— அகரன் —
குதிரை பற்றிய நினைவு வந்தால் அவள் நினைவும் வந்துவிடும். மூன்று ஆண்டுகளுக்கு முன் அவளைச் சந்தித்தபோது குதிரை பற்றிய மேற்படிப்புக்காக அமெரிக்கா செல்ல இருப்பதாகச் சொன்னாள். அப்படி ஒரு படிப்பு இருப்பதே எனக்கு தெரியாது. அந்த படிப்பைப் பற்றி ஆவலுடன் கேட்டபோது இரண்டு வருட படிப்பிற்கு இரண்டு லட்சம் யூரோக்கள் செலவாகும் என்றாள். அதற்குமேல் என்னால் பேசமுடியவில்லை. அதை இலங்கை/இந்திய காசின் பெறுமதியில் மாற்றிப்பார்த்துவிட்டு உறைந்துவிட்டேன்.
‘ஒந்துவநெற்’ பதின்பருவ விளிம்பில், இளமையை கூடை கூடையாக வைத்திருக்கும் ஒருத்தி. ஒரு வெயில்கால வேலைக்காக என் வேலை இடத்திற்கு வந்தபோதுதான் சந்தித்தோம். ஆரம்பத்தில் மௌனமாக வேலை செய்தாள். அழகு அகங்காரத்தை வைத்திருக்கிறாள் என்று நானும் அப்படியே இருந்தேன்.
ஒரு நாள், ‘நீ இங்கு எவ்வளவு காலம் வேலை செய்கிறாய்?‘ என்றாள். நான் பதில் சொன்னபோது அவளால் நம்ப முடியவில்லை. ‘வேறு வேலை மாற விருப்பம் இல்லையா?‘ என்று கேட்டாள். அப்போது காத்திருந்ததுபோல என் திறமையை வெளிக்காட்டினேன். எனக்கு வேறு வேலை யார்தருவார்? என்ற உண்மைகளை மறைத்து நான் ஒரு கடும் வேலையில் ஆசையுள்ள கடுவன் என்று காட்டிக்கொண்டேன்.
இரண்டு ஆண்டுகள் கடந்து சென்ற கிழமை அவளை சந்தித்தபோது நானும் குதிரை பழகுவது பற்றி சொன்னேன். அவள் முகக்குறிப்புகள் நம்புவதாக இல்லை. நம்பாதவர்களுக்கு காட்டவென்று வைத்திருந்த ஒளிக்குறிப்பை காட்டியதும் அவள் மலர்ந்துகொண்டிருந்தாள். அவள் பற்களெல்லாம் அளந்து செய்ததுபோல் இருந்தது.
அப்போதுதான், ‘’plaisirல் உள்ள கோட்டையின் குதிரைப் பண்ணையில் நான் ஒரு குதிரை வைத்திருக்கிறேன். அதற்கு வயது 4. 10,000€ விற்கு அதை வேண்டினேன். சிலகாலம் கழிய அதை இருமடங்காக விற்கலாம். ஏனெனில் பண்ணையில் குதிரை எல்லா வகையிலும் தகுதி உள்ளதாக பழக்கப்படுகிறது. ஒரு கிழமையில் இரண்டு நாட்கள் நான் அங்கு சென்று குதிரையில் சவாரி செய்வேன். அருகே உள்ள காட்டில் குதிரைக்கான பாதை உள்ளது. அங்கு இயற்கையில் பயணிக்கலாம்’’ என்றாள்.
நான் இப்போதுதான் குதிரைக்கு கடிவாளம் கட்டுவதை பழகுகிறேன். அதை பிடித்துக்கொண்டு நடப்பதே எனக்கு பெரிய சாதனையாகத் தெரிந்தது.
ஒந்துவநெற் நான் எதிர்பார்க்காத பேரழைப்பை முன்வைத்தாள். ஒரு பிரஞ்சு இளவரசி ஒரு தூரதேச கிழட்டு அரசனுக்கு அழைப்பு விட்டதுபோல் எனக்கு உணர்வேற்பட்டது. ‘’நீ என்னுடன் வந்தால் நான் உனக்கு குதிரை பழக்குவேன். நாம் வனத்துக்குள் ஒரு சவாரி செய்யலாம்‘’ என்றாள். முகத்தில் நான் இளவரச தோற்றத்தை கொண்டுவரும் முயற்சியில் இருந்தேன்.
புதிதாக அகதி அடைக்கலம் கிடைத்தவன் அடிக்கடிதன் வதிவிட அட்டையை எடுத்துப்பார்ப்பதுபோல் அந்த அழைப்பை மனதுக்குள் எடுத்து பார்த்து இது ஒருவேளை கனவாக இருக்குமோ? என்றும் நினைத்துக்கொண்டேன்.
இரண்டு லட்சம் யூரோ செலவழித்து அமெரிக்காவில் குதிரை பழகி. படித்து வந்த ஒரு அழகி உங்களுக்கு இலவசமாக குதிரை பழக்குவதென்றால் 20,000€ செலவழித்து எட்டு நாடு கள்ளப்பயணம் செய்து வந்த கனவானுக்கு எப்படி இருக்கும்?
கடந்த ஞாயிறு மாலை 16h00 மணிக்கு என் கைபேசி ஏமாற்றாமல் அந்த சேதியை கொண்டு வந்தது. « வணக்கம், 17h00 plaisir உள்ள கோட்டையின் இடப்பக்கம் இருக்கும் குதிரைப்பண்ணையில் நான் இருப்பேன். உன்னை நான் அங்கு குதிரையுடன் சந்திப்பேன் »
எனது கார் விமானம் போல் வீதியில் சென்றுசேர்ந்தது. ஏற்கனவே குதிரை ஏற்றத்துக்கான உடையுடன் அகதிக் கனவானாகிய நான் பிரசன்னமானேன்.
ஆச்சரியத்தை அடைகாக்க முடியவில்லை. அவ்வளவு நிறைந்த குதிரைகளை நிஜத்தில் அதுவரை கண்டதில்லை. சில குதிரைகள் மேய்ந்துகொண்டிருந்தன. சில லயங்களில் நின்றன. அதிகமான இளையவர்கள் அழகுத் தோற்றத்தோடு குதிரைகளை சுத்தம் செய்வதிலும், ஏற்றத்திற்கு தயாராக்குவதிலும் மும்முரமாக நின்றனர். குதிரைகள் விதம் விதமாக அலங்கரிக்கப்பட்டிருந்தன. ஒரு கறுப்புக்குதிரையின் முடி தமிழ் பதின்பருவ பெண்கள் பின்னுவதுபோல பின்னப்பட்டிருந்தது. அதை மஞ்சளும் வெள்ளையும் கலந்த பேரழகி கைகளில் பிடித்துக்கொண்டிருந்தாள்.
ஆனால் ஒந்துவநெற் ஐ என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. இரண்டு தரம் அழைப்பெடுத்தேன். பதில் இல்லை. ‘’சண்டாளத்தி ஏமாற்றிவிட்டாள்’’ என்று நினைத்தேன்.
என் செய்வது? சுற்றிப்பார்த்துவிட்டு தோல்வியை மறந்து திரும்புவோம். என்று நினைத்துக்கொண்டு மறுபக்கம் சென்றேன். அங்கு குதிரையோட்ட வயல் தெரிந்தது. மணல் நிறைந்து அழகு எல்லையிடப்பட்டிருந்தது. இரு வீரர்கள் பயிற்சியில் இருந்தனர். பலர் சுற்றி நின்று அதை ரசித்துக்கொண்டிருந்தனர்.
என் சோகத்துக்கு தாம் அழுவதாக எங்கிருந்தோ மழைத்தூறல் வந்தது. யாரும் அதை கண்டுகொள்ளவில்லை. அதனால் அது தன்பாட்டுக்கு சென்றுவிட்டது.
அங்கு ஒரு இளம் வீரரும் ஒரு வீராங்கனையும் லாவகமாக ஓடினர். வீராங்கனை குதிரையில் பலசாகசங்களை செய்தாள். பயிற்சியாளர் என்ற தோரணையில் இருந்தவர் ஆண் வீரரின் ஓட்டத்தில் திருப்தி அடையவில்லை என்று தெரிந்தது.
அந்த பயிற்சி ஒட்டம் நிறைவுக்கு வரும்போல் இருந்தபோது நான் புறப்பட தயாரானேன். ஒரு கணீர் குரல் என் பெயரை பாடி அழைத்தது. எல்லோரும் என்னை திரும்பிப்பார்த்தனர். மெல்லிய ஆண் வெக்கம் வந்துபோனது. அந்தப் பண்ணையில் ஒரேயொரு கறுப்புக்குதிரை இருந்தால் எப்படி இருக்குமோ அப்படி புது நிறத்தில் நானிருந்ததும், புதுவகை பெயர் அந்த பண்ணையில் கேட்டதும் எல்லோரும் என்னை பார்த்ததற்கு காரணமாய் இருந்தது.
அங்கு லாகவமாக ஓடிய குதிரை என்னருகில் வந்தது. தலைக்கவசத்தை கழற்றி வலக்கையில் வைத்துக்கொண்டு இடக்கையால் என் கரம்பற்றி அவள் தரைக்கு வந்தாள். ஒந்துவநெற் என்னை ஏமாற்றவில்லை. ‘’அருமையாக ஓடுகிறாய்!‘’என்றேன். இது ஒரு சிறிய பாராட்டு என்ற தோரணையில் இரண்டு தரம் ‘merci.. Merci’! என்றாள்.
அவள் வியர்வையில் நனைந்திருந்தாள். அவள் சாம்பல் நிற குதிரையும் நனைந்திருந்தது. குதிரைகளுக்கும் மனிதர்கள் போல் வியர்வை வருவது அப்போதுதான் தெரிந்தது. ஆனால் அவர்களிடம் எந்தக் களைப்பும் இல்லை.
தன் குதிரையின் பெயர் ‘நெப்டியூன்‘ என்றாள். அதற்கு குளிர் தண்ணீரில் நனைத்த துணியால் உடலை ஒற்றினாள். கால்களுக்கு ஐஸ் ஒத்தடம் கொடுத்தாள். இது அவசியமா? என்றேன். ‘களைப்பை போக்கி நெப்ரியூனை இயல்புக்கு கொண்டுவருதல் அவசியம். நாம் வனத்துக்குள் செல்ல இருக்கிறோமல்லவா?‘’ என்றாள்.
அதைவிட நான்கு வகையான துடைப்பு தும்புகளால் அதை வருடவேண்டும். அதன் கால் பாதத்திற்குள் முக்கோண வடிவில் உயிர் மையம் உண்டு. மனிதர்களுக்கு பாதம் போல எல்லா நரம்புகளின் மையம் அது. அதை சுத்தமிடவேண்டும். குளம்புப் பகுதியில் கொழுப்பு தடவ வேண்டும். ஒருகுதிரையை முழுமையாக தயார் செய்வதை குழந்தைக்கு பாப்பா பாடல் சொல்லித்தரும் அசிரியர்போல் சொல்லித்தந்தாள்.
தான் குதிரையின் தலையை சீவுவதாகவும், என்னைஅதன் வால் நீள்கூந்தலை சீவுமாறு கூறினாள். அது நிலத்தை தொடும் நீளத்தில் இருந்தது. பெண்கள் தம் இடது கையால் கூந்தலை பிடித்து வலது கையால் தம் முன்பகுதியில் வைத்து சீவுவதுபோல அதன் வால் கூந்தலை சீவிக்கொண்டிருந்தேன். ஒரு மனிதக் கூந்தலை தொட வாய்ப்பில்லாத ஆண்மகனுக்கு குதிரைக்கூந்தல் சீவ வாய்ப்புக் கிட்டியதை உங்கள் சிந்தனைக்கும் நான் விடவேண்டும். அதிக ஆண்கள் இப்படி சபிக்கப்பட்டவர்கள். இப்போது கூந்தல் உள்ள பெண்கள் அருகிவரும் உயிரினமாக வேறு உள்ளார்கள்.
அந்த நேரத்தில் எல்லா கடைக்கண்களும் எங்கள் இருவரையும் அவதானிப்பதை நான் உணர்ந்தேன். ஒரு அறுபது வயது மதிக்கத்தக்க இளைஞர் அருகே வந்தார். ‘’இவர்தான் இந்தப் பண்ணையின் முதல்வர்’’ என்று அவரை ஒந்துவநெற் அறிமுகப்படுத்தினாள்.
எனக்கு வணக்கம் வைத்ததும் நானும் வணக்கம் வைத்துவிட்டு குதிரை முடியோடு போராடினேன். ராகுல் ‘’நீ இலங்கையனா?‘’ என்றார். அதிர்ச்சி கலக்க நான் ’oui’ என்றேன். அந்த அதிர்ச்சிக்கு காரணம் பாண்டிச்சேரியை சேர்ந்த பலர் பிரான்சில் காலகாலமாக வசிக்கிறார்கள். இந்தியர்கள் இருக்கிறார்கள். அப்படி இருக்க இலங்கையன் என்று என்னை சரியாக அடையாளமிட்டதை இட்டு ஆச்சரியத்தோடு இருந்தேன்.
ஆச்சரியங்களை சும்மா வைத்திருக்க எனக்கு விருப்பமில்லை. அதை கேட்டுவிட்டேன். ராகுல் தன் கதையை மிக சுருக்கிச்சொன்னார். ‘’1960இல் இலங்கைதீவில் 10 மாதங்கள் தங்கி இருந்தேன். அப்போது நான் விமானியாக இருந்தேன். இலங்கையின் முக்கிய நகரம் எல்லாம் எனக்கு தெரியும். இலங்கை ஒரு வருணிக்க முடியாத அழகுத்தீவு. நான் பண்டாரநாயக்காவுடன் விருந்து அருந்தி உள்ளேன். அப்போதைய விமானத்துறை தலைவருடன் பழகி உள்ளேன். இரண்டு கிழமைகள் 200 டாலர் பணத்திற்கு சிறிய விமானத்தை அரசாங்கத்திடம் பெற்று இலங்கை பூராக பறந்துதிரிந்தேன்’’ என்றார். எனக்கு குதிரையில் ஒந்துவநெற் உடன் பயணப்படுவதைவிட அதிர்ச்சியாக இருந்தது. அதற்கிடையில் இருவர் ராகுலை அழைத்துவிட்டு காத்திருந்தனர். ஒந்துவநெற் இடம் ராகுல் ’’இலங்கையர்கள் அருமையானவர்கள். பிறரை வரவேற்பதிலும், உபசரிப்பதிலும் பிரசித்தி வாய்ந்தவர்கள், அவர்கள் புன்னகையுடனே பிறந்தவர்கள். என்னால் என் வாழ்வில் அந்த பத்து மாதங்களை மறக்க முடியாது உங்களுக்கு வாழ்த்துக்கள்‘’ என்றுவிட்டு ஏக்கப் புன்னகையோடு நகர்ந்தார்.
ஓந்துவநெற் என்னை பிரமிப்போடு பார்த்தாள். ஏதோ நான்தான் அந்தத் தீவின் அரசன் என்பதுபோல். நான் ஒரு குதிரை மூச்சை வெளியிட்டுவிட்டு ‘’ராகுல் சொன்ன பண்டார நாயக்கா, நான் அகதியாக ஆரம்ப விதை போட்டவர். இப்படி நாம் நாடற்றவராக அவர்தான் முக்கிய காரணம்‘’ என்றேன்.
அவள் குதிரை முடியை விட்டுவிட்டு ‘’நீ அகதியா?’’ என்றாள். ‘’நிச்சயமான நிச்சயம்!! நான் நாடற்றவன்’’. ராகுல் கூறிய இலங்கையும், இலங்கையரும் செத்துவிட்டார்கள். அங்கு பேய்கள் ஆட்சி செய்கிறது‘’ என்றேன். கொடிய விலங்கு மூச்சோடு.
அவள் என் கதையை அவத்தார் படம் முதல் முதல் பார்ப்பதுபோல அல்லது ஜெயமோகனின் ‘’பனி மனிதன்’’ சிறுவர் நாவலை நான் வாசிப்பதுபோல அதை அவள் கேட்பதுபோல கேட்டுக்கொண்டிருந்தாள்.
இரவு வந்து எங்களை நனைத்துவிட்டது. அன்று எங்களால் குதிரைச்சவாரி செய்யமுடியாமல் போய்விட்டது. நாசமாய்ப்போன தீவின் கதைகளில் ஒந்துவநெற் ஆச்சரியங்களோடு நீந்தினாள்.
**
-இன்றய இலங்கைத் தீவின் அதிபதிகளை நினைத்தால் எனக்கு அந்த ஆதி நாளில் நாகரியர் என்ற புலவர் தந்துமாறன் என்ற மன்னனனுக்கு கூறிய அறிவுரைப்பாடல்தான் நினைவுக்கு வரும்.
“…அகற்றி போகிய களரி மருங்கின்,
வெள்ளில் நிறுத்த பின்றை,
கள்ளொடு புல்லகத்து இட்ட சில் அவிழ் வல்சி,
புலையன் ஏவ, புல்மேல் அமர்ந்து உண்டு,
அழல்வாய்ப் புக்க பின்னும்,
பலர் வாய்த்து இரா அர், பகுத்து உண்டோரே!”
« பார்ப்பவர்களுக்கு பயம்வரும் கள்ளிச்செடி நிறைந்த பிணம் சுடும் இடத்தில் பாடையை வைத்த பின்பு பரப்பப்பட்ட தர்பைப்புல்லின்மேல் கள்ளுடன் சோறை உண்ணுமாறு மயானத்தொழிலாளி கூற, சுடலைத்தீயில் உடல் சாம்பலாவதை கண்ட பின்பும் பகுத்துண்டு வாழும் அறிவு பலருக்கும் வருவதில்லை.» — இது அதன் பொருள்.