மகாகவி பாரதியின் பாடல்கள் பேசும்!   தமிழ்த்தேசிய பாராளுமன்ற  – ஜெனிவா அரசியல்!! (காலக்கண்ணாடி 56)

மகாகவி பாரதியின் பாடல்கள் பேசும்! தமிழ்த்தேசிய பாராளுமன்ற – ஜெனிவா அரசியல்!! (காலக்கண்ணாடி 56)

 — அழகு குணசீலன் — 

மகாகவி பாரதியார் மறைந்து நூறாண்டுகளாகின்ற இன்றைய நாட்களில் அவர் கண்ட கனவுகளை தனதாக்கிக் கொண்டிருக்கின்ற அன்னாரின் பாடல்கள் சமூக, பொருளாதார, அரசியல் தளத்தில் பேசுபொருளாக உள்ளன. இந்த நிலையில் ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி உள்ள அறிக்கைகள் தொடர்பாக ஒரு “ஆவணச்சண்டை” தமிழ்த்தேசிய அரசியலில் தொடர்கிறது. 

இந்தச் சண்டை ஒன்றும் புதியதல்ல. ஆண்டுச் சண்டைதான். 

கோயில்களில் ஆண்டுக்கு ஒரு திருவிழா போன்று ஜெனிவாவில் வருடத்திற்கு ஒன்றல்ல மும்முறை திருவிழாக்கள். எப்போதும் போன்று கொடியேற்றத்துடன் தொடங்கி தேரோட்டம், தீர்த்தத்துடன் முடியும். கோயில்களில் கொரோனா கட்டுப்பாடுகள் போன்று ஜெனிவாவிலும் இம்முறை  மட்டுப்படுத்தப்பட்ட வழிபாடுதான்.  

இலங்கையின் பெயரிலும் ஒருநாள் அல்லது ஒருகாலப்பூஜை. இதற்கு தமிழ்தரப்பும், சிறிலங்காவும் தங்கள் உபயத்தை அனுப்பி வைப்பார்கள். 

தமிழ்தரப்பில் இது எப்போதுமே ஒரு வில்லங்கமான காரியம் மட்டுமல்ல வைக்கோல் இழுத்தவழி. முதலைக்கட்சி நெத்தலிக்கட்சிகளை விழுங்கல். சட்டவாதிகளின் தன்மானச் சிக்கல். நானா….? நீயா…? குத்துச்சண்டை. 

தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகள் அதை நேர்த்தியாக, ஒற்றுமையாக, மல்யுத்தம் செய்யாது தங்கள் உபயத்தை கூட்டாகவோ, தனியாகவோ அனுப்பிவைத்த வரலாறு கடந்த காலங்களில் இல்லை. இதற்கு இம்முறை மட்டும் எப்படி விலக்காவது. அப்படியானால் அது தமிழ்த்தேசிய தனித்துவ அரசியல் குத்துவெட்டு குணாம்சத்தை மறுதலிப்பதாக அமைந்துவிடும். இந்த கோழிச்சண்டை அரசியலில்தான் அவர்களின் கதிரை எதிர்காலமே காத்துக்கிடக்கிறது.  

ஐந்து  வெவ்வேறு  அறிக்கைகள் பற்றி பேசப்படுகிறது. முக்கியமாக ஒரேயொரு உள்ளடக்க முரண்பாடே பேசுபொருள். தமிழ்மக்களின் நலன்களைவிடவும் கட்சிகளின் கௌரவத்தையும், பழம்பெருமையையும் கட்சிகளின் சுய அரசியல் இலாபத்தையும் முதன்மைப்படுத்தி நிற்கின்றன. அறிக்கைகளின் உள்ளடக்கங்கள் இவை. 

1.” இலங்கை இராணுவமும், விடுதலைப்புலிகளும் சர்வதேச மனிதாபிமான சட்டங்கள், மனித உரிமை சட்டங்களை மீறியுள்ளனர். இவற்றில் சில போர்க்குற்றங்கள், மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் என கருதப்படும்” என்ற விடயம் தமிழரசுக்கட்சியின் அறிக்கையில் அல்லது இணைப்பில் உள்வாங்கப்பட்டிருப்பது. இதனால் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இரண்டாகப் பிரிந்துநிற்கிறது. தமிழரசும் உடைந்திருக்கிறது. 

2. தமிழ்த்தேசிய மக்கள் முன்னனி “சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் சிறிலங்காவைப் பாரப்படுத்துவதே தமிழர்களுக்கு நீதி கிடைப்பதற்கான ஒரேவழி” என்று தனது அறிக்கையில் கோருகிறது. 

3. விக்கினேஸ்வரனின் தமிழ்மக்கள் தேசிய முன்னணி அறிக்கை “பாலியல் வல்லுறவு முகாம்கள்” பற்றி பேசுகிறது. 

4. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கமும் தங்கள் தன்னார்வம் சார்ந்து ஒரு அறிக்கையை அனுப்பியிருக்கிறது. 

5. ஆனந்தியும், சிவாஜிலிங்கமும் தங்கள் பூஜைத்தட்டை அனுப்பக் தவறவில்லை. 

இவற்றை கருத்துச் சுதந்திரம் என வெறுமனே வெள்ளை அடித்துவிடமுடியாது. கருத்து வேற்றுமையிலும் ஒற்றுமைகாண முடியாத ஒரு பலவீனமான தமிழ்த்தேசிய அரசியலின் ஒரு வெளிப்பாடாகவே இதனைக் கொள்ளமுடியும். 

 “நெஞ்சு பொறுக்கு திலையே – இந்த 

  நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால், 

 கொஞ்சமோ பிரிவினைகள்? – ஒரு 

 கோடி என்றால் அது பெரிதாமோ ? 

  ஐந்து தலைப் பாம்பென் பான் – அப்பன்  

 ஆறுதலை யென்றுமகன். சொல்லிவிட்டால்  

 நெஞ்சு பிரிந்திடுவார் – பின்பு  

 நெடுநாள் இருவரும் பகைத்திருப்பர்” 

கடந்த சில வாரங்களாக எத்தனை ஊடகச்சந்திப்புக்கள், அறிக்கைகள், கடிதங்கள், கள்ளக்கையொப்பங்கள், பொய்கள், புளுகுகள் …அப்பாடா போதும்… போதும் என்றாகி விட்டது. கூட்டு இல்லாத கூட்டமைப்பு. ஒற்றுமை இல்லாத ஒரு கூட்டு. ஒருவரே பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுவார். அல்லது ஒருவர் கிள்ள மற்றவர் ஆட்டுவார். 

புதிய உள்ளடக்கம் இல்லாத ஊடகச்சந்திப்புக்கள் ஒருவர் அரைத்ததை கிளிப்பிள்ளையாக திருப்பி அரைப்பார் மற்றவர். இவர்கள் ஒருநபர் இருவேடமா? அல்லது இருநபர் ஒருவேடமா? எம்ஜிஆரும் சிவாஜியும் தோற்றுப்போவார்கள். சுமந்திரனின் வாய்மலர்வில் சொன்னால் “படம்காட்டுதல்” மொத்தத்தில் ஐ.நா. கோயிலில் மோதகமும், கொழுக்கட்டையும் பிரசாதம். 

வேதிய ராயினும் ஒன்றே..! வேறு குலத்தவராயினும் ஒன்றே…!! 

——————————————- 

பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மீதான பாராளுமன்ற அரசியல் விமர்சனங்களுக்கு அப்பால் அவரின் வாதங்கள் குறித்த கவனம் ஈர்க்கப்படுகிறது. யுத்தத்தில் இருதரப்பினர் ஈடுபட்டுள்ளபோது ஒரு தரப்பின் மீது குற்றம் சுமத்துவது அல்லது ஒருதரப்பை மட்டும் விசாரணைக்கு உட்படுத்துமாறு கோருவது நியாயமானதா?. 

அதனால் விடுதலைப்புலிகளும் விசாரிக்கப்படவேண்டும் என்ற கருத்து சரியானது மட்டுமன்றி சர்வதேசத்தின் நம்பிக்கையை பெறவும், தமிழ் தரப்பின் நடுநிலையை வெளிக்காட்டவும் இந்த நிலைப்பாடு தேவை என்று வாதிடுகிறார் சுமந்திரன். 

இங்கு சுமந்திரனின் கருத்தை மறுப்பவர்களிடம் விடுதலைப்புலிகள் எந்த போர்க்குற்றங்களையும், மனித உரிமை மீறல்களையும் செய்ய வில்லையா? என்ற கேள்வியை எழுப்பவேண்டி உள்ளதுடன் அதனை நிரூபிக்கவும் முடியுமா என்று கேட்க வேண்டியுள்ளது. 

இந்த மூடிமறைப்பு ஒருவகையில் தமிழ்மக்கள் மீதான சர்வதேச அனுதாபத்திற்கு பாதகமாகவும் அமையலாம். கடந்த பல தசாப்தங்களாக இடம்பெற்ற யுத்தத்தில், சர்வதேசம் சமாதான முயற்சிகளையும், போர்நிறுத்தம் களையும் மேற்கொண்டுள்ள நிலையில், பல அறிக்கைகளையும், அறிவுரைகளையும் வழங்கியுள்ள நிலையில்  இதை மறைக்க அல்லது தவிர்க்க முயல்வது ஜதார்த்தமா?அல்லது சாத்தியமா? நீதியா? 

அதேவேளை யாழ்ப்பாணத்தில் இருந்து முஸ்லீம்கள் புலிகளால் வெளியேற்றப்பட்டதை இனச்சுத்திகரிப்பு என்றும் அதற்காக தான் வெட்கப்படுவதாகவும் கூறியிருக்கிறார் சுமந்திரன். இது விடயமாக  புலிகளின் எதிர்நிலையில் நின்ற அனைத்து அமைப்புக்களும் இந்ந வெளியேற்றத்தை அன்று கண்டித்திருந்தன. இது ஐ.நா. அமர்வை முன்னிட்டு சுமந்திரன் திடீரென விட்ட கலர்  பட்டமாகவும் இருக்கலாம். அத்துடன் கிழக்கு மாகாணசபைக்கான கனவாகவும் இருக்கலாம். ஆனால் அதை வெளிப்படையாக சொல்லுகின்ற துணிச்சல் அவருக்கு வந்திருக்கிறது.  

மறுபக்கத்தில் முன்னர் புலி எதிர்ப்பில் நின்று கண்டித்த அமைப்புக்கள் இப்போது வாய்திறந்திருக்கின்றன. இவர்கள் தான் விடுதலைப்புலிகளின் போர்க்குற்றங்களையும், மனித உரிமைமீறல்களையும் ஐ.நா.அறிக்கையில் உள்ளடக்க /இணைக்க கூடாது என்கிறார்கள்.   இனச்சுத்திகரிப்பை இவர்கள் ஏற்றால் புலிகளின் மனித உரிமை மீறல்களை ஏற்றவர்கள் ஆகிறார்கள். புளட், ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலோ என்பன ஆண்டுத்திதிக்கு விளக்கு கொழுத்தி அஞ்சலி பூச்சாண்டி காட்டிக்கொண்டு தமது அமைப்புக்களை அழித்ததைக்கூட மனித உரிமை மீறல் என்று வெளிப்படையாக கூற வக்கில்லாதவர்களாக உள்ளனர். 

உமாமகேஸ்வரனும், சிறிசபாரெட்ணமும்,  பத்மநாபாவும், கந்தன் கருணையும் இவர்களின் அரசியலில் காலாவதியாகிவிட்ட பழைய சங்கதிகளாகிவிட்டன. 

 “ஜாதி மதங்களைப் பாரோம் -உயர் 

 ஜன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்  

 வேதிய ராயினும் ஒன்றே – அன்றி  

 வேறு குலத்தினராயினும் ஒன்றே ” 

 “ஈனப் பறையர்க ளேனும் அவர் 

 எம்முடன் வாழ்ந்திங் கிருப்பவர் அன்றோ? 

 சீனத்த ராய்விடு வாரோ? பிற 

 தேசத்தினர் போற் பல தீங்கிழைப்பாரோ?” 

ரெலோ முக்கியஸ்தர் பிரசன்னா சுமந்திரனின் வெட்கத்தை சாடியிருக்கிறார். யாழ்ப்பாணத்தில், தனது மாவட்டத்தில் நடந்த சம்பவத்திற்கு தலைகுனிகிறார் சுமந்திரன். மட்டக்களப்பில் நடந்த பள்ளிவாசல் படுகொலைகள் உள்ளிட்ட சம்பவங்களுக்கு வெட்கப்படாமல் வீராப்பு பேசுகிறார் ரெலோ பிரதிநிதி. இவர்கள் தங்கள்  பங்கை பொறுப்பேற்காமல் மற்றவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று குருட்டு நியாயம் பேசுகிறார்கள். 

தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. ஈஸ்டர் தாக்குதல் இத்தொடரின் இறுதிச் சம்பவம். இதற்கு முஸ்லீம் அரசியல்வாதிகள் பொறுப்புக்கூறவேண்டும். இதற்கு தமிழ் தரப்பு தமது பொறுப்பை ஏற்றுக்கொள்வதே அவர்களுக்கு கொடுக்கும் அழுத்தமாகவும், அவர்களின் மனச்சாட்சியை உறுத்துவதாகவும், முன்மாதிரியாகவும்  அமைமுடியும். அதைத்தவிர்த்து  வாக்குக்கணக்கு பார்க்கிறார் பிரசன்னா. கிழக்கில் தமிழ், முஸ்லீம் உறவை சீர்குலைத்ததில் ரெலொவுக்கும் பங்கு உண்டா? இல்லையா? 

அரசியலுக்கும் ஒரு நாகரிகம் உண்டு. 

“மனிதரில் ஆயிரம் ஜாதி – என்ற  

 வஞ்சக வார்த்தையை ஒப்புவதில்லை  

 கனிதரும் மாமரம் ஒன்று – அதில்   

 காய்களும் பிஞ்சுக் கனிகளும் உண்டு  

 பூவில் உதிர்வதும் உண்டு – பிஞ்சை  

 பூச்சி அரித்துக் கெடுவதும் உண்டு  

 நாவிற்கினியதைத் தின்பார் – அதில்  

 நாற்பதினாயிரம் சாதிகள் சொல்லார்.”  

கடந்த கால ஜெனிவா மனித உரிமைகள் அமர்வுகள் தொடர்பாக தமிழ்தரப்பு வாதங்களை உற்று நோக்கினால் போர்க்குற்ற விசாரணைகள் என்ற விடயம் முக்கிய மற்றது அதனை முதன்மைப் படுத்தத்தேவையில்லை என்றே தமிழ்த்தேசிய சார்பு ஊடகங்களும், ஆய்வாளர்களும் பேசிவந்துள்ளனர். அவர்கள் இப்போதும் வசதிகருதி இனச்சுத்திகரிப்பு, விடுதலைப்புலிகளின் மனித உரிமைமீறல்கள், போர்க்குற்றங்கள் குறித்து மழுப்பி, அடக்கி வாசிக்கிறார்கள். 

அதற்கான காரணம் என்ன என்பதை அவர்கள் வெளிப்படையாகப் பேசவில்லை. இப்போது அது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்களை விசாரணைக்கு உட்படுத்துவதற்கு அவர்கள் உயிருடன் இல்லை. ஆனால் இலங்கையில்,  இந்தியாவில், புலம்பெயர்ந்த நாடுகளில்  புனர்வாழ்வும், அரசியல் தஞ்சமும் பெற்று வாழ்கின்ற ஒரு சில முக்கியஸ்தர்கள் விசாரணை செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் முற்றாக இல்லை என்றும் மறுப்பதற்கில்லை. இதற்காகவே போர்க்குற்ற விசாரணை அரசுதரப்புக்கு மட்டும் இருக்கவேண்டும் என்று கோரப்படுகிறது. 

“கூட்டமைப்பை உருவாக்கியவர்களும், வளர்த்தவர்களும் விடுதலைப்புலிகள், யாரோ ஒரு அழுகிய சட்டமூளை குழப்புகிறது. இதனை கூட்டமைப்புக்கு வெளியே தூக்கிப்போடுங்கள்” என்று அறைகூவல் விடுத்துள்ளார் ஈழத்தமிழர் நட்புறவுக்கழகத்தின் தலைவர் காசி ஆனந்தன். காசி ஆனந்தனின் சுட்டுவிரல் சுட்டுவது யாரை?  

 தமிழ்த்தேசிய தீவிர செயற்பாட்டாளர்களுக்கும், பக்தர்களுக்கும் அந்த சட்ட மூளை ஒரு பிரச்சினையாகவே எப்பவும் இருந்து வருகிறது, இனியும் இருக்கப்போகிறது. அதைத்தூக்கி வெளியே போடுவது களநிலையில் சாத்தியமா? போகிற போக்கில் கூட்டமைப்பின் பலவீனமான இன்றைய நிலையில் சம்பந்தர் ஐயாவுக்குப்பின் சர்வமும் அந்த மூளைதான்   என்றாகிறது. அது அழுகியது என்றால் அதன் விளைவுகளை மேலும் சுமக்க வேண்டியது தமிழ் மக்களின் தலைவிதியா? கூட்டமைப்பு உடைந்தால்  அந்த அழுகிய மூளை தமிழரசை காப்பாற்றுமா? காலமே பதில்!. 

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்பபோம். 

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவானது வரலாற்றுக்காலம் கொண்டது. சமூகம், கலை, பண்பாடு, மொழி, பொருளாதாரம், அரசியல் அனைத்தையும் ஒரு மாலையாகத்தொடுத்த நீண்ட பாரம்பரியம் அது.. இதில் விருப்பத்தேர்வுக்கும் விருப்பு, வெறுப்புக்கும் இடமில்லை. அதை இவ்வாறு பாடுகிறான் பாரதி . 

 “சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் 

 சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்  

 வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்  

 மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்” 

அரசியல் ரீதியாக இந்திய இலங்கை சமாதான உடன்படிக்கை பாரதியின் இந்தப் பாடலுக்கு பொருந்திப்போகிறது. அதன் நிறைவேற்றம் தொடர்பான 13 வது சரத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை 46/1 ஐ.நா. அறிக்கையில் இந்தியாவின் அழுத்தத்தில் உள்வாங்கப்பட்டிருக்கிறது. இது இதுவரை  இந்தியாமட்டும் இலங்கையை வலியுறுத்தி வந்த நிலையை மாற்றி சர்வதேச அழுத்தத்தை இலங்கை நோக்கி திருப்பி இருக்கிறது. 

இந்த இடத்தில் இந்தியாவுக்கும் புலிகளுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாட்டையும், அதன் தொடர்ச்சியாக ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதையும் இதன்மூலம் பாரதியின் கனவுப்பாலம் தகர்க்கப்பட்டதையும் சாதாரணமாக கடந்து செல்ல முடியாது. 

 புலிகள் இயக்கம் சர்வதேச பயங்கரவாதப் பட்டியலில் இருப்பதையும் தொட்டுச் செல்வது பொருத்தமானது. இங்கு மனித உரிமையும், பயங்கரவாதமும் ஒன்றில் இருந்து ஒன்றைப் பிரித்துப்பார்க்க முடியாதவையாகின்றன. அதையே ஜெனிவாவும் பேசுகிறது. தமிழ் தரப்பும் சிங்கள அரசுக்கு மட்டும் எதிராக இவற்றை முதன்மைப்படுத்தியே நிற்கிறது. 

“I WANT TO SAY TO THE INDIAN PEOPLE AND  ESPECIALY TO THE GHANDHI FAMILY…….. I WANT TO APOLOGIZE FOR PRABHAKARAN’S  MISTAKE. PLEASE FORGIVE US, WE BEG YOU ……… SORRY FOR ALL THIS ” 

இது விடுதலைப்புலிகளின் சர்வதேச ஆயுதக்கொள்வனவு முகவர் கே.பி. பேட்டியொன்றில் கேட்டுக்கொண்ட மன்னிப்பு. இந்த விடயங்கள் அரசியலில் பேசப்படவேண்டியவை. மாறாக மறைத்து பேசத் தகாதவையாக, வெளிப்படைத்தன்மையற்று அரசியல் செய்வது வேண்டுமானால் அரசியல் வியாபாரத்திற்கு சரியாகலாம், ஆனால் மக்கள் நலன் சார்ந்த அரசியலுக்கு ஒவ்வாதது. 

கடந்த மனித உரிமைகள் அமர்வில் இங்கிலாந்து இலங்கையின் மனித உரிமை மீறல்களை கண்டித்து முன்னணியில் நின்று செயற்பட்டது. ஆனால் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க முடியாது என்று அண்மையில் அறிவித்துள்ளது. இதில் இருந்து தமிழ்த்தேசியம் கற்றுக் கொள்ளக்கூடிய பாடம் என்ன? விடுதலைப்புலிகள் வேறு! தமிழ் மக்கள் வேறு!  என்கிறது சர்வதேசம். தமிழ்மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும், அரசியல் தீர்வு காணப்படவேண்டும். அதற்கு அப்பால் புலிகள் ஒரு பயங்கரவாத இயக்கம் என்பதால் தடையை நீக்க சர்வதேசம் தயாராக இல்லை. விசாரணை என்று வந்தால் புலிகளும் அதற்கு விலக்கல்ல. 

இதை மறுக்கின்ற தமிழ்த்தேசிய அரசியல் முழுத் தமிழ் மக்களையும் புலிகளாக்குகின்றது. அதனூடாக சிங்கள அரசு கூறுகின்ற தமிழர்கள் பயங்கரவாதிகள் என்ற கருத்துக்கு ஒத்து ஊதுகின்றது. இந்த விடயங்கள் குறித்ததாகவே சுமந்திரனின் அணுகுமுறை நகர்கிறது.  

யார் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் பிராந்திய, சர்வதேச பூகோள அரசியல் பரிமாணங்கள் இவை. 

நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத்திறனுமின்றி ….! 

ஜெனிவா ஆவணச்சண்டை தொடர்பாக ஊடகச்சந்திப்புக்கள், அறிக்கைகள், நேர்காணல்கள் என மழைவிட்டும் தூவானம் விடாத நிலை. சுமந்திரன் ஊடகச்சந்திப்பில் சொன்னதையே சாணக்கியனும் நேர்காணலில்  திருப்பி அரைத்தார். அரசியல்  உள்ளடக்கப் பற்றாக்குறை. 

“புலிகளோடு மோதியவர்கள்தான் இப்போது இப்படிப் பேசுகிறார்கள்”. சாணக்கியன் சொல்லவருவது புலிகளுக்கு எதிராகச் செயற்பட்ட புளட்,ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப், அணியினர் இப்போது விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகப் பேசுகிறார்கள் என்பதே. இங்கு தமிழரசின் புனிதத்திற்கும், மற்றைய பங்காளிகளின் புனிதமற்ற கறைபடிந்த கரங்களையும் இணைத்து சுத்துகிறார் அவர். இவர்களின் மொழியறிவு பற்றிய கேள்வியும் அவரால் எழுப்பப்படுகிறது. 

சுமந்திரன் இதை படம் காட்டுகிறார்கள் என்று மட்டுமல்ல, அவர்கள் தேர்தலில் தப்பித்தவறி வென்று விட்டார்கள் என்ற கருத்திலும் பேசி இருந்தார். அதைவேளை இவர்கள் இருவரும் கூட்டமைப்பு ஒற்றுமையாக இருப்பதை நிரூபிக்க பாராளுமன்றத்தில் ஒன்றாக சாப்பிட்டதையும், ஒருவர் நேரத்தை மற்றவர் பயன்படுத்தியதையும் சொல்லி சமாளிக்கிறார்கள். மூத்த கட்சியின் சிறுபிள்ளைத் தனமான அரசியல். 

ஒரு அரசியல் கூட்டில் பரஸ்பர நம்பிக்கை, விட்டுக்கொடுப்பு, புரிந்துணர்வு, கூட்டாளிகள் சமமாக மதிக்கப்படல், மறுதரப்புக் கருத்தை மதித்தல், உட்கட்சி ஜனநாயகம், புறக்கணியாமை, ஆதிக்கமற்ற அரசியல், ஒருதரப்பு மறுதரப்பை மலினப்படுத்தாமை, ஏளனப்படுத்தாமை, வஞ்சிக்காமை போன்ற அம்சங்கள் முக்கியமானவை. இந்த பண்புகள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் எப்போதும் இருந்ததில்லை. அதன் விளைவே ஜெனிவா வெடிப்பு. 

ரெலோவும், ஜனாவும் பொறுமையிழந்து கொதிநிலையில் இரண்டில் ஒன்று காண புறப்பட்டுள்ளனர்.. இதன் ஒரு வெளிப்பாடே சுமந்திரன் வெட்கப்பட்டது தொடர்பான பிரசன்னாவின் காலம் கடந்த  பாய்ச்சல். 

மறுபக்கத்தில் ரெலொ, புளட், தமிழரசு அதிருப்தியாளர் பிரிவு ஆவணத்தில் சிறிதரன், சார்ள்ஸ், கலையரசன், செல்வம், சித்தார்த்தன், ஜனா, வினோ உள்ளிட்ட மட்டக்களப்பு மாநகரமேயர் சரவணபவான், மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் நடராஜா, முன்னாள் எம்.பி.க்கள் அரியநேந்திரன், யோகேஸ்வரன், சிறிநேசன் ஆகியோரும் ஒப்பமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. 

இதில் வேடிக்கை என்னவெனில் மட்டக்களப்பு அரசியல் வாதிகள் தாங்கள் கையொப்பம் வைக்கவில்லை என்று சொல்கிறார்களாம் என்று சுமந்திரனும், சாணக்கியனும்தான் கூறுகிறார்களேயன்றி சம்பந்தப்பட்டவர்கள் எதுவும் பேசவில்லை. மறுபக்கத்தில் இவர்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் என்று மட்டம் தட்டுகிறார் சாணக்கியன். இந்த வாதமுரண்பாடு சுமந்திரன், சாணக்கியன் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. எடுத்ததெற்கெல்லாம் தேர்தல் தோல்விக்கு பின்னரும் ஊடகங்களை அழைத்த இவர்கள் இப்போது மட்டும் மௌனிப்பது ஏன்? மேல் இடத்து உத்தரவா? அல்லது மௌனமே சம்மதமா?   

எப்பவோ, என்னத்திற்கோ இவர்கள் வழங்கிய கையொப்பத்தை திருடியதாகவும் சுமந்திரனும், சாணக்கியனும்தான் சொல்கிறார்கள். கையெழுத்துக்காரர்களே! அதை பகிரங்கமாக மறுப்பதற்கு ஏன் இந்த தயக்கம்? கையெழுத்து உங்கள் தலையெழுத்தாகப்போகிறது என்ற பயமா? 

“நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமு மின்றி , 

  வஞ்சனை சொல்வா ரடி!  –கிளியே-! 

  வாய்ச் சொல்லில் வீரரடி ! 

  கூட்டத்தில் கூடிநின்று கூடிப் பிதற்றலன்றி; 

  நாட்டத்திற் கொள்ளா ரடீ! –கிளியே! 

  நாளில் மறப்பா ரடீ!