1977 தேர்தலில் கூட்டணி செய்த குழப்பங்கள்:   (சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! (28))

1977 தேர்தலில் கூட்டணி செய்த குழப்பங்கள்: (சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! (28))

— பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா —  

இது என் கதையல்ல 

என்னைத் தாங்கிய என் மண்ணின் கதை 

அந்தக்காலத்தில், எங்கு சென்றாலும் இராசதுரை அவர்களுக்கே அதிகமாகக் கூட்டம் கூடியது. அரசியல் மட்டுமன்றி, தமிழ் மொழி, தமிழ் இலக்கியம், பகுத்தறிவு மற்றும் பகுத்தறிவு சார்ந்த ஆன்மீகம் என்பவற்றைப் பற்றியும் மிகவும் சுவையாகப் பேசுவதில் வல்லவராக சொல்லின் செல்வர் செ.இராசதுரை அவர்கள் விளங்கினார்கள். அதனால் வடக்குக் கிழக்கில் மட்டுமன்றித் தமிழ்மக்கள் செறிந்து வாழும் ஏனைய பகுதிகளிலும் அவரது பேச்சைக் கேட்க மக்கள் ஆவலுடன் கூடினர். அரசியல் கூட்டங்களில் மட்டுமன்றி ஏனைய கூட்டங்கள், விழாக்களிலும் கடைசிப் பேச்சாளராக அவரையே வைத்திருந்தார்கள். அவரது பேச்சைக் கேட்பதற்காக நிகழ்ச்சி முடியும் வரை மக்கள் காத்திருந்தார்கள். 

1970களில், உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் இலங்கையில் வடக்கிலும் கிழக்கிலும், சென்ற இடமெல்லாம் செல்வாக்கு வளர்ந்துகொண்டிருந்தது.      

அவர் தமிழ்த்தேசியத்தின் பிரசாரப் பீரங்கியாக இருந்தார். வடக்குக் கிழக்கு மாகாணங்களில் அவர் கூட்டங்களுக்குச் செல்லும்போது இளைஞர்கள், தங்கள் கைகளைக் கீறி, அவருக்கு இரத்ததினால் பொட்டு வைத்தார்கள். அவரைக் காண்பதற்கும் அவரது பேச்சைக் கேட்பதற்கும் தமிழ் மக்கள், பெரும்பாலும் இளைஞர்கள் மிகுந்த ஆர்வக்கொண்டிருந்தார்கள். மேடைப் பேச்சுக்களில் அவர் தெரிவித்த கருத்துக்கள் காரணமாக, இரண்டு மூன்று தடவைகள் அவர் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். எல்லாமாக ஏறத்தாழ மொத்தம் ஐந்து வருடங்கள் வரை அவர் சிறைவாசம் அனுபவித்திருக்கிறார் என்று எனது நினைவு சொல்கிறது. 

இந்த இருவருக்கும் மக்களிடையே உள்ள மதிப்பைக் குறைப்பதற்கு அல்லது இல்லாமல் செய்வதற்கு ஒரே வழி ஒருவரைப் பாராளுமன்ற உறுப்பினராக்குவது, மற்றவரைக் கட்சியில் இருந்து வெளியேற்றுவது என்ற ரீதியிலேயே அவர்கள் இருவரையும் மோதவிடுவதற்கான வியூகங்கள் வகுக்கப்பட்டன என்று மக்களிடையே பரவலாகப் பேசப்பட்டது. 

இந்த இடத்தில், தமிழரசுக் கட்சியின் அரசியல் வழமை பற்றிச் சிறிது பின்னோக்கிப் பார்ப்பது பொருத்தமானது. 

1949ஆம் ஆண்டு தமிழரசுக் கட்சி ஆரம்பிக்கப்பட்டபோது அதனை ஆரம்பித்த தந்தை செல்வா (எஸ்.ஜே.வீ.செல்வநாயகம்) அவர்கள் அதன் முதலாவது தலைவராகச் செயற்பட்டார்கள். 1955ஆம் ஆண்டுவரை அவர் கட்சியின் தலைவராக இருந்தார். 1955ஆம் ஆண்டிலிருந்து 1958 வரை கோப்பாய்க் கோமான் என்று புகழப்பட்ட கு.வன்னியசிங்கம் அவர்கள் தலைவராக இருந்தார். பின்னர் 1958ஆம் ஆண்டிலிருந்து 1961ஆம் ஆண்டுவரை த.இராஜவிரோதயம் அவர்கள் தலைவராகப்  பொறுப்பேற்றார். பின்னர், 1961 இலிருந்து 1964 வரை சி.மூ.இராசமாணிக்கம் அவர்களும், 1964 இலிருந்து 1966 வரை மீண்டும் தந்தை செல்வா அவர்களும், 1966 இலிருந்து 1969 வரை இரும்பு மனிதர் எனப் புகழப்பட்ட இ.மு.வி.நாகநாதன் அவர்களும், அதன் பின்னர் 1969 இலிருந்து 1973 வரை மீண்டும் சி.மூ.இராசமாணிக்கம் அவர்களும் தலைவரானார்கள். 1973ஆம் ஆண்டில் தலைவராகப் பொறுப்பேற்ற அ.அமிர்தலிங்கம் அவர்கள் 1989ஆம் ஆண்டு அவர் மறையும்வரை பதவியில் நீடித்திருந்தார்.  

இரண்டு மூன்று வருடங்களுக்கொருமுறை கட்சியின் தேசிய மாநாடு நடத்தப்பட்டு வந்தது. தேசிய மாநாட்டைத் தொடர்ந்து கட்சியின் நடப்புக் காலத்திற்கான பதவிகளுக்கு, குறிப்பாகத் தமைமைப் பதவிக்குப் புதியவர்களைத் தெரிவுசெய்யும் வழமை இருந்தது. அ.அமிர்தலிங்கம் அவர்கள் தலைவராகியதன் பின்னர் அந்த வழமை நடைமுறைப்படுத்தப்படவில்லை. அ.அமிர்தலிங்கம் அவர்கள் கட்சித்தலைவாரான நாள்முதல் அந்தப் பதவி ஆயுட்காலப் பதவி என்பது போன்ற நிலைமை வழமையாகிவிட்டது. 

அமிர்தலிங்கம் அவர்களுக்குப் பின்னர் அடுத்த தலைவராக செ.இராசதுரை அவர்கள் தெரிவு செய்யப்படுவார்கள், தெரிவு செய்யப்படவேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் நம்பிக்கையாக மேலோங்கியிருந்தது. ஆனால், அது நடைபெறாமல் போய்க்கொண்டிருந்தது. இந்தச் சூழ்நிலையில்தான் கட்சியில் மிகவும் மூத்த உறுப்பினரும், 1956ஆம் ஆண்டிலிருந்து பாராளுமன்ற உறுப்பினராகத் தொடர்ந்திருந்தவருமான செ.இராசதுரை அவர்கள் கட்சியில் இருந்தால், அவர் தலைவராக வருவது தவிர்க்க முடியாததாகிவிடும் என்ற கவலை கட்சியின் உயர்மட்டத்திற்கு ஏற்பட்டிருக்க வேண்டும். 

அதனால்தான் திரு. செ.இராசதுரை அவர்களைப் பாராளுமன்றத் தேர்தலில் தோற்கடித்துவிடுவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டன. இது பற்றி திரு.செ.இராசதுரை அவர்கள், “விலகினேனா விலக்கப்பட்டேனா” என்ற தனது அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். 

……..எந்த இயக்கத்தை நான் என் உயிர் மூச்சாக நினைத்து முப்பது ஆண்டுகள் பாடுபட்டேனோ,  அந்த இயக்கத்திலிருந்து என்னை வெளியேற்றுவதற்காக, தந்தை செல்வாவின் மறைவுக்குப் பின்னால் என் கால்களின் கீழ் மிக அழகாக குழிகள் பறிக்கப்பட்டன. இதன் காரணமாக அந்த இயக்கத்திலிருந்து நானாகவே வெளியேறவேண்டிய நிர்ப்பந்தமான நிலையும் தோற்றுவிக்கப்பட்டது. 

எனது பொது வாழ்விலும், அரசியல் வாழ்விலும் இப்படியொரு அவலம் ஏற்படுமென்று நான் கனவிலும் கருதியவனல்லன். என் தலைவர் உயிருடன் இருந்திருந்தால் இந்த அவலம் எனக்கேற்பட ஒருபோதும் விட்டிருக்கமாட்டார். 

ஒருவனுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பதவியையும்விட, கட்சியும், கட்சியைச்சார்ந்த பதவியுமே பெருமை தருவனவாகும். 

தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பதவியிலிருந்து மட்டுமல்ல, அதன் செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் என்னை ஒரு தலைப்பட்சமாக ‘வேண்டாம் போ’ என்று வெறுப்போடு விலக்கி விட்டார்கள். அதன் தாக்கம் அனுபவித்தவர்களுக்குத்தான் சரியாக விளங்கும்…………’ 

மக்களின் எதிர்ப்புக்கள், எதிர்பார்ப்புக்கள், கட்சிப் பிரமுகர்களின் கருத்துக்கள், அறிவுரைகள் எவற்றுக்கும் செவிசாய்க்காத தமிழரசுக் கட்சித்தலைமை, இரட்டை அங்கத்தவர் தொகுதி என்பதற்கான கோட்பாட்டினையும் புறக்கணித்து, மட்டக்களப்புத் தொகுதியில் இருவரை வேட்பாளராக நியமித்தது. தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் திரு.இராசதுரை அவர்களும், தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் திரு.காசி ஆனந்தன் அவர்களும் போட்டியிட நிறுத்தப்பட்டார்கள். அதுவரை முப்பத்தி ஐந்து வருடங்களாக, வீட்டுச் சின்னத்தை மனதில் பதியவைத்திருக்கும் மக்களுக்கு, அந்த தேர்தலில்தான் முதன்முதலாக உதயசூரியன் சின்னம் அறிமுகப்படுத்தப்படுகிறது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. 

இருவரைத் தேர்தலில் நிறுத்திய கட்சித்தலைவர்கள் இருவருக்கும் பொதுவாகத் தேர்தல் பிரசாரக் கூட்டங்களை நடத்தவில்லை. இருவருக்கும் பிரசாரம் செய்வதில்லை என்ற நிலையில் திரு.இராசதுரை அவர்களுக்கும், திரு.காசி ஆனந்தன் அவர்களுக்கும் தனித்தனியாகப் பிரசாரக் கூட்டங்கள் நடைபெற்றன. ஆனால், தமிழரசுக்கட்சியின் கொழும்புக் கிளைப்பிரமுகரான, ஈழவேந்தன் அவர்களும், கட்சிப் பத்திரிகையான சுதந்திரனின் ஆசிரியர் கோவை மகேசன் அவர்களும் திரு.காசி ஆனந்தன் அவர்களுக்காக மட்டக்களப்புப் பிரசாரக் கூட்டங்களில் கலந்து பிரசாரம் செய்தார்கள்.

இது பற்றி திரு.செ.இராசதுரை அவர்கள் தனது அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். 

‘….கட்சியைச் சேர்ந்த பொறுப்பு வாய்ந்த செயற்குழு,  பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டக்களப்பு தேர்தல் மேடைகளில் என் பக்கமோ, காசி ஆனந்தன் பக்கமோ பேசாது விட்டிருப்பதுதான் நியாயம். ஆனால் அப்படி அவர்கள் செய்யவில்லை. மத்திய வங்கியில் மகேந்திரன் என்ற பெயரோடு அரசாங்க வேலை பார்த்துக்கொண்டு அரசியல் மேடைகளில் ‘ஈழவேந்தன்’ என்ற புனை பெயரோடு இரு வேடந்தாங்கும் கட்சியின் செயற்குழு உறுப்பினர் ஒருவரும் கட்சியின் பத்திரிகை ஆசிரியரான கோவை மகேசன் என்பவரும் எனக்கெதிராக காசி ஆனந்தனின் தேர்தல் மேடைகளிலேறி என்னைத் தரங்கெட்ட முறையில் தாக்கினார்கள். அவர்களுக்கெதிராக இன்றுவரை கட்சியின் மேலிடம் எந்த ஒரு விளக்கமும் கோரவில்லை. நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

மட்டக்களப்பு தொகுதியிலுள்ள தென் திசையிலுள்ள பட்டிருப்புத் தொகுதியிலும் வட திசையிலுள்ள கல்குடாத் தொகுதியிலும் ‘உதயசூரியன்’ உதிக்கவேண்டும் என்று பேசிய அதே பேச்சாளர்கள்,  மட்டக்களப்பு தொகுதியில் உதயசூரியனை அதாவது என் தேர்தல் சின்னத்தை, தமிழர் விடுதலைக் கூட்டணியினரின் உத்தியோகபூர்வமான சின்னத்தை உதிக்காமல் செய்யுங்கள் என்று மக்களிடம் கோரினார்கள் அப்படிப் பேசியவர்களிடம் இதுவரை எந்த விளக்கமும் கேட்கப்படவில்லை…..’   

கோவை மகேசன், ஈழவேந்தன் முதலியவர்களின் பேச்சுக்கள் திரு.காசி ஆனந்தன் அவர்களுக்குச் சார்பாக இருந்தன என்பதைவிட, திரு.செ.இராசதுரை அவர்களுக்கு எதிரானதாகவே இருந்தன. இராசதுரை அவர்களை மிகவும் கடுமையாக விமர்சித்தார்கள். காசி ஆனந்தன் அவர்களை ஆதரிக்கும் மனநிலையில் இருந்த மக்களையும் அந்த எண்ணத்தை மாற்றிக்கொள்ள வைக்கும் அளவுக்கு அவர்களது பேச்சுக்கள் இருந்தன. இருபது வருடங்களுக்கு மேலாகத் தங்கள் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் ஒருவரை, மட்டக்களப்பிற்கு வெளியே இருந்து வந்தவர்கள் தரக்குறைவாகப் பேசுவதைத், தங்கள் தன்மானப் பிரச்சினையாகக் கொள்ளும் அளவுக்கு அந்தப் பேச்சுக்கள் மக்களை வெறுப்படையச் செய்தன. இன்னொருவகையில் விழிப்படையச் செய்தன. அதன் விளைவு, திரு.காசி ஆனந்தன் அவர்கள் வெற்றிபெற முடியாமல் போனது.  

இவர்களைப் போன்றவர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடாமல் விட்டிருந்தால், காசி ஆனந்தன் அவர்கள் முதலாவதாகவந்திருப்பார் என்றும், சிலவேளை இருவருமே வென்றிருப்பார்கள் என்றும் நியாயமான கணிப்பீடு ஒன்று தேர்தலின் பின்னர் வெளிப்பட்டு மக்களிடையே பரவியிருந்தது. 

தேர்தலில் அளிக்கப்பட்டிருந்த வாக்குகளின் தொகையே அத்தகைய கணிப்பீட்டுக்கு ஆதாரமானது. அந்தத் தேர்தல் முடிவு பின்வருமாறு: 

கிடைத்த வாக்குகள்:    

செ.இராசதுரை (உதயசூரியன்) 26,648  

எம்.எல்.அஹமட் ஃபரீத் (யானை) 25,345, 

காசி ஆனந்தன் (வீடு) 22,443 

பதியுதீன் மொஹமட் (கை) 21,275 

பீ.இராஜன் செல்வநாயகம் (விளக்கு) 11,797 

விநாயகமூர்த்தி வெற்றிவேல் (குடை) 383 

இப்பொழுது 94 வயதாகும் இராசதுரை ஐயா அவர்களும், 83 வயதாகும் காசி அண்ணன் அவர்களும் வளமோடும், நலமோடும் பல்லாண்டு வாழ வாழ்த்துக்களைக் கூறி, இந்தப் பகுதியை நிறைவு செய்கிறேன். 

(நினைவுகள் தொடரும்)