மாற்று அரசியல் (சொல்லத் துணிந்தேன் – 92

மாற்று அரசியல் (சொல்லத் துணிந்தேன் – 92

— தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் — 

கடந்த பல வருடங்களாகக் குறிப்பாக 2009 மே 18ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர், தமிழர்களுடைய அரசியல் பொதுவெளியில் ‘மாற்று அரசியல்’ என்ற விடயம் பேசுபொருளாகிவருகிறது. அதற்கு முன்னர் மாற்று அரசியல் சிந்தனைகள் மக்களிடையே முகிழ்வதற்கான சூழலும் இருக்கவில்லை. காரணம் தமிழரசுக் கட்சியால் கட்டமைக்கப்பட்ட ‘தமிழ்த் தேசியம்’(?) மக்களுக்குப் ‘பௌத்த சிங்களப் பேரினவாதம்’ என்ற பெரும் பூதத்தை மட்டுமே காட்டிற்று. தமிழரசுக் கட்சியினரால் அதன் ஸ்தாபகத் தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்களைப் பற்றித் ‘தந்தை செல்வா’ என்றும் ‘ஈழத்துக் காந்தி’ எனவும் ‘தீர்க்கதரிசி’எனவும் கட்டமைக்கப்பெற்ற பிம்பங்கள் மக்கள் மனதில் பதிந்து ‘தந்தை சொல் மிக்க மந்திரமில்லை’ என்னும் படியாகத் தமிழரசுக் கட்சியையும்- பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியையும் இறுதியாகத் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பையும் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கும் அளவுக்கு மக்களின் சிந்தனை கடிவாளமிடப்பெற்று காயடிக்கப்பட்டிருந்தது.  

இதிலிருந்து மாறுபட்ட குறைந்த எண்ணிக்கையிலான ‘சிந்தனையாளர்கள்’ ‘துரோகிகள்’ எனத் தமிழ்த் தேசியவாதிகளினால்(?) ஓரம் கட்டப்பட்டார்கள் அல்லது ஒழித்துக்கட்டப்பட்டார்கள். இது 1977 வரையிலான மிதவாத அரசியலில் நடந்தது. 

ஆனால் 1977ஆம் ஆண்டின் நாடளாவிய ரீதியில் நடைபெற்ற தமிழ்-சிங்கள இனக் கலவரத்திற்குப் பின்னர் தமிழ் ஆயுதக்குழுக்கள் ஆரம்பிக்கப்பட்ட போது தமிழர்களிடையே குறைந்த எண்ணிக்கையினராக இருந்த ‘மாற்றுச் சிந்தனையாளர்’களும் துப்பாக்கி முனையின் கீழ் ‘வேண்டாம் சோலி’ என விலகி அமைதியாகிவிட்டனர். அதனையும் மீறிப் பேனாவைத் தூக்கியவர்களும் வாயைத் திறந்தவர்களும் உயிர் காவுகொள்ளப்பட்டனர். 2009ஆம் ஆண்டு மே 18 யுத்தம் முடியும் வரை இந்த நிலைமை நீடித்தது.  

தமிழரசுக் கட்சி தோற்றம் பெற்ற 1949இலிருந்துதான் தமிழர்களுடைய அரசியல் பொதுவெளியில் தமிழ்த்தேசியக்(?) கோசம் முன்வைக்கப்பட்டது என எடுத்துக்கொண்டால் முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடிந்த 2009ஆம் ஆண்டு வரை சுமார் 60 ஆண்டுகள் தமிழர்களுடைய அரசியல் பொதுவெளியில் ‘மாற்றுச் சிந்தனைகள்’ மேலெழுவதற்கான புறச் சூழலும் நிலவவில்லை. அகத் தூண்டலும் இருக்கவில்லை. 

புறச்சூழல் நிலவாமைக்குக் காரணம் தமிழ்த்தேசிய அரசியல்(?) எனச் சொல்லிக்கொண்டு தமிழ் மிதவாத அரசியல் தலைமைகளினால் (தமிழரசுக் கட்சி–> தமிழர் விடுதலைக் கூட்டணி–> தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) முன்னெடுக்கப்பட்ட தேர்தல் மைய அரசியலின் பால் தமிழர்கள் ஈர்க்கப்பட்டமையும் தமிழ்ப் போராளி இயக்கங்களினால் மாற்றுச் சிந்தனையாளர்களுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்களும் எனலாம். 

அகத்தூண்டல் இல்லாமைக்குக் காரணம் காலாதி காலமாகத் தமிழ் மக்களோடு கூடப்பிறந்த தனிநபர் வழிபாட்டுக்குக் குணாம்சமும் -HERO WORSHIP-(தந்தை செல்வா- தளபதி அமிர்தலிங்கம்- தேசியத் தலைவர் பிரபாகரன் போன்ற தனிநபர் வழிபாடுகள்), புறநானூற்று வீரத்தையே இன்றும்கூட போற்றித் துதி பாடும்- சாகசங்களையே (ADVENTURISM) வீரமாகவும் வெற்றியாகவும் வியந்து கொண்டாடுகின்ற உளவியலும் எனலாம். 

அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும் உள்ளாகியிருக்கும் சமூகமொன்றின் விடுதலைக்கான போராட்டம் என்பது சமூக நீதியையும்-மனிதாபிமானத்தையும்- மனித விழுமியங்களையும் அடிப்படையாகக் கொண்டதாகும். ஆனால் தமிழ்த் தேசிய விடுதலைப்போராட்டம் எனத் தமிழ் மக்கள் கற்பிதம் செய்து கொண்ட தமிழர் தரப்பின் செயற்பாடுகள் எதிராளியை அல்லது எதிராளி என கருதப்பட்டவரைப் பழிவாங்கும் படலங்களாகதான் இருந்தன. 

(உ+ம்) 

ஃ 27.07.1975 அன்று யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் வரதராஜப்பெருமாள் ஆலயத்தில் வணக்கத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த போது யாழ்ப்பாணம் மாநகரசபையின் முன்னாள் ‘மேயர்’ அல்பிரட் துரையப்பா சுட்டுக் கொல்லப்பட்டார். 

ஃ பொத்துவில் தொகுதியின் முன்னாள் (இரண்டாவது) பாராளுமன்ற உறுப்பினர் மீது அவரது கொழும்பு இல்லத்தில் வைத்து நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக் கொலை முயற்சி. (ஜனவரி 1978) 

ஃ தமிழரசுக் கட்சியை/ தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த ஆலால சுந்தரத்தையும் உடுவில் தர்மலிங்கத்தையும் யாழ்ப்பாணத்தில் கடத்திக் கொலை செய்தமை (1984) 

ஃ ‘ரெலோ’ அமைப்பின் தலைவர் சிறி சபாரத்தினம் 06.05.1986 அன்று யாழ்ப்பாணத்தில் வைத்துக் கொலை. 

ஃ 31.03.1987இல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ‘கந்தன் கருணைப் படுகொலைகள்’ 

ஃ 13.07.1989 அன்று அப்போதைய தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் அ.அமிர்தலிங்கமும் முன்னாள் யாழ்ப்பாணத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் வெ.யோகேஸ்வரனும் கொழும்பு பௌத்தலோக மாவத்தையில்அவர்கள் குடியிருந்த இல்லத்தில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

ஃ மனித உரிமைகளுக்கான யாழ்ப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் உறுப்பினரும் (1988) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உடற்கூறியல் பிரிவின் தலைவராகக் கடமையாற்றியவரும், ராஜன் ஹுல்- ஸ்ரீதரன்- தயா சோமசுந்தரம் என்பவர்களுடன் இணைந்து ‘The Broken Palmyra’ (முறிந்த பனை) என்ற நூலை வெளியிட்ட வருமான ராஜினி திரணகம 21.09.1989 அன்று யாழ்ப்பாண வீதியில் வைத்துச் சுட்டுக் கொலை. 

ஃ மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாம்தம்பிமுத்துவும் அவரது மனைவி திருமதி கலா தம்பிமுத்துவும் கொழும்பில் வைத்துக் கொலை. (மே 1990) 

ஃ தமிழ்நாடு சென்னை சூளைமேட்டில் வைத்து 19.06.1990 அன்று ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் பத்மநாபா உட்பட சக தோழர்களையும் சேர்த்துப் பதின்மூன்று பேரின் படுகொலை. 

ஃ முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி தமிழ்நாடு ஸ்ரீ பெரும்புதூரில் வைத்து 21.05.1991 அன்று பெண் தற்கொலைக் குண்டுதாரியின் தாக்குதலில் கொல்லப்பட்டமை. 

ஃ இலங்கையில் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச 01.05.1993 மேதின ஊர்வலத்தின்போது கொழும்பு ஆமர் வீதியில் வைத்துத் தற்கொலைக் குண்டுத்தாக்குதலுக்குப் பலி. 

ஃ 05.07.1997 அன்று திருகோணமலை சண்முகா வித்தியாலய (பெண்கள் பாடசாலை)த்திற்காக நிர்மாணிக்கப்பட்ட இரு மாடிக்கட்டிடம் ஒன்றினைச் சம்பிரதாய பூர்வமாகத் திறந்து வைப்பதற்கான வைபவம் முடிவுற்று வெளியே வரும்போது வீசப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் திருகோணமலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அ.தங்கத்துரை கொல்லப்பட்டார். 

ஃ முன்னாள் யாழ் மாநகர சபையின் ‘மேயர்’களான, திருமதி சரோஜினி யோகேஸ்வரன் மற்றும் பொன்னுத்துரை சிவபாலன் ஆகியோர் முறையே 27.05.1998, 11.09.1998 தினங்களில் யாழ்ப்பாணத்தில் கொலை செய்யப்பட்டமை. 

ஃ ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின் போது கொழும்பில் வைத்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க மீது 18.12.1999 அன்று மேற்கொள்ளப்பெற்ற கொலை முயற்சி. 

ஃ தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான (1994) கலாநிதி நீலன் திருச்செல்வம் 29.07.1999 அன்று கொழும்பில் குண்டுத் தாக்குதலில் பலி. 

ஃ 10.04.2004 அன்று மட்டக்களப்பு வாகரையில் நடைபெற்ற ‘வெருகல்’ படுகொலை 

ஃ 12.08.2005 அன்று இலங்கையின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் தனது புல்லர்ஸ் வீதி, கொழும்பு- 07 இல்லத்தில் வைத்துச் ‘சினைப்பர்’ தாக்குதலில் பலி. 

ஃ 25.12.2005 அன்று கிறிஸ்மஸ் ஆராதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் யோசப் பரராஜசிங்கம் மட்டக்களப்பு மாதா தேவாலயத்தில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்டமை. 

இவ்வாறான பழிவாங்கும் படுகொலைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இந்தப் பழிவாங்கும் படுகொலைச் சம்பவங்களுக்கு யார் பொறுப்பானவர்கள் என்பதற்கும் அப்பால், தமிழ்த் தேசிய இனத்தின் நியாயமான உரிமைப்போராட்டம் தன் தார்மீகத்தையும் தத்துவார்த்தப் பலத்தையும் இழந்து ‘பயங்கரவாதம்’ ஆகப் பிறழ்வடைந்து தடம்புரண்டு போனமைக்கான காரணம் மேற்கூறப்பெற்ற சம்பவங்கள் போன்ற பல மிலேச்சத்தனமான செயற்பாடுகள்தான். 

இவை போன்று நடைபெற்ற ஏனைய இன்னும் பல கொலைகளையும்- சகோதரப் படுகொலைகளையும்-அப்பாவித் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் மீது தமிழ்ப் போராளி இயக்கங்களால் மேற்கொள்ளப்பெற்ற கொலைத் தாக்குதல்களையும்-பொது மக்கள் கூடுகின்ற வணக்கஸ்தலங்கள், பஸ் நிலையங்கள் போன்ற பகிரங்க இடங்களில் நிகழ்த்தப்பெற்ற குண்டுவெடிப்புகளையும் கூட பழிவாங்கும் படலத்துக்குள் அடக்கலாம். 

தமிழ் மக்களின் நியாயமான உரிமைப் போராட்டத்தை உலகின் கண்களுக்குப் பயங்கரவாத நடவடிக்கைகள் எனக் காட்டுவதற்குப் பௌத்த சிங்களப் பேரினவாத அரசாங்கங்களுக்கு இச்சம்பவங்கள் கைகொடுத்தன. 

தமிழ் மக்கள் எதிர்கொண்ட அழிவுகளுக்கும் அவலங்களுக்கும் ‘அரச பயங்கரவாதம்’ மட்டுமல்ல ‘தமிழ்ப்பாசிசவாதம்’ உம் காரணமாகும். அரச பயங்கரவாதத்தைத் தமிழ்ப் பாசிசவாதம் மேலெழுந்து மூடி மறைத்தது. குறுந் தமிழ்த் தேசியவாதத்தைக் குணாம்சமாகக் கொண்டிருந்த தமிழர்தம் மிதவாத அரசியல் தலைமைகள் தமது சுயலாபங்களுக்காகத் தமிழ்ப் பாசிசத்திற்குப் பக்கப்பாட்டுப் பாடியமை பௌத்த சிங்களப் பேரினவாதத்திற்கு வாய்ப்பைக் கொடுத்து இறுதி விளைவாகத் தமிழர்களை இருந்ததையும் இழக்கப் பண்ணி பேரழிவுக்குள்ளாக்கியது. புலிப் பாசிசத்தைவிடப் பௌத்த சிங்களப் பேரினவாதம் பரவாயில்லை என்று சில தமிழர்களே நினைக்குமளவுக்கு (வெளியே சொல்லப் பயம்) நிலைமை சென்றிருந்தது. 

இவற்றையெல்லாம் சுயவிமர்சன அடிப்படையிலும்- அற விழுமியங்களின் அடிப்படையிலும் காய்தல் உவத்தலின்றி ஆராய்ந்து, அறிவு பெற்று இதுவரை காலமும் மிதவாத அரசியல் தலைமைகள் (தமிழரசுக் கட்சி—> தமிழர் விடுதலைக் கூட்டணி-தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) ஊட்டிய குறுந் தமிழ்த் தேசியவாதப் போதையிலிருந்தும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தனது பிரச்சாரத் தந்திரங்களாலும் எந்திரங்களாலும் தமிழர்களை மூளைச்சலவை செய்து ஆழப் புதைத்து வைத்திருக்கும் தமிழ்ப்பாசிசச் சிந்தனைகளிலிருந்தும் உளவியல் ரீதியாக ஈழத் தமிழினம் எப்போது கட்டுடைத்து எழுகிறதோ அப்போதுதான் மாற்று அரசியலுக்கான பாதை திறக்கும். அதுவரைக்கும் மாற்று அரசியல் என்பது குறைந்த எண்ணிக்கையானவர்களிடையேயும் மிகக் குறைந்த எண்ணிக்கையான மாற்று ஊடகங்களிலும் பேசு பொருளாக மட்டுமே காலத்தை விழுங்கும். அது தமிழ் மக்களை மேலும் பின்னடைவுக்குள்ளாக்கும். 

எது எப்படியிருப்பினும் மாற்று அரசியல் என்பது ஈழத் தமிழினத்தின் இன்றைய அவசரத் தேவையாகும். மாற்று அரசியல் என்றால் என்னவென்பது பற்றி அடுத்த பத்தி (சொல்லத் துணிந்தேன்-93) பேசும்.