தில்லையாற்றங்கரை The Banks of the River Thillai

தில்லையாற்றங்கரை The Banks of the River Thillai

— சிராஜ் மசூர் — 

ராஜேஸ்வரி பாலசுப்ரமணியத்தின் ‘தில்லையாற்றங்கரை’ நாவல் மிக விரைவில் ஆங்கிலத்தில் வெளிவரவுள்ளது. மொழியாக்க வேலைகள் நிறைவு பெற்று விட்டன. அட்டைப்படமும் தயாராகி விட்டது. 

இந்த ஆங்கில நூலின் அட்டைப்படத்தை, ராஜேஸ்வரி தனது முகநூலில் பகிர்ந்திருக்கிறார். இதில் நான் எடுத்த புகைப்படமும் இடம்பிடித்துள்ளது. தில்லையாற்றில் மீனவர்கள் வள்ளத்தில் செல்லும் படமே அது. முகநூலில் நான் பதிவேற்றிய படம், தற்செயலாக ராஜேஸ் அக்காவின் கண்ணில் பட்டுவிட்டதன் எதிரொலி. என்னுடைய அனுமதி பெற்றுத்தான் அதில் இணைத்துள்ளார். 

தனக்கு மிகவும் பிடித்த நாவலான (her favourite novel) தில்லையாற்றங்கரைக்கு, அழியாப் பதிவைச் செய்ய வேண்டுமென்ற அவரது எண்ணத்தின் வெளிப்பாடுதான் இது. முதன்முதலாக ஒரு புத்தக அட்டையில் இடம்பிடிக்கும் எனது புகைப்படமும் இதுதான். அந்த வகையில் மிக மகிழ்ச்சி. 

அக்கரைப்பற்று நகரின் மையத்திலுள்ள சுற்றுவட்டத்தில் இருந்து தெற்கே சாகாமம் வீதி வழியே பயணித்தால், ஒன்றரைக் கிலோமீற்றர் தூரத்தில் கோளாவில் வரும். ராஜேஸ்வரி பாலசுப்ரமணியத்தின் பிறந்தகம் இது. விமல் குழந்தைவேலின் ஊரும் இதுதான். அக்கா – தம்பி இருவருமே எழுத்தாளர்கள்- நல்ல நாவலாசிரியர்கள். இப்போது இங்கிலாந்தில் வசிக்கின்றனர். என் மனதிற்கு நெருக்கமானவர்கள். 

முன்னுரையில் ராஜேஸ் பாலா சொல்லிச் செல்லும் வரிகளைப் பாருங்கள்: 

“லண்டன் கன்பரி வீதிக்கும் இலங்கையின் அக்கரைப்பற்றைச் சேர்ந்த சிறு கிராமமான கோளாவிலுக்கும் எத்தனையோ வித்தியாசம். ஒவ்வொரு நாளும் நான் கடந்து போகும் தேம்ஸ் நதிக்கும், ஒருகாலத்தில் சேறு புரள சிரித்து நீச்சலடித்த தில்லையாற்றுக்கும் ஒரு தொடர்பும் இல்லை. 

ஆனால், நீண்டோடும் தேம்ஸ் நதியைப் பார்க்கும்போது, நினைவலைகள் தில்லையாற்று மணற்பரப்பில் தவழ்கிறது. நிலவுக்குத் தாலாடி நெஞ்சுக்குள் குளிர்தரும் தென்னோலைச் சரசரப்பை, இருபத்தைந்து வருடங்களுக்குப் பின்னும் மறக்க முடியாது. 

மல்லிகையுதிர்வது போல் பனிக்கட்டிகள் கொட்டும்போது, பெரியக்கா வீட்டு கொடிமல்லிகையின் கொத்தான பூக்கொத்துகள் ஞாபகம் வருகின்றன. 

“தில்லையாற்றங்கரை’ 1957 ஆம் ஆண்டிலிருந்து 1962 ஆம் ஆண்டு வரையுள்ள ஐந்து வருடகாலத்தில் நடந்தது. குழந்தைப் பருவத்தைத் தாண்டி, ‘குமரியாகிக்’ கொண்டிருக்கும் மூன்று பெண்களைப் பற்றிய கதையிது. 

மூன்று பெண்கள் மூன்று தலைமுறைகளின் சட்டதிட்டத்தை எதிர்த்துப் போராடியதைப் பற்றி அல்லது போராடியதாக நினைத்ததைப் பற்றிய ஒரு நாவலிது. பாத்திரங்கள், சம்பவங்கள் பெரும்பாலும் கற்பனைகள்தான். ஆனால், இந்த நாவல் எழுதக் காரணமாக அமைந்த அடிப்படைகள் கற்பனையில்லை”. 

இந்த (தமிழ்) நாவலை www.noolaham.org இல் தரவிறக்கி வாசிக்கலாம். 

ராஜேஸ் அக்காவுக்கு அன்பான நன்றிகள். இதன் தமிழ்ப் பதிப்பை, மறுபிரசுரம் செய்ய வேண்டும் என்று அவரிடம் சொல்லியிருக்கிறேன். இணங்கியிருக்கிறார். 

தில்லையாறு என் உணர்வோடு கலந்த ஒன்று. எங்கள் ஊரின் மேற்கு எல்லையில் இருக்கும் இந்த ஆற்றங்கரையில்தான், நான் படித்த பள்ளிக்கூடம் (அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி) இருக்கிறது. அப்போது எங்கள் வகுப்பறைக்குப் பக்கத்தில் ஒரு முள்வேலி இருந்தது. அந்த வேலியைத் தாண்டினால், ஆற்றுவாழையும் அதற்கப்பால் நீர் சுழித்தோடும் தில்லையாறும் பரவிப் படர்ந்திருக்கும். நினைவை நிறைக்கும் காட்சிப் படிமங்கள் பல நெஞ்சில் பதிந்திருக்கின்றன. 

அம்பாரை வீதியில் பட்டியடிப்பிட்டிப் பாலம், சாகாம வீதியில் பனங்காட்டுப் பாலம், பொத்துவில் வீதியில் முகத்துவாரத்திற்கு மேலுள்ள பாலம் என்று, ஊரின் மேற்கு – தென்மேற்கு- தெற்கு- தென்கிழக்கு எல்லைகளை ஊடறுத்து இந்த ஆறு நீண்டு, வளைந்தோடுகிறது. 

அதுமட்டுமல்ல, பெரிய பள்ளியடியில் இருக்கும் பள்ளியடிக்குளமும் (இதற்கு வண்ணான் குளம், வம்மியடிக் குளம் என்று வேறு பெயர்களும் உள்ளன) தில்லையாற்றின் ஒரு தொடர்ச்சிதான். 

தில்லையாற்றை எதிர்கொள்ளாமல் இங்கு ஒரு வாழ்க்கை இல்லை. அடிக்கடி நான் தேடிச்சென்று தரிசிக்கும் நீர்வெளி இது. இதுவே என் முதல் அட்டைப்பட போட்டோவாய் அமைந்ததில் மகிழ்ச்சிதான். 

கல்லோயா என்று அழைக்கப்படும் பட்டிப்பளை ஆறு, ஒலுவிலில் களியோடையாகவும் அக்கரைப்பற்றில் தில்லையாறாகவும் கடலில் கலக்கிறது. 

எட்டாம் வகுப்பு சமூகக் கல்விப் புத்தகத்தில், கல்லோயா ஆறு அக்கரைப்பற்றில் கடலில் கலக்கிறது என்று எழுதப்பட்டிருந்தது இன்னும் ஞாபகம். 

எங்கள் பல்கலைக்கழக வாழ்வில், களியோடையின் மருங்கில் கழிந்த காலங்கள் அதிகம். 

மருத மர நிழல் சூழ்ந்திருக்கும் அந்த இடத்தை, சீரமைத்து ‘ஆற்றங்கரைப் புல்வெளி’ (River Bank Green) என்ற பெயரில், மாணவர்கள் ஒன்றுகூடம் இடமாக மாற்றியமைத்தோம். எங்களது batch மாணவர்கள் இணைந்து, வளாகத்தின் Maintenance Department இன் துணையோடு இதைச் செய்தோம். புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வையும் இந்தத் திறந்த வெளியில்தான் செய்தோம். 

எப்போது வளாகத்திற்குப் போனாலும், தென்றல் தழுவிச் செல்லும் இந்த ஆற்றங்கரைப் பக்கம் எட்டிப் பார்ப்பதுண்டு. 

ஒருபுறம் தில்லையாறு, மறுபுறம் களியோடை – ஒரே ஆற்றின் இரு கிளைகள். இரண்டுமே என்னுள் கலந்திருக்கின்றன. ஆனாலும், தில்லையாற்றோடு இருப்பது பூர்வ பந்தம். 

“நீரின்றி அமையாது உலகு.” 

தில்லையாற்றங்கரை 

The Banks of the River Thillai