‘சுயமரியாதை தினம்’ என்பதே பெரியாரை    வளர்த்தெடுக்கும்…, எமது சிந்தனைப் போக்கையும் முன்னகர்த்தும்.

‘சுயமரியாதை தினம்’ என்பதே பெரியாரை வளர்த்தெடுக்கும்…, எமது சிந்தனைப் போக்கையும் முன்னகர்த்தும்.

   — அசுரா —                   

                                குணம்நாடி 

17ம் திகதி வெள்ளிக்கிழமை (17/09/2021) பெரியாரின் 142வது பிறந்த தினத்தை முன்னிட்டு சமூகநீதி குறித்த உரையாடலும், அதையொட்டிய செயல்பாடுகளின் சாத்தியப்பாடுகள் தற்போதைய இலங்கையில் சாத்தியமா? எப்போதாவது அவ்வாறான ஒரு சூழல் அங்கிருந்ததா? எனும் தேடலினான கலந்துரையாடல் பிரான்சில் நடைபெற்றது. அக்கலந்துரையாடலானது இலங்கை தலித்சமூக மேம்பாட்டு முன்னணியினால் மேற்கொள்ளப்பட்டது. 

தமிழக தி.மு.க அரசு பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு வருடாவருடம் அதனை சமூக நீதிக்கான தினமாகக் கொண்டாடப்போவதாக அறிவித்திருக்கிறது. சாதிய சிந்தனைப்போக்கின் இருப்பிற்கான பல்வேறு காரணிகளாகக் கருதப்பட்டு வந்த மதம், வரலாறு, பண்பாட்டு கலாசாரங்கள் என அனைத்தையும்; அவைகள் மீதான ஆதிக்கத்தின் இருப்பைப் பேணிவந்த பார்ப்பனியக் கருத்துருவாக்கத்தையும் கேள்விக்குள்ளாக்கியும் அதனை தொடர்ந்து எதிர்த்தும் வந்தவர் பெரியார். 

பெரியாரை முன்வைத்து செயல்பட்டுவரும் அரசியல் ஆதிக்க அதிகார சக்திகள் மீதான அவதானமும் அவர்களின் இருப்பிற்கான அடிப்படை உபாயங்களைப் புரிந்து கொள்வதற்கும் நாம் பெரியாரின் சுயமரியாதைக் கொள்கை ஊடாகவே பயணிக்க வேண்டும். தி.மு.க வின் அதிகார மையத்திற்கு நன்றாகவே புரிந்திருக்கும் என நினக்கின்றேன் ‘சுயமரியாதை தினம்’ என தொடருமானால் அதுவே அவர்களின் அதிகாரத்தையே ஆட்டம் காணச்செய்துவிடும் ஒரு கருத்துநிலை என்பது. சுயமரியாதை என்பது அது தம்மையே சுட்டெரிக்கும் நெருப்பு என்பதும் அவர்கள் புரிந்திருக்கக்கூடும். 

சமூக நீதிக்கான சிந்தனை என்பது பெரியாருக்கு முன்பான தோற்றம் கொண்டது. அதற்கான ஒரு வரலாற்றுப் பாரம்பரியம் இருப்பதும், இந்திய கருத்தியல் சிந்தனை மரபில் அதற்கான ஆளுமைகளின் தொடர்ச்சிகளையும் அவதானிக்க முடியும். நாம் பெரியாரின் தனித்துவமான கொள்கையான ‘சுயமரியாதை’ எனும் சிந்தனையூடாக பெரியாரை ‘வெல்லவேண்டும்’. இங்கே நான் முன்வைக்கும் வெல்வதென்பது பெரியாரை தோற்கடிப்பதெனும் எதிர்மறைப் பொருளாகப் புரிந்துகொள்ள வேண்டாம். இங்கே பெரியாரை ‘வெல்வதென’ சுட்டுவது பெரியாரின் கருத்தியலை வளர்த்தெடுக்கும் பொருள் கொண்டதாகும்.  

இந்தியாவின் சமூக நீதிக் கருத்தியலின் வரலாறு குறித்து ராமச்சந்திர குஹா அவர்களின் ‘நவீன இந்தியாவின் சிற்பிகள்’ எனும் நூலில்: “ஓரே நேரத்தில் ஜந்து வெவ்வேறான புரட்சிகள் வெடித்தன. அவற்றை நகர்ப்புறப் புரட்சி, தொழிற்புரட்சி, தேசியப் புரட்சி, மக்களாட்சிக்கான புரட்சி, சமூக நீதிக்கான புரட்சி என வகைப்படுத்தலாம், இங்கு நாம் கவனிக்கவேண்டியது ‘ஒரே நேரத்தில்’ என்ற வார்த்தையைத்தான். ஏனெனில் ஜரோப்பாவிலும், வட அமெரிக்காவிலும் இந்தப்புரட்சிகள் ஒன்றன்பின் ஒன்றாகத்தான் நிகழ்ந்தன. உதாரணமாக, அமெரிக்கா பதினெட்டாம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுபட்டது. ஆனால் அதன் நகரங்களும் தொழில்களும் வளர்ச்சியடைந்தது பத்தொன்பதாம் நூற்றாண்டில்தான். பெண்களுக்கும், ஆபிரிக்க அமெரிக்கர்களுக்கும் (அதாவது கறுப்பர்களுக்கு) இருபதாம் நூற்றாண்டில் வாக்குரிமை அளிக்கப்பட்ட பின்தான் அமெரிக்கா ஒரு ஜனநாயக நாடாக மாறியது.” எனும் பதிவை அந்நூலில் அவதானிக்கக்கூடியதாக உள்ளது.  

அதேபோன்று பண்டிதர் அயோத்திதாசர், ஜோதிராவ் புலே, அம்பெத்கர் என அனைவருமே சமத்துவம், சமூக நீதி எனும் கருத்தியல் பயன்பாட்டின் அவசியத்திற்காக போராடிய முன்னோடிகள். நான் வலியுறுத்த விரும்புவது பெரியார் தனது சுய சிந்தனையாக சுயமரியதை எனும் கருத்தியலை முனவைத்ததும் அதனூடாக அவர் மேற்கொண்ட சமூக நீதிக்கான போராட்டம் குறித்தே முன்னகர வேண்டும் எனும் அடிப்படையில்தான்.  

அதனூடக பெரியாரின் சுயமரியாதைக் கோட்பாட்டின் வழியாகப் புலப்படும் ‘பிராமணர்கள் அல்லாத பார்ப்பனீயத்தையும்’ இனம் காண்பதற்கே.  

இன்றைய இலங்கை சமூக-அரசியல் சிந்தனையில் நிரம்பி நிலையாக நிற்க வைக்கப்பட்டு வரும் கருத்தென்பது இனப்பிரச்சனை. அதனூடான இனவாதம் எனும் உபசிந்தனையானது இலங்கைவாழ் அனைத்து சமூகங்களையும் ‘அறிதுயில்’ நிலையில் வைத்திருக்கிறது. அதன் பேதலிப்பின் விளைவால் சமூகமானது தனது உள் முரண்பாடுகளையும், தமக்குள் காலாதீதமாக நிகழ்த்தப்பட்டுவரும் உள் ஒடுக்குமுறைகளை அலட்சியப்படுத்தியும், அதனை கண்டுகொள்ளும் சக்தியை இழந்த ‘அறிதுயில்’ சமூகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது.  

நாம் எமது வாழ்வின் அனுபவத்தோடு இணைந்த  சமூகமான தமிழ் சமூகத்தை உதாரணமாகக் கொண்டே நிதானிப்போம். தனக்குள் நிகழ்ந்துவரும், மேற்கொள்ளப்பட்டுவரும் சாதிய-பிரதேச ரீதியான உள் ஒடுக்குமுறைகளை ஏற்றுக்கொண்டும், சகித்துக்கொண்டும் வாழ்ந்து கொண்டு, சிங்கள தேசிய இனவாத விவகாரங்களே தாம் எதிர்கொள்ளும் பிரதானமான முதன்மையாக எதிர்கொள்ளப்பட வேண்டிய விடயமாக கருதுகிறது. தன்மீது மேற்கொள்ளப்பட்டுவரும் உள் ஒடுக்குமுறைகளானது (சாதிய-பிரதேச) பண்பாட்டுக் கலாசாரப் பாரம்பரியமாக நீடித்துவரும் நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டதாகவும் நீடித்து வருவதால் சமூக உளவியல் பாதிப்புக்குள்ளான ஒரு சமூகமாகவும் நிலைத்துவிட்டது. அதிலிருக்கக்கூடிய சில மேல்நிலையாக்கச் சலுகைகளின் காரணமாக தன்மீது நிகழ்த்தப்பட்டுவரும் உள் ஒடுக்குமுறைகளையும் சகித்துக்கொண்டே புறநிலையாக எதிர்கொள்ளும் இனவாதப் பிரச்சனையே தாம் எதிர்கொள்ளபடவேண்டிய பிரதான பிரச்சனையாகவும் அதற்கே முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்பதாக சிந்தித்தும் செயலாற்றியும் வருகிறது. நீண்டகாலமாக பண்பாட்டு கலாசார வரலாற்றுப் பின்னணியின் தாக்கத்தின் விளைவால் அது ஒரு சமூக உளவியலாக சாதாரண மக்கள் மீது நிலைத்துவிட்ட சூழலை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் முற்போக்காகவும் ஒடுக்கப்படும் மக்கள் சாரந்த அரசியலைப் (இடது அரசியல்) பேசுபவர்களும் சாதாரண மக்களைப்போன்று  சமூக உளவியல் பாதிப்பின் விளைவிலிருந்து மீள முடியாதவர்களாகவே இருப்பதுதான் கவலை தரும் விடயமாக கருதவேண்டியிருக்கிறது.  

இவ்வாறான உள் ஒடுக்குமுறைகளை மீளவும் நினைவூட்டுவதற்கு எமக்கு பெரியார் தேவைப்படுகிறது. பெரியாரின் சுயமரியாதைக் கோட்பாடும் அவசியமாகிறது. சுயமரியாதைக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டே சமூக நீதி விவகாரங்களையும் வளர்த்தெடுக்க வேண்டும். பெரியாரின் சுயமான தனித்துவமான வளர்ப்பு ‘சுயமரியாதை’என்பது. எனவே பெரியாரை மேலும் வளர்த்தெடுப்பதற்கு அதனையே நாம் ‘சுயமரியாதை தினமாகவும்’கடைப்பிடிக்கவேண்டும். தி.மு,க வைப் ‘போல’ செய்யவேண்டிய அவசிம், தேவை எமக்கு இல்லை.   

பெரியாரின் காலமும் அவர் காலத்தில் சூழந்திருந்த சாதிய தீண்டாமை ஒடுக்குமுறையினை பன்முக வடிவங்களில் தக்கவைத்து பாதுகாத்து வைத்திருந்தது ‘பார்ப்பனீய’ மேலாதிக்க கருத்தியல். இந்நிலையினை எதிர்கொள்ளவேண்டிய நெருக்கடி தமிழகச் சூழலுக்கு இருந்தது. அச்சூழ்நிலையை மாற்றியவர் பெரியார். அவரால்தான் தமிழகத்தில் சமூகநீதிக் கருத்தியலையும் அதற்கேற்ப செயல் வடிவமும் கொடுக்கப்பட்டது என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை. பெரியாரின் காலத்தில் காலனியத்தின் அனுசரணையுடன் பிற சமூகம் அனைத்திற்குமான எதிர் முகமாக நின்றதும் பார்ப்பனீய மேலாதிக்கமே.   

அப்போது பார்ப்பனர் அல்லாதார் எனும் கருத்தியலுக்குள் தலித்துக்களும் ‘உள் இழுக்கப்பட்ட’ நிலையில் இருந்தனர். இன்றைய தற்போதைய சூழலில் நிலமை வேறு! 

பெரியாரை என்றென்றைக்குமாக வளர்த்துச் செல்வதற்கு அவரது மூன்று கருத்தியல் செயல்பாடே எமக்கு அவசியமானது என்பது எனது அபிப்பிராயம். 

இந்திய தேசியம் எனும் முதல் படியில் கால் மிதித்து ஏறி நின்றே பெரியார் சமூகத்தைப் பார்க்க முனைந்தார். அதற்கு காந்தியின் கண்கள் பெரியாருக்கு ஒளியூட்டியது. பின்பு தான் ஏறி நின்ற படியை மிதித்து உடைத்தே சுயமரியாதை எனும் படியால் மேலேறினார். கல்லூரி விடுதி ஒன்றில் நிகழ்ந்த பாரபட்சமான நிகழ்வும் அதற்கு காரணமாக அமைந்திருக்கிறது. அங்கு பார்ப்பனர்களுக்கு தனியாகவும் பிற சாதியினருக்கு தனியாகவும் உணவு பரிமாறப்பட்ட நிகழ்வும் பெரியாரின் உள்ளத்தில் சுயமரியாதைக் கருத்தியல் உதிக்க காரணமாக இருந்திருக்கிறு. இரண்டாவது அன்பு அறிவு எனும் இரண்டு சொற்களுக்குள் ஒரு தத்துவத்தை கட்டமைத்தார். “நான் அன்பு அறிவு என்கிற இரண்டு தத்துவத்திற்குள் மாத்திரம் ஆட்பட்டவன். ஆதலால் எனக்குப் பட்டதை உங்கள் முன் சொல்வதில் எனக்கு ஒரு கடமையும், ஆசையும், மகிழ்ச்சியும் இருப்பதால் சொல்லுகிறேன். மற்றபடி அதைப்பற்றிய உங்கள் கடமைகளை உங்கள் சுதந்திரத்திற்கே அதாவது உங்கள் பகுத்தறிவுக்கே விட்டு விடுகிறேன்.” என்பது அவரவர்களுக்கான சுய நுண் அறிவால் சிந்தித்து செயல்படுங்கள் என்பதே. நான் சொல்வதனைத்தையும் நீங்கள் கண்மூடிப் பின்பற்ற வேண்டும் என்பதும் எனது நோக்கம் அல்ல என்பது  அடிக்கடி, தொடர்ந்து பெரியார் வலியுறுத்தி வந்த விடயமாகும். 

மூன்றாவது: “அரசியலின் பெயரால் அரசியல்காரர்கள், தேசியக்காரர்கள் தங்கள் சுயநலத்திற்கு மக்களை எவ்வளவு தூரம் ஏமாற்றி பாடுபடுத்தி வருகிறார்கள் என்று சொல்லி வந்தேனோ அதைவிடக் கொஞ்சமாவது குறைந்ததல்ல இந்த புரோகிதர்கள் அல்லது பார்ப்பனர்கள் என்கிற ஒரு கூட்டத்தார் மதத்தின் பேரால் நம்மை ஏமாற்றி நமது ஒற்றுமையைக் குலைத்து  நாம் கஸ்டப்பட்டு சம்பாதித்த நமது பொருளையும் கொள்ளைகொண்டு நமது நாட்டையும் சமூகத்தையும் பாழாக்கி நம்மை சுயமரியாதையற்ற மனிதர்களாக நடைப்பிணமாய் வாழும்படி செய்துவருவது.” என்பதாகும். 

குற்றமும் நாடி 

பெரியாரின் ‘அடிப்படையாகக்’ கொள்வதானால் அவை ‘அன்பும்’ ‘அறிவுமாகும்’. அதனூடாகவே அவரின் ‘சுயமரியாதை’ப் பாதையை செப்பனிட்டு வளர்த்தெடுக்க வேண்டியது அவரை பின்பற்றுவதாகக் கூறிக்கொள்ளும் தலைமுறைகளின் பணியாகும். அவரை பின்பற்றுவதாகவும், வளரிளம் தலைமுறைகளுக்கு பெரியாரை அறிமுகப்படுத்துவதாகவும் கருதிக்கொண்டு அவரது காலத்தில்- சூழலில் முன்னோக்கி நகரமுடியாது நின்ற தடைகளை முட்டி மோதி தகர்ப்பதற்காக பயன் பபடுத்திய கருத்தியல் மொழிகள் சொற்கள் அனைத்தையும் எக்காலத்திற்கும் பயன் உள்ளதாகக் கருதும் அறிவியல் மிகவும் சிக்கலானது, ஆபத்தானதும் கூட. எல்லாத் தரப்பினருடனும் அன்பு செலுத்த வேண்டி நிற்கிறது மானுடப் பண்பு. அறிவென்பதோ எதிர்படும் முரண்களை தடைகளை கடந்தும் தாவியும் பாய்ந்து செல்லும் அருவி போன்றது. தடைகளை தாண்டாது அறிவின் நீட்சியை தடுத்து நின்றால் நாம் சதுப்பு நிலமாவோம். 

தமிழகத்து தி.மு.கட்சிகள் பெரியாரை, பெரியாரின் கொள்கைகளை காலத்திற்கும் சூழலுக்கும் ஏற்ப வளரத்தெடுக்கும் தேவையை, அவசியத்தை புறக்கணித்து அவரை ஒரு ‘திரு உருவாக’ (icon)  பெரியாரின் கண்ணையும் வாயையும் மூடிக் கட்டியவாறு. அழைத்துச் செல்கின்றனர். பெரியாரின் காலத்தில் பார்ப்பனர் அல்லாதார் எனும் கருத்துருவாக்கமும் அக்கருத்துருவாக்கத்திற்குள் உள்வாங்கப்பட்ட அனைத்து சாதியினருக்கும் விரோத சக்தியாக பார்க்கப்பட்டது பார்ப்பனீயம். நான் மேலே கூறிவந்த பெரியாரின் எப்போதும் வளர்த்தெடுக்கப்பட வேண்டிய அவதானங்களில்: “அரசியலின் பெயரால் அரசியல்காரர்கள், தேசியக்காரர்கள் தங்கள் சுயநலத்திற்கு மக்களை எவ்வளவு தூரம் ஏமாற்றி பாடுபடுத்தி வருகிறார்கள் என்று சொல்லி வந்தேனோ அதைவிடக் கொஞ்சமாவது குறைந்ததல்ல  இந்த புரோகிதர்கள் அல்லது பார்ப்பனர்கள் என்கிற ஒரு கூட்டத்தார் என்பது மிக முக்கியமான விடயமாகும். பெரியாரின் இவ்வாறான நோக்கூடாக அவரது சிந்தனையை வளர்த்தெடுப்போமாயின் தமிழகத்து பார்ப்பனருக்கு பதலீடாக அதிகார மையத்தில் தற்போது நிற்பது யார்? தனது அதிகார இருப்பிற்காக வாக்குகளை சாதிவாரியாக பிளவுபடுத்தி ஆளும் தமிழக சக்திகளாக இருப்பது பார்ப்பனீயமா? பெரியார் காலத்தில் பார்ப்பனர் அல்லாதார் எனும் ‘முழுமைக்குள்’ உள்வாங்கப்பட்டிருந்த தலித்துக்களின் இன்றைய நிலை என்ன? எனும் கேள்விகள் எமக்குள் விழுந்தெழுந்து கொண்டே இருக்கிறது. 

அரசியலின் பெயரால் (நன்றி பெரியார்) தமிழகத்து இடைநிலைச் சாதியினரின் சாதிய உணர்வுகளை தக்கவைப்பதோடு பெரியாரின் திரு உருவையும் இழுத்துச் சென்றுகொண்டிருக்கும் தரப்பினர் யார்? இன்றைய பெரியாரின் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகும் தரப்பு எதுவாக இருக்கும்?  

தி.மு.கட்சிகளின் சுயநல அரசியலும் அவ் அரசியல் அதிகாரமானது இடைநிலைச் சாதியினரின் நலன்களையும் அவர்களின் தேவைகளையுமே பிரதான கவனப்படுத்தி செயலாற்றும் சக்திகளே இன்றை பெரியாருக்கு கடும் விரோதிகளாக இருப்பார்கள். ‘சுயமரியாதை தினம்’ என தி.மு.கட்சியும், அதன் ‘ஆதரவுப் பெரியாரிஸ்டுக்களும்’ நினைவேந்திச் சென்றால் அது அவர்களது சுயநல அபிலாசைகளுக்கு ஆபத்தாகலாம் என கருதியிருக்கலாம். பெரியாரின் ‘சுயமரியாதை’ கொள்கையை வருடா வருடம் மீட்டெடுக்கும் சுய-சிந்தனை மரபு வளர்ந்து வருமாயின் தமிழகத்து தலித்துக்கள் தமக்கு நிகழ்த்தப்பட்டு வரும் உள் ஒடுக்குமுறையின் உண்மை முகத்தை கண்டு கொள்வார்கள். அதனைப் பெரும்பான்மை இடைநிலைச் சாதியினரின் வாக்கு மேடையில் தனது அரியாசனத்தை நட்டு வைத்திருக்கும் ஆளும் தரப்பினர் நன்கறிந்தே ‘சமூக நீதிக்கான தினம்’ என கொண்டாட திட்டமிடார்களா என ஊகிக்க வேண்டியுள்ளது.  

தமிழக இன்றைய முதலமைச்சர் தளபதி ஸ்டாலின் அவர்களின் நூறு நாள் சாதனைகள் எனக்கூறப்படும் விடயங்களில்  எனக்கு எவ்விதமான ‘மயக்க நிலையும்’ இல்லை. தற்போது தோழர் திருமாவளவன் அவர்கள் முன்வைத்துள்ள வன்கொடுமை பாதுகாப்பிற்கான பிரத்தியேகமான தனித்துவமான நீதி மன்றங்கள் முன்வைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருக்கிறார். அக்கோரிக்கையானது இந்திய அரசியல் சட்டத்தில் மிக நீண்ட காலமாக ‘தூக்கத்தில்’இருக்கிறது. அதை எழுப்பி நடமாட விடும்படி தோழர் திருமாவளவன்தான் ‘தளபதியிடம்’ கேட்கவேண்டியும் இருக்கிறது.  

வன்கொடுமைச் சட்டத்திற்கான பிரத்தியேகமான நீதிமன்றத்தை அமுல்படுத்துவதோடு அதனது செயல்பாடுகள் எவ்வாறு நியாயமான முறையில் நடைபெறப்போகிறது என்பதைப் பொறுத்தே தற்போதைய தமிழக அரசு மீதான எனது அபிப்பிராயத்திலும் மாற்றங்கள் நிகழமுடியும். இவ்வாறான எனது தி.மு.கட்சியின் மீதான விமர்சனப்பார்வையானது அவர்களது அரசியல் அதிகாரம் குறித்ததாகவும் அவ் ஆளும் ஆதிக்க அதிகாரமானது தமிழக தலித் சமூகங்களுக்குள் நிகழ்த்தப்பட்டுவரும் உள்ளொடுக்குமுறைகளை மையமாகக் கொண்டது. அதனூடாக அவர்களது சுயமரியாதை உணர்வு மழுங்கடிக்கப்பட்டு வரும் தொடர்ச்சியை பெரியாரின் சுயமரியாதைக் கோட்பாட்டு வழியாக சிந்திப்பதை வேண்டி நிற்பதுமாகும்.  

தற்போது தமிழகத்தில் நடைபெற்றுவரும் திராவிட-தமிழ்த்தேசிய ‘அடையாள’ அரசியல் மோதலுக்குள் பேசப்பட்டுவரும் திராவிட இன அடையாளக் கருத்தியல் விமர்சனங்களுக்கும், தமிழக திராவிட ஆளும் அரசியல் ஆதிக்கங்கள் மீது நான் வைக்கும் விமர்சனப் பார்வைக்கும் எவ்வித நெருக்கமும் இல்லை. 

அவற்றுள் மிகைநாடி 

கடந்தகாலங்களில் இலங்கையில் செயல்பட்டு வந்த இலங்கை திராவிட முன்னேற்றக் கழகங்களின் செயல்பாடுகளும் அதில் ஏ.இளஞ்செழியனின் இ.தி.மு.க. செயல்பாடுகள் என்பது தனித்துவமானது. இளஞ்செழியனால் எழுதப்பட்ட ‘ஈழத்தில் பெரியார் முதல் அண்ணா வரை’ எனும் நூலில் உள்ள தகவல்கள் ஆதாரங்கள் என்பன எம்மை (என்னை)  வேறொரு வகையில் நிதானிக்க தூண்டுகிறது. ஆரம்பத்தில் இலங்கை தலைநகரை மையமாகக் கொண்டு இயங்கி வந்திருக்கிறது இ.தி.மு.கழகம். இடதுசாரிகளிடம் எவ்வாறு பிளவுகள் ஏற்பட காரணமாக இருந்ததோ அதேபோன்றே தமிழகத்தில் பெரியாரின் கழகத்திலிருந்து அண்ணா, பெரியார் பிளவுகள் ஏற்பட்டபோது இலங்கையிலும் மூன்று பிரிவுகளாக இ.தி.மு.க பிளவுபட்டது. இதில் இளஞ்செழியனின் இ.தி.மு.கழகம் தனித்துவமானது. அது பண்பாட்டு கலாசார கூறுகளை பெரியாரின் சுயமரியாதைக் கொள்கையிலிருந்து பெற்றுக்கொண்டபோதும் அரசியல் ரீதியாக இலங்கையை மையப்படுத்திய அரசியலையே முன்வைத்து செயல்பட்டிருக்கிறது.  

இங்கே நான் கவனப்படுத்த விரும்புவது தமிழக தி.மு.கட்சியின் ‘சமூக நீதிக்கான’ தினத்தை ‘போலச் செய்யும்’ வகையிலும், பெரியாரின் சொற்களும், அக்காலச் சூழலை நோக்கிய  பெரியாரின் குரல்கள் யாவுமே எக்காலத்துக்குமானதாக ‘போலச் செய்வது’ போன்ற வழிமுறைகளை மேற்கொண்டவர் அல்ல ஏ.இளஞ்செழியன் என்பதை.  

பெரியார் சுயமரியாதை இயக்கத்திலிருந்து திராவிட இயக்கமாக பரிணமித்தபோது இலங்கையிலும் அது ‘போலச் செய்யும்’ நிலை இருந்தது. அவ்வாறு ‘போலச் செய்யும்’ தரப்பினரிடம் மாறுபட்டு அதனை விமர்சனத்திற்குட்படுத்தி  இலங்கை வாழ் இனங்களுக்கிடையிலான  அரசியல் பண்பாட்டு கலாசார விழுமியங்களை கருத்தில் கொண்டு தனது சுயமான சிந்தனையூடாக செயல்பட்டார். தமிழகத்தில் திராவிட கழகம் என்பது தனி நாடு எனும் கருத்து நிலையில் முன்வைக்கப்பட்டிருக்கிறது. எமக்கு அது பொருத்தமற்றது. நாமோ இங்கு வாழும் இனங்களை முன்னிலைப்படுத்தி செயல்படவேண்டியிருப்பதால் நாம் இலங்கை ‘திராவிடர்’ கழகம் எனும் பெயரில்தான் செயல்படவேண்டும் என சுயமாக சிந்தித்து செயல்பட்டார். இளஞ்செழியனின் அப்போதைய இ.திராவிடர் கழகமானது இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் அரசியல் பண்பாட்டுப் பணிகளை மேற்கொண்டிருப்பதை அவரது ‘பெரியார் முதல் அண்ணா வரை’ எனும் நூலூடாக அறியமுடிகிறது. இ.திராவிடர் முன்னேற்றக் கழகமானது  இளஞ்செழியன் தலைமையில் 1958 களில் சாதி எதிர்புப் போராட்டங்களை  வடக்கில் மேற்கொண்டிருக்கிறது. இளஞ்செழியன் தமிழ் மிதவாத அரசியல் தலைமைகளுடன் இணைந்து செயல்பட்டபோதும் அவர் வன்முறையற்ற தீவிர அரசியல் சமூக செயல்பாட்டாளராக அறியவும் முடிகிறது. 1969ல் இ.திராவிடர் முன்னேற்றக் கழகம் யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்த கூட்டத்தில் இளஞ்செழியன் ஆற்றிய உரையே அவரது அரசியல் சமூக செயல்பாட்டிற்கு மிக நெருக்கடியை கொடுத்திருக்கிறது: ‘’தமிழ் மக்களது எதிர்காலத்திற்கென இரண்டு கொள்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஒன்று, எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தலைமையிலான தமிழரசுக் கட்சியின், தமிழ் மக்களின் எல்லாப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு சமஷ்டி அரசை அமைப்பது என்பதாகும். இரண்டாவது வி. நவரத்தினம் தலைமையிலான சுயாட்சிக்கழகம் சுயாட்சிக் கொள்கையை அதாவது சுதந்திரத் தமிழ் ஈழ கொள்கையை முன்வைத்துள்ளதாகும். இதே கொள்கையையே சி.சுந்தரலிங்கம் தலைமையிலான அடங்காத் தமிழர் முன்னணியும் முன்வைத்துள்ளது. தமிழரசுக் கட்சி முன்வைத்துள்ள சமஷ்டி கொள்கையும், சுயாட்சி கழகம் முன்வைத்துள்ள தமிழீழ கொள்கையும் வடகிழக்கு தமிழ் மக்களுக்கு முன்வைக்கப்பட்டுள்ளன. அப்படியானால் வட-கிழக்கு தவிர்ந்த பிரதேசங்களில் வாழ்கின்ற 15 இலட்சம் இந்திய வம்சாவளி தமிழ் மக்களின் நிலை என்ன? எட்டு இலட்சம் இஸ்லாமிய மக்களின் நிலை என்ன? 

இந்நிலையில் இப்போது உங்கள் முன்னிலையில் இலங்கை திராவிடர் முன்னேற்றக் கழகம், விஞ்ஞான பூர்வமான மார்க்சிய சிந்தனையின் அடிப்படையிலான புரட்சிகர சோசலிசக் கொள்கையை முன்வைக்கிறது. இந்த புரட்சிகர சோசலிசக் கொள்கையின் மூலமே அனைத்து தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு மட்டுமல்ல சிங்கள மொழி பேசும் விவசாய தொழிலாளர்கள் உட்பட ஒடுக்கப்பட்ட எட்டு இலட்சம் முஸ்லிம் மக்களுக்கும் விடுதலை கிட்டுமென்ற கொள்கையை தேர்ந்தெடுத்துள்ளோம். இந்த மூன்று கொள்கைகளில் தமிழ் மக்களாகிய நீங்கள் எதனைத் தெரிவு செய்யப் போகின்றீர்கள்? சமஷ்டி அரசொன்றை அமைப்பதென்றால், அதற்கு நீங்கள் தயார் நிலையில் இருக்கிறீர்களா? தமிழரசுக் கட்சி சமஷ்டியைப் பெறுவதற்காக நடத்திய சத்தியாக்கிரகம் என்ற சப்பாணிப் போராட்டம் தோல்வியில் முடிந்து விட்டதை நீங்கள் அறிவீர்கள். தனியான தமிழ் ஈழம் பெறுவதென்றால் தமிழரசுக் கட்சி காட்டிய சப்பாணி சத்தியாக்கிரக போராட்டத்தினால் சாத்தியம் என்பது கற்பனையிலும் நினைத்துப் பார்க்க முடியாது. தனியான சுதந்திர ஈழம் பெற வேண்டுமானால் தமிழ் மக்கள் ஆயுதப்போராட்டத்துக்கு தயாராக வேண்டும். கொரில்லா யுத்தம் செய்ய வேண்டும். தனித் தமிழ் இராணுவம் அமைக்கவேண்டும். வட-கிழக்கு பிரதேசங்களில் இருக்கும் பொலிசாரையும் பொலிஸ் நிலையங்களையும் இரவு 12 மணிக்கு முற்றுகையிட்டு ஆயுதங்களை உங்கள் கைவசப்படுத்த வேண்டும். வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்களை சேகரிக்க வேண்டும். தமிழ் நாட்டில் தளம் அமைக்க வேண்டும். இவ்வளவையும் செய்த பின்னர் அதிகாரத்தில் இருக்கின்ற சிங்கள பேரினவாத முதலாளித்துவ அரசுக்கு தமிழீழத்தை விட்டு வெளியேறுங்கள் என்று காலக்கெடு கொடுக்க வேண்டும். அக்காலக் கெடுவிற்குள் வெளியேறத் தவறினால் யுத்தப் பிரகடனம் செய்துவிட்டு யுத்தத்தை தொடர வேண்டும். இதற்கெல்லாம் நீங்கள் தயாரா? இலங்கை திராவிடர் முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தளவில் இது நடைபெற முடியாத ஒன்றாகும். வட-கிழக்குப் பிரதேசத்தில் பலம் மிக்க ஒரு முதலாளித்துவ வர்க்கம் இல்லை. முதலாளி வர்க்கம் ஒன்றுக்குத்தான் நாடு தேவை. அதிலும் கிழக்கு மகாணங்களில் உள்ளவர்கள் உழைக்கும் மக்களாவார்கள். பெரும் பகுதியினர் சாதிய ரீதியிலும், சமூக ரீதியிலும் ஒடுக்கியும், ஒதுக்கியும் வைக்கப்பட்டவர்களாவார்கள். அம்மக்கள் பொதுக்கிணறுகளில் தண்ணீர் அள்ள முடியாது. பொது உணவு விடுதிகளில் உணவருந்த முடியாது. கோயில்களில் உள் நுழைய முடியாது. இந்நிலையில் இவர்கள் தமிழீழ போராட்டத்தில் இணைவார்களா?  நாலு லட்சம் ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட இம்மக்கள் தமிழ் ஈழம் அமைந்தால் அதிகாரம் யார் கைக்குப் போகும், என்ற பீதியுடனேயே வாழ்கின்றார்கள். அவர்கள் தமிழீழ போராட்டத்தில் இணைய வேண்டுமானால் சாதிக் கொடூரங்கள் அழிக்கப்படல் வேண்டும். சாதி முறை ஒழிக்கப்பட வேண்டும். அவர்களும் சமமாக மதிக்கப்பட வேண்டும் தமிழீழ கொள்கையை முன்வைத்திருக்கின்ற தலைவர்கள் இதற்கு தயாரா? முன் வருவார்களா?‘’ இதுவே அப்போதைய இலங்கை திராவிடர் கழகத்தின் ‘சுயமரியாதைக் குரலாக’ ஒலித்தது. இவ்வாறான உரை இளஞ்செழியன் தனி நாட்டிற்கான பிரிவினையையும் அவரே ஆயுதப்போராட்டத்தையும் முன்வைப்பதாக  12-3-1967ம் ஆண்டின் வீரகேசரி பத்திரிகையில் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் தேர்தல் பிரச்சார செய்தியாக இவ்வாறு பதிவாகியிருக்கிறது: ‘’இன்று இலங்கையை பெரும் அபாயம் சூழ்ந்துள்ளது. சென்னை இராச்சியத்தை தி.மு.க கைப்பற்றி தமிழ் அரசாங்கம் ஒன்றினை நிறுவியுள்ளது. அக்கட்சியினர் கூடியவிரைவில் வடக்கையும் கிழக்கையும் கைப்பற்றிக் கொள்வதோடு மலேசியாவின் சில பகுதிகளையும் கைப்பற்றி, மாபெரும் தமிழ் இராச்சியம் ஒன்றினை நிறுவினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இவ்விக்கட்டான நிலைமையில் இன்று ஆட்சிபுரியும் ஐ.தே.க. அரசாங்கம் தமிழரசுக் கட்சியுடன் சேர்ந்து அவர்களுக்கு பெரும் சலுகைகளை வழங்கிவருகிறது. மாவட்ட சபைகள் அமுல்படுத்தப்பட்டால் நாமெல்லாம் தமிழர்களுக்கு அடிமைப்பட வேண்டிய நிலை உருவாகும். நானும் சாஸ்திரியும் செய்துகொண்ட இலங்கை இந்திய ஒப்பந்தம் இன்னமும் அமுல்படுத்தப்படாமல் இருப்பதன் மர்மம் யாது? இங்குள்ள இந்தியத் தமிழர்களை தங்களால் ஏற்றுக்கொள்ள முடியாதென்று இன்று திராவிடக் கட்சியின் தலைவர் அண்ணாத்துரை கூறிவருகிறார். நாம் ஆட்சிசெய்தபோது திராவிடக் கட்சியைச் சேர்ந்த ஒரு அரசியல்வாதியையாவது நாம் இந்நாட்டுக்கு வர அனுமதிக்கவில்லை. ஆனால் தேசிய அரசாங்கம் நிறுவப்பட்டதும் திராவிடக் கட்சியின் முக்கிய தலைவரான எம்.ஜி.ராமச்சந்திரனை இராஜாங்க மரியாதையுடன் இந்த அரசாங்கத்தினர் பத்திரிகையொன்றின் பெயரை சாட்டாக வைத்துக்கொண்டு வரவேற்றனர்.  

அடுத்த மே மாதத்தில் திரு.அண்ணாத்துரையும் வருவதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. தமிழரசுக் கட்சியினரும், நாம் தமிழர் கட்சியினரும், (இளஞ்செழயனின் தீவிர அரசியல் செயல்பாடுகளால் அவர்களை நாம் தமிழர் கட்சி என சிங்கள இனவாத தரப்பினர் பிரச்சாரப்படுத்தியிருந்தினர். அழுத்தம் அசுரா) தி.மு.க. கட்சியினரும்  சேர்ந்துகொண்டு என்ன செய்யப் போகிறார்களோ தெரியவில்லை‘’. என தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா பேசியிருக்கிறார்.  

‘பெரியார் முதல் அண்ணாவரை’ எனும் நூலின் உள்ளடக்கம் குறித்த விரிவான பார்வையை மல்லியப்பு சந்தி திலகரின் மூன்று நூல்களுக்கான கருத்துப்பகிர்வில் ஏற்கனவே பதிவு செய்திருந்தேன். 

பெரியாரின் சுயமரியாதைக் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட சுயமான தனித்துவமான சிந்தனை இலங்கையில் தோழர் ஏ.இளஞ்செழியனால் ஊன்றப்பட்டுவிட்டது. ஆகவே நாம் பெரியாரையும் இளஞ்செழியனையும் எம்காலச் சூழலுக்கேற்ப எமது சுய சிந்தனையூடாகவே வளர்த்தெடுக்கவேண்டும் அதற்கு தமிழக தி.மு.கட்சியைப் ‘போலச் செய்வதை’ தவிர்த்து பெரியாரின் பிறந்த தினத்தை ‘சுயமரியாதை தினமாகவே’ கொண்டாட வேண்டும்.  

மிக்க கொளல் 

இலங்கையில் சமூகநீதிக்கான போராட்டங்களுக்கான தேவை குறித்த இவ்வுரையாடலை ஏ.இளஞ்செழியன் மேற்கொண்ட சுயமரியாதை இயக்க செயல்பாட்டின் தொடர்ச்சியாக வளர்த்தெடுக்க முடியும். அது இலங்கை வாழ் இனங்கள் அனைத்துடனும் இணைந்த செயல்பாடாக அமையவேண்டும். இலங்கைவாழ் இனங்கள் ஒவ்வொன்றும் தமக்குள் நிகழ்த்தப்பட்டுவரும் உள் ஒடுக்குமுறைகளை கண்டுணர்ந்து கொள்ளும் வகையிலான சுயமரியாதைக் கருத்தியலை புரியவைப்பதில் இருந்து ஆரம்பிக்க வேண்டியிருக்கும். சுயமரியாதைக் கருத்தியலூடாக கண்டடையும் உள் ஒடுக்குமுறைகளுக்கும் புறநிலையாக எதிர்கொள்ளும் ஆளும் அதிகார அரசுகளின் இன ஒடுக்கு முறைகளுக்குமான வேறுபாட்டினை புரிந்துகொள்வதோடு, எதற்கான முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதையும் தீர்மானிக்க முடியும். இதில் ஒரு சமூகத்தின் உள் ஒடுக்குமுறைக்கு எதிரான கருத்து நிலைகளை அனைத்து சமூகங்களுக்குமான கருத்து நிலையாகவும் செயல்பாடாகவும் தீர்மானிக்கமுடியாது. குறிப்பாக மலையக மக்களின் வாழ்வியலை  இலங்கையில் வாழும் பிற இன மக்களின்  சமூக-வாழ்வியல் அனுகூலத்துடன் ஒப்பிட்டு சிந்திப்பதற்கான அடிப்படை அம்சத்தைக் கொண்டிருக்கிறதா? அதற்கான சமூக-அரசியல் அங்கீகரத்தைக் கொண்ட சமூகமாக மலையக சமூகம் உள்வாங்கப்பட்டிருக்கிறதா? போன்ற விடயங்களை அச்சமூகத்தின் ஆலோசனைகளையும் அபிப்பிராயங்களையும் கேட்டு அறிந்து செயலாற்றும் தன்மையைக் கொண்டிருப்பதும் மிக அவசியமானது. 

எனவே பெரியாரை அவரது கொள்கையை முன்வைத்து செயல்படுவதென்பது பெரியார் சொன்னதையெல்லாம் ‘போலச் சொல்வதாகவோ’ பெரியார் செய்தவைகளை எல்லாம் ‘போலச் செய்வதாகவோ’ அமைந்து விடக்கூடாது.  

இலங்கையில் நாம் சுயமரியாதை எனும் கருதுகோளின் அடிப்படையில் சமூகநீதிச் சிந்தனைக்கான உரையாடலை மேற்கொள்ள வேண்டுமாயின்; அவை சிங்கள, மலையக, முஸ்லிம், தமிழ் என அனைத்து இனங்களோடும் இணைந்து மேற்கொள்ளும் முயற்சியாகவும் அமைய வேண்டும்.