“தளராதவன்” (விழிப்புணர்வுப் படம்)

“தளராதவன்” (விழிப்புணர்வுப் படம்)

யதார்த்தமான, ஆனால், கொஞ்சம் சங்கடமான பிரச்சினையை பேச முயற்சிக்கின்றது இந்த “தளராதவன்” என்ற சிறிய படம். 

40 நிமிடங்களுக்கு உட்பட்ட படந்தான் என்றாலும் இதனை குறும்பட வரையறைக்குள் சேர்க்க முடியுமா என்று தெரியவில்லை. ஆனால், இது ஒரு விழிப்புணர்வுப்படம். சமூகத்தில் காணப்படும் ஒரு தற்காலப் பிரச்சினை குறித்து அலச அது முற்படுகின்றது. 

அண்மைக்காலமாக எனது பார்வைக்கு கிட்டிய விழிப்புணர்வுப் படங்களில் இதுவும் ஒன்று. வேலையில்லா பட்டதாரிகள் விவகாரம் அண்மைக்காலமாக இலங்கை எதிர்கொள்ளும் ஒரு மிக முக்கிய விவகாரம். அதனை எதிர்கொள்வது குறித்து தமக்கு சரியெனப்பட்ட ஒரு முடிவை இயக்குனர் இங்கு வலியுறுத்த முனைகிறார். 

ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் வேலையில்லாமல், அலைவதும், தமக்கு அரசாங்கம் வேலைவாய்ப்பினை வழங்கத்தவறியுள்ளது என்று அவர்கள் போராடுவதும் இலங்கை சூழலில் பல வருடங்களாக தொடரும் ஒரு பிரச்சினை. 

அதற்காக அவர்கள் சில சங்கங்களை அமைத்து போராடியும் வருகின்றனர். ஆனால், அரசாங்கத்துக்காக அல்லது பிறருக்காக காத்திருந்து போராடி காலத்தை வீணடிக்காமல், நீங்களே கிடைத்த வேலையைச் செய்து முன்னேற முனையுங்கள் அல்லது உங்களுக்கான தொழிலை நீங்களே உருவாக்கிக்கொள்ளுங்கள் என்று இந்தப் படம் கூற முனைகிறது. அரச பணத்தில் கற்று, பட்டம்பெற்ற இளைஞர்களிடம் இதனை எதிர்பார்க்கலாம்தானே என்பது அந்த வாதம்.  

வேலையில்லா பட்டதாரிகள் தமக்கான சுய தொழிலை உருவாக்கிக்கொள்ள அரசாங்கம் என்ன வகையான ஏற்பாடுகளை செய்துகொடுத்திருக்கின்றது என்பதும் ஒரு விமர்சனத்துக்குரிய விடயந்தான் என்றாலும், இந்தப் படம் வேலையில்லா இளைஞர்களை இலக்கு வைத்து வந்துள்ளதால், “நீங்களே உங்கள் தொழில் வாய்ப்பை உருவாக்கிக்கொளுங்கள்” என்று படம் சொல்ல முற்படுவது ஆரோக்கியமான விடயந்தான். 

இங்கு “அரசாங்கத்தின் பொறுப்பு” வலியுறுத்தப்படவில்லை என்றாலும், “இளைஞர்களின் பொறுப்பு” வலுவாக வலியுறுத்தப்படுகின்றது. அது வரவேற்கத்தக்கது.  

விடயம் சர்ச்சைக்குரியதுதான், விமர்சனங்கள் வலுவாக வருந்தான். ஆனாலும் பிரச்சினையை படக்குழு துணிச்சலுடன் கையாள முற்படுவது பாராட்டத்தக்கது.  

ஒடித்தோற்ற ஒரே பழைய பாதையில் ஓடாமல், பழைய சித்தாந்தங்களையே பிடித்துக்கொண்டு ஓடாமல், புதிய பாணியில் சிந்திக்கத்துணியும் இளைஞர்கள்தான் எமது மண்ணின் முன்னேற்றத்துக்கு உதவ முடியும். அந்த வகையில் படக்குழுவுக்கு அரங்கத்தின் பாராட்டுக்கள். 

ஒரு வேலையில்லா பட்டதாரி படும் கஸ்டங்களை, சங்கடங்களை நன்றாக சொல்ல முயற்சித்திருக்கிறார்கள். 

மட்டக்களப்பு மண் வாசனை குலையாமல், அவரவரை அவரவர் பாணியில் பேச அனுமதித்திருப்பது சிறப்பு. 

தாயும், மகனும் சோடை போகாமல் நடிக்கிறார்கள். கிஸ்கா மற்றும் முரளியின் நடிப்பில் சில மலையாள நடிகர்கள் நினைவில் வந்துபோகிறார்கள். மிக்க மகிழ்ச்சி தம்பிமாரே.  

ஒரு படம் என்றால், அதிலும் ஒரு காதல் என்றால், ஒரு காதல் பாடலும் (டூயட்) கட்டாயம் வரவேண்டும் என்பது விதியல்ல. இங்கு பாடல் கதை ஓட்டத்துக்கு பெரும் பங்கை ஆற்றவில்லை. ஆனால், இசையமைப்பு, பாடல் படப்பிடிப்பில் குறையில்லை. ஆனால், பாடல் தனித்துத்தான் நிற்கிறது. பாடலை தவிர்த்திருக்கலாமோ? 

பாராட்ட இன்னும் நிறைய அம்சங்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றாக சொல்ல வேண்டியதில்லை என்று நினைக்கிறேன். படத்தையும் இங்கு இணைப்பதால், அனைவரும் அவற்றை நேரடியாக பார்த்து, ரசித்துவிடலாம். 

இப்படியான முயற்சிகள் இன்னும் நிறைய நமது மண்ணில் இருந்து வரவேண்டும். போலியான பிரச்சினைகளை அல்லாமல், இதுபோன்ற இளைஞர்களின் யதார்த்தமான பிரச்சினைகளை கையில் எடுத்து, ஆக்கபூர்வமான உங்கள் தீர்வுகளை பரிந்துரைக்க முனையுங்கள் தம்பி, தங்கைமாரே. எங்களுக்கும் வேண்டியது இதுவே. எமது ஊரின் தேவையும் இதுவே. வாழ்த்துக்கள். 

அன்புடன் 

பூ. சீவகன்