மாறிச் செல்லும் உலக அரசியல் சூழலும், ஜனநாயக கோட்பாட்டு விவாதங்களும் (பகுதி 3)

மாறிச் செல்லும் உலக அரசியல் சூழலும், ஜனநாயக கோட்பாட்டு விவாதங்களும் (பகுதி 3)

  — வி. சிவலிங்கம் —

லிபரல் ஜனநாயகத்தின் தொடரும் தோல்விகளின் அடிப்படைகள்

வாசகர்களே!

‘மாறிச் செல்லும் உலக அரசியல் சூழலும், ஜனநாயக கோட்பாட்டு விவாதங்களும்’ என்ற தலைப்பில் தொடரும் இக் கட்டுரைகள் இன்றைய அரசியல் பொருளாதாரத்தின் மாறிவரும் அடிப்படைகளை அடையாளம் காணவும், அதனடிப்படையில் புதிய அரசியல் பொருளாதாரத்திற்கான புதிய கோட்பாடுகளை நோக்கிப் பார்வையைச் செலுத்தும் எண்ணங்களின் அடிப்படையிலேயே தொடர்கிறது. கடந்த பகுதி 2 இல் அமெரிக்க அரச கட்டுமானத்தை மையப்படுத்திய லிபரல் ஜனநாயக கட்டுமானங்களில் எழும் மாற்றங்கள் சிலவற்றைப் பார்த்தோம்.

இவை தொடர்பாக மேலும் சில விபரங்களை நாம் பார்க்கலாம். ஏனெனில் கடந்த 20ம் நூற்றாண்டில் முதலாளித்துவ கருத்தியல் மிகவும் பலம் பொருந்தியதாக செயற்பட்டது. இக் கருத்தியலுக்கு மாற்றாக பல்வேறு மாற்றுக் கருத்தியல்கள் காணப்பட்ட போதிலும் மார்க்சிச அடிப்படையிலான கருத்துகளே முதலாளித்துவத்திற்கு மாற்றான கருத்தியல்களாக அமைந்தன. மார்க்சிச கருத்தியல் என்பது முதலாளித்துவத்தின் விளைபொருளாக அமைந்து வரும் அந்நியப்படுத்தல் (Alienation), வர்க்க ஆதிக்கம்(Class domination), முதலாளித்துவ பொருளின் மதிப்பு விதி(Law of value) என்பனவற்றின் தாக்கத்திலிருந்து மனித சமூகத்தை விடுவிப்பது எவ்வாறு? என்ற கேள்விகளுக்குப் பதில் தருவதாகவே அமைந்தது. அதாவது முதலாளித்துவத்தின் முரண்பட்ட உட்கூறுகளை மார்க்ஸ் அடையாளம் காட்டினாரே தவிர எதிர்காலத்திற்கான ஒரு பாதையை அவர் தரவில்லை. இன்று நாம் பேசும் ‘சோசலிசம், கம்யூனிசம்’ என்ற கருத்தியல்களும் மார்க்ஸ் வாழ்ந்த காலத்திலும் பேசப்பட்டன. எனவே முதலாளித்துவத்திற்கு மாற்றான சமூகக் கட்டுமானம் குறித்த விவாதங்கள் தொடர்ந்தும் தெளிவற்றதாகவே உள்ளன. அவ்வாறான விவாதங்களில் ஒன்றாகவே முதலாளித்துவ கட்டுமானத்தில் கட்டுப்பாடற்ற விதத்தில் போட்டியிட்டுச் செயற்படும் சந்தை விவகாரங்களைக் கட்டுப்படுத்த வேண்டுமாயின் மிகவும் திட்டமிட்ட வகையில் பொருளாதாரத் திட்டமிடுதலை மேற்கொள்ள வேண்டும் எனவும், அதற்குத் தொழிலாள வர்க்கமே தலைமை தாங்க வேண்டும் என்பதாகவே கருத்தியல்கள் அமைந்தன.

தற்போதுள்ள நிலமைகளை அவதானிக்கையில் மார்க்சிச அடிப்படையிலான சமூக, பொருளாதாரத்தை நிறுவுதற்கான ஸ்தாபன மயமாக்கப்பட்ட தொழிலாள வர்க்கம் என்பது பலமிழந்து செல்வதையும், கூடவே சர்வதேச தொழிலாள வர்க்கம் ஒன்றிற்கொன்று முரண்பட்ட முகாம்களாக மாறிச் செல்வதையும் அவதானிக்கிறோம். அதேபோன்று நாடு முழுவதற்குமான திட்டமிட்ட வகையிலான பொருளாதாரக் கட்டுமானத்தின் உருவாக்கம் என்பது மிகவும் வேறுபட்ட அல்லது முரண்பட்ட விளக்கங்களாக மாற்றம் பெற்று வருவதையும் காண்கிறோம். எனவே மார்க்சிச அடிப்படையிலான விவாதங்களும் மாற்றங்களுக்குள் செல்வதைக் காண்கிறோம். உதாரணமாக, சீனாவில் சீன நாட்டின் வரலாற்று அம்சங்களின் போக்கினடிப்படையில் அதற்கே உரித்தான ‘சோசலிச் சந்தைப் பொருளாதாரம்’ நிர்மாணிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இங்கு ‘சோசலிசம்’ என்பதற்கான விளக்கங்கங்கள் புதிதாக அமைகின்றன.

அதே போல ‘லிபரல் ஜனநாயகம்’ என்பது ‘சகலமும், சகலருக்கானதே’ (All things to all people) என்பதாகவும், அதனடிப்படையில் மக்களே தீர்மானங்களை மேற்கொள்பவர்கள் எனவும், சிறுபான்மையினரின் உரிமைகளை ஒடுக்க முனையும் பெரும்பான்மையினரிடமிருந்து பாதுகாப்பு அளிக்கப்படும் எனவும் கூறியது. அதேவேளை பொருளாதார அடிப்படையில் பலம் வாய்ந்த பிரிவினர் தாம் திரட்டிய செல்வத்தை வைத்திருக்கும் உரிமை உடையவர்கள் எனவும் கூறியது.

மேற்குறித்த வாசகங்கள் என்பது வரலாற்றின் போக்கிலிருந்தே பெறப்பட்டுள்ளது என்பதை நாம் உணர்தல் வேண்டும். ஏனெனில் வரலாறு முழுவதுமே ஆதிக்கப் பிரிவினர் மாற்றத்திற்கு எதிராகவே செயற்பட்டதால் ஏதோ ஒரு வகையில் சமூக இயக்கம் என்பது சமநிலையைப் பேணுதல் அவசியம் என்ற காரணத்தினால்தான் இரு பிரிவினரும் ஒரு புள்ளியில் அதாவது ‘லிபரல் ஜனநாயகம்’ என்ற கோட்பாட்டை ஏற்றுள்ளனர். இதன் காரணமாகவே கடந்த 20ம் நூற்றூண்டு முழுவதும் இச் சமூகக் கட்டுமானம் தனித்துவமான ஒன்றாக அமைந்தது. அத்துடன் இச் சமூகக் கட்டுமானத்திற்கு மாற்றான மாதிரியும் (Alternative model) உருவாகவில்லை. இதன் காரணத்தினால்தான் ‘லிபரல் ஜனநாயகம்’ என்பது அதன் நூற்றாண்டு கால வளர்ச்சி காரணமாக பலமான, காத்திரமான கருத்தியலாகவும் அதாவது ஜனநாயகம் என்பது மக்களின் அனுபவமாகவும் மாறியது.

இவ்வாறான பலமான சமூகக் கட்டுமானமாக வளர்ந்துள்ள லிபரல் ஜனநாயகக் கட்டுமானங்கள் இன்று பலவீனமடைந்துள்ளதாக நாம் வாதிப்பதற்கான பின்புலங்கள் என்ன? என்பது குறித்த சில விளக்கங்களை நாம் பார்க்கலாம்.

கடந்த 20ம் நூற்றாண்டு என்பது மூன்று வரலாற்றுக் கதைகளைத் தந்துள்ளதாகவும், அவையாவன,

1.    பாசிசம் பற்றிய கதை

2.    கம்யூனிசம் பற்றிய கதை

3.    லிபரல் ஜனநாயகக் கதை

எனவும் குறிப்பிடப்பட்டு அவற்றின் தாக்கங்களும், பின்னர் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும் கருத்துக்கள் எழுந்துள்ளன.

பாசிசத்தின் தோற்றம் என்பது வெவ்வேறு தேசங்களிடையே ஏற்பட்ட முரண்பாடுகளாகவும், உலகம் என்பது ஒரு இனக் குழுவினால் மிகவும் வன்முறை அடிப்படையில் ஏனையோர் நசுக்கப்பட்டதாகவும் மாற்றம் பெற்றிருந்தது.

கம்யூனிசம் என்பது வர்க்கங்களுக்கிடையேயான போராட்டங்களாக அடையாளம் காணப்பட்டது. உலகம் என்பது சகல சமூகக் குழுக்களும் ஓர் மத்தியப்படுத்தப்பட்ட சமூகக் கட்டுமானத்திற்குள் சமத்துவமாக வாழ்தல் முடியும் எனவும் கூறியது. அதற்கான விலையாக சுதந்திரம் கொடுக்கப்பட்டது.

லிபரல் கதை என்பது சுதந்திரத்திற்கும், கொடுங்கோன்மைக்கும் இடையேயான போராட்ட வரலாறாக அமைந்தது. உலகம் என்பது சகல மனிதர்களும் கூட்டாகவும், சுதந்திரமாகவும், அமைதியாகவும் குறைந்தபட்ச மத்தியக் கட்டுப்பாட்டின் கீழ் வாழ முடியும் எனக் கூறியது. அதற்கான விலையாக பொருளாதார அசமத்துவம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

மேலே குறிப்பிட்ட மூன்று வரலாற்றின் அடையாளங்களில் இரண்டாவது உலக மகா யுத்தத்தின் பின்னர் பாசிசம் தோற்கடிக்கப்பட்டது. அதன் பின்னர் 1940ம் ஆண்டின் பிற்பகுதியிலிருந்து 80களின் பிற்பகுதி வரை கம்யூனிசத்திற்கும், லிபரல் ஜனநாயகத்திற்குமிடையேயான போராட்டக் களமாக மாறியிருந்தது. அதன் விளைவாக கம்யூனிசம் என்ற கதையும் வீழ்ச்சியடைந்தது.

இவ்வாறு கடந்த 20ம் நூற்றாண்டினை வர்ணிக்கும் வரலாற்றாசிரியர்கள் தற்போது லிபரல் ஜனநாயகமே ஓர் ஆதிக்க கருத்தியலாகவும் உள்ளது எனக் கூறுகின்றனர். இவ்வாறு ஆதிக்கம் செலுத்தி வரும் லிபரல் ஜனநாயக கருத்தியல்கள் தற்போது பாரிய மாற்றத்தை நோக்கித் தள்ளப்படுகின்றன.        

ஏற்கெனவே குறிப்பிட்டது போல லிபரல் ஜனநாயகக் கோட்பாடு ஆதிக்கம் செலுத்திய போதிலும், ஆங்காங்கே கொடுங்கோலர்களின் ஆட்சி செயற்பட்டது. அவை இன்னமும் தொடர்கின்றன. இருப்பினும் லிபரல் ஜனநாயக அரச கட்டுமானங்கள் மக்களின் சுதந்திரம் பற்றி பீத்திக்கொண்ட போதிலும் பல கோடி குடிமக்கள் இவ்வகை அரசின் கீழ் வறுமைக்குள்ளும், வன்முறைக்குள்ளும், ஒடுக்குமுறைக்குள்ளும் வாழ்கின்றனர். இம் மக்களின் மனித உரிமைகளுக்காக இன்னமும் போராட வேண்டியுள்ளது.

லிபரல் ஜனநாயகம் இன்றுள்ள அரசுக் கட்டுமானங்களுக்குள் சிறந்ததெனக் கூறினாலும் இவை யாவும் ஒருவகையான கற்பனையே என்ற வாதங்களும் உண்டு. உதாரணமாக, இந்த ஜனநாயக நிறுவனங்கள் சுயாதீனமாக இயங்குவதாகக் கூறுவதற்கும் ஒரு வகை தர்க்கம் அதற்கே உரித்தான விதத்தில் உள்ளது. நாம் நீதித் துறையை எடுத்துக்கொண்டால் அங்கு எவ்வாறு நீதி பேணப்படுகிறது? என்பதற்கும் சில தர்க்கத்தின் அடிப்படையிலான விளக்கங்கள் உண்டு.

இவ்வாறான விளக்கங்கள் யாவும் 20ம் நூற்றாண்டில் அமைந்திருந்த தொழிற்துறை வளர்ச்சியின் அடிப்படையிலான அரசியல் பொருளாதாரத்தின் விளக்கங்களாகவே அமைந்தன. ஆனால் இவை தற்போது மாறிவரும் நவீன சர்வதேச மயப்படுத்தப்பட்ட தகவல் தொடர்புத்துறைப் பொருளாதாரத்தின் பின்னணியில் அவை பொருத்தமற்ற ஓர் பொறிமுறையாக மாறுகிறது.

உதாரணமாக, யந்திரங்களின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட பொருளாதாரக் கட்டுமானங்களில் மனித பங்களிப்பு அதிகமாக இருந்தது. அதனால் அம் மக்களைப் பாதுகாப்பதற்கான பல காப்புறுதி மற்றும் சரீர பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகம் மேற்கொள்ள வேண்டியிருந்தது. அத்துடன் இன, நிற, மத வேறுபாடுகளற்ற விதத்தில் அல்லது இன சமத்துவத்தைப் பேணும் வகையில் சட்டம் தொழிற்பட வேண்டியிருந்தது.

தற்போதைய தொழில்நுட்ப மாற்ற சூழலில் அவ்வாறான பாரிய யந்திர மயமாக்கப்பட்ட தொழிற்சாலைகள் மாற்றமடைந்துள்ளன. அவற்றில் பல நவீன தொழில்நுட்ப பயன்பாடுகளால் தொழிலாளர் பணி குறைந்துள்ளது. இங்கு தொழிற்சாலைகளும், தொழிலாளர்களும்  குறைந்த போதிலும் அதற்கென உருவாக்கப்பட்ட சட்ட மூலங்கள் இன்னமும் செயற்பாட்டில் உள்ளன. இதன் காரணமாகவே பல்வேறு இனக் குழுமங்கள் தத்தமது சிவில் உரிமைகளை இச் சட்ட மூலங்களின் உதவியுடன் முன்னெடுக்கின்றன. உதாரணமாக, கறுப்பு நிறத்தவர் மீதான பொலீசாரின் பாரபட்ச செயற்பாடுகள் ‘கறுப்பு இனத்தவரின் உயிரும் மதிப்பு மிக்கது’ (Black Lives Matter – BLM) என்ற சமூக அமைப்பு தற்போது மிகவும் பலமடைந்து வருகிறது.

தொழிற்சாலைகளில் ஒரே கூரையின் கீழ் ஒரே விதிகளின் அடிப்படையில் நிற, மத பேதமற்றுச் செயற்பட்ட வெள்ளை இனத்தவர்களும், ஏனைய நிறத்தவரும் தற்போது தொழிற்சாலைகள் அற்ற நிலையில் ஏற்பட்டுள்ள புதிய புறச் சூழல் காரணமாக நிறத்தவர் பலரும் (வெள்ளை இனத்தவர் உட்பட)  தம்மீது பாரபட்சம் காட்டப்படுவதாகவும், சொந்த நாட்டு வெள்ளை இன  மக்களை விட அந்நியர்கள் அதிக சலுகைகளை அனுபவிப்பதாகவும் எழும் முரண்பாடுகள் அரசுக்கு எதிராகவே மாற்றமடைகின்றன. பல லட்சம் வெள்ளை இனத்தவர் வேலை அற்று உள்நாட்டில் இருக்கும் நிலையில் தொழிற்சாலைகளை அந்நிய நாடுகளில் நிறுவி லாபம் சம்பாதிப்பது தேச விரோதம் என்றவாறான அரசியலாக மாற்றமடைந்துள்ளது.

இங்கு கவனத்திற்குரிய அம்சம் என்னவெனில் ஒரு காலத்தில் நாடு முழுவதும் நிறைந்திருந்த தொழிற்சாலைகளின் முதலாளிமார்களைப் பாதுகாத்து, தொழிலாளர்களின் வருமானத்தில் வரிகளை விதித்த அமெரிக்க குடியரசுக் கட்சியினர் தற்போது அமெரிக்க தொழிலாளிகள் வேலையற்று இருப்பதாகவும், தொழிற்சாலைகளை உள்நாட்டிற்குள் நிறுவினால் வரிச் சலுகை அளிக்கப்படும் என அறிவித்து அமெரிக்க தொழிலாளர்களுக்காக குடியரசுக் கட்சி கண்ணீர் வடிக்கிறது. அதாவது தற்போது வலதுசாரிகளே தொழிலாளர்களுக்காக குரல் எழுப்புகின்றனர். இவ்வாறான அரசியலையே டொனால்ட் டிரம்ப் எடுத்துச் சென்றார். இதனால் வெள்ளை இனத் தொழிலாளர்கள் டொனால்ட் டிரம்ப் தமது இரட்சகர் என ஆராதித்தார்கள்.

இவ்வாறான மாற்றங்கள் அமெரிக்காவில் மட்டும் நிகழவில்லை. தொழில் வளர்ச்சியடைந்த ஐரோப்பிய நாடுகளிலும் இதுவே வரலாறாக மாறியது. தமது வரலாற்றுத் தாயகங்களின் அடையாளங்கள் அகதிகள், முஸ்லீம்கள், நிறத்தவர் போன்ற  அந்நியர்களின் வருகையால் அழிக்கப்படுவதாகவும்,  தமது தொழில்கள் பறிக்கப்படுவதாக, தமது வருமானங்கள் குறைவதாக, அரச உதவிகளைப் பெறுவதில் போட்டிகள் அதிகரித்திருப்பதாக, பாடசாலைகளில் சொந்த மக்களுக்கு இடங்கள் மறுக்கப்படுவதாக, வைத்தியசாலைகளில் சொந்த மக்களான தமக்கு சிகிச்சைகள் மறுக்கப்படுவதாகக் கூறும் வலுதுசாரி ஜனரஞ்சக அரசியல்வாதிகள், தேசியவாதிகள் என்போர் குரலிட்டனர். இதுவே இன்று அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் அதிகாரத்தை நோக்கிய போராட்டமாக மாறி வருகிறது.

ஏற்கெனவே குறிப்பிட்டது போல ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள இவ்வாறான வலதுசாரி ஜனரஞ்சக அரசியல் போக்குகள் தற்போது இத்தாலி, ஒஸ்ரியா, ஹங்கேரி ஆகிய நாடுகளில் அரசுகளைக் கைப்பற்றியும், போலந்து, செக் குடியரசு நாடுகளில் அதற்கான தாக்கங்கள் ஏற்பட்டுள்ளதையும் காண முடிகிறது.   

எனவே 20ம் நூற்றாண்டில் அமெரிக்க அரசியலில் கட்சிகளிடையே காணப்பட்ட இணக்கப் போக்கு படிப்படியாக மறைந்து பிளவுகள் ஆழமாக்கப்பட்டு வருகின்றன. கருத்தியல் அடிப்படையிலும் இடைவெளி அதிகரித்துள்ளது. வாக்காளர் மத்தியிலும் குறிப்பாக வலதுசாரி அரசியல் சக்திகள் தனிக்குழுவாக அல்லது வாக்காளர் குழாமாக மாறி வருகிறார்கள். மறு பக்கத்தில் ஜனநாயகக் கட்சியினர் சமூகத்தின் பல பிரிவினரின் பன்மைத்துவத்தைப் பிரதிபலிக்கின்றனர். இவ்வாறான வலது, இடது பிளவுகள் மத்தியதர வர்க்கத்தினரையே பாதித்துள்ளது. அதாவது மத்தியதர வர்க்கமும் கட்சிகளின் பிளவுகளுடன் இணைந்து கொண்டது.

அமெரிக்காவிலும் மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் வளர்ந்துள்ள லிபரல் கருத்தியல்கள் லிபரல் சர்வதேசியம் என அழைக்கப்பட்டன. மார்க்ஸ் குறிப்பிட்டது போல முதலாளி வர்க்கம் தமக்கே உரித்தானவகையில் உருவாக்கிச் செல்லும்  உள் முரண்பாடுகளே அதன் எதிரிகளையும் உற்பத்தி செய்கிறது. அதாவது இந்த லிபரல் ஜனநாயகத்தின் அடிப்படைச் சக்திகளாக மத்தியதர வர்க்கமே செயற்பட்டது. தொழில் வளர்ச்சியடைந்த நாடுகளில் இந்த மத்தியதர வர்க்கமே அதிக நலன்களை அனுபவித்தது. திறந்த பொருளாதாரமும், பல்தேசிய நிறுவனங்களின் வளர்ச்சியும் பலமான மத்தியதர வர்க்கத்தின் உருவாக்கத்திற்குத் துணை புரிந்தது. ஆனால் தற்போது லிபரல் ஜனநாயகம் என்ற பெயரில் மாற்றமடைந்து செல்லும் நவ தாரளவாத பொருளாதாரமும், அவற்றை வற்புறுத்திச் செல்லும் நாடுகளும் படிப்படியாக மக்களிடமிருந்து விலகி தமது நலன்களைப் பாதுகாக்கும் பணக்கார நாடுகளில் ஒரு வகைக் குழுவாக மாற்றமடைந்துள்ளன.

கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக குறிப்பாக இரண்டாவது உலக மகா யுத்தத்தின் பின்னர் உலக அளவில் பன்முகத் தன்மை வாய்ந்த அமைப்புகள், உலக செயற்பாடுகளை ஒழுங்கமைக்கும் வகையிலான ஸ்தாபனங்கள், பொருளாதாரங்களைத் திறப்பதற்கான வாய்ப்புகளை, உலக பாதுகாப்பு ஏற்பாடுகளை, ஜனநாயக தோழமையை லிபரல் ஜனநாயக கருத்தியல்களே தோற்றுவித்தன. உதாரணமாக, உலக வர்த்தக அமைப்பு, நேட்டோ ராணுவக் கூட்டு மற்றும் சமீபத்தில் உருவாகிய ஜி 20 என்ற பொருளாதாரக் கூட்டமைப்பு எனத் தோற்றமடைந்தன.

இருபதாம் நூற்றாண்டின் பலமான கருத்தியலாக செயற்பட்ட லிபரல் ஜனநாயக கருத்தியல்கள் மாற்றமடைந்து செல்வதற்கான அடையாளமாகவே அமெரிக்க அதிபராகத் தெரிவு செய்யப்பட்ட டொனால்ட் டிரம்ப் இன் வருகை அமைந்தது. அவரின் பதவிக் காலத்தில் வர்த்தக கொள்கைகள் மாற்றமடைந்தன. நட்புறவு நாடுகளுக்கிடையே பிளவுகள் அதிகரித்தன. குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் பலவும் அமெரிக்க தலைமையின் போக்கை ஆதரிக்கத் தயாராக இருக்கவில்லை. மனித உரிமைகள். சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் சர்வுதேச சட்டங்கள் என பல மீறப்பட்டன. உதாரணமாக அமெரிக்கா பரிஸ் ஒப்பந்தத்திலிருந்து விலகியது. ஈரானின் படைத் தளபதி ஒருவரை மிகவும் அப்பட்டமாகவே இன்னொரு நாட்டில் வைத்துக் கொலை செய்ததோடு தாமே செய்ததாக பகிரங்கமாக அறிவித்தது எனப் பல செயல்கள் இடம்பெற்றன. அது மட்டுமல்ல ஏற்கெனவே குறிப்பிட்டது போல லிபரல் ஜனநாயகத்தினை ஏற்றுக்கொண்ட நாடுகளில் உருவாகிய வலதுசாரி  ஜனரஞ்சக அரசியல் சக்திகளை உதாரணமாக, ஹங்கேரி, போலந்து, பிலிப்பைன்ஸ், துருக்கி போன்ற நாடுகளில் உருவாகிய சக்திகள் குறித்து மௌனமாக செயற்பட்டமை, பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகியதற்கான பின்னணிகள் போன்றன லிபரல் ஜனநாயக நெறிகளை ஏற்றிருந்த மத்தியதர வர்க்கத்தினரிடையே பிளவுகளைத் தோற்றுவித்தது.

இம் மாதிரியான பிளவுகளின் அடிப்படைக் காரணமாக அமைந்தது அமெரிக்க அரசியல் தலைமைகளின் ஏகபோக அதிகார செயற்பாடுகளாகும். அமெரிக்கா என்பது தனிச் சிறப்பு மிக்க நாடாக தாமே பிரகடனப்படுத்தி உலக அமைப்புகள் தமது கட்டளைகளை மதிக்காவிடில் அவற்றிலிருந்து விலகுவது அல்லது வழங்கும் நிதித் தொகையை முடக்குவது எனப் பயமுறுத்தல்கள் தொடர்ந்தன. கடந்த 70 ஆண்டுகளாக லிபரல் ஜனநாயகமும், அமெரிக்க அரசியல் அதிகாரமும் மிக அதிகளவில் இறுக்கமாகச் செயற்பட்டதன் விளைவே இன்றைய நிலமைகளாகும். உதாரணமாக, அமெரிக்க பொருளாதாரத்துடன் பல நாடுகளின் பொருளாதாரம் பிணைக்கப்பட்டிருந்தது. அமெரிக்க நாணயம், நாடுகளின் கூட்டு ஒழுங்கு முறை, அவற்றின் தலைமைகள் பல அம்சங்கள் மிக நெருக்கமாக இணைந்திருந்தது. ஆனால் இன்று சீனா, யப்பான மற்றும் ரஷ்யப் பொருளாதாரத்தின் வளர்ச்சி காரணமாக அமெரிக்க டொலருக்குப் பதிலாக மேற்குறித்த நாடுகளின் நாணயங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இதன் பின்னணியை ஆராய்ந்தால் கடந்தகால தொழிற் புரட்சி தற்போது மிகவும் மாற்றமடைந்துள்ளதை இவை உணர்த்துகின்றன. இதனால் மேற்குலக தொழிற்துறை ஆதிக்கம் படிப்படியாகக் குறைந்து வருகிறது. விஞ்ஞானத்தின் வளர்ச்சி, புதிய கண்டுபிடிப்புகள், புதிய தொழில்நுட்பம் உதாணமாக உயிரியல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு தொழில்நுட்பம், செயற்கை விவேக அறிவு, கல்வியின் அபரிமிதமான வளர்ச்சி போன்றன சகல நாடுகளுக்கும் கிட்டியுள்ளன. உலகம் முழுவதுமே நவீன மாற்றத்திற்குள் சென்றுள்ளது. இம் மாற்றங்கள் 21ம் நூற்றாண்டிற்கு ஏற்றவாறான புதிய கருத்தியலை நோக்கித் திரும்பியுள்ளது.

இதுவரை நாம் அவதானித்துள்ள லிபரல் ஜனநாயகத்திற்கு மாற்றீடான அரசியல் பொருளாதார கருத்தியல் உண்டா? என்ற கேள்வியை நோக்கிச் செல்ல வேண்டியுள்ளது. குறிப்பாக, உலகப் பொருளாதார வளர்ச்சியில் இரண்டாவது இடத்தை எட்டியுள்ள சீனாவின் வளர்ச்சி அதாவது ‘சோசலிச சந்தைப் பொருளாதாரம்’ புதிய கருத்தியலை முன்வைப்பதாகவே ஆய்வாளர்கள் கருதுகின்றனர். சமீபத்தில் சீனக் கம்யூ. கட்சி தனது 100வது ஆண்டு நிறைவினைக் கொண்டாடியது. அதனடிப்படையில் அக் கட்சி நீண்ட அறிக்கையினை வெளியிட்டிருந்தது. எனவே சீனக் கம்யூ. கட்சியின் சோசலிசப் பொருளாதாரம் தரும் புதிய கருத்தியலை விரைவில் பார்க்கலாம்.(தொடரும்)