1978 ஹட்டன் மாநாடு: மலையகத்தின் வட்டுக்கோட்டை மாநாடு

1978 ஹட்டன் மாநாடு: மலையகத்தின் வட்டுக்கோட்டை மாநாடு

 — பி.ஏ.காதர்- லண்டன் —

1973 – 1977ல் மலையகம்
​​​
1973 – 1977 காலப்பகுதியில் மலையக தமிழ் மக்கள் முன்னொருபோதும் இல்லாதளவு சொல்லொண்ணாத் துயரங்களை அனுபவித்தனர். சர்வதேச சந்தையில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருந்ததாலும் அரசாங்க திறைச்சேரியில் நிதி நெருக்கடி நிலவியதாலும் அப்போதைய ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அரசாங்கம் உள்ளுர் உற்பத்தியை ஊக்குவிப்பதாகக் கூறி மாவுணவைக் கைவிட்டு மரவள்ளி கிழங்கு போன்ற சுதேச உற்பத்திப் பொருட்களை உண்ணுமாறு வலியுறுத்தியது.  

உள்நாட்டில் விளையும் அரிசியைக் கூட சுந்தந்திரமாக சந்தையில் விற்பதைக் கட்டுப்படுத்தியது. ஒரு பிரதேசத்திலிருந்து மற்றொரு பிரதேசத்திற்கு ஆளுக்கு தலா இரண்டு கிலோ அரிசிக்கு மேலதிகமாக கொண்டு செல்வது தண்டனைக்குரிய குற்றமாக பிரகடனம் செய்யப்பட்டது. இதனால் நெல்லும் மரவள்ளிக் கிழங்கும் விளையாத, வெளி மாவட்டங்களில் இருந்து வரும் அரிசியிலும் மாவிலும் முற்றிலும் தங்கியிருந்த மலையகத்தில் முதற்தடவையாக பஞ்சம் தலைவிரித்தாடியது.

இவ் அவல நிலையை மேலும் மோசமாக்கும் விதத்தில் பெருந்தோட்ட சுவீகரிப்பு என்ற பெயரால் தோட்ட தொழிலாளர்கள் தாம் வாழ்ந்த மண்ணிலிருந்து இரவோடிரவாக அரசியல் காடையார்களால் அடித்து விரட்டியடிக்கப்பட்டனர். இவ்வாறு விரட்டியடிக்கப்பட்ட தோட்டதொழிலாளர்கள் தெருவோரங்களில் பிச்சைக்காரர்களாக அலைந்து திரிந்தனர். அப்போது சர்வதேச அணிசேரா மாநாட்டுக்கான ஏற்பாடுகள் அமர்க்களமாக நடைபெற்றுக் கொண்டிருந்ததால், இவர்களின் அவலநிலை இலங்கை வரும் வெளிநாட்டவர்களின் கண்பார்வையில் பட்டுவிடக் கூடாது என்பதற்காக மந்தைகளைப் போல இவர்கள் கூட்டுறவுசங்க லொறிகளில் ஏற்றப்பட்டு வன்னி காட்டில் அநாதைகளாக கொண்டுபோய் விட்டப்பட்டனர்.

பாடசாலைகளுக்கு சென்றிருந்த தமிழ் தோட்ட நிர்வாகிகளின் பிள்ளைகள் வீடு திரும்ப முன்னர் அவர்களை தாம் குடியிருந்த வாசஸ்தலங்களில் இருந்து விரட்டியடித்து விட்டு சிங்களவர்கள் குடியேறினர்.

இவ்வாறு நாதியற்று கிடந்தவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதற்காகவே டேவிட் ஐயா, டாக்டர் இராஜசுந்தரம் ஆகியோர் தலைமையில் ‘காந்தியம்” என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. (பின்னர் அது மலையகத்திலிருந்து தோட்ட தொழிலாளர்களை புலம் பெயரச்செய்து எல்லைக்காவலர்களாக குடியேற்றும் அரசியல் வேலைத்திட்டத்தை முன்னெடுத்தாலும் கூட.)

போதாக்குறைக்கு அன்றைய அரசாங்கம் ஸ்ரீமா – சாஸ்த்திரி ஒப்பந்தத்தின் கீழ் இந்திய கடவுச் சீட்டு பெற்றவர்களை, அவர்கள் கடைகளில் பொருட்கள் வாங்க வந்த போது தெருக்களில் வைத்து ஆடு மாடுகளைப் பிடிப்பதைப் போல பிடித்து ஜீப்களில் ஏற்றிக் கொண்டுபோய் உடுத்த ஆடையோடு இந்தியாவுக்கு நாடு கடத்தியது. 

அன்று மலையக புகையிரத நிலையங்கள் யாவும் ஒப்பாரி வீடுகளாக காணப்பட்டன. பிரிக்கப்பட்ட குடுமபங்கள் தமது உறவுகளை புகையிரதங்கள் காவிசெல்வதைப் பார்த்து கதறியழும் காட்சி நெஞ்சத்தைப் பிளப்பதாக இருந்தது. ‘ஒப்பாரி கோச்சி’ போன்ற குறியீடுகள் அன்றைய சிறுகதைகளின் தலைப்பாக இருந்தன.

அப்போதைய அரச அடக்குமுறைக்கு அஞ்சி மலையகத்தின் பெரிய தொழிற்சங்கங்கள் மௌனம் சாதித்தன. சில படித்த மலையக இளைஞர்களின் அமைப்புகள் இடதுசாரி- முற்போக்கு அரசாங்கம் என அதனை வர்ணித்துக் கொண்டு அதனிடம் சலுகைகளை வாங்கிக்கொண்டு வாளாதிருந்தன.

ஆனால், தோட்டத் தொழிலாளர்கள் சுயமாகப்போராடத் தொடங்கினர். மண்ணைப் பாதுகாக்கும் போராட்டம் காணி சுவிகரிப்புக்கு எதிரான போராட்டமாக வெளிப்படத் தொடங்கியது. தோட்டக் காணிகளைப் பிரித்து சிங்களவருக்கு பகிர்ந்தளிப்பதற்கு வந்த அரச அதிகாரிகள் துரத்தியடிக்கப்பட்டனர். அவ்வாறு தலவாக்கெலை – டெவன் தோட்டத்தை அளந்து, பிரிக்க வந்த அதிகாரிகள் தொழிலாளர்களால் விரட்டப்பட்டபோது அவர்களுக்கு துணையாக பொலிசார் வந்தனர். அவர்கள் மீது தொழிலாளர் கற்களை வீசி எச்சரித்தனர். அவர்களது நோக்கம் பொலிசாரை தாக்குவது அல்ல– தமது ஜீவாதாரமான தோட்டக்காணிகள் பறிபோகமல் தடுப்பதேயாகும். ஆனால் பொலிசார் கண்மூடித்தனமாக துப்பாக்கிப் பிரயோகம் செய்ததனால் சிவனுலட்சுமணன் என்ற இளைஞன் வீரமரணமடைந்தான். மார்பை முன்நிமிர்த்தி முன்பாய்ந்த இவனது வீரமரணம் முழு மலையகத்தையும் தட்டி எழுப்பியது.

பொலிசாரின் இச்செயலைக் கண்டித்து ஊர்வலம் சென்ற ஹட்டன் தமிழ் மாணவ மாணவியர் குண்டர்களால் தாக்கப்பட்டனர்.

1977 வன்முறை தாக்குதல்

இவ்வாறு மலையகம் நொந்து தகித்துக் கொண்டிருக்கும் போது 1977 பொதுத் தேர்தல் வந்தது. இனியாவது  நிம்மதியாக வாழமுடியும் என்ற நம்பிக்கையில் மலையக மக்கள் தமது வாக்குகளை ஐக்கிய தேசிய கட்சிக்கு அள்ளிக்கொடுத்தனர். ஜே ஆர் தலைமையில் ஐ.தே.கட்சி அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சிக் கட்டிலில் ஏறியது. நுவரெலியா தொகுதியில் போட்டியிட்ட சௌமியமூர்த்தி தொண்டமான் 1948ன் பின்னர் முதற்தடவையாக தமிழரின் வாக்குகளினால் தெரிவுசெய்யப்பட்டார். மலையகத் தமிழ் மக்கள் பெருமகிழ்ச்சியடைந்தனர். தம்மைப் பிடித்த கெட்டகாலம் தொலைந்தது என நம்பினர். ஆனால் நடந்ததோ வேறு.

ஆட்சிக்கு வந்த அடுத்த மாதமே ஜே ஆர். அரசு மலையக தமிழ் மக்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டது. ஜே. ஆர் “போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம்’ (“If you want war let there be war; if you want peace let there be peace.”) என பாரளுமன்றத்தில் முழங்கி மேலும் அதனை முடுக்கிவிட்டார். கண்டி, மாத்தளை பகுதிகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டன. முதற்தடவையாக மலையக மக்கள் அகதிமுகாம்களில் தஞ்சம் புகுந்தனர். மலையகம் அதிர்ச்சியடைந்தது.

அனைத்து அரசியல் கட்சிகள் மீதும், இரு அரசாங்கங்களின் மீதும், நம்பிக்கை இழந்த மலையக மக்கள் ஏகோபித்த குரலில் தம்மை இந்தியாவுக்கு திருப்பியனுப்பிவிடுமாறு கோரிக்கை விடுத்தனர். மலையகத்தின் தொழிற்சங்க காரியாலங்கள் யாவும் ஆத்திரங்கொண்ட தொழிலாளர்களினால் நிரம்பிவழிந்தன.

அதுவரை இயங்கிய பல இளைஞர் அமைப்புகள் இரகசியமாக இந்தியா செல்லவேண்டும் என்ற கோஷத்தை ஆதரித்துவிட்டு காணாமற்போயின. இக்காலப்பகுதியில் காந்திய இயக்கம் “மத்திய மலைநாட்டில் வாழும் தமிழர்களுக்குப் பாதுகாப்பு கிடையாது எனவே வன்னிக்கு வாருங்கள். காணியும், பணமும், பாதுகாப்பும் தருகிறோம்” என்ற பிரச்சாரத்தை முடுக்கிவிட்டு மலையகத்திலிருந்து வன்னிக்கு ஆள்கடத்தும் பணியைத் தீவிரப்படுத்தியிருந்தது.

இச்சமயத்தில் தான் “இந்தியா செல்வதும் வன்னிக்கு ஓடுவதும் தீர்வாகாது. மலையகம் முன்னர் வன விலங்குகள் மாத்திரமே வாழ்ந்த காட்டுப்பிரதேசமாகத் திகழ்ந்தது. காடுவெட்டி பெருந்தோட்டங்களை உருவாக்கி முதன் முதலில் அங்கு கால் பதித்தவர்கள் மலையக தமிழர்கள். எனவே மலையகத்தின் சொந்தக்காரர்கள் மலையகத்தமிழர்களே. கோழைகளாக இந்தியாவுக்கும், வன்னிக்கும் தப்பி ஓடி அங்கு அந்நியர்களாக வாழ்வது பிரச்சினைக்கு தீர்வல்ல. எந்த மண்ணை நாம் உருவாக்கினோமோ – எந்த மண்ணுக்காக சிவனு லட்சுமணன் தன்னுயிரை நீத்தானோ அம்மண்ணுக்காக – நாம் போராடுவோம். எமது மண்ணில் இருந்துகொண்டு எமது உரிமைக்காகப் போராடுவோம்” என்ற கோஷத்தை முன்வைத்து ‘மலையக வெகுஜன இயக்கம்” என்ற புதிய மலையக இளைஞர் அமைப்பு ஒன்று ஹட்டனையும், தலவாக்கெலையையும் மையமாகக் கொண்டு உருவானது. 

அதன் தலைவராக காலம் சென்ற வி.ரி.தர்மலிங்கம் (பின்னாள் மலையக மக்கள் முன்னணியின் உபதலைவர்) இருந்தார். அதன் இணைச் செயலாளர்களாக பி.ஏ.காதர் (அப்போது இலங்கை ஆசிரியர் சங்கத்தின் துணைத்தலைவர் – பின்னர் மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக செயலாளர் நாயகம்), காலஞ்சென்ற ஆசிரியர் தேவசிகாமணி ஆகியோர் திகழ்ந்தனர். 

வி.ரி.தர்மலிங்கம்


அதன் தீவிர உறுப்பினர்களாக ஏ.லோறன்ஸ் (மலையக மக்கள் முன்னணியின் முன்னாள் செயலாளர் நாயகம், தற்போதைய பிரதித் தலைவர்), காலஞ்சென்ற பெ.சந்திரசேகரன் (முன்னாள் அமைச்சர் – மலையக மக்கள் முன்னணியின் தலைவர்), கே.சுப்பிரமணியம் (தற்போதைய மலையக தொழிலாளர் முன்னணியின் பொதுச்செயலர்), பி.செல்வராஜ் (மலையக மக்கள் முன்னணி), மு.நாகலிங்கம் (இளைப்பாறிய ஆசிரியர்), திலகேஸ்வரன் (மலையக மக்கள் முன்னணி), பிரான்சிஸ் (அப்போது ஹட்செக்கின் முக்கிய செயற்பாட்டாளர்களில் ஒருவர்) ஆகியோர் திகழ்ந்தனர். சில பெயர்கள் விடுபட்டிருக்கலாம். (சுமார் 29 வருடங்களுக்கு முன்னர் நடந்த நிகழ்வு என்பதால் அனைத்து பெயர்களையும் நினைவு கூருவது கடினமல்லவா?) 

காந்தியத்தின் வன்னிக்கு ஆள்திரட்டும் செயற்பாடுகளின் மையமாக ஹட்டன் ஹெட்செக் (HATSAC) நிறுவனம் திகழ்ந்நது. டாக்டர் இராஜசுந்தரமும், சந்ததியாரும் அங்கு அடிக்கடி வந்து போயினர். அவர்கள் மீதும் ஹெட்செக் நிறுவனத்தின் ஸ்தாபகர் காலஞ்சென்ற அல்போன்சஸ் அவர்கள் மீதும் மலையக வெகுஜன இயக்கத்திற்கு நன்மதிப்பு இருந்த போதும் அவர்களது செயற்பாடுகளுக்கு எதிராக அது கடும் பிரச்சாரத்தை மேற்கொண்டது. 

ஏ.லோறன்ஸ்
தேவசிகாமணி

திரு.ஏ.லோறன்ஸ், காலஞ்சென்ற தேவசிகாமணி ஆகிய இருவரும் அக்காலத்தில் மிகவும் வேகமானவர்கள். அவர்கள் ஹெட்செக் நிறுவனத்திற்கே போய் அதன் நிர்வாகத்தோடும் டாக்டர் இராஜசுந்தரம் சந்ததியார் ஆகியோருடன் நேரிடியாக விவாதித்தனர். இவர்களது அறிவுபூர்வமான தர்க்கத்தால் ஹெட்செக் நிறுவனத்தின் செயற்பாட்டாளர்கள் பலர் மனம்மாறினர். அவர்களில் அதன் முன்னணி செயற்பாட்டாளராகத் திகழ்ந்த திரு.சுப்பிரமணியம் (தற்போது ஆசிரியர்), திரு.பிரான்சிஸ் (தற்போது ஒரு தொண்டர் நிருவனத்தின் தலைவராக இருக்கிறார்) ஆகிய இருவரின் மனமாற்றம் அவர்களை தர்மசங்கடமான நிலைக்குத் தள்ளியது.

இப்பிரச்சினை பகிரங்கமாக விவாதிக்கப்பட்டு ஒரு இணக்கம் காணப்படும் வரை தம்மால் தமது மனசாட்சிக்கு விரோதமாக செயற்ட முடியாது என அவ்விருவரும் திட்டவட்டமாகக் கூறிவிட்டனர். 

எனவே இது தொடர்பான ஒரு பகிரங்க விவாதத்திற்கான ஏற்பாட்டைச் செய்ய ஹெட்செக் நிறுவனம் முன்வந்தது. டாக்டர் இராஜசுந்தரம் பகிரங்க விவாதத்துக்கு சம்மதம் தெரிவித்தார். மலையக வெகுஜன இயக்கத்திற்கு அழைப்பு விடப்பட்டது. அதன் சார்பில் பி.ஏ.காதர் விவாதத்தில் கலந்து கொள்வது என தீர்மானிக்கப்பட்டது. தலைப்பு “மலையக தமிழர் தனியான தேசிய இனமா? மலையக தழிரின் எதிர்காலத்திற்கான தீர்வு எது? இந்தியா செல்வதா? வடக்கிற்கு இடம்பெயர்வதா? அல்லது மலைலயகத்திலிருந்து கொண்டு தமது உரிமைக்காகப் போராடுவதா?”என்பதாகும்.

1978ல் அது நடைபெற்றது. (திகதி ஞாபகம் இல்லை) அன்றைய  தினம் ஹெட்செக் நிறுவனம் ஆர்வமிக்க இளைஞர்காளால் நிறைந்து வழிந்தது. அதுவரை மலையக வரலாற்றில் அப்படியான ஓரு பகிரங்க அரசியல் விவாதம் நடந்ததில்லை. விவாதத்திற்கு மூத்த ஊடகவியலாளர் காலஞ்சென்ற திரு.தியாகராஜா தலைமைதாங்கினார். எதிர்பாராத விதமாக டாக்டர் இராஜசுந்தரம் அவர்களும், சந்ததியாரும் வந்த யாழ்தேவி புகையிரதம் இடையில் தடம்புரண்டதால் அவர்கள் இருவராலும் பங்குகொள்ள முடியவில்லை. அவர்களுக்கு பதிலாக தமிழரசுக் கட்சியின் தொழிற் சங்கமாக அப்போது மலையகத்தில் இயங்கிய ‘இலங்கை தொழிலாளர் கழகத்தின்’ பொதுச் செயலாளர் காலஞ்சென்ற கோவிந்தராஜ் அவர்கள் “தமிழர் அனைவரும் ஓரினமே. மலையகத்தில் இனியும் மலையக தமிழர் பாதுகாப்பாக வாழ முடியாது. எனவே வடக்கே சென்று புது வாழ்க்கை தொடங்க வேண்டும். மலையகத்தில் காணியோ எவ்வித உரிமையோ இன்றி வாழ்வதை விட வடக்கே சென்று காணி உரிமையுடன் தலைநிமிர்ந்து வாழ முடியும்” என வாதிட்டார். 


“மலையகத்தை விட்டு வடக்கே சென்று இரண்டாந்தர பிரஜைகளாக வாழ்வதைவிட நாம் எங்கிருந்து வந்தோமோ அங்கு –  எனது தாய்நாடான இந்தியாவுக்கு – திரும்பிச்சென்று எமது உற்றார் உறவினருடன் வாழ்வதே எமக்கு நிரந்தர தீர்வு” என திரு.பத்மநாதன் என்ற ஒரு சேமநல அதிகாரி வாதிட்டார்.

மலையக வெகுஜன இயக்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய பி.ஏ.காதர் “தேசிய இனம் என்றால் என்ன?” என்ற வினாவை எழுப்பி அதற்கு விடை கூறிவிட்டு மலையகத் தமிழர் ஒரு தனியான தேசிய இனம் என்பதை பல்வேறு சர்வதேச உதாரணங்களோடு நிறுவிவிட்டு, மலையகம் மலையகத்தவரால் உருவாக்கப்பட்டது. அதுவே மலையக மக்களின் தாயகம். இந்தியாவிலிருந்து வந்து குடியேறிய முன்னைய தலைமுறை அநேகமாக மறைந்து விட்டது. இப்போதுள்ள தலைமுறை இந்த மண்ணின் மைந்தர்கள். இவர்களை வெளியே போகச்சொல்லும் உரிமை எவருக்கும் கிடையாது. மத்திய மலைநாட்டை விட்டு இவர்களை வெளியேற்றுவது மலையகத்தையும், மலையக தமிழ் மக்களையும் பலவீனப்படுத்தும்” என வாதிட்டார்.

விவாதத்தின் முடிவில் சபையின் கருத்து அறியப்பட்டது. உணர்ச்சிவசப்பட்ட சில இளைஞர்கள் “இது எனது மண். செத்தால் இங்கு தான் சாவேன்” என நிலத்தில் அடித்து சத்தியம் செய்தனர். சிலர் “நாம் ‘வாருங்கள் காணி தருகிறோம், என்ற ஆசை வார்த்தையைக் கேட்டு வன்னிக்குச் செல்ல தயாரானோம். இப்போது சொல்கிறோம். நாம் கோழைகாளாக எங்கும் ஓடமாட்டோம். எமது உரிமைக்காகப் போராடி அதற்காக உயிர் துறப்போம்” என சூளுரைத்தனர். 

பி.ஏ.காதர்

முடிவில் ஒரே ஒருவரைத்தவிர ஏனைய அனைவரும் மலையகத் தமிழர் மலையகத்தில் இருந்து தமது உரிமைக்காக போராடவேண்டும் என்ற கருத்தை உறுதியாக ஆதரித்தனர்.

இந்த ஹட்டன் மாநாடுதான் மலையக தேசியவாதத்தின் எழுச்சிக்கு முதல் வித்தை விதைத்தது எனலாம். எனவே இம்மாநாட்டை மலையக வட்டுக்கோட்டை மாநாடு எனக்கூறுவது ஒருவிதத்தில் பொருத்தமானதாகும்.

இவ்விவாதத்தின்போது திரு.பி.ஏ.காதர் சமர்ப்பித்த ஆய்வுரை – படப்பிரதி செய்யும் தொழில் நுட்பம் இல்லாத அக்காலத்தில்- றோனியோ செய்யப்பட்டு பலராலும் பரவலாக விநியோகிக்கப்பட்டு வாசிக்கப்பட்டது – விவாதிக்கப்பட்டது. பின்னர் அது “மலையக தமிழரின் எதிர்காலம்” என்ற தலைப்பில் நூலாக வெளியிடப்பட்டு அரசியல் புயலைக் கிளப்பியது. யாழ் பல்கலைகழகத்திலும், யாழ் றிம்மர் மண்டபத்திலும் இந்நூல் அறிமுகப்படுத்தப்பட்டு விவாதிக்கப்பட்டது.

அப்போது நடைபெற்ற இவ்விவாதங்களில் கலந்து கொண்டவர்களில் மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் திரு.யோகேஸ்வரன், திரு.மாவை சேனாதிராசா (முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்), திரு.ஸ்ரீகாந்தா (டெலோ) ஆகியோர் குறிப்பிடத்கக்கவர்கள்.

இச்சிறு நூல் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் கல்விப் பிரிவுக்கு அப்போது பொறுப்பாக இருந்த நாகலிங்கம் அவர்களால் வெளியிடப்பட்டது. இவர் காலஞ்சென்ற புளொட் தலைவர் உமாமகேஸ்வரனின் மைத்துனர் என்பது குறிப்பிடத்தக்கது.