பயனற்றுப்போகும் பொது முடக்கம்

பயனற்றுப்போகும் பொது முடக்கம்

 — கருணாகரன் — 

கொரோனா மரணத்தைத் தடுப்பதற்கும் தொற்றைக் கட்டுப்படுத்துவற்கும் அரசாங்கம் அறிவித்திருக்கும் பொது முடக்கத்தை மக்கள் பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை. குறிப்பாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மட்டக்களப்பு உள்ளிட்ட தமிழ்ப்பகுதிகளில். இங்குதான் மக்கள் அதிகமாக தெருவில் நிறைந்திருக்கிறார்கள். வழமையைப் போலச் செயற்படுகிறார்கள். 

இங்கே பொது முடக்கத்தைப் பலரும் பொருட்படுத்தவில்லை. இது மிகப் பெரிய தீங்கை விளைக்கக் கூடியது மட்டுமல்ல, பொறுப்பற்ற செயலுமாகும். தாமும் பாதிக்கப்பட்டு, மற்றவர்களையும் அபாயத்துக்குள் தள்ளி விடுவது. 

நாட்டின் பொருளாதாரப் பிரச்சினை, மக்களின் இயல்பு வாழ்க்கை, எதிர்காலத் தலைமுறையின் கல்வி உள்ளிட்ட பலவற்றை எப்படி மேம்படுத்துவது என்ற மிகுந்த நெருக்கடிகளின் மத்தியிலேயே அரசாங்கம் மிகத் தயக்கத்துடன் இந்தப் பொது முடக்கத்தை அறிவித்தது. அதுவும் பல்வேறு தரப்பினரின் கோரிக்கை மற்றும் தொற்று – மரணம் ஆகியவற்றின் அதிகரித்த போக்கையெல்லாம் கணக்கிட்ட பிறகே. ஆனால் இவர்களோ இதையெல்லாம் பொருட்படுத்தியதாக இல்லை. 

இதனால் இந்த நகரங்களில் உள்ள கடைகள் மட்டும் மூடப்பட்டுள்ளனவே தவிர, மற்ற அனைத்தும் வழமையைப் போலவே நடக்கின்றன. திருமணம், பூப்புநீராட்டு, வீடு குடிபுகுதல் எல்லாம் ரகசியமாகக் கொண்டாடப்படுகின்றன. 

இதையெல்லாம் எப்படிக் கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் (PHI) தலையைப் பிய்க்கிறார்கள். மரண நிகழ்வுகளில் 25 பேர் மட்டும் கலந்து கொள்ளுங்கள் என்றால் 150 பேருக்குக் குறையாமல் நிற்கிறார்கள். எந்த வழமையையும் விட்டுக் கொடுப்பதற்கு தாம் தயாரில்லை என்பதாக நடந்து கொள்கிறார்கள். 

இது ஒரு மிக மோசமான அபாயச் சூழல். கண்ணுக்கு முன்னே மரணம் தலைகளைக் கொண்டு போய்க் கொண்டிருக்கிறது என்று தெரிந்து கொண்டும் இப்படிப் பொறுப்பற்று நடக்கிறார்கள் என்றால்… 

இதை எப்படி எடுத்துக் கொள்வது? இவர்களை என்ன செய்யமுடியும்? 

தங்களுக்கும் ஆபத்தைத் தேடிக் கொண்டு மற்றவர்களையும் ஆபத்தில் தள்ளி விடும் செயல் இதுவல்லவா. 

தென்பகுதியில் (சிங்களப் பகுதிகளில் இப்படி நடக்கின்றவர்களின் மீது பொலிஸ் வழக்குப் பதிவு செய்கிறது. ஆனால் வடக்குக் கிழக்கில் இந்த நடவடிக்கையைக் காண முடியவில்லை. 

வீதிகளில் அங்கங்கே படையினர் கண்காணிப்புக்காக நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்தான். ஆனால் அவர்கள் ஏன் நிற்கிறார்கள் என்று அவர்களுக்கும் தெரியாது. சனங்களும் அவர்களைப் பொருட்படுத்துவதேயில்லை. தற்செயலாக வழிமறித்து அவர்கள் விசாரித்தால் ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லிக் கொண்டு போய் விடுகிறார்கள். 

இப்படியே தொடர்ந்தால் இந்தப் பொது முடக்கத்தினால் எந்தப் பயனுமே இல்லை. அபாய நிலைதான் அதிகரிக்கும். நாடு மரணக்குழியில் விழும். இது மேலும் மேலும் எல்லாத் தளங்களிலும் நெருக்கடிகளை உண்டாக்கும். 

நாட்டின் பொருளாதார நிலையில் உண்மையாகவே பொது முடக்கத்தை அறிவிக்கவும் முடியாது. அதை மேலும் தொடரவும் முடியாது. ஆனாலும் எதிர்க்கட்சிகள், மருத்துவ சங்கம், பிற தொழிற்சங்கங்கள் மற்றும் சர்வதேச சமூகத்தின் கோரிக்கைகள் போன்றவற்றின் கருத்துகளைக் கவனத்திற் கொண்டே இந்தப் பொது முடக்கத்தை அரசு அறிவித்துள்ளது. 

ஒரு தவிர்க்க முடியாத நிலையில்தான் இந்த முடக்கத் தீர்மானம் எடுக்கப்பட்டது என்பது அனைவருக்குமே தெரியும். 

இந்த முடக்கத்தினால் நாட்டுக்குப் பெரும் பின்னடைவு. நாட்டுக்குப் பின்னடைவு என்றால் அது மக்களுக்குத்தான் பின்னடைவாகும். இதை ஏன் இந்தச் சனங்கள் புரிந்து கொள்கிறார்களில்லை? 

தினமும் கண்ணுக்கு முன்னே மரணமோ அதிகரித்துக் கொண்டிருக்கிறது. தெரிந்தவர்கள், அறிந்தவர்கள், நெருங்கிப் பழகியவர்கள், உறவினர்கள் என்று சாவு பலியெடுத்துக் கொண்டுள்ளது. அதை விடப் பயங்கரமான வேகத்தில் தொற்றுப் பரவுகிறது. 

இருந்தும் இந்தப் பொறுப்பற்ற தனம் நீடிக்கிறது என்றால்… இதற்கான பொறுப்பை அனைவருமே எடுத்துக் கொள்ள வேண்டும். 

பொதுமுடக்கத்தைக் கோரிய மருத்துவ சங்கத்தினர், எதிர்க்கட்சிகள், தொழிற்சங்கங்கள், மக்கள் நலனைக் குறித்துச் சிந்திக்கும் தரப்பினர்கள், ஊடகத்துறையினர் மற்றும் பொலிஸ் உள்ளிட்ட பாதுகாப்புத் தரப்பினர் அனைவருக்கும் இதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும். 

அரசாங்கம் பொது முடக்கத்தை அறிவித்தால் அதற்குக் கட்டுப்பட்டு ஒத்துழைக்க வேண்டும் என்பதை இவர்கள் மக்களுக்கு எடுத்துரைக்க  – இடித்துரைக்க வேண்டும். இதற்கான விழிப்புணர்வையும் பொறுப்புணர்வையும் உருவாக்க வேண்டும். 

ஆனால் இவர்களின் குரலைக் காணவே முடியவில்லை. 

நிலைமை மோசமாகினால் அரசாங்கத்தைக் குற்றம் சாட்டுவதில் குறியாக இருக்கிறார்களே தவிர, இது ஒரு தேசியப் பேரிடர், உலகப் பேரிடர் என்ற புரிதலோடு நடந்து கொள்வதாகத் தெரியவில்லை. 

ஒரு நாட்டுக்கு இதை விடத்தீங்கான நிலைமை வேறில்லை. 

அதாவது ஒவ்வொருவரும் ஒவ்வொரு தரப்பும் பொறுப்பற்று நடந்து கொள்ளும் நிலைமை என்பது. 

ஒரு வீட்டில் உள்ள பிள்ளைகளோ பெற்றோரோ பொறுப்பற்று நடந்தால் அந்தக் குடும்பம் அப்படியே சிதைந்து உருப்படமுடியாமல் போகும் அல்லவா ஏறக்குறைய அதே நிலைமைதான் இதுவும்.  நாட்டிலுள்ள மக்களும் அவர்களை வழிநடத்தும் தரப்புகளும் தமது பொறுப்பை எடுத்துக் கொள்ளவில்லை என்றால் அதன் பிரதிபலிப்பு நாட்டுக்கே. மீளவும் நினைவூட்டலாம், நாடு என்பது வேறொன்றுமில்லை, மக்களும் அவர்கள் வாழ்கின்ற இடமும் அவர்களுக்கான வளங்களும் பாதுகாப்புமே. 

தொற்று அபாயத்தைப் பொருட்படுத்தாமல் திரிவது என்பது பைத்தியக்காரத்தனத்தை ஒத்ததே. இன்னொரு பைத்தியக்காரத்தனம்,தடுப்பு ஊசியைப் போட்டுக் கொள்ளாமல் தலைமறைவாகத் திரிவதாகும். 

உலகம் முழுவதும் தடுப்பு ஊசியைப் போடும் நடவடிக்கை நடந்து கொண்டிருக்கிறது. வளர்ச்சியடைந்த நாடுகளில் உள்ளவர்கள் கூட தடுப்பு ஊசியைப் போடும் விவகாரத்தில் குழப்பத்துக்கும் தயக்கத்துக்கும் உள்ளாகியிருப்பதை அவதானிக்கலாம். ஆனால் அவர்களுக்கும் நிலைமையின் விபரீதத்தை விளக்கி மெல்ல மெல்ல தடுப்பு ஊசியை ஏற்றி வருகிறார்கள். 

நம்முடைய திருநாட்டில் மட்டும் இது மிகப் பலவீனமாகவே உள்ளது. 

சில இடங்களில் குடும்பத்தில் ஒருவர் கூட ஊசியைப் போடாமலிருக்கிறார்கள். அந்தளவுக்கு அசட்டுத் துணிச்சல். 

இதையும் கண்காணிக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு. 

அரசு என்பது நாமும் இணைந்ததே. அதிலும் நெருக்கடிக் காலங்களிலும் பேரிடர்ச் சூழலிலும் மக்களே அரசாக நின்று செயற்பட வேண்டும். அப்படியென்றால்தான் நாட்டையும் பாதுகாக்கலாம். நம்மையும் காப்பாற்றிக் கொள்ளலாம். 

உண்மையில் பொது முடக்கத்தை ஏற்றுக் கொள்வது என்பது சிரமமானதே. வாழ்க்கைப் பிரச்சினையிலிருந்து உளவியல் ரீதிவரையில் கடினமான நிலைமைகளை உண்டாக்கக் கூடிய ஒன்றே. தவிர, கொரோனாவுடன் வாழப்பழகுவதல் என்பதே இனி வரக்கூடிய உலக நிலைமையாகும். அதற்கான தயார்ப்படுத்தலின் முதற்பகுதியே தடுப்பு ஊசி ஏற்றும் நடவடிக்கையாகும். 

தடுப்பு ஊசியை ஏற்றி முடிந்த பின்னர் பெரும்பாலும் உலகம் முடக்கத்தைக் கைவிடலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரையிலும்தான் இந்தப் பொது முடக்கம். 

ஆகவே பொது முடக்கத்தைக் கை விடுவதற்கான அடிப்படைகளை நாம் கவனித்துக் கொள்ள வேண்டும். அதில் ஒன்று சுயபாதுகாப்பு ஏற்பாடும் சமூகப் பாதுகாப்பு ஏற்பாடும் ஆகும். இவை இரண்டிலும் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். 

கொரோனாவுடன் வாழப் பழகுதல் என்பது ஒரு அறிவுபூர்வமான செயற்பாடாக இருக்க வேண்டுமே தவிர, அதொரு விபரீதமான குருட்டு நம்பிக்கையாக இருக்கக் கூடாது. 

அறிவு பூர்வமான செயற்பாட்டில் மேற்கொள்ளப்படும் முன்னேற்பாடு, முற்பாதுகாப்பு போன்றவை முக்கியமானவை. இதை அனுசரித்து நடக்கும்போதே சுய பாதுகாப்பும் சமூகப் பாதுகாப்பும் சாத்தியமாகும். 

இதைக்குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பே இன்றைய அவசியமாகும். 

ஆனால் இலங்கையின் துரதிருஷ்ட நிலைமைகளில் ஒன்று எத்தகைய விழிப்புணர்வுக்கும் ஒரு பெரிய நிதிச் செலவழிப்பை  பலரும் எதிர்பார்ப்பது. அடுத்தது இதை மேற்கொள்வதற்கு ஏதாவது ஒன்று அல்லது பல தொண்டர் அமைப்புகள் வேண்டும் என்ற புரிதல். ஏறக்குறைய இந்த மாதிரியான விசயங்களை ஒரு தொழிற்துறையாகவே கையாண்ட பழக்கத்தின் வெளிப்பாடு இதுவாகும். 

இந்தச் சிந்தனையினாலும் இதற்கென காத்திருக்கும் கூட்டத்தினாலுமே இலங்கையில் நல்லிணக்கமும் பகை மறப்பும் சாத்தியமற்றுப் போயின. போருக்குப் பிந்திய மக்களின் வாழ்வாதார மேம்பாட்டு நடவடிக்கைகள் தோல்வியடைந்தன. சமாதானம் கைகளை எட்டாமலே இருக்கிறது. 

ஆனால் இவற்றுக்கென ஒதுக்கப்பட்ட பல ஆயிரம் டொலர்கள் கரைந்து விட்டன. 

ஆகவே விழிப்புணர்வுக்கென எந்த ஏஜெண்டுகளையும் நம்புவதால் பயனில்லை. பதிலாக நம்முடைய இதயத்தை நம்பினால் போதும். ஒவ்வொருவருடைய இதயத்தையும் திறந்தால் போதுமானது. இந்த நாட்டில் அதற்கு ஏராளம் தரப்புகள் உண்டு. அவை முன்வந்தால் போதும். 

தேசப்பற்று என்பது நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வதுதான். நம்மைப் பாதுகாத்துக் கொள்வோம் என்பதே தேசத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்குச் சமமாகும். 

இந்தப் பேரிடர் காலத்தை எதிர்கொள்வதிலும் இதிலிருந்து மீள்வதிலுமே இலங்கையின் எதிர்காலம் தங்கியுள்ளது. அதாவது நம்முடைய எதிர்காலம் தங்கியுள்ளது. போரான போருக்குச் சுழித்துத் தப்பியவர்கள் நாம். இதென்ன அதை விடப் பெரிசா? என்று சிலர் கருதலாம். அப்படிச் சொல்வோரையும் நேரில் பார்த்திருக்கிறேன். 

போரில் தப்பிய கதைகளை இதனுடன் பொருத்திப் பார்க்க முடியாது. அது வேறு. இது வேறு. இந்தப் புரிதலும் தெளிவும் இல்லை என்பதே எவ்வளவு பெரிய பயங்கரம்? 

இதனால்தான் படையினரை உச்சிக் கொண்டே போகும் துணிச்சலும் தந்திரமும் பிறக்கிறது. 

அரசாங்கமும் பொது முடக்கத்தைச் சற்று இறுக்கமாகக் கடைப்பிடிக்க வேண்டும். மீறுவோரின் மீது நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் இதனால் எந்தப் பயனுமில்லை.