சொல்லத் துணிந்தேன் – 89

சொல்லத் துணிந்தேன் – 89

 — தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் —  

சென்ற பத்தியில் (சொல்லத் துணிந்தேன்-88), தற்போது கைவசம் உள்ள பதின்மூன்றாவது அரசியல் சட்டத் திருத்தத்தை முழுமையாக அமுல் செய்வதற்கான அரசியல் கள வேலைகளை ஆரம்பிப்பதற்காக, புலிகளின் முகவர்கள் அல்லாத ஆட்சியில் உள்ள அரசாங்கத்தை ஆதரித்து நிற்கின்ற (கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கோட்டபாய ராஜபக்ஷ அவர்களை ஆதரித்த) தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களான, டக்ளஸ் தேவானந்தா (ஈபிடிபி), ஸ்ரீதரன் (தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி), சந்திரகுமார்(சமத்துவக் கட்சி), சந்திரகாந்தன் (தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி), கலாநிதி விக்னேஸ்வரன் (அகில இலங்கை தமிழர் மகாசபை) ஆகியோர் ஒன்றுகூடிப் பேச வேண்டுமென்று  வலியுறுத்தி இதில் வீ.ஆனந்தசங்கரியையும் (தமிழர் விடுதலைக் கூட்டணி) இணைத்துக் கொள்வதில் தவறில்லையெனவும் குறிப்பிட்டிருந்தேன். 

ஏற்கெனவே அகில இலங்கை தமிழர் மகா சபையின் ஏற்பாட்டில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள கட்சிகளில் ஈபிடிபி தவிர்ந்த ஏனைய கட்சிகளின் பிரதிநிதிகள் 09.04.2021 அன்று கொழும்பில் கூடி ஆனந்தசங்கரி அவர்களைத் தலைவராகவும் கலாநிதி விக்னேஸ்வரன் அவர்களை இணைப்பாளராகவும் கலந்துகொண்ட கட்சிகளிலிருந்து தலா ஒரு பிரதிநிதியை நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களாகவும் உள்ளடக்கிய ‘அதிகாரப் பகிர்வு இயக்கம்’ (Movement For Devolution Of Power) உருவாக்கப்பட்டுள்ளது. இத்தகவல்கள் ‘சொல்லத் துணிந்தேன்’ பத்தியிலும் அழகுகுணசீலன் எழுதும் ‘காலக்கண்ணாடி’ பத்தித் தொடரிலும் ஏற்கெனவே ‘அரங்கம்’ மின்னிதழில் பதிவாகியுள்ளன. 

இப்போது தேவை என்னவெனில் இந்த அதிகாரப் பகிர்வு இயக்கத்தை மேலும் வலுப்படுத்துவதாகும். இதற்கு உடனடியாக இந்த அதிகாரப் பகிர்வு இயக்கத்துக்குள் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியையும் (ஈபிடிபி) உள்வாங்க வேண்டும். 

இப்பத்தியின் முதற்பந்தியில் குறிப்பிட்டவாறு கட்சித் தலைவர்களான டக்ளஸ் தேவானந்தா, ஸ்ரீதரன் (தோழர் சுகு), சந்திரகுமார், சந்திரகாந்தன் (பிள்ளையான்), கலாநிதி விக்னேஸ்வரன் மற்றும் ஆனந்தசங்கரி ஆகியோர் ஒன்றுகூடிப் பேசினால் இந்த அதிகாரப்பகிர்வு இயக்கத்துக்குள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியையும் உள்வாங்குவது சாத்தியமாகிவிடும். இதன்மூலம் தமிழர் தரப்பில் பதின்மூன்றாவது அரசியல் சட்டத் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கான ‘கூட்டு அரசியல் செயற்பாட்டு பொறிமுறை’ தானாகவே உருவாகிவிடும். இக்கூட்டு அரசியல் செயற்பாட்டுப் பொறிமுறை தமிழ் மக்களின் நம்பிக்கையைப் பெற்றுக்கொள்ளுமானால் இந்தப் பொறிமுறையையே ஒரு மாற்று அரசியல் தலைமையாக ஏற்றுத்தமிழ் மக்கள் அதன் பின்னே அணி திரள்வார்கள் என்பதில் சந்தேகமில்லை. இந்த மாற்று அணி எதிர்வரும் எல்லாத் தேர்தல்களிலும் வடக்குக் கிழக்குத் தமிழ் மக்களின் பெருவாரியான ஆதரவைப் பெற்று அரசியல் பொதுவெளியில் மேற்கிளம்புமாயின் தமிழ்த் தேசிய அரசியலில் நிச்சயம் தமிழ் மக்களுக்குச் சாதகமான மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. 

இதனையிட்டுத் தமிழ் மக்களிடையேயுள்ள கல்விமான்கள், துறைசார் நிபுணர்கள், தொழில்சார் விற்பன்னர்கள், அரசியல் ஆர்வலர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள், எழுத்தாளர்/ கலைஞர்/ இலக்கியவாதிகள்/ ஊடகவியலாளர்கள், விவசாய-மீனவ மற்றும் ஏனைய துறைத் தொழிலாளர்கள், வர்த்தகர்கள், தொழிலதிபர்கள் எனப் பலதரப்பட்டவர்களும் பிரக்ஞையுடன் செயற்படுவார்களாயின் தமிழர்களின் சமூக பொருளாதார அரசியல் எதிர்காலம் மேம்பாடு அடைவதற்குக் காலமெடுக்காது. 

இங்கு இன்னொரு அரசியல் யதார்த்தத்தையும் பேச வேண்டியுள்ளது. அது என்னவெனில், கிழக்கின் தனித்துவ அரசியல் என்பதாகும். வடக்கு மாகாணத்திற்கும் கிழக்கு மாகாணத்திற்கும் பொதுவானதொரு அரசியல் சமன்பாடு பொருந்தாது என்பதைப் புரிந்துணர்வுடன் மேற்குறிப்பிட்ட அரசியற் கட்சிகள் ஏற்றுக்கொள்ளுமிடத்து தந்திரோபாய ரீதியாக வடக்கு மாகாணத்திற்கும் கிழக்கு மாகாணத்திற்கும் தனித்தனியான அரசியல் ‘வியூகம்’களை வகுத்துச் செயற்பட முடியும். அதற்கான சில முன்மொழிவுகளை இப்பத்தியில் முன்வைப்பது பொருத்தமென எண்ணுகிறேன். 

கிழக்கைத் தளமாகக் கொண்ட இரு பதிவு செய்யப்பெற்ற அரசியல் கட்சிகளேயுண்டு. அவையாவன: சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி (ரி எம் வி பி), மற்றும் கலாநிதி கா.விக்னேஸ்வரன் தலைமையிலான அகில இலங்கை தமிழர் மகாசபை. இந்த இரு கட்சிகளும் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றினூடாக ஓர் அரசியல் கூட்டணியை (POLITICAL ALLIANCE) ஏற்படுத்துவதாகும். இதற்குக் ‘கிழக்கு அணி’யென அடையாளத்திற்காகப் பெயரிடலாம். (பெயர் மாற்றமுறக்கூடும்) 

அதேபோல் வடக்கைத் தளமாகக் கொண்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈபிடிபி), தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி, சமத்துவக் கட்சி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய கட்சிகள் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றினூடாக ஓர் அரசியல் கூட்டணியை (POLITICAL ALLIANCE) ஏற்படுத்துவதாகும். இதற்கு ‘வடக்கு அணி’யென அடையாளத்துக்காகப் பெயரிடலாம். (பெயர் மாற்றமுறக்கூடும்). 

மேற்குறிப்பிடப்பட்ட ‘கிழக்கு அணியும்’ ‘வடக்கு அணியும்’ தேர்தல்களில் முறையே கிழக்கிலும் வடக்கிலும் தனித்தனியே போட்டியிட்டு மக்களின் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும். 

கிழக்கு மாகாணத்தில் நடைபெறும் தேர்தல்களில் பங்குபெற விரும்பும் ‘வடக்கு அணி’யைச் சேர்ந்த கட்சிகள் எதுவும் தமது சார்பில் தேவையான வேட்பாளர்களை ‘கிழக்கு அணி’யில் இணைத்து விடலாம். 

அதேபோல் வடக்கு மாகாணத்தில் நடைபெறும் தேர்தல்களில் பங்குபற்ற விரும்பும் ‘கிழக்கு அணி’யைச் சேர்ந்த கட்சிகள் எதுவும் தமது சார்பில் தேவையான வேட்பாளர்களை ‘வடக்கு அணி’யில் இணைத்து விடலாம். 

இந்த ஏற்பாடு வடக்கு-கிழக்கு உறவுக்கும் இணைவுக்கும் ஊக்கியாகவும் அமையும். இதைத்தான் வேற்றுமையில் ஒற்றுமை என்பது. (UNITY AMONG DIVERSITY). சாதாரண மொழியில் கூறப்போனால் கிழக்கு அணி எறிகிற பொல்லைத் தாமே கிழக்கில் எடுத்துக்கொள்ளும். ‘வடக்கு அணி’ எறிகிற பொல்லை தாமே வடக்கில் எடுத்துக்கொள்ளும். இப்போது இரு அணிகளின் கைகளிலும் மக்கள் அங்கீகாரம் என்ற அரசியல் பொல்லுகள் இருக்கும். ஒட்டுமொத்தத் தமிழ்த்தேசியத்தின் பொதுவான பிரச்சனைகள் என்று வரும்போது பிரச்சினையின் பரிமாணங்களைப் பொறுத்து இரு அணிகளும் கூட்டாகச் செயற்படலாம். ஆமாம்! இரு அணிகளும் சேர்ந்து பொல்லுகளால் (மக்கள் அங்கீகாரம்) எறியலாம். 

கடந்த காலத்தில் தமிழர் அரசியல் தலைமைகளும் (தமிழ்க் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) போராளி இயக்கங்களும்  விட்ட அரசியல் தவறுகளினால் தேங்கிப் போயுள்ள தமிழ்த்தேசிய அரசியல் நதியை அடுத்த கட்டத்தை நோக்கி ஓடச் செய்வதற்குத் தற்போதைய அரசியல் கள நிலையில் இதைவிடச் சிறந்த வாய்ப்பாடு எதுவுமில்லை.