— பியாஸா தாஹிர், எலமள்தெனிய, கெலிஓய—
“டீச்சர்…. இங்க.. பாருங்க.”
“அய்யோ…. டீச்சர்… இவன் எனக்கு அடிக்கிறான்….”
“டீச்சர்…… இதுக்கு என்ன விடை? ”
கரும்பலகையில் எழுதிக்கொண்டிருந்த நான் திரும்பி யாரைப்பார்ப்பது என்ற குழப்பத்தில்.
“எல்லாரும் முதல்ல நான் சொல்றத கேளுங்களன்… சத்தமில்லாமல் போய் உங்கட இடங்கள்ள இரிங்க. நல்ல பிள்ளையல் தானே …..”
நான் என் பத்து நாள் கற்பித்தல் பயிற்சியின் முதல் நாளில் ஏழாம் தரத்திற்கு கணித பாடம் கற்பித்துக்கொண்டிருக்கிறேன். ஏழாம் தரம் என்று சொல்லவே முடியாதளவு குறும்புத்தனம் மிகுந்த சின்னஞ் சிறுசுகளாயிருக்கின்றனர்.
மீண்டும் முன் வரிசையிலே சலசலப்பு……
“டீச்சர் இவன் என்ட அடிமட்டத்த எடுக்கிறான்….
நீ முதல்ல கணக்கு செஞ்சி காட்டிடுவாய். அப்பதானே புதிய டீச்சர் உன்னைய நல்ல பிள்ளை எண்டு சொல்லுவா..” சிரிப்பும் வருகிறது. நான் அவர்களை நெருங்கி உரிய மாணவனின் அடிமட்டத்தை வாங்கிக்கொடுக்கிறேன்.
“டீச்சர் அவன் கேள்விய எழுதுரதுக்குள்ள நான் இந்தப் படத்தைக் கீறிடுவேன்… கொஞ்சம் தர சொல்லுங்கோவன். நான் கோடு அடிச்சிட்டுக் குடுத்திடுவேன்.”
“அய்யோ! டீச்சர் இவன் எப்பவும் இப்படித்தான். என்ட அடிமட்டத்த, அழிறப்பரத்தான் எடுப்பான்… அவன் கெதியாச் செய்து முடிச்சாலும் நான் கொடுக்க மாட்டேன்… எனக்கேலாது.”
“நீங்க கொஞ்சம் கொடுங்க. நான் நாளைக்கு அவரைக் கட்டாயம் கொண்டு வரச் சொல்லுறன். சரியா?”
“ம்.. சரி.. இன்னக்கி மட்டும்.. அதுவும் நீங்க சொல்றதுக்காகத் தான் டீச்சர்..”
“ம்.. நல்ல பிள்ளை நீங்கள் ..”
அப்பாடி. ஒரு மாதிரியாக ஒரு பிரச்சினை தீர்ந்தது.
“சரி நீங்க நாளைக்கு கட்டாயம் அடிமட்டம் கொண்டுவர வேணும். அடி மட்டம் இல்லாம எப்படி கணித பாடம் படிக்கிறது?” சற்று கண்டிப்புடன் நான் அடுத்த மாணவனைக் கேட்கிறேன்.
*****************************************
அடுத்த நாள்.
நேற்று கொடுத்த வீட்டு வேலைகளைத் திருத்திக் கொண்டிருந்தேன். “எல்லோரும் கொப்பி காடிட்டீங்களோ?”
“டீச்சர்…… மோகன் செய்யேல்ல….
“மோகன் யாரு.. வாங்களேன் ஏன் செய்யேல்ல?” அருகில் அவனை அழைத்துக் கேட்கிறேன். நேற்றைய அதே அடிமட்டம் கொண்டுவராத ஆள்
“………………………….” மௌனம் .
“ நான் சொல்லித்தந்தது விளங்கலயா நேற்று?”
“விளங்கிச்சி டீச்சர்”
“அப்ப ஏன் செய்யேல்ல? சரி அப்ப நான் சொல்ற கணக்க இப்ப கரும்பலகையில செய்து காட்டும் பார்ப்பம்….”
நான் மூன்று வினாக்களை வழங்குகிறேன்.. மிக விரைவாக, நேர்த்தியாக, படிமுறையாக சில விநாடிகளிலே செய்து முடித்து விட்டான்.
“ஆ.. வெரிகுட்..!! இவ்ளோ வேகமாக எல்லாத்தையும் செஞ்சிட்டீங்க. யாரு உங்களுக்கு இப்படி செய்றதுக்கு சொல்லிக் கொடுத்தது?”
“நீங்க தானே நேற்று சொல்லித் தந்தீங்க டீச்சர்… வேற யாரும் இல்ல சொல்லி தாரத்துக்கும்”
ஆனால் நான் நேற்று இப்படியெல்லாம் சொல்லித்தந்தேனா?
“ஓம்…”
எனக்கே உண்மையில் ஆச்சர்யமாய் இருக்கிறது. நான் சொல்லிக்கொடுத்தவற்றை அவன் மிகத் தெளிவாக உள்வாங்கி படிமுறையாக விளங்கி வைத்திருக்கிறான். எனக்குள் ஒரு திருப்தியும் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது.
***********************************************
பாடசாலை இடைவேளை.
நான் வகுப்புக்குச் சென்று அவனை வெளியே அழைத்து வருகிறேன். “நீங்க ஏன் வீட்டு வேலை செய்யேல்ல?”
“……..” அதே மௌனம் .
“சொல்லுங்களன்”
“இல்ல டீச்சர்… என்னட்ட அடிமட்டம் இல்லைதானே. என்ட பென்சில்லையும் தம்பி எடுத்திட்டான். அவன் வீட்டு வேலை செய்யாமப் போனா டீச்சர் அடிப்பாங்களே. என்னால தாங்கிக்கலாம். அவனால தாங்க ஏலாதே…. அதுதான்… அப்புறம், அம்மம்மா சொன்னாங்க நான் என்ட பென்சில தம்பிக்கு கொடுத்தா நாளைக்கு கட்டாயம் புதிய பென்சில் வாங்கித்தருவதாக.”
என் கண்களிலிருந்து நீர் தாரை தாரையாகக் கொட்டுகிறது. நான் மௌனமாக இருக்கிறேன்.
“ஏன் அம்மம்மா..?”
“அம்மம்மா கூட தான் நாங்க இருக்கிறம்..”
“அப்போ அம்..மா? அப்..பா?” தயக்கத்துடன் நான்.
“தெரியாது டீச்சர்” மிகச் சுலபமான விரைவான பதில். இந்தக் கேள்வியைப் பலரும் கேட்டு அவன் சலிப்படைந்து விட்டானோ ஒரு வேளை.
“அம்மம்மா தான் என்னையவும் தம்பியவும் பாத்துக்குறாங்க. நான் பெரிய ஆளாகி அவாவையும் தம்பியவும் நல்ல பாத்துப்பேன். பென்சில் கொப்பி எல்லாம் வங்கிக் கொடுப்பேன். அப்போ அவனோட டீச்சர் அவன அடிக்கவே மாட்டாவே….”
“நீங்க எங்கிருந்து வாரிங்க மோகன்?
“இங்க கொஞ்சம் தூரம் தான் டீச்சர். நீங்க வாறிங்களா என்கூட எங்க வீட்டுக்கு? ”
“சாபிட்டிங்களா?”
“……” அதே மௌனம்.
“சப்பிடல்லியா? ”
“இல்ல… பசிக்கல டீச்சர்…” .
“இந்தாங்க. சாப்பிடுங்க…”
என்னிடமிருந்த பார்சலைக் கொடுக்கிறேன் .
இப்படியே நாட்கள் நாகர்ந்துகொண்டிருந்தன. எனக்குள் எப்போதும் மோகனைப் பற்றிய எண்ணங்களே வலம் வரும். இவ்ளோ திறமையான பிள்ளை. பாவம்….. பெற்றவங்க இல்லாம எவ்ளோ கஷ்டம். எனக்கு மோகன் மேல் அலாதிப்பிரியம். அது பரிதாபமா? அல்லது அவனிடமுள்ள தனித் தன்மையா? தெரியவில்லை.. எப்படியாவது மோகனை நல்லாப் படிக்க வழி பண்ணிவிட வேண்டும்.. ஆனால் நான் இந்தப் பத்து நாள் பயிற்சியில் எதைத்தான் செய்யவது? என்னிலை அவனுக்கு நல்ல அன்பு. எப்போதும் என்னையே சுற்றிச் சுற்றி வருவான். நான் வேறு வகுப்புகளுக்குப் பாடம் கற்பித்துக்கொண்டிருந்தால் அந்த யன்னல் கம்பிகளூடு பார்த்துக் கொண்டிருப்பான். இடைக்கிடையே அவர்களிடம் கேட்கும் வினாக்களுக்கு இவன் விடையையும் சொல்லுவான்.
என் கற்பித்தல் பயிற்சியின் ஒன்பதாம் நாள். நாளையோடு நான் பாடசாலை போவதில்லை. நான் கணிதப் பாடத்தை ஆரம்பிக்கிறேன். மோகன் முன்வரிசையில் அமர்ந்திருக்கிறான். நான் ஒவ்வொரு விடயமாகத் தெளிவாக, மெதுவாக, விளங்கும் படி சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தேன்.
“டீச்சர்.. மோகனப் பாருங்க.. இன்டைக்கி…” அவ்வளவுதான் எனக்குக் கேட்டது. எங்கிருந்து இந்த வேகம் எனக்கு வந்ததோ தெரியவில்லை. மேசையில் இருந்த பிரம்பு எப்படி என் கைக்கு வந்ததோ புரியவில்லை.
“எத்தின நாள் நான் சொல்லுறது? எந்த நாளும் இதே குழப்பம் வகுப்பில்….” என் கையிலிருந்த பிரம்பு விலாசிவிட்டது அவனை. அவன் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவன் மட்டுமல்ல மொத்த வகுப்பும் எதிர்பாராதது தான். அவன் ஏதோ சொல்ல வந்தவன் பின் கீழே பார்த்தவன் தான். என் கைகள் நடுங்குகின்றன. தொடர்ந்து என்னால் பாடம் படிப்பிக்க முடியவில்லை.
வகுப்பறையை விட்டு வெளியேறி கைகளில் முகம் புதைத்து ஆசிரியர் ஓய்வரையில் அமர்ந்திருக்கிறேன்.
“எனக்கு எங்கிருந்து இந்த வேகம் வந்தது அவனையடிக்க! பாவம்… சற்றும் இதனை எதிர்பார்த்திருக்க மாட்டானே… சின்னக் கைகள்… தாங்குமா இதனை..? அதுவும் மோகன்….. நான் ஏன் இப்படி மடத்தனமாக நடந்து கொண்டேன்?” எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.
வேறொரு மாணவனிடம் சொல்லி அவனை வரவழைக்கிறேன்.
அழுது வீங்கிய கண்களோடு கீழே பார்த்தவாரே இருக்கிறான். அவனது கைகள் நடுங்குகின்றன. என் அருகே வரவே அவனின் கால்கள் தயங்குகின்றனவே.
“மோகன்… கிட்ட வாங்க… டீச்சர் அடிச்சது வலிக்கிதா?”
“இல்ல டீச்சர்…..” நீண்ட மௌனத்தின் பின் மெதுவான பதில்.
“எங்க கையக் கொஞ்சம் காட்டுங்கோ….”
“இல்ல டீச்சர்…. பரவாயில்லை.. வலிக்கல எனக்கு…”
” என்ன மன்னிச்சிடுங்க டீச்சர் …..நான் இன்டக்கி நீங்க பாடமே எடுக்க ஏலாமப் பண்ணிட்டேனே …”
“நான் தான் கூடவா கோபப்பட்டுட்டேனே….” – நான். “..ஒவ்வொரு நாளும் இப்படி இடையில வகுப்பைக் குழப்பின டீச்சருக்குக் கோபம் வரும் தானே… நான் விளங்கப்படுத்தி முடிஞ்சப் பிறகு எடுத்திருக்கலாமே….”
“டீச்சர்….” அவன் ஏதோ சொல்ல நினைக்கிறான். பிறகு மெதுவாக அவனது கையை, இடதுகைக் காற்சட்டைப் பொக்கட்டில் இட்டு எதையோ வெளியே எடுக்கிறான்.
அல்லாஹ்வே !!!
நான் ஏன் அவசரப்பட்டேன்…? என்ன மோகன் இது? எங்கால உங்களுக்கு?”
“டீச்சர்… அம்மம்மாக்கிட்ட அடிமட்டம் வாங்கி தர காசு இல்லாதனால நானே கொஞ்சம் கொஞ்சம் சில்லறையா சேர்த்து இத வாங்கிட்டேன்…” அழுகைக்கு இடையேயும் ஒரு திருப்தியோடு பதில் சொல்கிறான்.
“அப்போ நீங்க ஏன் சொல்லல? நான் அடிக்கும் போதே சொல்லியிருக்கலாம் தானே…”
“இல்ல டீச்சர்.. வலிக்கல எனக்கு…”
ஆனால் எனக்கு இப்போது உண்மையில் வலிக்கிறது.
“நீங்க நல்லாப் படிக்கிற பிள்ள தானே.. இப்படி ஒவ்வொரு நாளும் எதாவது கொண்டுவராம வந்தீங்கள் என்டா சரியாப் படிக்க ஏலாது தானே…”
“சரி… நீங்க வாங்கின இந்த மட்டம் அவ்ளோ அழகா இருக்குது. நான் நாளக்கி உங்களுக்கு ஒரு பென்சிலும் பென்சில் பெட்டியும் கொண்டு வந்து தாரேன்…. அப்போ உங்கட அடிமட்டத்த அதில போட்டு வைக்கலாம்… என்ன?”
நான் செய்த தவறுக்காக பிராயச்சித்தம் தேடுகிறேன் ஒரு பென்சில் பெட்டியூடாவது கிடைக்காதாவென்று..
அவன் ஒரு மாதிரியாக என்னைப் பார்க்கிறான். எந்த மகிழ்ச்சியும் இல்லை அவனின் முகத்தில்.
“இல்ல டீச்சர் நான் நாளைக்கு ‘ஸ்கூல்’ இற்கு வரமாட்டேன்.
“ஏன்? சரி.. நான் நாளன்னிக்குத் தாரேன்.. ம்ம் ?
ஏன் மோகன்.. டீச்சர் கூட கோபமா? ஏன் வரமாட்டிங்க?..”.
“கோபம் எல்லாம் இல்ல டீச்சர்.. நாங்க இப்ப அம்மம்மா கூடத் தானே இருக்கிறம். அம்மம்மாவால தனியே வேலை செய்றது கஷ்டம் தானே…. அதனால நானும் நாளைல இருந்து அவவோட வேலைக்குப் போகப் போறேன். அம்மம்மா சொன்னாங்க தம்பிய நல்லாப் படிக்க வைச்சா அவன் பெரிய ஆளாகி எங்களை நல்லாப் பாத்துப்பானாம்”
அய்யோ!! என்ன இது? என் தலையே சுற்றுவது போல் இருக்கிறது. அவன் சொல்லிவிட்டு மெதுவாக வாசல் கதவினைத் தாண்டிக்கொண்டிருந்தான்.
“மோகன்… ஆனால் நீங்க நல்லாப் படிச்சாத் தானே அவங்கள நல்லாப் பாத்துக்கலாம்.. நீங்க தொடர்ந்தும் ஸ்கூல் வாங்க…” அவனை எப்படியாவது தொடர்ந்து வரவைக்க வேண்டும் என்ற முயற்சியில் நான்.
“இல்ல டீச்சர்.. அம்மம்மா வேலை செய்த வீட்டில் நானும் தம்பியும் போய் நிக்கப் போறோம். தம்பி அங்கிருந்து ‘ஸ்கூல்’ இற்குப் போவான்” “டீச்சர்…. நாங்க நேற்றே போறதாத்தான் இருந்தம்… நான் தான் இன்டக்கி உங்கள்ட என்ட அடிமட்டத்தக் காட்டனும்டு சொல்லி நாளைக்குப் போவம்டு சொன்னேன்….. சரி டீச்சர் நான் போறேன். “அல்லாஹவே!!! என்ன இது!! நான் ஏன் ஆசிரியத் தொழிலுக்கு வந்தேன்… என்னால இத ஏத்துக்க ஏலாது… அவன் பிஞ்சு மனசுல எவ்ளோ ஆசையோட வந்திருப்பான் அந்த அடிமட்டத்த காட்டுறதுக்காக… நான் அவன்ட மனசையும் நொருக்கி.. அவன்ட கையையும் நொருக்கிட்டேனே… எனக்கு என்ன செய்வதென்று புரியவில்லை….
மறக்க முடியாத வலிகளைத் தந்துவிட்டு அவன் மறைந்து கொண்டிருந்தான்.
என் கைகள் நடுங்குகின்றன. தலை சற்றுவது போலிருக்கிறது… நான் என்ன செய்வது இப்போது? நாளையோடு மீண்டும் இப்பாடசலைக்குக் கூட என்னால் வரமுடியாதே… என்ன செய்வேன் நான்..?
மோகன்…. நீ எனக்கு நிறையவே நினைவுகளைத் தந்து விட்டாய்…
நான் தான் உனக்கு மறையவே முடியாத வலிகளைத் தந்து விட்டேனே……
முற்றும்