ஆண்டவனுக்கு ஐந்தொழில் இல்லையா? (கவிதை)

ஆண்டவனுக்கு ஐந்தொழில் இல்லையா? (கவிதை)

எங்கும் கொரோனா என்பதே பேச்சு 

எல்லா உலகமும் பதற்றமாய் ஆச்சு 

சுங்கக் கடவைகள் சுறுசுறுப்பாச்சு 

சோதனை கணத்திலே உயிரே போச்சு 

சொந்தக் காரர் எதிரே வந்தாலும் 

சுகம் விசாரிக்கவும் பயப்படும் சோகம் 

எந்தக் காலமும் வந்ததே இல்லை 

இதுவோ உலகின் அழிவுக்கு எல்லை? 

கையை குலுக்கினோம் கட்டிப் பிடித்தோம் 

காதருகே ரகசியம் பேசி மகிழ்ந்தோம் 

சைகை காட்டித் தழுவிக் களித்தோம் 

தள்ளிநின் றிப்போ பேசவும் தயக்கம்  

போருக்கு நடுவிலும் ஊருக்குள் இருந்தோம் 

புலத்தினைத் பிரிந்தும் உறவினைத் தொடர்ந்தோம் 

பாருக்குள் பற்பல நாடுகள் புகுந்தோம் 

பங்கருக் குள்ளேயும் பலரோடு ஒளித்தோம் 

சுற்றங்கள் ஒன்றாய் இருப்பது வளப்பம் 

சோகத்தில், சுகத்தில் கூடுதல், வழக்கம் 

பெற்றோரும் பிள்ளையை அணைக்கவே தயங்கும் 

பேரிடர் வேறுண்டா இப்போது வரைக்கும்? 

ஆயிரமா யிரமாய் நடக்கின்ற மரணம் 

அடுத்தடுத்து உறவுகளை இழக்கின்ற துயரம் 

நோயிலே மூப்பிலே போயிடில் சகஜம் 

நுண்ணுயிர் தொற்றினால் சிறுக்குதே உலகம் 

நாடுகள் எலாம்பிணக் காடுகள் ஆயின  

நண்பரின் உடலங்கள் பாராமல் போயின 

வீடுகள் சிறைகளாய் கூடுகள் ஆயின 

வேற்றவர் போலவே குடும்பங்கள் மாறின 

அதர்மம் உலகில் தலைவிரித் தாடினால் 

ஆண்டவன் எடுப்பான் அவதாரம் என்கிறார் 

அதனால் தானிப்படி நடக்குதாம் என்கிறார் 

அவன்தொழில் அழிப்பதா? ஐந்தொழில் அல்லவா? 

 — பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா, அவுஸ்திரேலியா —-

**********************************************

ஈசல்கள் (கவிதை)

கறையான் புத்தெடுக்க பாம்பு குடியேறிய பழைய கதைதான். ஆனால், இங்கு சிவரெத்தினம் அதற்கு புதிய வடிவம் கொடுக்க முயலுகிறார் புதிய அனுபவங்களுடன். எப்போதும் தலையாட்டும் ஓணான்களுக்கு வேலிக்கட்டைகள் சாட்சி என்பது அவரது கவலை.

காலையில் எழுந்து 

வாசலைப் பார்த்தேன் 

ஈசல் சிறகுகள் பரவிக் கிடந்தன. 

பசியாறிய ஓணான்  

ஓய்வெடுக்கிறது  

வேலிக் கட்டையில். 

எது கேட்டாலும்  

தலையை மட்டும் ஆட்டுகிறது. 

ஓணானுக்கு  

வேலிக்கட்டை சாட்சி. 

கடுமையாக உழைத்த கறையான்  

வோணஸ்சாகக் பெற்றது சிறகை 

உழைப்புக்கு ஓய்வு போட்டு 

சுற்றுலாவுக்குப் பறந்த போதே  

காலம் முடிகிறது கறையானுக்கு. 

உழைப்பின் பயனை  

அனுபவிக்காக் கறையான்கள் 

இறப்பிலும்  

இரையாகிப் போகின்றன. 

கறையான் கட்டிய புற்றில் 

நட்டுவக்காலிகளும் 

மட்டத்தேள்களும் 

புடையன் பாம்புகளும் 

வளலைப் பாம்புகளும்  

உல்லாசம் கொள்கின்றன.  

புற்றில் புடையன் பாம்பின் ராஜாங்கம் 

வளலைகள் எல்லாம் மந்திரிகள் 

நட்டுவக்காலிகளும் 

மட்டத்தேள்களும் 

தொண்டூழியர்கள் 

கல்வெட்டுக்கள் 

செப்புத்தகடுகள் 

ஏடுகள் 

பட்டயங்கள் 

அனைத்திலும்  

பதியப் படுகிறது 

புடையன் பாம்பின் 

புத்து இது.‘  

ஓணான் தலையை மட்டும் ஆட்டுகிறது 

ஓணானுக்கு 

வேலிக்கட்டை சாட்சி.  

ஈசல் சிறகுகளாய்  

பிஞ்சி கிடக்கிறது மனம்  

கவுண்டிக்காக  

காத்திருக்கிறது 

கண்கள். 

 — சு. சிவரெத்தினம்