தற்கொலைகள்: அரசியலுக்கு அப்பாலும் அரசியலுக்குள்ளும் – சகோதரனின் இழப்பும் – சினேகிதியின் இழப்பும் (களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை ஒர் அரசியல் போராளியின் பயணம்! (பாகம் 9))

தற்கொலைகள்: அரசியலுக்கு அப்பாலும் அரசியலுக்குள்ளும் – சகோதரனின் இழப்பும் – சினேகிதியின் இழப்பும் (களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை ஒர் அரசியல் போராளியின் பயணம்! (பாகம் 9))

 — தேசம்நெற் ஆசிரியர் த.ஜெயபாலன் — 


(அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்!: தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 09 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 07.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில்  எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.)

பாகம் 09

தேசம்: 83 ஜூலை முதலான சம்பவங்கள் பற்றித்தான் கதைத்துக் கொண்டு இருக்கின்றோம். அதுலயும், உங்களுடைய குடும்ப விஷயங்கள் பற்றிக் கூடுதலாக கதைத்தோம். அதில் ஒரு விஷயம், உங்களுடைய சகோதரர் பற்றியது. பொதுவாக எங்களுடைய தமிழ்ச் சூழலில் தற்கொலைகள் சம்பந்தமான விடயங்கள் இன்றைக்கும் நடந்து கொண்டிருக்கிறது. இதேமாதிரி ஒரு அனுபவம் உங்களுடைய குடும்பத்திலும் ஏற்பட்டிருக்கு. கொஞ்சம் கஷ்டமான விஷயம்தான் இருந்தாலும், அதைப்பற்றி ஒருக்கா கதைக்க முடியுமா? ஏனென்றால், தமிழ்ச்சூழலில் இது பொதுவான விஷயமா காணப்படுது. ஏன் அது அப்படி?உங்களுடைய சகோதரனுடைய அனுபவத்தை நீங்கள் முதல் சொல்லுங்கள்.

அசோக்: எனக்கு அவர் மூன்றாவது சகோதரர். பெயர் தியாகராஜா. அவர்தான் பெரியாரிஸ்ட்டாக இருந்தவர். ஒரு முற்போக்கான சிந்தனை உள்ள ஒருத்தர்.

தேசம்: சொல்லப்போனால் நீங்கள் அரசியலுக்குள் வாறத்துக்கு அவர் ஒரு வழிகாட்டியாக இருந்திருக்கிறார்.

அசோக்: அவர் அந்த நேரத்திலேயே இந்த கையெழுத்துப் பிரதிகள், பத்திரிகைகள் எல்லாம் வெளியிட்டுக்கொண்டிருந்தவர், அவரும் நண்பர்களும் சேர்ந்து.

தேசம்: அது ஒரு முக்கியமான காலகட்டம் என்று நினைக்கிறேன். கூடுதலாக அந்த நேரம் கையெழுத்து பிரதிகள் இருந்திருக்கு. உங்க குடும்பத்தில நிறைய பேர் இலக்கிய ஆர்வம் கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள்…

அசோக்: ஓம் மூத்த அண்ணா கூட ‘உதயதாரகை’ என்ற பெயரில் வெளியிட்டிருக்கிறார். தியாகராஜா  அண்ணா வெளியிட்ட அந்த கையெழுத்து சஞ்சிகை   பெரியார் திராவிட இயக்க கோட்பாட்டோடதான் வந்தது. எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு அந்த சம்பவம். அட்வான்ஸ் லெவல் எழுதிக் கொண்டிருந்தவர். அட்வான்ஸ் லெவலில் பெயில் என்று சொல்லித்தான் தற்கொலை செய்தார் என்று   கதைத்துக் கொண்டாங்க. அட்வான்ஸ் லெவல் பெயில் என்று ஆளுக்கு ஒரு தாக்கம் இருந்திருக்கு  போல. ஆனால், வெளியில்  காட்டிக்கொள்ளவே இல்லை.

அன்றைக்கு பாண்டிருப்பு திரௌபதி அம்மன் கோவில் திருவிழா. அதற்கு போறதுக்கான முயற்சியில அம்மாக்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்திருக்கிறார்கள். அந்த டைம்ல இவர், எங்கட வீட்டு வளவு 4 ஏக்கர் பெரிய காணி. வீடு ஒரு பக்கம் இருக்கும். இவர் தனிய தங்களுக்கான காரியாலயம் ஒன்றை உருவாக்கி அங்கேதான் படிப்பது, நித்திரை கொள்வது எல்லாம். சாப்பிட மட்டும் தான் வருவார். அதுக்குள்ளதான் பிரண்ட்ஸ் வாரது கதைக்கிறது. கையெழுத்து சஞ்சிகை வெளியிடுவதெல்லாம் அங்கேதான். அப்ப இவரை கூப்பிட்டு சாப்பாடு கொடுப்பதற்காக வீட்டிலிருந்த ஒரு ஆளை அனுப்பி இருக்காங்க… அங்க போனா ஆள் வந்து சம்பவத்தை சொல்லி இருக்கிறார்.

எங்கட வீட்ட துப்பாக்கி இருந்தது. விவசாயம் சம்பந்தப்பட்ட ஆட்கள் என்றபடியால், எங்களுக்கு லைசன்ஸ் துப்பாக்கி இருந்தது. அதைக் கொண்டுபோய் அவர் என்ன செய்தவர் என்று கேட்டால், அதை படுக்கிற பெட்டின் மேல், வீட்டு முகட்டு கூரையில் கயிற்றில் கட்டி தொங்க விட்டு, நெஞ்சில் துப்பாக்கியின் குழாயை வைத்து, காலால டிரிக்கரை அமத்தியிருக்கிறார். ஸ்பாட்டிலேயே ஆள் போயிருப்பார் என்று நினைக்கிறேன். பிறகு பார்த்தால், உடனடியாக திடீர் முடிவுகளினால் நடந்த தற்கொலை அல்ல இது என தெரியவந்திருக்கின்றது.  ஏனென்றால், கடிதங்கள் எல்லாம் எழுதி வைத்திருக்கிறார். போலீஸ் அதிகாரிக்கு ஒரு கடிதம், அடுத்தது மரண விசாரணை அதிகாரிக்கு ஒரு கடிதம், அடுத்து, வள்ளி அக்காவுக்கு கலியாணம் ஆகி மகன் பிறந்தால் அவருக்கு அவர் வாசிக்க ஒரு கடிதம். அது தமிழில். மற்ற இரண்டும் ஆங்கிலத்தில்.  

தேசம்: அப்ப அந்த நேரமே அவருக்கு ஆங்கில தேர்ச்சி இருந்திருக்கிறது?

அசோக்: ஓம் பெரிய கெட்டிக்காற ஆள் என்று வீட்டில் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறன்.

தேசம்: அந்த நேரம் ஆங்கிலத்தில் தான் படிச்சவரோ…

அசோக்: ஆங்கிலத்தில அந்த நேரம் படிக்கக் கூடிய சாத்தியம் எனக்கு தெரியல.  

வீட்டில யாரும் எதிர்பார்க்கல்ல. ஏனென்றால் அவ்வாறான மனநிலையை எங்கேயும் அவர் காட்டிக்கொள்ளவில்லை. சோகமாகவோ, விரக்தியாகவோ இருந்தில்லை. தற்கொலைக்கான காரணம் எதுவுமே தெரியல. அது அப்பா, அம்மா, வீட்டுக்காரர் எல்லாருக்கும் பெரிய தாக்கமா இருந்தது.

தேசம்: அந்த இழப்பு தான் உங்களுக்கு குடும்பத்தில் முதலாவது இழப்பு?

அசோக்: ஓம் முதலாவது இழப்பு. அடுத்தது நிறைய ப்ரண்ட்ஸ் அவருக்கு. எக்கச்சக்கமான ஃப்ரெண்ட்ஷிப் இருந்தது. எல்லாருக்கும் பெரிய அதிர்ச்சி. ஏனென்றால், யாருமே எதிர்பார்க்கவில்லை இப்படியொரு தற்கொலையை.

நீண்ட காலம் இது, எங்க வீட்டில தாக்கத்தை கொடுத்திருக்கிறது.

தேசம்:  இன்றைக்கும் தற்கொலைகள் நடந்துகொண்டிருக்குது. பாரம்பரியத்தோடு ஜெனட்டிக்கோட தொடர்புபட்ட விடயமா என்று தெரியவில்லை. ஒரு காலகட்டத்தில் ஜப்பான் தற்கொலைகள் நடப்பதில் கூடிய நாடு. அதுமாதிரி தமிழர்கள் மத்தியிலும் தற்கொலைகள் அதிகமாக இருக்கிறது. என்ன பின்னணி என்பதே தெரியவில்லை. இது ஒரு மன வருத்தத்துக்குரிய விஷயம் தான். இதே போக்குகள் தான் ஒரு காலகட்டத்தில் பரீட்சையில் சித்தி அடையாதவர்கள் அல்லது பரீட்சையில் தோல்வியடைந்தவர்கள், இயக்கங்களில் போய் சேருகின்ற முறையும். அதை நீங்கள் அறியக்கூடியதாக இருந்ததா?

அசோக்: தற்கொலைகளுக்கு பல்வேறு மன அழுத்தம், உளவியல் உயிரியல், சார்ந்த மற்ற சமூக புறநிலைக் காரணிகளும் காரணங்களாக இருக்கலாம். குடும்பத்தில் தொடர்ச்சியாக தற்கொலைகள், தற்கொலை முயற்சிகள் நடந்தா நீங்க சொல்வதுபோல் ஜெனட்டிக் தொடர்பான காரணங்களும் இருக்கக்கூடும். ஆனால்,அனேகமான தற்கொலைகள் உடனடி உணர்ச்சிகளால், கோபங்களால்தான்,  திடீர் முடிவுகளினால்தான் ஏற்படுகின்றன. திட்டமிட்ட, நீண்டகாலம் திட்டமிட்ட தற்கொலைகள் மிகக் குறைவு.

திட்டமிட்ட தற்கொலையை தடுப்பது சுலபம் தற்கொலை செய்வதற்கான எண்ணங்கள் அறிகுறிகள் தெரியவரும்போது அவங்களோட மனம் விட்டு கதைக்கணும். எனக்கு இந்த அனுபவம் இருக்கு. என் நண்பர் ஒருவரை காப்பாற்றி இருக்கிறன்.    

விவசாயக் கிராமங்களில் தற்கொலை அதிகம் இடம்பெறுவதற்கான காரணம் என்னவென்று கேட்டால் பிரச்சனை என்று வந்தால் வீட்டில், தோட்டத்தில் பயிர்களுக்கு பயன்படுத்தும் நச்சு மருந்து இருக்கும். குடும்பத்தோட சண்டைபோட்டு என்ன செய்வாங்க என்றால்,நச்சு மருந்தையோ, அரளிக்காயையோ சாப்பிட்டுவிடுவாங்க.

உடனடியாக பக்கத்திலேயே தற்கொலை செய்வதற்கான பொருட்கள் இல்லையென்றால் தற்கொலை முயற்சிக்க மாட்டார்கள்.  

தேசம்:  நீங்கள் சொல்வது சரி. ஐக்கிய நாடுகள் சபையின் ஸ்தாபனம் ஒன்று விவசாய மருந்துகளை வீடுகளில் வைப்பதற்கு, விவசாயிகளின் இறக்குமதிக்கு தடை செய்யப்பட்டது என்று நினைக்கிறேன் அந்த காலகட்டத்தில்…

அசோக்: ஓம், அடுத்து பரீட்சையில் சித்தி அடையாதவர்கள் அல்லது பரீட்சையில் தோல்வியடைந்தவர்கள் இயக்கங்களில் போய் சேர்ந்தார்கள் என்ற விமர்சனம். விடுதலை போராட்டத்துக்கு எதிராக போராட்டத்தை கொச்சை படுத்துவதற்கு சிலர் வைக்கிற குற்றச்சாட்டு இது.

ஓரளவு இருந்திருக்கலாம், வீட்டில் உள்ளவர்களின் பயத்தின் காரணமாக போயிருக்கலாம். இந்த விமர்சனத்தை முன்வைக்கிற ஆட்களைப் பார்ததோமென்றால் இவர்கள் பக்கா சுயநலவாதிகளாக, அந்த நேரத்தில இருந்தவங்கதான். தங்களை நியாயப்படுத்த, இப்படியான காரணங்களை கண்டுபிடிப்பாங்க.

தேசம்: கொச்சைப்படுத்த வில்லை… அவ்வாறான சம்பவங்களும் நடந்திருக்கு.

அசோக்: பயம் ஒன்று இருக்கும்தானே. அப்பா மற்றும் வீட்டார் தொடர்பாக. எதிர்காலம் தொடர்பாக. போராட்ட காலத்தில் பரீட்சை எடுத்து என்ன செய்யப்போறம் என்ற எண்ணம் பலருக்கு இருந்திருக்கு. இந்தப் பரீட்சை  தங்களின் வாழ்க்கைக்கு பிரயோசனம் அற்றது என்ற  வெறுப்பு நிலையும் இருந்திருக்கு. அடுத்தது சிலருக்கு கல்வித்திட்டங்கள் மீதான வெறுப்பும் இருந்திருக்கு. மிகத் திறமையான என்னுடைய நண்பர்கள், பரீட்சையில் தோல்வி அடைந்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் மிகத் திறமையானவர்கள்… இவ்வாறனவர்களை நீங்கள் அவதானித்தால், இவங்க அரசியல் சமூக அக்கறை கொண்டவங்களாக, மாற்றுச் சிந்தனை கொண்டவர்களாக இருப்பாங்க. பாடசாலை அமைப்பு வடிவம், அதன்ற செயற்பாடு, அதிகாரம் தொடர்பான விமர்சனங்கள் அவங்களுக்கு இருக்கும். எனக்கு இது கடுமையாக இருந்தது.

ஒருதடவை அம்மாவின்ற கவலை காரணமாக படிக்க எண்ணி, சம்மாந்துறை ரெக்கினிக் கொலிச்சில் டிராவ்ட்ஷ்மேன் கோர்சில் சேந்திருந்தன். முதல் வாரத்தியே லெச்சரோடு எனக்கு பிரச்சனை வந்து விட்டது. சில காரணங்களை பொதுமைப்படுத்த ஏலாது.

தேசம்: நிச்சயமாக. உங்களுடைய சகோதரரை எடுத்துக் கொண்டால்கூட, பரீட்சை என்பது திறமையை பரிசோதிப்பதற்கு சாதனமே இல்லை.  சிலவேளை பரீட்சையில் தோல்வி அடைந்த எத்தனையோ பேர் கெட்டிக்காரர்களாக வந்திருக்கிறார்கள், திறமையாளர்களாக வந்திருக்கிறார்கள். சராசரி நபர்கள் தான் இந்த சமூகத்தில் மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறார்கள்.

அசோக்: கல்வி சார்ந்த அறிவு எப்பவுமே சமூக மாற்றத்திற்கு விடுதலைக்கோ உதவுவதில்லை தானே.

தேசம்: ஆனால் தற்கொலைகளை இல்லாமல் பண்ணுவதற்கு திட்டங்கள் அன்றைக்கும் இருக்கேல, இன்றைக்கும் இருக்கேல.

அசோக்: தமிழ் சமூகத்தை எடுத்துக்கொண்டால்,  உளவியல் சார்ந்த பிரச்சனைக்கு டாக்டரை அணுகுவது கௌரவ குறைச்சலாக தானே பார்க்கப்படுகிறது. எங்கட ஊர் மந்திரங்களுக்கும், சடங்குகளுக்கும் பேர்போன இடம். ரகசியமாக மந்திரவாதியை அணுகுவார்கள். ஒரு பெண்ணுக்கு ஒரு பிரச்சினை ஏற்பட்டால், அதற்கான உளவியல் காரணங்கள் ஆராயப்படுவதில்லை. பேய் பிடித்து விட்டது என்றுதான் சொல்வார்கள். ஆண்களுக்கு பிரச்சனை என்று வந்தால், மந்திரவாதியிட்ட கூட போகமாட்டாங்க.    

ஆண்களுடைய உளவியல், பிரச்சினைக்கு, மனச்சிக்கல்களுக்கு ஒன்றும் செய்ய இயலாது. வைத்தியமுறை தெரிந்த மந்திரவாதியால ஓரளவு தீர்ப்பதற்குரிய சாத்தியம், பெண்களுக்கு இருக்கு. ஆண்களுக்கு மனச்சிக்கல் ஏற்பட்டால், அதற்கான தீர்வுக்கான சாத்தியமில்லை. கிராமங்களில் பார்த்தால், ஆண்களுக்கு பேய் பிடிக்காது. பெண்களின் உளவியல் சிக்கல்களை, அவர்கள் பேய் பிடித்தல் என்ற வெளிப்பாட்டால காட்டமுடியும். ஆண்களுக்கு அது ஒரு கௌரவ பிரச்சனை. மன உளைச்சலோடு அவங்க தற்கொலைக்கு தான் போக வேண்டும். அந்த நேரம் டாக்டர்ஸ் இருந்திருப்பார்கள். உளவியல் சார்ந்த படிப்பு இருந்தது தானே. யாரும் நாடினது இல்லை. இப்ப கூட இல்லை. ஐரோப்பிய நாடுகளில் கூட தமிழர்கள் மத்தியில் அதற்கான சாத்தியம் இல்லை.

தேசம்: நான் நினைக்கிறேன் சில மாதங்களுக்கு முன்னர் கூட பாரிசில் இரண்டு பெண்கள்…

அசோக்: இரண்டு பெண்கள். அதுவும் மிகவும் திறமையாக படித்த இங்கேயே பிறந்து வளர்ந்த பெண்கள்.

தேசம்: தமிழ் சூழல் நிச்சயமாக இது சம்பந்தமாக ஆராய்ந்து, இதற்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

அசோக்: தமிழ்ச்சமூகம் மாத்திரமல்ல,நிலவுடைமை சமூகம் சார்ந்த இடங்களில் அந்தப் பண்புகள் அப்படித்தான் இருக்கும். இங்க ஐரோப்பா சூழலில தற்கொலைகளை, உளவியல் பிரச்சனைகளை மன அழுத்தங்களை தீர்ப்பதற்கான வழிமுறைகள் நிறைய இருக்கு. தற்கொலை நடப்பது குறைவு. நம்ம தமிழ்ச் சமூகம் நிலப்பிரபுத்துவ எச்ச சொச்சங்களை கொண்ட மூடுண்ட சமூகம் தானே. மனம்திறந்து பேசுவதற்கான சாத்தியங்கள் இல்லை. முதலாளித்துவ சமூகத்தில் தந்தை, தாய் குழந்தைகளுக்கு இடையிலான உறவு, ஒரளவு சுதந்திரமாக இருக்கும். ஒரு ஜனநாயகபடுத்தப்பட்ட உறவு இருக்கும். ஃப்ரெண்ட்ஸ் இருப்பாங்க. தாயோட கதைக்கலாம் தந்தையோடு கதைக்கலாம். அந்த உறவு குறைந்தபட்சமாவது ஜனநாயகத் தன்மையோட இருக்கும். எங்கட்ட அப்படி இல்லை. ஒரு பிரச்சனை வந்தால் தந்தையோடையும் கதைக்கேலாது, தாயோடையும் கதைக்கேளாது. மனதுக்குள்ளேயே குறுகிக் குறுகி கடைசியாக தற்கொலைக்கு தான் போவாங்க அல்லது பைத்தியமாவாங்க.  

தேசம்: ஒன்று தற்கொலை அடுத்தது இப்ப நடக்கிற சம்பவங்களை பார்த்தீர்களென்றால் தாய்மார் பிள்ளைகளை கொலை செய்வது. அது உண்மையா கொலை என்று நாங்கள் பார்க்க இயலாது அவர்கள் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இது நடக்கிறது. மனநிலை சம்பந்தமான பிரச்சனைகள் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. அந்த நேரம் நீங்கள் வாழ்ந்த சூழலிலும் பெரிய பிரச்சனையா இருந்தது. ஆனால் அந்த நேரம் இந்த விடயம், பெரிசா அணுகப்படவில்லை என்று நினைக்கிறேன்.

அசோக்: அம்மாக்கள் தங்கள் குழந்தைகளை கொலை செய்வதற்கு பின்னால் ஆயிரம் சோகக்கதைகளும், மன அழுத்தங்களும் இருக்கும். அந்த நேரத்தில இப்படி சம்பவங்கள்  மிகமிக்குறைவு. எங்க போராட்டம், யுத்த  சூழல் தந்த நெருக்கடிகள் பொருளாதாரச் சிக்கல்கள் வறுமை ஆதரவற்ற நிலை இன்றைக்கு தாய்மார்களை கடுமையாக பாதிக்கிறது. உண்மையில தமிழ்ச் சமூகம் நினைத்தால் இப்படியான பிரச்சனைகளுக்கு தீர்வகாணமுடியும். அதற்கு தயாரில்லை. புலிகளின்ற முன்னாள் போராளிகளின்ற குடும்பங்கள் எவ்வளவு வறுமைக்குள், மன உழைச்சல்களோடு வாழ்கிறாங்க. பணப்புலிகள் இதைப்பற்றி சிந்திக்கல்ல. நாங்கதான் இதைப்பற்றி யோசிக்கிறம். மனம் வைத்தால் பல பிரச்சனைகளுக்கு தீர்வு காணமுடியும். அதற்கு யாரும் தயாரில்லை.

தேசம்: செல்வியினுடைய சினேகிதி சிவரமணியினுடைய இறப்பும் தற்கொலை அல்லவா? பலாத்காரப்படுத்தப்பட்ட தற்கொலை…

அசோக்: சிவரமணியினுடைய தற்கொலையும் ஒரு உணர்ச்சிவசப்பட்ட உடனடி தற்கொலை என்று சொல்ல ஏலாது. அதற்கு பல்வேறு காரணங்கள் இருந்திருக்கு. அன்றைய அரசியல், சமூகச் சூழல். குறிப்பா விடுதலைப்புலிகளின் அரசியல். அவர்கள் கொடுத்த நெருக்கடி கண்காணிப்பு நிர்ப்பந்தம்…  

தேசம்: அது ஞாபகம் இருக்கா உங்களுக்கு…

அசோக்: எனக்கு சிவரமணியை நேரடியாக தெரியாது. செல்வி முலம் அறிந்திருந்தேன். இந்தியாவுக்கு வந்தபோதுதான் நேரடியாக சந்திக்க முடிந்தது. இந்தியாவுக்கு செல்வியோட ஒரு பயிற்சி திட்டத்துக்கு யுனிவர்சிட்டியால அனுப்பப்பட்டவங்க. அப்போதுதான் சிவரமணியை சந்திச்சது. அதுக்குப்பிறகு ஒரு வருடத்திற்கு பிறகுதான் அவர் தற்கொலை செய்தவர் என்று நினைக்கிறேன்

தேசம்: பர்மாவில ஆங் சாங் சூகி க்கு கிடைத்த விருது கிடைத்தது என்று நினைக்கிறேன். அது செல்விக்கா சிவரமணிக்கா …

அசோக்: செல்விக்கு Internatioal PEN Award கிடைத்தது தெரியும். இது தெரியல்ல. சிவரமணி மிகத் திறமையானவர். அரசியல், சமூக அக்கறைகளை கொண்டவர். பூரணி பெண்கள் இல்லம், பெண்கள் ஆய்வு வட்டம், அன்னையர் முண்னணி என்று பலவற்றிலும் பங்கு கொண்டவர். ஆளுமையான ஆள். பிலிப்பைன்ஸில் எல்லாம் பெண்ணுரிமை தொடர்பான மாநாடுகளில கலந்து கொண்டவர். நிறைய வாசிப்பு. ஆங்கிலத்தில் மிக தேர்ச்சி கொண்டவர். சிவரமணியின் தற்கொலை எல்லோருக்கும் பெரிய அதிர்ச்சி.  

தேசம்: என்ன சம்பவங்கள் அவரை தற்கொலைக்கு இட்டுச் சென்றது

அசோக்: அந்த சூழல் இதுக்குத்தானே அரசியல் சூழல்.

ஒரு சுதந்திரமான மனிதனுக்கு அவங்களின்ற சிந்தனைகளுக்கு, செயற்பாடுகளுக்கு நெருக்கடிகளை நீங்கள் கொடுத்தீர்கள் என்றால் அது சிறைதான். புலிகளாலும் கடும் பிரச்சனை. வீட்டிலயும் சிக்கல்கள் நடந்திருக்கலாம். எனக்கு எந்தளவு உண்மை என்று தெரியாது. அவவுக்கு ஒரு காதல் இருந்தது. எங்களுடைய பிரண்ட் தான் தில்லைநாதன். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் படித்து ஆசிரியராக இருந்தவர். அவருக்கும் சிவரமணிக்கும் காதல் உறவு ஒன்று இருந்ததாகவும், வீட்டில் கொஞ்சம் நெருக்கடி கொடுத்ததாகவும் சொல்லப்பட்டது. எந்த அளவுக்கு உண்மை என்று தெரியாது. ஆனா பெரிய கொடுமையானது புலிகளின்ற நெருக்கடிகள்தான்.  

தேசம்: விடுதலைப்புலிகளால அவருக்கு நேரடியாக தொந்தரவு இருந்ததா…

அசோக்: நேரடியாக தொந்தரவு இல்லை. உளவியல் சார்ந்த தொந்தரவு செல்விக்கும், சிவரமணிக்கும், நிறையபேருக்கு இருந்திருக்கு. மறைமுக வெருட்டல்கள், கண்காணிப்புக்கள் என்று. உடல் சார்ந்த நெருக்கடி அல்ல. ஒரு உளவியல் சார்ந்த நெருக்கடிகள், பல்வேறு வகைகளிலும் கொடுக்கப்பட்டிருக்கு. கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்டாலே, அது பெரிய நெருக்கடிதானே

தேசம்: சிவரமணி தற்கொலை செய்யும் போது போது தன்னுடைய கவிதைகளையும் சேர்த்து எரித்திட்டா…

அசோக்: ஓம் முழுக் கவிதைகளையும் எரித்திட்டா. மிஞ்சின கவிதைகள் தானே சிவரமணி கவிதைத் தொகுப்பாக வந்தது. நிறைய கவிதைகள் எழுதி எல்லாத்தையும் எரித்துட்டாங்க. உணர்ச்சிவசப்பட்ட தற்கொலை இல்லைத் தானே. சிவரமணியின் தற்கொலை என்பது புலிகளின்ற ஒடுக்குமுறைகளுக்கு, சமூக கொடூரங்களுக்கு எதிரான ஒரு நடவடிக்கைதானே. இது உண்மையிலே தற்கொலை அல்ல. புலிகள் செய்த கொலைதான். அகநெருக்கடிகளையும், புற நெருக்கடிகளையும் கொடுத்து தற்கொலைக்கு தூண்டி தங்கட எண்ணத்தை நிறைவேற்றும் புலிகளின் ஒரு பாசிச உளவியல் செயற்பாடுதான் இது. சிவரமணியின்ற தற்கொலை, பாசிச மன நிலை கொண்ட புலிகள் பற்றி, எங்கட தமிழ் சமூகத்திற்கு சொன்ன ஒரு செய்தி என்றே நான் பார்க்கிறன்.

தேசம்: அதே மாதிரியான சம்பவம்தான் நான் நினைக்கிறேன், சாதி முரண்பாடு, பிரதேச முரண்பாடு காரணமாக கிளிநொச்சியில் இருவர் ஆணும் பெண்ணும் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம். நான் நினைக்கிறேன் நான்கைந்து மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்றது

அசோக்: தாங்கள் நம்பிய குடும்பமும், உறவுகளும், சமூகமும் கைவிடும்போது இந்த கொடுமைகளுக்கு எதிரான எதிர்வினையை அவர்கள் அப்படித்தான் காட்ட முடியும்…

தேசம்: அப்படி பார்க்கின்றபோது இந்த விடுதலைப் போராட்டம் ஆரம்பித்த பிற்பகுதியில், இந்த 40 வருட காலத்தில் சமூகத்தில் பெரியதொரு சிந்தனை மாற்றங்கள் நிகழ்ந்ததாக தெரியவில்லை. ஏனென்றால், அன்றைக்கு நடந்த அதேசம்பவங்கள் இன்றைக்கும் மீள நடக்கிற மாதிரி தான் உணர முடியுது.

அசோக்: தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டம் முற்போக்கு சக்திகளால், இடதுசாரிகளால் தலைமை ஏற்று வழிநடத்தப்பட்டிருந்தால் மாற்றங்கள் நடந்திருக்கும். அப்படியில்லையே. விடுதலை இயக்கங்களின் தலைமைகளை நீங்கள் எடுத்துப்பார்த்தால், எங்களுடைய அரசியல் கோட்பாடுகள், சிந்தனைகளின் கொள்ளளவு தெரியும் உங்களுக்கு. நீங்கள் ஒரு சர்வதேச விடுதலைப் போராட்ட வரலாற்றில இயக்கத் தலைமைகளை எடுத்துப்பார்த்தால் அவர்கள் குறைந்தபட்சமாவது கோட்பாட்டு ரீதியான கொள்கைகளின் வழியாக பேச்சுக்கள் எழுத்துக்கள் எல்லாம் வரும்.

எங்கட சமூகத்தில் விடுதலைப் போராட்ட தலைவர்கள் ஒருவராவது ஒரு அறிக்கை கூட சொந்தமாக எழுதற ஆட்களாக இருந்ததில்லை. உமா மகேஸ்வரன் கொஞ்சம் பரவாயில்ல. பிரபாகரன் பற்றி சொல்ல வேண்டியதில்லை. மற்றப்படி இரண்டாம் நிலை தலைவர்கள்தான் கோட்பாட்டு ரீதியாக சித்தாந்த ரீதியாக வளர்ந்தார்களேயொழிய, தலைமைகள் அதி தீவிரமான தனிநபர் பயங்கரவாத நடவடிக்கைகள்தான் அவர்களை தலைவர்களாக்கியது. சித்தாந்த ரீதியாக வளர்ந்தவங்க இல்லை இவங்க.  

பிரபாகரனோ, உமா மகேஸ்வரனோ, ஸ்ரீ சபாரத்தினமோ வந்து கோட்பாட்டு ரீதியாக சித்தாந்த ரீதியாக தலைவர்கள் ஆக்கப்பட்டவர்கள், அநீதிக்கு எதிராக போராடியவர்கள் அல்ல. அவர்களை பார்த்தீர்களென்றால் தனிநபர் பயங்கரவாதத்துக்கு ஊடாகத்தான், ஹீரோசியத்துக்கு ஊடாகத்தான் தலைமைக்கு வாராங்கள். ஈரோஸ் பாலகுமார், பத்மநாபா கூட சித்தாந்த வளர்ச்சி கொண்ட தலைவர்கள் இல்லை. என்றாலும், பத்மநாபா ஓரளவு முற்போக்கு எண்ணங்கள் கொண்ட ஜனநாயகவாதியாக இருந்தார். மற்ற இயக்கங்களின் தலைமை, எத்தனை கொலை செய்தால் தலைவராகலாம், துப்பாக்கி மிக அழகாக சுடுறான் அதுதான் இப்பவும் இருக்குது. இப்ப தமிழ் சினிமாவில் கதாநாயகர்களின் பிம்பங்கள் எப்படி சித்தரிக்கப்படுது எங்களுக்கு, அதே மாதிரித்தான் எங்க தலைவர்மாருடைய விம்பங்களும் எங்களிட்ட கட்டமைக்கப்பட்டன.

தேசம்: என்றைக்கு யாழ்ப்பாணத்தில் இந்த வன்முறைக் கும்பல்கள் கூட இயக்கப் பாணியில்தான் அவர்களும் செயற்பட பார்க்கின்றன.

அசோக்: எங்கட விடுதலை இயக்கங்களுக்கும் மாபியா குழுக்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. விடுதலை அமைப்புக்கான கட்டமைப்பு என்பது, அரசியல் சித்தாந்த நெறிமுறைகளையும் செயற்பாடுகளையும் கொண்டது. ஜனநாயகப் பண்பும், சித்தாந்த ரீதியான கட்டமைப்பும் இல்லை  என்றால், அதற்கு பேர் விடுதலை இயக்கம் அல்ல. அது மாபியா குருப்புத்தான். எங்கட இயக்கங்களுக்கும், மாபியா குழுக்களுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கல்ல.

தேசம்: இன்றைக்கு இலங்கையில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் ஆவா குழு, லண்டனில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் வன்முறைக் கும்பல்களோ பெரும்பாலும் அவர்கள் இந்த விடுதலைப் போராட்டத்தை ஆதரிப்பவர்களாகத்தான் தங்களைக் காட்டிக்கொள்கிறார்கள்.

அசோக்: அவங்கள் சில கோட்பாடுகளை வைத்திருப்பார்களாக இருந்தால், அவங்களும் விடுதலை இயக்கம் தான். ஆவா குரூப் தாங்களும் ஏதாவது கோரிக்கையை முன்வைத்து போராடுகிறோம் என்று கேட்டால் அவங்களும் அரசியல் இயக்கமாக போய்விடுவார்கள்.

நீங்கள் தமிழீழ விடுதலை இயக்கங்களின் தோற்றங்களைப் பார்த்தீர்களென்றால் ஒடுக்குமுறைக்கு எதிரான அரசியல் கோட்பாட்டு சிந்தனையிலிருந்து அமைப்புகள் உருவாக்கப்படவில்லைத்தானே. ஆரம்பத்தில்  விடுதலை இயக்கத்தில் யார் உள்வாங்கப்பட்டது? சண்டியர்களும், ரவுடிகளும் தானே. புலிகளின்ற ஆரம்ப தொடகக்கத்திலிருந்து இயக்க வரலாறுகளை பார்த்தால் இது தெரியும். புளொட்டில் உமாமகேஸ்வரனை சுற்றி இருந்த நபர்களை பார்த்தால் இது விளங்கும். டெலோவில இது மிகமிக மோசம்.

தேசம்: ஒவ்வொரு இயக்கத்திலும் அந்த ஊரில் உள்ள சண்டியர் இருந்திருப்பர்…

அசோக்: எதிரிகளை தாக்குவதற்கு சண்டியர்கள் தேவைப்பட்டார்கள். ஆரம்பத்தில் எல்லா இயக்கங்களின் ஆரம்பகால நபர்களாக இருந்தது சமூக விரோதிகள் ஆகவும் சண்டியர்களாகவும் தான் இருந்தார்கள். அதுல தப்பின ஒரு இயக்கம் ஈபிஆர்எல்எஃப் தானென்று நான் நினைக்கிறேன். ஈரோஸிலையும் அந்தத் தன்மை இருந்திருக்கு. ஏனென்றால் மற்ற எல்லா இயக்கங்களும் விடுதலைப் புலிகளில் இருந்து தானே உருவாகின்றது. 

(தொடரும்)