எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம் பகுதி – 11

எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம் பகுதி – 11

 — அ.வரதராஜா பெருமாள் —                             பகுதி – 11 

இலங்கை தற்போது எதிர்நோக்கும் அந்நியச் செலாவணி நெருக்கடி, நாட்டில் பொருட்களின் விலையேற்றம் மற்றும் அடிப்படையான பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடுகள் போன்றவற்றிற்கு, வெளிநாடுகளுடனான இலங்கையின் ஏற்றுமதி – இறக்குமதி மற்றும் பொருளாதார உறவுகளின் பண்புகளே பிரதான காரணமென பொதுவாக கூற முடியும். உலகில் எந்த நாடும் ஏனைய நாடுகளுடன் பொருளாதார உறவுகளின்றி மூடப்பட்ட பொருளாதாரமாக இருக்க முடியாது. அவ்வாறு எக்காலத்தும் இருந்ததில்லை. ஆனால் வெளிநாடுகளுடனான பொருளாதார கொடுக்கல் வாங்கல்கள் எவ்வாறு அமைந்துள்ளன என்பது கவனத்துக்கு – பரிசீலனைக்கு உரிய பிரதானமான விடயங்களாகும்.  

உலகின் மிகப் பல நாடுகளோடு ஒப்பிட்டால் இலங்கையின் ஏற்றுமதி இறக்குமதி வர்த்கமானது அதன் மொத்த தேசிய உற்பத்தியில் மிக அதிகமான வீதாசாரத்தைக் கொண்டிருக்கிறது என குற்றம் சாட்ட முடியாது. மிகப் பல நாடுகளின் ஏற்றுமதி வர்த்தகம் 40 சதவீதம் அல்லது 50 சதவீதமென இருக்கும் நிலையில் இலங்கையின் ஏற்றுமதி வர்த்தகம் 25 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது. அதேபோல மிகப் பல நாடுகளின் இறக்குமதி வர்த்தகம் அவற்றின் தேசிய வருமானத்தோடு ஒப்பிடுகையில் 50 சதவீதம் அல்லது 60 சதவீதம் என இருக்க இலங்கையின் இறக்கமதி வர்த்தகம் 30 சதவீதம் என்ற அளவிலேயே உள்ளது. எனவே இலங்கையின் பொருளாதாரம் கொண்டிருக்கும் எற்றுமதி – இறக்குமதி வர்தத்தகத்தின் அளவை மட்டும் வைத்துக் கொண்டு அதன் சிக்கல்களை ஆராயமுடியாது.   

ஒரு நாடு அதன் தேசிய வருமானத்தோடு ஒப்பிடுகின்ற பொழுது அதன் ஏற்றுமதி – இறக்குமதி வர்த்தகத்தின் அளவு கொண்டிருக்கும் வீதாசாரத்தின் முக்கியத்துவத்தை விட அந்த நாட்டின் ஏற்றுமதி – இறக்குமதி வர்த்தகத்தின் உள்ளடக்கங்களினுடைய பண்புகள் எவ்வாறாக உள்நாட்டுப் பொருளாதாரத்தோடு தொடர்புபட்டுள்ளன என்பதை வைத்தே அந்த நாட்டின் ஏற்றுமதி – இறக்குமதி வர்த்தகம் தேசிய பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் சாதக பாதகங்களை மதிப்பிட முடியும். அதேவேளை நாட்டின் தேசிய பொருளாதாரத்தில் உற்பத்தித் துறைகளின் கட்டமைப்புகள் கால தேச வர்த்தமானங்களுக்கேற்ப எந்தளவு தூரம் முன்னேற்றங்களை ஏற்படுத்திக் கொள்கிறது என்பதுவும் அந்த நாட்டின் ஏற்றுமதி – இறக்குமதிப் பொருளாதாரத்தின் சாதகபாதகங்களை நிர்ணயிக்கின்றன. அந்த வகையிலேயே இலங்கையின் ஏற்றுமதி – இறக்குமதி வர்த்தகம் தொடர்பில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகள் – சிக்கல்கள் – நெருக்கடிகளை நோக்குதல் வேண்டும். 

இலங்கையின் ஏற்றுமதி – இறக்குமதி வர்த்தகத்தின் தன்மைகளையம் இன்று ஏற்பட்டுள்ள மிக மோசமான அந்நியச் செலாவணி நெருக்கடியையம் ஒரு சுருக்கமான வரலாற்றுக் கண்ணோட்டத்தின் பின்னணியில் அணுகுவதே சரியானதாக இருக்கும்.  

இன்றைய நெருக்கடிகளுக்கான அடித்தளங்கள் இன்று நேற்று இடப்பட்டவையல்ல. பிரித்தானிய காலனித்துவ ஆட்சியாளர்கள் இலங்கையின் பொது நலன்களைப் புறக்கணித்து விட்டு தமது நலன்களுக்கு ஏற்ற வகையாக இலங்கையின் மொத்த பொருளாதார கட்டமைப்பையும் ஆக்கினர். அவர்களிடமிருந்து இலங்கை ஆளும் கூட்டத்தினர் அதிகாரத்தை எடுத்துக் கொண்ட போதிலும், சுதந்திர இலங்கையின் பொருளாதாரத்தை இலங்கையினுடைய நலன்களின் கோணத்திலிருந்து கட்டியெழுப்புவதற்கு மாறாக ஏற்கனவே நிலவிய பொருளாதாரக் கோணல்களை மேலும் சிக்கல்களுக்கு உள்ளாக்கும் வகையாகவே தொடர்ந்தார்கள். பேச்சு பல்லக்கில் ஏற்றுவது போல இருந்தாலும் நடைமுறைகள் பாதாளத்தில் தள்ளி விடுபவையாகவே அமைந்தன. மக்கள் நலன்புரி அரசு என்று சொல்லிக் கொண்டு நாட்டின் பொருளாதாரத்தை நாசமாக்கும் கொள்கைகளையே நடைமுறைப்படுத்தி வந்துள்ளார்கள்.   

டட்லி நல்லவர் ஜே.ஆர்தான் கூடாதவர்: சந்திரிகா திறமையானவர் பிரேமதாசா கெட்டவர்: ரணில் சரியானவர் மஹிந்ததான் சரியில்லை: மஹிந்த பரவாயில்லை கோத்தபாயாதான் மோசமானவர்; என அவ்வப்போது நிலைமைக்கேற்ப வெளிப்படுத்தப்படும் வாக்கியங்களெல்லாம் எந்த அறிவார்ந்தோர் சபையிலும் கணக்கில் எடுக்கப்பட முடியாத கருத்துக்களே. இவர்களெல்லோருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பதே இலங்கையின் வரலாறு. இது அரசியலில் மட்டுமல்ல பொருளாதார விவகாரத்திலும் அதுவே என்பதை வாசகர்கள் தெளிவாகப் பரிந்து கொள்ள வேண்டும். 

தோழர் என்.எம்.பெரேரா மற்றும் தோழர் பீட்டர் கெனமன் ஆகியோர் தலைமை தாங்கிய இடதுசாரிகள் ஓரளவுக்காயினும் ஆட்சியமைப்பில் செல்வாக்கு செலுத்துவதற்கு கிடைத்த ஐக்கிய முன்னணி ஆட்சிக் காலத்திலேயே இலங்கையின் பொருளாதாரம் அனைத்து நெருக்கடிகளையும் சமாளித்துக் கொண்டு தலைநிமிர முயற்சித்தது. ஆனால் அந்த ஐக்கிய முன்னணியிலிருந்த பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்கா போன்ற பிற்போக்கு சக்திகள் அவர்களையும் ஐந்து ஆண்டுகளில் தூக்கி எறிந்து விட்டார்கள். ஆனாலும் அவர்கள் உழுது விதைத்தவைகள் பலாபலன்களை தரும் நிலை ஏற்பட்டபோது ஜே.ஆர்.ஜெயவர்த்தனா தனது திறந்த நவ தாராள பொருளாதாரக் கொள்கை மூலம் எல்லாவற்றையும் தலைகீழரக மாற்றி விட்டார். அதன் பின்னர் ஆட்சி பீடத்தை அலங்கரித்த அனைவருமே ஜே.ஆர். வகுத்த பாதையியேலேயே தடம் பதித்து நடந்து வருகின்றனர். இதில் அவர் முற்போக்கானவர், இவர் பிற்போக்கானவர் என்று சொல்வதற்கு இடமேயில்லை.    

பிரித்தானிய காலனித்துவம் விட்டுப் போன போதிலும் – அவர்கள்  உருவாக்கிய பொருளாதார பண்பாடே இன்னமும் தொடருகிறது 

இலங்கையை தேயிலைக்கும் கோப்பிக்கும் மற்றும் வாசனைத் திரவியங்களுக்குமான களமாக்கி அவற்றை தமது தேவைக்கும் ஏனைய மேலைத் தேச நாடுகளுக்கு வியாபாரம் செய்வதற்குமாகவே இலங்கையின் பொருளாதாரத்தை பிரித்தானியர்கள் கட்டியமைத்தனர். 1931ம் ஆண்டு இலங்கையில் சர்வசன வாக்குரிமை அறிமுகப்படுத்தப்பட்டு பரந்துபட்ட மக்களின் வாக்குகளைப் பெற்ற பிரதிநிதிகள் ஆட்சிக் கட்டிலில் அமரும் நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து உள்ளுர் விவசாயிகள் பற்றிய அக்கறைகள் ஆரம்பித்தன. விவசாய அபிவிருத்தி என பல நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. ஆனாலும் அவை இலங்கையின் ஏற்றுமதி – இறக்குமதி வர்த்தகத்தின் கட்டமைப்பில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. அதற்கான திட்டங்களுடனான செயற்பாடுகள் எதுவும் முனைப்புடன் மேற்கொள்ளப்படவில்லை.  

இலங்கை சுதந்திரமடைந்து முதலாவது தசாப்தமான 1950களில் முதற்பகுதியை ஆண்ட ஐக்கிய தேசியக் கட்சி ஏற்கனவே இலங்கையின் வெளிநாட்டுப் பொருளாதார உறவுகள் சென்று கொண்டிருந்த பாதையில் எந்தவித மாற்றத்தையும் மேற்கொள்ளவில்லை. மாற்றத்துக்கான எந்தவித முயற்சியுமின்றி தொடர்ந்தும் அதே பாதையிலேயே இலங்கையின் பொருளாதார அமைப்பை இழுத்துச் சென்றது. 1956 தொடக்கம் 1960ம் ஆண்டு வரை நடந்த சிறி லங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சியின் போது சீனா மற்றும் சோவியத் யூனியனுடனான வெளிநாட்டு வர்த்தக உறவுகள் ஆரம்பக்கப்பட்டன. அதற்கு மேல் அந்த ஆட்சியிலும் இலங்கையின் வெளிநாட்டு வர்த்தக கட்டமைப்பில் எந்தவித மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை. 

1960களின் முதற் பாதிப்பகுதியிலும் சிறி லங்கா சுதந்திரக் கட்சியே அதிகாரத்தில் இருந்தது. இக்கால கட்டத்தில் வெளிநாட்டு வர்த்தகம் தொடர்பில் அந்நியச் செலாவணி பற்றாக்குறை ஒரு முக்கிய பிரச்சினையாக ஏற்படத் தொடங்கியது. இதற்கு மாற்று ஏற்பாடாக ஒரு வரையறுக்கப்பட்ட இறக்குமதிக் கட்டுப்பாடுகளை விதித்து ஏற்றுமதியை ஊக்குவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இலங்கையின் உற்பத்திப் பொருளாதாரக் கட்டமைப்பில் எந்த வகையிலும் தீவிரமான முன்னேற்றங்கள் ஏற்படாதமையினால் இலங்கையின் வெளிநாட்டு வர்த்தகப் பொருளாதாரம் தொடர்ந்தும் அதே குருட்டுப் பாதையில் இருந்து விலகாமலே சென்றது.  

இரண்டாம் உலக மகா யுத்த காலத்தில் இலங்கை மக்கள் தீட்டப்பட்ட கோதுமை மாவுக்கு பழக்கப்படுத்தப்பட்டார்கள். அதைத் தொடர்ந்து படிப்படியாக அந்த மாவு இலங்கையர்களின் வாழ்வில் தவிர்க்கமுடியாத – கட்டாயமான ஓர் உணவப் பண்டமாக ஆகி விட்டமை அனைவரும் அறிந்த விடயமே. அதனை மாற்றுவதற்கு 1956 தொடக்கம் 1965 வரை ஆண்ட சிறி லங்கா சுதந்திரக் கட்சியினாலும் முடியவில்லை. மாறாக சீனாவிலிருந்து அரிசியை இறக்குமதி செய்வதை ஆரம்பித்து வைத்தார்கள். விவசாயக் காணி உரிமைகள் தொடர்பாக சில சட்டங்களை உருவாக்கினார்களாயினும் அது இலங்கையின் விவசாய சமூக உறவுகளில் முற்போக்கான மாற்றங்களை ஏற்படுத்திய போதிலும் சீவனோபாய விவசாய உற்பத்திக் கட்டமைப்பு எனும் நிலையிலிருந்து முன்னேறும் கட்டத்துக்கு இலங்கையின் விவசாய அமைப்பை எடுத்துச் செல்லவில்லை. 

1930களில் இருந்து விவசாய அபிவிருத்தி எனும் அடிப்படையில் பெரும் நீர்ப்பாசனத் திட்டங்கள், மிகப் பரந்த அளவில் அரசின் உதவியுடனான விவாசாயக் குடியேற்றத் திட்டங்கள் மேற் கொள்ளப்பட்டன. விவசாயிகள் மற்றும் கிராமிய அபிவிருத்தி கருதி அரசாங்கம் பல வங்கிகளை உருவாக்கியது. பொருளாதார அபிவிருத்திக்கு பரந்த அளவில் கல்வி அறிவு அவசியம் என்ற வகையின் இலவசக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது – பள்ளிக்கூடங்கள் தேசிய மயமாக்கப்பட்டன. பொருளாதார உட்கட்டமைப்பின் விருத்தியைக் கருத்திக் கொண்டு பேரூந்து போக்குவரத்துக்கள் அரச மயமாக்கப்பட்டன. எவ்வாறான  போதிலும் அவை இலங்கையை உணவு விடயத்தில் கூட தன்னிறைவு கண்ட ஒரு நாடாக ஆக்கவில்லை என்பதோடு ஆக்கத் தொழிற் துறைகளிலும் காத்திரமான மாற்றங்கள் எதனையும் ஏற்படுத்தவில்லை.   

நெருக்கடிகளின் போதே விழிக்கிறார்கள் 

உலக நடப்புக்கு ஏற்ற முன்னெடுப்புகள் இல்லை. 

1953ம் ஆண்டு அரிசி விலையேற்றத்தால் ஐக்கிய தேசியக்கட்சி பெரும் அரசியல் எதிர்ப்பைச் சம்பாதித்தது 1956ல் ஆட்சியை இழக்க நேரிட்டது. இதனால் 1965ல் ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் உணவுப் பண்டங்களின் விலைகள் மற்றும் மக்கள் நலன் சார் மான்ய திட்டங்கள் விடயத்தில் மிகவும் கவனமாக நடந்து கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு தன்னைத் தானே ஆட்படுத்த வேண்டியதாயிற்று. இதனால் நுகர்வுப் பொருட்களின் இறக்குமதியில் தாராளப் போக்கை கடைப்பிடித்தது. ஆனால் 1960களின் முற்பகுதியில் ஆரம்பித்த அந்நியச் செலாவணி பற்றாக்குறைப் பிரச்சினை 1965ல் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியில் ஒரு பொருளாதார நெருக்கடியாகியது. இதற்கு மாற்றாக ஐ.தே.க. ஆட்சி இறக்குமதிக் கட்டுப்பாடுகளை விதிக்கவோ அல்லது இறக்குமதி பிரதியீட்டு பொருளாதாரக் கொள்கையைக் கடைப்பிடிக்கவோ இல்லை. மாறாக பெருமளவில் அந்நிய கடன்களை உதவியாகப் பெற்று ஏற்றுமதி வருமானத்துக்கும் இறக்குமதி செலவுக்கும் இடையிலான இடைவெளியை சமாளிக்கும் பொருளாதாரக் கலாச்சாரத்தை ஆரம்பித்து வைத்தது. எனவே இன்று இலங்கை எதிர்நோக்கும் அந்நியச் செலாவணி நெருக்கடி தலைக்கு மேல் வெள்ளம் போயிருப்பது போல ஆனதற்கு அத்திவாரமிட்டது ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியே என்பது தெளிவு.   

1965 – 70 ஆண்டுகளில் ஐ.தே.க. ஆட்சியின் போது இலங்கையில் ‘அதிக உணவை உற்பத்தி செய்வோம்’ என்ற சுலோகத்தடன் நெல் உற்பத்தியின் அதிகரிப்புக்காக ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அபிவிருத்திக்கான அமைப்பு மற்றும் உலக வங்கி ஆகியவற்றின் திட்டத்தை ஏற்று தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதுவே’பசுமைப் புரட்சி’ எனப் பெயரிடப்பட்டது. டிரக்டர்கள், இரசாயன உரப்பாவனைகள், இரசாயன கிருமி நாசினிகள் போன்றன இலங்கையின் வயல்களை ஆக்கிரமிக்கும் வகையில் அவற்றின் பாவனைகள் பரவலாக்கப்பட்டன. ‘இளைஞர்கள் விவசாய அபிவிருத்தித் திட்டம்’, விவசாய ‘காணி படை’ என நாட்டின் பல்வேறு பாகங்களிலும் இளைஞர்களை விவசாயத்தில் ஈடுபடுத்தும் செயற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. நகர்ப்புற பள்ளிக்கூடப் பிள்ளைகளை விவசாய நிலங்களுக்கு அழைத்துச் சென்று களைகளை அகற்றும் செயற்பாடுகள் நடந்தன, மாவட்டங்கள் தோறும் அதிகப்படியான விளைச்சல்களை அறுவடை செய்த விவசாயிகளுக்கு ‘விவசாய மன்னர்கள்’ என அரசால் பட்டங்கள் வழங்கப்பட்டன. இவ்வாறாக மக்கள் மத்தியிலும் உணவு உற்பத்தியை அதிகரித்தல் தொடர்பாக ஒரு பெரும் விழ்ப்புணர்ச்சியை ஏற்படுத்தும் செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.  

நாட்டின் நெல் உற்பத்தியில் ஒரு பாய்ச்சல் அதிகரிப்பை மேற்கொள்வதற்காக முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் மூலம் நெல் விளைச்சலில் கணிசமான முன்னேற்றம் எற்பட்டது உண்மையே. ஆயினும் தீட்டிய வெள்ளைக் கோதுமை மாவு இறக்குமதியை அது குறைத்துவிடவில்லை. அரசி இறக்குமதியை முற்றாக நிறுத்தி விடவில்லை. சீனி, பால் அடிப்படையிலான உணவுப் பொருட்கள், பருப்பு வகைகள் என இறக்குமதிகள் தொகை குறையாமல் தொடர்ந்து கொண்டேயிருந்தன. மேலும் ‘பசுமைப் புரட்சி’யின் காரணமாக ரசாயன உரங்கள் மற்றும் பயிர் செய்கைக்கான ஏனைய ரசாயன உற்பத்திகள்  மேலும் விவசாய இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களின் இறக்குமதிகள் கட்டாயமாகின   

அப்போதைய ஐக்கிய தேசியக் கட்சி ஆக்கத் தொழிற் துறையில் குறிப்பாக றப்பரை அடிப்படையாகக் கொண்ட தொழிற்துறைகள் மற்றும் பால் மா உற்பத்தித் தொழிற்சாலை போன்றவற்றை ஊக்குவித்தது. அவற்றால் சில முன்னேற்றங்கள் ஏற்பட்ட போதிலும், ஆக்கத் தொழில் துறை உற்பத்திப் பண்டங்களின் இறக்குமதிகளுக்கான செலவிலோ அல்லது இறக்குமதி பொருட்களின் அளவுகளிலோ குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதுவும் நிகழவில்லை. அதேபோல ஏற்றுமதியிலும் முன்னேற்றங்கள் ஏற்படும் வகைகளில் உள்நாட்டு உற்பத்திகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை. 

என் எம் பெரேராவின் இறக்குமதி பிரதியீட்டுக் கொள்கை நன்மையை அளித்தது – ஆனால் தொடரவில்லை. 

1970 திருமதி சிறிமா பண்டாரநாயக்காவின் தலைமையில் இடதுசாரிக் கட்சிகளின் இணைப்புடன் சிறி லங்கா சுதந்திரக் கட்சி ஆட்சி பீடமேறியது. இதுவே ஐக்கிய முன்னணி ஆட்சி என அழைக்கப்பட்டது. பொருளாதார மற்றும் அரசியல் விஞ்ஞானத்தில் சிறப்பான அறிவார்ந்த இடதுசாரி இயக்க தலைவரான என்.எம்.பெரேரா நிதி அமைச்சரானார். இடதுசாரிகளின் செல்வாக்கின் அடிப்படையில் ஐக்கிய முன்னணி அரசாங்கம் வகுத்துக் கொண்ட பொருளாதாரக் கொள்கைகள் ஒரு புறமும் அந்நிய செலாவணியின் பற்றாக்குறை நெருக்கடி மறுபுறமுமென ஏற்பட்ட நிலைமைகள்  நிதி அமைச்சரை தீர்மானகரமான பொருளாதார முடிவுகளை அமுல்படுத்துவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தின.  

(1) கறுப்புப் பணங்களை வெளிக் கொணரும் நடவடிக்கைகள் உடனடியாகவே மேற்கொள்ளப்பட்டன: 

(2) பல்வேறு உற்பத்தித் துறைகளையும் ஊக்குவிப்பதற்காக கூட்டுறவுத் துறைகள் வலுப்படுத்தப்பட்டு முக்கியத்துவம் அளிக்கப்பட்டன: 

(3) இறக்குமதி பிரதியீட்டு பொருளாதாரக் கொள்கை தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்டது: 

(4) அதற்கமைவாக பல்வேறு விவசாய உற்பத்திப் பொருட்களையும் அதிகரிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன: 

(5) நாட்டின் பல்வேறு பாகங்களிலும் துணிகள் மற்றும் ஆடை உற்பத்தித் தொழில்கள் கூட்டுறவு அமைப்புகளாக விரிவபடுத்தப்பட்டன:  

(6) நாட்டில் பண்டங்களின் விநியோகத்தில் பல்நோக்கு கூட்டுறவுச் சங்கங்களின் பங்களிப்புகள் வலுப்படுத்தப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்டன:  

(7) அந்நியச் செலாவணிச் சமநிலையை நிலைநாட்டும் வகையாக ஏற்றமதியாளர்கள் ஊக்குவிக்கப்பட்டார்கள். இதனால் ஏற்றுமதிகள் பன்முகப்படுத்தப்படுவதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. இக்கால கட்டத்திற்தான் நாட்டின் முக்கியமானதொரு பொருளாதார வளமான இரத்தினக்கற்கள் ஏற்றுமதி முன்னணிக்கு வந்தது.  

(8) வரி செலுத்தாதோர் மற்றும் அந்நியச் செலாவணி மோசடிகளில் ஈடுபடுவோர் தொடர்பாக கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 

இவ்வாறாக, உள்நாட்டு உற்பத்திகளின் பன்முகங்களை விரிவபடுத்தவும் விருத்தி செய்யவும், ஒரு சில முதன்மைப் பண்டங்களின் ஏற்றுமதியில் தங்கியிருக்கும் நிலையை மாற்றி ஏற்றுமதிப் பண்டங்களை பன்முகப்படுத்தும் இலக்குடனும்,  அந்நியச் செலாவணி இருப்புகள் எதிர்மறை நிலையை நோக்கி கரைந்து போகாது இருப்பதற்கும், உள்ளுர் உற்பத்தித் துறைகளை நோக்கி இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை ஏற்பாடு செய்வதற்கும் வேண்டிய செயற்திட்டங்களை ஐக்கிய முன்னணி அரசாங்கம் மேற்கொண்டது. அந்த செயற்திட்டங்கள் எதுவும் மேம்போக்காக தீர்மானிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டவை அல்ல. மாறாக, தீர்மானகரமாக வரையறுக்கப்பட்ட ஐந்தாண்டுத் திட்டத்தின் அடிப்படையிலேயே அவை மேற்கொள்ளப்பட்டவை என்பதை இங்கே குறிப்பிடல் அவசியமாகும்.  

1970ம் ஆண்டு ஆட்சியை ஆரம்பித்த ஐக்கிய முன்னணி ஆட்சியானது ஓராண்டுக்குள்ளேயே ஜே.வி.பி.யினால் மேற்கொள்ளப்பட்ட உள்நாட்டு வன்முறைக் கிளர்ச்சியை எதிர்கொள்ள நேரிட்டது. அரசாங்கம் அவசர கால சட்டத்தைப் பயன்படுத்தி ஆட்சி நடத்தும் நிலைக்கு உள்ளானது. 1971ம் ஆண்டு இறுதியில் வங்காள தேசத்தின் விடுதலைக்காக பாகிஸ்தான் படைகளுக்கு எதிராக இந்தியா மேற்கொண்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து இந்து சமுத்திர பிராந்தியத்தில் உலக வல்லரசுகளின் செயற்பாடுகள் அதிகரித்தன. அப்போது அணி சேரா நாடுகள் அமைப்பில் பிரதானமானதொரு இடத்தை வகித்த இலங்கையும் உலக நாடுகளுடனான உறவில் சிக்கல்களுக்கு உள்ளாக நேரிட்டது. 1973ல் மத்திய கிழக்கு நெருக்கடி காரணமாக பெற்றோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பு எரி பொருட்களை 5 மடங்கு அளவில் விலையுயர்த்தின. இவ்வாறாக ஒன்றன் பின்  ஒன்றாக ஏற்பட்ட நிகழ்வுகள் இலங்கையின் பொருளாதாரத்தில் பெரும் பாதகங்களை விளைவித்தன. ஐக்கிய முன்னணி ஆட்சியின் ஐந்தாண்டுத் திட்டம் எதிர்பார்த்திராத சவால்களை எதிர் நோக்க வேண்டியதாயிற்று. பாணுக்குத் தட்டுப்பாடு, சீனிக்குத் தட்டுப்பாடு,பருப்புக்குத் தட்டுப்பாடு, பால் மாவுக்குத் தட்டுப்பாடு எனும் நிலைமை நாடெங்கும் நிலவியது. விலைகள் திடீரென இரண்டு மடங்கு மூன்று மடங்கென அதிகரித்தன. இந்த நெருக்கடிகளால் உணவுப் பண்டங்களை மக்கள் மணித்தியாலக் கணக்கில் கியூவில் நின்று வாங்க வேண்டியேற்பட்டது. 

இவை பரந்துபட்ட பொது மக்கள் மத்தியில் ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் மீது வெறுப்பை வளர்ப்பவையாகவே அமைந்தன. பல்கலைக் கழக அனுமதியில் இனவாரியான தரப்படுத்தல், 1972ம் ஆண்டின் அரசியல் யாப்பு, தேயிலைத் தோட்டங்களை அரச மயமாக்கியதைத் தொடர்ந்து மலையகத் தமிழர்கள் விடயத்தில் அரசு நடந்து கொண்ட விதங்கள், தமிழர்களின் அரசியற் கோரிக்கைகள் எதனையும் அரசாங்கம் அரசியல்ரீதியில் அணுகாமல் மிதமிஞ்சிய வகையில் பொலிஸையும் அவசர கால சட்டத்தையும் பயன்படுத்தி அடக்குமுறைகளைக் கட்விழ்த்து விட்டமை, அரச திட்டத்தின் அடிப்படையிலான சிங்கள குடியேற்றத் திட்டங்கள் தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மாவட்டங்களில் விரிவபடுத்தப்பட்டு தீவிரமாக்கப்பட்டமை என்பவையெல்லாம் ஒட்டு மொத்தத்தில் ஐக்கிய முன்னணி அரசாங்கம் தமிழர்களுக்கு எதிரான ஒன்று என்பதாக அமைந்தது. இதனால் வடக்கு கிழக்கு மக்களின் ஒத்துழைப்பை அரசாங்கம் பெருமளவு இழந்தது. அதேவேளை ஜே.வி.பி.யின் கிளர்ச்சிக்கு எதிராக அரசுயந்திரங்கள் மேற்கொண்ட அடக்குமுறைகள், பொருட்களின் தட்டுப்பாடுகள் மற்றும் விலையேற்றங்கள், மக்கள் அடிப்படைப் பண்டங்களுக்காக கியூவில் நிற்க வேண்டிய நிலைமை என்பவை இணைந்து சிங்கள மக்கள் மத்தியிலும் அரசாங்கம் செல்வாக்கிழந்த ஒன்றாக ஆகியது. 

இவற்றையெல்லாம் தாண்டி, அதாவது பொருளாதாரரீதியில் சுமார் 5 ஆண்டு கால நெருக்கடிகள் மற்றும் சிரமங்களைத் தாண்டி இலங்கையின் பொருளாதாரத்தில் முன்னேற்றகரமாக மாற்றங்கள் நிகழ ஆரம்பித்தன. சுதந்திர இலங்கையின் வரலாற்றிலேயே வெளிநாட்டு வர்த்தக நிலுவை 0 (பூஜ்ஜியத்து)க்கு மேலாக இலங்கைக்கு சாதகமாக அமைந்ததென்றால் அது 1977ம் ஆண்டு மட்டும்தான். 1965 தொடக்கம் 1970 வரை ஆண்ட ஐக்கிய தேசியக் கட்சியானது 120 மில்லியன் டொலர்கள் பாதகமான வர்த்தக நிலுவையோடு ஆட்சியை சிறிமா பண்டாரநாயக்கா தலைமையிலான ஐக்கிய முன்னணியிடம் ஒப்படைத்தது. நிதி அமைச்சரான என் எம்மின் நிதிக் கொள்கைகளால் அது 1973ம் ஆண்டில் 30 மில்லியன்களாகக் குறைந்தது. ஆனால் எற்கனவே கூறியபடி 1973ம் ஆண்டின் சர்வதேச எரி பொருள் நெருக்கடி மற்றும் சர்வதேச சந்தைகளில் அனைத்துப் பண்டங்களின் விலைகளிலும் ஏற்பட்ட உயர்வுகள் இலங்கையையும் பாதித்ததன் விளைவாக 1974 மற்றும் 1975ல் வர்த்தக நிலுவை முறையே 270 மற்றும் 280 மில்லியன் டொலர்கள் பாதகமானதாக அமைந்தது. ஆனாலும் 1976ல் அது 80 மில்லியன்களுக்குக் குறைக்கப்பட்டது. இலங்கையின் வரலாற்றிலேயே 1977ம் ஆண்டுதான் வெளிநாட்டு வர்த்தக நிலவையானது 150 மில்லியன் டொலர்கள் சாதகமானதாக நிலுவையைப் பெற்றது என்பதை கவனத்திற் கொள்வது அவசியமாகும்.  

1977ல் ஜே.ஆர்.ஜெயவரத்தனாவின் தலைமையில் ஆட்சியைக் கைப்பற்றிய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் அதன் திறந்த பொருளாதாரக் கொள்கை மூலம் இலங்கையின் ஏற்றுமதி – இறக்குமதிப் பண்டங்களின் வர்த்தகத்தை எதிர்நிலையாகக் கொண்டு சென்று வர்த்தக நிலுவையை இலங்கைக்குப் பாதகமான ஒன்றாக மாற்றியது. 1977ம் ஆண்டு 150 மில்லியன் டொலர்கள் சாதகமாக இருந்த வர்த்தக நிலுவையை ஒரே ஆண்டுக்குள் 130 மில்லியன் டொலர்கள் பாதகமான வர்த்தக நிலுவையை எதிர் நோக்கும் வகையாக வெளிநாட்டு வர்த்தக நிலைமையை மாற்றியமைத்தது. அதன் பின்னர் இலங்கையின் வெளிநாட்டு வர்த்தகத்தில் எக்காலத்தும் ஏற்றுமதி வருமானத்தை விட இறக்குமதிச் செலவு அதிகரித்துச் செல்வதே வழமையென ஆக்கப்பட்டுள்ளது. அதன் உச்ச பாதகமான நிலைமைகளையே இலங்கை தற்போது எதிர் நோக்குகிறது. 

(இவ்விடயத்தின் மேலதிக விபரங்கள் அடுத்த பகுதி 12லும் தொடரும்.)