சாதியும் பிரதேசவாதமும் – கருத்தாடல் களம் 11

சாதியும் பிரதேசவாதமும் – கருத்தாடல் களம் 11

 — எழுவான் வேலன் —  

(‘பிரதேசவாதமா ஜனநாயகப் பற்றாக்குறையா? (தமிழ் அரசியலை முன்னோக்கி நகரவிடாது தடுக்கும் உள்முரண்பாடுகள்)‘ எனும் வி.சிவலிங்கம் அவர்களுடைய கட்டுரை அரங்கம் மின்னிதழ் 06.06.2021 அன்றைய இதழில் பதிவிடப்பட்டிருந்தது. அக்கட்டுரைக்கான கருத்தாடல் களம் 11 இதுவாகும்.)  

தமிழ் மக்களின் அகிம்சை ரீதியிலான போராட்டத்தின் திருப்புமுனையாக ஆயுதப்  போராட்டம் உருவாவதற்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்று பல்கலைக் கழகக் கல்வியில் அறிமுகப்படுத்தப்பட்ட இனரீதியான தரப்படுத்தல் என்பதை அனைவரும் அறிவர். சிறிமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசு 1970ம் ஆண்டு பல்கலைக் கழக அனுமதியில் இனரீதியிலான தரப்படுத்தலைக் கொண்டு வந்தது. இதற்குக் காரணம் கடந்த காலங்களில் மருத்துவம்பொறியியல் போன்ற துறைகளுக்கு பெருமளவுக்கு தமிழ் மாணவர்களே தெரிவுசெய்யப்பட்டு வந்தனர். இவ்வாறு பல்கலைக் கழகத்துக்கு தேர்வாகும் தமிழ் மாணவர்களின் விகிதாசாரம் சனத்தொகை அடிப்படையில் சிங்கள மாணவர்களின் விகிதாசாரத்தினை விட அதிகமானதாகும். இதனால் சிங்கள மாணவர்களுக்கு விசேட சலுகையினை வழங்கி அவர்களை பல்கலைக் கழகத்துக்கு உள்வாங்கும் நோக்குடன் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் மருத்துவத்துறைக்கு தெரிவாவதற்கு தமிழ் மாணவர் 250 புள்ளிகளைப் பெற வேண்டியிருக்க சிங்கள மாணவர் 229 புள்ளிகளுடன் பல்கலைக் கழகத்துக்கு தெரிவாவர். இதனால் அதிகமான சிங்கள மாணவர்கள் பல்கலைக் கழகத்துக்கு தெரிவாவதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டது. ஆனால் அரசால் எதிர்பார்க்கப்பட்ட பலனை அத்திட்டம் வழங்கவில்லை. அதாவது இலங்கை முழுவதிலிருந்தும் சிங்கள மாணவர்கள் தெரிவாகாமல் கொழும்புகாலி மாவட்டங்களை சேர்ந்த சிங்களவர்களே பெருவாரியாக பல்கலைக் கழகம் செல்வதற்கும் இது வழிவகுத்தது. இதுபோல் தமிழர்களைப் பொறுத்தவரை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழர்கள் பெருவாரியாக பல்கலைக் கழகம் செல்வதற்கும் வாய்ப்பான ஒரு திட்டமாகவே அது இருந்தது. தரப்படுத்தலுக்கு முன்பும் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களே மருத்துவம்பொறியியல் போன்ற துறைகளுக்கு பெருவாரியாகத் தெரிவுசெய்யப்பட்டு வந்தனர். இதற்குக் காரணம் காலனித்துவ ஆட்சிக்காலம் முதல் இம் மாவட்டங்கள் போதுமானளவு கல்வி வாய்ப்புகளையும் வசதிகளையும் பெற்ற மாவட்டங்களாக இருந்தமையினாலாகும். இதனை 1971ம் ஆண்டு பல்கலைக்கழக அனுமதியில் அறிந்து கொண்ட அரசாங்கம் 1972ம் ஆண்டு  ஒவ்வொரு மாவட்டங்களின் கல்விவாய்ப்பினைக் கருத்தில் கொண்டு அதற்கேற்ப பல்கலைக் கழக அனுமதியினை வழங்குவதற்கான மாவட்ட கோட்டா முறையினை அறிமுகப்படுத்தியது. இம் முறையானது பின்தங்கிய மாவட்டங்களைச் சேர்ந்த சிங்கள மாணவர்களும் தமிழ் மாணவர்களும் பல்கலைக்கழகம் செல்வதற்கு வாய்ப்பான ஒரு முறையாக அமைந்திருந்தது.  

இதன் பிரகாரம் 30 வீதமானோர் திறமை அடிப்படையிலும், 55 வீதமானோர் மாவட்ட சனத்தொகை அடிப்படையிலும் 15 வீதமானோர் பின்தங்கிய மாவட்டங்கள் என்ற அடிப்படையிலும் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள். பின்தங்கிய மாவட்டங்களாக வடகிழக்கில் மட்டக்களப்பு, திருகோணமலைஅம்பாரைவவுனியா, மன்னார் போன்ற மாவட்டங்கள் உள்வாங்கப்பட்டன. இதனால் யாழ்ப்பாணத்துக்கு வெளியே கல்வி வாய்ப்புகள் கிடைக்கப்பெறாத தமிழ் மாணவர்கள் பின்தங்கிய மாவட்டங்கள் என்ற அடிப்படையில் ஒதுக்கப்பட்ட வீதத்தின் அடிப்படையில் பல்கலைக்கழகம் செல்வதற்கு வழிகிடைத்தது. இதுவும் மருத்துவம், பொறியியல் துறை மாணவர்களின் அனுமதியிலேயே கூடியளவு செல்வாக்குச் செலுத்தியதே தவிர கலைத்துறைக்கான அனுமதியில் இத்தரப்படுத்தலானது பெருமளவுக்குச் செல்வாக்குச் செலுத்தவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.  

பின்வரும் அட்டவணை கலைத்துறையில் மாணவர்களின் பல்கலைக் கழக அனுமதியின் விகிதாசரத்தினைக் காட்டுகின்றது.  

ஆண்டு 69/70 70/71 71/72 73 74 75 76 77 78 
சிங்களம் 89.1 89.7 92.7 91.8 86.0 85.6 86.3 85.8 83.3 
தமிழ் 6.9 7.0 4.7 5.9 10.0 10.1 8.6 9.2 15.3 

(மூலம் – சுனில் பஸ்தியன், பல்கலைக் கழக அனுமதியும் தேசிய இனப் பிரச்சினையும், இலங்கையில் இனத்துவமும் சமூகமாற்றமும், 1979) மருத்துவம், பொறியியல் துறைகளுக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் சிங்கள, தமிழ் சமூகங்களின் உயர் வகுப்பினர்களில் மிகக் குறைவானவர்களேயாகும். அதேபோன்று பின்தங்கிய மாவட்டங்கள் என்று வரையறுக்கப்பட்ட மாவட்டங்களில் இருந்து 12ம் தரப் பரீட்சைவரை கல்வியைத் தொடர்பவர்களும் அம்மாவட்டங்களில் ஓரளவு அந்தஸ்த்தில் கூடியவர்களாகும். எனவே பின்தங்கிய மாவட்டங்கள் என்ற அடிப்படையில் தேர்வானவர்களும் அந்த மாவட்டங்களில் இருந்த உயர் வகுப்பினர்களேயாகும். 

1970களில் ‘சராசரியாக முழுத்தீவுக்கும் 100 பேர்கொண்ட தொகுதி ஒன்று 1ம் வகுப்புக்குச் சேர்ந்து இத் தொகுதி 5ம் வகுப்பை அடையும்போது 60 பேர் எஞ்சுவர். 8ம் வகுப்பில் 50, 10ம் தரத்தை அடையும்போது 35 ஆகிறது. 12ம் தரத்தை அடையும்போது 100 பேர்கொண்ட தொகுதியில் சராசரியாக 7 மாணவர் பல்கலைக்கழகம் புகுவதற்காக க.பொ.த.உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுபவர்களாக உள்ளனர். பல்கலைக் கழகம் புகக்கூடிய தொகை 0.9 – 1 வீதம் ஆகும். 

முழு இலங்கைக்குமுரிய சராசரி எண்ணிக்கை இதுவாக இருந்தால் பின்தங்கிய கிராமம், சேரிப்பகுதி அல்லது தோட்டப்பகுதிகளில் உள்ள குறைந்த சலுகைகளைப் பெறும் சமூகத்தில் இந்த எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்கும். இத்தகைய சமூகப் பின்னணியைக் கொண்ட பிள்ளைகள் பல்கலைக் கழகத்துக்கு நுழையும் வாய்ப்புக்கள் மிகக் குறைவு. மருத்துவம், பொறியியல் ஆகிய பீடங்களைப் பொறுத்தவரை இது மிகவும் உண்மையாகும். 1967க்குரிய பல்கலைக் கழக அனுமதி பெற்ற மாணவர்களின் சமூகப் பின்னணியை நோக்கின் மருத்துவ, பொறியியல் பீடங்களுக்கு அனுமதி பெற்ற பெற்றோரில் 73 வீதம் தனியார் அல்லது மதிப்பு வாய்ந்த அரசாங்கப் பாடசாலைகளிலிருந்து தகமை பெற்றவர்கள்.’ (சுனில் பஸ்த்தியான்)    

மேலும் கவனிக்கப்பட வேண்டிய ஒரு விடயம் வடகிழக்கில் தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்விவாய்ப்புக்கள் மறுக்கப்பட்டும் கல்வியினைத் தொடர்வதற்கான பொருளாதார வசதிகளற்ற மாணவர்களாகவும் இருந்தனர், ஆறுமுகநாவலர் கல்வி பற்றிக் குறிப்பிடும் போது ‘கல்வி இளமைதொட்டு மரண பரியந்தம் வரை விடாமற் கற்க வேண்டும் ‘என்றார். ‘வித்தியாதானத்திற்கு சமமானதாம் ஒன்றுமில்லை வித்தியாதானமே எல்லாத் தானத்திலும் சிறந்ததென்பார். இவரால் 1848இல் வண்ணார் பண்ணையில் சைவப்பிரகாச வித்தியாசாலை நிறுவப்பட்டது. சுதேச கல்விக்கு வித்திட்டு கல்விக்கு சிறந்த வரைவிலக்கணம் கூறிய இவரே தேசவழமை சக்திக்குட்பட்டு, சாதிவெறி காட்டி தமிழ் மக்களில் ஒரு சாராரின் கல்வி உரிமையினை, சமூக உரிமையினை மறுத்தார். அவர் எழுதிய சைவ வினாவிடைகளில் சாதிவேறுபாடுகள் அப்பட்டமாக காண்பிக்கப்பட்டன, கற்பிக்கப்பட்டது. அவரால் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலைகளிலும் கல்வியுரிமை தமிழ் மக்களில் ஒரு சாராருக்கு மறுக்கப்பட்டது. வித்தியாதானத்திற்கு சமமானது ஒன்றுமில்லையென்று கூறிய அவரே சமூகத்தின் ஒரு பகுதியினருக்கு வித்தியாதானம் செய்து வைக்க மறுத்தும் இருக்கின்றார். இளமை தொட்டு மரணப் பரியந்தம் வரை விடாமல் கற்கவேண்டும்மென்று கூறிய அவரே ஒரு சாராரின் கல்விக்கு வாய்ப்பூட்டு போட்டிருக்கின்றார்.’ (எஸ்.சந்திரபோஸ், தாழ்த்தப்பட்டவர்களின் கல்வி வளர்ச்சி) இவ்வாறு வளர்க்கப்பட்ட நாவலரின் வாரிசுகள் தாழ்த்தப்பட்ட மாணவர்களை உயர்சாதிக்காரர்கள் கற்கும் பாடசாலைகளில் சேர்த்துக் கொள்ளவில்லை. கிறிஸ்த்தவ மதத்துக்கு மாறியவர்களின் பிள்ளைகள், கிறிஸ்த்தவப் பாடசாலைகளில் சேர்த்துக் கொள்ளப்படடாலும் அங்கும் அவர்கள் சமமாக நடாத்தப்படவில்லை. உயர் சாதிப்பிள்ளைகள் கதிரை மேசையில் இருந்து கற்கும் போது தாழ்த்தப்பட்ட பிள்ளைகள் தரையில் அமர்ந்து கற்க வேண்டியவர்களாகவும் உயர் சாதிப்பிள்ளைகளினதும் ஆசிரியர்களினதும் கிண்டலுக்கும் ஆளாகவேண்டியவர்களாக இருந்தார்கள். இந்த அடக்குமுறைகளைக் கருத்தில் கொண்டே 1956ம் ஆண்டில் பருத்தித்துறைப் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த பொன்.கந்தையா அவர்களினால் யாழ்ப்பாணத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் கல்விக்காக 15 பாடசாலைகள் அமைத்துக் கொடுக்கப்பட்டன. இவற்றில் ஐந்து பாடசாலைகள் உயர் சாதிக்காரர்களால் எரிக்கப்பட்டதோடு தமிழரசுக் கட்சி, தமிழ் காங்கிரஸ் கட்சித் தலைவர்களினால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனியாக பாடசாலைகள் அமைக்கப்படத் தேவையில்லை என்ற மனுவும் அரசாங்கத்துக்கு கொடுக்கப்பட்டது. தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களது கல்வியைப் பெறுவதற்கு இருந்த தடைகளினால் விரக்தியுற்ற மக்கள், பௌத்த மதத்துக்கு மாறி  1962ம் ஆண்டு ‘அகில இலங்கை தமிழர் பௌத்த சங்கம்’ எனும் அமைப்பினை நிறுவி தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வி கற்பதற்காக யாழ்ப்பாணத்தில் நான்கு பௌத்த தமிழ் பாடசாலைகளை நிறுவினர்.  

எனவே யாழ்ப்பாணத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் 1956களுக்குப் பின்புதான் தங்களுக்கான பாடசாலைகளை நிறுவி கல்வி கற்க ஆரம்பித்திருக்கிறார்கள். இவ்வாறு கற்றவர்கள் 1970ம் ஆண்டுத் தரப்படுத்தலில் அதுவும் மருத்துவம், பொறியியல் துறை அனுமதியில் பாதிக்கப்பட்டார்கள் எனக் கூறமுடியாது. 

மட்டக்களப்பில் களுதாவளை எனும் கிராமத்தில் உள்ள தாழ்த்தப்பட்டவர்கள் அவர்களுடைய சமூகத்துக்குரியதாக இருந்த 5ம் வகுப்பு மட்டுமேயுள்ள பாடசாலையைத் தவிர களுதாவளையின் உயர்தரப் பாடசாலைகளுக்குச் செல்வதற்கு 1980கள் வரை அனுமதிக்கப்படவில்லை. வெளியூர்ப் பாடசாலைகளுக்குச் சென்று கல்வி கற்பதற்கு அவர்களிடம் பொருளாதார வசதியிருக்கவில்லை. 2010ம் ஆண்டுகளுக்குப் பின்புதான் அந்தச் சமூகத்திலிருந்து முதல்தொகுதி கலைப்பட்டதாரி மாணவர்கள் உருவாகியுள்ளார்கள்.   

எனவே வடக்குக் கிழக்கு மாகாணங்களிலுள்ள தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களின் அடிப்படைக் கல்வியைக் கூட வழங்காது மறுத்து விட்டு உயர் வர்க்கத்தின் மிகக் குறைந்தவர்களின் உயர் கல்விக்காக முழுத்தமிழ் சமூகத்தையும் போராட்டத்துக்கு இழுத்து விட்டது யாழ் மேலாதிக்கவாதத்தின் அறம் அற்ற சூட்சுமமான சுயநல நடவடிக்கையாகும். இவ்வாறு குறிப்பிடுவதினூடாக இலங்கை அரசின் இனரீதியான தரப்படுத்தலை நியாயப்படுத்துவதாகப் பொருள் கொள்ளக் கூடாது. உயர் சமூகத்தினர் சாதியினை அடிப்படையாகக் கொண்டு தாழ்த்தப்பட்ட சமூகத்துக்கான கல்வியினை மறுத்து விட்டு தாங்கள் இனரீதியாக ஒதுக்கத்துக்கு ஒள்ளாகின்ற போது அதற்கான நீதியினைக் கோருவதற்கு அவர்கள் அருகதை அற்றவர்கள் என்பதுவே இதன் அர்த்தமாகும்.    

‘உண்மையில் இந்த அனுமதி விதிகளால் பயனடைபவர் எமது குடித்தொகையின் மிகச் சிறிய சிறுபான்மையினரே. ஆனால் எமது சமூகத்தில் இக்குழுக்கள் கொண்டுள்ள செல்வாக்கினால் அவர்கள் இதிலிருந்து ஒரு தேசியப் பிரச்சினையை ஏற்படுத்த முடிகிறது. சமூகத் தொடர்புச் சாதனங்களில் அவர்கள் மேற்கொள்ளும் கட்டுப்பாடுகள் இதில் முக்கிய அம்சமாகும். இதனால் தரப்படுத்தலானது ஒரு சமூகத்தின் ஒரு கட்சியின் அரசியல் நிகழ்வுகளில் முக்கிய அம்சமாகவும் வேறு சமூகத்தில் கூடுதலான எதிர்ப்புக்குரிய அம்சமாகவும் அமைகிறது. சமூகத் தொடர்புச் சாதனங்களின் உதவியுடன், குடித்தொகையின் பெரும்பகுதியை  – இம்முறையின் கீழ் அனுமதிபெற மிகக்குறைந்த வாய்ப்பைப் பெறும் மாணவர்களைக் கொண்ட சமூகங்களை, பூர்ஷ்வா வர்க்கம் தன்னுடன் சேர்த்துக் கொள்கிறது. எமது கல்வியில் தரப்படுத்தல் மிக முக்கிய பிரச்சினை என்று அவர்களுக்கு விளக்கப்படுகிறது. ஆனால் சமூகப் பொருளாதார முறையிலுள்ள உண்மையான நெருக்கடி நிலையும் கல்வியில் அது ஏற்படுத்தும் தாக்கமும் வெற்றிகரமான முறையில் மறைத்துவிடப்படுகிறது’ என்பார் சுனில் பஸ்தியன்.  

தமிழ் மாணவர் பேரவை எடுத்த நடவடிக்கைகள் இத்தகைய நடவடிக்கைகளாகும். தாழ்த்தப்பட்ட சமூக மாணவர்களின் கல்வி தொடர்பாகவோ அல்லது கல்வியை தொடர முடியாது இடைவிலகலுக்குள்ளாகும் மாணவர்களின் பிரச்சினைகள் தொடர்பாகவோ பேசாதவர்கள். தங்களுடைய வர்க்க நலனுக்காக தரப்படுத்தலை அனைத்துத் தமிழ் மாணவர்களின் பிரச்சனையாக தமிழ் சமூகத்தில் முன்வைத்தனர். இதே உயர் வர்க்கம்தான் இலட்சக்கணக்கான மலையகத் தமிழர்களின் பிரஜா உரிமையினைப் பறித்து கப்பல் ஏற்றுவதற்கு உடந்தையாக இருந்தது. இது தரப்படுத்தலால் பாதிக்கப்பட்டவர்களை விட பல ஆயிரம் மடங்கு கொடுமையான மனித உரிமை மீறலாகும். இவ்வாறான ஒரு துன்பியலுக்கு எதிராக கிளர்ந்தௌமுடியாத தமிழ் மாணவர்கள். தங்களுடைய பிரச்சினை என்று வந்தபோது அதற்காக ஆயுதம் ஏந்திப் போராடுவதற்கு தமிழ் சமூகத்தை வழிநடத்தியதும் அதனைத் தமிழத் தலைமைகளும் புத்திஜீவிகளும் இடதுசாரிகளும் எவ்வித கேள்விகளுமின்றி நியாயப்படுத்திக் கொண்டிருப்பதையும் இன்றுவரை காணக்கூடியதாக இருக்கின்றது. இது ஒரு வகையில் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் நேர்மையீனத்தையும் தத்துவார்த்த வறட்சியினையுமே காட்டுகின்றது.    

உதாரணத்துக்கு பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் பதியுதின் மஹமது பற்றிக் குறிப்பிடும் போது, ‘இவர் இரண்டாவது முறையாக (1970- 77) கல்வி அமைச்சராகப் பதவி வகித்தபோதுதான் பல்கலைக் கழக சேர்க்கைகளில் தர அளவுப் படுத்தும் முறை கொண்டுவரப்பட்டது. இந்தத் தர அளவுப் படுத்தும் வகைமுறை பல்கலைக் கழகங்களில் பொறியியல், மருத்துவம் போன்ற உயர் தொழிற்கல்விப் பிரிவுகளில் தமிழர்கள் சேர்வதற்கான வாய்ப்பைத் தகர்த்தது. ‘என்கின்றார். தமிழுலகில் மதிக்கப்படும் மாக்ஸ்சிசப் பேரறிஞரான பேராசிரியர் அவர்கள் தமது சமூகத்துக்குள் காணப்பட்ட அடக்குமுறையினால் எத்தனை ஆயிரம் மாணவர்களின் வாழ்க்கை தகர்க்கப்பட்டது என்பது பற்றிக் கவலை கொள்ளாது யாழ் மேலாதிக்க கருத்தியலை வலியுறுத்துபவராக இருப்பதைக் காணலாம்.  

மற்றுமொரு புலமையாளரான கலாநிதி முருகர் குணசிங்கம் அவர்கள் ‘இலங்கைத் தமிழர் ஒரு முழுமையான வரலாறு’ எனும் 2016ம் ஆண்டு வெளிவந்த தனது நூலில் பல்கலைக் கழக அனுமதிக்கு பின்பற்றப்பட்ட மாவட்ட கோட்டாமுறைத் தரப்படுத்தல் பற்றிக் பின்வருமாறு குறிப்பிடுகின்றார், ‘யாழ்ப்பாணம் முழுக்க முழுக்க தமிழரைக் கொண்டிருக்க கொழும்பில் கணசமான தமிழர்கள் வாழ்ந்தனர். எனவே அபிவிருத்தியடைந்த, அபிவிருத்தியடையாத மாவட்டங்கள் என்ற அடிப்படையிலான தரப்படுத்தல் பெரும்பான்மையான சிங்கள மாவட்டங்கள் அபிவிருத்தியடையாத நிலையில் இருந்தமையால், சிங்களவருக்கே சாதகமாக இருந்தது.’ என்கின்றார். இவர் இங்கு யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் வாழ்ந்த உயர்வர்க்கத் தமிழர்களைத்தான் தமிழர்களாகக் கருதுவதை அவதானிக்கலாம். இந்த அடிப்படையில் அரசால் பின்தங்கிய மாவட்டங்கள் என அறிவிக்கப்பட்ட வவுனியா, மன்னார், திருகோணமலை, அம்பாரை போன்ற தமிழர்களின் பாரம்பரியப் பிரதேசங்களையும் அங்கு வாழ்கின்ற மக்களையும் கூட தங்களுடைய யாழ் மேலாண்மைக்காக கைவிட்டு விடுகின்ற போக்கினைக் காணலாம். தனது நலனுக்காக பெற்ற தாயையும் பலிகொடுக்கின்ற மனநிலையினைத்தான் இவர்களைப் போன்றவர்களிடம் காண்கின்றோம். அரசியல் ஆய்வாளர் ஜோதிலிங்கத்தின் மொழியிலும் அவருடைய நோக்கு நிலையிலும் கூறுவதாக இருந்தால் கிழக்கைக் நாங்கள் கையாழ வேண்டும் என்பதன் அர்த்தம் இதுதான். தரப்படுத்தலைப் பொறுத்தவரை கிழக்கு மட்டும் அவர்களால் கையாளப்படவில்லை யாழ் குடாநாட்டுக்கு வெளியில் இருந்த தமிழர்கள் அனைவரும் கையாழப்பட்டார்கள் என்பதுதான் உண்மையாகும்.      

பல்கலைக் கழக அனுமதியில் இனரீதியான தரப்படுத்தலை விட்டு மாவட்ட கோட்டாமுறை அறிமுகப்படுத்தப்பட்ட பின்பும் மாவட்ட கோட்டாமுறையின் நன்மைகள் பற்றிப் பேசாத யாழ் மேலாதிக்கம் 1975 – 1985 களிலும் இனரீதியான தரப்படுத்தலே இருக்கின்றது என்று பிரச்சாரம் செய்து அன்று இளைஞர்களாக இருந்த பல்லாயிரக்கணக்கானவர்களின் வாழ்வை நாசமாக்கியது. உண்மைகளை மறைத்து தமிழ்த் தேசியத்தின் பெயரால் தங்கள் நலனுக்காக எல்லாத் தமிழ் மக்களையும் பலிக்கடாவாக்கிவிட்டு தாம் மட்டும் தப்பி ஓடி ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடைந்ததும் இந்த உயர் வர்க்கம்தான். இன்று அங்கிருந்து கொண்டு தங்கள் பணத்தினாலும் செல்வாக்கினாலும் தங்கள் நலனுக்காக தமிழ் அரசியலை இயக்குபவர்களாகவும் இவர்கள் இருக்கின்றார்கள். 

தமிழ் அரசியலையும் தமிழ் சமூக இருப்பையும் யாழ் மேலாதிக்கம் தனது நலனுக்காக எவ்வாறு கையாண்டது தற்போது எவ்வாறு கையாழ்கின்றது என்பதை வரலாற்றுரீதியாகவும் தற்போதைய நடைமுறைரீதியான நடவடிக்கைகளையும் நாம் விமர்சனத்துக்குள்ளாக்குகின்றோம். இவற்றைப் புரிந்து கொள்ளமுடியாத இடதுசாரியான திரு.வி.சிவலிங்கம் அவர்கள் தனது கட்டுரையில் “ஐம்பதுகளில் நாட்டில் காணப்பட்ட மத எழுச்சிகள், சிங்களப்பகுதிகளிலும், தமிழ்ப் பகுதிகளிலும் பாரிய எழுச்சிகளை ஏற்படுத்தின. சிங்களப் பகுதிகளில் பிரிவேனா பாடசாலைகளும், தமிழ்ப் பகுதிகளில் சைவ பாடசாலைகளும் தோற்றுவிக்கப்பட்டன. அதே போலவே கிறிஸ்தவபாடசாலைகளும் தோற்றின. சமூக மாற்றம் இவ்வாறு நிகழ்ந்தநிலையில் ஆறுமுக நாவலரைப் பன்முக அடிப்படையில் அணுகாமல் யாழ். மேலாதிக்கத்தின் அடையாளமாக வர்ணிப்பது வரலாற்றைப் புரிந்து கொள்ள மறுப்பதாகவே உள்ளது” என்று கூறுவதினூடாக ஆறுமுகநாவலருடைய கல்விக் கொள்கைக்கும் அதனை நடைமுறைப்படுத்திய யாழ் உயர்வர்க்கத்தக்குக்கும் சான்றிதழ் வழங்கிக் கௌரவிக்கின்றார். அதற்குக் கொடிபிடித்துக் கொண்டு பல புலம்பெயர் முகநூல் ஆராய்ச்சியாளர்களும் உள்ளூர் அறிஞர்களும் முன்னுக்கு வருவது இன்னும் வேடிக்கையானது.  

தொடரும்………………… 

(குறிப்பு) 

எனது இந்தத் தொடர் யாழ்ப்பாணத்தை வெறுக்கத்தக்க ஒன்றாகவும் கிழக்கை புனிதப்படுத்துவதாக இருப்பதாக எனது நண்பர்கள் சிலர் என்னிடம் கூறுகின்றார்கள். நான் சிறிது காலம் யாழ்ப்பாணத்தில் கல்வி கற்றிருக்கின்றேன். எனக்கு இவ்வாறு சிந்திப்பதற்கான கல்வியைக் கற்றுக் கொடுத்தவர்கள் எனது யாழ்ப்பாணத்து ஆசிரியர்கள். அவர்களை எப்போதும் மானசீகமாக நேசிக்கின்றேன்.  இன்றும் என்னை பல குடும்பங்கள் தங்களுடைய ஒரு குடும்ப உறுப்பினராகத்தான் கொண்டிருக்கிறார்கள். எனக்கு ஒன்று என்றால் ‘அண்ணா’ ‘மகன்,’ ‘மாமா, ‘Sir என அழைத்துக்கொண்டு ஓடிவருவதற்குப் பலர் இருக்கின்றார்கள். அவ்வாறான உறவையும் தொடர்பையும் பேணிக்கொண்டுதான் இந்தத் தொடரை எழுதிவருகின்றேன். இதன் மூலம் நான் கூறவருவது என்னவென்றால் யாழ்குடாநாட்டைச் சேர்ந்த எந்தவொரு தனிநபரையோ அல்லது அந்த மக்களையோ நான் எவ்விதத்திலும் புண்படுத்த முனையவுமில்லை அது எனது நோக்கமும் அல்ல. ஈழத்துச் சமூக அமைப்பிலும் அதன் அரசியல் நடவடிக்கைகளிலும் மேலாண்மை பெற்ற ஒரு சமூகக்குழு கருத்தியல் ரீதியாக தனது இருப்பை மிக வலுவாகக் கட்டமைத்து தனக்கு அப்பாலான தமிழ் மக்களை சமூக, அரசியல், பண்பாட்டுரீதியாக அடக்குமுறைக்கு உள்ளாக்கி வருவதனையே இங்கு கேள்விக்குட்படுத்துகின்றேன். அதற்கான ஆதாரங்களை வரலாற்று ரீதியாக எடுத்துக்காட்டி வருகின்றேன். இதே அடக்கு முறையினை கிழக்கின் அதிகாரவர்க்கமும் தமிழ்ச் சமூகத்தின் மீது தனது மேலாண்மையை ஏற்படுத்துமாக இருந்தால் எவ்வித தயக்கமும் இன்றி அவ்வதிகார வர்க்கத்தையும் தோலுரித்துக் காட்டத் தயங்கப் போவதில்லை என்பதையும் இவ்விடத்தில் குறிப்பிட்டுக் கொள்கின்றேன். கிழக்கு அவ்வாறு மேலாண்மை வகித்து அடக்கு முறையினைப் பிரயோகித்து இருந்தால் அது தொடர்பாக இப்பத்திரிகையில் சுட்டிக்காட்டுமாறும் அது தொடர்பான நியாயமான கருத்துக்களையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியும் என்பதையும் வாசகர்கள் கவனத்துக்கு அறியத்தருகின்றேன்.)