ஞானசார தேரரை  எதிர்கொள்வது எப்படி?

ஞானசார தேரரை எதிர்கொள்வது எப்படி?

—- எம் எல் எம் மன்சூர் —-

ஞானசார தேரர் சமகால இலங்கை அரசியல் சமூகத்தின் (Polity) ராட்சதக் குழந்தையாக (Enfant Terrible) கருதப்படுபவர். பொதுவாக அவர் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர், அவர் மீது யாரும் கைவைக்க முடியாது என்பது போன்ற எழுதாத ஒரு சில விதிகள் சில வருட காலமாக மக்கள் மனங்களில்  வேரூன்றியிருக்கின்றன. 2018ஆம் ஆண்டு மார்ச் முதல் வாரத்தில் அவர் திகனைக்குச் சென்று, முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்களை நேரடியாக தூண்டிய சந்தர்ப்பத்தில் (அதனை நிரூபிப்பதற்கு போதிய ஆதாரங்களும், சாட்சியங்களும் இருந்து வந்த போதிலும் கூட) நல்லாட்சி அரசாங்கம் அவர் மீது கை வைக்கத் தயங்கியது.

ஏதேதோ பிரச்சினைகள் தொடர்பாக அரசாங்கத்திற்கு எதிராக தினமும் குறைந்தது இரண்டு அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கும் எதிர்க்கட்சித் தலைவராலேயே ஞானசார தேரரின் பெயரைக் குறிப்பிட்டு, அவருடைய மத நிந்தனை கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவிக்க முடியாத நிலை. பாராளுமன்றத்தில் இது தொடர்பாக அமைச்சர் சரத் வீரசேகரவிடம் முஜிபுர் ரஹ்மான் எழுப்பிய கேள்வியையாவது குறைந்தது சஜித் பிரேமதாச கேட்டிருக்கலாம். அப்போது அதற்கு ஒரு புதிய பரிமாணம் கிடைத்திருக்கும். ஆனால், அவ்விதம் ஒரு கேள்வி கேட்பதற்கான துணிச்சல் கூட சஜித் பிரேமதாசவுக்கு இல்லை என்பது இன்றைய இலங்கை அரசியலின் பெரும்  துரதிர்ஷ்டம். 

நிலைமை இனிமேலும் அப்படித் தான் இருக்கும். முஸ்லிம்கள் தொடர்பான பிரச்சினைகளில் தலையிடுவதற்கு மற்றவர்களிலும் பார்க்க சஜித்துக்கு ஒரு தார்மீக கடமையிருக்கிறது. 2019ஆம் ஆண்டிலும், 2020ஆம் ஆண்டிலும் இடம்பெற்ற இரு தேசிய தேர்தல்களிலும் கிட்டத்தட்ட 85% முஸ்லிம் வாக்காளர்கள் அவருக்கும், அவருடைய கட்சிக்கும் வாக்களித்திருந்தார்கள். (அதே காரியத்தை மீண்டும் மீண்டும் செய்வதற்கு 2024 மற்றும் 2025 தேர்தல்கள் வரும் வரையில் அவர்கள் பொறுமையின்றி காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் பகிரங்க இரகசியம்).

மற்றொரு விடயத்தையும் இங்கு முக்கியமாக குறிப்பிட வேண்டும். ஞானசார தேரரின் கருத்துக்களுக்கு எதிரிவினையாற்றிய பல தரப்புக்கள் அவர் முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக அரசாங்கம் உடனடியாக விசாரணைகளை நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்களே தவிர, முஸ்லிம்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் விதத்தில் அவர் தெரிவித்திருக்கும் கருத்துக்களை எவருமே கண்டிக்கவில்லை. கத்தோலிக்க திருச்சபைகள் சார்பில் இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அருட் தந்தை சிரில் காமினி பெர்ணான்டோ அந்த மத நிந்தனை அம்சத்தை தொடவேயில்லை. ஒரு சிறுபான்மைச் சமூகத்தின் மத உணர்வுகள் புண்படுத்தப்பட்டமை தொடர்பாக பௌத்த மத பீடங்கள் எப்படிப் போனாலும், ஏனைய கிறிஸ்தவ, இந்து மத பீடங்களிலிருந்தும் எதிர்ப்போ, கண்டனங்களோ தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை. இடதுசாரி தரப்புக்களும் கூட அதே போன்ற ஒரு நிலைப்பாட்டிலேயே இருந்து வருவது போல் தெரிகின்றது.

ஏதோ ஒரு காரணம் அவர்களை அவ்வாறு செய்வதிலிருந்து தடுத்து நிறுத்துகின்றது. அந்தக் காரணம் என்ன என்பதனை துல்லியமாக தெரிந்து வைத்திருப்பது ஞானசார தேரர் போன்றவர்களை எதிர்கொள்வதற்கு முஸ்லிம்களுக்கு உதவ முடியும். 

‘முஸ்லிம்கள் ஒரு மூடுண்ட சமூகமாக, மாற்றங்களை விரும்பாத சமூகமாக இருந்து வருகின்றார்கள்’ என்ற கருத்து ஏனைய சமூகங்களின் பொதுப்புத்தியில் ஆழமாக வேரூன்றியிருக்கின்றது. அந்தப் மனப்பதிவை  நீண்ட விரிவுரைகள் மூலம் போக்கிவிட முடியாது. அனைத்துமடங்கிய ஒரு சீர்திருத்தச் செயன்முறைக்கு செயல் வடிவம் கொடுப்பதன்  மூலமே மட்டுமே அதனைச் செய்ய முடியும். 

பொதுவாக முன் முடிவுகளுடனும், காழ்ப்புணர்ச்சியுடனும் செயற்பட்டு வரும் ஞானசார தேரர் போன்றவர்கள் ஒரு போதும் எதிர்தரப்பு நியாயங்களை பார்க்கவோ, கேட்கவோ விரும்ப மாட்டார்கள். அப்படியான நபர்களுடன் விவாதம் ஒரு புறமிருக்க, நட்பு ரீதியான ஓர் உரையாடலை நடத்துவது கூட சாத்தியமில்லை. 

ஆனால், அவரையும், அவருடைய சக பயணிகளாக இருந்து வரும் ஒரு சில தீவிரவாத பிக்குகளையும் நாங்கள் உதாசீனம் செய்ய முடியாது. ஏனென்றால், இந்தத் தசாப்தம் நெடுகிலும் இலங்கை அரசியலிலும், இனங்களுக்கும், மதங்களுக்குமிடையிலான உறவுகளை நிர்ணயிக்கும் விடயத்திலும் அவர்கள் மிக முக்கியமான ஒரு பாத்திரத்தை வகித்து வருவார்கள். யார் ஆட்சிக்கு வந்தாலும் அதே நிலைமை தான் நிலவி வரும்.

இலங்கையில் சிங்கள மக்களுக்கு மத்தியில் பகிரங்கமாக முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு பிரச்சார இயக்கத்தை முதலாவதாக ஆரம்பித்து வைத்தவர், ஞானசார தேரர் தனது குருவாகவும், வழிகாட்டியாகவும் மதிக்கும் கங்கொடவில சோம தேரர் (1948 – 2003). அவர் 1990களின் இறுதிப் பகுதியில் முஸ்லிம்கள் தொடர்பாக தெரிவித்து வந்த எதிர்மறைக் கருத்துக்களை கேட்பதற்கென அந்தத் தலைமுறையைச் சேர்ந்த பல்லாயிரக் கணக்கான இளைஞர்கள் ஒரு வித பரவச உணர்வுடன் அவரது கூட்டங்களில் பங்கேற்றார்கள். 

அச்சந்தர்ப்பத்தில் அவர் அமைச்சர் அஷ்ரப் தொடர்பாக தொடர்ந்து முன்வைத்து வந்த சில குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க வேண்டுமென அஷ்ரப்  விரும்பினார். அதற்கிணங்க, (முழு இலங்கையும் ஆவலுடனும், பதற்றத்துடனும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த) அந்த உரையாடல் நிகழ்ச்சி 2000ஆவது ஆண்டில் TNL  தொலைக்காட்சியில்  ஒளிபரப்பாகியது. ஆனால், அன்று சோம தேரர் இஸ்லாமியர்களுக்கு எதிராக முன்வைத்த குற்றச்சாட்டுகள், இன்று முன்வைக்கப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்கள் அளவுக்கு பாரதூரமானவையாக இருக்கவில்லை. அமைச்சர் அஷ்ரப் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, முஸ்லிம்களுக்கு நியாயமற்ற விதத்தில் சலுகைகளை வழங்கி வருகின்றார் என்ற விதத்திலேயே பெரும்பாலான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் TNL தொலைக்காட்சியில் ஒரு மணித்தியாலயத்திற்கு மேல் இடம்பெற்ற அந்த நிகழ்ச்சி, இரண்டு சமயங்களுக்கிடையிலான ஓர் உரையாடலுக்கான முன்மாதிரியாக இருந்தது என்று கூற வேண்டும். சோம தேரர் முஸ்லிம்கள் தொடர்பாக ஆதாரமற்ற கருத்துக்களை பரப்பி வந்த போதிலும், அந்த உரையாடல் நிகழ்ச்சியில் ஒரு துறவிக்கே உரிய பக்குவத்துடனும், நிதானத்துடனும், பொறுமையுடனும் அமைச்சர் அஷ்ரப்பை எதிர்கொண்டார். வார்த்தைகளையும் மிகவும் கண்ணியமான விதத்தில் பயன்படுத்தினார். (ஆனால், அவருடைய சீடரிடம் அத்தகைய பண்புகளை துளியும் எதிர்பார்க்க முடியாது).

அமைச்சர் அஷ்ரப்பும் அதே விதத்தில் எந்தவொரு கட்டத்திலும் ஆத்திரப்படாமல், பொறுமை இழக்காமல், நிதானமாக தனது தரப்பை முன்வைத்தார். அஷ்ரப்பின் வாதம் எந்த அளவுக்கு வலுவானதாக இருந்து வந்தது என்றால், அந்த நிகழ்ச்சியை நெறிப்படுத்திய சமுத்தித சமரவிக்ரம ஒரு கட்டத்தில் தான் அந்த நிகழ்ச்சியின் ‘Anchor’ என்பதனையும் மறந்து, தன்னை அறியாமலேயே அஷ்ரப்புக்கு எதிர் தரப்பில் நின்று ஆவேசமாக கருத்துக்களை முன்வைக்கத் தொடங்கினார்.  

எவரும் எதிர்பாராத விதத்தில் மிகவும் சுமுகமாக அந்த நிகழ்ச்சி நிறைவடைந்ததுடன், அதுவரையில்  அஷ்ரபை வில்லனாக சித்திரித்து வந்த சிங்கள ஊடகங்களின் அணுகுமுறையில் அதன் பின்னர் ஓரளவுக்கு மாற்றங்கள் ஏற்பட்டன.

இந்தியாவில் RSS இயக்கம் இஸ்லாமியர்களுக்கு எதிரான கடும் காழ்ப்புணர்ச்சியுடன் கூடிய பிரச்சாரங்களை முன்னெடுத்த பொழுது, 1980களில் சோ ராமசாமி தனது ‘துக்ளக்’ இதழில் இதே மாதிரியான ஓர் உரையாடலுக்கு வாய்ப்பளித்தார். ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் தென் மண்டலப் பொறுப்பாளர் சூரியநாராயணன் என்பவருக்கும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்களில் ஒருவரும், பத்திரிகையாளருமான அ.க.அப்துல் ஸமதுக்குமிடையில் ஒரு நீண்ட உரையாடல் இடம்பெற்றதுடன், ‘துக்ளக்’ பத்திரிகை மூன்று இதழ்களில் தொடர்ச்சியாக அதனை பிரசுரித்தது.

ஆனால், இலங்கையின் இன்றைய சூழ்நிலையில் அத்தகைய பகிரங்க உரையாடல்களுக்கோ, விவாதங்களுக்கோ அறவே சாத்தியமில்லை. ஞானசார தேரர் போன்றவர்களின் மனப்பாங்கு அப்படியான ஒரு நட்பு ரீதியான கருத்துப் பரிமாற்றத்திற்கு பொருந்தக் கூடியதாகவும் இருந்து வரவில்லை. ‘ஹிரு’ ரிவி யில் கிட்டத்தட்ட இரண்டு மணித்தியாலங்கள் நீடித்த அவருடைய சர்ச்சைக்குரிய நேர்காணலின் போது, திட்டவட்டமான கேள்விகளுக்கு (Pointed Questions) பதிலளிக்காமல் அவர் நழுவிச் சென்றதையும், பல கேள்விகளுக்கு மழுப்பலாக பதிலளித்ததனையும் தெளிவாக பார்க்க முடிந்தது. 

ஈஸ்டர் தாக்குதல்களின் சூத்திரதாரி யார் என்ற விடயத்தை அம்பலப்படுத்த வேண்டும் என கிறிஸ்தவ / கத்தோலிக்க தரப்புக்களிலிருந்தும், அதே போல எதிர்க்கட்சித் தரப்பிலிருந்தும் முன்வைக்கப்பட்டுவரும் கடும் அழுத்தங்கள் ஒரு புறம். முன்னெப்போதும் இல்லாத விதத்திலான பொருளாதார, சமூக நெருக்கடி மறுபுறம். தேசாபிமானிகள் எதிர்பார்த்த விதத்தில் பொருளாதாரமொன்றை கட்டியெழுப்ப முடியாத உள், வெளி நிர்ப்பந்தங்கள்; துரித வேகத்தில் நிகழ்ந்து வரும் அரச சொத்துக்களின் விற்பனை. இந்தியா, சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளுடன் எமது நாட்டிற்கு பாதகம் விளைவிக்கக் கூடிய சரத்துக்களுடன் ஒப்பந்தங்களை செய்து கொள்ள வேண்டிய பலவீனம். 

ராஜபக்ச அரசாங்கத்தின் தூய சிங்கள – பௌத்த பிம்பம் நாளுக்கு நாள் கொஞ்சம் கொஞ்சமாக தகர்க்கப்பட்டு வரும் ஒரு சூழ்நிலையில், அதனை பாதுகாத்துக் கொள்வதற்கென திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்ட ஒரு சேதக் கட்டுப்பாட்டு செயற்பாடாகவே (Damage Control Exercise) இதனை பார்க்க வேண்டியிருக்கின்றது. 

அதாவது, ஆளும் தரப்பும், அதன் முதன்மை சிங்கள பௌத்த சித்தாந்தத்தை வடிமைப்பவர்களும் ‘நீங்கள் சில்லறைப் பிரச்சினைகளை வைத்து ஒருவருடன்  சண்டை பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள். அதனை தக்க தருணமாக பயன்படுத்தி, இஸ்லாமிய தீவிரவாதிகள் நம் இனத்தையே அழிக்கப் போகிறார்கள்’ என்ற செய்தியை ஞானசார தேரருக்கு ஊடாக சிங்கள மக்களுக்கு விடுக்க முயல்கிறார்கள்.

ஞானசார தேரரை உள்ளிட்ட ஒரு பிரிவினர் இலங்கையின் அனைத்து சமூக, பொருளாதார பிரச்சினைகளிலும் ஒரு தீவிர வலதுசாரி நிலைப்பாட்டை எடுப்பவர்கள். கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக விவகாரத்தின் போது நிகழ்ந்த ஆர்ப்பாட்டங்களையடுத்து அவர் ஊடகங்களில் தோன்றி, கல்வியை தனியார்மயப்படுத்துவதற்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்திருந்தார். 

இலங்கை தொழிற்சங்கங்கள், சிவில் சமூக மற்றும் மனித உரிமை அமைப்புக்கள், ஜேவிபி/ முன்னிலை சோசலிக் கட்சி மற்றும் ‘அந்தரே’ என்று அழைக்கப்படும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்  போன்ற தரப்புக்களை ‘சிங்கள இனத்தை பிளவுபடுத்தி, பலவீனப்படுத்தும்’ சக்திகளாகவே அவர்கள் பார்க்கின்றார்கள். இன்று நாட்டை அலைக்கழித்து வரும் சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளை இவர்கள் துளியும்  கண்டு கொள்ளாமல் இருப்பதனை அந்தக் கண்ணோட்டத்தின் ஒரு நீட்சியாகவே பார்க்க முடிகிறது. 

ஞானசார தேரர் அம்பலப்படுத்திய அதிர்ச்சியூட்டும் தகவல் அவர் எதிர்பார்த்த அளவுக்கு சிங்கள மக்களுக்கு மத்தியில் உடனடியாக பீதியையோ, பதற்றத்தையோ தூண்டவில்லை. இது அவருக்கும் அவருடைய ‘Handlers’ களுக்கும் ஏற்பட்ட ஒரு பெரிய பின்னடைவு. அநேகமாக, முதல் தடவையாக சிங்கள பௌத்த மக்கள் அவருடைய உள்நோக்கங்கள் குறித்து சந்தேகப்படத் தொடங்கியிருக்கிறார்கள் என்பதற்கான அறிகுறி.

மறுபுறுத்தில், (அடுத்து வரும் காலப் பிரிவில் இஸ்லாமிய தீவிரவாதிகளின் மேல் பழியை போடக் கூடிய ஏதேனும் அசம்பாவிதங்கள் நிகழ்ந்தாலேயொழிய) எதிர்காலத் தேர்தல்களில் இஸ்லாமோபோபியாவை மட்டும் வைத்து சிங்கள மக்களின் வாக்குகளை அள்ளிக் கொள்ள முடியாது போகலாம். ஆனால், அவர்கள் சும்மா இருக்கப் போவதில்லை. புதிய புதிய புரளிகளை கிளப்பிக் கொண்டேயிருப்பார்கள்.

இறுதியாக, முஸ்லிம்கள் இன்று எதிர்கொண்டு வரும் நெருக்கடிக்கு இஸ்லாமோபோபியா, இனவாதம், மதவாதம், அந்நியச் சக்திகளின் சூழ்ச்சி என்று எத்தனையோ காரணங்களை அடுக்கிக்கொண்டு போகலாம். ஆனால், அதே வேளையில், அதன் தீவிரத் தன்மையை தணிக்கும் விடயத்தில் முஸ்லிம் சமூகம் கொண்டிருக்கும் பொறுப்புக்களை எந்தக் காரணம் கொண்டும் தட்டிக்கழிக்க முடியாது. 

எதிர்பாராத ஒரு சிறு சம்பவம் சில நொடிகளில் அனைத்தையும் தலைகீழாக மாற்றி விட முடியும். அதாவது, எந்தவொரு இயக்கத்தையும் சாராத ஒரு தீவிர மனநோயாளி (Lone Wolf) (அண்மையில் நியூசிலாந்தில் இடம்பெற்றதைப் போன்ற ஒரு) திடீர் வெறியாட்டத்தில் ஏதேனும் ஒரு செயலைச் செய்தால், அது ஒரு சில நிமிடங்களில் ஒட்டுமொத்த சமூகத்தின் மீதும் எத்தகைய பின்விளைவுகளை எடுத்து வர முடியும் என்பதனை சொல்ல வேண்டியதில்லை. அந்த நிச்சயமற்ற நிலை தான் இன்று முஸ்லிம்கள் எதிர்கொண்டிருக்கும் மிகப் பெரிய  அச்சுறுத்தல். 

இந்தப்  பின்புலத்தில், ஞானசார தேரர் உள்ளிட்ட தரப்பு முஸ்லிம் சமூகத்தின் மீது பிரயோகித்து வரும்  அழுத்தங்களை  இரு வழிகளில் எதிர்கொள்ள முடியும். ஏனைய மதத்தவர்களுடன் கூட்டாக இணைந்து முன்னெடுக்க வேண்டிய தேசிய ரீதியான செயற்பாடுகளும், இஸ்லாமிய சமூகத்திற்குள்ளே மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகளும் இதில் அடங்குகின்றன.

– மிதவாத சிந்தனையையும், நிதான புத்தியுடன் செயற்படக் கூடிய ஆற்றலையும் கொண்டிருக்கும் முஸ்லிம் புத்திஜீவிகளின் / தொழில்வாண்மையாளர்களின் ஒரு கூட்டு (Collective) உடடினயாக உருவாக்கப்பட வேண்டும். (அதன் உறுப்பினர்கள் இயக்க சார்பில்லாதவர்களாக இருந்து வருவது முக்கியம்).

– அந்த அமைப்புக்கு ஊடாக குறிப்பாக பௌத்த பீடங்களுடனும், ஏனைய மதத் தலைமைகளுடனும், அதே போல அரச தரப்புடனும் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்தி, தொடர்ச்சியான விதத்தில் உரையாடல்களை முன்னெடுத்தல். 

– நீண்ட காலமாக தாமதமடைந்திருக்கும் (MMDA போன்ற) சட்ட சீர்திருத்தங்களை எடுத்து வருவது தொடர்பாக உடடியாக ஒரு கருத்தொற்றுமை எட்டப்பட வேண்டும். (அந்தக் கருத்தொற்றுமையை எட்டுவதில் இதுவரையில் தடையாக இருந்து வந்த நபர்கள் யார் என்ற விடயத்தையும் அம்பலப்படுத்த வேண்டும்). 

– முஸ்லிம் சமய கலாசார விவகாரங்களுக்கு பொறுப்பான அரசாங்கத் திணைக்களம் அதற்கிருக்கும் பணிப்பாணையை (Mandate) முழுமையாக பயன்படுத்தி, பள்ளிவாசல்களை / மதரசாக்களை ஒழுங்குமுறைப்படுத்தும் (Regulatory Body) அதன் பொறுப்பை நிறைவேற்றி வைப்பதுடன், அது தொடர்பாக அந்த Collective இடமிருந்து ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளல். 

– அடுத்த முக்கியமான விடயம் பள்ளிவாசல் நம்பிக்கை பொறுப்பாளர் சபைகளை நியமனம் செய்வது தொடர்பாக கண்டிப்பான அளவுகோல்கள் (Criteria) பின்பற்றப்பட வேண்டிய தேவை. ஒரு நம்பிக்கை பொறுப்பாளர் சபையில் இருக்கும் உறுப்பினர்களில் குறைந்தது 75 சதவீதத்தினர் (முஸ்லிம் சிவில் சமூக கூட்டமைப்பினால் நிர்ணயிக்கப்படும்) தகைமைகளின் அடிப்படையில் அவற்றுக்கு நியமனம் செய்யப்பட வேண்டும் என்ற ஒரு விதி உடனடியாக உருவாக்கப்படுதல் வேண்டும்.