வடக்கு நோக்கி வந்த சொந்தச் சகோதரர் (நீதி மறுப்பும் நீதி கோரலும்)— 10

வடக்கு நோக்கி வந்த சொந்தச் சகோதரர் (நீதி மறுப்பும் நீதி கோரலும்)— 10

— கருணாகரன் — 

(இனவன்முறையினால் வடக்கு நோக்கி வந்த மலையக மக்களுக்கான நீதி இன்னும் கிடைக்கவில்லை. அவர்கள் நம்பி வந்த தமிழ்ப் பிரதேசங்களிலேயே (வடக்கிலேயே) புறக்கணிக்கப்படுகிறார்கள். பல வழிகளிலும் ஒடுக்கப்படுகிறார்கள். அரச நிர்வாகம் தொடக்கம் வளப்பகிர்வு, சமூக நிலை எனப் பல வகையிலும் இந்த அநீதி தொடர்கிறது. இந்த மக்களுடைய பிரச்சினைகளைக் குறித்து இதுவரையிலும் கவனத்திற்குரிய மைய உரையாடல்களோ, ஆய்வுகளோ நடக்கவில்லை. இந்தக் கட்டுரைத் தொடர் அதனைப் பொதுவெளியில் திறக்க முற்படுகிறது. — ஆசிரியர்) 

எதற்காக இந்தப் பாதகம்ஏனிந்தப் பாரபட்சங்கள்வேற்றுமைகள்நாம் யார்நீங்கள் யார்திரைமறைவில் எதற்காக ஆயிரம் நாடகங்கள்?” 

(10) 

ஜெயபுரத்திலிருக்கும் மக்களுக்கு எப்போதும் உள்ள சவால் தொழில் பிரச்சினையே. அவர்கள் ஒரு ஒதுக்குப் புறமாக – காட்டின் நடுவே குடியேற்றப்பட்டதால் வந்தது இந்தப் பிரச்சினை. கிளிநொச்சியில் குடியேறியோருக்கு தொழில் பிரச்சினை குறைவு. கூலித்தொழிலாக இருந்தாலும் எதையோ செய்யக் கூடியதாக இருந்தது. அது ஒரு நகரமல்லவா. சம்பளம் குறைவாக இருந்தாலும் எதையாவது செய்து கொள்வதற்கு நகரத்தில் ஏகப்பட்ட வாய்ப்புகள் உண்டு. அதனால் எப்படியோ பிழைத்துக் கொள்ளக் கூடியதாக இருந்தது. தவிர அங்கே இரணைமடுக் குளத்தின் நீர் மூலம் விரிந்து பரந்த ஆயிரக்கணக்கான ஏக்கரில் செய்கை பண்ணப்படும் நெல் விவசாயம். இவை இரண்டும் அங்கே குடியேறியோருக்குப் பல விதமான தொழில்களைக் கொடுத்தன. குறைந்தது விறகு வெட்டி விற்றாவது சீவித்துக் கொள்ளலாம். பாதிக்கும் மேற்பட்டோர் அப்படித்தான் விறகு வெட்டியும் கிணறு தோண்டியுமே வாழ்க்கையை நடத்தினர். 

ஆனால் ஜெயபுரத்தில் இதற்கு வாய்ப்பே இல்லை. அங்கேயிருந்து அடுத்த கிராமத்துக்குச் செல்வதாக இருந்தாலும் காட்டு வழியேதான் போக வேண்டும். அப்படிப் போனாலும் அந்தக் கிராமங்களில் பெரிய தொழில்வாய்ப்பெல்லாம் கிடையாது. அங்கே இருப்பவர்கள் தங்களுடைய தொழில்களை தாங்களே பார்த்துக் கொண்டார்கள். இந்த நிலையில் இவர்களுக்கு எங்கே வேலையைக் கொடுக்கப்போகிறார்கள்? 

ஆகவேதான் இவர்களுக்கு வேலையில்லாப் பிரச்சினை பெரிதாக இருந்தது. இதனால் வெளியிடங்களை நோக்கி வேலை தேடி ஆண்கள் செல்லவேண்டிய நிலை. சில குடும்பங்கள் இதைத் தாக்குப் பிடிக்கவே முடியாது என்று தவித்துக் கொண்டிருந்தன. அப்போது இருந்த அரசியல் நெருக்கடிகளைக் காரணமாக எடுத்துக் கொண்டு படகேறி இந்தியாவுக்குப் போய்விட்டார்கள். 

இப்படிப் பாதிக்கு கிட்டவான குடும்பங்கள் ஜெயபுரத்தை விட்டு வெளியேறின. பாதிக்கு மேற்பட்டோர் வெளியேறிப் போனால் அந்த ஊர் எப்படியிருக்கும்? 

ஹம்சத்வனியின் ஒரு கவிதையில் வருவதைப்போல “ 

சிலுவை யேசுவைச் சிலந்தி மூடிற்று 

பிள்ளையார் பலிபீடத்தில் களிம்பு படிந்தது 

சருகடர்ந்த முற்றங்களில் பாம்புகள் ஊர்ந்தன 

மாமர ஊஞ்சல்கள் இற்று வீழ்ந்தன” என்று பாழடையத் தொடங்கியது ஜெயபுரம். 

ஆனால் இதற்குள் ஒரு அதிசயம் நடந்தது, பூனகரி இராணுவமுகாம் உண்டாக்கிய நெருக்கடியினால் அதைச் சுற்றியிருந்த பூனகரியின் பூர்வீக மக்களில் ஒரு தொகுதியினர் ஜெயபுரத்துக்கு வந்தனர். ஏனையோர் யாழ்ப்பாணத்துக்கும் சாவகச்சேரிக்கும் சென்று விட்டனர். இன்னொரு தொகுதியினர் முட்கொம்பன் என்ற இடத்தைத் தெரிவு செய்து அங்கிருந்த காட்டை வெட்டித் துப்புரவு செய்து அங்கே குடியேறினர். 

ஜெயபுரத்துக்கு வந்த பூனகரி வாசிகளால் ஜெயபுரம் உயிர்ப்படைந்தது. முக்கியமாக பூனகரியின் நிர்வாக மையமாக அது மாறியது. இதனால் ஜெயபுரம் சட்டென ஒரு மெல்லிய வளர்ச்சியை எட்டியது. 

இதைப்பற்றி மேலும் விவரிக்கிறார் இராசரத்தினம் – “ஜெயபுரத்தில இருந்தவங்க அதுக்குப் பிறகு (1990க்குப் பிறகு) கொஞ்சம் பிழைச்சுக் கிட்டாங்க. நாங்கூட ஒரு சலூனை வைச்சுக் கிட்டேன். எனக்கு இந்தத் தொழிலைப் பத்தி முன்னப் பின்ன எதுவுமே தெரியாது. எங்க குடும்பத்தில யாருமே இந்தத் தொழிலைச் செய்தவங்க கிடையாது. எல்லாரும் தோட்ட வேலை பாத்துக் கிட்டவங்க. வந்த இடத்தில நமக்குப் பொருத்தமான வேலை எதுவும் சரியாக் கிடைக்கல. அதனால கிடைக்கிற வேலையைச் செஞ்சிக்கிட்டு வந்தன். அத வெச்சு குடும்பத்தை, புள்ள குட்டிகளைச் சரியாப் பாத்துக்க முடியல்ல.  இதுக்கு என்ன பண்ணலாம்ணு யோசிச்சுக் கிட்டு இருக்கும்போதுதான் நமக்குப் பக்கத்தில இருந்த பையன், தான் வெச்சிருந்த சலூன விட்டுட்டு இந்தியாவுக்குக் கௌம்பினான். அப்ப அதை நாம எடுத்துக் கொள்ளலாம் எண்ணு எடுத்துக்கிட்டேன். 

இதப் பாத்தவங்க, “இது எப்புடிங்க? நீங்க சாமியாராட்டம் இருக்கிற ஆளு. வேட்டி சட்டை போட்டுக்கிட்டு ஊருல நாலு பேருக்கு வௌக்கம் சொல்கிற ஆளு. இப்பிடிப் போயி சலூன் கடை நடத்தலாமா?” அப்டீன்னு கேட்டாங்க. 

புள்ளங்க பசியில கெடந்து தவிக்கிறப்ப, பொண்டாட்டிக்கு கையில நாலு பணம் கொடுக்க வக்கில்லாம இருந்துக் கிட்டு ஊரு சுத்த முடியுமா? அவங்கள சரியா வெச்சுக்க வேணும்ணா உருப்படியா ஒரு தொழிலைப் பாக்கணும். தொழில்ணா அது தெய்வம் அப்டீண்ணு பேசாம சலூன் கடைய வெச்சுக் கிட்டேன். கண் பாத்தத கை செய்யும்லா. அது ஒரு ரெண்டு வாரத்தில சரியாயிடிச்சி. இதுக்குப் பிறகு ஒவ்வொருத்தனும் ஏதோ ஒரு தொழிலைப் புடிச்சிக்கிடணும்ணு ஓடிக்கிட்டிருந்தான். இது மத்தவங்களுக்கும் ஒரு முன்மாதிரியா இருந்திச்சில்ல. 

அத விடுங்க. இப்பிடி இருந்த ஜெயபுரத்தில நம்மள விட நமக்குப் பின்னாடி வந்த வெளியிடத்து ஆட்கள்கிட்டதான் நாங்க எதுக்கும் போறதுக்கு இருந்திச்சி. ஏன்னா, நிர்வாகத்தை அவுங்கதானே பாத்துக்கிட்டிருந்தாங்க. அப்ப நாங்க அவுங்க கிட்டத்தானே போகணும். கோப்றெட்யடி (கூட்டுறவுக்கடை) ஏஜீஏ கந்தோர், விவசாயக் கந்தோர், தபால் நிலையம், ஜீ.எஸ் எல்லாமே வேற இடத்துக்காரங்க. ஆனா நாம ஓரளவுக்கு சமாளிச்சுக் கிட்டம். அதோட தொண்ணூறுக்குப் பிறவு புலிகள் இங்க பலமா வந்திட்டாங்கல்ல. அவுங்க வந்தப் பிறகு வேற வேலைகள் எல்லாம் கெடைக்கத் தொடங்கிச்சி. …. 

இப்ப யுத்தம் முடிஞ்சுக் கிட்டதுக்குப் பிறகு ஜெயபுரத்துக்கு வந்தவங்கள்ள நெறயப் பேர் கௌம்பிப் போயிட்டாங்க. மீள் குடியேற்றத்தில திரும்ப வந்து ஊர்ல இருக்கிறோம். இப்ப கொஞ்சம் பரவாயில்ல. இந்தியாவுக்குக் கௌம்பிப் போனவங்கள்ள கொஞ்ச ஆக்கள் திரும்பி வந்திருக்கிறாங்க. அவுங்க பாடு சீரில்ல. சரியான தொழில் இன்னும் கஸ்டமாத்தானிருக்கு. 

முன்னாடி நா சொன்ன மாதிரி பண்டிவெட்டிக் கொளத்தக் கட்டினாக்க விவசாயம் செஞ்சுக்கலாம். பாதிப்பேருக்கு அது கஞ்சி ஊத்தும். ஆனா இதைப் பத்திப் பேசுறதுக்கு ஆள் கெடயாது. யாருதான் நம்மட வயித்தப் பாக்கப்போறாங்க?….” என்று கவலைப்படுகிறார் அவர். 

இதைப்போலத்தான் இந்த மக்கள் வாழ்கின்ற – வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட ஒவ்வொரு கிராமத்தின் நிலையும். கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இன்னொரு கிராமம் ஊற்றுப்புலம். அங்கே உள்ளவர்களில் அநேகர் விவசாயக் கூலிகளாகவே இருந்தனர். முறிப்பு, உருத்திரபுரம், அக்கராயன் போன்ற இடங்களில் உள்ள நெல் வயல்களில் வேலை செய்கின்றவர்களாக இருந்தனர். நெற் செய்கைக் காலம் தவிர்ந்த ஏனைய காலங்களில் இவர்கள் செய்த தொழில்களில் ஒன்று  விறகு வெட்டுவது. 

தமக்கு அருகில் உள்ள காடுகளிலிருந்து விறகை வெட்டி சைக்கிளில் கட்டி ஊர் ஊராகச் சென்று விற்பது. பெரும்பாலும் கிளிநொச்சி நகரைச் சுற்றிய பகுதிகளுக்குச் சென்று இந்த விறவை விற்பார்கள். இப்படித்தான் கேப்பாப்பிலவு, மன்னாகண்டல் போன்ற இடங்களில் இருந்தவர்கள் புதுக்குடியிருப்புக்கு விறகு கட்டி விற்றனர். 

ஆக மொத்தத்தில் 2000 க்குப் பின்னரும் இவர்களுடைய வாழ்க்கையில் பெரிய முன்னேற்றம் எதுவும் ஏற்பட்டது என்றில்லை. ஆனால் இதற்குள் அடுத்த தலைமுறையினர் ஒருவாறு படித்துக் கொண்டனர். 

அது ஒரு பெரிய வாய்ப்பே. 

ஆனாலும் இந்த வாய்ப்பு  எல்லோருக்கும் எல்லாக் கிராமங்களுக்கும் கிட்டியது என்றில்லை. 

அடிக் கிராமங்கள் என்று சொல்லப்படும் தொலைதூரக் கிராமங்களில் உள்ளவர்களுக்குச் சரியான கல்வி கிட்டவில்லை. அவர்களுடைய நிலைமையைக் கருத்திற் கொண்டு செயற்படுவதற்குரிய பொறிமுறைகளும் இருக்கவில்லை. இதனால் அவர்களும் அடுத்த அடுத்த தலைமுறைகளாக கூலிகளாகவே கஸ்ரப்பட வேண்டியிருந்தது. 

இது வன்னியின் அத்தனை மலையக மக்கள் வாழ்ந்த இடங்களுக்கும் பொதுவான ஒரு நிலையாகும். 

(தொடரும்)