— தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் —
தமிழ் மக்களின் அரசியல் விடயங்களில் ஒரு பொது நிலைப்பாட்டில் கூட்டாகச் செயற்படுவதை நோக்கமாகக் கொண்டு 22.08.2021 அன்று மெய்நிகர் செயலி தொழில்நுட்பத்தின் ஊடாக (ZOOM) மாவை சேனாதிராஜா மற்றும் சுமந்திரன் பா.உ. (தமிழரசுக் கட்சி), சி. வி.விக்னேஸ்வரன் பா.உ. (தமிழ் மக்கள் கூட்டணி/ தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி), செல்வம் அடைக்கலநாதன் பா.உ., கோவிந்தன் கருணாகரன் பா.உ.மற்றும் சுரேந்திரன் பா.உ. (ரெலோ), ஸ்ரீகாந்தா (தமிழ்த் தேசியக் கட்சி), சுரேஷ் பிரேமச்சந்திரன் (முன்னாள் ஈபிஆர்எல்எஃப்) ஆகியோர் சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டனர்.அண்மைக்காலமாகத் ’தமிழ்த் தேசியக் கட்சி’ களின்(?) கூட்டை ஏற்படுத்த ரெலோ எடுத்து வரும் முயற்சியின் ஒரு கட்டமாகவே இவ் இணையவழிச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பின் போது சுமந்திரன் வெளிப்படுத்திய கூற்று ஊடகங்களில் பின்வருமாறு பதிவாகியுள்ளது. கீழே சுமந்திரனின் கூற்று “……” குறிக்குள்ளும் அது குறித்து இப்பத்தி எழுத்தாளரின் குறிப்பு அடைப்புக்குறிக்குள்ளும் தரப்பட்டுள்ளன.
“நீங்கள் எல்லோரும் கூட்டமைப்பில் இருந்தவர்கள்தான்”. (நீங்கள் என்பதில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சித்தார்த்தன், அனந்தி சசிதரன் ஆகியோரும் உள்ளடங்குகின்றனரா என்பது தெரியவில்லை).
“கூட்டமைப்பின் நிலைப்பாடு 2010லிருந்து ஒன்றுதான்”. (கூட்டமைப்பு உருவான 2001இலிருந்து 2009 வரை கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன? தமிழீழத் தனிநாடுதானே)
“அதில் எந்த மாற்றமும் இல்லை. மாற்றம் இருந்தால் சொல்லுங்கள். அதைத் திருத்திப் பழைய இடத்திற்கு வரலாம்.” (பழைய இடம் என்றால் தனி நாடு என்ற நிலைப்பாட்டிற்கா அல்லது இரு தேசம், ஒரு நாடு என்ற நிலைப்பாட்டிற்கா).
“அப்படி நாங்கள் மாறவில்லை. ஒரே நிலைப்பாடுதான். ஒன்றுபட்ட நாட்டுக்குள் சமஷ்டி அடிப்படையில் அதிகாரப் பகிர்வுதான் எமது ஒரேமுடிவு.” (நமது முடிவு என்றால் யாருடைய முடிவு? தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முடிவா? அல்லது தமிழரசுக்கட்சியின் முடிவா? அல்லது தனிப்பட்ட ரீதியில் இரா.சம்பந்தனும் சுமந்திரனும் சேர்ந்து எடுத்த முடிவா? யாருடைய முடிவாக இருந்தாலும் இது சுமந்திரன் கூறியுள்ளது போல் 2010இலிருந்துதான் ஆரம்பித்த நிலைப்பாடல்லவே? தமிழரசுக் கட்சியின் முதலாவது தேசிய மாநாடு திருகோணமலையில் 1951இல் நடைபெற்று அந்த மாநாட்டில் எடுத்த தீர்மானம்தானே இது. பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணி உருவாகி 1976இல் ‘சமஸ்டி’க் கோரிக்கை கைவிடப்பட்டுத்தானே தனி நாட்டுக் கோரிக்கை வட்டுக்கோட்டை மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. அதற்குப் பிறகு எப்போது நடைபெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேசிய மாநாட்டில் அல்லது தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்திருந்த கட்சிகளான தமிழரசுக்கட்சியின் எந்த மாநாட்டில் அல்லது தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் எந்த மாநாட்டில் தமிழீழக் கோரிக்கை கைவிடப்பட்டு மீண்டும் சமஸ்டி கோரிக்கையானது.)
“அதை விட்டு நாம் விலகவும் இல்லை. விலகவும் மாட்டோம். விலகி இருந்தால் அதைச் சொல்லுங்கள். இந்த நிலைப்பாட்டை விட்டு விலகி வேறு நிலைக்குச் சென்றவர்கள்தான் நீங்கள்”. (யார் யார் என்ன நிலைப்பாட்டிற்கு சென்றார்கள் என்பதை சுமந்திரன் வெளிப்படுத்தவில்லை).
“நீதியரசர் விக்னேஸ்வரன் எங்கள் கூட்டமைப்பில் தேர்தலில் நின்றுதான் 2013இல் வெற்றி பெற்றவர். இப்போது கூட்டாட்சி அரசியலமைப்புக்கு இணங்கும் அரசுடன் மட்டுமே பேசவேண்டும் என்ற நிபந்தனைப்பாணியில் அறிவிக்கின்றார். அப்படியாயின் எப்படி ஒன்றுபட்டுப் பொது நிலைப்பாட்டுக்கு நாம் வருவது?”. (சுமந்திரன் கூறும்’சமஸ்டி’யும் விக்னேஸ்வரன் கூறும் ‘சமஸ்டி’யும்- கூட்டாட்சி அரசமைப்பு- வெவ்வேறானவையா?).
“எங்கள் கருத்து ஒன்றுதான். கூட்டமைப்பின் நிலைப்பாடு கடந்த பன்னிரண்டு வருடங்களாக ஒன்றுதான்.” (பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பு அதாவது 2009க்கு முன்னர்- முள்ளிவாய்க்கால் யுத்தத்திற்கு முன்னர்- கூட்டமைப்பின் நிலைப்பாடு வேறானதா? அது தனி நாடா? அப்படியாயின் அதை மாற்றிச் ‘சமஸ்டி’ நிலைப்பாட்டிற்கான தீர்மானம் எப்போது? யாரால் எடுக்கப்பட்டது?).
“அதில் எதையாவது நாம் விட்டு விட்டுவிலகி இருக்கின்றோம் என்று நீங்கள் கருதினால் சுட்டிக்காட்டுங்கள். திருத்திக் கொள்கிறோம். அப்படி எதுவும் இல்லை. கூட்டமைப்பில் நீங்கள் இருந்தபோது அந்த நிலைப்பாட்டில்தான் இருந்தீர்கள்.”. (எந்த நிலைப்பாட்டில்? சுமந்திரன் கூறும் ‘சமஸ்டி’ நிலைப்பாட்டிலா? அப்படி இல்லையே? 2001இல் கூட்டமைப்பு உருவாகிய காலத்திலிருந்தே தமிழர் விடுதலைக் கூட்டணி (பின்னர் விலக்கிக் கொள்ளப்பட்டுப் பதிலாக தமிழரசுக்கட்சி சேர்த்துக் கொள்ளப்பட்டது), தமிழ்க்காங்கிரஸ், ரெலோ, முன்னாள் ஈபிஆர்எல்எஃப் என்பன தமிழீழ விடுதலைப் புலிகளைத் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகளாக ஏற்றுத் தமிழீழத்தனிநாடு நிலைப்பாட்டில்தானே இருந்தன. 2010 தேர்தலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு- தமிழரசுக் கட்சிக்கு- கிடைத்த தேசியப்பட்டியல் ஆசனம் சுமந்திரனுக்கு வழங்கப்பட்ட காரணத்தால் மட்டுமே தமிழ்த் தேசியக்கூட்டமைப்பில்- தமிழரசுக் கட்சியில்- இணைந்து தமிழ்த் தேசிய அரசியலில் தான் நுழைந்ததால் அதற்கு முந்திய எதற்கும் தான் பொறுப்பில்லை என்ற அர்த்தத்தில் இப்படி கூறுகிறாரா? இதனை மெய்நிகர் செயலித் தொழில்நுட்பத்தின் ஊடாக இணையவழிச் சந்திப்பில் கலந்துகொண்ட தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா ஏற்றுக்கொள்கிறாரா?).
“இப்போதுதான் வேறு வேறு தரப்புகளாக நின்று வேறு வேறு நிலைப்பாடுகளைப் பிரதிபலிக்கின்றீர்கள்.” (யார் யார் என்னென்ன நிலைப்பாடுகளைப் பிரதிபலிக்கின்றார்கள் என்பதையும் சுமந்திரன் வெளிப்படுத்தவில்லை).
“கூட்டமைப்பு தனது நிலைப்பாட்டை மாற்றவில்லை. மாற்றவும் மாட்டாது. அதுதான் பொது நிலைப்பாடு. கூட்டமைப்பின் அந்த நிலைப்பாட்டுக்கு நீங்கள் எல்லோரும் வருவதானால்- பழைய அந்த நிலைப்பாட்டுக்கு வாருங்கள். ஒன்றுபட்டு பயணிக்கலாம். அதைவிடுத்து கூட்டமைப்பை வேறு ஏதோ ஒரு நிலைப்பாட்டுக்குப் புதிதாக வாருங்கள் என்ற மாதிரி நீங்கள் அழைப்பது அர்த்தமற்றது”.
சுமந்திரனின் இந்தக் கூற்றைப் படித்து வாசகர்கள் தலைசுற்றி மயங்கி விழாமல் இருந்தால் சரி.
இந்தக் கூற்றைச் சுமந்திரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் கூறுகிறாரா? அல்லது தமிழரசுக்கட்சியின் சார்பில் கூறுகிறாரா?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் கூறியுள்ளார் என எடுத்துக்கொண்டால் கூட்டமைப்பில் இந்த இணைய வழிச் சந்திப்பை ஏற்பாடு செய்த ரெலோவும் பங்காளிக் கட்சிகளிலொன்றாகத்தானே உள்ளது. அந்த ரெலோவை விளித்து இப்படிக் கூறுவது ஒரு முரண் நிலை அல்லவா?
தமிழரசுக் கட்சியின் சார்பில் கூறியுள்ளார் என எடுத்துக்கொண்டால் தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடுதான் பொது நிலைப்பாடு. அதனை நீங்கள் எல்லோரும் ஏற்றுக் கொண்டு தமிழரசுக்கட்சியில் வந்து இணைந்துகொள்ளுங்கள் என்று அழைப்புவிடுக்கிறாரா?
அப்படியானால் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பில் (அது இன்னும் ஒரு கூட்டமைப்பாக -ALLIANCE- ஆகப் பதிவு செய்யப்படவில்லையென்பது ஒருபுறம் இருக்கட்டும்) தமிழரசுக்கட்சியின் மேலாண்மையும்-ஆதிக்கமும்- தன்னிச்சையான செயற்பாடுகளும்தான் மீண்டும் தொடரப்போகின்றன. தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் தாமே என்ற புலிகளின் ஜனநாயக மறுப்பு நிலைப்பாட்டைப்போல இப்போது தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் தமிழரசுக் கட்சிதான் என்பதுதான் அக் கட்சியின் நிலைப்பாடா?
தமிழ் மக்களே! தமிழ்த் தேசியக் கட்சிகளின் (?) சீர்கேடுகளை இக்கட்டத்திலாவது உணர்ந்து மாற்று அரசியல் சிந்தனைகளை நோக்கி அணிதிரளுங்கள்.