— சிக்மலிங்கம் றெஜினோல்ட்—
கொவிட் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள பொது முடக்கத்தை ஒரு போர்க்கால நெருக்கடியாக மாற்றியுள்ளது வணிகச் சூழல். குறிப்பாக உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை விற்கும் வர்த்தகச்சூழல்.
நெருக்கடி உணர்வைச் சமூக மட்டத்தில் உண்டாக்கினால் பொருட்தட்டுப்பாட்டுப் பதற்றம் மக்களிடத்திலே தானாகவே உருவாகும். அப்பொழுது பொருட்தட்டுப்பாட்டைப் பற்றியும் அவற்றின் விலையேற்றத்தைப் பற்றியும் கேள்விகளை எழுப்பவோ விசாரணையைச் செய்யவோ முடியாது. அதற்குரிய நிர்வாக நடவடிக்கைகள் இல்லாத நிலை இதற்கு வாய்ப்பளிக்கிறது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திப் பிழைத்துக் கொள்கிறார்கள் வர்த்தகர்கள்.
இதனால் எல்லாப் பொருட்களும் நிர்ணய விலையை மீறியே விற்கப்படுகின்றன.
சீனி, பருப்பு தொடக்கம் மீன் வரையில் உச்சவிலையில் விற்கப்படுகின்றன. ஒரு கிலோ சீனியின் விலை முன்பு 130 ரூபாயாக இருந்தது. இப்பொழுது 250 ரூபாயாகியுள்ளது. இந்த விலை உயர்வுக்கான காரணம் என்ன? எங்கோ சீனியைப் பதுக்கியிருக்கிறார்கள் என்று அதைக் கண்டு பிடித்த பிறகு நியாய விலையில் 125க்கு மறுபடியும் சீனி கிடைக்கும் என்றார்கள். ஆனால் சீனியைக் காணவேயில்லை. முன்பென்றாலும் 250க்காவது வாங்க முடிந்தது.
இதைப்போலவே மின் உபகரணங்கள், சீமெந்து, மரப் பொருட்கள் உள்ளிட்ட கட்டிடப் பொருட்களும் விலை கூட்டியே விற்கப்படுகின்றன. ஆனால் அரசாங்கத் தரப்பிலிருந்து இந்த விலையேற்றங்களைக் குறித்து எந்த விதமான அறிவிப்புகளும் விடுக்கப்படவில்லை.
அப்படியென்றால் இதைப்பற்றி யாரிடம் கேட்பது? யாரிடம் முறையிடுவது?
நுகர்வோர் பாதுகாப்புச் சபை, விலைக்கட்டுப்பாட்டுச் சபை எல்லாமே செயலற்றுக் கிடக்கின்றன. மாவட்டச் செயலர்கள்தான் இந்த நிலையைக் குறித்து ஓரளவுக்குக் கவனம் செலுத்தி வந்தனர்.
இதற்கு மாவட்டச் செயலங்களும் பொது முடக்கத்திற்கு உள்ளாகியிருப்பதால் அவற்றினாலும் உரியமுறையில் செயற்பட முடிவதில்லை.
அப்படியென்றால் இந்தப் பிரச்சினையைப் பேசக் கூடியவை ஊடகங்களே.
ஆனால் அவற்றுக்கு இதில் பெரிய கவனமெல்லாம் இருப்பதாகத் தெரியவில்லை. எங்களுடைய பெரும்பாலான ஊடகங்களின் கவனம் எப்போதும் இந்த மாதிரி மக்களுடைய பிரச்சினைகளில் குவிவது குறைவு. அதுவும் இந்தப் பொருள் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றத்தினால் அதிகமாகப் பாதிக்கப்படுவது அடித்தட்டு மக்களாகிய நாளாந்த உழைப்பாளிகளே.
அவர்களைப் பற்றி யாருக்குத்தான் கவலை?
ஊடகங்களுக்கு அப்பால் இந்தப் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டியவர்கள் மக்கள் பிரதிநிதிகள் என்ற பாராளுமன்ற உறுப்பினர்கள். சமூக மட்டத்தில் இந்த நெருக்கடிச் சூழல் பலவிதமான பிரச்சினைகளை உருவாக்கியுள்ளதைப் புரிந்து கொண்டு இவர்கள் செயற்பட வேண்டும்.
பொருட்தட்டுப்பாடு, பொருட்களின் விலையேற்றம் மட்டுமல்ல, சமூக மட்டத்தில் நிலவுகின்ற சட்டவிரோத மணல் அகழ்வு, மது உற்பத்தி (கசிப்பு உற்பத்தி – விற்பனை) போன்றவற்றையும் இவர்கள் கவனிப்பது அவசியம்.
ஏனென்றால் இந்தப் பொது முடக்கத்தைப் பயன்படுத்தி பல தீய சக்திகள் இந்த மாதிரி சமூக விரோத, சட்ட விரோத, சுற்றுச் சூழலுக்குப் பாதகமான செயல்களைச் செய்கின்றன. இதைக் கட்டுப்படுத்தக் கூடிய சட்டத்துறையை முடுக்கி விடக் கூடிய அதிகாரம் இவர்களுக்கே உண்டு. இதற்கான பொறுப்பும் இவர்களுக்குத்தான் கூடுதலாக உண்டு.
ஆனால் இதையெல்லாம் செய்வதற்கு ஆட்கள் இங்கே நின்றால்தானே!
விக்கினேஸ்வரன் தொடக்கம் சுமந்திரன் வரையில் யாரையுமே காணவில்லை.
உண்மையில் இந்தச் சந்தர்ப்பத்தில்தான் இவர்கள் களப்பணியாற்ற வேண்டும்.
ஒரு சமூகத்துக்கு எப்பொழுது அதிகமான நெருக்கடி ஏற்படுகிறதோ அப்பொழுதுதான் தலைவர்களும் மக்கள் பிரதிநிதிகளும் மக்களுடன் நெருக்கமாக நிற்க வேண்டும். களப்பணிகளைச் செய்ய வேண்டும்.
இதற்கு “பொது முடக்கம் நிலவும்போது எப்படி நாம் வெளியே வருவது? என்று யாரும் பாதுகாப்பானதொரு கேள்வியைக் கேட்டு அதற்குப் பின்னால் பதுங்கக் கூடும்.
ஆனால் கொவிட்டுக்கான தடுப்பு ஊசியை இந்த மக்கள் பிரதிநிதிகளுக்கும் மருத்துவத் துறையினருக்குமே முதலில் அரசாங்கம் ஏற்றியது.
இது ஏனென்றால் இவர்கள் எப்போதும் பொதுமக்களுடன் தொடர்பு கொண்டு வேலை செய்ய வேண்டியவர்கள் என்பதால்.
இவர்களோ அந்த வாய்ப்பை ஒரு சிறப்புச் சலுகையாகப் பெற்றுக் கொண்டு “சேவ்ரிப் பிளேஸில்” வலு குசாலாக இருக்கின்றனர். வாக்களித்த மக்களோ தெருவில் நிற்கிறார்கள். இது எவ்வளவு அநீதி?
இதேவேளை கொவிட் நெருக்கடிக்கு ஓரளவுக்கு மக்களுக்கான உதவிப் பணிகளைச் செய்தது தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரும் சமத்துவக் கட்சியினருமே. இதிற்குறிப்பாக கஜேந்திரனையும் கஜேந்திரகுமாரையும் அவர்களுடைய ஏனைய உறுப்பினர்களையும் பாராட்ட வேண்டும்.
ஆனால் அவர்கள் அந்தப் பணிகளோடு நின்று விடாமல் இந்த நெருக்கடி நிலையில் நடக்கின்ற ஒழுங்கீனங்களையும் வழமை மீறல்களையும் கவனிக்க வேண்டும். அப்படிக் கவனித்தால் வரலாறு இவர்களைக் கவனிக்கும்.
இதேவேளை இன்று ஏற்பட்டிருக்கும் இந்த நெருக்கடியானது யுத்த கால நெருக்கடியைப் போன்றதல்ல. அதிலே யுத்தப் பிராந்தியத்திற்கு அப்பால் ஒரு பாதுகாப்பு நிலவியது. இதில் அதெல்லாம் கிடையாது.
ஆனால் யுத்தத்தில் எப்படி இந்த வணிகச் சமூகத்தைச் சேர்ந்த சிலர் (உண்மையில் சிலர் அல்ல, இதில் பலருண்டு) மனச்சாட்சிக்கு விரோதமாக உழைத்தார்களோ அதே ருசியோடுதான் இப்பொழுதும் செயற்படுகிறார்கள்.
இவர்களுக்குக் காசுதான் கண்ணில்படுகிறது. காசுதான் மனதில் நிரம்பிக் கிடக்கிறதே தவிர, அறமும் நீதியும் மனிதாபிமானமும் பொறுப்புணர்வும் இல்லை. இந்த முடக்க நிலையும் நாட்டின் பொருளாதார நெருக்கடியும் மேலும் சிக்கலாக நீடிக்குமானால் இவர்களுடைய இந்த அறப் பிறழ்வு நிச்சயமாக எல்லை மீறிச் செல்லும்.
அடிபட்டு வீழ்ந்தவனில் பிடுங்கக் கூடியதைப் பிடுங்கிக் கொள்வோம் என்பதே இவர்களுடைய நோக்கம். இதற்கு யாரும் இடமளிக்கக் கூடாது. உலகம் முழுவதிலும் ஏற்பட்டுள்ள பொது நெருக்கடி இதுவாகும். இதில் இலங்கை சற்று அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஒன்று தொற்றின் வேக அதிகரிப்பினால். இரண்டாவது வளர்முக நாடொன்று எதிர்கொள்ள நேரிடுகின்ற பொருளாதார நெருக்கடியினால்.
எனவே இந்த நிலைமையைப் புரிந்து கொண்டு இந்த அனர்த்த காலத்தில் மனிதாபிமானமாக நடந்து கொள்ள வேண்டியது ஒவ்வொரினதும் கடமையாகும். அதுவே உயரிய செயல்.
இதேவேளை இங்கே இன்னொரு முக்கியமான விசயத்தைப் பற்றியும் குறிப்பிட வேண்டும். இந்த இடர் நெருக்கடியைப் புரிந்து கொண்டு பலர் –குறிப்பாக புலம்பெயர் உறவுகள் –மனிதாபிமான அடிப்படையில் பல்வேறு உதவிகளைச் செய்து கொண்டிருக்கின்றனர். இங்கும் றோட்டறிக் கிளம், லயன்ஸ் கிளப் தொடக்கம் பராசக்தி அறக்கட்டளை மற்றும் ஒவ்வொரு இடங்களிலும் உள்ள பொது அமைப்புகள், ஊர் மன்றங்கள் எல்லாம் மனிதாபிமான உதவிகளில் ஈடுபடுகின்றன.
இப்படியிருக்கும்போது இன்னொரு தரப்பு மட்டும் தவிச்ச முயல் அடிக்க முயற்சிப்பது எவ்வளவு தவறானது? இது கொள்ளைக்கு நிகர். எனவே நாம் எந்த நிலையிலும் இதற்கு இடமளிக்க முடியாது.