பிடித்தவன் நிலைக்கு இலங்கையின் ஏற்றமதி – இறக்குமதிப் பொருளாதாரம் ஆக்கப்பட்டுள்ளது:
5. 1960களில் மற்றும் 1970களில் இலங்கையானது அணி சேரா நாடுகளின் அமைப்பில் ஒரு பிரதானமான சக்தியாக விளங்கியது. ஆனால் அதனை அடிப்படையாகக் கொண்டு மூன்றாம் உலக நாடுகளுக்கிடையிலான பன்முகப்பபட்ட ஒரு நீண்ட கால அடிப்படையிலான பொருளாதார உறவுகளை இலங்கை வளர்த்துக் கொள்ளவில்லை. மாறாக பகை முகாம்களுக்கிடையில் எதனை நோக்கியும் தனியாக அணி சேராதிருத்தல் என்ற அரசியல் ராஜதந்திர வகைமுறையையே கடைப்பிடித்தது. பகை முகாம்களாக இருந்த இரு பகுதியினரோடும் ஏறத்தாழ சமமான பொருளாதார உறவுகளைக் கொண்டிருக்கும் நடைமுறையைக் கடைப்பிடித்தது. ஆனால் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா இலங்கையின் பொருளாதாரத்தை நிரந்தரமாக மேற்கு நாடுகளுடனான தரகுப் பொருளாதார உறவைக் கொண்டிருக்கும் ஒரு நாடு எனும் நிலைக்குத் தள்ளி விட்டார். கடந்த 27 ஆண்டுகளில் 21 ஆண்டுகள் ஐக்கிய தேசியக் கட்சி அல்லாத ஆட்சியே நடந்திருக்கின்றது. ஆனால் எவ்வகையிலும் சந்திரிகா பண்டாரநாயக்காவோ அல்லது ராஜபக்சாக்களோ இலங்கையின் சர்வதேச ஏற்றமதி வர்த்தக அமைப்பில் குறிப்பிடத்தக்க வகையில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. இறக்குமதி வர்த்தகத்தில் மட்டும் ஆக்கத் தொழில் வளர்ச்சியடைந்த மேலைத் தேச மற்றும் யப்பான் நாடுகளில் அதிக அளவில் தங்கியிருந்த நிலையில் இருந்து திசை திரும்பி இந்தியா மற்றம் சீனா ஆகியவற்றில் இருந்து மிக அதிக அளவில் இறக்குமதி செய்தல் என்னும் நிலைக்கு மாற்றியுள்ளன. இலங்கையின் எற்றமதிகளில் 25 சதவீதம் அமெரிக்காவிற்கே செல்கின்றன. மற்றொரு 25 சதவீத ஏற்றமதிகள் மேற்கு ஐரோப்பிய நாடுகளுடன் உள்ளன. இந்த ஏற்றுமதிகளிலேயே இலங்கையில் தைத்த ஆடைகளின் ஏற்றுமதி பெரும் பங்கை வகிக்கின்றது. இலங்கையின் ஏற்றுமதி வருமானம் எந்தளவு தூரம் மேற்கத்தைய நாடுகளில் தங்கியுள்ளது என்பதை இங்கு காண முடியும். இலங்கை அரசு சீனாவை நோக்கி தனது அரசியல் மற்றும் இராணுவ ராஜ தந்திர உறவகளை ஓர் எல்லைக்கு மேல் நகர்த்துகிற பொழுது அது எந்த அளவுக்கு இலங்கையின் ஏற்றமதிப் பொருளாதாரத்தை பாதிக்கும் என்பதை இந்த சதவீதங்கள் காட்டுகின்றன. இலங்கையின் இறக்குமதி சீனாவிலிருந்த 5000 மில்லியன் டொலர்கள் பெறுமதியானவைகளாக இருக்க சீனாவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களின் பெறுமானம் 1000 மில்லியன் டொலர்கள் என்னும் அளவிலேயே உள்ளது. இதே அளவான ஏறத்தாழ. இதே வடிவிலான ஏற்றமதி – இறக்குமதி உறவையே இலங்கையானது இந்தியாவோடும் கொண்டுள்ளது. சீனாவும் இந்தியாவும் இலங்கைக்கு ஏற்றமதி செய்யும் பொருட்களின் மொத்த பெறுமானம் இலங்கையின் இறக்குமதிகளின் மொத்த பெறுமானத்தில் கிட்டத்தட்ட 50 (ஐம்பது) சதவீதமாகும் அதேவேளை சீனாவுக்கும் இந்தியாவுக்கும் மொத்தமாக இலங்கை ஏற்றுமதி செய்யும் பொருட்களின் பெறுமானம் இலங்கையின் மொத்த ஏற்றமதியில் 15 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது. சீனாவோ அல்லது இந்தியாவோ இலங்கையிலிருந்து இறக்குமதி செய்வதற்கான பொருட்களின் வகைகளை இலங்கை உற்பத்தி செய்யவில்லை என்பதையே இங்குள்ள நிலைமைகள் காட்டுகின்றன. அதற்கான பொருளாதார ஆற்றலை இலங்கை விருத்தி செய்து கொள்வில்லை என்பதை இங்கு புரிந்து கொள்ளலாம். இவ்வாறாக, இலங்கையின் ஏற்றுமதி – இறக்குமதிப் பொருளாதாரம் கொண்டுள்ள பலயீனங்களை நீண்ட பட்டியலிடலாம். இலங்கையானது தன்னுடைய உள்நாட்டு உற்பத்திப் பலங்களை உரியபடி பெருக்கி அதனூடாக ஏற்றுமதி – இறக்குமதி விடயத்தில் தனக்கென ஓரு தற்சார்பு சமநிலையை ஏற்படுத்திக் கொள்வதற்கான வல்லமையை வளர்த்துக் கொள்ளுமா? அதற்கான அரசியற் பலத்தைக் கொண்டிருக்கின்றதா?அதற்கான சூழ்நிலைமைகளை பெற்றுக் கொள்ளுமா? அதற்கான பொருத்தமான சரியான அரசியல் சமூக பொருளாதார அணுகுமுறைகளையம் நடைமுறைகளையும் கடைப்பிடிக்குமா? போன்ற கேள்விகளெல்லாம் இலங்கையின் எதிர்கால சர்வதேச வர்த்தகம் குறித்து தொக்கி நிற்கின்றன.
(கட்டுரைத் தொடர் பகுதி 13ஐ நோக்கி தொடரும்)