— கருணாகரன் —
இலங்கையில் இனப்பிரச்சினையையும் விடப் பெரிய பிரச்சினையாக வேலையில்லாப் பிரச்சினை, பொருளாதாரப் பிரச்சினை போன்றவை இப்போது தலையெடுத்துள்ளன. தென்பகுதியில் இவ்வாறான ஒரு புரிதலே நீண்டகாலமாக உண்டு. ஜே.வி.பியின் எழுச்சியும் கிளர்ச்சிகளும் இந்த அடிப்படையிலானவையே. ஆட்சி மாற்றங்கள், ஜே.வி.பிக்கான அன்றைய ஆதரவு போன்றவையெல்லாவற்றுக்கும் இந்தப் பொருளாதாரப் பிரச்சினைகளே முதற் காரணங்கள்.
ஏன் இப்பொழுது நமது சூழலில் இளைய தலைமுறையினர் அதிகமாகச் சட்டவிரோத மது உற்பத்தி, பாவனை, போதைப்பொருள் பாவனை, வன்முறைகளில் ஈடுபடுவது, கள்ள மண் ஏற்றுவது, களவாக மரம் வெட்டுவது, கொள்ளை, கடத்தல், கொலை உள்ளிட்ட தவறான விடயங்களில் ஈடுபடுவதற்கும் பிரதான காரணம், வேலையில்லாப் பிரச்சினையும் பொருளாதாரப் பிரச்சினையுமே.
ஏனெனில் பொருளாரப் பிரச்சினை என்பது நேரடியாகவே நிகழ்காலத்தின் மீது நெருப்பையும் எதிர்காலத்தின் மீது இருளையும் ஒரே நேரத்தில் உண்டாக்கக் கூடிய ஒன்றாக உள்ளது. இதனாலே உலகின் அத்தனை நாடுகளும் அத்தனை சமூகங்களும் பொருளாதார அடிப்படைகளில் சரிவு ஏற்படாமல் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்குத் துடிக்கின்றன.
ஆனால் நமது இலங்கையிலோ எதிர்காலத்தின் மீது கனத்த இருள் படிந்து கொண்டிருக்கிறது. இது நாட்டுக்குப் பேராபத்தையும் போராபத்தையும் தரக்கூடியது.
பொருளாதார நெருக்கடி என்பது அசமத்துவ நிலையை மக்களிடையே பாரிய அளவில் உண்டாக்கி விடக் கூடிய ஒன்று. வரலாறு முழுவதிலும் பொருளாதாரப் பிரச்சினையினாலேயே மனித குலமும் அதனுடைய வரலாறும் கொந்தளித்திருக்கிறது. இரத்தம் சிந்தியுள்ளது.
ஆகவேதான் நாம் மிகக் கவனமாக இந்தப் பிரச்சினையைக் கையாள வேண்டியுள்ளது. கூடுதல் கவனமெடுக்கவும் வேண்டியுள்ளது.
இப்படிச் சொல்வதன் மூலம் இனங்களுக்கிடையிலான நெருக்கடியையும் இன ஒடுக்குமுறையின் கனதியையும் நாம் குறைத்துப் பேசுகிறோம் என்று அர்த்தமில்லை.
ஆனால் நாட்டில் வேலையில்லாப் பிரச்சினை பெரிய அளவுக்குத் தலைதூக்கியுள்ளது. உற்பத்தித்துறை படுத்து விட்டது. பொருளாதாரம் மிகக் கீழே தாழ்நிலைக்குச் சென்றுள்ளது.
இதெல்லாம் ஏதோ இப்பொழுது இந்தக் கொரோனா நெருக்கடியினால் ஏற்பட்டது என்றில்லை. அதற்கு முன்பே போரினாலும் பொருத்தமற்ற பொருளாதாரக் கொள்கையினாலும் ஏற்பட்ட வீழ்ச்சி இது. இதற்கு ஆட்சியிலிருந்த அத்தனை தரப்புகளுக்கும் பொறுப்புண்டு.
இந்தப் பொறுப்பற்ற தன்மையினால் ஊழல், லஞ்சம் தொடக்கம் சட்ட விரோதத் தொழில் முறைகள் வரையில் நாட்டை நாசமாக்கக் கூடிய தீமைகள் பெருகிக் கொண்டிருக்கின்றன. கிடைப்பதைச் சுருட்டிக் கொள்வோம் என்றே பலரும் யோசிக்கிறார்கள்.
இதில் வல்லமையுள்ளவர்களும் சாத்தியங்களைக் கொண்டவர்களும் பிழைத்துக் கொள்கிறார்கள். ஏனைய பல்லாயிரக்கணக்கான சாதாரண மக்கள் செய்வதறியாமல் திகைத்துப் போயிருக்கிறார்கள். பொருளாதார நெருக்கடியினால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு விலைவாசி ஏற்றம் நடந்து கொண்டிருக்கிறது. விலைவாசி ஏற்றத்திற்கு முன்பு மக்கள் திணறிப்போய் நிற்கிறார்கள்.
இப்படி நெருக்கடிகள் ஏற்படும்போது நாடு இயல்பின்மையை நோக்கிச் செல்லும். இந்தச் சந்தர்ப்பத்தில் அதிகமும் தாக்கப்படுவது இளைய தலைமுறையினரே. அவர்கள்தான் எதிர்காலத்தைக் குறித்து அதிகமாகச் சிந்திப்போர். தங்களுடைய எதிர்காலம் நெருக்கடியின் இருளில் மூழ்கியிருப்பதை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை.
இதில் படித்தவர்கள் போராட்டங்களை நடத்தியோ நீண்ட காலக் காத்திருப்புக்கு அப்பால் நின்றோ தமக்கான வேலை வாய்ப்பை அரச நிர்வாகத்துறைகளில் பெற்றுக் கொள்கிறார்கள். அரசும் எப்படியோ இவர்களையாவது சமாளித்துக் கொள்வோம் என்று வேலை வாய்ப்புகளை வழங்குகிறது. இதனால் இன்று நிர்வாகத்துறையில் அதிகப் படியான ஆட்கள் தேவைக்கதிகமாக வேலைக்கு உள் வாங்கப்பட்டிருக்கின்றனர். ஏனையோருக்கு வழியுமில்லை,திசையுமில்லை.
இதனால் ஆத்திரமேற்படுகிறது இவர்களுக்கு. வேறு வழியில்லாமல் வன்முறையில் ஈடுபடுகிறார்கள். சரியான வழிகாட்டலும் அதற்கேற்ற பொறிமுறையும் தொழில்துறைகளும் இருக்குமானால் இளைஞர்கள் அதில் ஆர்வத்தோடு ஈடுபடுவர். அதில்லாத போது அவர்கள் தெருவில்தானே நிற்பர்? தெருவிலே எத்தனை நாட்களுக்குச் சும்மா நிற்க முடியும்?
இந்த எளிய உண்மையை பலரும் அறிய முற்படுவதில்லை. அப்படித் தெரிந்தாலும் அதைப் பொருட்படுத்திக் கொள்வதில்லை. ஏராளம் அரசியல் பகுப்பாய்வாளர்கள் தமது மூச்சிரைக்க இரைக்க எவ்வளவோ அரசியல் வியாக்கியானங்களை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். மறந்தும் அவர்கள் அடிப்படையான பொருளாதாரப் பிரச்சினையைப் பற்றி எழுதுவதே இல்லை. பேசாமல் அதைக் கடந்து சென்று விடுகிறார்கள்.
ஆனால் இந்த அடிப்படைப் பிரச்சினையை விட்டு விட்டு வெறுமனே இளைய தலைமுறையைக் குற்றம் சாட்டிக் கொண்டிருப்பார்கள். அல்லது அரசாங்கத்தின் மீது பழியைப் போட்டு விடுவார்கள். இரண்டினாலும் எந்தப் பயனும் கிட்டாது. பதிலாக இடைவெளியும் பாதிப்புமே நமக்கு ஏற்படும்.
இங்கே ஒரு கேள்வியை சிலர் எழுப்பக் கூடும். இதெல்லாவற்றுக்கும் பதிலையும் பரிகாரத்தையும் காண வேண்டியது அரசாங்கம்தானே. நாம் இதற்கு என்ன செய்ய முடியும்? என.
அரசாங்கத்தை பதவியில் அமர்த்துவதும் இறக்குவதும் மக்களாகிய நாமே. ஏன் நாம் நினைத்தால் அரசாங்கத்தைச் சரியாகவே இயங்க வைக்க முடியும். நமது அறிஞர்கள், துறைசார் வல்லுநர்கள், ஊடகங்கள், ஊடகவியலாளர்கள், தொழிற்சங்கங்கள், எதிர்க்கட்சிகள், ஆளும் தரப்பிலுள்ள மக்கள் நேசச் சக்திகள் போன்ற தரப்புகள் சரியாகச் செயற்பட்டால் அரசாங்கம் உச்சவே –தப்பவே – முடியாது. எப்படியோ சரியாகச் செயற்பட்டே ஆக வேண்டும். இதற்காகத்தான் இந்தச் சக்திகளுக்கு எப்போதும் சமூக மதிப்புண்டு.
ஆனால் துரதிருஸ்டவசமாக நம்முடைய சூழலில் இவற்றிற் பலவும் பொறுப்புடன் செயற்படுவதுமில்லை. பொறுப்பை உணர்வதுமில்லை. பொறுப்பை ஏற்பதுமில்லை. ஆளுமையாக நடந்து கொள்வதுமில்லை. பதிலாக தங்களுடைய தவறுகளையும் பொறுப்பின்மையையும் ஆளுமைக் குறைபாடுகளையும் மறைத்துக் கொள்வதற்காக எழுந்தமானமாக அரசாங்கத்தைக் குறை சொல்விட்டுத் தாம் தப்பித்துக்கொள்கிறார்கள். இது எவ்வளவுக்குத் தவறானது. எவ்வளவு அயோக்கியத்தனமானது! பச்சையாகச் சொன்னால், இது படு கேவலமானது.
இன்று நாடு மிகப் பெரிய பொருளாதார நெருக்கடிக்குள்ளும் வேலை வாய்ப்பின்மைக்குள்ளும் சிக்கியுள்ளது. இதற்கு அனைவருமே பொறுப்பாளிகள். எவரும் தப்பி விட முடியாது.
எளிய உதாரணம், இன்று நாட்டில் எத்தனை தொழிற்துறைகள் உள்ளன என்று நீங்களே கணக்கிட்டுக் கொள்ளலாம். நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு யாழ்ப்பாணத்தில் கூடப் பல தொழிற்துறைகள் இருந்தன. சீமெந்துத் தொழிற்சாலை, கண்ணாடித் தொழிற்சாலை, அலுமினியத் தொழிற்சாலகள், வாளித் தொழிற்சாலை, ஆணித் தொழிற்சாலை, மில்க் வைற் சவர்க்காரத் தொழிற்சாலை, அண்ணா கோப்பி தொழிற்சாலை, சுப்பிரமணியம் சோடாக் கொம்பனி, பற்பொடித் தொழிற்சாலை, பீடிக் கொம்பனிகள், சுருட்டுத் தொழிற்சாலைகள், தோல் பதனிடம் தொழிற்சாலை, கைத்தறி மற்றும் புடவைத் தொழிற்சாலைகள், தோலகட்டி உணவு பதனிடும் தொழிற்சாலை எனப் பல ஆலைகளும் தொழிற்சாலைகளும் இருந்தன. இவற்றில் பல ஆயிரக்கணக்கானோர் வேலை செய்தனர். அப்பொழுது புலம்பெயர்வு நடக்கவே இல்லை. ஆகவே இங்கே இருந்த இளைய தலைமுறை முடிந்தளவுக்கு தொழில்களில் ஈடுபடக் கூடியதொரு நிலை இருந்தது. சூழல் இருந்தது.
பெரும்பாலான நமது தேவைகளையும் இந்த ஆலைகளின் உற்பத்திகளில் இருந்து நாம் பெற்றுக் கொண்டோம்.
ஆனால் இன்று?
இவை எதுவுமே இல்லை.
எல்லாமே அழிந்து விட்டன. அண்ணா கோப்பி போன்ற ஒன்றிரண்டு தொழிற்சாலைகள் மட்டுமே உண்டு. அவையும் முன்னரைப்போல செழிப்பாக இயங்கவில்லை. அதற்கான சமூக ஆதரவுத்தளம் ஒடுங்கி சுருங்கி விட்டது.
இதற்கு மூன்று பிரதான காரணங்களைச் சொல்ல முடியும்.
1. அரசின் தெளிவற்ற பொருளாதாரக் கொள்கை.
2. முதலீட்டாளர்களிடையே உள்ள குழப்பம், பதட்டம், தயக்கம் போன்றவை.
3. வெளிப் பொருட்களின் மீதான அளவற்ற மோகம்.
இந்த மூன்று காரணங்களும் இணைந்து சுலபமாகப் பணம் சம்பாதிக்கும் ஒரு எண்ணத்தையும் வழிமுறையையும் நோக்கி இளையை தலைமுறையைத் தள்ளியுள்ளன.
இங்கே இப்படி இந்தப் பிரச்சினையைப் பற்றியும் அதற்கான காரண காரியங்களைப் பற்றியும் ஏராளம் தர்க்க நியாயங்களை எழுதிக் கொண்டிருக்கலாம். அதனால் எந்தப் பயனுமில்லை. பதிலாக என்ன செய்யப்போறோம் என்று சிந்திக்க வேண்டும். அதுவே அவசியமானது. அதுவே பயனுள்ளது.
கிளிநொச்சியில் யோசுவா புதிதாகப் பலவற்றைப் பற்றியும் சிந்திக்கிறார். அதில் முக்கியமான ஒன்று சமூக மட்டத்திலான உறவாடலின் வழியாக மேற்கொள்ளப்படும் தொழிற்துறைகளைப் பற்றிச் சிந்திப்பதாகும். நம்முடைய சூழலில் என்ன பொருட்களெல்லாம் கிடைக்கின்றனவோ அவற்றை வைத்தே அவர் ஒரு புதிய உலகைப் படைக்க முனைகிறார். இதில் முக்கியான இரண்டு விடயங்கள் உண்டு. ஒன்று அவருடைய உணவு முறைகள். குறிப்பாகப் புதிதாக்குதல்கள். இரண்டாவது, சமூக மட்டத்திலான சுற்றுலாத்துறையை வளர்ப்பதாகும்.
இரண்டும் பொருளாதார ரீதியிலும் வேலை வாய்ப்பு ரீதியிலும் கைகொடுக்கக் கூடியன. யாரும் சிந்தியாததை யோசவா சிந்திக்கிறார். இதுதான் மெய்யான சமூகப்பற்றாகும்.
நீ எதுவாக இருக்கிறாயோ அதுவாகவே செயற்படுவாய் என்பது பொய்யல்ல, மெய்.