— சு.சிவரெத்தினம் —
பள்ளிக் கூடத்தில் ஆசிரியர்
என்னை,
‘கழுதை‘ என்று திட்டுவார்
‘கழுதை‘ என்று குட்டுவார்
‘கழுதை‘ என்று அறைவார்
‘கழுதை‘ என்றும் அழைப்பார்
ஆனால்,
நான் மனிதனாக இருந்தேன்.
கணக்கெனக்குத் தெரியாது
ஆங்கிலம் எனக்கு வராது
விஞ்ஞானம் சொட்டும் ஓடாது
அதனால் நான் ‘கழுதை‘
ஆனால்,
நான் மனிதனாக இருந்தேன்.
பொய்யில்லை உண்மையாய் இருந்தேன்
நடிப்பில்லை யதார்த்தமாய் இருந்தேன்.
ஏமாற்றவில்லை ஏமாளியாய் இருந்தேன்.
பொறாமையில்லை போட்டியாய் இருந்தேன்.
வஞ்சகமில்லை அன்பாய் இருந்தேன்.
வெறுக்கவில்லை நேசமாய் இருந்தேன்
சுரண்டவில்லை உழைத்து இருந்தேன்.
அதனால் நான் ‘கழுதை‘
ஆனால்,
நான் மனிதனாக இருந்தேன்.
உலகைப் பார்த்தேன்
பாடத்திட்டம் எழுதுவது கழுதைகள்
பல்கலையில் படிப்பிப்பது கழுதைகள்
ஆட்சியில் இருப்பது கழுதைகள்
நிர்வாகத்தில் இருப்பது கழுதைகள்
கழுதைகள் எல்லாம் காரில் வருகின்றன
மனிதர்கள் இல்லை.
என்னைக் திட்டிய வாத்தியார்
என்னைக் குட்டிய வாத்தியார்
என்னை அறைந்த வாத்தியார்
என்னை அழைத்த வாத்தியார்
அனைவரும் எழுந்து
கழுதைகளைப் பணிந்து வணங்கி நிற்கின்றனர்.
வாத்தியாரின் காதோரம்
‘கழுதைகளுக்கு ஏன் வணக்கம்‘ என்றேன்.
‘கழுதைகளால்த்தான்
புழுகு மூட்டைகளைச் சுமந்து
பரமசிவன் கழுத்துக்கு ஏற முடியும் என்றார்.‘
‘அப்போ பரமசிவனும் கழுதையா?’ என்றேன்.
‘ஆம்
எம்மைப் போல் கழுதைதான் என்றார்.‘