தடுமாறி, தொடர்ந்து தவறு செய்யும் அரசு

தடுமாறி, தொடர்ந்து தவறு செய்யும் அரசு

—   சிக்மலிங்கம் றெஜினோல்ட் — 

நாட்டிலே என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று யாருக்குமே புரியவில்லை. ஆனால் ஏதோவெல்லாம் நடந்து கொண்டிருக்கின்றன. ஏதொவெல்லாம் என்றால், சிறைச்சாலைக்குள் புகுந்து அங்கிருந்த கைதிகளின் காதில் துப்பாக்கியை வைத்து மிரட்டுகிறார் அமைச்சர் ஒருவர். 

“இந்த வாரம் 7.87 பில்லியன் ரூபாய்கள் பெறுமதியான பணத்தை அச்சிடப் போகும் சிறிலங்கா அரசானது இந்த வருடத்தில் இதுவரைக்கும் 217.1 பில்லியன் ரூபாய்கள் பெறுமதியான பணத்தை அச்சிட்டு சந்தையில் விட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக கொரோனாவின் தாக்கம் உச்சத்தை தொட்ட மார்ச் மாதத்திலிருந்து இதுவரைக்கும் அண்ணளவாக 213 பில்லியன் ரூபாய் பெறுமதியான பணத்தை அச்சிட்டு சந்தைக்குள் விட்டிருக்கிறது சிறிலங்கா அரசு. 

ஏற்கனவே கொரோனாவின் தாக்கத்தால் உற்பத்தித்துறை படு மோசமாக பாதிக்கப்பட்டு உலகம் முழுவதும் பொருட்கள்  தேங்கிக்கிடப்பது மட்டுமல்லாது ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட பல பொருட்கள் விற்பனையின்றி காலாவதியாகி வீசப்படும் நிலையை எட்டிருக்கிறது. சிறிலங்காவைப் பொறுத்தவரை, அந்நிய செலாவணியை ஈட்டக் கூடிய துறைகள் பெரும்பாலானவை இழுத்து மூடப்பட்டுள்ளன. குறிப்பாக சுற்றுலாத்துறை, ஆடை உற்பத்தித் துறை, சிறு விவசாய உற்பத்திகள் என ஏற்றுமதிப் பொருளாதாரம் முழுமையாக அடிவாங்கியுள்ளது. ஏற்கனவே சிறிலங்காவின் தேயிலைப் பொருளாதாரம் உலகச் சந்தைக்கு நிகராக தன்னை மாற்றியமைத்து முன்னேற முடியாமல் சிக்கி விழி பிதிங்கி நிற்கும் இந்த நேரத்தில் அதிகளவிலான பணம் அச்சிடப்பட்டு சந்தையில் விட வேண்டிய தேவை எதற்கு? 

உள்நாட்டு தேவைகளுக்காக உற்பத்தி செய்யப்படும் அத்தனை பொருட்களும் வழமையான நுகர்வின்றி தேங்கிக் கிடக்கின்றன. ஏற்றுமதிப் பொருளாதாரமும் பெருமளவில் அடிவாங்கிக் கிடக்கிறது. அந்நிய செலாவணியை ஈட்டுவதற்கு வழியின்றி, வெளிநாடுகளில் வேலை செய்யும் இலங்கையர்களை வெளிநாட்டு நாணயத்திலேயே சிறிலங்காவில் சேமிப்பை வைக்கும் படியும் அதனை ஊக்குவிக்கும் முகமாக பல சலுகைகளையும் சிறிலங்கா அரசு அறிவித்திருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் அதிகளவிலான பணத்தை அச்சிடுவதன் நோக்கம் என்னவாகவிருக்கும் என்பதை ஆழமாக பார்க்க வேண்டிய தேவையிருக்கிறது” என்று கேள்விகளை எழுப்புகிறார் மா.குருபரன். 

துறைமுகக் களஞ்சியத்திலிருந்த பொருட்களை வெளியே எடுத்து அதை மலிவு விலைக்குத் தனியாருக்குக் கொடுத்து விட்டு, பிறகு அந்தப் பொருட்களை அரசாங்கமே அதிக விலை கொடுத்து மக்களுக்கு வழங்குகிறது. நேற்றிரவு வெள்ளைப் பூடைத் திருடி இப்டி விற்றிருக்கிறார்கள். இதைப்பற்றி பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தொலைக்காட்சி விவாதமொன்றில் பகிரங்கமாகவே கேள்வி எழுப்பியிருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் அரசாங்கத் தரப்பு பாராளுன்ற உறுப்பினர்கள் திஸ்ஸ குட்டியாராச்சி, மிலான் ஜெயதிலக மற்றும் எதிர்த்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் மனுச நாணயக்கார ஆகியோரும் கலந்து கொண்டனர். 

மனோ கணேசன் கூறியது இதுதான் – “டொலர் பிரச்சினையால் துறைமுகத்தில் தேங்கி இருக்கும் இறக்குமதி செய்யப்பட்ட, உணவு பொருட்களை அரசாங்கமே பொறுப்பெடுத்து நாட்டுக்குள் கொண்டுவந்து பொதுமக்களுக்கு மலிவான விலையில் கொடுங்கள்” என சதோச (CWE) என்ற அரச நிறுவனத்துக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச பணிப்புரை விடுத்தார். ஆகவே துறைமுகத்தில் இருந்த ஒரு வெள்ளைப்பூண்டு கொள்கலன் “சதோச”வின் களஞ்சியசாலைக்கு வந்தது. 

அப்புறம் நடந்ததுதான் சுவாரசியம். 

“சதோச”வின் ராகம களஞ்சியசாலைக்கு வந்த வெள்ளைப்பூண்டு கொள்கலன் அப்படியே நள்ளிரவில் “பில்” கூட போடாமல் ஒரு தனியார் நிறுவனத்துக்கு கிலோ 145/= கணக்கில் கொடுக்கபடுகிறது. 

அதன் பின் நிகழ்ந்தது, அதைவிட மகா சுவாரஸ்யம். 

அப்படி நடந்தது என்ன? 

இப்படி நள்ளிரவில் கொடுக்கபட்ட அதே வெள்ளைப்பூண்டு கொள்கலனை அதே “சதோச” நிறுவனம் கிலோ 445/= கணக்கில் மீண்டும் வாங்குகிறது. அதன் பின் அது கிலோ 500/= மேல் அப்பாவி வாடிக்கையாளர் பொது மக்களுக்கு நாடு முழுக்க உள்ள “சதோச” முகவர் நிலையங்கள் மூலம் விற்கப்படுகிறது. 

இதுதான், “வெள்ளைப்பூண்டு நள்ளிரவு கொள்ளை” 

இப்படியே இதற்கு முன்னும் சீனி, பால்மா, மாவு, உளுந்து ஆகிய கொள்கலன்கள் விற்கப்பட்டதாக இப்போது இந்த பகல்கொள்ளைக்கு துணை போக முடியாமல் மனம் நொந்து பதவி விலகும் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை நிர்வாக இயக்குனர் துசான் குணவர்தன கூறுகிறார்” என. 

இதற்கு என்ன பதிலைச் சொல்லப் போகிறார்கள்? இது என்ன அடிப்படையில் நடக்கிறது? இதற்கு யார் பொறுப்பேற்பது? மக்களை என்னவென்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்? அறுதிப் பெரும்பான்மை தங்களிடம் இருக்கிறது என்பதற்காக இப்படி அநீதியாக நடந்து கொள்ள முடியுமா? 

இதைப்போலத்தான், சீனியை பதுக்குவதற்கு வாய்ப்பைக் கொடுத்து விட்டு, பின்னர் அதை மீட்டதாகச் சொல்கிறது அரசாங்கம். வத்தளை –கெரவப்பிட்டிய என்ற இடத்தில் உள்ள களஞ்சியத்திருந்து கடந்த ஓகஸ்ட் 31 இரவு 4096 மெற்றிக் தொன் சீனி கைப்பற்றப்பட்டு, குறித்த களஞ்சியசாலைக்குச் சீலும் வைக்கப்பட்டது. இந்தப் படங் காட்டுதல் ஒன்றும் மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்த்து வைக்காது. 

இவ்வாறே அரிசிக்கு நிர்ணய விலை என்று சொல்லி விட்டு அரசித்தட்டுப்பாட்டை செயற்கையாக உருவாக்குகிறது. பிறகு அரிசி ஆலைகளைச் சுற்றி வளைத்துப் பதுக்கல்களைக் கண்டு பிடித்து விட்டோம் என்று காட்டுகிறது. இப்பொழுது 100,000 மெற்றிக் தொன் அரசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அப்படிச் செய்தால் பதுக்கப்பட்ட நெல்லும் அரிசியும் சந்தைக்கு வரும் என்று யாரோ அரசாங்கத்துக்கு ஆலோசனை சொல்லியிருக்கிறார்கள். இது ஒரு வகையில் நியாயமான நடவடிக்கைதான். ஆனால் இது சரியான ஒரு தீர்வல்ல. இதற்கிடையில் அரிசியை இறக்குமதி செய்வதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்தும் உள்ளது. 

மேலும் யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தில் 40 சதவீத பங்குகளை அமெரிக்காவின் New Fortress Energy நிறுவனத்திற்கு நள்ளிரவில் விற்பனை செய்துள்ளது அரசாங்கம். நாட்டைக் காப்பாற்றப் போகிறோம் என்ற பொதுஜன பெரமுனவும் அதனுடைய பங்காளிகளும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? என்று கேள்வி எழுப்புகின்றனர் அந்தத் தரப்புக்கு வாக்களித்த மக்கள். இதையெல்லாம் வலுவான எதிர்ப்பு ஆயுதங்களாக எடுத்துக் கொண்டு மக்களிடம் செல்வதற்குப் பொருத்தமான எதிர்த்தரப்பும் இல்லை. அதற்கான காலச் சூழலும் இல்லை. முக்கியமாக கொவிட்19 உண்டாக்கிய நெருக்கடி அரசாங்கத்துக்கு மிகப் பெரிய வாய்ப்பைக் கொடுத்துள்ளது. 

பெரிய பிரச்சினைகள் எல்லாவற்றையும் கொவிட் 19 இனுடைய தலையில் கட்டி விடலாம். எதிர்த்தரப்புகளின் போராட்டங்களையும் மக்களுடைய அதிருப்தியையும் கொவிட் 19 ஐ முன்னிறுத்தித் தடுத்து விடலாம். இப்படியே எல்லாவற்றிலிருந்தும் தப்பித்துக் கொள்வதற்கு அரசாங்கத்துக்கு ஆயிரம் வாசல்களையும் மறைந்து கொள்வதற்கு ஆயிரமாயிரம் திரைகளையும் கொடுத்துக்கொண்டிருக்கிறது கொவிட்19. 

இதனால்தான் லொக்டவுணைப் போடுவதற்கு முன்பு அது பிடிவாதமாக மறுத்தது. இப்பொழுது லொக்டவுணை எடுப்பதற்குப் பின்னடிக்கிறது. அதாவது இந்தச் சூழலை கனதியாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும். 

இதையெல்லாம் விளங்கிக் கொண்டு மக்களுக்கான அரசியலை முன்னெடுக்கும் வலுவான எதிர்த்தரப்புகள் இல்லை. இரண்டு எதிர்த்தரப்புகளே இதில் முக்கியமானவை. ஒன்று ஜே.வி.பி. அது குரலே அற்றுக் கிடக்கிறது. அதற்குள்ளே குமைந்து கொண்டிருக்கும் பிரச்சினைகள் அதனுடைய அரசியற் பயணத்தைத் தளர்வாக்குகின்றன. இதனால் ஜே.வி.பியின் பாத்திரம் இன்று பெருமளவுக்கும் இல்லை என்றே சொல்லலாம். 

அடுத்தது ஐக்கிய மக்கள் சக்தி. இதில் முக்கியமானவர் சஜித் பிரேமதாச. பொதுவாகச் சொல்லப்போனால் அனுகூலங்கள் அதிகமாகப் பெற்ற ஒரு தலைவர் எனலாம். தமிழ், முஸ்லிம், மலையக சக்திகளின் ஆதரவோடு பாரம்பரிய ஐ.தே.கவினரின் ஆதரவையும் பெற்றவர் சஜித். கூடவே எதிர்க்கட்சித் தலைவராகவும்  இருக்கிறார். 

இப்படியான வாய்ப்புகளோடு இருக்கின்ற சஜித் பிரேமதாச இன்றைய நெருக்கடியில் தனக்கான கதவுகளைத் திறப்பது மட்டுமல்ல மக்களுக்கான வாசல்களையும் திறக்க வேண்டிய வரலாற்றுப் பொறுப்பில் உள்ளார். காலம் அந்த வரலாற்றுப் பாத்திரத்தை அவரிடமே வழங்கியுள்ளது. அதை அவர் சீராகச் செய்யவில்லை என்றால் வரலாறு அவரைக் கழித்தே தீரும். 

ஆனால் சஜித் என்ன செய்கிறார் என்றால் இந்த மாதிரியான குறைபாடுகளையெல்லாம் ஒரு குற்றப்பத்திரமாக்கிக் கொண்டு பௌத்த பீடங்களிடம் போய் கொடுத்து மன்றாடுகிறார். பாருங்கள் எவ்வளவு அநீதி நடக்கிறது. இதை நீங்கள்தான் பார்த்துக் கொள்ள வேண்டும். கேட்க வேண்டும் என்பதைப்போல நடந்து கொள்கிறார்.. 

இதில் இரண்டு அபாயங்களும் தீவினைகளும் உண்டு. 

ஒன்று சஜித் இலங்கையின் அரசியலை மேலும் பௌத்த மயமாக்க விளைகிறார். இது மிகப்  பெரிய கேடாகும். ஒரு மக்கள் அரசியல் தலைவர் ஒரு போதும் இதைச் செய்ய மாட்டார். ஏற்கனவே அரசியலில் பௌத்த பீடங்களின் தலையீடுகளும் செல்வாக்கும் அதிகம். அப்படியிருக்கும்போது இந்த மாதிரியான முறைப்பாடுகளை அவர்களின் காலி்ல் கொண்டுபோய் வைப்பது என்பது எதிர்காலத்தில் ஏராளம் நெருக்கடிகளைக் கொண்டு வரக் கூடியது. ஆகவே அவர் இதற்குப் பதிலாக மேலும் வெளியே உள்ள ஜே.வி.பி உள்ளிட்ட எதிர்த்தரப்புகளையும் அரசினுள்ளே இருக்கும் அதிருப்தியாளர்களையும் சேர்த்துக் கொண்டு இதையெல்லாம் எதிர்க்கக் கூடிய வியூகத்தை வகுக்க வேண்டும். முதலில் இவற்றை வெளியே அம்பலப்படுத்துவதற்கான ஒரு பொறிறையை உருவாக்க வேண்டும். மக்கள் முன்னே இவற்றைப் பற்றிய உண்மைகளை முன்வைக்க வேண்டும். 

இரண்டாவது மக்களிடம் தொடர்ந்து உரையாடிக் கொண்டிருப்பது அவசியம். அதுவே இன்று அவசியமானது. அரசாங்கம் என்ன மாதிரிச் சிந்திக்கிறது என்பதையிட்டு மக்களுக்கு இன்று ஏகப்பட்ட குழப்பங்கள். ஆனால் ஒன்றை மட்டும் அவர்கள் தெளிவாகப் புரிந்து கொண்டுள்ளனர். அரசாங்கம் தளர்ந்து போயுள்ளது என்பதை. ஆகவே இந்தச் சூழலில் நாடு எப்படியான நிலையில் உள்ளது? எங்கே கொண்டு செல்லப்படுகிறது? இதை சரியாக்குவதற்கு என்ன செய்ய வேண்டும் என எதிர்த்தரப்புகள் வழிகாட்ட வேண்டும். 

அவற்றுக்கே இன்றைய வரலாற்றுக் கடப்பாடுகள் அதிகம். 

அரசாங்கம், தன்னைக் காப்பாற்ற முற்பட்டு மக்களைக் கை விட முயற்சிக்கிறதா? அல்லது மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதோடு தன்னையும் காப்பாற்றிக்கொள்ளப்போகிறதா? 

இந்தக் கேள்வியின் முன்னே மக்களாகிய நாம் நிற்கிறோம்.