போர்க்குற்ற விசாரணை! விடுதலைப்புலிகளும்  …. கோசவோ விடுதலை இராணுவமும்.! (காலக்கண்ணாடி 57)

போர்க்குற்ற விசாரணை! விடுதலைப்புலிகளும் …. கோசவோ விடுதலை இராணுவமும்.! (காலக்கண்ணாடி 57)

— அழகு குணசீலன் — 

“என்னை விசாரிக்க வேண்டாம் அவரை விசாரியுங்கள்” என்று எப்படிக்கோருவது? என்ற  “ஆவணச்சண்டை” வடமோடி நாட்டுக்கூத்தின் கட்டியகாரன் சுமந்திரனின் கட்டியம்தான் கூத்தின் கதையையே மாற்றியது. 

“அப்படித்தான் ஏதும் நடந்திருந்தாலும் அவை “சிறு சிறு” குற்றங்கள் என்றும் நாங்கள் புலிகளை காட்டிக்கொடுக்க மாட்டோம் என்றும் கூறிய சித்தார்த்தன், திடீரென்று “எங்களையும் “விசாரிக்கலாம்” என்றார்.  

சிறிலங்காவின் பாராளுமன்றத்தில் மாட்டிக்கொண்ட  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வேறுவழியின்றி “இருதரப்பையும்  விசாரிக்கலாம்” என்று கூறவேண்டியதாயிற்று. ஆனால் அதற்கு முன்னர் “உண்மையான புலிகள் குற்றங்களைச் செய்யவில்லை, அவற்றை நிரூபிக்கவும் முடியாது”. என்றவர் இவர். 

ஆக, இருதரப்பும் யுத்தமீறல்களையும், போர்க்குற்றங்களையும் செய்திருக்கிறார்கள் என்ற ஐ.நா. அறிக்கையை இவர்கள் ஏற்றுக்கொள்வதன் மூலம் ஓரளவுக்காவது வெளிப்படையாக பேசுகிறார்கள். 

 சம்பந்தர், சுமந்திரன், கஜேந்திரகுமார் போன்ற தமிழ்த்தேசிய சட்ட வாதிகளுக்கு வேறுவழியில்லை. இல்லையேல் சர்வதேசம் இவர்களின் சட்டம் / நீதி நடுநிலைமை குறித்து கேள்வி எழுப்பவேண்டியிருக்கும். பழுத்த நீதியரசர் ஒருவர் இன்னும் மௌனவிரதம் இருக்கிறார் அவரை விட்டு விடுவோம். 

ஒரு சந்தர்ப்பத்தில் “சுமந்திரன் திருந்தமாட்டார்” என்று சொன்னவர் கஜேந்திரகுமார். இப்போது சுமந்திரனின் வழியில் செல்கிறார். இங்கு சுமந்திரன் திருந்தினாரா? அல்லது கஜேந்திரகுமார் திருந்தினாரா என்பது அவர்களுக்குத்தான் வெளிச்சம். சட்டம் ஒரு இருட்டறை. 

எது எப்படியோ, சிறிலங்கா அரசு, இந்தியா, மேற்குலக தூதுவர்கள், சர்வதேசம், ஐ.நா. எல்லோரும்  எதை விரும்பினார்களோ, எதை சுமந்திரனிடம் இருந்து எதிர்பார்த்தார்களோ அந்தப் பணியை தான் செய்தது மட்டுமன்றி மற்றவர்களையும் தன் வழிக்கு கொண்டு வந்துள்ளார் அவர். 

“எங்கள் விரல்களால் எங்கள் கண்களைக் குத்துவதா?” என்று கேட்டவர்களுக்கும், சிங்களவர்கள் தங்கள் விரல்களால் தங்கள் கண்களைக்குத்தவேண்டும் என்று நினைத்தவர்களுக்கும், இருதரப்பும்  தங்களுக்கு தாங்களே குத்திக்கொள்ளுங்கள் என்று சொல்லியிருக்கிறார் ஐ.நா.அம்மையார். அவ்வளவுதான்…!  

அம்மையார் மட்டுமல்ல ஐ.நா.வின் ஆளணியும் யுகோஸ்லாவிய – கோசவோ யுத்தத்தில் இருந்து நிறையவே கற்றுக்கொண்டிருக்கிறார்கள். 

கோசவோ விடுதலை இராணுவத்தின் மீதான போர்க்குற்ற விசாரணைகள் நெதர்லாந்தின் ஹாக் நகரில் சர்வதேச விசேட நீதிமன்றத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இன்றைய நிலையில், கோசவோ அனுபவங்களுக்கூடாக இன்றைய பேசுபொருளாக உள்ள ஈழப்போராட்ட போர்க்குற்ற விசாரணையை  காட்சிப்படுத்த விளைகிறது காலக்கண்ணாடி. 

இரு போராட்டங்களும் முற்றுமுழுதாக ஒத்ததன்மைகளைக் கொண்டவை அல்ல. எனினும் பெரும்பாலான நிகழ்வுகளையும், அரசியல் செயற்பாடுகளையும் பொருத்திப் பார்க்க முடிகிறது. இதற்கு முதலில் கோசவோ விடுதலை இராணுவம் மற்றும் கோசவோ விடுதலைப்போராட்டம் பற்றிய முற்தகவல்கள் ஒப்பீட்டளவில் அவசியமாகின்றன. 

கோசவோ, ஈழ, தனிநாடு போராட்ட போக்கு  

 (*) இலங்கையின் இனப்பிரச்சினை காலனித்துவ ஆட்சியின் எச்சம் என்றால், கோசவோவின் பிரச்சினை ஒஸ்மானிய ஆட்சிக்கால எச்சம் எனலாம். 

(*) ரீட்டோவின் தலைமைத்துவத்தில் சகோதரத்துவம், வேற்றுமையிலும் ஒற்றுமை அரசியல் கைக்கொள்ளப்பட்டபோதும் அவருக்கு பின்னர் அது கடிவாளமற்ற இனவாத, தேசிய வாதமாக உருவெடுத்தது. இலங்கையில் கோல்புறூக், சோல்பரி அரசியல் சீர்திருத்தங்களில் ஏற்பட்ட திருப்தியின்மை குடியரசு அரசியலமைப்பு உருவானபோது சிங்கள பௌத்த தேசிய வாதத்தை எட்டியது. 

(*) கோசவோவின் மிதவாதத்தலைமையான இப்ராஹிம் றகோவா (IBRAHIM RAGOVA)  யூகோசிலாவிய அரசுக்கு எதிராக வன்முறையற்ற சாத்வீக போராட்டத்திற்கு தலைமையேற்றார். இவர் கோசவோ காந்தி என்று அழைக்கப்பட்டவர். இது ஈழத்தழிழர்களைப் பொறுத்தமட்டில் தந்தை செல்வாவுடன் ஒப்பிடக்கூடியது. எதிர்த்தரப்பினர் செல்வாவை காற்சட்டை காந்தி என்ற ஒரு காலமும் இருந்தது. 

(*) ஒருகட்டத்தில் சாத்வீகத்திற்கு சமாந்தரமாக ஆயுதக்குழுக்கள் மறைவில் இயங்கின. இது கோசவோவிடுதலை இராணுவத்திற்கும், விடுதலைப்புலிகளுக்கும் பொருத்தமானது. ஆரம்பத்தில் இவை இரண்டும் மறைந்து இருந்து தாக்குதல் நடாத்தி விட்டு ஓடி ஒழித்துக் கொள்கின்ற கெரில்லா அமைப்புக்களாகவே ஆரம்பித்தன. 

(*) தேசியசியவாத அரசபொறிமுறையின் பாதுகாவலர்களான பாதுகாப்பு படையினருக்கும்,போராட்டக்குழுக்களுக்குமான மோதல்கள் தொடர்ச்சியாக அதிகரிக்க, அதிகரிக்க தாக்குதல்கள், எதிர்த்தாக்குதல்கள் என்று அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.அரசியல் அற்ற இன ரீதியான வன்முறைகள் இருதரப்பிலும் அடிக்கு அடி, சூட்டுக்குச் சூடு,வெட்டுக்கு வெட்டு என்ற வன்முறை அரசியலை நோக்கி மக்களை திரளச்செய்தது. 

(*) மக்கள் சாத்வீகத்தில் நம்பிக்கை கொண்ட மிதவாதத் தலைமைகளில் நம்பிக்கை இழந்து ஆயுதப்போராட்டத்தை ஆதரிக்கின்றனர். இதற்கு எதிராக தேசியவாதம் பெரும்பான்மை இன மக்களின் ஆதரவைப் பெறுகிறது. தமிழர்களில் பெரும்பான்மையினர் புலிகளை ஆதரித்தது போன்று, கோசவோ அல்பானியர்களில் பெரும்பாலானவர்கள் விடுதலை இராணுவத்தை ஆதரிக்கின்றனர். மறுபக்கத்தில் சேர்பியர்கள் இனவாத சேர்பிய அரசையும், சிங்களவர்கள் இனவாத சிங்கள அரசையும் ஆதரிக்கின்றனர். 

(*)  யுத்தம் தொடர்ந்த நிலையில்  வரலாற்றில் முதன்முதலாக மனிதாபிமானத்தின் பெயரில் யூகோஸ்லாவியா, கோசவோவில் நேட்டோ இராணுவம் தலையிடுகிறது. அதே மனிதாபிமானம் பேசி உணவுப் பொதிகளை வீசி இந்திய சமாதானப்படை இலங்கை வருகிறது. 

(*) ஐ.நா, படைகளின் சமாதானப்பணியில் கோசவோ தனிநாட்டு பிரகடனம் செய்கிறது. இந்திய படைக்காலத்தில் வரதராஜப்பெருமாள் ஈழப்பிரகடனம் செய்கிறார். இலங்கையில் சமாதான முயற்சி தோவ்வியுற்றதால் இந்தியப்படை வெளியேற யுத்தம் தொடர்ந்தது. 

ஐ.நா.படையை கூப்பிடுங்கள் என்ற குரலும் இலங்கையில் ஒலித்தது. 

(*) விடுதலைப்புலிகள் போன்றே, கோசவோ விடுதலை இயக்கமும் சர்வதேச பயங்கரவாதப் பட்டியலில் இடம்பெற்றது. முரணாக இந்தியா புலிகளை வளர்த்தது போல், அமெரிக்கா கோசவோ விடுதலை இராணுவத்தை பூகோள நலன் சார்ந்து  வளர்த்து விட்டது. 

(*) யூகோஸ்லாவிய சேர்பிய தரப்பு மீதான போர்க்காலகுற்றங்கள் விசாரணை முடிவடைந்து விட்டது. இப்போது கோசவோ விடுதலை இராணுவ போர்க்கால குற்றங்கள் விசாரணை ஆரம்பமாகிறது. இலங்கையில் போரில் சம்பந்தப்பட்ட இருதரப்பும் விசாரிக்கப்படவேண்டும் என்ற கருத்து இப்போது எப்போதும் இல்லாதவாறு  சர்வதேசப் பேசுபொருளாகி இருக்கிறகாலம் இது. 

கோசவோ சுதந்திரப்பிரகடனமும் பூகோள அரசியலும். 

1991 இல் ஆரம்பித்து சுமார் ஒரு தசாப்தகாலத்திற்கு நீடித்த யுகோஸ்லாவிய யுத்தம் முடிவுற்ற நிலையில், கோசவோ 17.பெப்ரவரி. 2008இல் தனிநாட்டுப்பிரகடனம் செய்தது. நேட்டோ கூட்டுப்படைகளின் தலையீட்டையும், ஐ.நா. நீலத்தொப்பி சமாதானப்படைகளின் சமாதான முயற்சிகளையும் தொடர்ந்து அமைந்தது இந்த சுதந்திரப்பிரகடனம். 

யுத்தம் முடிவடைந்து ஐ.நா. சமாதானப்படைகளின் பிரசன்னத்தில் ஆயுத ஒப்படைப்புடன் கோசவோ விடுதலை இராணுவம் 1999இல் கலைக்கப்பட்டது. போராளிகள் சட்டரீதியான நிர்வாக இடைக்கால கட்டமைப்புக்குள் கட்டம் கட்டமாக உள்வாங்கப்பட்டு கோசவோ சுயாட்சி நிர்வாகத்திலும், ஜனநாயக அரசியல் நீரோட்டத்திலும் கலந்தனர். 

பிரகடனம் செய்யப்பட்ட நாள் முதல் இன்று வரை ஐ.நா. அங்கத்துவ 193 நாடுகளில் 60 வீதமான 115 நாடுகள் கோசவோவை அங்கீகரித்துள்ளன.  ஐரோப்பிய ஒன்றிய 27 நாடுகளில் 81 வீதமான 22 நாடுகள் கோசவோவை தனிநாடாக ஏற்றுக்கொண்டுள்ளன. முப்பது நாடுகளைக் கொண்ட நேட்டோ கூட்டில் 26 நாடுகள் அதாவது 87 வீதமான நாடுகளும், 57 நாடுகளைக் கொண்ட இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பில் 87 வீதமான 35 நாடுகளும் ஏற்றுக்கொண்டுள்ளன. இந்த இஸ்லாமிய அமைப்புத்தான் மியான்மார் இராணுவத்தின் ரோங்கியாக்கள் மீதான தாக்குதல்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டுவந்தது என்பது கவனிக்கத்தக்கது.  

ஐ.நா.பாதுகாப்புச்சபையின் அங்கிகாரம் ஊடான பூரண சர்வதேச அங்கீகாரத்தை இன்னும் கோசவோ பெறவில்லை. காரணம் ரஷ்யாவும், சீனாவும் தனிநாட்டுப்பிரகடனம் சட்டரீதியற்றது என்றும், ஐ.நா.வின் 1244ம் இலக்க பிரகடனம் மீறப்பட்டுள்ளது என்றும் கூறி தமது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தடுத்து வருகின்றன. சீனா, இந்தியா, ஸ்பெயின் போன்ற நாடுகள் கோசவோவை அங்கீகரிக்காததற்கு அந்நாடுகளில் நிலவும் உள்நாட்டு சுய இலாப அரசியல் காரணமாகிறது. தைவான், திபெத், ஜம்மு காஷ்மீர், கத்தலொனியன் போன்றவை தனிநாடு கோருவது இதற்கு காரணம். 

பொதுவாக கோசவோவின் தன்னிச்சையான, ஒருதலைப்பட்சமான சுதந்திரப் பிரகடனம் குறித்து,  சுயநிர்ணயம் சார்ந்த பல்வேறு சட்ட, அரசியல் ஆய்வாளர்களிடையே நிறையவே கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. 

எது எப்படியோ 20 இலட்சம் அல்பானிய இனத்தவர்களையும், 1 இலட்சத்து 20 ஆயிரம் சேர்பிய சிறுபான்மையினரையும் கொண்டு கோசவோ இயங்குகிறது. சேர்பியா கோசவோவை அங்கீகரிக்க தொடர்ந்தும் மறுத்து வருகிறது. 

எல்லை நாடுகளான அல்பானியா, வடமக்ஸிடோனியா என்பன அல்பானியர்களைக்கொண்ட நாடுகள். கோசவோ விடுதலை இராணுவத்திற்கு இந்த இரு நாடுகளும் அளித்த ஆதரவிற்கான ஒரு பின்னணி   மூன்று நாடுகளையும் இணைத்து ஒரு பரந்த பெரிய அல்பானியாவை உருவாக்குவதாகும். ஈழப்போராட்டத்திலும் தமிழகத்துடன் தமிழீழத்தை இணைத்து  பரந்த பெரிய தமிழகம் என்று பேசப்பட்டதும் இங்கு நினைவிற்கொள்ளத்தக்கது. 

யூகோஸ்லாவியகோசவோ போர்க்குற்ற விசாரணைகள் 

முன்னாள் யூகோஸ்லாவியப் படையினரின், அரசியல் தலைமைகளின் போர்க்குற்றங்களை விசாரிக்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நெதர்லாந்தின் ஹாக் நகரில் 25. மே மாதம். 1993இல் அமைக்கப்பட்டது. விசாரணைகள்  2017 டிசம்பர் 17 அன்று முடிவுற்றது. 

161 பேருக்கு எதிராக போர்க் குற்றம் சாட்டப்பட்டபோதும், விசாரணைகள் பூரணமாக மேற்கொள்ளப்பட்டு 84 பேருக்கு மட்டுமே தீர்ப்பு வழங்கப்பட்டது. மிகுதியானவர்கள் விசாரணைக்காலத்தில் மரணமடைந்தும் மற்றும் போதிய சாட்சியங்கள் இல்லாமையால் வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டும் அல்லது வாபஸ்பெறப்பட்டும் இருந்தனர். 

யுகோஸ்லாவிய அன்றைய ஜனாதிபதி ஸ்லவோடன் மிலோசெவிச்  மற்றும் அவரின் முக்கிய தேசிய, பிராந்திய இராணுவ கட்டளைத் தளபதிகளும் சிறையில் அடைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டிருந்தனர். 

இந்த விசாரணைகளின் போது சேர்பியர்கள் அல்லாத மற்றைய இனத்தவர்களே அதிகம் சாட்சிகளாக இருந்தனர். குறிப்பாக கோசவோ அல்பானியர்களின் பங்கு இங்கு அதிகமானது. ஏனெனில் பெருமளவு பாதிப்புக்களை சந்தித்தவர்கள் இவர்களே. சர்வதேச நீதிமன்றம் அதற்கான ஆதாரங்களையும் தகவல்கள் சாட்சியங்களையும் ஒழுங்கமைத்திருந்தது. இது மிலொசேவிச்சின் அரச பயங்கரவாதத்திற்கு எதிரான சர்வதேச நீதித்துறை செயற்பாடாக இருந்தது. 

இந்த விசாரணைகள் இவ்வாறாக முடிவடைந்த நிலையில் யுத்தத்தின் மறுதரப்பு பங்காளியான கோசவோ விடுதலை இராணுவம் மீது சர்வதேசநீதித்துறை திரும்பியிருக்கிறது. இந்த விவகாரமே தமிழீழவிடுதலைப்புலிகளின் யுத்தக்குற்றங்கள் குறித்தும் இன்று முக்கியம் பெறுகிறது. 

சர்வதேச குற்றவியல் போர்க்குற்ற நீதிமன்றம், ஜெனிவா பிரகடன மீறல், போர் சட்டவிதிமுறைகள் மீறல்,மனிதப்படுகொலைகள், மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் என பல விடயங்களை விசாரிக்கின்ற அதிகாரத்தை கொண்டுள்ளது. 

குற்றம் சாட்டப்பட்டுள்ள பலர் இன்றைய கோசவோ அரசின் முக்கிய புள்ளிகள், மற்றும் முன்னாள் கோசவோவிடுதலை இராணுவத்தின் முக்கியஸ்தர்கள். இருப்பினும் விசாரணைகள் கோசவோவிவில் நடைபெறுவதில் பாதிக்கப்பட்ட தரப்பிலும், சர்வதேச நீதியாளர்கள் மத்தியிலும் நேர்மையான விசாரணைகள் குறித்து சந்தேகங்கள் உண்டு. இதனால் சர்வதேச கோசவோ விசேட நீதிமன்றம் ஹேக்கில் இயங்குகிறது. 

கோசவோ விடுதலை இராணுவத்திற்கு எதிராக சாட்சியமளிப்பவர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள், கடத்தப்பட்டு காணாமல் போகிறார்கள், ஏன் கொலையும் செய்யப்படுகிறார்கள். இதன்மூலம் சாட்சியங்களையும், தடையங்களையும் அழிக்க முன்னாள் கோசவோ விடுதலை இராணுவம் முயற்சிக்கிறது. கோசவோ விசாரணைப் பொறிமுறை 

“KOSVO SPECIALIST CHAMBERS AND SPECIALIST PROSECUTOR’S OFFICE” என்று  அழைக்கப்படுகின்றது. 2015இல் நிறுவப்பட்ட இந்த கட்டமைப்பு 1998க்கும் 2000க்கும் இடையில் கோசவோ குடிமக்களுக்கும், சமஸ்டி யூகோஸ்லாவிய குடியரசுகளின் மக்களுக்கும் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களை விசாரணை செய்வதை இலக்காகக் கொண்டது. ஐ.நா., ஐரோப்பிய ஒன்றிய ஆளணியின் உதவியுடன் கோசவோ அரசியல் அமைப்பு, கோசவோ குற்றவியல் சட்டங்களையும், சர்வதேச சட்டங்களையும் உள்வாங்கி இந்த விசாரணைகள் இடம்பெறுகின்றன. 

கோசவோ விடுதலை இராணுவம் மேற்கொண்ட யுத்தமீறல்கள், மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள், துரோகிகள், காட்டிக்கொடுப்பவர்கள், ஒட்டுக் குழுக்கள், எனப்பட்டம் சூட்டப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டவர்கள், ஆட்கடத்தல்கள், அரசியல் கொலைகள், சித்திரவதைகள், சித்திரவதைச் சிறைக்கூடங்கள், பாலியல் வன்முறைகள், ஆயுதம், போதைவஸ்து கடத்தல், கொல்லப்பட்டவர்களின் உடல் உறுப்புக்கள் வியாபாரம், குறிப்பாக கோசவோவில் வாழும் சிறுபான்மை சேர்பியர்கள் மீதான கொலைகள் மற்றும்   மாற்றுக்கருத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் கொலைகள், மிதவாத அரசியல் தலைவர்களின் கொலைகள் போன்ற ஒரு நீண்ட பட்டியல் குற்றச்சாட்டு கோசவோ விடுதலை இராணுவம் மீது சுமத்தப்பட்டுள்ளது. 

வன்முறையற்ற கோசவோ விடுதலைப்போராட்ட அமைப்பான றகோவாவின் கோசவோ ஜனநாயக லீக் உறுப்பினர்கள் மீது ஹாசிம் தாஜியின் விடுதலை இராணுவம் மேற்கொண்ட கொலைகள் முக்கியமானவையாக உள்ளன. இடைக்கால நிர்வாகத் தேர்தலில் தாஜி பிரதமராக தெரிவுசெய்யப்பட்டவர்.  பின்னர் அவர் கோசவோவின் ஜனாதிபதியானார். 

குற்றம் சாட்டப்பட்டு இருப்பவர்களில் கோசவோ ஜனாதிபதி ஹாசிம் தாஜி (HASIM THACI)   முக்கியமானவர். இவர் கோசவோ விடுதலை இயக்கத்தின் தலைமைப்பொறுப்பை ஏற்றிருந்த இராணுவ முக்கியஸ்தர். 1999இல் கலைக்கப்பட்ட கோசவோ விடுதலை இராணுவத்தின்  தலைவர். இவருக்கு எதிராக நூற்றுக்கு மேற்பட்ட கொலைக்குற்றங்கள், சித்திரவதைகள், கோசவோவில் சிறுபான்மையினராக உள்ள சேர்பியர்கள் மீதான தாக்குதல்கள் (இவை வடக்கு கிழக்கில் சிங்கள, முஸ்லீம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தமிழ்தரப்பு தாக்குதல்களுக்கு சமமானவை) போன்ற பல குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன. 

கோசவோ விடுதலை இராணுவத்திற்கு ஆதரவளித்த அல்பானிய, வடமக்ஸிடோனிய நாட்டவர்களும், வேறுநாடுகளில் புலம் பெயர்ந்து வாழும் கோசவோ விடுதலை இராணுவத்தின் முக்கியஸ்தர்களையும் நோக்கி சர்வதேச, உள்நாட்டுச் சட்டங்கள் திரும்பியுள்ளன. ஜனாதிபதி தாஜி குற்றம் சாட்டப்பட்டதைத் தொடர்ந்து பதவி விலகியுள்ளார். இந்த விசாரணைக்கான சர்வதேச ஒப்பந்தம் கோசவோ பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவுடன் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 

தன்மீதான அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் மறுக்கின்றார் தாஜி. “கோசவோவின் விடுதலைப்போராட்டத்தை கொச்சைப்படுத்தி, அதன் மீது அழுக்கை பூசுகின்ற நடவடிக்கை இது” என்கிறார் அவர். “இந்த நீதி மன்றம் சர்வதேச அழுத்தத்தினால் வந்தது, அத்துடன் வரலாற்றில் அநீதியானது” என்று சாடுகிறார் கோசவோ விடுதலை இராணுவத்தின் முன்னாள் தலைவரும், முன்னாள் ஜனாதாபதியுமான தாஜி. தாஜி இயக்கத்தில் “பாம்பு” என்று அழைக்கப்பட்டவர். 

கடந்த செப்டம்பர் 15 ம் திகதி ஷாலி முஸ்தபா என்ற கோசவோ விடுதலை இராணுவ முக்கியஸ்த்தர் மீதான விசாரணை ஆரம்பமாகியுள்ளது. இதுவரை 8முக்கியஸ்தர்கள் மீதான வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அனைவரும் கைதுசெய்யப்பட்டு ஹாக் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். அனைவருமே கோசவோ விடுதலை இராணுவத்தின் ஸ்தாபக உறுப்பினர்கள், முக்கிய புள்ளிகள். 

கட்டளைத்தளபதி, பிரதித் தளபதி, புலனாய்வுத்துறை தலைவர், மாவீரர் அமைப்பின் தலைவர், ஆயுத பொறுப்பாளர், நிதித்துறைப் பொறுப்பாளர் உள்ளிட்ட பதவிகளில் இருந்தவர்கள். இன்றைய கோசவோ அரசியலில் பாராளுமன்ற உறுப்பினர், சபாநாயகர், அமைச்சர் பதவிகளை வகித்தவர்கள். இவர்களை துரத்துகிறது போர்க்குற்ற விசாரணை. 

விடுதலைப்புலிகளை விசாரிக்க முடியுமா?இல்லையா? 

கோசவோவின் அனுபவங்களின் ஊடாக நோக்குகையில் விடுதலைப்புலிகளை விசாரிக்க கூடாது என்று கோருவதில் எந்த நீதியும், நியாயமும், நேர்மையும் இருப்பதாக தெரியவில்லை.  

ஐ.நா. விசேட குற்றவியல் நீதிமன்ற வரலாற்றில் நாடுகள் மட்டுமன்றி ஆயுத அமைப்புக்களும் நீதிமன்றில் நிறுத்தப்பட்டுள்ளன. எனவே விசாரணை ஒன்றை மறுப்பவர்கள் ஈழம் சார்பாகவும் தாஜியின் கருத்தைக் கொண்டவர்களாகவே உள்ளனர்.  

சர்வதேச விசாரணையை மறுத்து சர்வதேசத்துடன் முரண்படுவதன் மூலம் ஈழத்தமிழர்கள் எதிர்காலம் குறித்து பேசுகின்ற எந்த இலக்கையும் அடையமுடியுமா? என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாததாகிறது. சிறிலங்காவை குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துவது கூட பாதுகாப்புச் சபையின் ஊடாகவே நகர்த்தப்படவேண்டிய நிலையில் உள்ளது. சீனாவும், ரஷ்யாவும் சிறிலங்காவுக்கு வலமும், இடமும் இருக்கின்ற நிலையில் விசாரணையை மறுப்பவர்கள்   பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்குமான நீதியை மறுப்பவர்களாகிறார்கள். 

போரில் சம்பந்தப்பட்ட இருதரப்பையும் விசாரணை செய்யுங்கள் என்று கோரி குற்றச்சாட்டுக்களை ஆதாரங்களுடனும், சாட்சியங்களுடனும் மறுத்துரைத்து சர்வதேச நீதியைப்பெறுவதே சரியான வழிமுறையாக இருக்கமுடியும். விசாரணை என்று வந்தால் விடுதலைப்புலிகளுக்கு எதிரான குற்றப்பத்திரம் பெரும்பாலும் கோசவோ விடுதலை இயக்கத்திற்கு எதிரான உள்ளடக்கங்களைச் கொண்டதாகவே இருக்கும் என எதிர்பார்பார்க்கலாம். 

கோசவோ மக்களின் இனரீதியான உணர்வுபூர்வமான அனுதாபம் விடுதலை இராணுவத்தின் மீது இருப்பது போன்று ஈழத்தில் விடுதலைப்புலிகள் மீதும் இந்த அனுதாபம் இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அந்த வெறும் அனுதாபம் ஒட்டுமொத்த தமிழ்மக்களுக்கும் கிடைக்கின்ற நீதிக்கு குறுக்கே நகர்த்தப்படுகின்ற ஒருதடைக்கல்லாக அமையக்கூடாது. இந்த பிராந்திய, சர்வதேச பூகோள அரசியலை விளங்கிக் கொள்ளாத அல்லது விளங்கிக்கொள்ள அடம்பிடித்து மறுக்கின்ற தமிழ்த்தேசிய  நிலைப்பாடு சிறிலங்கா அரசுக்கே மீண்டும், மீண்டும் சாதகமான வாய்ப்புக்களை வழங்குவதாக அமையும். சிறிலங்கா தன்மீதான விசாரணையை மறுப்பதற்கு தமிழ்தரப்பு வழங்கும் வாய்ப்பாக அமைந்துவிடும். 

தமிழ் தரப்பு தம்மீதான போர்க்குற்ற விசாரணைக்கு மறுப்பதும் 

ஒருவகையில் எங்கள் விரலை எடுத்து எங்கள் கண்ணில் குத்துவது போன்றதுதான். இல்லையா…? என்று  தமிழ்த்தேசிய பாராளுமன்ற அரசியலை பார்த்துக்கேட்கிறது காலக்கண்ணாடி …! 

தமிழர் அரசியல் வரலாற்றில் நாம் கற்றுக்கொண்டது இது…! 

நடக்கும் என்பார் நடக்காது…! நடக்காது என்பார் நடந்துவிடும்…!!