களம் (குறும்படம்)
களம் என்பது போரை நடத்துவதற்கான இடம் மாத்திரம் அல்ல. பல ஆரம்பங்களுக்குமான இடமும் அதுதான். குறுப்படங்கள் சிறு பொறியை உருவாக்கும் நோக்கத்திலானவை. சில நல்ல கருத்துக்களை, தேவையான மாற்றத்தை, பிரச்சாரத்தை சுருக்கென்று சொல்ல விளைபவை.
இங்கு இந்தக் குறும்படம் ஒரு ஆரம்பத்தை முயற்சித்திருக்கிறது. அரசாங்க நிறுவனம் ஒன்றினால், மக்களுக்கு வழங்கப்படக் கூடிய சேவையை பிரச்சாரப்படுத்தும் நோக்கிலானது இது.
அது ஒரு நல்ல ஆரம்பந்தான். படித்தும் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்கள், என்ன படிப்பது என்று தெரியாமல் தடுமாறும் இளைஞர்கள் மற்றும் எந்தப் பயிற்சி தமது தொழில் வாய்ப்புக்கு உதவும் என்று அறியாமல் தவிக்கும் இளைஞர்களுக்கு வழிகாட்டி போல இது உருவாக்கப்பட்டுள்ளது.
பொதுவாகவே இங்கு கூறப்படுவதுபோல அரசாங்க நிறுவனங்கள் முழுமையான வழிகாட்டியாக செயற்படுகின்றனவா என்ற விமர்சனம் ஒருபுறம் இருந்தாலும் அப்படியான சேவையை அணுகச் செய்வதற்கான, அவை குறித்த விழிப்புணர்வை தூண்டுவதற்கான இப்படியான படங்கள் வரவேற்கப்படக் கூடியனவே.
அத்துடன் அரசோ அல்லது யாரோ நமக்கு வீட்டு வாசலில் வந்து வேலை தருவார்கள் அல்லது வெளிநாட்டுக்கு போனால் வேலை எடுத்துவிடலாம் என்பது போன காலாவதியான சிந்தனைகளை இது மாற்ற உதவலாம். அந்த வகையில் இது சிறப்பானதே.
கதைக்களம் கொக்கட்டிச்சோலை (மகிழடித்தீவு?). கடந்த கால போரினால் பல அடிகளை, அனுபவங்களை சந்தித்த மண். அந்த அடிகளை வாங்கிய சில குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் இந்த குறும்படத்தில் பங்கேற்றிருப்பது நம்பிக்கையை தருகின்றது.
மட்டக்களப்பு மண்வாசம் மாறாமல் கதாபாத்திரங்கள் தேவைக்கேற்ப உரையாடுவது இன்னுமொரு சிறப்பு.
இன்னுமொரு முக்கியவிடயம், குறும்படத்தில் ஒரு தெரு நாடகத்தின் மூலம் அறிவூட்டும் முயற்சி.
இங்கு படத்தயாரிப்புக்கான தொழில்நுட்பம், ஒளியமைப்பு போன்ற பல விடயங்கள் குறித்து நான் பேசவில்லை. ஆனால், இதனை அனைவரும் பார்த்து ஊக்கப்படுத்துவது, அனைத்து தொழில்நுட்பத்திலும் நமது இளைஞர்கள் முன்செல்ல உதவும். தயாரிப்புக் குழுவினருக்கு அரங்கத்தின் பாராட்டுகள்.
அன்புடன்
பூ. சீவகன்