— வி.சிவலிங்கம் —
இலங்கை ஜனாதிபதி கோதபய ராஜபக்ஸ ஐ நா பொதுச் சபையில் ஆற்றிய உரை பலதரப்பட்ட விவாதங்களைத் தூண்டியுள்ளது. ஒரு சாரார் இது சந்தர்ப்பவாதம் எனவும், நாடு மிக மோசமான பொருளாதார, சமூக, அரசியல் நெருக்கடிக்குள் சிக்கியுள்ள வேளையில் அதிலிருந்து தப்புவதற்கான ஒரு வகை உத்தியே இது எனவும், நாடு முழுவதும் செயற்படும் சிவிலியன் நிர்வாகங்கள் அனைத்திலும் ராணுவ மேற்பார்வை அதிகரித்த நிலையில் ஜனநாயக மாற்றத்தை நோக்கி அவர் திரும்புவதாக எதிர்பார்ப்பது முற்றிலும் ஏமாற்று வித்தை என ஒரு சாராரும், நாடு மிக மோசமான நெருக்கடிக்குள் சிக்கியுள்ள வேளையில் மாற்று வழியின்றி புதிய பாதையை நோக்கி அரசு செல்வது தவிர்க்க முடியாததாக மாறியுள்ளதாகவும்,இவ்வாறன மாற்றத்தையே பலரும் வற்புறுத்தி வரும் நிலையில் அம் மாற்றத்திற்கான வாய்ப்பு ஏற்படும் இவ் வேளையில் அதனைப் பற்றிப் பிடித்துத் தொடர்ந்து மாற்றத்தை நோக்கி உந்தித் தள்ளும் வழிகளை நோக்கி செயற்பாடுகளை நகர்த்த வேண்டுமெனவும், நாட்டில் இரத்தக் களரி ஏற்படாமல் தவிர்க்க வேண்டுமெனில் அரசின் மாற்றங்களைப் பரீட்சிக்க வாய்ப்பளிக்க வேண்டுமென இன்னொரு சாரார் வற்புறுத்துகின்றனர்.
அவ்வாறு அரசின் போக்கில் மாற்றங்கள் ஏற்படுவது சந்தர்ப்பவாத செயற்பாடு எனில் தோல்வி தவிர்க்க முடியாததாகி அவர்கள் பதவிகளை விட்டு ஓட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்
ஜனாதிபதியின் ஐ நா உரை பலரும் எதிர்பார்க்காத ஒன்று ஆகும். ஏனெனில் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போதும், பாராளுமன்றப் பொதுத் தேர்தலின் போதும் நாட்டின் சிறுபான்மை மக்களின் ஆதரவு இல்லாமலேயே வெற்றி பெற முடியும் என்பதனையும், அதே போலவே மூன்றில் இரண்டு பெரும்பான்மையையும் பெற முடியும் என்ற அடிப்படையிலேயே தேர்தல் வியூகங்கள் வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டன. சிறுபான்மைத் தேசிய இனங்கள் நாட்டின் எதிரிகளாகவே அடையாளப்படுத்தப்பட்டன. பெரும்பான்மைத் தேசியவாதமும், மேற்கு நாடுகள் நாட்டினை பிளவுபடுத்த உதவும் எதிரிகளாகவும் கூறும் அரசியலே முன்னிலைப்படுத்தப்பட்டன.
கடந்த ஜனாதிபதித் தேர்தலும், பாராளுமன்றப் பொதுத் தேர்தலும் மிகவும் திட்டமிடப்பட்ட வகையில் நடத்தப்பட்டன. அதாவது நாட்டின் சிறுபான்மைத் தேசிய இனங்கள் என்பது சிங்கள பௌத்த பெருந்தேசியத்தின் ஆதிக்கத்திற்குத் தடையான சக்திகளாகவே அடையாளப்படுத்தப்பட்டன. 30 ஆண்டுகளாக நடைபெற்ற உள்நாட்டு யுத்தமும் அதில் விடுதலைப்புலிகள் வகித்த பாத்திரமும் நாட்டைப் பிளவுபடுத்துவதாகவும், சிங்கள பௌத்த ஆதிக்கத்திற்கு எதிரியாகவும் கூறி அப் பயங்கரவாதத்தினை முற்றாக அழிப்பதன் மூலமே சிங்கள பௌத்த நாட்டினை நிர்மாணிக்கவும், பாதுகாக்கவும் முடியும் என்ற கருத்தியல் பலமாக விதைக்கப்பட்டது. எனவே தமிழ் மக்கள் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலானவர்கள் என்பதே சாராம்சமாக இருந்தது.
அதே போலவே ஈஸ்ரர் ஞாயிறு வன்முறைகள் என்பதும் சிங்கள பௌத்தத்திற்கு இஸ்லாமிய அடிப்படைவாத கருத்தியல் மத அடிப்படையிலும், பொருளாதார அடிப்படையிலும் அழிக்கப்பட வேண்டிய ஒன்று எனவும், இஸ்லாமிய அடிப்படைவாதம் என்பது பௌத்த தர்மத்திற்கு எதிரான கருத்தியலாகவும் முன்வைக்கப்பட்டு சிங்கள, பௌத்த இனவாத மேலாதிக்க சக்திகள் உக்கிரப்படுத்தப்பட்டன. தமிழ் மக்களும், முஸ்லீம் மக்களும் சிங்கள பௌத்த மேலாதிக்க அரசியல் கட்டுமானத்திற்கு எதிரிகள் என்ற கருத்தியலை, சிங்கள மக்களின் அல்லது தேசிய பாதுகாப்பிற்கு இப் பிரிவினர் அச்சுறுத்தலானவர்கள் என்ற கருத்தியலை சிங்கள மக்களில் பெரும்பாலோர் ஏற்ற நிலையில்தான் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அவர்களால் பெற முடிந்தது.
ஒரு புறத்தில் நாட்டின் சிறுபான்மைத் தேசிய இனங்களை எதிரிகளாக அடையாளப்படுத்திய அவர்கள் ஐ தே கட்சியையும், மைத்திரி தலைமையிலான சிறீலங்கா சுதந்திரக் கட்சியையும் மேற்குலக ஆதரவு சக்திகளாகவும்,நாட்டைப் பிளவுபடுத்தும் சக்திகளுக்கு உடந்தையாக செயற்படுவதாகவும் குற்றம் சாட்டினார்கள். உதாரணமாக, கடந்த 2015 – 2019ம் ஆண்டு காலப்பகுதியில் ஆட்சி புரிந்த மைத்திரி – ரணில் அரசு அரசியல் யாப்பில் 19வது திருத்தத்தை மேற்கொண்டு மீண்டும் பிரிவினை சக்திகளுக்கு வாய்ப்புகளை அளித்ததாகவும், 2015ம் ஆண்டு வரை நடைமுறையிலிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தளர்த்தப்பட்டதோடு, நாட்டின் பாதுகாப்பிற்கு உதவிய ராணுவத்தினரை சர்வதேச முன்னிலையில் விசாரிக்க அரசு தயாராக இருந்ததாகவும் குற்றம் சாட்டி தம்மால் 2005 -2015ம் ஆண்டு காலங்களில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தளர்த்தியதோடு, பல தேசபக்தி மிக்க ராணுவத்தினரைச் சிறையில் தள்ளியதாகவும் குற்றம் சாட்டி இத்தகைய பாதுகாப்பு தளர்ந்த பின்னணியில்தான் இஸ்லாமிய தீவிரவாதம் தளைக்க முன்னைய அரசு உதவியதாகவும் கூறினர்.
சிக்களக்குடிமகனும் சந்தேகம் கொள்ளும்நிலை
இவ்வாறான வரலாற்று பின்னணியில் ஜனாதிபதி திடீரென நல்லிணக்கம், சர்வதேச ஆதரவுடன் பேச்சுவார்த்தைகள் எனப் பேசும்போது சாதாரண சிங்களக் குடிமகனும் சந்தேகம் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலும், பொதுத் தேர்தலும் நாட்டு மக்களை மிகவும் பிளவுபடுத்தியுள்ள நிலையில் குறிப்பாக தேசிய இனங்கள் ஒன்றிற்கொன்று எதிரிகளாக்கப்பட்டுள்ள நிலையில் தேசிய நல்லிணக்கம் பற்றி ஜனாதிபதி பேசுவது நம்பிக்கை தருவதாக இல்லை. சிங்கள பௌத்த பெருந்தேசியவாதத்தை உக்கிரப்படுத்தி அதிகாரத்தைக் கைப்பற்றிய ஜனாதிபதியின் தலைமையிலான கட்சிகள் தற்போது பெற்ற அதிகாரத்தைக் காப்பாற்றுவது சிக்கலாகியுள்ள நிலையில் புதிய அணுகுமுறையை நோக்குவது சந்தேகமும், வியப்பும் ஏற்படுத்துகிறது.
பெரும்பான்மைச் சிங்கள மக்களை இனவாத அடிப்படையில் பிளவுபடுத்திய ஆட்சியாளர்கள் தற்போது கொரொனா நோயின் தாக்குதல் காரணமாக மேலும் புதிய நெருக்கடிகளைச் சந்தித்துள்ளனர். அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக சிங்கள பௌத்த பெருந்தேசியவாதத்தினை முன்வைத்து வாக்குகளை அபகரித்தவர்கள் தற்போது எந்த மக்களின் பாதுகாப்புப் பற்றிப் பீத்தினார்களோ அந்த மக்களின் பாதுகாப்பை மிக விரைவாகவே கைவிட்டு அதிகார வர்க்கத்தைக் காப்பாற்றும் அரசியலை முன்னெடுத்துள்ளனர்.
தற்போது இவர்களால் முன்வைக்கப்பட்ட பெருந்தேசியவாதமும், தேசாபிமானமும் கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளது. தற்போதுள்ள நெருக்கடிகளைப் பயன்படுத்தி ஆளும் அதிகார வர்க்கம் தேசிய செல்வத்தைச் சூறையாடுவதை மிகவும் அப்பட்டமாகக் காணக்கூடியதாக உள்ளது. அதுவும் நாட்டு மக்கள் அனைவரும் மிகவும் மோசமான பொருளாதாரச் சிக்கலில் வாழும்போது அதிகார வர்க்கத்தினர் அம் மக்களின் துன்பங்களில் பணம் பண்ணுவது மிகவும் அப்பட்டமாகி வருகிறது. தடுப்பூசி வழங்குவதில் காட்டப்படும் பாரபட்சம் முதல் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கைப் பிரஜைகளை நாட்டிற்கு எடுத்து வருவது, அந்த மக்களை மிகவும் செலவினம் மிக்க விடுதிகளில் தங்க வைத்துப் பணம் பண்ணுவது, பி சி ஆர் பரிசோதனை என்ற பெயரில் நடக்கும் குழப்பங்கள், இறக்குமதிப் பொருட்களில் கட்டுப்பாடுகளை விதிப்பது, விவாசாய மூலப் பொருட்களின் இறக்குமதியைக் கட்டுப்படுத்தி உள்ளுர் முதலாளிகளின் கறுப்புச் சந்தை வியாபாரத்தை ஊக்குவிப்பது, கட்டுப்பாட்டு விலைகளை அறிவித்து கறுப்பு வியாபாரத்தை ஊக்குவிப்பது, உணவுப் பொருள் இறக்குமதிக்கென தமது ஆதரவாளர்களுக்கு உத்தரவுப் பத்திரங்களை வழங்கி தரம் குறைந்த பொருட்களை இறக்குமதி செய்து ஏற்கெனவே கொரொனா நோயின் பாதிப்புகளுக்குள் சிக்கியுள்ள மக்களை மேலும் நோய்களுக்குள் தள்ளுவது என பல கருமங்கள் நிகழ்கின்றன. இவர்கள் மேல் எந்த சட்ட நடவடிக்கைகளும் இல்லை. இவர்கள் மக்களைப் பாதுகாக்கிறார்களா? அல்லது தமது ஆதரவு வர்த்தகர்களைப் பாதுகாக்கிறார்களா? இவை யாவும் தனது சொந்த சிங்கள பௌத்த மக்களை ஏமாற்றியே நடத்தப்படுகின்றன. இதன் காரணமாக சிங்கள பௌத்த போலித் தேசியத்தின் உண்மைச் சொருபங்களை மக்கள் தெளிவாகவே அடையாளம் காண்கின்றனர்.
சிங்கள பௌத்த போலித்தேசியவாதம்
அரசாங்கம் தனது மக்களைப் பாதுகாப்பதாகக் கூறியே பதவிக்கு வந்தது. ஆனால் இன்று அந்த மக்களின் பொருளாதார, அரசியல் உரிமைகள் மீறப்படுகின்றன. நோயினால் பாதிக்கப்பட்ட மக்களைப் பராமரிக்க வைத்திய வசதிகள், மருந்துகள், வைத்தியர்கள் இல்லை. முக்கிய மருந்து வகைகள் பதுக்கப்பட்டு பணக்காரர்களுக்கான வைத்திய சேவையாக மாற்றம் பெற்றுள்ளன. பயங்கரவாத தடைச் சட்டம் என்ற பெயரில் சிறைச்சாலைகள் நிறைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சமீப காலமாக தமிழர்களும், முஸ்லீம்களுமே சிறைச்சாலையில் எண்ணிக்கையில் அதிகரித்து வருகின்றனர். பயங்கரவாத தடைச் சட்டம் என்ற பெயரில் விசாரணையின்றி சிறையில் அடைக்கப்படுகின்றனர். பொதுவாகவே சட்டத்தின் மூலம் குற்றவாளி என அறிவிக்கப்படும் வரை ஒருவர் சுற்றவாளி என்றே கருதப்படுகிறார். ஆனால் பயங்கரவாத தடைச் சட்டம் ஒருவரை முதலில் விசாரணையின்றி குற்றவாளியாக்கி சிறையில் தள்ளிய பின்னர் அவரைக் குற்றவாளியாக்க சாட்சியங்களைத் தேடுகிறது. இந்த அளவிற்கு நாட்டின் சட்டமும், ஒழுங்கும் சீர்குலைந்துள்ளது.
நாட்டின் நீதித்துறை என்பது மக்களின் இறுதி நம்பிக்கையாக இருந்தது. ஆனால் பாராளுமன்றத்திலுள்ள மூன்றில் இரண்டு பெரும்பான்மையும், அரசியல் யாப்பின் 20வது திருத்தமும் நீதித்துறையின் சுயாதீனத்தைக் கேள்விக்குட்படுத்தியுள்ளது. குற்றவாளிகள் ஜனாதிபதியின் மன்னிப்பு மூலம் விடுதலை செய்யப்படுகிறார்கள். தண்டனை என்பது கேலியாக்கப்படுகிறது. மிக முக்கியமான குற்றப் பத்திரிகைகள் போதிய சாட்சியம் இல்லை எனக் கூறி மூடப்படுகின்றன. இவ்வாறான நீதித்துறைச் செயற்பாடுகளின் மூலம் அரச ஆதரவு சக்திகள் விசாரணையிலிருந்தும், தண்டனையிலிருந்தும் தப்பி விடுகிறார்கள்.
பாராளுமன்ற ஆட்சிமுறை மிகவும் கேவலமான நிலையிலுள்ளது. ராணுவம் எடுக்கும் முக்கிய தீர்மானங்கள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அல்லது அமைச்சர்களுக்கு எதுவுமே தெரிவதில்லை. பாராளுமன்றம் என்பது ராணுவத்தின் சேவகனாக மாற்றமடைந்துள்ளது. பல அரச சிவிலியன் நிறுவனங்கள் தற்போது ராணுவ அதிகாரிகளால் நிறைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சுகாதார அதிகாரிகள்கூட ராணுவத்தின் உத்தரவுகளைக் கவனத்தில் கொண்டே தமது முடிவுகளை வெளியிடுகின்றனர். இதனால் பல திறமை வாய்ந்த சுகாதார அதிகாரிகள் தமது பதவிகளிலிருந்து வெளியேறுகின்றனர்.
இவ்வாறான ஓர் சிக்கலான பின்னணியிலிருந்தே ஐ நா சபையில் ஜனாதிபதியின் உரை நோக்கப்பட வேண்டும். நாட்டில் மிகவும் பாரதூரமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ள பின்னணியில் ஜனாதிபதி நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தப் போவதாகக் கூறுவது அதுவும் பொறுப்புக் கூறல், நிலைமாறுகால நீதியை வழங்குதல், பொருத்தமான நிறுவன ஏற்பாடுகளுடன் கூடிய அர்த்தமுள்ள நல்லிணக்கம் என்பவற்றின் மூலம் நிலைத்த தீர்வை எட்டப் போவதாகக் கூறுகிறார். அத்துடன் இவற்றை சர்வதேச சமூகத்தின் உதவியுடன் நிறைவேற்றப் போவதாகவும் கூறுகிறார்.
எடுத்த எடுப்பில் நிராகரிக்கலாமா?
ஜனாதிபதியின் இந்த மாறுதல்களை நாம் எடுத்த எடுப்பிலேயே நிராகரிக்க முடியாது. ஏனெனில் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக பலமான தடுப்புச் சுவர்களை அவரும், அவரது கட்சியும் ஏற்கெனவே எழுப்பியுள்ளனர். இந்தத் தடைகளை உடைக்க அவர் எடுக்கும் முயற்சிகளே எமக்கான நம்பிக்கை தரும் அடையாளங்களாகும். கடந்த பல ஆட்சியாளர்கள் இவ்வாறான பல வாக்குறுதிகளை தனது மக்களுக்கும்,சர்வதேச சமூகத்திற்கும் வழங்கினர். ஆனால் இறுதியில் அவர்கள் தோல்வி அடைந்தார்கள். இருப்பினும் சிங்கள மக்கள் மத்தியில் கணிசமான ஆதரவைப் பெற்றுள்ள இன்றைய ஆட்சியாளர்கள் குறிப்பாக, சிங்கள மக்களின் பாதுகாவலர்கள் என தம்மைத் தாமே வர்ணித்தவர்கள் குறிப்பாக, நாட்டின் தேசிய சிறுபான்மை இனங்களை எதிரிகளாக முன்வைத்தவர்கள் அவ்வாறான சிக்கலான கட்டுமானங்களை அவர்களே உடைப்பது தேவையாகிறது. தாம் உண்மையாகவும், விசுவாசமாகவும் செயற்படுவதை நாட்டிற்கு மட்டுமல்ல, சர்வதேச சமூகத்திற்கும் அவர்கள் உணர்த்தக் கடமைப்பட்டுள்ளார்கள்.
ஜனாதிபதியின் உரையின் பிரதான அம்சம் எதுவெனில் அவர் புலம்பெயர் இலங்கையர்களுடனும் பேசப் போவதாக அறிவித்துள்ளமையாகும். புலம்பெயர் இலங்கையர் என்ற வரையறைக்குள் மிகப் பெருந்தொகையான தமிழ் மக்களும் அடங்குவர். கணிசமான பொருளாதார பலத்தைக் கொண்டிருக்கும் புலம்பெயர் தமிழர் சமூகம் தனது தாயகத்தின் பகுதிகளில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளை எதிர்பார்க்கிறது. குறிப்பாக தேசிய நல்லிணக்கம் தொடர்பாக அரசு காத்திரமான விதத்தில் மாற்றத்தை ஏற்படுத்துமாயின் முதலீடுகள் தடையின்றிச் செல்ல அதிக வாய்ப்புகள் உள்ளன. கடந்த காலங்களில் புலம்பெயர் மக்களை பயங்கரவாத ஆதரவு சக்திகள், விடுதலைப்புலிகள் ஆதரவு சக்திகள் எனப் பட்டம் சூட்டி சில அமைப்புகளையும், தனி நபர்களையும் தடைப் பட்டியல் போட்டுப் பகிரங்கப்படுத்தியும் எதுவும் நடந்ததில்லை. போர் முடிவடைந்து 10 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் உயிரோடு வாழும் மக்களின் நலன்களையே நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
எனவே புலம்பெயர் தேசங்களில் வாழும் தேசபக்த மக்கள் அரசின் இந்த மனமாற்றத்தை அர்த்தமுள்ள விதத்தில் நோக்கி, காத்திரமான விதத்தில் அழுத்தங்களை மேற்கொள்ள வேண்டும். இவை சுயஅரசியல் செய்வதற்கான வேளை அல்ல. எமது மக்கள் மிகவும் ஆபத்தான பொருளாதார, அரசியல் மற்றும் சமூக சிக்கலில் வாழ்கிறார்கள். கடந்த காலத்தைப் பேசி நிகழ்காலத்தை அடமானம் வைக்க முடியாது. புலம்பெயர் அமைப்புகளும், தனி நபர்களும் இப் பிரச்சனையில் அர்த்தமுள்ள விதத்தில் தம்மைத் தயாராக்கிக் கொள்ள வேண்டும். புலம்பெயர் தேசங்களில் காத்திரமான விவாதங்கள் நகர்த்தப்பட வேண்டும். அவை தாயகத்தில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் கைகளைப் பலப்படுத்த இணைந்து செயற்பட வேண்டும்.
தற்போது தாயகத்தில் செயற்படும் அரசியல் தரப்பினர் மத்தியில் ஒற்றுமை குறைந்தும், தனி நபர் ஆதிக்கம் மலிந்தும், அரசியல் எதிர்காலம் குறித்த காத்திரமான தூரப் பார்வை அற்ற நிலை தொடர்கிறது. இந் நிலையை மாற்ற புலம்பெயர் சமூகம் உதவ வேண்டும். புலம்பெயர் சமூகத்தின் மத்தியிலும் பல்வேறு நலன்கள் சார்ந்த குழுக்கள் செயற்படுகின்றன. இவை யாவும் பரந்த நன்மை கருதி ஒருமித்து மிகவும் கனதியான அழுத்தங்களைத் தமிழ் அரசியல் தலைமைகள் மீது பிரயோகிக்க வேண்டும்.
தற்போதுள்ள அரசியல் புறச் சூழலில் புலம்பெயர் தமிழர்கள் அரசியல் கட்சி,குழு நலன்களுக்கு அப்பால் ஒருமித்து சில தந்திரோபாயங்களை வகுத்துச் செயற்பட வேண்டும். அரசு முயற்சிகள் எடுக்கும்வரை காத்திருக்காமல் பல்வேறு நாடுகளில் இயங்கும் பொதுநல அமைப்புகள் இன்றைய அரசியல் முக்கியத்துவம் கருதி சில ஆரம்ப முயற்சிகளை உதாரணமாக, தாயகத்து மக்களின் எதிர்கால பொருளாதார நலன்களுடன், அரசியல் தீர்வுகளை இணைத்துச் செல்லும் வழிமுறைகள் குறித்து விவாதங்களை ஆரம்பிக்க வேண்டும். இலங்கை அரசின் தற்போதைய மாற்றங்கள் நிஜம் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அரசு தரப்புடன் வெவ்வேறு வகையில் தொடர்புகளை ஏற்படுத்தி அதனை உறுதி செய்ய முயற்சிக்க வேண்டும். இங்கு சந்தேகங்களை எழுப்புவது பெரும் சாதனை அல்ல, பதிலாக ஆட்சியாளர்களை பின்வாங்காமல் முன்நோக்கி நகர்த்த பல தந்திரோபயங்களை மேற்கொள்ளுதல் தேவையாகிறது. இதனை தாயகத்து அரசியல் தலைமைகளுடன் இணைந்துதான் மேற்கொள்ள வேண்டும்.
தற்போதைய தருணம் மிக முக்கயமானது. இலங்கை ஆட்சிப் பொறிமுறை மிகவும் தோல்வியை நோக்கிச் செல்கிறது. ராணுவவாதமும் தோல்வியடைந்த ஒன்று என்பது புலனாகிறது. சிங்கள மக்களின் பாதுகாப்புக் குறித்துப் பேசிய இன்றைய ஆட்சியாளர்கள் வெறுமனே ராணுவ வாதத்தை முன்வைக்கிறார்களே தவிர அந்த மக்களின் பொருளாதார வாழ்வை உறுதி செய்வதற்கான பாதுகாப்பைத் தரவில்லை. ஆயுதங்கள் பாதுகாப்பைத் தரப் போவதில்லை. கொலைகள் மூலம் அல்லது சிறுபான்மை இனத்தவரை எதிரிகளாக்கி பாதுகாப்பைத் தர முடியாது. பதிலாக மக்கள் தாம் பாதுகாப்பாக இருப்பதைத் தாமே உணரும் வேளையில்தான் பாதுகாப்பு அர்த்தமுள்ளதாகிறது. இன்று அதிகார வர்க்கம் தனது இருப்பை மையமாக வைத்தே பாதுகாப்பை வரையறுக்கிறது. மக்கள் வேலையில்லாத் திண்டாட்டம்,விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, கறுப்புச் சந்தை வியாபாரம் போன்றன கொடிகட்டிப் பறப்பதை பாதுகாப்பு என எண்ண முடியவில்லை.
எனவே நாட்டு மக்கள் சுயாதீனமாக தமது அன்றாட கடமைகளை அரச தலையீடின்றி செய்வதற்கான ஓர் புறச் சூழலை எதிர்பார்க்கின்றனர். அவ்வாறான சுதந்திரமான புறச் சூழலை ராணுவ மயமாக்கல் தர முடியாது. தேசிய செல்வத்தைச் சூறையாடும் அரசியல் கட்டமைப்பையும் மக்கள் ஏற்க முடியாது. எனவே அரச உயர் மட்டத்தில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றங்கள் கீழ் மட்டத்தை நோக்கியதாகச் செல்ல வேண்டுமெனில் நாட்டிற்கு உள்ளேயும், வெளியேயும் கனதியான அழுத்தங்களை மேற்கொள்ள சகல பிரிவினரும் இணைந்து செயற்படுவது காலத்தின் கட்டாயமாகும்.