மக்கத்துச் சால்வை மண்ணும் மணமும்: ஒரு அறிமுகமடல்! கடுகு சிறிது காரம் பெரிது!! (காலக்கண்ணாடி 53)

மக்கத்துச் சால்வை மண்ணும் மணமும்: ஒரு அறிமுகமடல்! கடுகு சிறிது காரம் பெரிது!! (காலக்கண்ணாடி 53)

 — அழகு குணசீலன் — 

பாசமுடன் எஸ்.எல்.எம். மாமாவுக்கு! 

அஸ்ஸலாமு அலைக்கும். 

உங்கள் மக்கத்துச் சால்வையின் மண்ணும் மணமும் என் கரங்களில் மணம் வீசிக் கொண்டிருக்கின்ற இந்த தருணத்தில் இம்மடலை வரைகிறேன். 

எங்கிருந்து தொடங்குவது என்றே தெரியவில்லை. இருநூறுக்கும் மேற்பட்ட பக்கங்கள் ஐம்பதுக்கும் மேற்பட்ட நெஞ்சில் நிறைந்த பதிவுகளும், பதிவாளர்களும். இவர்கள் அனைவருமே உங்கள் கூட்டாளிகள், தோழர்கள். உங்கள் ஆழ, அகலத்தை  நன்கு அறிந்தவர்கள். 

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.டி.எம்.றிஸ்வி மாணிக்கம்பிட்டி முஸ்லீம் கொலனியில் தொடங்குகிறார். மாணிக்கம்பிட்டி தான் எனக்கும் பொருத்தமாகப்பட்டது. கதுருவெல மாணிக்கம்பிட்டி, முஸ்லீம் மகா வித்தியாலயத்தில்தானே நாம் முதன் முதலாக சந்தித்துக் கொண்டோம்.  

1985/1986 காலப்பகுதி, றிஸ்வியின் பதிவு பேசும் அந்த வீட்டில் மாமா குடும்பம் இருந்த காலம். மாமா மருமகன் உறவு மலர்ந்தது. பிள்ளைகள் மாணவர்களானார்கள். மாணிக்கம்பிட்டி மாமாவை “மாட்டு டாகுத்தர்” என்று கூப்பிட்டது. இத்தனைக்கும் நீங்கள் மாட்டுக்கு மட்டுமல்ல மரங்களுக்கும், மக்களுக்கும் வைத்தியம் செய்தவர்.  

சிறந்த உளவியல் வைத்தியர். உங்கள் எழுத்தும், பேச்சும் தான் மருந்து. 

அழகியலையும் அறிவையும் அள்ளி வீசி, அனைவரையும் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் அற்புதமான கலவையும், குளிசையும். 

இவள் “கடுகு” கதை சொல்லி மாஜிதா இருக்கிறாளே. துடிப்போ, துடிப்பு. வாய்க்காரி. வாயைக்கொடுத்தால் போய்ச்சி. இல்லையேல் வாப்பாவை மிஞ்சி அவளால் கதை சொல்ல முடியுமா என்ன? கடுகு சிறிது காரம் பெரிது. 

பொலநறுவையின் பொல்லாத வெயிலில் புழுங்கிய களைப்பில் ஒரு குட்டித்தூக்கம் போட்டு மாலையில் எழும்போது மாமாவின் கட கட ஈருளிச் சத்தம் கேட்கும். எஸ்.எல்.எம் வருகிறார் அவருக்கும் பிளேன்டி ஊத்துங்கோ என்று ஒரு குரல் கேட்கும். 

இது உங்களிடம் கதை கேட்டு காகிதத்தையும், அறைத்திறப்பையும் கையில் திணித்த நண்பர் இராசரெத்தினத்தின் குரல். எங்கள் அறையில்தான்  “கடுகு பொரிந்தது” நினைவிருக்காகா….? 

வந்ததும் வராததுமாக கதை கதையாகச் சொல்லி, சிலேடையும், இரட்டைக் கிழவியும் பேசி வயிறுகுலுங்கச் சிரிக்கவைத்து எங்கள் களைப்பைப் கழுவி விடுவீர்கள். பாராக்கிரம சமுத்திரத்தில் பாய்ந்து குளித்தது போன்ற புதுத் தெம்பும், புத்துணர்வும் தரும் சுகம் அது. 

நண்பர்கள் வசந்தராசபிள்ளை, குமரகுரு, இராசரெத்தினம் எல்லோரும் சிரித்து…… சிரித்து….. மகிழ்வோம். ஒரு சில மாலைப்பொழுதில் நண்பர் பால.சுகுமாரும் கல்லெலயில் இருந்து வந்து எம்மோடு இணைந்திருக்கிறார். இத்தொகுப்பை படிக்கும் போது நினைவுகள் நிழலாடுகின்றன. எத்தனை, எத்தனை மதினிமார் கதைகள்…? 

நொயல் நடேசன் உங்களை பார்த்தசாரதி என்று அழைக்கிறார். ஆம்!  

எனக்கும் அது பிடித்துப்போனது. அவர் எந்த பார்த்தசாரதியை கருதினார் என்பதுதான் கேள்வி? 1983இல் இந்திராகாந்தி கொழும்புக்கு அனுப்பிய வெளியுறவுச் செயலரையா? அல்லது ஐவருக்கும் நூற்றியொருவருக்கும் இடையிலான பாரதப்போர் தேர் ஓட்டியையா? எதுவாகவும் இருக்கட்டும். 

எனக்குப் பிடித்தது தேர் ஓட்டி பாத்திரம். ஏன் தெரியுமா? அங்குதானே பெரும்பான்மை கௌரவ அக்கிரமங்களை, சிறுபான்மை பாண்டவ தர்மம் வென்றது அதனால். 

“வட-கிழக்கு மாகாணசபை முஸ்லீம்களின் உரிமைக்கான கேள்விகளின் உரைகல்லாய் மாறியது எஸ்.எல்.எம். இன் மாகாணசபைப் பேச்சுக்கள். முஸ்லீம்களில் வாடியிருந்தோரின் உயிர்களைக் துளிர்க்க செய்தது. மாகாண அரசுத்தமிழர்களோடு நல்லுறவை வளர்த்துக் கொண்டோம். இரு சாரார்களுக்கும் ஒரேவிதப் பிரச்சினைகள் என்பதைக் கண்ணாரக் கண்டோம்” என்று, உங்கள் இன உறவுப் பணியை பாராட்டுகிறார் உங்கள் அரசியல் பாசறையில் வளர்ந்த வேதாந்தி. 

எனக்கு தெரிந்த வகையில் நீங்கள் மா, பலா மரங்களை மட்டும் ஒட்டவில்லை. தமிழ், முஸ்லிம் உறவுக்கும் ஒட்டுப் போட்டவர். உறவுப்பாலமாய் இன்றும் இருப்பவர். இனங்களுக்கு இடையிலான மனக்காயங்களுக்கு மருந்து கட்டியவர். ஆதனால் ஏற்பட்ட வடுக்களை அகற்றப் பாடுபட்டவர்/பாடுபடுபவர். 

“இலங்கை முஸ்லிம் அரசியல் செயற்பாட்டாளர்களுள் ஒருவராக எஸ்.எல்.எம் தன்னை முன்னிறுத்திக் கொண்டாலும், ஈழப்போராட்ட வாழ்வனுபவங்களை நேரிட்கண்டு அனுபவித்தவர். விடுதலைப்புலிகளின் ஈழ தனிநாட்டுக் கோரிக்கையை தன் பிரதேச கட்சி எதிர்ப்பலைகளுக்கிடையில் தனியொருவனாக நின்று ஆதரித்தாலும், புலிகளின் அடக்குமுறைசார் அதிகார ஆணவத்தின் மீது கொண்ட வெறுப்பால் தன் கருத்தை மாற்றிக் கொண்டவர்” என்று உங்கள் தார்மீக அரசியலை பேசுகிறார் எஸ்.றமீஸ் பர்ஸான். 

“கரிசல் காட்டுக்கு ஒரு கி.ராஜநாராயணன் என்றால் மட்டக்களப்பு தமிழுக்கு ஒரு எஸ்.எல்.எம். என்று தயக்கமின்றி சொல்லலாம். ஆனால் அதேநேரம் அவரை ஒரு வட்டார வழக்கு எழுத்தாளராக அடக்கி மடக்கிவிட முயல்வது தவறு” என்று பதிவிடுகிறார் முற்போக்கு இலக்கிய களத்தில் வளர்ந்த எஸ்.கே.முருகானந்தன். அவர் சொல்வது போன்று உங்களை அடக்கவும் முடியாது, மடக்கவும் முடியாது. பலர் முயற்சித்தும் அது பலிக்கவில்லை. 

இது எம்.ஏ.நுஃமான் எடுத்த முத்து: “மாப்புள்ள எப்படி மச்சி”?. இது மணப்பெண் ஆசியாவின் கேள்வி. “மாப்புளைக்கென்னடி, தம்பன் கடவையில் மாட்டுப்பட்டி, காணி வயலெல்லாமிரிக்கி, மூத்த பொஞ்சாதி மவுத்தாப் பெயித்தாவாம். உண்டேகாக்கா, போடியாரு ஒரு காரியம் பாத்தா அதிலெ ஒரு குறையும் வராது” என்ற உங்கள் சிறுகதையான “பொம்மை” இல் இருந்து சமூக, பொருளாதார சூழலையும், மட்டக்களப்பின் முஸ்லீம்களின் கிராமிய பேச்சு வழக்கையும் தேடி முத்துக் குளித்திருக்கிறார் நுஃமான் சேர். 

“தேர்ந்த ஓவியர் போலவே ஹனீபா காட்சிகளைக் கண் முன்னே தீட்டிக்காட்டுகிறார். கதாபாத்திரங்கள் நம் முன்னே நடமாடுகிறார்கள். 

மக்கத்துச் சால்வை எத்தனை அழகான சிறுகதை சிலம்புப் போட்டி பற்றித் தமிழ் நாட்டில் யாரும் இப்படி எழுதியிருக்கிறார்களா எனத்தெரியவில்லை. உண்மையில் இக்கதை ஒரு திரைப்படத்திற்கானது” என்று மக்கத்துச் சால்வைக்கு எஸ்.ராமகிருஷ்ணன் சூட்டும் மகுடம் இது. 

எஸ்.எல்.எம். மாமா! உங்கள் இணைபிரியா நண்பர் படைப்பாளி மர்ஹும் வை.அஹமத் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டபோது நீங்கள் அடைந்த துயரை நான் அறிவேன். மெல்லிய உங்கள் உடலுக்குள் மறைந்திருந்த அந்த வலிமையை அந்த வலி விஞ்சி இருந்தது. அவரின் இழப்பு உங்களை தனிமைப்படுத்தியது. அந்த அதிர்ச்சியில் இருந்து மெல்ல மெல்ல விடுபட காலம் எடுத்தது. 

நீங்கள் வை.அஹகமத் குறித்து குறிப்பிட்டதை ஆவணப்படுத்தியுள்ளார் பேராசிரியர் செ.யோகராசா. அதை இங்கு பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். “தி.ஜானகிராமனின் அம்மாவந்தாள் நாவலில் வரும் அலங்காரத்தம்மாளின் திரைமறைவுச் செயல்களை வை.அஹமத் அவர்களே உங்களுக்கு புரியவைத்தாக” வாக்குமூலம் அளித்துள்ளீர்கள். 

“மலையாள மொழி பெயர்ப்பு படைப்புகளில் ஏற்பட்ட ஈடுபாடு அதிகளவு மலையாள கதைகளையும் நாவல்களையும் படிக்க தூண்டியதனால் இளவயதிலேயே மலையாள படைப்பாளிகளை கொண்டாடினீர்கள் என்றும், மறைந்த வி.ஆனந்தன் போன்றவர்களும் இந்த வகையில் உங்களுக்கு வழிகாட்டியானார்கள்” என்றும் உங்கள் இலக்கிய ஆளுமையை மதிப்பிடுகிறார் பேராசிரியர் செ.யோகராசா. 

உங்கள் இலக்கிய உறவுக்கு கட்டியம் கூறும் கடிதங்கள் சில தொகுப்பில் உள்ளீடாக அமைகின்றன. எஸ்.பொ., அன்புமணி, சுந்தரராமசாமி, உமாவரதராஜன், பித்தன் ஷா, செல்வராசா உள்ளிட்டோர் உங்களுக்கு எழுதிய இலக்கிய நட்புக்கு இலக்கணமான மடல்கள் அவை. உங்கள் வாப்பா உங்களுக்கு எழுதிய கடிதம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது. இவை அனைத்தும் ஆவணப்படுத்த வேண்டியவையே. தொகுப்பாளர்கள் தங்கள் பணியை சரியாகவே செய்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். 

உமர்முக்தாரை நினைவூட்டும் வகையில் மூக்குக்கண்ணாடியும், குல்லா தாடியும் கொண்ட உங்கள் முகத்தை பதினொரு ஓவியர்கள் தங்கள் கைவண்ணத்தில் தந்திருக்கிறார்கள். பல்வேறு கோணங்களில், முகபாவனையில், உணர்ச்சி வெளிப்பாட்டில் உங்கள் முகம் கதை கதையாய் சொல்கிறது. இவற்றை வரைந்த புகழ், ரஷ்மி, நளீம், பிருந்தாஜினி, கோமதி, சரவணன், லஜ்ஜாத், ஏ.எம்.சமீம் ஆகியோர் பாராட்டுக்குரியவர்கள். அந்தப் பக்கத்தை மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றுகிறது. 

“அசல் மட்டக்களப்பான்….” என்று தனது முத்திரையை உங்கள் மீது அழுத்திக் பதிக்கிறார் “அரங்கம்” மின்னிதழ் ஆசிரியர் பூபாலரெட்ணம் சீவகன். “மதத்தால் இவர் ஒரு இஸ்லாமியர். ஆனால் அடித்துச் சத்தியம் செய்தால்தான் எவரும் அதனை நம்புவார்கள். அந்த மாதிரித்தான் அவர் போக்கு. தமிழை மாத்திரமல்ல ஒரு தமிழ்ப் பெண்ணையும் காதலித்தவர். பேசவிட்டால் என்னைவிடச் சிறந்த தமிழர். ஒட்டுமொத்தத்தில் இவர் ஒரு மட்டக்களப்புச்  சோனகன்….. இல்லையில்லை மட்டக்களப்புத் தமிழன்….. இல்லை ஒரு மட்டக்களப்பான். இவரிடம் இரு சமூகங்களும் நிறையவே படிக்க இருக்கிறது”. இவை ஒரு மூத்த ஊடகவியலாளனின் உண்மையின் தரிசனமான வார்த்தைகள். 

இந்தத் தொகுப்பில் மக்கத்துச்சால்வையும், அவள் ஒரு பாற்கடலும் திரும்பத் திரும்பப் பேசப்பட்டாலும் ஒவ்வொரு நோக்கும் வித்தியாசம் கொண்டவை. இது உங்கள் இரு பெரும் படைப்புக்களுக்கு கிடைத்த பெரும் வெற்றி. இல்லையேல் அவை எந்த அலுப்புச் சலிப்பும் இன்றி திரும்பத்திரும்ப பேசப்படுமா? 

உங்கள் படைப்புக்களை இத் தொகுப்பில் பேசியவர்கள் அனைவரையும் குறிப்பிடவும், அவர்கள் அனைவரதும் கருத்துக்களை பகிரவும் இச் சிறு அறிமுக மடல் தாங்காது என்பதால் தவிர்ப்பது தவிர்க்க முடியாததாகிறது. உங்கள் நண்பர்கள் உங்களைப் போன்றவர்கள் அல்லவா? அவர்கள் புரிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் கடந்து செல்கிறேன். 

ஜெயமோகன், தெளிவத்தை யோசப், தேவமுகுந்தன், இளங்கோ, தமயந்தி, முருகபூபதி, என் ஆத்மா ஆகியோரும் உங்கள் படைப்புக்களையும், உங்களுடனான உறவையும் படம் போட்டுக் காட்டுகிறார்கள். அனைத்தும் கனதியான மதிப்பீடுகள் என்பதை இங்கு குறிப்பிட வேண்டும். 

மூத்த படைப்பாளி முருகபூபதி பற்றி குறிப்பிடும் போது ஒருவிடயம் என் நெஞ்சைத் தொடுகிறது. வீரகேசரி வார வெளியீட்டில் “இலக்கியப் பலகணி” என்ற பத்தியை முருகபூபதி (ரஷஞானி) எழுதிவந்தார். அவர் புலம்பெயர்ந்த பின்னர் நண்பர் பூதந்தேவனார் அதைத்தொடர்ந்தார். அவரும் வேறு தொழிலுக்கு சென்றபின் ஞாயிறு வாரமலர் ஆசிரியர் இராஜகோபால் கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப ஜயசாந்தன் என்ற பெயரில் நான் தொடர்ந்தேன். எனக்குப் பின்னர் நண்பர் இரா.சடகோபன் தொடர்ந்தார். இலக்கியச் சாளரம் தொடர்ந்தது. 

இலக்கிய சாளரத்தில் “கவிதைச்சமர்” என்ற ஒரு பகுதியை ஆரம்பித்திருந்தோம். இதை முதலில் செங்கதிரோனும், மைக்கல் கொலினும் ஆரம்பித்து வைத்தார்கள் என்பது என் நினைவு. சமரை அறிமுகப்படுத்துவதற்காக கவிஞர் மேத்தாவின் இந்த புதுக்கவிதையை பதிவிட்டேன். 

“முன்பெல்லாம்  

 சில்க் என்பது துணியாச்சி 

 இப்போதெல்லாம் 

 துணியில்லாமல் இருப்பதே சில்க்காய்ச்சி” 

நடிகை சில்க் சுமிதா குறித்த கவிதை இது. இதனைப் பதிவிட்டு இக்கவிதை வெறுமனே அழகியலை  முதன்மைப் படுத்துகிறது மக்கள் வாழ்வியலை மறந்து விட்டது என்று பதிவிட்டிருந்தேன். 

அடுத்த வாரம் மாணிக்கம்பிட்டி பள்ளிக்கூடத்துக்கு என்னைத் தேடிவந்த நீங்கள் மருமகனுடன் சண்டை போடவந்திருக்கிறேன் என்று கூறி இலக்கியத்தில் அழகியலின் அவசியத்தை வலியுறுத்தினீர்கள். அடுக்கடுக்காக ஆழமான கருத்துக்களை உங்கள்  வாதத்திற்கு முன் வைத்தீர்கள். இந்த அழகியல்  உங்களின் படைப்புக்களில் எங்குமே நிறைந்து கிடக்கின்றது. இவை உங்கள் படைப்புக்களுக்கு  உப்பும், மிளகும், காரமும் போட்டவை. சமூக வாழ்வியலை அம்மணமாக காட்டுபவை..                                

இந்தத் தொகுப்பில் இடம்பிடித்திருக்கின்ற ஒரேயோரு ஆங்கில மொழி ஆக்கம் M.L.M.MANSOOR அவர்களுடையது. 

“….AS A WRITER AND A MUCH RESPECTED PUBLIC FIGURE BY BOTH COMMUNITIES, HE HAD THE CONVICTION & COURAGE  TO STAND  FOR JUSTICE & FAIR PLAY IN INTER- ETHNIC  RELATIONS. HE HAD ALSO CONFRONTED THE TAMIL MILITANT GROUPS, AS WELL, DURING WAR YEARS WITH THE SAME CONVICTION & COURAGE.”  

இப்படி நீதியும், நேர்மையையும், துணிச்சலும் நிறைந்த சமூகப் போராளியாக உங்களை இனம் காண்கிறார் உங்கள் நண்பர் மன்சூர். 

மன்சூர் அவர்கள் அண்மையில் இட்ட பதிவு ஒன்றில் ஓணாகம என்ற பொலநறுவை முஸ்லீம் கிராமத்தின் ஹமீத் ஆசிரியர் பற்றி பதிவிட்டிருந்தார்.  ஓணாகமவில்தான் எனது முதல் நியமனம். அந்த ஹமீத் தான் மாணிக்கம்பிட்டி முஸ்லிம் மகாவித்தியாலயத்தின் அதிபர். அதிகாலை நிலா வெளிச்சத்தில், மட்டக்களப்புக்கு மாட்டு வண்டியில் றங்குப் பெட்டிகட்டி படிக்கப் போனகதைகளை சொல்லிச் சொல்லிச் சிரிப்பாரே அவற்றை எப்படி மறப்பது.? நீங்கள் அருகில் இருந்து பக்கவாத்தியம்  போடுவீர்கள். ஒரே அமர்க்களமாய் இருக்கும். 

“…..மலையகப் பீலி போன்ற உரையாடல்தான் எஸ்எல்லத்தாருடையது. வார்த்தைகள் வந்து விழுந்து கொண்டேயிருக்கும். ஓசையும் நயமும் ஓயாமல் இருக்கும்.  அவ்வப்போது விழுந்து தெறிக்கும் சொற்களில் எள்ளல் மின்னி மறையும். கிழக்கு மண்ணுக்கே உரிய அந்த கொஞ்சுதமிழ் இவரிடத்தில் கொஞ்சம் தூக்கலாகவே கொட்டிக்கிடக்கும் இவ்வாறு மல்லியப்பூசந்தி திலகர் உங்கள் மொழியழகை துகிலுரிக்கிறார். 

இது பௌசரின் பார்வை. “இலங்கையில் ஒரு முஸ்லிம் எழுத்தாளனுக்கு தமிழ் மக்களுடனும், தமிழ் எழுத்தாளர்கள், கல்வியாளர்களுடனும் அதிகூடிய தொடர்பும், உறவும், ஆத்மார்த்தமான நட்பும் இருந்திருக்கிறது, இருந்து வருகிறது என்றால்  இப்போது என்னால் இருவரைத்தான் சொல்லமுடியும். ஒன்று எம்.ஏ.நுஃமான், அடுத்தது எஸ்.எல்.எம்.தான். எஸ்.எல்.எம். இனி எதை எழுதவேண்டும், எதைப் பதிந்து வைக்கவேண்டும் என என்னைக் கேட்டால் நான் எந்த தயக்கமுமின்றி  முன்னிலைப்படுத்தி, சொல்லக்கூடியது கிழக்கில் தமிழ் – முஸ்லிம் மக்கள் இணைந்து வாழ்ந்த வாழ்வை எழுதி விடுங்கள் என்பதுதான்”. 

உண்மைதான். இது பௌசரின் விருப்பம் மட்டுமல்ல கிழக்கின் படைப்பாளிகள், கல்வியாளர்கள், புத்திஜீவிகள் மற்றும் அரங்கத்தின் அனைவரதும் விருப்பம். பௌசர் இதை சரியாகவே வடிகட்டி தேர்வு செய்துள்ளார். எமது அடுத்த சந்ததிக்கு நீங்கள் கைமாற்றக்கூடிய முதுசம். செய்வீர்களா? இது காலத்தின் தேவை. வரலாற்றின் சாட்சியம். 

“காந்தமெனக் கவரும் மொழி நடை, மட்டக்களப்பு மண்வாசத்தில் புரட்டி எடுத்த வார்த்தைப் பிரயோகங்கள், கிராமிய மக்களின் ஒளிவு மறைவற்ற பேச்சு வார்த்தைகளின் அபிநயங்களை எழுத்தில் அப்படியே வடித்துக்காட்டும் வல்லமை, பண்பட்ட ஒரு கலைஞனுக்குரிய மணம்வீசும் சித்தரிப்புகள் இத்தனையும் கொண்டு ஈழத்து தமிழ்ச் சிறுகதை இலக்கிய படைப்பாளிகளில் இவர் முன் வரிசைப்படுகின்றார்.” 

எஸ்.பொ.வின் வார்த்தைகளில் சொல்வதென்றால் “இவன் பேனாகாட்டிய வழியில் பாத்திரங்கள் நடக்கவில்லை. பாத்திரங்களின் அடிச்சுவடுகளையே இவன் பேனா புள்ளியிடுகிறது” என்று உங்கள் சிறுகதைகளின் தரத்தை பேசுகிறார் வி.ஏ.ஜுனைத். 

உங்களுக்கும், ராத்தாவுக்கும் நெஞ்சில் நிறைந்த குறத்தி வசந்தன் பாடல் என் பள்ளிப்பருவத்தை கண்முன் தூக்கி நிறுத்துகிறது.. 

“குண்டிடுக்கி குடுகிடிக்கி 

   கூடை கையிலேந்தி 

   குனிந்து நின்று பழம் பொறுக்கும் 

   குறத்தியடியம்மே……….” 

 “ஆமை தின்போம் கீரி தின்போம்  

   அணில் அடித்துச் சுடுவோம். 

   அதற்கடுத்த சாதியடி 

   எங்கள் வேடச் சாதி!”. 

 பள்ளியில் குறத்தி வசந்தன் கூத்து ஆடியதும், சில ஆண்டுகளுக்கு முன் சுவிஸில் நண்பர் பால.சுகுமாருடன் இணைந்து மேடையில் பாடி ஆடியதும் மறக்கமுடியாத இனிய நினைவுகள். 

 மக்கத்துச் சால்வை மண்ணும் மணமும் என்ற தொகுப்பு உங்களை நாலாபக்கத்தாலும் அறுவைச்சிகிச்சை செய்திருகிறது. மக்களின் சமூக, பொருளாதார, அரசியல் வாழ்வியலை நீங்கள் உங்கள் படைப்புக்களுக்கு எப்படி கருவாக்கிக் கொண்டுள்ளீர்கள் என்பதை பலரது பார்வையில், பல கோணங்களில் அடித்துச் பேசுகிறது. பேசுபொருளாக்கி இருக்கிறது. மக்களின் ஜதார்த்த வாழ்வியல் குறுக்கு, நெடுக்கு வெட்டுமுகங்களை காட்டிநிற்கின்றது. 

தமிழ் கலை, இலக்கியத்திற்கு அப்பால் உங்கள் சமூக, அரசியல் வாழ்வை வெளிச்சத்திற்கு கொண்டுவருகிறது. இது இன்றைய தலைமுறை உங்களை கற்றுக்கொள்ள மிக மிக தேவையான ஒன்று. உங்கள் துணிச்சல் அரசியலில் ஒரு பேசு பொருளாகவே இருக்கிறது. “பெரியவர்கள்” என்ற அந்தஸ்தைப் பெற்றிருந்த பலர் “மதின்மேற்பூனையாக” இருந்த இக்கட்டான காலங்களில் நீங்கள் நீதிக்காகவும், நேர்மைக்காகவும், இன உறவுக்காகவும், வன்முறைகளுக்கு எதிராகவும், மனித உரிமைகளுக்காகவும் துணிந்து நின்று குரல் கொடுத்திருக்கிறீர்கள். 

இந்த அனைத்துப் பணிகளுக்குமான கௌரவமாக, வாழும் போதே மக்கத்துச்சால்வை வாசகர் வட்டம்  உங்களைக் கௌரவித்து ஒரு மகத்தான சமகாலப் பொறுப்பை நிறைவேற்றியிருக்கிறது.  

இன்றைய நவீன தொழில் நுட்ப உலகில் இன்னும் கொஞ்சம் நேர்த்தியாக இந்த தொகுப்பை செய்திருக்கமுடியாதா? என்ற ஆதங்கம் எனக்கும் வருகிறதுதான்.  

ஆனால் அது வந்த வழியில் மறைந்து விடுகிறது. 

ஏன் தெரியுமா? இத் தொகுப்பு ஒரு ஆவணம். அதன் வயது வெளியீட்டுக்காலம் அல்ல. அதில் இடம்பென்றிருக்கின்ற ஆக்கங்களின் காலம். பிரசுரிக்கப்பட்டுள்ள படங்கள் பேசுகின்ற காலம். இடம்பெற்றுள்ள கடிதங்கள் சொல்லுகின்ற கதைகளின் காலம். இந்த வகையில் மக்தக்துச்சால்வை மண்ணும் மணமும் உடுத்தி இருக்கின்ற பழைய கட்டுச்சாறனும், சோமன் பட்டும்  பொருத்தமானது என்றே எனக்குப் படுகிறது.  

இத்தொகுப்பை எஸ்.நளீம், செயலாளர், மக்கத்துச் சால்வை வாசகர் வட்டம், ஓட்மாவடி. அல்லது எஸ்.எல்.எம். அவர்களுடன் தொடர்பு கொண்டு  பெற்றுக் கொள்ள முடியும். 

பெருநாள் சிலம்படிக்கு பரிசாக மக்கத்துச்சால்வையும், பறங்கி வாழைப்பழமும் வழங்கப்படும் இல்லையா?  

ஆம்! இந்த தொகுப்பில் உள்ள ஒவ்வொரு ஆக்கமும்  ஒரு பறங்கி வாழைப்பழக் குலையில் இருந்து ஒவ்வொரு பழமாக பறித்து சுவைக்கும்சுவைக்கு ஈடானது. 

மக்கத்துச்சால்வையும் மண்ணும் மணமும் ஒவ்வொரு வீடுகளிலும் இருக்க வேண்டிய பறங்கி வாழைப்பழக்குலை. 

மாமாங்கம் கோயில் திருவிழாவில் சுடச்சுட, கத்தரிக்காய் பால்கறியுடன் சாப்பிடும்  குழல் புட்டு  போல், கடைசிக் கோப்பை சோத்தை சுங்கான்கருவாட்டு பாலாணத்துடன் சாப்பிட்டு முடிப்பது போல் படித்துப் சுவைப்பதற்கு பல ஆக்கங்கள் இத்தொகுப்பில் இருக்கின்றன. மட்டக்களப்பு மண்ணின் மக்களின் வாழ்வியல் மணம் வீசுகிறது. 

மாஷா அல்லாஹ். 

இலக்கியத்தில் எஸ்.பொ.வின் வழியில் முற்போக்குக்கும், பிற்போக்குக்கும் இடையில் நற்போக்கில் நடந்து வந்த படைப்பாளி நீங்கள்.! 

எஸ்எல்எம் நீங்கள் இனப்போர்க்களத்தில் தேரோட்டிய புருஷோத்தமன் !! 

“புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே இந்த புருஷோத்தமன் புகழ் பாடுங்களே ………….! 

இன்ஷா அல்லாஹ் !  

மீண்டும் சந்திக்கும் வரை ….! 

அன்புடன் 

மருமகன்.