சொல்லத் துணிந்தேன்—88

சொல்லத் துணிந்தேன்—88

— தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் —

இன்றைய களநிலையில் இலங்கைத் தமிழர்கள் தமது சமூக பொருளாதார அரசியல் இருப்பைக் காப்பாற்றித் தமது அடையாளத்தை நிலை நிறுத்த வேண்டுமாயின் இயலுமான வழிகளிலெல்லாம் குறைந்தபட்ச அதிகாரங்களுடனாவது ஒர் அதிகாரப் பகிர்வுக் கட்டமைப்பை உடனடியாக உருவாக்கி வலுப்படுத்த வேண்டும். இது ‘நோயாளி’ ஒருவரின் உயிரைக் காப்பாற்றுவதற்கு அளிக்கப்படும் ‘முதலுதவிச் சிகிச்சை’ போன்றதாகும் எனச் சென்ற பத்தியின் (சொல்லத் துணிந்தேன்-87) நிறைவில் மீண்டும் கூறியிருந்தேன். 

கையில் வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைய வேண்டிய தேவையில்லை. ஆம்! இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் விளைவான பதின்மூன்றாவது அரசியல் சட்டத் திருத்தமும் அதன்கீழ் அமைந்த அதிகாரப் பகிர்வுக் கட்டமைப்புப் பொறிமுயான மாகாணசபை முறைமையும் கைவசம் உள்ளன. கடந்த காலங்களில் தமிழர் தரப்பு அதனை அறிவுபூர்வமாகத் தமிழ் மக்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தவில்லை என்பது வேறு விடயம். அத்தவறு பற்றி மேலும் மேலும் அலசுவதில் பிரயோசனமில்லை. 

உடனடியாகத் தேவைப்படுவது பதின்மூன்றாவது அரசியல் சட்டத் திருத்தத்தை முழுமையாக அமுல்ப்படுத்துவதற்கான அரசியல் களவேலைகளாகும். இதனைப் புலியின் முகவர்களாகச் செயற்படுகின்ற ‘தமிழ்த் தேசியக் கட்சிகள்'(?) முன்னெடுக்கப் போவதில்லை. இத் தமிழ்த் தேசியக்கட்சிகளைப் போஷிக்கின்ற புலம்பெயர் தேசங்களிலுள்ள புலிசார் அமைப்புக்களும் அவ்வாறு செய்வதற்கு இக்கட்சிகளை விடப்போவதுமில்லை. இந்த இரு தரப்பாருக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதை விட ‘பிச்சைக்காரன் புண்’ போல அவை ஆறாமல் தொடர்ந்திருக்க வேண்டுமென்பதே பரஸ்பரம் சுய தேவையாக இருக்கின்றது. மக்களின் தேவைகளுக்கும் இவர்களின் சுய தேவைகளுக்குமிடையில் பாரிய வேறுபாடுகள் இருக்கின்றன. 

இந்தப் பின்னணியில் இத்தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு(?) அரசியல் ரீதியாக எதிராகச் செயற்படுகின்றதும்- புலிகளின் முகவரல்லாததும்- புலிகளுடன் உடன்பாடில்லாததுமான தமிழ் அரசியல்கட்சிகளுக்குப் பாரிய பொறுப்புள்ளது. இக்கட்சிகள் தமிழ்த் தேசியக் கட்சிகளை (?) விமர்சிப்பதில் கால விரயத்தைச் செய்யாமல் பதின்மூன்றாவது அரசியல் சட்டத் திருத்தத்தை முழுமையாக அமுல் செய்வதற்கான காத்திரமான அரசியல் முன்னெடுப்புக்களை மேற்கொள்வதற்கு ஏதுவாகத்தங்களுக்குள்ளே ‘கூட்டுச் செயற்பாட்டு அரசியல் பொறிமுறை’ ஒன்றினைக் காலம் தாமதியாது ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். 

அந்த வகையில் புலிகளின் முகவர்களாகச் செயற்படும் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு மாற்றீடாகத் திகழும் கட்சிகளாகத் தற்போது தமிழர்களின் அரசியல் பொது வெளியில் தம்மை அடையாளம் காட்டியுள்ள வடக்கைத் தளமாகக் கொண்ட டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈபிடிபி), தி.சிறீதரன் (தோழர் சுகு) தலைமையிலான தமிழர் சமூகஜனநாயகக் கட்சி, மு.சந்திரகுமார் தலைமையிலான சமத்துவக் கட்சி ஆகிய பதிவுசெய்யப்பெற்ற தமிழ் அரசியல் கட்சிகளும் அதேபோல கிழக்கைத் தளமாகக் கொண்ட சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி (ரி.எம். வி. பி), கலாநிதி கா.விக்னேஸ்வரன் தலைமையிலான அகில இலங்கை தமிழர் மகாசபை ஆகிய கட்சிகளும் உடனடியாக ஒன்றுகூடிப் பேசி பதின்மூன்றாவது அரசியல் சட்டத் திருத்தத்தை முழுமையாக அமுல் செய்வதற்கான ‘கூட்டுச்செயற்பாட்டு அரசியல் பொறிமுறை’ ஒன்றினைக்காலம் தாமதியாது கட்டமைக்க வேண்டும். 

இத்தகைய கட்டமைப்பை எவ்வாறு ஏற்படுத்தலாம்?                                                              

புலிகளின் முகவர்களாகச் செயற்படும் தமிழ்த் தேசியக் கட்சிகளின்(?) தவறுகளைச் சுட்டிக்காட்டும் அதற்கு எதிரணியில் உள்ள கட்சிகள் கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கல்லெறியாமல் முதலில் தமக்குள் புரிந்துணர்வின் அடிப்படையில் ஐக்கியப்பட வேண்டும். தமிழர்கள் என்றால் இப்படித்தான் ஒருகாலமும் ஒற்றுமைப்படமாட்டார்கள் என்ற வரலாற்றுப்பழியைத் துடைத்தெறிய வேண்டும். தமிழ்த் தேசியக் கட்சிகளின்(?) ஒற்றுமையின்மையைச் சாடும் அதற்கு எதிரணியிலுள்ள கட்சிகள் முதலில் தமக்குள்ளே ஒற்றுமைப்படுதல் அவசியம். 

மேலே குறிப்பிட்ட புலிகளின் முகவர்கள் அல்லாதஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈபிடிபி), தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி, சமத்துவக் கட்சி, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி, அகில இலங்கைதமிழர் மகாசபை ஆகிய கட்சிகளுக்குஇடையேயுள்ள கொள்கை முரண்பாடுகள்- கருத்து முரண்பாடுகள்-கட்சிகளின் தலைவர்களுக்கு இடையே உள்ள தனிநபர் முரண்பாடுகள்அத்தனையையும் மக்களுக்காக ஒரு புறம் ஓரங்கட்டி வைத்துவிட்டு முதலில் ஒன்றுபட வேண்டும். அத்தகைய ஒன்றுபட்ட அணியைத்தான் தமிழ் மக்கள் மாற்று அரசியல் அணியாக ஏற்றுக்கொண்டு அதன் பின்னே அணி திரள்வார்கள். அப்போதுதான்உணர்ச்சி மைய அரசியலில் ஊறிப் போயிருக்கும்மக்களை அதிலிருந்து மீட்டெடுத்து அறிவுமைய அரசியலை நோக்கி அவர்களை ஆற்றுப்படுத்தஇலகுவாக இருக்கும். இதனை விடுத்துஎதிரணியிலுள்ள கட்சிகளும் தமிழ்த் தேசியக் கட்சிகளை(?)ப் போல் ஒற்றுமை பற்றி உதட்டளவில் உச்சரித்துக் கொண்டு ‘தனித்தவில்’ அடிப்பார்களாயின் தமிழ்த் தேசிய அரசியலில் தமிழ் மக்களுக்குச் சாதகமான எந்த மாற்றமும் நிகழப் போவதில்லை. மக்களும், அரசியல் தீர்வுமில்லை அபிவிருத்தியுமில்லை என்ற வகையில் சலிப்படைந்து விரக்தியுற்றுவிடுவார்கள். பின்பு எவர்மீதும் நம்பிக்கையற்று விடுவார்கள். இது ஆரோக்கியமானதல்ல. தமிழ் மக்களைப் பொறுத்தவரை அபிவிருத்தி (உட்கட்டமைப்பு வசதிகள்) மற்றும் வேலைவாய்ப்பு என்பவற்றை மட்டும் நாடவில்லை. அதற்குச் சமாந்தரமாகத் தங்கள் மொழி, நிலம், பொருளாதார வளங்கள், சுற்றுச்சூழல் மற்றும் கலை இலக்கியங்கள் பண்பாட்டு விழுமியங்கள் என்பவற்றைப் பேணிப் பாதுகாத்து வளர்த்தெடுத்து அவற்றை அடுத்த தலைமுறைக்கு மாசில்லாமல் மடை மாற்றம் செய்யக்கூடிய அரசியல் ரீதியான அதிகாரப் பகிர்வுக்கட்டமைப்பையும் அவாவி நிற்கின்றார்கள். இதனைப் புலிகளின் முகவர்களாக அல்லாது ஆட்சியிலுள்ள அரசாங்கத்தை ஆதரித்து நிற்கும்மேலே பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ஈழ மக்கள்ஜனநாயகக் கட்சி (ஈபிடிபி), தமிழர் சமூகஜனநாயகக் கட்சி, சமத்துவக் கட்சி, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி, அகில இலங்கை தமிழர்மகாசபை ஆகிய கட்சிகள் புரிந்துகொண்டு தமக்கிடையே நன்கு திட்டமிட்ட முறையிலே வினைத்திறன் மிக்க கூட்டு அரசியற் செயற்பாட்டை முன்னெடுக்க முன்வர வேண்டும். அப்படி நடந்தால்தான் தமிழ் மக்களின் உளவியலிலும் மாற்றங்களைக் கொண்டுவந்து கடந்த எழுபது வருடங்களுக்கும் மேலாகத் தமிழ் மக்களிடையே நடைமுறையில் இருந்து வரும் குறுந் தமிழ்த் தேசியவாதப் பிற்போக்கு அரசியல் கலாசாரத்தை மாற்றிச் சிங்கள சமூகமும்- இலங்கை அரசாங்கங்களும்- இந்தியாவும்- சர்வதேச சமூகமும் தமிழர்கள் மீது நம்பிக்கை கொள்ளும் புதிய அரசியல் கலாசாரமொன்றைக் கட்டியெழுப்ப முடியும். இது அவசியமானது. ஏனெனில் கடந்த காலங்களில் மிதவாத அரசியல் தலைமைகளின் குறுந் தமிழ்த் தேசியவாத செயற்பாடுகளும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தமிழ்ப் பாசிசப் செயற்பாடுகளும் தமிழ்மக்கள் மீதான நம்பகத்தன்மையைக் கெடுத்து வைத்திருக்கின்றன. 

மக்கள் எப்போதும் மாற்றத்திற்குத் தயாராயிருக்கிறார்கள். அவர்கள் ஒற்றுமையையே எப்போதும் விரும்புகிறார்கள். துரதிஷ்டவசமாகத் தலைவர்கள் மாற்றத்தை ஏற்கத் தயங்குகிறார்கள். ஒற்றுமையைச் சீர்குலைக்கிறார்கள். தலைவர்கள் எனப்படுவோர் அடுத்த தேர்தலைப் பற்றிச் சிந்தியாது அடுத்த தலைமுறையைப் பற்றிச் சிந்திப்பதற்குத்தம்மைத் தகவமைத்துக் கொள்ள வேண்டும். 

எனவே முதற்கட்டமாக மேலே குறிப்பிட்ட கட்சிகளின் தலைவர்களான டக்ளஸ்தேவானந்தாவும், ஸ்ரீதரனும் (தோழர் சுகு), சந்திரகுமாரும், சிவநேசதுரை சந்திரகாந்தனும் (பிள்ளையான்), கலாநிதி கா.விக்னேஸ்வரனும் அவர்களின் கட்சிகளின் ஏனைய பிரதானிகளும் காலம் தாமதியாது ஓரிடத்தில் கூடிச் சினேக பூர்வமாகப் பேசுவதற்குரிய காலத்தையும் இடத்தையும் தீர்மானிக்கும்படி இப்பத்தி சமூகப் பொறுப்புடன் வலியுறுத்துகிறது. இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வாக எப்போதும் இந்திய மாநில சுயாட்சி மாதிரியை வலியுறுத்தி வரும் தற்போதைய தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரியை அவரது அரசியல் மூப்புக்கருதி இந்த அணியில் இணைத்துக்கொள்வதிலும் தவறில்லை.