மாறிச் செல்லும் உலக அரசியல் சூழலும், ஜனநாயக கோட்பாட்டு விவாதங்களும் (பகுதி 2)

மாறிச் செல்லும் உலக அரசியல் சூழலும், ஜனநாயக கோட்பாட்டு விவாதங்களும் (பகுதி 2)

— வி.சிவலிங்கம் — 

அமெரிக்க அரசியலில் ஏற்பட்டுள்ள பண்பாட்டு மாற்றங்கள்    

வாசகர்களே! 

உலக அரசியல் குறித்துப் பேசும்போது நாம் அமெரிக்க அரசியல் குறித்துப் பேசாமல் செல்ல முடியாது. ஏனெனில் அமெரிக்க அரசியலில் அந் நாட்டின் அரசியல் யாப்பு மிக முக்கியமான பாத்திரத்தை வகிக்கிறது. குறிப்பாக பொது விவகாரம், நீதித்துறை மற்றும் நிறைவேற்றுத் துறை அல்லது ஜனாதிபதிச் செயலகம் ஆகிய மூன்றும் சுயாதீனமாக இயங்குகின்றன. அதே போலவே பிரித்தானிய வெஸ்ற்மினிஸ்ரர் பாராளுமன்ற ஆட்சிமுறையும் செயற்படுகிறது. இந்த நாடுகளின் செயற்பாடுகளே பல நாடுகளின் ஆட்சி முறைக்கு முன்மாதிரியாகக் கொள்ளப்படுகின்றன. எனவே அமெரிக்க அரசியலும், அதன் பொருளாதாரக் கட்டுமானமும் மிக முக்கியமான பேசு பொருளாக உள்ளன.  

கட்டுரையின் பகுதி 1இல் லிபரல் ஜனநாயக கோட்பாட்டு அடிப்படைகள் தற்போது பலவீனமடைந்து வருவதாகக் குறிப்பிட்டேன். அதன் பிரகாரம் முதலில் லிபரல் ஜனநாயகக் கோட்பாட்டின் சில அடிப்படைகள் குறித்து விபரமாகப் பார்க்கலாம். பொதுவாகவே ஜனநாயகத்தின் பலம் குறித்து பேசுவதாயின் அங்கு நிறுவப்பட்டுள்ள ஜனநாயக நிறுவனங்களின் சுயாதீன செயற்பாடுகளே அதன் பலமாகும். உதாரணமாக, அமெரிக்காவில் ராணுவ ஆட்சி தோற்றுவதற்கான வாய்ப்புகள் மிக, மிகக் குறைவு என ஓர் அரசியல் மாணவன் ஆழமாக வாதிக்க முடியும். ஏனெனில் அதன் அரசியல் கட்டுமானங்களுக்கும், ராணுவத்திற்குமிடையே காணப்படும் உறவு நிலை என்பது மக்களின் அனுபவத்தில் அவ்வாறான எண்ணத்தை எழுப்பவில்லை. ஆனால் தற்போது அதுவும் சாத்தியம் என்பதாகவே விவாதிக்கப்படுகிறது.  

அரசியல் ஆய்வாளர்களின் கருத்துப்படி அமெரிக்க ஜனநாயகம் பெரும் ஆபத்தில் இருப்பதாகவே கருதப்படுகிறது. அவ்வாறாயின் நாம் ஏற்கெனவே கூறிய யாப்பின் அடிப்படையில் உருவாகிய ஜனநாயக நிறுவனங்கள் அதன் பலத்தை இழந்து வருவதாகவே எண்ணுகின்றனர். இதற்கான பிரதான காரணமாக அமெரிக்க அரசியலில் காணப்படும் இரண்டு கட்சி ஆட்சிமுறை என்பது அவற்றிற்கிடையே காணப்பட்ட தேசிய நன்மை கருதிப் பின்பற்றப்பட்ட இணக்க ஏற்பாடுகள் தற்போது தொலைந்து வருவதாகக் கூறப்படுகிறது.  

அமெரிக்காவிலுள்ள பிரதான கட்சிகளான ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சி என்பன அங்கு வர்க்க அடிப்படையில் பிளவுபட்டுள்ள சமூகங்களைப் பிரிதிநிதித்துவப்படுத்துவதாக நம்பப்படுகிறது. அதாவது கிறிஸ்தவ சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டதாக குடியரசுக் கட்சியின் கொள்கைகள் அமைந்திருக்கும். உதாரணமாக, கருக்கலைப்பு, தன்னினச் சேர்க்கை, அவ்வாறான திருமணங்கள் போன்றனவற்றை மிகவும் கடுமையாக எதிர்க்கின்றனர். அதே போன்று நாட்டின் நிதிக் கொள்கைகளிலும் அதிக வரிவிதிப்பிற்கு எதிராகவும், சுதந்திர சந்தைப் பொருளாதாரத்திற்கு ஆதரவாகவும், சந்தைச் செயற்பாடுகளில் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கு ஆதரவாகவும், தொழிற்சங்க செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கு ஆதரவாகவும், அந்நிய குடிவரவிற்கு எதிராகவும் என பல அம்சங்களில் மிகவும் அடிப்படைவாதக் கருத்துக்களை ஆதரிக்கின்றனர்.  

மேலே குறிப்பிட்டவாறான அம்சங்களில் ஜனநாயகக் கட்சிக்கும், குடியரசுக் கட்சிக்குமிடையே பலத்த வேறுபாடுகள் காணப்பட்ட போதிலும் நாட்டின் எதிர்காலம் கருதி இக் கட்சிகள் இரண்டும் பரஸ்பரம் விட்டுக்கொடுத்து அரசியலை நடத்தி வந்தன. ஆனால் தற்போது அவ்வாறான இணக்க அரசியல் படிப்படியாக மறைந்து வருகிறது. உதாரணமாக, ஜனநாயகக் கட்சியைச் சார்ந்த ஒருவர் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால் இவை மக்களின் ஜனநாயகத் தெரிவு என்ற அடிப்படையில் குடியரசுக் கட்சியினர் அத் தெரிவை ஏற்றுக்கொண்டு நாட்டிற்கான பிரச்சனைக்குரிய அம்சங்கள் தொடர்பான விடயங்களில் பரஸ்பரம் பேசி முடிவுக்குச் செல்வது வழக்கம். அதே போலவே ஜனாதிபதி அபேட்சகர் தெரிவிலும் இக் கட்சிகள் ஒருவகையான இணக்கத்தை ஆரம்பத்திலேயே ஏற்றுக் கொள்வதால் அரசியல் சுமுகமாக இயங்கியது. 

ஆனால் 2016ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் என்பது மிகவும் பிரச்சனைக்குரியதாக மாற்றமடைந்திருந்தது. குடியரசுக் கட்சியினர் டொனால்ட் டிரம்ப் இனைத் தமது ஜனாதிபதி வேட்பாளராக நியமித்த வேளையில் ஜனநாயகக் கட்சியினர் தமது எதிர்ப்பை வெளியிட்டனர். இதற்குப் பிரதான காரணம் டொனால்ட் டிரம்ப் கட்சியின் உட்கட்சி நிர்வாகங்களிலிருந்து அதாவது பிரதேச நிர்வாகங்களில் கட்சியின் சார்பில் செயற்பட்ட அனுபவம் அற்றவர். அவர் ஒரு வர்த்தகர். அரசியல் பொறுப்புகளில் அனுபவம் அற்றவர். அவர் தனது வருமான வரிகளை ஒழுங்காகச் செலுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு பலமாக இருந்தது. இங்கு பிரதான வேறுபாடு எதுவெனில் டிரம்ப் வெள்ளை இனவாதியாக, ஏனைய நிறத்தவர்களை அவமதிப்பவராக மிக நீண்ட காலமாகவே அறியப்பட்ட நிலையில் அவர் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்படுவது ஏற்கெனவே காணப்பட்ட லிபரல் ஜனநாயக இணக்க அரசியலை முன்னெடுப்பதற்குத் தடையாக அமையுமென ஜனநாயகக் கட்சியினர் வாதிட்டனர். ஆனால் குடியரசுக் கட்சியினர் அவரது நியமனத்தை வாபஸ் வாங்க மறுத்தனர்.  

அமெரிக்காவின் பல்லின அடையாளத்தைக் கேள்விக்குட்படுத்தும் ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தக் குடியரசுக் கட்சியினர் முடிவு செய்ததன் மூலம் இரு கட்சிகளிடையே காணப்பட்ட பொதுவான இணக்க அரசியல் முறிவடைந்தது. குடியரசுக் கட்சி மிகவும் மோசமான வலதுசாரி தீவிரவாதத்தை அதாவது வலதுசாரி ஜனரஞ்சக அரசியலை நோக்கி மாற்றமடைந்தது. இங்கிருந்தே நாம் புதிய அரசியல் மாற்றங்களை நோக்கிப் பார்வையைச் செலுத்த வேண்டியுள்ளது.  

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் தெரிவு செய்யப்பட்ட நிகழ்வினை மூன்று வகைகளில் ஆய்வாளர்கள் நோக்குகின்றனர்.  

1. அமெரிக்க இரு கட்சி ஆட்சிமுறை காரணமாகக் காணப்பட்ட இரு கட்சி ஜனாதிபதித் தேர்தல் என்பது மிகவும் பிளவுற்றதாக மாற்றமடைந்தமை. 

2. அமெரிக்க இரு கட்சி அரசியல் என்பது நாடு முழுவதிலுமுள்ள கட்சி அங்கத்துவ பிளவுகளாக மாற்றமடைந்துள்ளமை. 

3. இன அடிப்படையிலும், பொருளாதார அடிப்படையிலும் ஏற்றத்தாழ்வு அதிகளவில் உள்ளதால், பொருளாதார ஆதிக்க சக்திகளால் நாடு பிளவுற்று ஜனநாயக அடிப்படைகள் என்பது படிப்படியாக மறைந்து செல்கிறது. 

இந்த இரு கட்சிகளினதும் அங்கத்துவ நலன்கள் என்பது மிகவும் துருவ நிலைப்பட்டுச் செல்லும் நிலையில் அதிகாரப் போட்டி என்பதும் விட்டுக் கொடுக்க முடியாத அல்லது இணக்கத்தை ஏற்படுத்த முடியாத நிலைக்குச் சென்றுள்ளன. குறிப்பாக இப் பிளவுகள் நாட்டின் நிர்வாக யந்திரங்களையும் இவ்வாறான பிளவுகளை நோக்கித் தள்ளி வருவதே கவனத்திற்குரியதாகும். 

பொதுவாகவே லிபரல் ஜனநாயக அரசியலில் நாட்டின் நிர்வாக யந்திரம் என்பது நடுநிலையானது எனவும், அரசாங்கம் என்பது கட்சிகளின் கொள்கைகளை நிறைவேற்றவும், அரசு என்பது கட்சிகளாலான அரசாங்கத்தின் அல்லது அமைச்சரவையின் முடிவுகளைச் செயற்படுத்தும் கருவியாக அரசு யந்திரம் செயற்படுவதாகவும் கொள்ளப்படுகிறது. ஏனெனில் அரசாங்கம் என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒருதடவை மாற்றமடைந்தாலும், அரசு என்பது தொடர்ந்து செயற்படுவதால் அது நடுநிலையானது என்பதாகவே விளங்கிக் கொள்ளப்படுகிறது.  

இங்கு இரு கட்சிப் போட்டி அரசியல் காரணமாக அரச யந்திரமும் கட்சி அரசியலோடு இழுத்துச் செல்லப்படும் நிலை படிப்படியாகவே மாறி வருவதை நாம் காண்கிறோம். இத்தகைய போக்குகளையே இலங்கையிலும் காண்கிறோம். அரச அதிகாரிகளும் தமது நலன்களைப் பாதுகாப்பதற்காகப் படிப்படியாக அரசியல்வாதிகளின் எடுபிடிகளாக மாறி தமது தனித்துவத்தை அல்லது நடுநிலையை இழந்து வருகின்றனர். இதனால் அரச நிறுவனங்கள் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்து வருகின்றனர். தாம் எதிர்பார்க்கும் மாற்றங்கள் நிகழ வாய்ப்பு இல்லை என்பதை உணர்கின்றனர். உதாரணமாக, அமெரிக்க ஜனாதிபதியாக கறுப்பு இனத்தைச் சார்ந்த பராக் ஒபாமா தெரிவு செய்யப்பட்டார். அதிகளவு வெள்ளை இனத்தவர்கள் வாழும் அமெரிக்க நாட்டில் கறுப்பு இனத்தவர் ஒருவர் ஜனாதிபதியாக வருவதன் மூலம் கறுப்பு இனத்தவர்களின் நிலையில் மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கலாம். ஆனால் அதிகாரத்தின் உச்சத்தில் மாற்றங்கள் நிகழ்வதன் மூலம் சமூகத்தில் மாற்றங்கள் ஏற்படாது என்பதை அமெரிக்க அனுபவங்கள் உணர்த்துகின்றன.  

இக் கட்டுரையின் பகுதி 1இல் லிபரல் ஜனநாயகம் பற்றிய சில கருத்துக்கள் பகிரப்பட்டிருந்தன. இன்று இந்த லிபரல் ஜனநாயக அடிப்படைகள் படிப்படியாக மறைந்து வலதுசாரி ஜனரஞ்சக அரசியல் பரவி வருவதாகக் குறிப்பிட்டிருந்தேன். இந் நிலையில் முதலில் லிபரல் ஜனநாயகத்தின் சில அடிப்படைகள் பற்றிய விளக்கத்திற்கு நாம் செல்வது அவசியமாகும். அப்போதுதான் நாம் இன்று எதனை எவ்வாறு இழந்து வருகிறோம்? என்பதனை இலகுவில் அடையாளம் காண முடியும்.    

முதலில் லிபரல் ஜனநாயகத்தின் கோட்பாட்டு அம்சங்களை சற்று விபரமாகத் தர எண்ணுகிறேன. ஏனெனில் இக் கோட்பாட்டின் பல அம்சங்கள் பல நாடுகளின் அரசியல் யாப்பில் உள்ளடக்கப்படுகின்றன. குறிப்பாக சுதந்திரம் (Liberty), சமத்துவம் (Equality), சமூகம் (Community) என்பன குறித்த உள்ளடக்கங்கள் பேசப்பட வேண்டும். அந்த அம்சங்கள் தற்போது பெருமளவில் மாற்றமடைந்து வருவதால் அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்தும் நாம் பேச வேண்டும். இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றங்கள் லிபரல் ஜனநாயகத்தின் அடிப்படை அம்சங்களைக் கேள்விக்குட்படுத்துவதாலும், அவற்றிற்குப் பதிலாக முன்வைக்கப்படும் மாற்றங்கள் அதைவிட மோசமானவைகளாக, நாம் தற்போது மேற்குலகில் ஏற்பட்டுள்ள வலதுசாரி ஜனரஞ்சக அரசியலின் அடிப்படைகளை ஒத்ததாக உள்ளன. 

சுதந்திரம் (Liberty) 

லிபரல் ஜனநாயகம் என்பது அடிப்படையில் தனிமனித வளர்ச்சியின் அடிப்படைகளை முன்வைக்கிறது. ஒவ்வொரு தனி மனிதனும் தனது வாழ்வு எவ்வாறு அமைதல் வேண்டும்? என்பது பற்றி சுயமாக முடிவு செய்யும் சுதந்திர உரிமை அவனுக்கு உண்டு. அதன் அர்த்தம் அவனால் முடியும் என்பதை ஏற்றுக்கொள்வதாகும்.  

அம் மனிதனால் தனது கனவுகளை நனவாக்கும் விதத்தில் தனது முழுமையான ஆளுமையைப் பயன்படுத்தி தனது விருப்பின் பிரகாரம் அரசின் தலையீடின்றி அல்லது கட்டுப்பாடின்றி வாழும் உரிமை அவனுக்கு உண்டு.  

சமத்துவம் (Equality) 

ஒவ்வொரு தனிமனிதனும் தனது இலட்சிய எண்ணங்களை இடையூறுகளுக்கு மத்தியிலும் நிறைவேற்றும் ஆற்றல் உள்ளவன். அவன் தனது எண்ணங்களை நிறைவேற்ற முயற்சிப்பதற்குத் தடையாக வறுமை, சுகவீனம், போதிய கல்வி அறிவின்மைபோன்றன தடையாக அமைதல் கூடும். அத் தடைகள் அவனது சுதந்திர செயற்பாட்டைத் தடுக்கின்றன. அச் சந்தர்ப்பத்தில் அம் மனிதன் எதிர்கொள்ளும் தடைகளை நீக்கி அவனது சுதந்திர செயற்பாடுகளை இடையூறின்றி நிறைவேற்ற உதவுவதே அரசின் கடமையாகும். ஒவ்வொரு மனிதனும் சமத்துவமாகவும், சமத்துவமான கௌரவத்துடனும் அம் மனிதனின் குணாம்சங்களில் வேறுபாடுகள் காணப்படினும் அம் மனிதனினதும், சமூகத்தினதும் எண்ணங்கள் வளர்ச்சியடைவதற்கான சூழலை வழங்குவது அரசின் கடமையாகும். அதாவது அரசு என்பது மனிதனது பூரண ஆளுமையை வெளிப்படுத்துவதற்கான புறச்சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதே கடமையாகும்.  

சமூகம் (Community) 

அரசியல் மற்றும் பொருளாதார நலன்கள் அல்லது வலுவினை உயர்ந்த பட்ச அளவிற்கு விஸ்தரிக்கும் வகையில் அரசின் அதிகாரங்கள் மக்களை அண்மித்ததாக அமைதல் வேண்டும். இதனையே நாம் அதிகார பகிர்வு,அதிகார பரவலாக்கம் என்கிறோம். இவை நாட்டின் பரப்பளவில் தங்கியிருக்கவில்லை என்பதையும், அவை தனி மனிதனின் அல்லது சமூகத்தின் சுயாதீன செயற்பாட்டை உறுதி செய்வதற்கான பொறிமுறை என்பதாகும். இங்கு மக்கள் சுயாதீனமாக தாம் எண்ணுவதைக் கூறவும், தமக்கு விருப்பமில்லாதவை குறித்து ஏனையோரின் மறுப்பு அபிப்பிராயங்கள் இருப்பினும் அச்சமின்றி எதிர்ப்பை வெளியிடவும் உரிமை உண்டு.  

சமூகத்தின் பொதுவான நலன்களுக்கு எதிராக சமூகங்கள், அரசுகள், அரச நிறுவனங்கள் செயற்படின் அவற்றிற்கெதிராக செயற்படவும் உரிமை உண்டு.  

மேலே குறித்தவாறு லிபரல் ஜனநாயக அடிப்படைகள் மக்களால் ஏற்கப்பட்டு அதனடிப்படையில் ஏற்றவாறான சமூகக் கட்டுமானங்கள் உதாரணமாக, சுயாதீனமான ஊடக செயற்பாடு, சுயாதீன நீதித்துறை,நடுநிலையான அரச பொதுச் சேவை, சுயாதீன தேர்தல்முறை, சட்ட அடிப்படையிலான தேர்தல் போட்டி எனப் பல அம்சங்கள் இந்த லிபரல் ஜனநாயகத்தின் அடிப்படைத் தூண்களாக உள்ளன.  

ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இனது லிபரல் ஜனநாயக விரோத செயல்கள்  

லிபரல் ஜனநாயகத்தின் இத்தகைய அம்சங்கள் பல இன்று கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளன. அமெரிக்காவில் 2020ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றிருந்தார். ஆனால் அத் தேர்தல் வெற்றி முறையற்றது எனவும், தாமே அத் தேர்தலில் வெற்றி பெற்றதாகவும் இன்னமும் டொனால்ட் டிரம்ப் கூறி வருகிறார். அமெரிக்க அரசியலில் இவ்வாறான முறைப்பாடுகள் ஒருபோதும் எழுந்ததில்லை. இத் தேர்தல் முறைகேடாக நடைபெற்றதாகவும், இந்த வெற்றியை உறுதி செய்யக்கூடாது என உப ஜனாதிபதியை வற்புறுத்தும் வகையில் டிரம்ப்பின் ஆதரவாளர்கள் அமெரிக்க காங்கிரசை முற்றுகையிட்டுப் பெரும் ஆரவாரங்கள் இடம்பெற்றன.  

கடந்த 2021ம் ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற இச் சம்பவங்களின்போது சபாநாயகர், உதவி ஜனாதிபதி உட்பட பலர் கொலை செய்யப்படும் ஆபத்துக் காணப்பட்டதாகவும் கூறி இந் நிகழ்வினை உள்நாட்டு சதி அல்லது பயங்கரவாதம் என வர்ணித்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறாக அமெரிக்க அரசியல் மாற்றம் பெற்றுள்ளமை பலரின் மத்தியில் குறிப்பாக கல்வியாளர்கள், செயற்பாட்டாளர்கள் மத்தியில் அமெரிக்க ஜனநாயகத்தின் எதிர்காலம் குறித்த பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது.  

ஜனாதிபதி டிரம்பின் காலத்தில் தேர்தல் ஆரம்பமாவதற்கு முன்னதாகவே தேர்தல் முறைபற்றிய சந்தேகங்களை அவர் எழுப்பினார். குறிப்பாக சுயாதீனமான ஊடகங்கள், நீதித்துறை, தேர்தல் முறைகள் போன்ற பல அம்சங்கள் குறித்து மிகவும் பகிரங்கமாகவே தனது சந்தேகங்களை வெளியிட்டார். அதுவும் நாட்டின் ஜனாதிபதி ஒருவர் தனது கட்டுப்பாட்டிலுள்ள அரசின் செயற்பாடுகள் குறித்துப் பகிரங்கமாகச் சந்தேகங்களை எழுப்பியது அமெரிக்க வரலாற்றில் எதிர்பாராத ஒன்றாகும். அமெரிக்க அரசியலிலிருந்து இத்தகைய சந்தேகங்கள் எழுப்பப்பட்ட நிலையில் மேலும் பல நாடுகளில் இதே போன்ற சந்தேகங்கள் வலதுசாரி அமைப்புகளால் எழுப்பப்பட்டன.  

அமெரிக்க ஜனாதிபதி என்பவர் நாட்டின் பன்மைத்தவ அரசியல், சமூக ஒருங்கிணைப்பை மேலும் பலப்படுத்தும் ஒருவராகவே கருதப்படுகிறார். ஆனால் டொனால்ட் டிரம்ப் மிகவும் பகிரங்கமாகவே வெள்ளை இன ஆதிக்கத்தை வற்புறுத்தும் வெள்ளை இனத் தேசியவாதிகளோடு அவர் தம்மை அடையாளப்படுத்தினார். உள்ளுரில் இனவாதிகளோடு தம்மை அடையாளப்படுத்திய அவர் சர்வதேச அளவில் லிபரல் ஜனநாயக வழிமுறைகளை நிராகரித்து சர்வாதிகார அடிப்படையில் ஆட்சி நடத்தும் நாடுகளின் தலைவர்களோடு மிகவும் நெருக்கமாகவே செயற்பட்டார். உதாரணமாக, சவூதி அரேபிய சர்வாதிகார அரசர், வட கொரிய அதிபர், ரஷ்ய அதிபர் ஆகியோருடன் அவர் நெருக்கமாகச் செயற்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அவர் பதவி ஏற்ற நாள் முதல் வெள்ளை இன ஆதிக்கக் குழுக்கள் ஏனைய நிறத்தவருக்கு எதிராக மிக அதிக அளவிலான தாக்குதல்களைத் தொடுத்தனர். அமெரிக்காவின் லிபரல் ஜனநாயக அரசியலோடு தம்மை அடையாளப்படுத்திய பல நாடுகள் குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் டிரம்ப்பின் அணுகுமுறைகளை எதிர்த்தனர்.  

அமெரிக்க அரசியலை மிகவும் பிளவுபட்ட நிலைக்கு டொனால்ட் டிரம்ப் எடுத்துச் சென்றதால் அமெரிக்க காங்கிரஸ், செனட் சபை, ஜனாதிபதி மாளிகை என்பவற்றிகிடையேயிருந்த சுமுகமான உறவு நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. இரு பிரதான கட்சிகள் மத்தியிலே மிகவும் இறுக்கமான இணக்கம் இருப்பதால் அமெரிக்க லிபரல் ஜனநாயகம் பலமானது என எண்ணிய பலர் தற்போது தமது எண்ணங்களை மாற்ற ஆரம்பித்துள்ளனர்.                      

ஜனாதிபதி டிரம்ப்பின் தேர்தலும்,பதவிக் காலமும் ஏற்கெனவே அமெரிக்க அரசியலில் வெந்துகொண்டிருந்த குழப்பங்கள் அதன் உச்ச நிலையை அடைய ஏதுவாக அமைந்தன. அமெரிக்க இரு கட்சி அரசியல் நாடு முழுவதிலும் பிளவுபட்ட நிலமைகளை உறுதிப்படுத்தின. இதனால் லிபரல் ஜனநாயக அடிப்படைகளும் மாற்ற நிலைக்குத் தள்ளப்பட்டன. இவை ஏற்கெனவே காணப்பட்ட போதிலும் இத் தேர்தல் இப் பிளவுகளை உறுதி செய்ததோடு, அப் பிளவுகளின் அடிப்படையிலான புதிய அணிச் சேர்க்கையை உருவாக்கவும் உதவியுள்ளன.  

இலங்கை அனுபவம் 

இவ்வாறாக அமெரிக்க அரசியல் குறித்துப் பேசும்போது நாம் இலங்கை அரசியலையும் இவ் வரலாற்றுப் போக்கோடு இணைத்துப் பார்க்க முடியும். உதாரணமாக, இலங்கை அரசியலில் சுதந்திரத்தின் பின்னர் இனவாத அரசியல் என்பது காணப்பட்ட போதிலும் மிகவும் அப்பட்டமான அரசியலை நோக்கி பிரதான அரசியல் கட்சிகளான ஐ.தே.கட்சி, சிறீலங்கா சுதந்திரக் கட்சி என்பன செல்லவில்லை. இதற்குப் பிரதான காரணமாக அங்கு மிகவும் காத்திரமான இடதுசாரி அரசியல் கட்சிகள் தேசிய நல்லிணக்கத்தைத் தொடர்ந்து வற்புறுத்தி வந்தன. அதே போன்று சகல இன மக்களையும் உள்ளடக்கிய தொழிற் சங்கங்கள் இனவாத அரசியலை முன்னெடுக்க விடாது தடுத்து வந்தன. அத்துடன் சிறுபான்மைச் சமூகங்களைச் சார்ந்தவர்கள் அக் கட்சிகளின் பிரதான இடங்களை அலங்கரித்திருந்தார்கள்.   

1977 ம் தேர்தல்களின் பின்னர் ஏற்பட்ட அரசியல் யாப்பு மாற்றங்கள், தேர்தல் முறை மாற்றங்கள், நவபொருளாதார கொள்கைகள் அறிமுகம் என்பன புதிய நிலமைகளைத் தோற்றுவித்தமையால் சிறிய அரசியல் கட்சிகளின் தோற்றமும், பிரதான கட்சிகளின் பலவீனங்களும், தேர்தல்முறை மாற்றங்களும் இனவாத அரசியலை உக்கிரப்படுத்த உதவின. இம் மாற்றங்கள் பலவும் பாராளுமன்ற அரசியலில் மிகவும் காத்திரமான விளைவுகளைத் தோற்றுவித்தமையால் இன்று பாராளுமன்ற அரசியல் பலவீனமாகி சர்வாதிகார அல்லது ராணுவ மயப்படுத்தப்பட்ட அரசுக் கட்டுமானமாக மாறி வருகிறது.  

எனவே இன்றைய அமெரிக்க அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை அதன் வரலாற்று மாற்றங்களின் பின்னணியில் ஆராய்வதே பொருத்தமானது. அமெரிக்காவிலுள்ள இரு கட்சி ஆட்சிமுறையும், அதனால் தோற்றுவிக்கப்பட்டுள்ள சமூக மாற்றங்களும் புதிய எதிர்கால  சமூக கட்டுமானத்தை வடிவமைக்க உதவுகின்றன. அமெரிக்க,பிரித்தானிய லிபரல் ஜனநாயக கட்டுமானங்களில் ஏற்படும் மாற்றங்கள் என்பது தற்போது அதிக அளவில் எழுந்துள்ள வலதுசாரி ஜனரஞ்சக மற்றும் தேசியவாத இணைப்புடன் செல்லும் அரசியலை எவ்வாறு சந்திக்கின்றன என்பதிலேயே அவற்றின் எதிர்காலம் தங்கியுள்ளது. ஏனெனில் தற்போது எழுந்துள்ள இவ்வாறான வலதுசாரி அடிப்படைகளைக்கொண்ட தேசியவாத நிகழ்வுகளை லிபரல் ஜனநாயகம் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது? என்பதிலேயே எதிர்கால அரசியல் தங்கியுள்ளது.  

இத் தருணத்தில் இலங்கையில் எவ்வாறு தேர்தல் என்பது தனிச் சிங்கள வாக்கு வங்கி மூலம் ஜனநாயக தேர்தல் முறையை வழைத்துப் போட்டதோ அல்லது தனிச் சிங்கள வாக்கு வங்கி மூலம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைத் திரட்ட முடிந்ததோ அல்லது நாட்டின் ஜனாதிபதி தம்மை சிங்கள மக்களின் பிரதிநிதியாக மிகவும் பகிரங்கமாகவே வெளியிட முடிந்ததோ இவை யாவும் நாம் ஏற்கெனவே குறிப்பிடும் லிபரல் ஜனநாயக கட்டுமானத்திற்குள் நடந்தேறுவதே கவனத்திற்குரியது. இத் தருணத்தில் 2016ம் ஆண்டில் இடம்பெற்ற அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் குறித்து சில பிரச்சனைகளைப் பார்க்கலாம்.  

2016ம் அண்டு தேர்தலில் டொனால்ட் டிரம்ப் 

இத் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக குடியரசுக் கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்ட போது அவரின் தெரிவைப் பலரும் ஏற்கவில்லை. ஏனெனில் அவர் சமூகத்தை மிகவும் பிளவுபடுத்தும் கொள்கைகளைக் கொண்டிருந்தார். அத்துடன் அவர் அமெரிக்க மக்களின் பண்பாட்டு நடைமுறையின் அடையாளமாகக் கொள்ள முடியாத பல சிக்கலான பண்புகளைக் கொண்ட ஒருவராக அரசியல் உலகில் அறியப்பட்டிருந்தார். உதாரணமாக, தேர்தல் தொடர்பான தொலைக்காட்சி விவாதத்தின்போது அவருக்கு எதிரான போட்டியாளரைச் சிறையில் தள்ளுவதாக எச்சரித்தார். முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் அமெரிக்க பிரஜா உரிமை அல்லது அவரது பிறப்புக் குறித்துக் கேள்விகளை எழுப்பினார். இவ்வாறான விவாதங்கள் அமெரிக்க வரலாற்றில் புதிய மாற்றங்களாகவே கருதப்பட்டன.    

இவ்வாறான அமெரிக்க அரசியல் கலாச்சாரத்தில் மிகவும் மோசமான பிளவுபடுத்தும் தன்மைகளைக் கொண்ட ஒருவர் என அறிந்திருந்தும் அவர் வேட்பாளராக ஏன் நிறுத்தப்பட்டார்? என்ற கேள்வி எழுகிறது. அதற்கான பதில் என்னவெனில் அமெரிக்க இருகட்சி அரசியல் ஏற்கெனவே அவ்வாறான பிளவுபட்ட நிலையில் இருந்தமையால் அவற்றிற்கு ஏற்றவாறான ஒரு வேட்பாளராகவே டொனால்ட் டிரம்ப் காணப்பட்டமையால் அப் பிளவுகளின் அடிப்படையில் வெற்றிபெறும் நோக்கில் அவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அதாவது ஏற்கெனவே பின்பற்றப்பட்டு வரும் லிபரல் ஜனநாயக பண்பாடுகளுக்கு எதிராக அவரது கொள்கைகள் இருந்தது மட்டுமல்ல, அவ்வாறான போக்கு உலக அளவிலும் காணப்பட்டமையேயாகும். அதாவது உலக அளவில் வலதுசாரி ஜனரஞ்சக அரசியல் என்பது லிபரல் ஜனநாயக கட்டமைப்புகளுக்கு எதிராக செயற்பட்ட நிலையில் அதற்கு ஒரு சர்வதேச பரிமாணமும் உண்டு எனக் கருதப்பட்டது.  

பொதுவாகவே அமெரிக்க அதிகாரிகள் உலகின் பல பாகங்களில் நடைபெறும் தேர்தல் அவதானிகளாகச் செல்வதுண்டு. அவர்கள் அத் தேர்தல்கள் குறித்து தெரிவிக்கும் கருத்துக்கள் அந்த நாடுகளின் தேர்தல் அரசியலிற்கு மிக முக்கியமான அடையாளமாக அல்லது அங்கீகாரமாக  உள்ளன. இவ்வாறான நிலையில் தற்போது 2020ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் முறை குறித்து அத் தேர்தலின் வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் எதிர்ப்புத் தெரிவிக்கும்போது அமெரிக்க லிபரல் ஜனநாயக செயற்பாடுகளும் கேள்விக்குட்படுத்தப்படுகின்றன. குறிப்பாக அவர் வாக்குப் பதிவில்,  வாக்குப் போடுவதில், வாக்காளர் இடாப்புகளில் மோசடி நடப்பதாகக் கூறியதோடு, இவ்வாறான மோசடி காரணமாக தேர்தல் முடிவுகளில் சந்தேகம் எழுவதால் தம்மால் பதவியைச் சுமூகமாகக் கையளித்துச் செல்ல முடியாத நிலை ஏற்படலாம் எனவும் எச்சரித்திருந்தார். 

நாம் இவ்வாறான எதிர்வுகூறல்களை பொதுவாகவே மூன்றாம் உலக நாடுகளில் அதாவது ஜனநாயக கட்டுமானங்கள் பலவீனமாக உள்ள நாடுகளில் காணமுடியும். ஆனால் தற்போது அமெரிக்காவில் இந்த நிலை எனில் லிபரல் ஜனநாயகத்தின் எதிர்காலம் குறித்த பலமான சந்தேகம் எழுகிறது. அதாவது அமெரிக்க லிபரல் ஜனநாயக அரசியலின் பலமான பக்கங்கள் பல அடிப்படையில் மாற்றமடைந்துள்ளதையே இவை உறுதிப்படுத்தின. இவை தற்காலிக மாற்றங்களா அல்லது நிரந்தர மாற்றங்களா? ஏனில் பலரும் நிரந்தர மாற்றங்களாகவே காண்கின்றனர்.  

இவ்வாறாக அமெரிக்க அரசியல் மாற்றமடையும் நிலையில் அவை தொடர்பாக நாம் அதன் புதிய பக்கங்களை நோக்கிக் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இவை எவ்வாறான புதிய நிலமைகளை அல்லது புதிய ஆபத்துகளைத் தோற்றுவிக்கும் அல்லது உருவாகும் புதிய ஒழுங்கு என்பது தற்போது செயற்படும் லிபரல் ஜனநாயக பொறிமுறைகளில் எவ்வாறான மாற்றங்களைத் தரப் போகிறது? என்பதுடன் கடந்த காலங்களில் இந்த நிர்வாக யந்திரங்கள் ஒருவகையான எதிர்வு கூறல்களைத் தருவனவாக செயற்பட்ட நிலையில் புதிய நிர்வாகங்கள் அவ்வாறான எதிர்பார்ப்பினை வழங்குமா? என்ற சந்தேகங்களும் உண்டு.  

இங்கு குறிப்பிடப்படும் எதிர்பார்ப்பு என்பது உலக அளவில் ஏற்படும் பல நிர்வாகச் சிக்கல்களுக்கு அமெரிக்க நடைமுறைகள் மூலமாகவே உதாரணங்கள் பெறப்படுகின்றன. அவ்வாறான பலமான மாதிரியாக அமெரிக்க லிபரல் ஜனநாயக பொறிமுறை செயற்பட்டது. உதாரணமாக, 1930ம் ஆண்டளவில் உலகளவில் ஏற்பட்ட பொருளாதாரப் பின்னடைவு, அதன் பின்னர் ஏற்பட்ட இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்னர் உலக பொருளாதார மற்றும் அரசியல் ஒழுங்கு மிகவும் சீர்குலைந்தே காணப்பட்டது. ஓர் வலுவான பொருளாதார ஒழுங்கின் தேவையை அமெரிக்க லிபரல் ஜனநாயக கோட்பாட்டு நடைமறைகளே நிறைவேற்ற உதவின. இந்த லிபரல் ஜனநாயக பொருளாதார மற்றும் அரசியல் கட்டுமானங்களே போருக்குப் பின்னதான அமைதியான முன்னேற்றத்திற்கு உதவின.   

(தொடரும்)