சொல்லத் துணிந்தேன்-90

சொல்லத் துணிந்தேன்-90

  — தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் — 

‘சொல்லத் துணிந்தேன் 86 மற்றும் 87 பத்திகளைப் படித்துவிட்டு சசீந்திரன் எனும் அன்பர் ஒருவர்  ‘த.கோபாலகிருஷ்ணன் மற்றும் சீவகன் ஊடகவியலாளரிடம் எனது கேள்வி’ என மகுடமிட்டுச் சில கேள்விகளை BATTICALOA என்னும் பெயரிலுள்ள ‘வட்ஸ்அப்’ குரூப்பில் பதிவிட்டுள்ளார். அவரது கேள்விகளும் அதற்குரிய எனது பதில்களும் வருமாறு: 

கேள்விபுலிகளின் முகவர்களாக காட்டப்பட்ட கட்சிகள் என்ற வரிசையில் தமிழரசுக் கட்சியைத் தாங்கள் நிறுவ முடியுமா? 

பதில்: ஆம். 2001இல் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளாக அப்போது வீ.ஆனந்தசங்கரி அவர்களைத் தலைவராகவும் இரா.சம்பந்தன் அவர்களைச் செயலாளர் நாயகமாகவும் கொண்ட அப்போதைய தமிழர் விடுதலைக் கூட்டணி (T.U.L.F.), அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் (ACTC), ஈபிஆர்எல்எஃப்- EPRLF (சுரேஷ் பிரேமச்சந்திரன்), ரெலோ- TELO ஆகிய நான்கு கட்சிகளே இணைத்துக்கொள்ளப்பட்டன. இதனைத் தொடர்ந்து 21.10.2001 திகதியிட்ட ஊடக அறிக்கையொன்றினை இந்நான்கு கட்சிகளும் கூட்டாக வெளியிட்டிருந்தன. ஊடக அறிக்கையில் உள்ள சில வரிகள் வருமாறு: 

தேர்தலின் பின்பும் எங்கள் கூட்டமைப்பு தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணத் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி அந்த அடிப்படையில்தான் இந்த கூட்டமைப்பு இயங்கும்” 

05.12.2001இல் நடைபெற்ற பாராளுமன்றப் பொதுத் தேர்தலுக்கு முன்னர் விடுக்கப்பட்ட அறிக்கை இது. இக்கூட்டு அறிக்கையில் அப்போதைய தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் அதன் செயலாளர் நாயகமான இரா.சம்பந்தன் அவர்களே கையெழுத்திட்டிருந்தார். 

பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகளாக ஏற்றுக் கொள்ளவேண்டுமென்ற விடயம் மேலெழுந்த போது அது ஜனநாயகக் கோட்பாட்டிற்கு முரணானது என ஆனந்தசங்கரி எதிர்த்த காரணத்தால் அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து புலிகளால் ஓரங்கட்டப்பட்டு, அதன் விளைவாகத் தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலிருந்து நீக்கப்பட்டு அவ்விடத்திற்குத் தமிழரசுக்கட்சி இட்டு நிரப்பப்பட்டது. 

தொடர்ந்து 2004ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலையொட்டித் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (தமிழரசுக் கட்சியின் வீட்டு சின்னத்தில் போட்டியிட்டது) வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் (பக்கம் 10,11) பின்வருமாறு கூறப்பட்டுள்ளது. 

“………தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையை தமிழ் மக்களின் தேசியத் தலைமையாகவும், விடுதலைப்புலிகளைத் தமிழ் மக்களின் உண்மையான ஏகப் பிரதிநிதிகளாகவும் ஏற்றுத் தமிழ்த்தேசிய இனத்தின் சார்பிலான விடுதலைப்புலிகளின் போராட்ட இலட்சியத்திற்கு நேர்மையாகவும் உறுதியாகவும் முழு ஒத்துழைப்பை நல்குவோம்.. 

தமிழீழ மக்களது சுதந்திரமான கௌரவமான நீதியான வாழ்விற்காகத் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையின் கீழ்த் தமிழ் மக்களைச் சாதி மத பேதங்களுக்கு அப்பால் ஒரே அணியில் ஒரே தேசமாக அணிதிரட்டி உறுதியாக உழைப்போம். 

தமிழ் பேசும் மக்களது பாதுகாப்பிற்காகவும் சுதந்திரமான வாழ்விற்காகவும் போராடிவரும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அதன் தலைமைத்துவத்தின் அரசியல் போராட்ட முன்னெடுப்புக்களுக்கும் உறுதுணையாக இருந்து செயற்படுவோம்” 

இலங்கைத் தமிழரசுக் கட்சி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ), ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈபிஆர்எல்எஃப்) ஆகிய கட்சிகள் கூட்டாக வெளியிட்ட இத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழரசுக் கட்சியின் சார்பாக அப்போதைய அதன் பொதுச்செயலாளர் மாவை சேனாதிராசா பெயர் பதிவாகியுள்ளது. 

கேள்வி: …….. புலிகளின் பெயரைக்கொண்ட ரி.எம்.வி.பி கட்சியை சிங்கள தேசமும் இந்தியாவும் சர்வதேசமும் ஏற்குமா? இதைப் பற்றியும் சற்று என்பதைவிட விபரமாக ஆராயலாமே? முடியுமா? 

பதில்: எனது மேற்குறிப்பிட்ட பத்திகளில் (சொல்லத் துணிந்தேன் 86,87) தற்போது தமிழர்களுடைய அரசியல் பொது வெளியில் தமிழ்த் தேசியக் கட்சிகள் (?) எனக் குறி சுட்டுக்கொண்டு அரசியல் செய்யும் இக்கட்சிகள் அனைத்துமே தற்போது தங்களைப் புலிகளின் முகவர்களாக அல்லது பதிலிகளாகவே அடையாளம் காட்டியுள்ளதால், இவர்களைச் சிங்கள சமூகமோ- இலங்கை அரசாங்கமோ (அது எந்தக் கட்சி அரசாங்கமாக இருந்தாலும் சரி)–இந்தியாவோ- சர்வதேச சமூகமோ உளமார ஏற்றுக் கொள்ளவில்லை. இதுசரியா? பிழையா? என்பதற்கப்பால் இதுவே யதார்த்தம் எனக் குறிப்பிட்டுள்ளேனே தவிர TMVP கட்சியைப் பெயர் குறிப்பிட்டுப் பிரஸ்தாபிக்கவேயில்லை. 

‘காமாலைக் கண்ணனுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள்’ என்னும் பழமொழியும் உண்டு. தமிழ்த் தேசியக் கட்சிகளின் (?) தவறுகளைச் சுட்டிக்காட்டும்- தமிழ்த் தேசிய அரசியல் பற்றிய சுய விமர்சனங்களை முன்வைக்கும்- மக்கள் நலன் சார்ந்து மாற்று அரசியல் சிந்தனைகளை வெளிப்படுத்தும்- கிழக்கு மாகாணத்திற்கான தனித்துவமான ‘அரசியல் வியூகம்’களுக்கு ஆதரவைத் தரும் ஆட்களை எடுத்த எடுப்பிலேயே பிள்ளையானோடு முடிச்சுப்போட்டு அவர்களைப் பிள்ளையானின் ஆட்களாகப் பிழையாகக் கற்பிதம் செய்து கொள்ளும் பிற்போக்கு அரசியல் கலாச்சாரமொன்றையே சிலர் பின்பற்றி வருகின்றனர். இது தவறான புரிதல் ஆகும். சசீந்திரனையும்  இத்தவறான புரிதல் பற்றிக்கொண்டுவிட்டது போலும். 

மேலும் TMVP கட்சியைச் சிங்கள தேசமும் இந்தியாவும் சர்வதேசமும் ஏற்குமா? என்பதற்கான விளக்கத்தைச் சொல்லத் துணிந்தேன் 88ஆம், 89ஆம் பத்திகளைப் படித்துப் பெற்றுக்கொள்ளுமாறு சசீந்திரனை அன்பாக கேட்டுக்கொள்கிறேன். 

கேள்வி: …… இவர்களை நிராகரித்துவிட்டு அவர்களை மற்றவர்களை ஆதரியுங்கள் என்று சொல்வதற்கு உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது. தீர்ப்புச் சொல்ல நீங்கள் என்ன நீதிபதிகளா? 

பதில்: கேள்விகளை எழுப்ப சசீந்திரனுக்கு என்ன அருகதை இருக்கிறதோ அதற்குச் சமமான அல்லது அதற்குச் சற்றும் குறைவுபடாத அருகதை இப்பத்தி எழுத்தாளருக்கும் ‘அரங்கம்’ மின்னிதழ் ஆசிரியர் சீவனுக்கும் இருக்கிறது. இதில் எவரும் நீதிபதிகள் அல்ல. தீர்ப்பு என்றும் எதுவும் இல்லை. கருத்துச் சுதந்திரம். கருத்துக்கள் பொதுவெளியில் முன்வைக்கப்பட்டுள்ளன. அவ்வளவுதான். கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்வதுதான் நாகரீகமானது. 

கேள்வி: திவிநெகும சட்ட மூலத்தின் மூலமாக மாகாண சபையின் அதிகாரங்களைத் தாரைவார்த்த கட்சிதான் TMVP. அது தெரியுமா உங்களுக்கு?  

அது எவ்வாறு தடுக்கப்பட்டு என்ன அளவில் இருந்தது. இருக்கிறது. இதில் த.தே.கூ. பங்களிப்பு எந்த அளவில் என்பதை அறிவீர்களா நீங்கள்? 

இன்னும் மாகாண பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக மத்திக்கு தாரைவார்ப்பதை செய்துகொண்டிருப்பதை என்ன சொல்கிறீர்கள்? 

அதற்குள் பதின்மூன்றாவது சரத்தைப் பற்றிப் பேசுகிறீர்கள். இந்த பத்தி எழுதப்படும்போது நடப்பு பற்றி அறிந்து தெரிந்த தெளிவு உங்களுக்கு ஏற்படவில்லையா? 

பதில்: திவிநெகும சட்டமூலத்திற்குக் கிழக்கு மாகாணசபை ஒப்புதல் அளித்த விடயத்தில் இப்பத்தி எழுத்தாளரோ அல்லது இப்பத்தி எழுத்துக்களோ எச்சந்தர்ப்பத்திலும் உடன்பட்டதில்லை. 

மாகாணப் பாடசாலைகளைத் தேசிய பாடசாலைகளாக மத்திக்குத் தாரைவார்க்கும் விடயத்திலும் இப்பத்தி எழுத்தாளரோ அல்லது இப்பத்தி எழுத்துக்களோ எச்சந்தர்ப்பத்திலும் உடன்பட்டதில்லை. கடந்த காலங்களில் தங்கள் மாவட்டங்களில் உள்ள சில பாடசாலைகளைத் தேசிய பாடசாலைகளாக ஆக்கும்படி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட உள்ளனர். (சொல்லத் துணிந்தேன்-76 ஐப் படிக்கவும்) 

மாகாணசபை அதிகாரங்கள் மத்திக்குத் தாரை வார்க்கப்படுவதைத் தடுக்கவும்தானே பதின்மூன்றாவது அரசியல் சட்டத் திருத்தத்தை முழுமையாக அமுல் செய்வதற்கான அரசியல் கள வேலைகளைத் தமிழர் தரப்பு காத்திரமாக முன்னெடுக்க வேண்டுமென இப்பத்தித் தொடர் எப்போதுமே வலியுறுத்தி வருகிறது. பதின்மூன்றாவது அரசியல் சட்டத்தைப் பற்றிப் பேசக்கூடாதென்று சசீந்திரன் விரும்புகிறாரா?  

‘கற்றது கைமண்ணளவு. கல்லாதது உலகளவு’. இதற்கு இப்பத்தி எழுத்தாளரும் விதிவிலக்கல்ல. 

எனவே திவிநெகும சட்ட மூலம் எவ்வாறு தடுக்கப்பட்டு என்ன அளவில் இருந்தது. இருக்கிறது. இதில் த.தே.கூ. பங்களிப்பு எந்த அளவில் என்பதையும், இந்தப் பத்தி எழுதப்படும்போது நாட்டு நடப்பு பற்றித் தான் அறிந்து தெரிந்த தெளிவான விடயங்களையும் அன்பர் சசீந்திரன் ‘அரங்கம்’ மூலமே அறியத் தந்தால் நன்றாக இருக்கும். 

கேள்வி: (I) இன்று சர்வதேசமும் இந்தியாவும் யாரை அழைத்துப்பேசுகிறது. உள்நாட்டில் என்னளவில் பேச்சுக்கான நகர்வு இருக்கிறது தெரியுமா? உங்களுக்கு. 

(ii) அரசியல் கைதிகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கைது செய்யப்பட்டோர் விடுதலைக்கான நகர்வு அண்மைய நாட்களில் அரசின் நகர்வு எவ்வாறு இருக்கிறது. இது எதனால் எதற்காக? அறியமுடிகிறதா? உங்களால். 

பதில்(I) தெரியாது. உங்களுக்குத் தெரிந்ததை ‘அரங்கம்’ மூலம் தெரியப்படுத்துங்கள். 

(ii) 1979ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் 13ஆம் பிரிவின் கீழ் ஜனாதிபதி அவர்கள் ஆலோசனைச் சபையை அண்மையில் நியமித்துள்ளார். இதுதான் இது விடயமாக நானறிந்த கடைசிச் செய்தி (இப்பத்தி எழுதப்படும் வரைக்கும்).   

இந்தச் சபை பயங்கரவாத நடவடிக்கைகள் சம்பந்தமாகச் சிறைத்தண்டனை அனுபவித்து வருபவர்கள், தடுப்புக்காவல் மற்றும் விளக்கமறியலில் உள்ளவர்கள் தொடர்பில் ஆராய்ந்து இவர்களுக்கான விடுதலைப் பொறிமுறையைக் கண்டறிந்து ஜனாதிபதிக்குப் பரிந்துரை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

வழமைபோல், ‘தத்துவான் கிணறு வெட்ட அணிற் பிள்ளை பெயரெடுத்தது போல்’ இதுவும் தங்களால்தான் வந்ததென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தம்பட்டம் அடித்துக் குழப்பாமல் இருந்தால் சரி. 

நீண்ட பல வருடங்களாக நியமிக்கப்படாமலிருந்த இந்த ஆலோசனைச் சபையை நியமிக்குமாறு நீண்ட பல வருடங்களாகவே தமிழர் தரப்பிலிருந்து அழுத்தங்கள் கொடுக்கப்படவில்லையே என ஆதங்கப்பட்டேன். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை சம்பந்தமாக இவ் ஆலோசனைச் சபையைப் பயன்படுத்தி இருக்கலாமென்ற ஆதங்கமே அது. இது தவிர சசீந்திரன் அறிந்ததை ‘அரங்கம்’ மூலம் அறியத் தந்தால் நல்லது. 

கேள்வி: மாதவந்தனை போனது. மயிலந்தனை போனது. மட்டக்களப்புக்கு அம்பாறையில் இருந்து 34 கிராமங்கள் வந்து சேரப்போகிறது. சோரம் போன கூட்டம். இது பற்றிக் கிஞ்சித்தும் பார்க்கவில்லை. அவர்களுக்கு இன்னும் மக்கள் பலமளிக்கணுமா? 

பதில்: மாதவந்தனை போனது. மயிலந்தனை போனது. இவற்றைத் தடுக்கக் கடந்த எழுபது வருடங்களுக்கும் மேலாக இருந்து வரும் தமிழ்த்தேசிய(?) அரசியலால் முடியவில்லையே? அதனால்தானே மாற்று அரசியல் பற்றிப் பேசப்படுகிறது. 

மட்டக்களப்புக்கு அம்பாறையில் இருந்து 34 கிராமங்கள் வந்து சேரப்போகிறது என்று குறிப்பிட்டுள்ள விடயத்தில் தெளிவு இல்லை. விவரமாகக் கூறினால் நல்லது. 

‘சோரம் போன கூட்டம்’ என்று எந்த கூட்டத்தைச் சசீந்திரன் குறிப்பிடுகிறாரென்று தெரியவில்லை. அதனையும் விவரமாகச் சொன்னால் நல்லது. 

எதனையும் பூடகமாகச் சொல்லாமல் விவரமாய்ச் சொன்னால்தானே பதிலளிக்க முடியும். எடுகோளின் அடிப்படையில் பதிலளிப்பது அறிவுபூர்வமாகாது. 

குறிப்பு: ‘இன்னும் இருக்கு எனது கேள்விகள். நேரம் கிடைக்க தொடுகிறேன்’ எனச் சசீந்திரனின் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. தயவுசெய்து அக்கேள்விகளைப் பகிரங்கமாகவும் தெளிவாகவும் ‘அரங்கம்’ மின்னிதழில் முன்வைக்குமாறு சசீந்திரனைக் கேட்டுக்கொள்கிறேன்.