இந்திய – அமெரிக்க படைகளும் // புலிகளும் – தலிபான்களும்..! (காலக்கண்ணாடி- 52)

இந்திய – அமெரிக்க படைகளும் // புலிகளும் – தலிபான்களும்..! (காலக்கண்ணாடி- 52)

 — அழகு குணசீலன் — 

ஆப்கானிஸ்தான்…..! 

உலகின் கண்களும், காதுகளும், வாய்களும் ஆப்கானில் குவிந்து கிடக்கின்ற நாட்கள் இவை. இலங்கையர்களைப் பொறுத்தமட்டில் இந்தியப் படையின் வெளியேற்றச் சூழலை, ஆப்கானிஸ்தான் அமெரிக்கப்படைகளின் வெளியேற்றம் இரைமீட்புச் செய்கிறது. 

1975இல் வியட்னாமில் அமெரிக்கப் படைகளின் தோல்வியின்போதான காட்சிகளுக்கு நிகரான காட்சிகள் காபூல் திறந்த வெளித் திரையரங்கில்.  

இந்த அளவுக்கு இல்லாவிட்டாலும் சிறியளவிலான காட்சிகள் இந்திய இராணுவத்தின் வெளியேற்றத்தின் போதும் இலங்கையில் வடகிழக்கில் இடம்பெற்றன. இந்த இரு நிலைப்பாடுகளும் எதிர்காலம் குறித்த அச்சம், கவலைக்கும், எதிர்காலம் குறித்த மகிழ்ச்சிக்கும் இடையிலான உளவியல் போராட்டமாகும். 

இலங்கை – ஆப்கான் சமூக, பொருளாதார, அரசியல் சூழலை முழுமையாக ஒப்பிடமுடியாதுதான். ஆனால் வல்லரசுகளின் இராணுவத்தலையீடு என்ற வகையில், சர்வதேசம் “பயங்கரவாதிகள்” என்று அழைத்த இரு ஆயுத அரசியல் அமைப்புக்கள் என்ற வகையில், இராணுவத்தலையீட்டை எதிர்கொண்ட இயக்கங்கள் என்றவகையில், தேசத்தின் சுதந்திரம், மக்களின் விடுதலை என்பவற்றை தங்கள் நோக்காக அறிவித்தவை என்ற வகையில் சும்மா கடந்து செல்வதும் சரியாகப்படாது. 

ஆப்கானிஸ்தான், இலங்கை உள்நாட்டுஅரசியல் முரண்பாடுகள் ஏறக்குறைய சமகாலத்தவை. 1970களில் இருந்து ஆரம்பித்து பல்வேறு கட்டங்களை கடந்து, குளிர்யுத்தம், வல்லரசுகள் சார்ந்த அரசியல், உலகமயமாக்கம், பயங்கரவாதத்திற்கு எதிரான போர், வெளிநாட்டு இராணுவ தரிசனம் என்பனவற்றிற்குகூடாக பயணித்து இன்றைய இடத்தில் வந்து நிற்கின்றன. 

இந்த நிலையில் பிராந்திய வல்லரசான இந்தியாவின்  இலங்கை மீதான இராணுவத் தலையீட்டையும், ஆப்கானில் சர்வதேச வல்லரசான அமெரிக்கப்படையின் தலைமையிலான நேட்டோ படைகளின் தலையீட்டையும் சற்று திரும்பிப் பார்ப்பதன் மூலமே இன்றைய அரசியல் சூழலை விளங்கிக்கொள்ள முடியும். இந்த இருநாடுகளிலும், இரு ஆயுப்போராட்ட அமைப்புக்களிலும், பிராந்திய, சர்வதேச “பொலிஸ்” ஏற்படுத்திய தாக்கங்ளும், மாற்றங்களும், நகர்வுகளும் அதனால் ஏற்பட்ட விளைவுகளும், ஏற்படப்போகின்றவையும் எவை? 

இந்த விவகாரங்களை காட்சிப்படுத்த முனைகிறது இவ்வாரக் காலக்கண்ணாடி! 

ஆப்கான்: இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் விளைநிலம் ! 

1978 இல் மன்னர் ஷாகிர் ஷா வின் வீழ்ச்சிக்கு பின்னர் 1979க்கும் 1989க்கும் இடையிலான பத்து ஆண்டுகளுக்கு சோவியத்படைகளின் ஆக்கிரமிப்பு ஆப்கானில் இருந்தது. சோவியத் படைகளின் பிரசன்னத்திற்கு எதிராக போராட்டங்கள் இடம்பெற்றன. இறுதியில் 1996இல் ஆட்சியைக் கைப்பற்றிய தலிபான்கள் 2001 வரையும் ஆட்சியில் இருந்தனர். மிகவும் இறுக்கமான இஸ்லாமிய அடிப்படைவாத ஷரியா சட்டத்தின் அடிப்படையிலான ஆட்சியாக அது இருந்தது. 

உலகின் அபின் உற்பத்தியில் முதல் இடம்வகிக்கின்ற ஆப்கானில், அதன் அரசியலும் “மதம் ஒரு அபின்” என்ற முதல் நிலைக்கருத்தை கோடிட்டுக் காட்டியது. மாற்று மதங்ஙளுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டு, மத அடையாளங்கள் சிதைக்கப்பட்டன. உலகில்  உயர்ந்த புத்தர் சிலை தலிபான்களால் தகர்க்கப்பட்டது. 

இந்த தலிபான் ஆட்சிக்காலத்தில் ஒசாமா பின்லாடனின் அல்கைடா, ஜிகாத் உள்ளிட்ட அமைப்புக்களின் புகலிடமாக ஆப்கான் இருந்தது. தலிபான் அரசு இந்த அமைப்புக்களுக்கு பயிற்சி, ஆயுதம், முகாம்கள் என்பனவற்றை வழங்கி ஆதரவளித்தது. இந்த நிலையில் 2011 செப்டம்பர் 11 நடந்த அமெரிக்க இரட்டைக்கோபுர தாக்குதல், அமெரிக்கத் ராடார் ஆப்கானை நோக்கி திரும்ப காரணமானது. 

ஒசாமா பின் லாடன் ஆப்கானில் இருப்பதை ஏற்கனவே அறிந்திருந்த அமெரிக்க புஷ் நிர்வாகம் ஒசாமாவை வேட்டையாட களத்தில் குதித்தது. தலிபான் ஆட்சி கவிழ்ந்தது. ஒபாமாவின் காலத்தில் ஒசாமா பின் லாடன் கொல்லப்பட்டார்.  இத்தனைக்கும் மத்தியில் சோவியத் யூனியனுக்கு எதிராக ஒசாமா பின் லாடனுக்கு வெள்ளை மாளிகையில் சிறப்பு விருந்தினராக விருந்துபசாரம் வழங்கி ஆயுதங்களும் வழங்கியிருந்தார் சீனியர் புஷ் என்பது ஏகாதிபத்திய அரசியலின் கீழ்த்தனம். 

அமெரிக்க ஆதரவு பொம்மை அரசாங்கம் ஆப்கானில் அமைக்கப்பட்டது. 2004இல் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்டு மேற்குலக சமூகப்பெறுமதிகள் அதில் உள்வாங்கப்பட்டன. பெண், ஆண் சம உரிமை உறுதிசெய்யப்பட்டது. ஜனநாயக விழுமியங்கள், ஊடக, கருத்து சுதந்திரம், மனித உரிமைகளுக்கு அரசியல் அமைப்பில் பாதுகாப்பு வழங்கப்பட்டது.  

தற்போது ஆப்கானை விட்டு தப்பி ஓடிய ஜனாதிபதி அஷ்ராப் ஹானி 2014இல் பதவியேற்றார். 2018இல் தலிபான்களுடான சமாதான பேச்சுக்கள் ஆரம்பித்தன. அமெரிக்க ட்ரம்ப் நிர்வாகம் அமெரிக்க, நேட்டோ படைகளை மீளப்பெற தீர்மானித்தது. ஜோபைடன் அதைச் செயற்படுத்தினார். இதன் விளைவுகளின் அவலமே இன்றைய ஆப்கான். 

இலங்கை: இந்தியப்படையின் தரையிறக்கம்…! 

ஆப்கான்: அமெரிக்க படைகளின் தரையிறக்கம் …! 

ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் தலையீட்டுக்கு எப்படி இரட்டைக்ககோபுர தாக்குதல் உடனடி காரணமாயிற்றோ, அவ்வாறே இந்தியாவின் இலங்கை மீதான தலையீட்டுக்கு வடமாராட்சி “ஒப்பரேசன் லிபரேசன்” உடனடிக் காரணமாயிற்று. 

வாய்ப்பொன்றை எதிர்பார்த்து இருந்த இந்தியாவுக்கு இது பழம் நழுவி பாலில் விமுந்ததாயிற்று. 2.6.1987 இல் சாட்டுக்கு ஆயுதம் தரிக்காத கப்பல் உதவிப் பொருட்களை ஏற்றிவர, அதை நடுக்கடலில் வழிமறித்த இலங்கைக் கடற்படை கப்பலை திருப்பி அனுப்ப, இனி என்ன? இந்தியா எதை எதிபார்த்ததோ, எதை விரும்பியதோ அது நடந்தது. அதுதான்  4.6.1987இல் இடம்பெற்ற “ஒப்பரேசன் பூமாலை” . இலங்கையின் வான் பரப்பில் பறந்த இந்திய விமானங்கள் உணவுப் பொதிகளை வீசின. 

ஜே.ஆர்.அதிர்ந்து போனார் என்பதை விடவும் ஆடிப்போனார். விளைவு: இந்திய – இலங்கை சமாதான உடன்பாட்டின் பிரசவம். இது சுகப்பிரசவம் அல்ல. விருப்பங்களுக்கு மாறாக கட்டாயத்தின் பேரில், அழுத்தங்களின் மூலம் அடிபணியவைத்து, இடம்பெற்ற வில்லங்கமான ஒரு பிறப்பு. இது விடுதலைப்புலிகளுக்கு மட்டுமன்றி, ஜே.ஆர்.அரசுக்கும் பொருந்தும். 

அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினர் பயங்கரவாதத்தை ஒழித்தல் என்ற மகுடத்தில் தலிபான் அரசை வீழ்த்துதல், தலிபான்களின் ஆயுதங்களை களைதல், ஜனநாயக பண்புகளைக் கொண்ட நவீன அரசாங்கம் ஒன்றை நிறுவுதல், மக்களின் சமூக பொருளாதார வாழ்வை உயர்த்துதல் என்ற இலக்கில் இறங்கினார்கள். இங்கு தலிபான் அரசை அழித்ததையும், ஒசாமாவைக் கொன்றதையும் தவிர நேட்டோவால் எதையும் செய்ய முடியவில்லை. செய்யப்பட்ட மற்றையவை அனைத்தும் வெறும் மண்குதிரைகள். 

இந்திய – இலங்கை ஒப்பந்தம் இதைச் சொன்னது. ‘இவை இந்திய சமாதானப்படையின் இலக்குகள். சகல அமைப்புக்களிடம் இருந்தும் ஆயுதங்களைக் களைதல், இடைக்கால நிர்வாகம் ஒன்றை ஏற்படுத்துதல், அதனூடாக வடக்கு கிழக்கு மாகாண சபையை ஜனநாயக தேர்தல் ஒன்றின் மூலம் அமைத்தல்.’   

மாகாண சபை நிறுவப்பட்டபோதும் அதன் சுய செயற்பாட்டுத்திறனும், உறுதித்தன்மையும் கேள்விக்குரியவை. இதனால்  இலக்குகளில்  இந்தியா தோல்வி அடைந்தது என்பது கசப்பான உண்மை. இந்திய ஆதரவு மாகாண சபைக்கு புலிகள் அச்சுறுத்தலாக இருந்தது போன்றே, அமெரிக்க ஆதரவு காபூல் அரசுக்கும் தலிபான்கள் அச்சுறுத்தலாக இருந்தார்கள்! 

ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதில் முரண்பாடுகள் வளர்ந்தன. குமரப்பா உள்ளிட்ட முக்கிய தளபதிகளை புலிகள் இழந்தனர். திலீபன், அன்னபூபதி உண்ணாநோன்பில் சாவடைந்தனர். 

நிலைமை நெருப்பாய் எரிந்தது ஒப்பந்தம் முறிந்தது. இந்தியப்படைகளும் புலிகளும் மோதிக்கொண்டனர். இவை மோதலுக்கான உடனடிக் காரணங்களாக அமைந்தன.  

ஆப்கானிஸ்தானில் மூன்று இலட்சம் ஆப்கான் படையினருக்கு இருபது வருடங்களாக பயிற்சியும், ஆயுதமும் வழங்கியது அமெரிக்கா. அமெரிக்க படைகள் வெளியேறத் தொடங்கவே அரச சீருடைகளைக் கழட்டி குப்பையில் வீசிவிட்டு தலிபான் சீருடை அணிந்து அமெரிக்க படைகளுக்கு எதிராக அமெரிக்கா வழங்கிய ஆயுதத்தையே தலிபான் கட்டளையை நிறைவேற்ற அவர்கள் பயன்படுத்தினார்கள். 

இது ஓரளவுக்கு மாகாணசபை நிர்வாகம், 33 மாதங்கள் இலங்கையில் இருந்த இந்திய படையின் உதவியுடன் கட்டாய ஆட்சேர்ப்பில் ஈடுபட்டு ஏற்படுத்திய தமிழ்த்தேசிய இராணுவத்திற்கு சமமாக நோக்கவேண்டியது. இந்தியப்படை வெளியேற்றம் ஆரம்பிக்க அதற்கு முன்னரே மாகாண அரசாங்கமும் இவர்களும் தப்பி ஓடினார்கள். இன்றைய ஆப்கான் ஜனாதிபதியின் நிலையும் இதுதான். காபூலிலும், திருகோணமலையிலும் இரு பொம்மை தேசிய, மாநில அரசாங்கங்கள் பெயரளவில் இருந்தன அவ்வளவுதான். 

உளவியல் ரீதியான நம்பிக்கை பலத்தை ஆப்கான் படையினரும், தமிழ்த்தேசிய இராணுவமும் பெற்றிருக்கவில்லை. தலிபான் அல்லது புலிகள் என்ற பெயரைக் கேட்டாலே அச்சம் கொள்ளுகின்ற மிகப் பலவீனமான மனநிலையைக் கொண்டிருந்திருக்கிறார்கள். இந்த உளவியல் பலவீனத்தில் ஓடுவதைத்தவிர வேறுவழியில்லை. ஏனெனில் அவர்கள் போராடும் மனோபலமற்றவர்கள். இராணுவக் கட்டமைப்பில் இது ஆபத்தானது அல்லது எதிரிக்கு வாய்ப்பானது. 

இந்திய இராணுவம் இலங்கையின் சூழலையும், சமூக வாழ்வியலையும் குறித்த போதுமான தகவல்களைக் கொண்டிருக்கவில்லை. இதே நிலை ஆப்கான் அமெரிக்கப் படைகளுக்கும் பொருத்தமானது. சமூகங்களின் பாரம்பரிய விழுமியங்களும், சமூக உளவியல் சார் அம்சங்களும் கருத்தில் கொள்ளப்படவில்லை. 1100 இந்தியப்படையினரும், 5000 இலங்கையர்களும் கொல்லப்பட்டதாக ஒரு அறிக்கை கூறுகிறது. ஆப்கானில் 65,000 தலிபான்களும், 2500 அமெரிக்க படையினர் கொல்லப்பட்டும், 20,000 பேர்வரை  காயமடைந்ததாகவும் நேட்டோ தகவல்கள் கூறுகின்றன. 

இராணுவத்தலையீடுகளின் அரசியல் தோல்விகள் ..! 

வியட்னாமில் கற்றுக்கொண்ட பாடத்தை அமெரிக்கத் தலைமைகள் அடிக்கடி மறந்து விடுகின்றார்கள். ஈராக்கில் சதாம் ஹுசைன் அணுவாயுதம் தயாரிக்கிறார், மறைத்து வைத்துள்ளார் என்ற பொய்யைச்சொல்லி சர்வதேசத்தை ஏமாற்றி போர் தொடுக்கப்பட்டது. சதாம் கொல்லப்பட்டார்.  

லிபியா பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கிறது என்று அதன்மீது போர்ப் பிரகடனம். கடாபி கொல்லப்பட்டார். ஆப்கானிஸ்தானில் ஒசாமா கொல்லப்பட்டார். சிரியா மீது போர் ஆனால் சிரியத்தலைவரை கொல்லவும் முடியவில்லை, ஆட்சியைக் கவிழ்க்கவும் முடியவில்லை. ரஷ்யா சிரியாவுக்கு முழு ஆதரவை வழங்கியது. 

குர்திஸ்தான் விடுதலை அமைப்பை தனிநாடு அமைக்க உதவுவோம் என்று ஏமாற்றி சிரியாவுக்கும், துருக்கிக்கும் எதிராக பயன்படுத்திவிட்டு நடுவீதியில் விட்டுச் சென்றுள்ளது அமெரிக்கா. 

இவை அனைத்தும் அமெரிக்கா, அதன் நலனை முதன்மைப்படுத்தி மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகள். இதில் வெட்கப்படவேண்டியது அமெரிக்காவைவிடவும் அதற்குப் பின்னால் போகும் ஐரோப்பிய நாடுகள். இப்போது ஆப்கான் தோல்வியில் மட்டும் அமெரிக்க புலனாய்வு தகவல்களை நம்பினோம் என்று புலம்புவதில் எந்த அர்த்தமும் இல்லை. 

மேற்குலகின் இராஜதந்திரிகள் சில தினங்களுக்கு முன் வரை ஆப்கான் படையினர் தலிபான்களுக்கு எதிராக நின்று பிடிப்பார்கள் என்று நம்பினார்கள். அல்லது தவறான புலனாய்வு தகவல்களைக் கொடுத்து சி.ஐ.ஏ. நம்பவைத்தது. இதில் ஜோ பைடன் அசையாத நம்பிக்கை கொண்டிருந்தார். இப்போதுதான் அவருக்கு தலிபான் வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார்கள். இது மேற்கு புலனாய்வின் விருப்பம் மட்டுமேயன்றி ஜதார்த்தம் அல்ல. இந்த விருப்பத்திற்கு வெள்ளை அடித்திருக்கிறது புலனாய்வுத்துறை. 

ஆப்கானிஸ்தான் இராணுவ ரீதியில் அமெரிக்காவுக்கும், நேட்டோ கூட்டணிக்கும் படுதோல்வியை பரிசளித்திருக்கிறது. இதை இராணுவப் புலனாய்வு முன்கூட்டியே அறிந்திருக்கவில்லை என்பது மிகப்பெரிய பலவீனம். 

இந்த பலவீனமான நிலைதான் இந்திய இராணுவ காலத்திலும் இலங்கையில் இருந்தது. இந்திய  புலனாய்வு அமைப்பான றோ வர்ணம் பூசப்பட்ட தகவல்களையே டெல்லிக்கு வழங்கியிருந்தது. 

அரசியல் விவகாரத்திற்கு இராணுவ அணுகுமுறையின் மூலம் தீர்வு காண முடியாது என்பது ஆப்கானிஸ்தான் மூலம் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  

ஆப்கானிஸ்தானின் எதிர் காலம்.. குறித்த “ஆனால்” 

மிக விரைவில் ஷரியா சட்டங்களை உள்வாங்கிய அரசியல் அமைப்பு ஒன்றை தலிபான் அரசு தயாரிக்க உள்ளது. இதில் ஆப்கான் சிறுபான்மையினரின் நிலை என்ன? என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ள தலிபான் அரசியல் பிரிவுத்தலைவர் முல்லா அப்துல் ஹானி பராதர் “ஆனால்” என்ற வார்த்தைக்கு முக்கியம் கொடுத்துள்ளார். 

“ஆனால்” முன்னுக்கு வந்தால் பின்னால் ஏதோ ஒரு சிக்கல் வரப்போகிறது என்பது புரியும். இவர் மூன்று வருடங்களுக்கு முதல் அமெரிக்காவின் வேண்டுகோளுக்கு இணங்க பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டவர். 

தலிபான் அரசு ஷரியா சட்ட நடைமுறைகளின் படி செயற்படும். ஆனால் … 

ஷரியாவுடன் இணங்கிப் போகின்ற விடயங்கள் குறித்து கவனம் செலுத்தும். ஆனால்….. ஷரியா சட்டவரையறைகளுக்கு உட்பட்டே அது இருக்கும். பெண்களின் உரிமைகள், சிறுபான்மையினரின் உரிமைகள், கருத்துச் சுதந்திரம் அனுமதிக்கப்படும். ஆனால்…….? 

ஆப்கானிஸ்தான் தலிபான் ஆட்சியை சீனாவும், பாகிஸ்தானும் அங்கிகரிப்பதாக அறிவித்துள்ளன. சீனாவும், பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிரான கூட்டில் நட்பு நாடுகள். பாகிஸ்தான் தலிபானுடன் இணங்கிப் போகாவிட்டால் எல்லை நாடு என்ற வகையில் தலிபானுடன் முரண்படவேண்டி வரும்; அது பாகிஸ்தான் ஆட்சியாளர்களுக்கு அரசியல் தற்கொலையாக அமையலாம். 

சீனாவுக்கு பிராந்தியத்தில் தனது கடையைத் திறப்பதற்கு அருமையான மற்றொரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அபிவிருத்திக்கான முதலீடு ஆப்கானுக்கும் மிகவும் அவசியமானது. இதனால் இரு நாடுகளும் “WIN WIN” பொருளாதார உறவைப் பேணமுடியும். ஆனால்….. இதற்கு ஷரியா எந்தளவுக்கு நெகிழ்ச்சிப்போக்கை காட்டும் என்ற கேள்வியும் எழாமல் இல்லை. ஆப்பிழுத்த குரங்கின் கதை சீனாவுக்கு தெரியாமல் இருக்க நியாயமில்லை. 

இன்றைய நிலையில் பாகிஸ்தானும், சீனாவும் இலங்கையின் நட்பு நாடுகள் என்ற வகையில் இந்த உறவு இலங்கைக்கு உதவியாகவும், ஆறுதலாகவும் அமையக்கூடும். ஆனால்…… வங்காளதேசம் போன்ற பிராந்திய முஸ்லீம் நாடுகள் தலிபான் விடயத்தில் கத்திமுனையில் நடக்கவேண்டியிருக்கும். ஏனெனில் தலிபான் தனது ஷரியா இஸ்லாமிய அரசை விரிவுபடுத்தவே முற்படும். 

இதற்கு இந்த நாடுகளில் உள்ள இஸ்லாமிய அடிப்படைவாதிகளை அது பயன்படுத்தாது என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. 

உண்மையில் இந்தியாவின் நிலை சிக்கலானது. இதுவரை பாகிஸ்தான் மட்டும் ஆதரவு வழங்கிய கஷ்மீர் விடயத்தில் தற்போது ஆப்கானும் இணையவாப்புண்டு. மறுபக்கத்தில் தலிபான் அரசு எதிர்காலத்தில் உலக அடிப்படை இஸ்லாமியவாதத்தின் மீட்பராக இருக்கப்போகிறது. 

இதனால் ஆப்கானில் ஆயதப்பயிற்சிகளும், ஆயுதங்களும், முகாம்களும் தாராளமாகவே இடம்பெறலாம். இந்த நிலையில் இந்தியா போன்ற எல்லை நாடுகளில் ஊடுருவல் ஏற்படாது என்று கூறமுடியாது. மறுபக்கத்தில் ஈரான் அரசும் தலிபானுடன் ஒரு அனுசரித்த போக்கையே கடைப்பிடிக்கும். ஆப்கானில் இருந்து அமெரிக்கா வெளியேறியது ஈரானுக்கு கிடைத்த பாரிய வெற்றி. ஆனால்…. இவை பிராந்தியத்தில் ஒரு அரசியல், இராணுவ சமநிலையைப் பேணுமா?. 

தலிபான்கள் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை வெளியிடுகின்றனர். இதனால் மக்கள் குழப்பத்தில் உள்ளனர். 

ஷரியா சட்ட இஸ்லாமிய அரசு பற்றி கூறும் இவர்கள் பெண்கள் வேலைக்கு போகலாம், அனைவருக்கும் பொதுமன்னிப்பு, மனித உரிமைகள், ஜனநாயகம் பற்றியும் பேசுகின்றனர். எதை நம்புவது ? 

ஆனால்…. ஆனால்…. இவை அனைத்தும் ஆப்கானிஸ்தான் மக்களின் எதிர்பார்புக்களில் இருந்தும் அபிலாஷைகளில் இருந்தும் இன்னும் நீண்ட தூரத்திலேயே உள்ளன. ஆட்சி மாற்றம் ஒன்று மட்டும் இதைச் சாதிக்குமா? என்றால் இல்லை. 

ஆக, இருபது வருடத்திற்கு முந்திய ஆப்கானிஸ்தான் தான் இன்றைய ஆப்கானிஸ்தான்…….!  

மீண்டும் வேதாளம் முருங்கையில் ஏறாமல் இருந்தால் சரி!