முறைகேடுகளின் மையமா கிளிநொச்சி?

முறைகேடுகளின் மையமா கிளிநொச்சி?

— கருணாகரன் — 

முறைகேடுகளின் மைய மாவட்டமாக கிளிநொச்சி மாறிவிட்டது. “அப்படியென்றால் அங்கே நிர்வாகம் ஸ்தம்பித்து விட்டதா?” என்ற கேள்வி உடனடியாக உங்களுக்கு எழலாம். ஆனால் இது உண்மையே. 

“அப்படியென்றால் அங்கே என்ன நடக்கிறது? பொறுப்பானவர்கள் அல்லது பொறுப்பான தரப்புகள் என்ன செய்கின்றன என்ற அடுக்கடுக்கான கேள்விகள் உங்களுக்கு வரும். 

என்ன செய்வது? இதே கேள்விகள் சனங்களுக்கும் உண்டு. பதிலில்லாத கேள்விகள். அல்லது பதிலளிக்கக் கடினமான கேள்விகள். 

இவற்றுக்கான பதில்களை எவரிடமும் கேட்டறிய முடியாது. பொறுப்பான தரப்புகள் ஒரு போதுமே பதிலளிக்கப்போவதில்லை. அப்படி அவர்கள் பதிலளிப்பதாக இருந்தால் அது முறைகேடுகளைக் கட்டுப்படுத்தி நிலைமையைச் சீராக்கம் செய்வதாகவே இருக்க வேண்டும். அதாவது பொருத்தமான நடவடிக்கைகளை எடுப்பதாக இருக்க வேண்டும். அதுவே சிறந்த பதில். 

மாறாக சப்பையான நியாயங்களை எங்கேனும் சொல்லிச் சமாளிக்க முற்படுவதோ – தப்பித்துக் கொள்ள முயற்சிப்பதோ அல்ல. ஆனால் அப்படி சப்பை நியாயங்களைச் சொல்ல முயற்சிப்பதும் உண்மை நிலவரம் மக்களுக்குத் தெரியக் கூடாது என்று தமது அதிகாரத்தைப் பயன்படுத்தித் தடுப்பதிலுமே சில தரப்புகள் கடுமையாக முயற்சிக்கின்றன. 

முதலில் சிவில் மற்றும் சட்டத்துறைகளில் காணப்படும் முறைகேடுகள் என்ன என்று பார்க்கலாம்.   

1. அரச காணிகள் சட்டவிரோதமாக புதிது புதிதாக அபகரிக்கப்படுகின்றன. கூடவே காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் (Land Reform Commision) பொறுப்பில் உள்ள காணிகள் இரகசியமாக செல்வாக்கான தரப்பினர்களுக்கு கைமாற்றப்படுகின்றன. இது தொடர்ச்சியாகவே நடந்து கொண்டிருக்கிறது.  

2. சட்டவிரோதமாக மணல் மற்றும் கிறவல் தொடர்ந்தும் அகழப்படுகிறது. இப்பொழுது இது ஓரளவுக்குப் பகிரங்கமாக– துணிகரமாக நடக்கிறது. 

3. ஒப்பந்த வேலைகள் மற்றும் வழங்கல்களில் தொடரும் முறைகேடுகள். (பிரதேச சபைகளின் நிதி ஒதுக்கீடு, மாகாணசபை மற்றும் மத்திய அரசின் நிதி ஒதுக்கீடுகளில் மேற்கொள்ளப்படும் பல வேலைத்திட்டங்களில் சீரின்மையும் முறைகேடுகளும் நிலவுகின்றன). 

4. கூட்டுறவுத்துறையில் காணப்படும் பிரச்சினைகள். (நிர்வாகக் குழப்பங்கள் அரசியல் தலையீடுகள் முதல் ஊழல் வரையில்) 

5. காடழிப்பும் சட்ட விரோத மரம் கடத்தலும் வரவரக் கூடுகிறது. 

6. சட்ட விரோத மது உற்பத்திகள் (கசிப்பு உற்பத்தியும் விற்பனையும்) இதுவும் அதிகரித்துக் கொண்டே உள்ளது. 

7. விவசாய நிலங்கள் (நீர்ப்பாசன நிலங்கள்) மேடாக்கப்படுதல். 

8. வாய்க்கால்கள், மேய்ச்சல் நிலங்கள் அபகரிக்கப்படுதல். 

9. நிர்வாகப் பிரிவுகளில் காணப்படும் ஒழுங்கீனங்களும் முறைகேடான நடவடிக்கைகளும். 

இவ்வாறு நீண்ட கால அடிப்படையில் சமூகத்துக்கும் சூழலுக்கும் நிரந்தரப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய விடயங்களில் பல முறைகேடுகள் தொடருகின்றன. இந்த முறைகேடுகள் சாதாரணமானவை அல்ல. அடிப்படையான சமூகக் கட்டுமானத்தையும் வாழும் சூழலையும் (நிலம் உள்ளடங்கலாக) எதிர்காலப் பொருளாதார நடவடிக்கைகளையும் பாதிப்பன. இவற்றைக் கட்டுப்படுத்தவில்லை என்றால் எதிர்காலத்தில் கிளிநொச்சி மாவட்டமே வரட்சியிலும் வளப்பற்றாக்குறையிலும் நீர்ப்பிரச்சினையிலும் சிக்கி விடும். எந்த அபிவிருத்தி நடவடிக்கைகளும் பயனற்றவை என்றாகி விடும். பாத்திரம் ஓட்டையானால் அதில் எவ்வளவு நீரை ஊற்றினாலும் தங்காதல்லவா, அதைப்போன்றதாகி விடும். இதனால் மக்கள் தொடர்ந்தும் நெருக்கடிகளுக்குள்ளேயே வாழ வேண்டியேற்படும். நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க முடியாதோர் என்ன செய்வர்? வாழிடத்தை விட்டே வெளியேறிச் சென்று விடுவர். 

இதனால்தான் இந்த விடயங்களில் ஆழமான கவனம் வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. 

100 ஆண்டுகால வரலாற்றை மட்டுமே கொண்ட கிளிநொச்சி, பேரெழுச்சியும் புகழும் அடைந்தது. அந்தளவுக்கு அது தொடர் நெருக்கடிகளையும் அழிவையும் சந்தித்தது. இலங்கையிலேயே மிக இளைய பட்டினமும் புதிய மாவட்டமும் கிளிநொச்சியாகும். அதிகளவு அழிவைச் சந்தித்ததும் கிளிநொச்சியே. யுத்த முடிவுக்குப் பின்னர், இப்பொழுதுதான் அது மீண்டும் மெல்ல மெல்ல எழுச்சியடைந்து வருகிறது. ஆனால் அதை பின்னோக்கி இழுக்கும் எதிர்நிலைச் செயற்பாடுகள் இந்த முறைகேடுகளின் வழியே நடக்கின்றன. போர்க்கால அழிவையும் விட இப்போதைய அழிப்புகள் பாதகமானவை. அப்போதைய இழப்புகளை மீள் நிரப்பலாம். புனரமைத்துக் கொள்ளலாம். இன்றைய அழிப்புகள் அப்படியானதல்ல. இவை அடிப்படையான வளச் சிதைப்புகளும் அழிப்புகளுமாகும். இதனால் கிளிநொச்சி மாவட்டத்தின் அடிப்படையான நீர், நிலவளமும் அதன் அமைப்பும் கெடுக்கப்படுகின்றன. 

இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு மாவட்டச் செயலகம், பொலிஸ் தரப்பு உட்பட சம்மந்தப்பட்ட நிறுவனங்களும் திணைக்களங்களும் பின்னிற்கின்றன. அல்லது இயலாதிருக்கின்றன. இதைப்போலவே  மக்கள் பிரதிநிதிகள் என்று சொல்லப்படுவோரும் இயலாதிருக்கின்றனர். சிலர் முறைகேடுகளோடு பங்காளிகளாகவும் முறைகேடுகளுக்கு ஆதரவாளர்களாகவும் இருக்கின்றனர். காவற்காரனே கள்வன் என்ற நிலையில். இல்லையென்றால் இவையெல்லாம் எப்படித் தொடரமுடியும்? முன்னரையும் விடக் கூடுதலாக எப்படி நடக்க முடியும்? 

இதைப்பற்றியெல்லாம்  தொடர்ச்சியாக ஊடகத்துறையினர் தேவையான ஆதரங்களோடும் புள்ளிவிவரங்களோடும் செய்திகளை வெளியிட்டிருக்கிறார்கள். புலனாய்வுக் கட்டுரைகளில் தரவுகளையும் தகவல்களையும் முன்வைத்திருக்கிறார்கள். 

கிளிநொச்சி பிரசைகள் குழு, விவசாயிகள் அமைப்புகள், தென்னை பனை வளத்தொழிலாளர்கள், கால்நடை வளர்ப்போர் சங்கம், மக்கள் சிந்தனைக் களம் எனப் பல்வேறு தரப்பினரும் இந்த விடயங்களைக் குறித்துத் தொடர்ச்சியாக பொறுப்பானவர்களிடம் எடுத்துக் கூறியுள்ளனர். தமது கண்டனங்களையும் கவலைகளையும் வெளிப்படுத்தியுள்ளனர். 

ஆனாலும் நடவடிக்கையில் முன்னேற்றமுமில்லை. இதனால்தான் முறைகேடுகளில் ஈடுபடுவோர் மேலும் மேலும் அவற்றைத் தொடர்ந்து ஊக்கமுடன் செய்கிறார்கள். இது மக்களிடம் கவலையையும் சோர்வையும் நம்பிக்கையீனத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. 

ஏனென்றால் மக்களுடைய கண்ணுக்கு முன்னே இவ்வளவு முறைகேடுகளும் நடக்கின்றன. இதைத் தடுப்பதற்கு யாருமில்லை என்றால் அவர்கள் கவலைப்படுவதைத் தவிர வேறு என்னதான் செய்ய முடியும்? ஆனாலும் அவ்வப்போது கிளாலி, முறிகண்டி, பளை, கிளிநொச்சி, இயக்கச்சி, தருமபுரம் என அங்கங்கே மக்கள் எதிர்ப்புப் போராட்டங்களையும் நடத்தியிருக்கிறார்கள். இருந்தும் இவை கட்டுப்படாமல் பிறகும் பிறகும் தொடர்ந்து  நிகழுமென்றால்…! அது மக்களிடம் கவலையையும் சோர்வையும் நம்பிக்கையீனத்தையும்தானே ஏற்படுத்தும். 

இதையெல்லாம் கவனித்துச் சீராக்கத்தைச் செய்ய வேண்டிய தரப்புகளான சிவில் நிர்வாகப் பிரிவும் சட்டம் ஒழுங்குக்குப் பொறுப்பான பொலிஸ் தரப்பும்    செயலற்றிருந்தால் முறைகேடாளர்களுக்கு அது உற்சாகத்தைக் கொடுக்கும் என்பதைச் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்றில்லை. கூடவே அரசியல் தரப்பின் நேரடி – மறைமுக ஆதரவும் இருந்தால் இரண்டு மடங்கு ஊக்கம் வந்து விடுமல்லவா. 

இந்த ஊக்கத்தினால் பச்சிலைப்பள்ளி, பூனகரி, கண்டாவளை ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளில் இருந்து பெருமளவு மணல் அகழப்படுகிறது. இந்தப் பிரதேசங்களின் நில அமைப்புக் கெடும் அளவுக்கும் நீர் வளம் குன்றி உவராகும் அளவுக்கும் இது ஆபத்தான நிலையை எட்டியுள்ளது.  

இதைக்குறித்து பேராசிரியர்கள் பொ.பாலசுந்தரம்பிள்ளை, இரா.சிவச்சந்திரன், சத்தியசீலன் உள்படப் பல அறிஞர்களும் கவலையோடு எச்சரித்துள்ளனர். இதில்  கனியவளத்துறையினரும் வனத்துறையினரும் சூழலியலாளர்களும் கவனம் கொள்ளாதிருப்பது மிகுந்த கவலையைத் தருவது. இதனால் இது மிகவும் கண்டிக்கப்பட வேண்டியதாகும். மக்கள் இதைத் தடுக்க முற்பட்டால் அவர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள். 

இதைப்போலத்தான் அரச காணிகளை அபகரிக்கும் செயற்பாடுகள் தொடர்வதுமாகும். அரச காணிகள் என்பது மிகமிகக் குறைந்து விட்டன. அதுவும் முக்கியமான மையங்களில் காணிகளே இல்லை. கண்டி –யாழ்ப்பாணம் வீதியில் மிஞ்சியிருக்கின்ற சில காணிகளையும் ஆளாளுக்கு ஆட்டையைப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதைக்குறித்து பல தடவை கவனப்படுத்தல்களை சிவில் அமைப்புகள் கவனப்படுத்தல்களைச் செய்துள்ளன. ஆனால் இந்த விடயத்தில் காணிப் பயன்பாட்டுக்குழு என்ன சிந்தனையோடு இருக்கிறது என்று கடவுளுக்கும் தெரியாது.  

இதைப்போல விடுதலைப் புலிகளால் பயன்படுத்தப்பட்ட காணிகளை மீளப் பயன்பாட்டுக்குட்படுத்துவதிலும் நிறையப் பிரச்சினைகள் உண்டு. அந்தக் காணிகளில் பலவும் சரியான பொதுப் பயன்பாட்டுக்குச் சென்றது என்றில்லை. இப்படித்தான் காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் அதிகாரத்துக்குட்பட்ட காணிகள் ஆயிரக்கணக்கான ஏக்கர்கள் முறையற்ற விதமாக – இரகசியமாகக் கைமாற்றப்படுகின்றன. பளையிலும் பூநகரியிலும் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணி இப்படி கைமாற்றப்பட்டுள்ளது. இதேவேளை இந்த மாவட்டத்தில் காணி இல்லாத மக்களும் பயிர்ச்செய்கைக்கும் பிற தொழில் துறைக்கும் காணி போதாமையில் உள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்களும் உள்ளன. அப்படியிருக்கும்போது வசதிபடைத்தோருக்கும் வெளியிடங்களைச் சேர்ந்தோருக்கும் காணிகள் பகிர்ந்தளிக்கப்படுவதன் நியாயம் என்ன? காரணம் என்ன? 

மாவட்டத்தின் வறுமை நிலையைப் போக்க வேண்டும் என்றால் மக்களுக்குத் தொழிலும் தொழில் செய்வதற்கான வாய்ப்பு நிலைகளும் இருக்க வேண்டும். அதைச்செய்யாமல் பசப்பு வார்த்தைகளைப் பேசுவது ஏமாற்றன்றி வேறென்ன? 

இப்படித்தான் மேய்ச்சல் நிலங்கள் காணாமல் போய்க்கொண்டிருப்பதுமாகும். கால்நடை விருத்தியைப் பற்றிப் பேசினால் சம அளவில் மேய்ச்சல் தரையைப் பற்றியும் பேசவேண்டும். அதற்கான ஒதுக்கீடுகளைச் செய்ய வேண்டும். ஆனால் அது வேறு, இது வேறு என்ற மாதிரியே திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. காணி இல்லாமல் காசை ஒதுக்கி என்ன பயன் என்று மாடு வளர்ப்போரும் ஆடு வளர்ப்போரும் கேட்கிறார்கள். 

பதில்? 

கூட்டுறவுத்துறை இங்கே மிக மோசமான அளவுக்கு நலிவடைந்திருக்கிறது. அதனை வளப்படுத்துவதற்கு ஏதுநிலைகள் பல உண்டு. குறிப்பாக நெல் உற்பத்தி அதிகமாக உள்ள இந்த மாவட்டம் அதனை கொள்வனவு செய்து Post production செய்வதன் மூலம் இதைச் சாத்தியப்படுத்தலாம். பலருக்கான வேலை வாய்ப்புகளையும் உருவாக்க முடியும். யுத்த காலத்தில் கூட அத்தனை நெருக்கடிகளின் மத்தியிலும் பெரிய அரிசி ஆலைகள் வன்னியெங்கும் இயங்கின. இன்று அவ்வளவு நெல்லும் வெளிமாவட்டங்களுக்கே கொண்டு செல்லப்படுகிறது. இதை மட்டுப்படுத்தி உள்ளுரில் மாற்று ஏற்பாடுகளைச்செய்ய முடியும். இதற்கு ஏற்றவாறு கூட்டுறவுத்துறையை ஒழுங்கு படுத்திக் கொள்ள முடியும். இதற்கு ஏற்றாற்போல மணல் மற்றும் கிறவல் விநியோகத்தை கூட்டுறவுச் சங்கங்களுக்கு வழங்கலாம். அவர்கள் அந்தந்தப் பிரதேசத்தில் கனிய வளத்திணைக்களம், சுற்றாடல் மற்றும் வனத்திணைக்களம் ஆகியவற்றோடு இணைந்து முறையான வகையில் மணல் மற்றும் கிறவல் அகழ்வைச் செய்து தமக்கான நிதியையும் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும். இதன் மூலம் கூட்டுறவுச் சங்கங்களும் வளர்ச்சியடையும். வளங்களும் பேணப்படும். முறைகேடுகளும் ஒழிக்கப்படும். இதற்கான பொறிமுறையை உருவாக்குவது ஒன்றும் கடினமானதல்ல. 

இப்படி எல்லாவற்றையும் ஒழுங்கு படுத்தி மக்கள் வாழ்க்கையை மேம்படுத்தவும் மாவட்டத்தின் வளர்ச்சியை  வலுப்படுத்தவும்தான் கடந்த பத்து ஆண்டுக்கும் மேலாக ஒருங்கிணைப்புக் குழுக்களும் அதற்குத் தலைவர்களும் இருந்து வருகின்றனர். ஆனால் கிறிஸ் கம்பத்தில் ஏறுவதைப்போலவே நிலமை உள்ளது. ஒருங்கிணைப்புக் குழுவில் எடுக்கப்படும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதில் அசட்டையும் அதற்கு அப்பால் நடைமுறைகளை உருவாக்குவதில் குறியுமாகவே உள்ளது. இதைக் கட்டுப்படுத்தவில்லை என்றால் இவர்களும்தானே இதற்குப் பொறுப்புக் கூற வேண்டும். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு தரப்பு ஒருங்கிணைப்பு அதிகாரத்திலிருந்திருக்கிறது. இதைப் பயன்படுத்தி ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டித் தப்ப முடியாது. பதவி என்பது அலங்காரத்துக்கு அல்ல. அதன் அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்கள் நலன்களை உருவாக்கவும் சூழலையும் வளங்களையும் பாதுகாக்கவுமே. 

இன்னுமொரு விடயம். இங்கே (கிளிநொச்சியில்) இருந்த பெற்றோலியம் கூட்டுத்தாபனத்துக்குரிய காணிகளை கூட்டுறவுச் சங்கங்களுக்கு கொடுத்திருக்க முடியும். அதுதான் மக்கள் சேவையாகும். அதுதான் மக்கள் நலன். ஆனால் நடந்ததோ அரசியல் செல்வாக்குடைய தரப்பினர் – மக்கள் பிரதிநிதிகளாக இருந்தோர் தமது செல்வாக்கின் வழியே அவற்றைத் தனியாக எடுத்துக் கொண்டதே நடந்துள்ளது. இதை எந்தக் கணக்கிலே வைத்துக் கொள்வது? 

இப்படித்தான் மேலும் பல பொதுச் சொத்துகளை தமது தனிப்பட்ட தேவைகளுக்கும் நலனுக்குமாக எடுத்துக் கொண்டு பொது நியாயம் பேசுகிறார்கள். இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான காணியும் புகையிரதத் திணைக்களத்துக்குச் சொந்தமான காணிகளும் பகிரங்கமாகவே சிலரால் அபகரிக்கப்பட்டுள்ளன. இதைப்பற்றியெல்லாம் அ தொடக்கம் ஃ வரையில் மக்களுக்குத் தெரியும். அவர்களால் குமுறும் எரிமலைகளால் கொதிக்கத்தான் முடியுமே தவிர, தடுக்க முடியுமா? இதைப்பற்றி ஆளுநர் தொடக்கம் அரசாங்கத்தின் உயர் மட்டங்கள் வரையில் எடுத்துச் சொல்லியும் ஒன்றுமே நடக்கவில்லை. 

இதே பத்தியில் கூட கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையம், மத்திய விளையாட்டு மைதானம், மாகாணசபையினால் மேற்கொள்ளப்பட்ட பல கட்டுமானங்கள்  உட்பட பலவற்றின் குறைபாடுகளைப் பற்றியும் அவற்றில் உள்ள முறைகேடுகளைப் பற்றியும் பல தடவை எழுதியாச்சு. ஆனால் என்ன மாற்றம் நடந்தது? இனிமேல் கூட என்ன மாற்றம் நடக்கும்? அப்படி நடக்குமானால் அதை யாரும் முன்வந்து உத்தரவாதப்படுத்தலாம். 

கடந்த மூன்று தடவையாக கிளிநொச்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினராகத் தொடர்ச்சியாக இருக்கிறார் சிவஞானம் சிறிதரன். அவர் கிளிநொச்சியில்  அபிவிருத்தி எதையும் செய்ய முடியாது போனாலும் பரவாயில்லை. இந்த முறைகேடுகளைக் கட்டுப்படுத்தினோலே போதும். அவர் மட்டுமல்ல, அவரைப்போலுள்ள பிறருக்கும் இது பொருந்தும். 

வேலியே பயிரை மேய்ந்தால் எப்படியிருக்கும்? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அப்படியான வேலிகளைத்தானே நாமும் நம்பியிருக்கிறோம். நம்பிக் கெட்டுக் கொண்டிருக்கிறோம்.