— எழுவான் வேலன் —
(‘பிரதேசவாதமா ஜனநாயகப் பற்றாக்குறையா? (தமிழ் அரசியலை முன்னோக்கி நகரவிடாது தடுக்கும் உள்முரண்பாடுகள்)‘ எனும் வி.சிவலிங்கம் அவர்களுடைய கட்டுரை அரங்கம் மின்னிதழ் 06.06.2021 அன்றைய இதழில் பதிவிடப்பட்டிருந்தது அக்கட்டுரைக்கான கருத்தாடல் களம் 09 இதுவாகும்.)
கிழக்கு மக்களின் இருப்பையும் அவர்களுடைய நிலையான பொருளாதார அபிவிருத்தியையும் பற்றிக் கவனத்தில் எடுக்காத தமிழரசுக் கட்சி அந்த மக்களை முன்நிறுத்தி தமது அரசியல் நலனை மாத்திரம் கருத்தில் கொண்டு செயற்பட்டு வந்திருப்பதை வரலாறு முழுக்க காணக்கூடியதாக இருக்கின்றது.
‘காலஞ்சென்ற தோ.அந்தோனிப்பிள்ளை தலைமையிலான ‘கல்முனை முன்னேற்றச் சங்கம்‘ அப்போதைய ஸ்தலஸ்தாபன அமைச்சர் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த அமரர் மு.திருச்செல்வம் அவர்களிடம் கல்முனைத் தரவைப் பிள்ளையார் கோயில் வீதியைப் பிரிக்கும் எல்லையாகக் கொண்டு அப்போதைய கல்முனைப் பட்டினசபையை இரண்டாகப் பிரித்துத் தென்பகுதியை முஸ்லிம் பெரும்பான்மை அலகாகவும் வட பகுதியை தமிழ்ப் பெரும்பான்மை அலகாகவும் கோரிக்கை விடுத்ததிலிருந்து இது ஆரம்பமாகிற்று. அப்போது ஐ.தே.க. உடன் இணைந்து தமிழரசுக்கட்சி ஆட்சியமைத்திருந்த காலம். தமிழரசுக் கட்சியின் சார்பில் அமரர் மு.திருச்செல்வம் ஸ்தலஸ்தாபன அமைச்சராக அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தார். அவரே உள்ளூராட்சிக்குப் பொறுப்பான அமைச்சர். ஒரு வர்த்தமானி அறிவித்தல் மூலம் அவர் நிறைவேற்றிக் கொடுத்திருக்கக் கூடிய இந்த நியாயமான கோரிக்கையை அவர் தட்டிக்கழித்தார். அன்று அதனை அவர் நிறைவேற்றிக் கொடுத்திருந்தால் இன்று கல்முனைப் பிரதேச தமிழர்களுக்கு ஏற்பட்ட அவல நிலை வந்திருக்காது.‘ (தம்பியப்பா கோபாலகிருஸ்ணன்)
தமிழரசுக் கட்சி பொறுப்புள்ள பதவியில் இருந்து கொண்டு தமிழர்களுக்கு நியாயமான முறையில் பெற்றுக்கொடுக்கக்கூடிய நிர்வாக அலகுகளைப் பெற்றுக் கொடுக்காதது ஒருபுறமிருக்க இரட்டை அங்கத்துவத் தொகுதியாகப் பிரிக்கப்பட்ட பொத்துவில் தேர்தல் தொகுதிக்கு மு.திருச்செல்வம் அவர்களையா அல்லது கட்சிக்குள் எழுந்த செ.இராசதுரை – காசி ஆனந்தன் முரண்பாட்டைத் தீர்க்க காசி ஆனந்தனையா அல்லது சம்மந்தர் – தங்கத்துரைப் பிரச்சினையைத் தீர்க்க தங்கத்துரையையா வேட்பாளராக நிறுத்துவது என்று தமிழர் விடுதலைக் கூட்டணி தமது கட்சி நலனை அடிப்படையாக வைத்து சிந்தித்ததாகவும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொத்துவில் தொகுதியின் மத்திய செயற்குழு உறுப்பினராக இருந்த திரு.தம்பியப்பா கோபாலகிருஸ்ணன் அவர்களுடைய சமயோசித நடவடிக்கைகளினால் பொத்துவில் தொகுதியைச் சேர்ந்த திரு.எம்.கனகரட்ணம் அவர்கள் வேட்பாளராக நியமிக்கப்பட்டதோடு மட்டுமல்லாது பொத்துவில் இரட்டை அங்கத்துவத் தொகுதிக்கான தமிழ் பிரதிநிதித்துவமும் காப்பாற்றப்பட்டது என்பதையும் தனது ‘அம்பாறைத் தமிழர்கள்: (ஓர் அரசியல் வெட்டுமுகம்)‘ எனும் தனது கட்டுரையில் மிக விலாவாரியாகக் குறிப்பிடுகின்றார்.
திரு.எம்.கனகரட்ணம் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளராக நின்று வெற்றியீட்டிய பின் அவர் அப்போது ஆட்சிக்கு வந்த ஐ.தே.கட்சியில் சேர்ந்துகொண்டார். 30 வருடங்களுக்கு மேலாக எவ்வித அரசியல் பிரதிநிதித்துவமும் இன்றி அம்பாறை மாவட்டத் தமிழர்கள் அரசியல் அனாதைகளாக்கப்பட்டு அவர்களுடைய சமூகப் பொருளாதாரத்தினை முஸ்லிம், சிங்கள அரசியல்வாதிகள் கருத்தில் கொள்ளாது புறக்கணிக்கப்பட்டு வந்த சூழலில் அந்த மக்களின் சமூகப் பொருளாதாரத்தினை முன்னேற்றத்திற்கு முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆளும் கட்சிகளில் இருந்து கொண்டு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டுக்கொண்டிருந்த நிலையில், அதனை முறியடித்து அந்த மக்களின் இருப்பையும் அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுப்பதற்கு தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்து கொண்டு எதுவும் செய்யமுடியாது என்பதினால் அவர் ஆளும் கட்சிக்கு மாறவேண்டியிருந்தது. அவர் ஆளும் கட்சிக்கு மாறியதனால் அம்பாறை மாவட்டத் தமிழ் மக்களுக்கு பாரிய அபிவிருத்திப் பணிகளை ஆற்றமுடிந்தது என்பதை அவருடைய அரசியல் எதிரிகளும் ஏற்றுக்கொள்கின்றனர்.
திரு.தம்பியப்பா கோபாலகிருஸ்ணன் அவர்களுடைய மேற்குறிப்பிடப்பட்ட கட்டுரையில் ‘அவரது பதவிக் காலத்தில் பொத்துவில் தொகுதியில் பல தமிழ் பாடசாலைகள் பௌதீகவளங்களைப் பெற்றன. புதிய பாடசாலைகள், கிராமியப் பாதைகள், வீடமைப்புத் திட்டங்கள் உட்பட பல அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பெற்றன. அக்கரைப்பற்றுத் தொகுதியிலே பாரிய நீர்ப்பாசனத் திட்டமாக விளங்கிய கஞ்சிகுடிச்சாற்றுக் குளம் மேலும் உயர்த்தப்பெற்று மேலதிக நீர்ப்பாசன வசதி அளிக்கப்பெற்றது. சிறிய நீர்ப்பாசனத் திட்டங்கள் பல நிறைவேற்றப் பெற்றன. பல இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புகள் பெற்றுக் கொடுக்கப் பெற்றன.
1977ம் ஆண்டின் நாடளாவிய இனக்கலவரத்தின் போது தென்னிலங்கையில் இருந்து அடித்துவிரட்டப்பட்டு அம்பாந்தோட்டை மாவட்டத்தின் தனாமன்வெல உதவி அரசாங்க அதிபர் பிரிவிக் கீழ் அமைந்த தஞ்சை நகர் எனும் கிராமத்திலிருந்து அகதிகளாக வந்த தமிழ் மக்களைப் பொத்துவில் தொகுதியில் சங்கமன்கண்டி, உமிரி ஆகிய இடங்களில் குடியமர்த்தினார் இக்குடியேற்றச் செயற்பாடுகளில் இக் கட்டுரை ஆசிரியர் பாரிய பங்களிப்புச் செய்தார்.
அம்பாறை மாவட்டத் தமிழர்கள் எதிர்காலத்தில் சமூக, பொருளாதார அரசியல் ரீதியாக வளர்ச்சியுறுவதற்கு அவர்களுக்கென்று தனியான தமிழ்ப் பெரும்பான்மை நிர்வாக அலகுகளும் உள்ளூராட்சி சபைகளும் அவசியம் என்பதை உணர்ந்து முதல்வேலையாக 05.01.1980இல் திருக்கோவில் உதவி அரசாங்க அதிபர் பிரிவை ஏற்படுத்தினார்.‘ எனவும் குறிப்பிடுகின்றார்.
திரு.எம்.கனகரட்ணத்தின் மறைவுக்குப் பின் நியமிக்கப்பெற்ற திருமதி ரங்கநாயகி பத்மநாதன் அவர்கள் அமரர் திரு.எம்.கனகரட்ணம் அவர்களைப் போலவே அம்பாறை மாவட்டத் தமிழர்களுக்கான அரசியலை முன்னெடுத்திருந்தார். இவருடைய பதவிக்காலத்திலேயே ஆலையடிவேம்பு உதவி அரசாங்க அதிபர் பிரிவும், காரைதீவுக்கு எனத் தனியான உதவி அரசாங்க பிரிவும் ஏற்படுத்தப்பட்டன.
கட்சி அரசியலைத் தாண்டி மக்கள் நலநாட்டங் கொண்ட அந்தப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்களால்த்தான் அந்தப்பிரதேசத்தின் களநிலைகளைப் புரிந்து கொண்டு மக்களுக்கான அரசியலை முன்னெடுக்க முடியும் என்பதற்கு திரு.எம்.கனகரட்ணமும் அவருடைய சகோதரி திருமதி.ரங்கநாயகி பத்மநாதனும் உதாரணங்களாவர். இந்த இடத்தில் இனவன்செயல்களினால் இடம்பெயர்ந்து கிளிநொச்சிக்கு வந்த மக்களை அத்தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த திரு.வீ.ஆனந்தசங்கரி ‘வெட்டித்துப்புரவு செய்த காட்டுக் காணிகளில் குடிசைகளை மட்டும் போட்டுக் கொள்ளுங்கள். வீடு கட்டுகிற வேலையை எல்லாம் வைத்துக் கொள்ள வேண்டாம்‘ என்று கூறியதற்கும் அதேபோன்ற வன்செயலினால் அம்பாறைக்கு வந்த மக்களை கனகரட்ணம் அவர்கள் வீட்டுத் திட்டங்களை அமைத்துக் குடியேற்றி அவர்களுக்கான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுத்து உதவியமைக்கான வேறுபாட்டினைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த வேறுபாட்டினை இரு நபர்களுக்கிடையிலான தனிப்பட்ட குணநலன் தொடர்பான வேறுபாடாகக் கருதக்கூடாது. இந்த வேறுபாடு வர்க்க நலனும் சாதியத் திமிரும் இணைந்து ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து வெளிப்படுத்தப்படும் குணாம்சமாகப் புரிந்து கொள்ளுகின்றபோதுதான் தமிழ்த் தேசியத்தின் முழுப்பரிமானத்தையும் எம்மால் விளங்கிக் கொள்ளமுடியும்.
இதேபோன்று ‘கல்முனை முன்னேற்றச் சங்கம்‘ திரு.மு.திருச்செல்வம் அவர்களிடம் முன்வைத்த தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட கல்முனை வடக்கு உள் அலகுக் கோரிக்கை புறக்கணிக்கப்பட்டமையையும் திரு.எம்.கனகரெட்ணம், திருமதி.ரங்கநாயகி பத்மநாதன் ஆகியவர்கள் அம்பாறை மாவட்டத்தில் தமிழர்களுக்கான புதிய நிர்வாக அலகுகளை உருவாக்கியமையும் தனியே நிர்வாக ரீதியான விடயமாகவோ அல்லது பத்தோடு பதினொன்று என்று கூறுமளவுக்கு ஒரு அபிவிருத்தி விடயமாகவோ பார்க்கக் கூடாது. இவை அம்பாறை மாவட்டத்தில் தமிழர்களின் இருப்புக்கு அடிப்படையான சட்டரீதியிலான நடவடிக்கைகளாகும். இதுவும் தமிழ்த் தேசியத்தின் அடிப்படை அரசியல் நடவடிக்கைகளைப் புரிந்து கொள்வதற்கான சான்றாகும்.
தமிழரசுக் கட்சி தமிழ்த் தேசியத்தினை முன்வைத்து தங்கள் பாராளுமன்றக் கதிரைகளை தக்கவைப்பதற்கு மாத்திரம் பயன்படுத்திக் கொள்ள கனகரட்ணம், ரங்கநாயகி ஆகிய இருவரும் போலித் தமிழ்த் தேசியத்துக்கு எதிராக நின்று உண்மையான தமிழ்த் தேசியத்தை நடைமுறைப்படுத்தியவர்களாக இருக்கிறார்கள். இன்று அம்பாறை மாவட்டத் தமிழர்களின் இருப்பு அவர்களால்தான் ஓரளவுக்கு காப்பாற்றப்பட்டுள்ளது என்பதை எவரும் மறக்கமுடியாது. இந்த யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள முடியாத யாழ் மேலாதிக்கத்தினால் கனகரட்ணம் தமது அரசியல் நலனுக்கு எதிராக இருக்கின்றார் என்ற காரணத்தினை முன்வைத்து சுடப்பட்டார். தமிழ்த் தேசியத்தினை யாழ் மேலாதிக்கம் குத்தகைக்கு எடுத்திருந்ததன் ஒரு வெளிப்பாடு இதுவாகும்.
யாழ் மேலாதிக்கம் தமக்கு வெளியில் உள்ளவர்களை எப்போதும் தம்மால் ஆளப்படுபவர்களாகவும் தமது அரசியல் அடிமைகளாகவுமே நடாத்தி வருகின்றது. அவர்களைத் தாண்டி அந்த மக்கள் அரசியல் விழிப்புணர்வு அடையக் கூடாது என்பதிலும் மிகவும் கவனமாக இருக்கின்றது. இதற்கு பல உதாரணங்களைக் குறிப்பிடமுடியும்.
1977ம் ஆண்டுத் தேர்தலில் திரு.செ.இராசதுரைக்கு எதிராக திரு.காசி ஆனந்தனை முன்னிறுத்தியது யாழ் மையவாதத்துக்கு சமனாக எந்தவொரு அரசியல் தலைமைத்துவமும் உருவாகக் கூடாது என்பதற்காகவேதான். தமிழர் தாயகப் பிரதேசங்கள் எல்லாம் எல்லாத் தமிழர்களுக்கும் உரியது எனத் தமிழ்த் தேசியம் கருதியிருக்குமானால் இராசதுரைக்கோ அல்லது காசி ஆனந்தனுக்கோ யாழ்ப்பாணத் தொகுதி ஒன்றில் தேர்தலில் போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கி அவர்களுக்காக தமிழரசுக்கட்சி பிரச்சாரம் செய்து வெற்றியீட்ட வைத்திருக்க முடியும். அதனைச் செய்யாது தமக்குச் சமனாக வளர்ந்துவந்த மற்றைய சமூகத்தின் அரசியல் தலைமைத்துவத்தினை இல்லாதொழிக்கின்ற நடவடிக்கையினைத்தான் தமிழரசுக் கட்சி செய்தது.
இதற்கு ஒப்பான மற்றுமொரு நடவடிக்கை யாழ் மேலாதிக்கவாதிகள் தமிழர் தாயகப் பிரதேசத்தில் தாம் விரும்புகின்ற எந்த மாவட்டத்திலும் போட்டியிட்டு அங்கு அரசியல் தலைமைகள் உருவாகாமல் தடுப்பதாகும். உதாரணத்துக்கு 1989ம் ஆண்டு பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் அ.அமிர்தலிங்கம் அவர்கள் போட்டியிட்டார். 1994ம் ஆண்டு பொதுத் தேர்தலில் யாழ் மாவட்டத்து அரசியல் சூழல் தேர்தலில் போட்டியிடக் கூடியவாறு இல்லை என்பதினால் வன்னித் தேர்தல் மாவட்டத்தில் திரு.மு.சிவசிதம்பரம் அவர்களும் திரு.வி.ஆனந்தசங்கரி அவர்களும் அம்பாறை (திகாமடுல்ல தேர்தல் மாவட்டம்) மாவட்டத்தில் மாவை சேனாதிராஜா அவர்களும் போட்டியிட்டனர். இந்தப் போட்டியின் மூலம் மூன்று செய்திகளை அவர்கள் எமக்குச் சொல்கிறார்கள் ஒன்று ஏற்கனவே குறிப்பிட்டதைப் போன்று இந்த மாவட்டத்து மக்களிடமிருந்து புதிய அரசியல் தலைமைகள் உருவாவதைத் தடுத்தல் இரண்டு வேறு எந்த மாவட்டத்து வேட்பாளரும் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு நாம் அனுமதிக்கப் போவதில்லை என்பது மூன்றாவது தங்களுடைய பதவி ஆசைகளுக்கு யாழ்ப்பாணத்துக்கு வெளியில் உள்ள மக்களையும் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதுமாகும். இந்த மூன்று நலன்களும் ஒட்டுமொத்தமாக யாழ் மேலாதிக்கத்தின் நலன்களை மிக இறுக்கமாகப் பேணிப் பாதுகாக்கக் கூடியவைகளாகும்.
1994ம் ஆண்டுத் பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் மாவை சேனாதிராஜாவை வேட்பாளராக நிறுத்துவது என்ற முடிவை மறுபரீசீலனை செய்து அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரை நிறுத்துமாறு அம்பாறை மாவட்ட தமிழர் மகாசபையினர் வேண்டுகோளையும் ஆலோசனைகளையும் முன்வைத்தனர். அவற்றைப் புறந்தள்ளிய தமிழர் விடுதலைக் கூட்டணியினர் தலைமை வேட்பாளராக மாவை சேனாதிராஜாவையே நிறுத்தினர். இந்தத் தவறான வேட்பாளர் நியமனத்தின் காரணமாக மாவை சேனாதிராஜா தோற்கடிக்கப்பட்டதோடு மட்டுமன்றி அம்பாறை மாவட்டத்துக்கு கிடைக்க வேண்டிய ஒரோயொரு தமிழ்ப் பிரதிநிதித்துவ பாராளுமன்ற உறுப்பினரையும் கிடைக்காமல் செய்தனர். அம்பாறை மாவட்டத்துக்கு எந்தவொரு தமிழ்ப் பிரதிநிதித்துவமும் இல்லாதநிலையில் அம்பாறை மாவட்ட தமிழ் மக்களால் அளிக்கப்பட்ட 24000 வாக்குகளைக் கொண்டு தமிழர் விடுதலைக் கூட்டணி ஒரு தேசியல் பட்டியல் ஆசனத்தைப் பெற்றிருந்தது. தமிழர் விடுதலைக் கூட்டணியினர் தமிழ் மக்களின் மீதும் தமிழ்ப் பிரதேசத்தின் மீதும் பற்றுக் கொண்டவர்களாக இருந்திருப்பின் தமக்குக் கிடைத்த தேசியப் பட்டியல் ஆசனத்தை அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கே வழங்கியிருக்க வேண்டும். ஆனால் அம்பாறை மாவட்டத் தமிழர்கள் பற்றிக் கவலைப்படாது அவ்வாசனம் கொழும்பைச் சேர்ந்த நீலன் திருச்செல்வம் அவர்களுக்கே வழங்கப்பட்டது.
2000ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில்அம்பாறை மாவட்டத்தில் அனைத்து தமிழ் கட்சிகளும் இணைந்து போட்டியிட வேண்டும் என்ற அம்பாறை மாவட்ட தமிழர் மகாசபையின் கோரிக்கையினை மீண்டும் புறந்தள்ளிய தமிழர் விடுதலைக் கூட்டணியினர் தனித்து தங்களது வேட்பாளர் பட்டியலை சமர்ப்பித்திருந்தனர். அம்பாறை மாவட்ட தமிழர் மகாசபையின் நியாயமான கோரிக்கைகள் தமிழர் விடுதலைக் கூட்டணியினரால் கவனத்தில் கொள்ளப்படாத நிலையில் அ.மா.த.மகாசபையினர் ஈ.பி.டி.பி., ரெலோ, ஆகியவற்றை இணைத்து சுயேட்சைக் குழுவாக அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை சமர்ப்பித்திருந்தனர். தமிழர் விடுதலைக் கூட்டணியினரைத் தவிர்ந்த ஏனைய தமிழ் கட்சிகள் அம்பாறை மாவட்ட தமிழ் பிரதிநிதித்துவத்தைக் காப்பதற்காக மேற்படி சுயேட்சைக்குழுவுக்கு ஆதரவு வழங்கி தேர்தலில் போட்டியிடுவதைத் தவிர்த்துக் கொண்டன.
தமிழர் விடுதலைக் கூட்டணியினரின் வேட்பாளர் நியமனப் பட்டியலில் காணப்பட்ட முறைகேடு கோரணமாக அந்த வேட்பாளர் நியமனப் பட்டியல் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டிருந்தது. ‘தமிழர் விடுதலைக் கூட்டணி பட்டியலின் தலைமை வேட்பாளர் திரு.தயானந்தராஜா அவர்கள் தங்களது கட்சியின் வேட்பு மனு நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் நிராகரிக்கப் பெற்ற செய்தி வெளி வந்ததும் தனது வீட்டு முன்றலில் முன்பு நிறுத்தியிருந்த ‘உதய சூரியன்‘ பதாகையை இறக்கி விட்டுப் பதிலாக அந்த இடத்தில் யானைச் சின்னப் பதாகையை ஏற்றிப் பச்சை நிறக் கடதாசிகளினால் அலங்கரித்து யு.என்.பி க்கு ஆதரவான பிரச்சாரத்தை ஆரம்பித்தார்.‘
‘தமது கட்சி போட்டியிட முடியாத நிலையில், வேறு எந்தத்தமிழனையும் வெல்லவிடக்கூடாது எனும்படி எதிர்மறையாக இருந்தது. தமிழர் விடுதலைக்கூட்டணி ஆதரவாளர்களை யூஎன்பியில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்கும்படி மாவை சேனாதிராசா மறைமுக ஆலோசனை வழங்கியிருந்தார். அம்பாறைமாவட்டத் தமிழர் மகாசங்க சுயேசசைக்குழுவை தோற்கச் செய்ய வேண்டும் என்பதே அவரது நோக்கமாக இருந்தது. யூஎன்பி பட்டியலில் பாண்டிருப்பைச் சேர்ந்த துரையப்பா முத்துக்கிருஸ்ணன் என்பவரும் இடம்பெற்றிருந்தார். அவரை ஆதரிக்கும்படி கூட்டணி தமிழர்களை கேட்டிருந்தால்கூட அதில் ஒரு தர்க்கமும், நியாயமும் உண்டு. ஆனால், தமிழர் விடுதலைக்கூட்டணி முக்கியஸ்தரான அமரர் ரவிராஜ் அவர்கள், யூஎன்பி பட்டியலில் போட்டியிட்ட நிந்தவூரைச் சேர்ந்த சட்டத்தரணி அப்பாஸ் என்பவருக்கு ஆதரவளிக்கும்படி கோரி, தன்னுடைய பெயரிலேயே வீரகேசரி பத்திரிகையில் தேர்தல் விளம்பரம் கொடுத்திருந்தார்.‘ (தம்பியப்பா கோபாலகிருஸ்ணன்)
இதே போன்று தற்காலிகமாக இணைக்கப் பெற்றிருந்த வடகிழக்கு மாகாணத்தை நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் வெவ்வேறு மாகாணங்களாகப் பிரிக்கப்பட்ட போது, பிரிக்கப்பட்ட மாகாணத்தில் நடைபெறுகின்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்தது. கிழக்கில் எந்தவொரு தமிழ் கட்சியும் போட்டியிடாமல் தவிர்ப்பது கிழக்கு மக்களை அரசியல் ரீதியாகப் பலவீனப்படுத்தும் என்பதை உணர்ந்து கொண்ட அகில இலங்கை தமிழர் மகாசபையின் தலைவர் கலாநிதி.கா.விக்கினேஸ்வரன் அவர்கள் இரா.சம்பந்தர் அவர்களைச் சந்தித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடாவிட்டால் தனது தலைமையிலான அகில இலங்கை தமிழர் கூட்டணி (தற்போது அகில இலங்கை தமிழர் மகாசபை) போட்டியிட்டால் அதற்கு நீங்கள் ஆதரவு வழங்குவீர்களா எனக் கேட்டபோது ஆலோசித்துக் கூறுவதாக காலத்தைக் கடத்திவிட்டு இறுதியில் தாங்கள் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் நல்ல மனிதர் அவரை முதலமைச்சராகக் கொண்டு வருவதற்கு முயற்சிப்பதாகக் கூறியிருக்கின்றார். இதற்காக தமிழரசுக் கட்சி முஸ்லிம் காங்கிரஸ்சைச் சேர்ந்த பஷீர் சேகுதாவுத்தை தமிழ் மக்கள் ஆதரிக்குமாறு கோரும் துண்டுப்பிரசுரங்களை தமிழரசுக் கட்சி கொழும்பில் அச்சிட்டு அவற்றை மாவை சேனாதிராஜா தமிழரசுக் கட்சியின் ஆரம்பகால செயற்பாட்டாளரான மண்டூர் மகேந்திரன் அவர்களுக்கு அனுப்பி வைத்ததாகவும் மண்டூர் மகேந்திரன் அவற்றை வழங்கவில்லை என்றும் தம்பியப்பா கோபாலகிருஸ்ணன் தனது சொல்லத்துணிந்தேன் பத்தி எழுத்தில் குறிப்பிடுகின்றார்.
இத் தேர்தலில் கிழக்கில் பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டது. தமிழ் மக்கள் தவறித்தானும் பிள்ளையானுக்கு வாக்களித்துவிடக் கூடாது என்பதற்காகவே முஸ்லிம் காங்கிரசுக்கான தமது ஆதரவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழங்கியிருந்தது.
2000ஆம் ஆண்டுத் பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் தமிழர்களைத் தவிர்த்து முஸ்லிம்களுக்கு ஆதரவு வழங்கியமையும் 2008ஆம் ஆண்டு கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் கலாநிதி கா.விக்கினேஸ்வரனையும் பிள்ளையானையும் தவிர்த்து முஸ்லிம் காங்கிரசுக்கு ஆதரவு வழங்கியமையும் தற்செயல் நிகழ்ச்சியோ அல்லது அரசியல் சூழ்நிலையோ கிடையாது. யாழ் மேலாதிக்கத்துக்குப் போட்டியாக எவரும் உருவாகிவிடக் கூடாது என்ற உள்நோக்கம் கொண்ட நடவடிக்கைகளின் அரசியல் வெளிப்பாடுகள் இவையாகும்.
மேலும், இம்முறை (2020)ஆம் ஆண்டுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குத்தகை அரசியலுக்கு எதிராக அம்பாறை மாவட்டத்தில் கருணா அம்மானைத் தலைமை வேட்பாளராகக் கொண்டு அகில இலங்கை தமிழர் மகாசபை போட்டியிட்டது. கடந்தமுறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐ.தே.கட்சின் நல்லாட்சி அரசாங்கத்தை கொண்டுவந்ததிருந்த போதிலும் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு ஒரு கணக்காளரைக் கூட நியமிக்க முடியாத கையாலாகாத்தன அரசியலையே செய்திருந்தனர். இவ்வாறான அரசியல் செய்வதற்கு அம்பாறை மாவட்டத்துக்கு ஒரு பிரதிநிதி தேவையா என்ற கேள்வி அம்பாறை மாவட்ட அரசியல் செயற்பாட்டாளர்களிடம் எழுந்த ஒன்றாகும். அமைய இருக்கும் அரசாங்கத்தில் செல்வாக்குள்ளவராக இருக்கின்ற ஒருவரால்தான் முஸ்லிம் அரசியல்வாதிகளின் முட்டுக்கட்டைகளைக் கடந்து அம்பாறை மாவட்டத் தமிழர்களின் இருப்பையும் அபிவிருத்தியையும் மேற்கொள்ள முடியும் என்ற கள யதார்த்தத்தின் அடிப்படையில் அம்பாறை மாவட்ட அரசியல் செயற்பாட்டாளர்கள் கருணா அம்மானை தலைமை வேட்பாளராக முன்னிறுத்தினர்.
அம்பாறை மாவட்டத் தமிழ் மக்கள் அனைவரும் ஏதாவது ஒரு தமிழ் கட்சிக்கு தமது வாக்குகளை அளித்தால் மாத்திரமே அம்பாறை மாவட்ட தமிழ்ப் பிரதிநிதிநித்துவத்தைக் காப்பாற்ற முடியும் என்றிருக்கின்ற சூழ்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமது கையாலாகாத அரசியலை அம்பாறை மாவட்ட தமிழ் மக்களில் கணிசமானோர் நிராகரிக்கின்றார்கள் என்று தெரிந்தும் கூட அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மக்களின் நன்மை கருதி போட்டியிடாமல் தவிர்த்துக் கொண்டு இம்முறை அம்பாறை மாவட்டத்தை அகில இலங்கை தமிழர் மகாசபையிடம் விட்டு வைப்போம் எனக் கருதாமல் முஸ்லிம்களுடைய செல்வாக்குடன் அ.இ.த.மகாசபையினரை எதிர்த்துப் போட்டியிட்டு தமிழர் வாக்குகளைப் பிரித்து அ.இ.த.மகாசபையினை விடக் குறைந்த வாக்குகளைப் பெற்று அம்பாறை மாவட்ட தமிழ் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செயதிருந்தனர். ஆனால் தமிழர் பிரதிநிதித்துவத்தை அ.இ.த.மகாசபைதான் இல்லாமல் செய்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அவர்களுடைய ஊதுகுழல் ஊடகங்களும் பொய்ப் பிரச்சாரங்களைச் செய்தன. அதாவது தங்களுடைய குத்தகை அரசியலுக்கு எதிர்காலத்தில் பங்கம் இல்லாமல் பார்த்துக் கொள்வதற்கான பிரச்சாரங்களே இவையாகும். இவற்றைத் தவிர ஜனநாயகத் தன்மைவாய்ந்த சுயவிமர்சன அரசியலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஊதுகுழல் ஊடகங்களும் செய்யவில்லை.
இந்த சுயவிமர்சன அரசியலைச் செய்யாதது மட்டுமல்ல 1994ம் ஆண்டைப் போல அம்பாறை மாவட்டத் தமிழர்களின் வாக்குகளால் தங்களுக்குக் கிடைக்கப் பெற்ற தேசியப்பட்டி ஆசனத்தை மாவை சேனாதிராஜா தனக்கு வழங்கும்படி தமிழரசுக் கட்சியின் செயலாளர் திரு.கி.துரைராஜசிங்கம் அவர்களை வற்புறுத்தியிருந்தார். தமிழ்த் தேசியம், தமிழர் தாயகம் பற்றியெல்லாம் வானளாவப் பேசும் தமிழ்க் கூட்டமைப்பு அம்பாறையினைக் கைவிட்டு தங்களுக்குப் பதவி கிடைத்தால் போதும் என்றே இருந்தது. ஆனால் திரு.கி.துரைராஜசிங்கம் கிழக்கைச் சேர்ந்தவரானதால் மாவை சேனாதிராஜாவினுடைய வற்புறுத்தலைப் புறந்தள்ளி விட்டு, இயற்கை நீதியின் பிரகாரம் பிரதிநிதித்துவம் இல்லாத மாவட்டத்துக்கே அந்த தேசிய பட்டியல் ஆசனத்தை வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்திருக்கின்றார். இதனால் தனது தற்றுணிவின் அடிப்படையில் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த திரு.கலையரசன் அவர்களை தேசியப் பட்டியல் உறுப்பினராக நியமிக்குமாறு தேர்தல் ஆணையாளரை பரிந்துரைத்திருந்தார். செயலாளரின் பரிந்துரையின் பிரகாரம் திரு.கலையரசன் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இதனால் ஆத்திரம் கொண்ட யாழ் மேலாதிக்கம் திரு.கி.துரைராஜசிங்கம் அவர்களின் செயலாளர் பதவியைப் பறித்துக் கொண்டது.
துரைராஜசிங்கம் அவர்களின் பதவி முறைகேடாகப் பறித்துக்கொள்ளப்படவில்லை. சரியான முறையில் கட்சி கூட்டங்களைக் கூட்டி அதிலே தீர்மானம் கொண்டுவரப்பட்டு வாக்கெடுப்பு நடாத்தப்பட்டு பெரும்பான்மை அடிப்படையில் மிகவும் ஜனநாயகமான முறையில் அவருடைய பதவி பறிக்கப்பட்டது. இவ்வாறான ஜனநாயகச் செயற்பாட்டில் ‘பறிக்கப்பட்டது‘ என்ற வார்த்தைப் பிரயோகம் கூடத் தவறானதாகும். பதவி நீக்கப்பட்டார் என்பதே சரியான வார்த்தைப் பிரயோகம் ஆகும். இங்கு ஜனநாயகப் பற்றாக்குறையோ பிரதேச வாதங்களோ எதுவுமில்லை. எல்லாம் சரியான முறையில் சட்டத்தின் படியும் விதிமுறைகளின்படியும் நடந்திருக்கின்றன. இது தொடர்பாக எவரும் கேள்வி கேட்க முடியாதளவுக்கு இந்த ஜனநாயகச் செயன்முறை இருந்திருக்கிறது. இதனைச் சரி, இதுதான் ஜனநாயகம் என நாம் எடுத்துக் கொண்டோமானால் இலங்கைப் பாராளுமன்றத்தில் தமிழர்களுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட அத்தனை சட்டங்களும் மிகவும் கண்ணியமான பாராளுமன்ற ஜனநாயகத்தின் அடிப்படையில் பெரும்பான்மை வாக்குகளோடு கொண்டுவரப்பட்ட சட்டங்களாகும். அவ்வாறான சட்டங்களும் ஜனநாயகத்தின் அடிப்படையில் கொண்டுவரப்பட்ட சட்டங்கள் என்பதை நாம் ஏற்றாக வேண்டும். ஆனால் அப்படியில்லாது அவை சிங்களப் பேரினவாதத்தின் தமிழர்கள் மீதான அடக்குமுறைச் சட்டங்கள் எனக் கூறுகின்றோம். எண்ணிக்கையின் அடிப்படையில் சிறுபான்மையினரை உரிமைகளை மதிப்பிடக் கூடாது என்கின்றோம். இதே வாதம் துரைராஜசிங்கம் அவர்களுடைய ஜனநாயகச் செயற்பாட்டுக்கும் பொருத்தமுடையதாகும். அதாவது வடக்கு தனது அதிகாரத்தையும் பெரும்பான்மை என்கின்ற எண்ணிக்கையினையும் கிழக்கு என்கின்ற சிறுபான்மை விடயத்தில் பின்பற்றக் கூடாது என்பது எமது வாதமாகும். ஆனால் இவ்வாறு நாம் வாதத்தினை முன்வைக்கும் போது நாம் பிரதேசவாதி, தமிழ்த் தேசியத்துக்கு துரோகி என முத்திரை குத்தப்படுகின்றோம். இதே முத்திரையினைத்தான் தமிழர்கள் மீது சிங்களப் பேரினவாதம் குத்துகின்றது. அதாவது இலங்கையின் ஒருமைப்பாட்டுக்கு எதிரானவர்களாகவும் பிரிவினைதிகளாகவும் தமிழர்களைச் சித்தரிக்கின்றது. அதிகாரத்தை தக்கவைப்பதில் சிங்களப் பேரினவாதம், யாழ் மேலாதிக்கம் என்று வேறுபடுத்த முடியாது. இருசாராருமே தங்கள் தங்கள் அதிகாரத்தைக் காப்பதற்கு ஒத்த வழிமுறைகளையே பின்பற்றுகின்றனர். நாம் கோருவதெல்லாம் ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடுகிறோம் என்று சொல்லிக் கொண்டு மற்றுமொரு மக்கள் கூட்டத்தை, சமூகக் குழுவை ஒடுக்குமுறைக்கு உள்ளாக்காமல் இருக்க வேண்டும் என்பதையேயாகும்.
(தொடரும்………………)