— கருணாகரன் —
(இனவன்முறையினால் வடக்கு நோக்கி வந்த மலையக மக்களுக்கான நீதி இன்னும் கிடைக்கவில்லை. அவர்கள் நம்பி வந்த தமிழ்ப் பிரதேசங்களிலேயே (வடக்கிலேயே) புறக்கணிக்கப்படுகிறார்கள். பல வழிகளிலும் ஒடுக்கப்படுகிறார்கள். அரச நிர்வாகம் தொடக்கம் வளப்பகிர்வு, சமூக நிலை எனப் பல வகையிலும் இந்த அநீதி தொடர்கிறது. இந்த மக்களுடைய பிரச்சினைகளைக் குறித்து இதுவரையிலும் கவனத்திற்குரிய மைய உரையாடல்களோ ஆய்வுகளோ நடக்கவில்லை. இந்தக் கட்டுரைத் தொடர் அதனைப் பொதுவெளியில் திறக்க முற்படுகிறது. — ஆசிரியர்)
“துயரத்தின் வழி என்பது அநீதியின் பாதையே. அநீதியின் முகமோ இருண்டது, முட்கள் நிறைந்தது. மேடும் பள்ளமுமானது. நீரற்றது. நீரில்லா வழியில் நடந்தோம். நீங்கள் பார்த்துக் கொண்டேயிருந்தீர்கள். ”
(08)
கடந்து வந்த வாழ்க்கையைப் பேசுவது வேறு, அதிலுள்ள துயரத்தைப் பேசுவது வேறு. பலருக்கும் கடந்து வந்த வாழ்க்கையை நினைவு கூர்வது என்பது ஏதோ ஒரு வகையில் அவர்களுக்கு மகிழ்ச்சியையோ மன நிறைவையோ தரக் கூடும். இத்தனையையும் கடந்து வந்திருக்கிறோமே என்ற ஆச்சரியமான இனிமையை அது அளிக்கும். ஆனால், துயரத்தையே காவிக்கொண்டு நடந்தவர்களுக்கு இது சற்று வேறு விதமான உளநிலையை உருவாக்குவது. மறுபடியும் அந்த வேதனைப் பரப்பில் கொண்டு சென்று சேர்த்து விடக்கூடியது. காயங்களைப் புதுப்பிப்பதைப்போல. ஆனாலும் வரலாற்றுக்கு எப்போதும் உண்மைகளே தேவை. அது கண்டிப்பான கிழவியல்லவா! அந்தக் கண்டிப்பு சில வேளைகளில் இரக்கமற்ற விதமாக உண்மைகளை அடியாழத்திலிருந்து தோண்டி எடுத்து விடுகிறது. இதில் மீள்வலி நிகழ்வது என்பது நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் சுகப்படுத்துவதற்கான ஒரு வழியே. எப்படியென்றால், முள் தைக்கும்போது ஒரு வலி. அதை எடுக்கும்போது இன்னொரு வலி. இந்த இரண்டாவது வலியைத் தாங்கிக் கொண்டாலே முள்ளை எடுத்துக் காலைப் பாதுகாக்க முடியும். வலியைப் போக்கிக் கொள்ளவும் முடியும். அந்த மாதிரியே இதுவும்.
ஆகவே உண்மைகளைப் பேசாதவரையில், ஆழ்மனதில் புதையுண்டிருக்கும் துயரத்தை எடுத்து வெளியே போடாத வரையில் பாரச்சிலுவை நம்மை அழுத்திக் கொண்டேயிருக்கும். என்பதால்தான் இதையெல்லாம் பேச வேண்டியுள்ளது. இதில் மாற்றுப் பார்வைகள் நிறைய இருக்கலாம். அது இயல்பே. ஆனால் எல்லாவற்றுக்கும் அப்பால் இவையெல்லாம் உண்மை என்பதில் ஒரே கருத்தே இருக்க முடியும். ஏனென்றால் இது உண்மையின் ஆதாரமல்லவா.
இந்த உண்மைக்கு மேலும் ஒரு சாட்சியாக இருக்கும் கனகராயன்குளத்தைச் சேர்ந்த முத்தையா நல்லு (77) மேலும் சொல்கிறார், “நமக்கு அப்ப வாக்குரிமையெல்லாம் கெடயாது. அதனால நம்ம யாரும் கண்டுக்கல்ல. அவங்களுக்கு எதுக்குத்தான் நாங்க வேணும்? வேணும்னா கூலிக்கு ஆளிருந்தாப் போதும். அதுக்கு மேல என்ன வேண்டிக் கெடக்கு? அதனாலே நாங்கதான் நம்மை காவிக் கொண்டு போக வேண்டியிருந்திச்சு. எவ்வளவு பெரிய கஸ்டம் அது தெரியுமா? காட்ட வெட்டினாக் கூட அதுக்க தண்ணியக் காண்றதுக்குப் பெரியபாடப்பா. தண்ணியுள்ள பக்கமெல்லாத்தையும் மத்தவங்க எடுத்துக் கிட்டாங்க. நமக்கு தண்ணியில்லாக் காடுதான் மிச்சம். அதுக்கதான் திரவியத்தை தேடிக்கணும். ஆனால், நம்மட சில ஆட்களுக்கு தண்ணிப் பக்கமா காணி வாய்ச்சது. வவுனியாப் பக்கமா அது கெடச்சிரிச்சி. ஆனா ரொம்ப எல்லாம் இல்லை. மத்தப்படி எல்லாருக்கும் இந்த வரண்ட காடுதான். எங்கட ரத்தத்தை ஊத்தித்தான் இதையெல்லாம் இப்பிடி ஆக்கியிருக்கிறம்” என்று தன்னுடைய வளவையும் தோட்டத்தையும் காண்பித்தார் அவர்.
இன்று நல்லுவின் வளவும் தோட்டமும் மிக அழகாகவும் வளமாகவும் இருக்கிறது. அக்கம் பக்கத்தில் உள்ள காணிகளும் செழித்துக் கிடக்கின்றன. ஆனால் இடையிடையே சில காணிகள் தரிசு பத்திப்போயுள்ளன. விசாரித்தால், அவற்றில் உள்ளவர்கள் வேறு இடங்களை நோக்கிப் போய் விட்டனர் என்று சொல்கின்றனர், அயலவர்கள். இதற்கு முக்கிய காரணம், நடந்த போராகும். போரிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக இவர்கள் வெளியேறிப்போய் வவுனியா நகர்ப்பகுதியில் வாழ்கின்றனர்.
மிகக் கஸ்டப்பட்டு வெட்டித் துப்புரவாக்கி, யானைக் காவல், பாம்புக்கடி போன்ற நெருக்கடிகளுக்குள்ளால் எல்லாம் தாக்குப் பிடித்திருந்தவர்களைப் போர் விரட்டிக் கலைத்தது. இந்த மக்களின் வாழ்க்கை இப்படித்தான் தொடர்ந்தும் இருந்திருக்கிறது. வேர்கொள்ள முடியாத தொடர் நெருக்கடிகளாக.
ஒரு நெருக்கடியிலிருந்து மீள இன்னொரு நெருக்கடி என. பாருங்கள். முதலில் வன்முறையினால் தென்பகுதியிலிருந்து வெளியேற்றம். பிறகு இங்கே (வடக்கே) வந்தும் நிலையாக, நிம்மதியாக ஒரு இடத்தில் இருக்க முடியாது என்ற நிலை. இப்படி பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் அங்குமிங்குமாக அலைய வேண்டியிருந்தது. இதனால் இவர்களுடைய பிள்ளைகளின் கல்வியில் பெரும் பாதிப்பேற்பட்டது. தொழில்களை நிரந்தரமாகத் தக்க வைப்பதற்கும் சிரமமாக இருந்தது. இருக்குமிடத்தை –நிலத்தைப் பெற்றுக் கொள்வதிலும் இந்த நிலைமை பிரச்சினைகளைக் கொடுத்தது. மிகக் கஸ்ரப்பட்டு வெட்டித் துப்புரவு செய்த காணிகளை விட்டுப்போவதென்பது, அதுவரையான உழைப்பை எந்தப் பெறுமதியுமில்லாமல் இழந்து போவதாகும். ஆனால் வேறு வழியிருக்கவில்லை.
இந்தச் சிரமத்தையும் இழப்பையும் அதிகமாகச் சந்தித்தவர்கள் வவுனியா மாவட்டத்தில் குடியேறியோரே. முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களில் குடியேறியோர் அநேகமாக உள்ளுருக்குள்ளேயே இடம்பெயர்ந்து கொண்டிருந்தனர். அது ஏனையோரைப்போல எல்லோருக்கும் பொதுவானதாக இருந்ததால் இழப்புகளும் பொதுநிலைப்பட்டனவாகவே இருந்தன. ஆனால், இங்கிருந்தெல்லாம் வெளியேறி இன்னொரு தொகுதியினர் இந்தியாவுக்குப் படகுகளின் மூலம் சென்றனர். அப்படிச் சென்றவர்கள் அங்கே அகதிகள் முகாம்களில் அடைபட்டனர். இது இன்னொரு பெரிய துயரக் கதை.
எப்படியோ இவர்களெல்லாம் ஊரை விட்டுப் போனோராகவே கருதப்பட்டனர். இதனால் இவர்களுடைய காணிகளை அக்கம் பக்கத்திலிருந்தவர்களும் வேறு இடங்களில் இருந்தவர்களும் குறைந்த விலையில் எடுத்துக் கொண்டனர். சில காணிகள் மட்டுமே உறவுகளாலும் ஊரவர்களாலும் காப்பாற்றப்பட்டன. ஆகவே இழப்புகளின் மத்தியிலேயே ஒரு சாராரின் வாழ்க்கை நீண்டது.
இழப்புகளைச் சந்தித்து அதிலிருந்து மீண்டு வாழ்வது வேறு. அதையே வாழ்க்கை முழுவதும் கண்டு கொண்டு வாழ்வது வேறு. வாழ்க்கை முழுவதும் இழப்புகளோடு வாழ்ந்த வாழ்க்கையைச் சொல்லுகின்றார் இராஜரத்தினம் (87).
“நா திகணவுக்கும் பல்லேகலவுக்கும் இடையில இருக்கிற கெந்தெல்லல இருந்து வந்தன். நா மட்டும் தனியாவ வந்துக்கல்ல. இருவத்தஞ்சு குடும்பமா சேர்ந்து வந்தம். அங்கன இருந்து வரும்போது ஏகப்பட்ட பிரச்சினைகள். வெளிக்கிடும்போதே பல பிரச்சினைகள். அங்க கண்டில இருந்த அகதி முகாமில இருந்து ஆட்களை தனித்தனியாப் பேசித்தான் எல்லோருமே கௌம்பினோம். அதுக்கே ஏகப்பட்ட தொல்லைகள். பயம் வேற. அந்த நேரத்தில யார் கிட்டயும் எதையும் நம்பிப் பேசிட முடியாது. எவன் காதில எந்தப் பேய் குடியிருக்குமோ, யாரு கண்டா. அப்பிடி அங்க இருந்து தப்பி இங்க வந்தா, இது என்னடா சட்டீல இருந்து நெருப்புக்குள்ள விழுந்திட்டமா அப்பிடீங்கிற மாதிரி ஒண்ணுமே தெரியாத இடத்தில கொண்டாந்து எறக்கிட்டாங்க. கண்ணைக் கட்டி விட்ட மாதிரி ஒரே இருட்டு. ஒரே கொழப்பம். என்ன பண்றது எண்ணு ஒண்ணுமே புரியேல்ல. எதுக்கு இப்படி அவசப்பட்டுக் கிட்டோம்? அப்படீங்கிற மாதிரித் தோணிச்சு. பேசாம வாரது வரட்டுமுன்னு அங்கனயே கெடந்திருக்கலாம். இதுக்குள்ள அவனவன் நம்ம தலையெப் பிச்சுக்கிற அளவுக்கு திட்டிறான். எதுக்கப்பா எல்லாத்தையும் இங்க இழுத்துக் கிட்டு வந்த? இங்க என்ன மசிரு கெடக் கெண்டு வந்த? பேசாம அங்கனயே கெடந்திருக்கலாம் எண்ணு பொம்பளங்களே திட்டத் தொடங்கீட்டாங்க. அவங்களக் கோவிச்சுக்க முடியுமா? அவங்க நெலமையில அவங்க அப்பிடித்தான் இருப்பாய்ங்க. வயித்துப் பிள்ளையோட நிக்கிறவங்க, கையில ஏந்திக் கிட்டு நிக்கிறவங்க.. இப்பிடி எத்தனை கோலம்.
எல்லாத்துக்கயும் சமாளித்துச்சுக்கறதுக்கு ரொம்பத்தான் ஆயிட்டுது. வேற வழியென்ன? இனி அங்க திரும்பிப் போயிட முடியுமா என்ன? அது தாயோட வயித்துக்க மறுபடி போற மாதிரில்லா. நம்மளப்போல வந்தவங்க ஆயிரமாயிரம்பேர். அவங்கள எல்லாம் அங்கங்க எண்டு ஒவ்வொரு மாவட்டங்களாகப் பிரிச்சு வெச்சு அனுப்பினாங்க. நமக்கு இங்க (கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஜெயபுரம் என்ற இடத்துக்கு) வரக் கெடச்சிச்சி. இந்தப் பக்கம் அப்ப பெரிய யானைக்காடு. இந்தக் காட்டுக்கு வரவே முடியாது. வழியில அக்கராயன், வன்னேரி அந்தப்பக்கத்திலேயே யானை நிக்கும். மாலையாகீட்டா ஒரு ஆள் தலை காட்ட முடியாது. கொம்பன்தான் றோட்ல ஏறி நிக்கும். கொம்பன் நிண்டா நாம ஊருக்க படுத்துக்க வேண்டியதுதான்….”
(வலிகள் தொடரும்)