தமிழ் தேசியத் தலைவர்கள்: மந்தையில் இருந்து பாதை மாறிய ஆடுகள் (காலக்கண்ணாடி – 58)

தமிழ் தேசியத் தலைவர்கள்: மந்தையில் இருந்து பாதை மாறிய ஆடுகள் (காலக்கண்ணாடி – 58)

—- அழகு குணசீலன் —-

சுவாமிகள் கையில்…..! 

கடிவாளம், மூக்கணாங்கயிறு, சவுக்கு!! 

கட்டுக்கடங்காத “பட்டி” ஒன்றில் பட்டியைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதற்கு பயன்படுத்தப்படும் கருவிகள் இவை. அவைதான் கடிவாளம், மூக்கணாங்கயிறு (நாணயக்கயிறு)  மற்றும் சாட்டை.  

தமிழ்த்தேசிய பாராளுமன்ற அரசியலில் வரலாற்றில் எப்போதும் காணாத பலவீனத்தை நிலத்திலும், புலத்திலும் உள்ள ஈழத்தமிழர்கள் காணக்கூடியதாக உள்ளது. கட்டுக்கடங்காத வார்த்தை வன்முறைகள், பழிபோடும் அரசியல் பாரம்பரியம், கருத்து ஒற்றுமை ஒன்றைக் காணமுடியாத பெயரளவிலான தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஆளுக்காள் வசைபாடும் அரசியல். ஒட்டுமொத்த உட்கட்சி நெருக்கடி. 

தமிழ் டயஸ்போராவிலும் இதுதான் நிலைமை. 

இந்த வரலாற்றுப் பலவீனத்திற்கான முக்கிய பொறுப்பை நிலத்தில் சம்பந்தன் ஐயாவும் புலத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.ருத்திரகுமாரனும், டயஸ்போரா அமைப்புக்களும் ஏற்கவேண்டும். நிலத்தில் சம்பந்தனின்? முதுமை சார்ந்த உடல், உள கழைப்பின் ஒரு வெளிப்பாடு மட்டுமன்றி சமகால தலைமைத்துவ ஆளுமைப் பற்றாக்குறையின் வெளிப்பாடுமாகும். காலவரையறை அற்று தொடரும் இந்த மெத்தன தலைமைத்துவத்தின் கீழ் மக்களும், தமிழ்த்தேசிய அரசியலும் அலுத்து, சலித்துப் போய்விட்டன. 

வெள்ளம் தலைக்கு ஏறும்வரைக்கும் உட்கட்சி மோதல்கள் குறித்து அவர் கேட்டும் கேட்காதவராக, கண்டும் காணதவராக, பேசவேண்டிய இடத்தில் பேசாதவராக இருந்ததன் விளைவு இது. கூட்டமைப்பு உருவானபோதே இருந்த பல கேள்விகள், சந்தேகங்களுக்கு இதுவரை பதில் காணப்படவில்லை. 2009இல் விடுதலைப்புலிகள் மௌனிக்கும் வரையும் கடிவாளம், மூக்கணாங்கயிறு, சாட்டை என்பன புலிகளின் கைகளில் இருந்தன. புலத்தையும், நிலத்தையும் அவர்களால் கட்டுப்படுத்த முடிந்தது. 

வெளித்தோற்றத்திற்கு ஆயுதப்போராட்டத்திற்கு சமாந்தரமான பாராளுமன்ற அரசியலாக இலங்கையிலும், பிராந்தியத்திலும், சர்வதேசத்திலும் இது காட்டப்பட்டபோதும் உண்மை நிலை அதுவல்ல. 

கூட்டமைப்பு மற்றும் டயஸ்போரா என்ற தோணிகளின் சுக்கானை புலிகள் பிடித்து தமது அரசியல் திசையில் ஓட்டினார்கள் என்பதே உண்மை. 

கூட்டமைப்புத்தலைவர் சம்பந்தன் ஐயா கூட்டமைப்பின் தலைவராக அன்றி தமிழரசுக்கட்சி சார்ந்தே செயற்படுகின்றார். பங்காளிகள் என்று கூறிக்கொள்பவர்களுக்கு சமபங்கு மறுக்கப்படுகின்றது. தமிழ்த்தேசிய அரசியலானது இன்னும் ஜீ.ஜீ., செல்வா காலம் முதலான சட்டவாத அரசியலாகவே தொடர்வதால் சம்பந்தர், சுமந்திரன், கஜேந்திரகுமார், விக்கினேஸ்வரன் போன்ற சட்டவாதிகள் முதன்மை பெறுகிறார்கள்.  மற்றையவர்கள் ஒதுக்கப்படுகிறார்கள்.  

சம்பந்தன் ஐயாவின் முதுமை உடல், உள பலவீனத்தை சுமந்திரன் தமிழ்த்தேசிய அரசியலை விடவும், தனது தனிநபர் அரசியல் சார்ந்து நகர்த்துகிறார். மாவையின் பாராளுமன்றத் தோல்வி சுமந்திரனுக்கு பழம் நழுவி பாலில் விழுந்த கதையாச்சி. சாணக்கியன் சுமந்திரனுக்கு சாடிக்கேற்ற மூடியானார். தமிழரசு தலைவர் மாவை மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தலையை மட்டும் ஆட்டுகிறார். ஜனாவின் ஊடக சந்திப்பு கருத்துக்கள் உண்மையான நிலையை புட்டு, புட்டு வைத்துள்ளன. 

இந்த நிலையில் தான் “ஜெனிவா ஆவணக்குண்டு” வெடித்து பூகம்பமாகியிருக்கிறது. தமிழ்த்தேசிய பாராளுமன்ற அரசியலை நெறிப்படுத்த இரு சுவாமிகள் முன்வந்திருக்கிறார்கள். ஒருவர் திருமலை உயர் வணக்கத்திற்குரிய கலாநிதி நொயல் இமானுவேல், மற்றையவர் தென்கயிலை ஆதீனத்தின் தவத்திரு அகத்தியர் அடிகளார். 

ஆக. இப்போது இவர்களின் கரங்களில் கடிவாளம், மூக்கணாங்கயிறு, சாட்டை……! பட்டியில் கட்டுக்கடங்காதவற்றை வீசுகயிறு கொண்டு வீசி வளையப்போட வேண்டும். போர் அடிப்பவற்றை, கடிப்பவற்றை, ஒன்றுக்கொன்று குத்துபவற்றை மூக்கணாங்கயிறு, கடிவாளம், சாட்டை கொண்டு  மடக்கிப் போடவேண்டும். சுவாமிகளின் இந்த தன்னார்வப்பணி அவ்வளவு இலகுவானதல்ல. இது தமிழர் அரசியல் வரலாறு சொல்லும் கதை. 

“தமிழ்ப்பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றிணைந்த கருத்தை சமூக இணைவுடன்  வெளிப்படுத்தச் செய்யும் பொது முயற்சி” என்று இந்த அரசியலுக்கு பெயர் வைத்திருக்கிறார்கள். இரு சுவாமிகளும் தமிழர் அரசியல் மரபு பிறழாது ஆரம்ப பொறுப்புக்களை ஐந்து இளம் சட்டத்தரணிகளிடம் கொடுத்திருக்கிறார்களாம். மீண்டும் வேதாளம் முருங்கையில். தமிழ்த்தேசிய அரசியல் சட்ட அரசியலாகிறது. இப்போது சட்டத்தரணிகள் வைத்த பதிவுப்பெயர் “தமிழ் மக்களாட்சி குழு” 

ஒரு விடயம் இன்னும் தெளிவில்லை. பெயரில் குறிப்பிடப்பட்டிருப்பது போல் அனைத்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களையும் இந்த முயற்சி உள்வாங்குகிறதா? அல்லது தமிழ்த்தேசிய “மூவேந்தர்கள்” பாராளுமன்ற உறுப்பினர்களையா?அல்லது கூட்டமைப்பு “மூவணிகள்” மட்டுமா? என்பது தெரியவில்லை. 

இந்த முயற்சியின் அரசியல் மறுவாசிப்பு என்ன? தமிழ்த்தேசிய பாராளுமன்ற அரசியல் தலைமைத்துவங்கள் தங்கள் பொறுப்பை சரியாகச் செய்வதில் தோல்வி கண்டுள்ளன. இதனால் அவர்களை சரியான வழியில் நெறிப்படுத்துவதற்கு பாராளுமன்றத்திற்கு வெளியே ஒரு சமாந்தர  உள்ளகப் பொறிமுறை தேவைப்படுகிறது. ஆனால் அந்தப் பொறுப்பு ஏன் வெறுமனே இரு மதத்தலைவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது என்பதுதான் இங்கு எழுகின்ற கேள்வி.  

மறுபக்கத்தில் சம்பந்தர் ஐயா திடீரென ஒரு குழுவை அறிவித்துள்ளார். இது கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு என்று அழைக்கப்படுகிறது. இதில் மாவை, செல்வம், சித்தார்த்தன் இருக்கிறார்கள். இதை சுமந்திரன்- சாணக்கியன் எதிரணி என்றும் கொள்ளலாம். 

இவர்களின் பொறுப்புக்கள் என்ன? சுவாமிகளின் முயற்சியை முளையிலே கிள்ளி, உள்வீட்டுப் பிரச்சினையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்ற செய்தியை சொல்லியிருக்கிறாரா சம்பந்தர்? 

இவை இரண்டிற்கும் இடையில் புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகளின் “தமிழ் விடுதலைப்புலிகள் கட்சி” பேசத் தொடங்கியிருக்கிறது. ஆக, சகல தரப்பும் தமிழ்த்தேசிய பாராளுமன்ற அரசியலின் பலவீனத்தை, பாதை தவறிய போக்கை அடையாளம் கண்டிருக்கிறார்கள். அதை வழிக்கு கொண்டுவர முயற்சிக்கிறார்கள். காலக்கண்ணாடியும் மற்றைய அரங்கம் அரசியல் ஆய்வாளர்களும் எப்போதும் பேசிய விடயங்கள் இவை. 

வடக்கில் சுமந்திரனையும், கிழக்கில் சாணக்கியனையும் முன்னிலைப்படுத்தினால் அரசாங்கத்தின் திட்டங்கள் முன்னிலைப்படுத்தப்படும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. 

அதைத்தான் இவர்களுக்கு ஊடாக சிறிலங்கா அரசு செய்கிறது, அதற்கு இவர்கள் துணைபோகிறார்கள் என்கிறார் தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் இன்பராசா. 

காலம் கடந்த  கூட்டமைப்பு தலைமையின் இந்த முயற்சி முரண்பாட்டு வெடிப்புக்களை ஒட்டுமா…? அல்லது வெடிப்பை ஆழ, அகலமாக்குமா..? 

என்பதுதான் பரபரப்பான சமகால அரசியல் வினா .  

அரசியலில் மதம்? மதம் மக்களுக்கு, அரசுக்கு அல்ல! 

இலங்கையிலும், இந்தியாவிலும் மத்திய கிழக்கிலும், மற்றும் சில மேற்கு நாடுகளிலும் மதம் அரசியலை வழிநடத்துகின்ற இந்தப் போக்கு குறித்து சந்தேகங்களும், விமர்சனங்களும் நிலவுகின்ற இன்றைய சர்வதேச சூழலில் இந்தக் கேள்வியை தட்டிக் கழிக்க முடியாது. மேற்குலக நவீன ஜனநாயக அரசியல் கோட்பாடுகளிலும், நடைமுறையிலும்  அரசியலில் இருந்து மதம் தூரவிலக்கி வைக்கப்படுகிறது. 

தமிழக பாரதீய ஜனதாக் கட்சி தலைவர் ஈழத்தமிழர் பிரச்சினை இனப்பிரச்சினை அல்ல மதப்பிரச்சினை – இந்துக்களின் பிரச்சினை என்று பேசுகிறார். காசி ஆனந்தனின் மீள் வட்டுக்கோட்டை பிரகடனத்தை புலம்பெயர்ந்த தமிழ்த்தேசிய ஆதரவாளர்கள், ஆய்வாளர்கள் மதசார்பற்ற சமதர்ம தமிழ் ஈழத்தை வலியுறுத்தாது சுயநிர்ணய உரிமையை மட்டும் பேசுகின்றது என்றும் மதசார்பு இந்திய மத்திய அரசாங்கத்தை திருப்திப்படுத்தும் முயற்சி என்றும் விமர்சிக்கின்றனர். 

வடக்கில் பாரதீய ஜனதா கடை திறக்கப்பட்டுள்ளது. சிவசேனை, விஷ்வ இந்து பரிஷத் கால் ஊன்றி உள்ளன. மன்னாரில் மீண்டும் மீண்டும் நடக்கும் சம்பவங்களுக்கு மதம் பின்னணியாக கூறப்படுகிறது. கிழக்கிலும் இந்த முறுகல் இருக்கிறது. இப்புதிய முயற்சி தமிழ்த்தேசிய அரசியல் சார்ந்ததாயின் வடக்கு கிழக்கு முஸ்லீம்களின் வகிபாகம் இதில் என்ன.? திருகோணமலையில் இருந்து உருவாகி உள்ள இந்த முயற்சியில் தமிழ் பேசும் இஸ்லாமிய மதத் தலைமையோ, சட்டவாதிகளோ உள்வாங்கப்படாதது ஏன்? என்றும் கேட்கத்தோன்றுகிறது. 

பீ ரூ பீ யாத்திரையில் மதமும், அரசியலும் சற்று முறுகிக்கொண்டதையும் முரண்பட்டதையும் கூட இங்கு நினைவூட்டலாம். 

யார் பேரணியில் முன்னுக்கு போவது என்பதில் ஆரம்பித்த சண்டை துண்டு துண்டாக உடைந்து ஆளுக்கொரு நினைவுக்கல்லில்  முடிந்தது. 

வேலன் சாமியும் மற்றைய சுவாமிகளும் முன் செல்ல அவர்களை முந்தி, முண்டியடித்து தமிழ்த்தேசிய அரசியல்வாதிகள் சென்று போட்டோவுக்கு போஸ்ட் கொடுக்க குழப்பம் ஏற்பட்டது. அதற்குப் பின்னர் வேலன் சாமி கறிவேப்பிலையானார். வடக்கு மாகாண சபை முதலமைச்சர் வேட்பாளருக்கு சாமி தான் பொருத்தமானவர் என்று யாரோ சொல்ல அதற்கும் எதிர்ப்பு வெளிப்பட்டது. இப்போது வேலன் சாமியைக்காணோம். இந்த நிலையில் தான் இன்னும் இருவர் வந்திருக்கிறார்கள். 

இப் பத்தி எழுதப்படும் வரை சிறிதரன் பா.உ. மட்டுமே சுவாமிகளின் இந்த முயற்சியை வாயார வாழ்த்தி இருக்கிறார். சிறிதரனின் வாழ்த்து மடல் இது.  

“தமிழ்த்தேசிய விடுதலைப் பயணத்தை அடுத்த கட்டம் நோக்கி எடுத்துச் செல்வதற்கான முன் முயற்சி. தமிழ்த்தேசிய இனம் ஒரு தலைமையின் கீழ் கட்டுப்படவோ, கூட்டுத்தலைமை ஒன்றின் கீழ் ஒன்றுபடவோ முடியாத கையறு நிலையில்… ஈழத்தின் தலைநகரில் இருந்து இந்த முயற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது”  

சிறிதரன் அவர்களே 2009க்குப் பின் கடந்த 12 ஆண்டுகளாக தமிழ்த்தேசிய விடுதலைப்பயணத்தை கூட்டமைப்பு தொடர்கிறது என்று இதுவரை நீங்கள் சொன்னது பொய்யா? அல்லது தவறா? அப்படியானால் இதுவரை நீங்கள் மக்களுக்கு சொன்ன அரசியல் என்ன? 

ஏன்? தமிழ்த்தேசிய இனத்தை வம்புக்கு இழுக்கிறீர்கள். தமிழ் பெரும்பான்மை எப்போதும் ஒற்றுமைக்கே முன்னுரிமை வழங்குகின்றது. ஒன்றுபட முடியாமல் இருப்பது தமிழ்த்தேசிய இனம் அல்ல நீங்கள் தமிழ்த்தேசிய அரசியல்வாதிகள். கையறு நிலை உங்களுடையதே அன்றி மக்களுடையதல்ல. சுவாமிகளின் முயற்சி  தமிழ் இனத்தை ஒன்றுபடுத்தவல்ல, மாறாக உங்களைப் போன்ற  பாராளுமன்ற அரசியல்வாதிகளை ஒன்றுபடுத்தவே என்பதைப் புரிந்து கொள்வதே உங்களுக்கு கஷ்டமாக உள்ளது. 

இதனால்தான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற அரசியலை புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் க.இன்பராசா கேள்விக்கு உட்படுத்தியுள்ளார். தமிழ் மக்களுக்கு எண்ணற்ற பிரச்சினைகள் இருக்கும்போது சாணக்கியன் சகோதர இனப்பிரச்சினைகளுக்கு முக்கியம் கொடுப்பது ஏன்? என்று கேட்கிறார் அவர். தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட சாணக்கியன் தனது நேரத்தை பாராளுமன்றத்தில் தமிழர் பிரச்சினையை பேசுவதற்கு பயன்படுத்த வேண்டும் என்பது அவர் ஆதங்கமாக உள்ளது. 

அண்மையில் காணொளி ஒன்றில் பேட்டியளித்த அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த ஜனாப் இப்ராகிம் என்பவர் சாணக்கியன் “முஸ்லீம்களை உசுப்பேத்தி படையினருடனும், சிங்களவர்களுடனும் மோதவிட முயற்சிக்கிறார்” என்று குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த காலங்களில் தங்களுக்கு ஏற்பட்ட அவமானங்கள், இழப்புக்கள், பாதிப்புக்களை பட்டியல்படுத்தி அறிவார்ந்த அரசியலை வேண்டுகிறார் இப்ராகிம். சாணக்கியன் தனது அரசியல் இலாபத்திற்காக முஸ்லீம்களை பயன்படுத்துகிறார் என்பது அவர் வாதமாக இருக்கிறது. 

இவை எல்லாவற்றிற்கும் காரணம் தமிழ்த்தேசிய பாராளுமன்ற அரசியல் வங்குரோத்து அன்றி வேறொன்றுமில்லை. சுமந்திரனின், சாணக்கியனின் பாராளுமன்ற உரைகளை தொடரும் ஒருவருக்கு இவர்கள் இருவரும் தமிழ்த்தேசிய விவகாரங்களைவிடவும், சிங்களதேச விவகாரங்களையே அதிகம் பேசியிருப்பது தெளிவாகும். ஆனால் எதிர்க்கட்சி சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்கள் சிங்கள மக்களின் பிரச்சினைகளையே பேசுகிறார்கள். அப்படி அவர்கள் சில சந்தர்ப்பங்களில் பேசியிருந்தால் இப்ராகிம் சொன்னது போன்று சாணக்கியனின் அரசியல் இலாபமே அவர்களின் குறிக்கோளாகவும் உள்ளது. 

அண்மையில் இலங்கை வந்திருந்த ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவுடன் பேசிய  எதிர்க்கட்சித்தலைவர் சஜித் என்ன பேசினார்? 

மனித உரிமைகள் விடயத்தில் அழுத்தம் கொடுங்கள் என்று கேட்டுக்கொண்டார். பயங்கரவாதச்சட்டம் நீக்கப்படவேண்டும் என்று கோரவில்லை. ஏன்? ஜிபிஎஸ் வரிச்சலுகையை நிறுத்திவிடவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். ஆக சஜித் சிந்திப்பது சிங்கள தேசத்தின் பாதுகாப்பு. தமிழ்த்தேசிய  பாராளுமன்ற அரசியல் தன்னையும் குழப்பி, மக்களையும் குழப்பி, குழம்பிய குட்டையில் வலை வீசப்பார்க்கிறது . 

தாங்கள்தான் சிங்கள தேசத்தின் பாராளுமன்ற எதிர்க்கட்சிப் பொறுப்பை குத்தகைக்கு எடுத்திருப்பது போன்று சாணக்கியமற்று செயற்படுகிறார்கள். 

இந்த குழம்பிய நிலையில் க.இன்பராசாவின் ஆதங்கமும், மதத்தலைவர்களின் முயற்சிகளும் அரசியலில் எந்தளவுக்கு அங்கீகரிக்கப்படும் என்பது சந்தேகமே. ஏனெனில் கடந்த காலங்களில் பல சந்தர்ப்பங்களில் யாழ், மன்னார், கிழக்கு ஆயர்கள் பல முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார்கள். அவற்றிற்கு எல்லாம் செவி சாய்க்கப்படவில்லை. தேர்தல் காலத்தில் முன்னாள் போராளிகளின் கோரிக்கைகள் கிடப்பில் போடப்பட்டன. 

ஆயுதப்போராட்டமோ, பாராளுமன்ற அரசியலோ தமது நிலைப்பாடுகளில் விட்டுக்கொடுக்க தயாராய் இருக்கவில்லை. இதனால் இன்றைய நகர்வுகளும் பத்தோடு பதினொன்றுதானா? இல்லையேல் சம்பந்தர்  அவசர, அவசரமாக இன்னொரு குழுவை அமைக்க வேண்டிய தேவை என்ன? கட்சி நலன்களுக்கு அப்பால் சுயாதீனமான ஒரு பொது முயற்சியை விரும்பவில்லை என்று தானே அர்த்தம்.?  

ஆனால் ஒன்று மட்டும் தெளிவாகிறது தமிழ்த்தேசிய பாராளுமன்ற அரசியலின் போர்வையை அகற்ற மக்களும், சமூக அமைப்புக்களும், முன்னாள் போராளிகளும்  மெல்ல மெல்ல களத்தில் குதிக்க ஆரம்பித்து விட்டார்கள். 

புலத்திலும் நிலத்திலும் வீட்டுக்கு வீடு வாசற்படி …! 

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சா தமிழ் டயஸ் போராவுக்கு விடுத்த அழைப்பை ஒரு டயஸ்போரா அமைப்பான உலகத்தமிழர் பேரவை (GTF) வரவேற்றிருக்கிறது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (TGTE) பல நிபந்தனைகளை கோத்தபாய அரசுக்கு  பட்டியல் இட்டிருக்கிறது. 

நிலத்தில் தமிழ்த்தேசிய அரசியலில் காணப்படும் பலவீனமான நிலைமையே புலத்திலும் காணப்படுகிறது. ஒற்றுமை இன்மையும், அதிகாரப்போட்டியும், பணமோசடியும் இதற்கு  காரணங்கள் என GTF இல் இருந்து வெளியேறிய அமைப்புக்கள் கூறுகின்றன. 

ஐக்கிய அமெரிக்காவின் தமிழ் நடவடிக்கை குழு (USTAG /USTPAC)இன் கருத்துப்படி, GTF  உலகத்தமிழர் டயஸ்போராவின் குடை அமைப்பல்ல. முழு தமிழ் டயஸ் போராவையும் பிரதிநிதித்துவப்படுத்தவுமில்லை. GTF ஐந்து கண்டங்களையும் உள்ளடக்கிய 14 தமிழ் டயஸ்போராக்களை உள்ளடக்கி செப்டம்பர் 2009 இல் பிரானஸ்- பரீஸ் மாநாட்டில் அமைக்கப்பட்டது. இன்று கனடா தமிழ் காங்கிரஸ் மட்டுமே அதில் இருக்கின்ற நிலையில் மற்றைய 13 அமைப்புக்களும் முரண்பாடுகள் காரணமாக வெளியேறிவிட்டன. 

ஐரோப்பிய பத்து டயஸ்போரா அமைப்புக்கள் 2012 காலகட்டத்திலும், 2014 இல் பிரித்தானிய தமிழர் பேரவையும், 2020 இல் அவுஸ்ரேலிய தமிழர் காங்கிரஸும், ஐக்கிய அமெரிக்கா நடவடிக்கை குழுவும் வெளியேறிவிட்டதாக தெரியவருகிறது. இதனால் GTF வின் கதை கழுதைதேய்ந்து கட்டெறும்பான கதை. இன்று வெறும் கடிதத்தலைப்பில் அதே பெயரில் இயங்கும் அமைப்பாகவே அது உள்ளது. 

ஆக, கனடா தமிழ் காங்கிரஸ் என்ற அமைப்பே இன்றைய உலகத்தமிழர் பேரவையாகும். ஆனால் உதிரியாக மற்றைய நாடுகளில் இருந்து சிலர் அங்கத்துவம் பெற்றிருக்க வாய்ப்புண்டு. 

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (TGTE) 2010 மே 17 இல் இருந்து இயங்குகிறது. 115 தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களையும், 20  தேர்தல் இன்றி சேர்க்கப்பட்ட பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய 135 உறுப்பினர்களை கொண்ட அரசாங்கம்.  இங்கு கவனிக்க வேண்டிய விடயம் இது ஒரு “அரசு” அல்ல அரசாங்கம். ஆளுந்தரப்பு மட்டுமே உள்ளது எதிர்க்கட்சி இல்லை. இந்த ஜனநாயக மறுப்பை புகலிட இளையதலைமுறை அரசாங்கம் அமைக்கப்பட்ட முதல்நாள் தொடக்கம் கேள்விக்கு  உட்படுத்தியும் ருத்திரகுமாரன் அன் கோ அதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறார்கள். 

பிரதமர் ருத்திரகுமாரனுக்கு நிறைவேற்று அதிகாரம் உண்டு. மூன்று துணைப்பிரதமர்கள் மற்றும் அனைத்து அமைச்சர்களையும் அவரே தனியொருவராக நியமிக்கிறார். அரசியலமைப்பு முறையாக அங்கீகரிக்கப்படவில்லை. மூன்றில் ஒரு பெரும்பான்மையுடன் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. இதனால் ஆரம்பம் முதல் நாடுகடந்த அரசாங்கம் வெறும் கடிதத்தலைப்பில் சிறுபான்மையுடன் இயங்குகிறது. 51 உறுப்பினர்களை கொண்ட ஐரோப்பிய குழு வெளியில் நிற்கிறார்கள். 

இந்த நிலையில் இளம் தலைமுறையைச் சேர்ந்த உறுப்பினர்கள் TGTE க்கு சமாந்தரமாக இன்னொரு அமைப்பை உருவாக்கி சீர்திருத்தங்களை கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக வேண்டி நிற்கின்றனர். இந்த அமைப்பின் பெயர் TGTE -DEMOCRATAS . (நாடு கடந்த தமிழீழ ஜனநாயக அணி) நிலத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு தமிழ் மக்களாட்சி குழு போன்று, புலத்தில் ஜனநாயக அணி.  

இந்த இரு அணிகளும் உள்ளும் வெளியும் கடிவாளத்தையும், மூக்கணாங்கயிறையும், சாட்டையையும் எந்தளவுக்கு பயன்படுத்த முடியும் என்பதே விடையற்ற வினாவாகும். மேலாதிக்க அரசியல் அதிகாரத்தை கடந்து இந்த மாற்று அல்லது மாற்றத்திற்கான அணிகளால் காய்களை நகர்த்தமுடியுமா? புலம் ஒரு தசாப்தத்திற்கு முன்னர் கையில் எடுத்ததை நிலம் இப்போது எடுத்திருக்கிறது. 

உண்மையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தல் முடிந்த கையுடன் தமிழ் டயஸ்போரா நான்காக பிரிந்து விட்டது. TGTE (ருத்திரகுமாரன் அணி), TCC (நெடியவன் அணி), HQ (வினாநயகம் அணி), GTF (அருட்தந்தை இமானுவேல் அணி). இங்குள்ள பிரச்சினை பல அணிகள் இருப்பதல்ல மாறாக இவர்கள் ஓரணியில் தமிழ்த்தேசிய அரசியலை கையாள முடியாமல் இருப்பதாகும். இது நிலத்திற்கும், புலத்திற்குமான தமிழ்த்தேசிய அரசியலின் ஒரு பொதுப் போக்காகும். 

சிறிலங்காவில் இருந்து பிரிந்து தனித்தமிழ் ஈழம் அமைக்கப் புறப்பட்டு ஈழத்தமிழினம் உள்ளும், வெளியும் தங்களைத்தானே கூறுபோட்டு நிற்கிறது. எங்களுக்குள்  சிறிலங்கா அரசியலின் பண்புகளை சுமந்து கொண்டு சிங்கள அரசு ஜனநாயக மற்றது, சர்வதிகாரம் கொண்டது, அதிகாரப்போட்டியும், அடக்குமுறையும் கொண்டது என்று கொடி பிடிப்பது அரசியலில் எந்த வகை? 

தமிழ்த்தேசிய அரசியலில் ஒற்றுமைக்கு தடையாய் இருப்பவையும் இவை அன்றி வேறென்ன …..?